மனிதர்கள் எங்கெல்லாம் கூட்டமாகக் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் திருடர்கள் அதிகம் திருடுகின்றனர். திருவிழாக்கள் கூட்டத்திலும், பேருந்து, இரயில் பயணத்தில் நெறித்து கொண்டு ஏறுமிடங்களிலும் திருட்டு அதிகம் நடைபெறுகின்றது. திருட்டில் பணத் திருட்டு, நகைத்திருட்டு, பொருள் திருட்டு, குழந்தைகள் கடத்தல் திருட்டு, அசந் தால் ஆடு, மாடுகள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருள்களையும் திருடுகின்றனர். பூட்டிய வீடுகளில் கதவை உடைத்தும் திருடுகின்றனர். குடிப்பதற்குப் பணம் கிடைக்கவில்லையென்றால் சொந்த வீட்டிலேயே திருடுவது போன்ற பலவகைகளில் திருட்டுத் தொழில் நடைபெறுகின்றது.

இதுபோன்று வணிகர்களும் கூட்டமாக மக்கள் கூடிவிட்டால் பொருள்களின் விலையை அதிகப்படுத்தி விற்பது அல்லது எடைகுறைவாக விற்பது, தரம் குறைத்து விற்பது, கலப்படம் செய்து விற்பது, விழாக் காலங்களில் தள்ளுபடி என்று கூறிவிட்டு குறிப்பிட்ட பொருள்களில் விலையைக் குறைத்துவிட்டுப் பல பொருள் களின் விலையை அதிகப்படுத்தி விற்பது போன்ற வியாபாரக் கொள்ளையர்களும் நேர்மையற்ற முறையில் வணிகம் செய்கின்றனர், அனைத்து வணிகர்களும் ஒருபொழுதும் வரியை தன் வருவாயில் கட்டுவதில்லை. அனைத்து வரிகளும் நுகர்வோர்கள் தலையிலேயே கட்டி வசூல் செய்கின்றனர். இவர்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் அளவில்லாமல் மக்களைக் கொள்ளையடிக்கின்றனர்.

நம்மை ஆளும் அரசும் இதையேதான் செய்கின்றது. மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி அரசும் கொள்ளை தொழில் செய்கின்றது. உதாரணம்: கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து பேருந்து கட்டணம் ரூ.150. ஆனால் இந்தப்பயண நெரிசலைப் பயன்படுத்தி பயணி எங்கு ஏறினாலும் இறங்கினாலும் ரூ.175 கட்டணம் என்று கட்டணக் கொள்ளையடிக்கின்றது. பாலில் தண்ணீர் கலந்து விற்று கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றது. மின்கட்டணத்திலும் வைப்பு நிதியையும் அதிகரித்துவிட்டு கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.

இதுபோன்று அப்பாவி மக்களை, கல்விக் கட்டணம், நுழைவுத் தேர்வு கட்டணம், பணி விண்ணப்பக் கட்டணம் என பல இலட்சம் பேரிடம் வாங்கிவிட்டு சில பேரை தேர்வு செய்கின்றது. உண்மையான திருடர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இவனும் அவனே தான்!

Pin It