திராவிட இயக்க வரலாற்றில் உயிர்ப்பு மிகுந்த செயல்பாடுகளின் களமாகக் கோவை மண்டலம் எப்பொழுதும் விளங்கி வருகிறது. 1885இல் “திராவிட பாண்டியன்” இதழையும், பின்னர் “ஒரு பைசாத் தமிழன்” இதழையும் தொடங்கியவர் அயோத்தி தாசர். 1890இல் “இந்திய பவுத்தர் சங்கத்”தையும், 1891இல் “திராவிட மகாஜன சபை”யையும் தோற்றுவித்தவர் அயோத்திதாசர். தமிழ்ச் சமூக வரலாற்றில் ஒரு சிந்தனைக் கிளர்ச்சியைத் தோற்றுவித்த இந்த அறிஞர் கோவை மண்டலத் தொல்குடி மரபினர் என்று சமகால வரலாற்றறிஞர்கள் கூறுகிறார்கள்.

ku ramakrishnan 450சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் முழுமைச் செம்பரிதியாகத் தோன்றிய தந்தை பெரியார், அன்றைய விரிந்த கோவை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய ஈரோடு நகரைச் சேர்ந்தவர்தாம்.

பெரியாரின் சிந்தனைத் திரட்சியுடன் மாபெரும் தமிழ்ப் பாவியமாக “இராவண காவியம்” படைத்த புலவர் குழந்தை அவர்களும், பெரியாரின் போர்ப்படைத் தளபதியாகத் திகழ்ந்த பழைய கோட்டை அருச்சுனன் அவர்களும் கோவை மண்டலத்தின் பகுதியான ஈரோட்டுக்கு உரியவர்களே.

தமிழ் இலக்கியப் புலமையுடனும், சமூக வரலாற்று வெளிச்சத்துடனும், திராவிட இயக்கச் சிந்தனைகளைப் பரப்பிய வழக்கறிஞர் கஸ்தூரி ஐயா அவர்களும், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஐயா அவர்களும் கோவையின் ஒளிவிளக்குகள்.

இத்தகு பெருமைகள் நிறைந்த கோவை மண்ணில், திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு ஒளியேற்றி, ஆயிரக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டி, தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக ஓய்வறியாமல் ஓர் இளைஞர் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால், அது கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள்தாம்.

75 அகவையை எட்டிய ஒருவர் இளைஞரா என வினா எழுப்பலாம். இராமகிருட்டிணன் அவர்களைப் பொறுத்த வரை அவர் முறுக்கம் தளராக 25 அகவை இளைஞரே. அவர் உடலையும் முதுமை அண்டவில்லை! அவர் மனத்தையும் முதுமை அண்டவில்லை! அவர் சிந்தனைகளை மூப்பு நெருங்கவே இல்லை. இளமை மிளிர, ஓய்வறியாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் களப் போராளி அவர்.

கு.இராமகிருட்டிணன் அவர்களின் வரலாறே களப் போராட்டங்களின் வரலாறு.

புறநானூற்றிலே ஒரு பெண், தாய் ஒருத்தியிடம் கேட்பாள், ‘எங்கே உன் மகன்?’ என்று. அதற்கு அந்தத் தாய் கூறுவாள், “எனது இந்த வயிறு புலி தங்கியிருந்து புறப்பட்டுச் சென்ற குகை. அவன் போர்க்களத்தில்தான் சமர் புரிந்து கொண்டிருப்பான்”.

இருபதாம் நூற்றாண்டிலும் ஒரு தாய் அப்படிக் கூறியிருப்பாரென்றால், அது தோழர் கு. இரா. அவர்களின் தாயாகத்தான் இருக்க முடியும். தம் தாய் மறைவுற்றபோது கூட, செறுமுகம் கண்ட சிறையாளியாகவே அவர் திகழ்ந்தார். தாயின் மறைவுத் துயர நிகழ்வுக்குக்கூட அவரை வெளியே விட அஞ்சியது அரசு. தோழர்களுக்கெல்லாம் நேசமும் கனிவும் நிறைந்த தோழமை என்றாலும் அடக்குமுறை ஆட்சியாளருக்கு அவர் அடங்க மறுக்கும் அரிமா. எனவே கண்கொத்திப் பாம்புபோல் அவரைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதுதான் காவல்துறையின் கடமையாக இருந்தது. ஏன் இந்த நிலை?

* அவர் சாதி மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கைகளையும் மறுப்பவர்; எதிர்ப்பவர். இவற்றை ஒழிக்கப் போராடுபவர்.

* அவர் ஒரு பெண்ணுரிமைப் போராளி. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான சிந்தனைகளைச் சமூகத்தில் இடைவிடாமல் விதைப்பவர்.

* ஆரிய சனாதனத்தை, வேதியத்தை, பார்ப்பனிய மடமைகளை எதிர்ப்பவர். அவற்றை அழிக்கப் போராடுபவர். மனுநீதியைத் தீயிட்டுக் கொளுத்தியவர். பார்ப்பனிய மேலாண்மையை அம்பலப்படுத்தும் மாநாடுகளை நடத்தியவர். சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைப்பவர்.

* தமிழ்நாட்டின், தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள், உடைமைகள் பறிக்கப்படும்போது, ஒரு நொடியும் அயர்ந்திருக்காமல், உடனே எழுந்து அனைத்து மக்களையும், அனைத்து இயக்கங்களையும் ஒன்றுதிரட்டிப் போராடுபவர். தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு அரணாக நின்றவர். தமிழீழ மக்களுக்கு நேர்ந்த அவலங்களை நாடெங்கும் அறியச் செய்தவர். தமிழீழப் போராளிகளைத் தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர். போராளிகளுக்கு உதவுவதே தமிழ் மக்களின் தலையாய கடமை என்பதைத் தமிழ் நெஞ்சங்களில் விதைத்தவர். உயிரைப் பணயம் வைத்து ஈழப் போர்முனைக்குச் சென்று திரும்பியவர். ஈழ விடுதலைப் போர்க் கண்காட்சியைத் தமிழகம் முழுவதும் நடத்தி மக்களுக்கு உணர்வூட்டியவர்.

* ஆற்றுநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இரண்டகம் புரியும் அண்டை மாநிலங்களுக்கு எதிராக, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுதிரட்டிப் போராடிய போராட்டங்கள் பலவற்றை நடத்தியவர்.

* ஞாயங்களுக்காக நடத்தும் எல்லாப் போராட்டங்களுக்கும் இளைஞர் பட்டாளத்தை ஒன்றுதிரட்டும் ஆற்றலாளர்.

* பெரியாரிய நெறியிலிருந்து என்றும் தடம் மாறாதவர். சிறு சிறு காரணங்களுக்காகப் பெரியாரியச் சிந்தனையாளர்கள் பிளவுபட்டு நின்றாலும், வேற்றுமைகளை
ஒதுக்கி வைத்துவிட்டுப் பெரியாரியத் தோழர்களை ஒருங்கிணைக்கும் பேருள்ளம் படைத்தவர். ஆனைமுத்து ஐயா அவர்களின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்கான கிளையோ, அமைப்போ கோவையில் இல்லாத போதும், அந்த மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டை, தம் தோழர்களைத் திரட்டி, தாமே முன்னின்று கோவையில் நடத்திக் காட்டியவர்.

அவருடைய போராட்டங்களின் வடிவங்கள் மிகவும் புதுமையானவை. எல்லோரும் உண்ணாவிரதம் என்று போராட்டங்களை நடத்துவார்கள். தோழர் கு.இரா. அவர்கள் உண்ணும் விரதப் போராட்டங்களை அறிமுகப்படுத்தினார். மதக் கசடர்கள் கஜபூஜை ஊர்வலம் என்று யானைகளைத் திரட்டி ஊர்வலம் நடத்தினர். தோழர் அவர்கள் ஆயிரம் கழுதைகளுடன் ஊர்வலம் என அறிவித்தார். நாடே வியப்பில் ஆழ்ந்தது.

1983 இலங்கை வெளிக்கடைச் சிறையில் நிகழ்ந்த தமிழர் மீதான கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொன்று வீசப்பட்டார்கள். அந்த நிலையில், தமிழீழ மக்களுக்கு நேர்ந்த அவலத்தை உலகிற்கு எடுத்தியம்பும் வகையில், கோவையில் மாபெரும் மண்டையோட்டு ஊர்வலத்தைத் தோழர் கு.இரா. நடத்திக் காட்டினார். இந்தக் காட்சி உலகம் முழுதும் பரவி அதிர்வலைகளை உருவாக்கியது.

தோழர் கு. இராமகிருட்டிணன் உறங்காத் தமிழ மகன்! கண்ணயராத போராளி! கோவையின் விந்தை மனிதர்! இளைஞர்களை முன் நடத்தும் தலைவன்! மூத்தோருக்கு நெஞ்சு உவந்த தோழர்! அவர் இருப்பு தமிழினத்திற்கு ஒரு தெம்பு! பகை நடுங்க வாழும் பெருமித வாழ்வு அவரது வாழ்வு! தோழர் கு.இரா. வாழ வேண்டும் ஒரு நூறாண்டுகள்!