சுசீலா ஆனைமுத்து அம்மா அவர்கள்

எங்கள் மீது அக்கறை கொண்ட சுசீலா அம்மா அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் “பேரன் அரிமா எப்படி உள்ளான்? உன் மகள் எப்படி இருக்காள்?” என்று கேட்டுவிட்டு, “வீட்டை கட்டுடா, நான் தான் உன் வீட்டைத் திறந்து வைப்பேன். தை மாதம் (சனவரி 2019) வேலையைத் தொடங்கு” என்று பெற்ற தாய் போல் உரிமையாகத் திட்டி “உன் வேலையை முடித்துக் கொண்டு பொது வேலைக்குப் போடா. என்னால் நடக்க முடியவில்லை; படி ஏற முடியவில்லை; அதனால்தான் வீட்டுக்கு வரமுடியவில்லை; இங்குள்ள நாயும் பூனையும் தான் என்னிடம் நன்றியுடன் என்னையே சுற்றிக் கொண்டுள்ளன” என்று கூறுவார். அம்மாவின் சமையல் உணவை அனைவரும் பாராட்டியுள்ளனர். கோ.மு.கருப்பையா, திருச்சி கலியபெருமாள், நல்லாசிரியர் கணபதி மகள் அறிவுக்கடல் ஆகியோர் சுசீலா அம்மா என்றாலே அவர் சமைத்த உணவைப் பற்றியே புகழ் பாடுவார்கள். கடைசித் வரை எவரிடமும் எதிர் பார்ப்பு இன்றி என்ற உறுதியான எண்ணத்துடன் வாழ்ந்தவர் சுசீலா அம்மா  அவர்கள். சுசீலா அம்மா போல் சுயமரியாதையுள்ள தாய் தேடினாலும் காணமுடியாது. வாழ்க சுசீலா அம்மா புகழ்!

கவிஞர் தமிழேந்தி அவர்கள்

பாவலர் பாவேந்தர் பரம்பரையில் கடைசியாகக் கண்ட கவிஞர் தமிழேந்தி அய்யா அவர்கள். எவரையும் அவர் வாயால் குறைகூறியதை நான் கண்டதில்லை. உதவி என்றால் வாய்ப்பு உள்ளபோதெல்லாம் உதவும் உள்ளமுடையவர். என் மகள் அருவி “அப்பா தமிழேந்தி அய்யா எனக்கு வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுத்த இலக்கணப் பாடத்தில் 10 மதிப்பெண் கேள்வி அப்படியே வந்தது; முழு மதிப்பெண் கிடைத்தது” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைவாள். என்மீதும் அக்கறையுடன் “நீங்க மட்டும்தான் கட்சி தலைமை அலுவலகத்தில் வந்து செல்கின்றாய்; எவர் என்ன சொன்னாலும் காதில் வாங்காதே; நீங்க தொடர்ந்து உங்கள் வழியில் செயல்படு” என்பார்.

தமிழேந்தி அய்யாவுடன் சேர்ந்து, சிந்தனையாளன் முகவரியைத் திருத்துவது, மாத இறுதியில் முகவரி ஒட்டி அஞ்சல் செய்வது, மெய்ப்புகளைத் திருத்தி நேரத்துக்குக் கொடுத்துவிட்டுத் தகவல் கூறுவது போன்ற கட்சி மற்றும் இதழ்ப் பணிகளைச் செய்வதில் மிகவும் உதவியாக இருந்தார். தமிழேந்தி மெய்ப்பு பார்த்தார் என்றால் அய்யா ஆனைமுத்து அவர்களும் சரியாக இருக்கும் என்பார்.

ஒவ்வொரு ஆண்டும் சிந்தனையாளன் பொங்கல் மலர் என்றால் இரவு, பகல் பாராமல் மலர் உருவாக்கத்தில் அக்கறை காட்டியவர். எனக்குத் தெரிந்தவரை சிந்தனையாளன் சந்தாக்களை அதிகம் பெற்றுத் தந்தவர் தமிழேந்தியே என்று உறுதியாகக் கூறமுடியும்.

“முதலில் தமிழேந்தி கவிதையும், அய்யா தலையங்கமும் படித்து விட்டுத்தான் மற்ற கட்டுரைகளைப் படிப்போம்” என்று கூறும் சிந்தனையாளன் அன் பர்களைப் பெற்றவர். உழவர் மகன் என்ற பெயரில் எழுதும் என்னுடைய கட்டுரையைப் படித்துவிட்டு பலமுறை அருமையாகத் தலைப்பிட்டு எழுதியுள்ளீர் என்று தொலைப்பேசியில் பாராட்டியது என் நினைவில் என்றும் நீங்காத நினைவுகளாகும்.

Pin It