“தேசாபிமானம், தேசபக்தி என்பவைகள் சுயநல சூழ்ச்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்களால் தங்கள் வகுப்பு நலத்துக்காகப் பாமர மக்களுக்குள் புகுத்தப்படும் ஒரு (வெறி) போதையென்றும் பல தடவைகள் நாம் சொல்லி வருகிறோம்” என்று பெரியார் ஈ.வெ.ரா. 29.9.1935 நாளிட்ட “குடிஅரசு” ஏட்டில் எழுதினார்.
இந்தியா, இந்திய நாடு என்கிற குறியீட்டுச் சொற்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின் உருவான வைகளாகும். காலங்காலமாக ஆளும் வகுப் பாக இருந்த கூட்டத்தார், ஆங்கிலேயரிட மிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதற்காகப் பல்வேறு சாதிகளாக, வகுப்பு களாகப் பிரிந்துக்கிடந்த மக்களை ஒன்றுதிரட்டு வதற்காகவும் தேசியம் தேசபக்தி, தேசாபி மானம் போன்ற உணர்ச்சியூட்டும்படியான சொற்களைப் பயன்படுத்தினர்.
ஆளும் வர்க்கத்தினர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக முன்வைத்த தேசியம், தேசபக்தி என்பவற்றைப் பெரியார் “தேசிய வியாபாரம்”, “தேசியப் புரட்டு” என்று அதன் பொய்மையைத் தோலுரித்துக் காட்டினார். குடிஅரசு ஏட்டில் 29.9.1935 அன்று வெளிவந்த தலையங்கத்தில் பெரியார், “நான் ஒரு தேசாபிமானியல்லன்; அது மாத்திரமல்ல; தேசாபி மானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்கள் வயிற்றுச் சோறு வியாபாரம் என்றும் சொல்லியும், எழுதியும் வரும் “தேசத்துரோகி”யாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாய் இருந்து, பலமுறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லு கிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்லவில்லை” என்று எழுதினார். பெரியார் தன் இறுதிமூச்சுவரை இதே கருத்தைப் பரப்புரை செய்து வந்தார்.
சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் அரசியல்கிளை அமைப்பான பாரதிய சனதா கட்சியும் 1977இல் அரசியலில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலம் முதல் இந்துத்துவத்தை இந்திய தேசியத்தின் குறியீடாக முன்வைத்து “தேசிய வியாபாரம்” செய்து வருகின்றன. சங்பரிவாரங்களின் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளை ஏற்க மறுப்பவர் களையும் எதிர்ப்பவர்களையும் “தேச விரோதிகள்”, “தேசத்துரோகிகள்” என்று சாடுகின்றன. 2016 நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் கேடுகளைப் பற்றிப் பேசியவர்களை, எழுதியவர்களைக் கருப்புப் பணத்தின் ஆதரவாளர் கள், தேசவிரோதிகள் என்று பிரதமர் மோடி சாடினார். எனவே சுதந்தரம் பெற்ற எழுபதாவது ஆண்டிலும் தேசியம், தேசபக்தி என்பவை ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், எதிர்ப்பவர்களை ஒடுக்கவும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உயர்நீதித்துறை அனைவருக்கும் நியாயம் வழங் கக்கூடிய ஒரு பொது அமைப்பு என்கிற ஒருவகையான புனித மயக்கம் ஆளும் வர்க்கத்தினால் மக்களிடம் ஊட்டப்பட்டிருகிறது. ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க மனப்போக்கைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே உயர்நீதித் துறையின் பல தீர்ப்புகள் அமைந்துள்ளன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித் வராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் தொடுத்த ஒரு பொதுநல வழக்கில் 30.11.2016 அன்று ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. “இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்குமுன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்துநின்று மரியாதை செய்ய வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படுவதற்குமுன் பொதுமக்கள் வருவதையும் போவதையும் தடுத்திட திரையரங்கின் வாயில் கதவுகள் மூடப்பட வேண்டும், பத்து நாள் களுக்குள் இந்தியா முழுவதும் இது நடைமுறைக்கு வரவேண்டும்” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையிலான அமர்வு ஆணையிட்டது. மோடி தலைமை யிலான நடுவண் அரசும் இந்த ஆணையை உடனடி யாகச் செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறி வுறுத்தியது.
இந்த வழக்கின் வரலாற்றையும் ஷியாம் நாராயண் சவுக்கி, நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோரின் பின்னணியையும் பார்ப்போம்.
2003ஆம் ஆண்டில் ஷியாம் நாராயண் சவுக்கி, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். “‘கபி குஷி கபி கம்’ என்ற திரைப்படத்தில் தேசிய கீதத்தை ஒரு பள்ளி மாணவன் பாடுவதாக ஒரு காட்சி இருக்கிறது. திரைப்படத்தில் தேசிய கீதம் பாடப்பட்ட போது திரையரங்கில் அமர்ந்திருப்போர் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செய்ய வில்லை. இக்காட்சி தேசிய கீதத்தை அவமதிப்ப தாகும்” என்று சவுக்கி வாதிட்டார். அப்போது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா சவுக்கியின் வாதத்தை ஏற்று, அத்திரைப் படத்தில் தேசியகீதம் பாடப்படும் காட்சியை நீக்குமாறு ஆணையிட்டார்.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பு செல்லாது என்று அறிவித்தது. திரைப்படத்தில் தேசிய கீதம் பாடப்படும் காட்சி வரும்போது திரையரங்கில் அமர்ந்திருப்போர் எழுந்து நின்று மரியாதை செய்வது என்பது நடைமுறையில் இயலாததாகும் என்று 2004 ஏப்பிரல் 19 அன்று அளித்த தீர்ப்பில் கூறியது.
அதன்பின், நீண்டகாலம் கழித்து நீதிபதி தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வில் நியமிக்கப்பட்டார். நீதிபதி தீபக் மிஸ்ராவின் “தேசபக்தி” மனப்போக்கை நன்கு அறிந்திருந்த ஷியாம் நாராயண் சவுக்கி 2016 அக்டோபரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். அதில், திரை யரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டியதைக் கட்டாயமாக்கவும், அரசு விழாக்களில் தேசிய கீதம் பாடுவதற்குச் சட்ட வகையிலான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஒரு செய்தியை விசாரித்த நீதிபதியை, மீண்டும் அதே செய்தி குறித்த வழக்கில் விசாரிக்க அமர்த்தக் கூடாது என்பது நீதித்துறையின் மரபு. ஆனால் இதற்கு மாறாக, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் தேசிய கீதம் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ராவை, உச்சநீதிமன்றத்தில் அவர் தலைமையில் தேசியகீதம் குறித்து விசாரிக்க அமர்த்தப்பட்டதே ஒரு முறைகேடாகும். உடனடியாக நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் தேவைப் படாத இந்த வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும் அமித்வராயும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருப்பது என்பது அவர்கள் தேசபக்தி போதைக்கு ஆளாகியிருக் கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
1962இல் இந்தியா-சீனா இடையே போர் மூண்டபின், தேசபக்தி குரல்கள் ஓங்கி ஒலித்தன. அப்போது திரை யரங்குகளில் திரைப்படம் முடிந்தபின் தேசியகீதம் இசைக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. திரைப் படம் முடிந்ததும் தத்தம் வீடுகளுக்கு விரைந்து செல்ல வேண்டும் என்கிற முனைப்பு காரணமாக, தேசிய கீதம் இசைக்கப்படும் போது பெரும்பாலோர் திரையரங் கைவிட்டு வெளியேறினர். அதனால் இறுதியில் 1975இல் இந்த நடைமுறை கைவிடப்பட்டது. எனவே தான் நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது திரைப்படம் தொடங்குவதற்கு முன்னரே தேசிய கீதம் இசைக்கப் பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய இடைக்காலத் தீர்ப்பில், “தேசிய கீதத்திற்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செலுத்துவது என்பது தாய்நாட்டை நேசிப்ப தும் மரியாதை செய்வதும் ஆகும். தேசிய கீதத்துக்கு மரியாதை செய்வது ஒருவரிடம் தேசியத்தையும் நாட்டுப்பற்றையும் உண்டாக்கும்” என்று கூறியுள்ளார். மேலும் அரசமைப்புச் சட்ட விதி 51 A(a)-இன்படி, “அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அதன் குறிக்கோள்கள், அதன் நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு மரியாதை செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை ஆகும்” என்று அத்தீர்ப்பில் வலியுறுத்தி உள்ளார். சட்டத்தின் ஆட்சி என்ற பெயரால் அரசு எடுக்கும் எத்தகைய கேடான நடவடிக்கைகளையும் எவரும் எதிர்த்துப் பேசாமல் அடங்கி நடக்கவேண்டும் என்பதே நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுவதன் நோக்கமாகும்.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்க வேண்டும் என்கிற தீபக் மிஸ்ராவின் தீர்ப்பு வெளியானதும், ஷியாம் நாராயண் சவுக்கி, இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் காலையில் அலுவல்கள் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் பாடுவதற்கு ஆணையிடுமாறு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். விண்ணப்பித்த நடைமுறையில் குறை பாடுகள் இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் சவுக்கியின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.
அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் இறையாண் மையையும் பாதுகாக்கும் வானளாவிய அதிகாரம் பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்ளும் உச்சநீதிமன்றம் நாள்தோறும் காலையில் தேசிய கீதத்தை இசைத்திட முன்வராத போது, மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்குவதற் காகத் திரையரங்குகளுக்குச் செல்லும் மக்கள் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமல்லவா! நீதிமன்றங் களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டமன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் நாள்தோறும் காலையில் தேசிய கீதம் பாட வேண்டியது தானே என்று நாம் திருப்பிக் கேட்க வேண்டியிருக்கிறதல்லவா!
தீபக் மிஸ்ராவின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படை யில் நடுவண் அரசு பிறப்பித்த ஆணையின்படி இப்போது திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அப்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் ஏற்பாடு எதுவும் இல்லை. அதனால் இனி திரையரங்குகளில் சங் பரிவாரத்தின் குண்டர்கள், தேசியகீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செய்யாதவர் களைத் தாக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் சங்பரி வாரங்கள் “தேசபக்தி” என்பதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயல் பட்டு வருகின்றன.
இரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசியகீதம் இந்திய நாட்டின் பன்மைத் தன்மையைப் போற்றுகிறது; வேற்று மையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதை வலி யுறுத்துகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் ‘தேசியம்’, தேசபக்தி‘’ என்று கூச்சலிடும் இந்துத்துவக் கும்பல் தேசியம் என்பது இந்துத் தேசியமே ஆகும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர் வி.டி.சாவர்கர். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டைத் தங்களின் தந்தையர் பூமியாக - அதாவது வேதகாலம் முதல் வழிவழியாக வாழ்ந்து வந்த முன்னோர்களைக் கொண்ட பூமியாகவும், தங்கள் புண்ணிய பூமியாகவும் கருதுகின்றனர்.
அதனால் இந்துக்களுக்கு மட்டுமே தொல்பழம் தேசிய வாழ்வும் நாட்டுப்பற்றும் இருக்கிறது. இத்தகைய நிலை இசுலாமியருக்கும் கிறித்தவர்களுக் கும் இல்லை என்பதால் அவர்களின் தேசபக்தி அய்யத்திற்கிடமானது என்கிற பாசிசக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். பல ஆண்டுகளாகப் பரப்பி வருகிறது. இசுலாமியரும் கிறித்தவரும் தங்கள் தேசபக்தியை அன்றாடம் மெய்ப்பித்துக்காட்டுமாறு அச்சுறுத்தப்படு கின்றனர்; தாக்கப்படுகின்றனர். 18 கோடி மக்களாக உள்ள இசுலாமியரும், 3 கோடிப் பேராக உள்ள கிறித்துவர்களும் சங்பரிவாரங்கள் கூறும் இந்துத்துவ தேசியத்தை எப்படி ஏற்க முடியும்?
இந்திராகாந்தி பிரதமரானது முதல் மோடி பிரதமராக இருக்கும் இன்றுவரை படிப்படியாக மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு எல்லா அதிகாரங்களையும் நடுவண் அரசில் குவித்து, ஒற்றை ஆட்சி முறை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், பலகோடி மக்களைக் கொண்ட - மொழிவழியில் அமைந்த மாநிலங்களின் மக்கள் ‘இந்திய தேசியம்’ என்பதை உளமார எப்படி ஏற்க முடியும்? இம்மாநிலங்களின் தேசிய மொழிகளை அழிக்க இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் தேசியத்தை எப்படி ஒப்ப முடியும்? கோடிக்கணக்கான மக்களின் தாய்மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை முதலானவற்றை ஒடுக்க முனையும் தேசியத்தைத் தங்களுடையது என்று நினைக்க முடியுமா?
“இந்தியாவில் சாதி அமைப்பு நீடிக்கின்ற வரையில் உண்மையான சனநாயக உணர்வு மலராது” என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சொன்னார். சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளான பின்னும் இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் மேலோங்கி நிற்கும் முதன்மையான உணர்வு - சிந்தனை என்பது “தான் இன்ன சாதியைச் சார்ந்தவன்” என்பதே ஆகும். பிறவி யில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதிய கருத்தியலே சமூகத்தில் முதன்மையான இயங்கு ஆற்றலாக இருக் கிறது. பிறப்பால் இந்நாட்டில் பிறந்த அனைவரும் சமம் என்கிற உணர்வு உருவாகாத நிலையில் தேசியம் என்பது போலியானது மட்டுமல்ல; அது ஆதிக்க வர்க்கம் தன்னுடைய நலனுக்காகத் திணிக்கும் ஒரு மாயக் கருதுகோள்.
தேசியம் என்பதைப் பெரியார் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மானத் தையும் மனசாட்சியையும் விற்காமலும் விட்டுக்கொடுக் காமலும் வயிறு வளர்க்கும்படியாகவாவது இருக்க வேண்டும். ஈதன்றி அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணிய மான தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உணர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறி கள் இருக்கக்கூடாது, அடிமைகள் இருக்கக்கூடாது, தீண்டாதவர்கள் - தெருவில் நடக்கக்கூடாதவர்கள் முதலியவர்கள் இருக்கக்கூடாது, இனியும் இதுபோன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்” (குடிஅரசு, தலையங்கம் 1.9.1929).
பெரியாரின் அளவுகோலின்படி இன்று உண்மை யான தேசியம் இருப்பதாகக் கூறமுடியுமா?
தேசியம் என்பது தேசிய கீதத்திலோ, தேசியக் கொடியிலோ இல்லை; அது நாட்டின் நிலப்பரப்பை மட்டும் சார்ந்ததாக இல்லை. நாட்டின் மக்களைச் சார்ந்தது. இந்த நாடு நமக்கானது; இந்த அரசும் ஆட்சி யும் நமக்கானது என்று மக்கள் உணர்வதில்தான் தேசியம் இருக்கிறது.
ஆனால் இன்றைய இந்துத்துவ ஆட்சி ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதையே தேசிய மாக வரையறுக்கிறது. இந்துத்துவத்தின் இந்த நோக்கு உயர் அதிகாரவர்க்கம், உயர்நீதித்துறை ஆகியவற்றி லும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் வெளிப்பாடு தான், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்; எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்கிற தீபக் மிஸ்ராவின் தீர்ப்பு.
1929இல் பெரியார் தேசியம் என்பதற்குக் கொடுத்த விளக்கமே இன்றுவரை கிட்டத்தட்ட மாறாமல் நீடிக்கிறது:
“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியமென்கின்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார், அதாவது மேல்சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக் குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியு மென்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகப்பட்டுவரும் ஒரு பாதகமும், அபாயகரமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.”