நீங்கள் என்னைக் கடலிலும், ஆற்றிலும்

தூக்கிப் போட்டு கொலை செய்யும்போது

மற்ற மதத்துக்காரர்கள் கேவலமாக நினைப்பார்களே!

அதற்காகவாவது இந்த ஆண்டு என்னை மன்னித்துவிடக் கூடாதா?

கருணை காட்டுங்கள்!              - பெரியார் திராவிடர் கழகம்

- என்ற சுவரொட்டிகளை பெரியார் திராவிடர் கழக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. பொள்ளாச்சி, ஆனைமலையில் இதற்காக கழகத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.

விநாயகனுக்கு பேசும் சக்தி எது? அது பொம்மை தானே? பிறகு எப்படி விநாயகன் பேசுவது போல் சுவரொட்டி போடலாம் என்று காவல்துறை கருதிவிட்டது போலும்! உண்மையாகவே விநாயகன் பக்தர்கள் புண்படுத்தப்படுவதாகக் கருதுவார்களேயானால் அவர்கள், நாம் மேலே வெளியிட்டிருக்கிற ‘தினத்தந்தி’ நாளேடு வெளியிட்டுள்ள படத்தைத்தான் எதிர்த்திருக்க வேண்டும்.

திருவல்லிக்கேணியில் ‘விநாயகனுக்கு’ காவல்துறையினர் பாதுகாப்பு தரும் படம் இது. விநாயகன் சக்தியற்றவனாகி விட்டானா? இப்படி காவல்துறையை பாதுகாப்புக்குப் போட்டு, அதைப் படம் பிடித்து பத்திரிகைகளில் வெளியிடலாமா? என்று உண்மையான பக்தர்கள் எவரும் பொங்கி எழ தயாராக இல்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும், போலீஸ் பாதுகாப்போடு தான் ‘விநாயகன்’ பவனி வர முடியும் என்று!

இதையே பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள் சொன்னால் மட்டும் ஆத்திரப்படுவது ஏன்? கைது செய்யப்படுவது ஏன்?

Pin It