1939-1942 வரையில் இலப்பைக் குடிகாடு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரையில் நான் பயின்றேன்.

பெரம்பலூர் அப்போது ஒரு வட்டமாக இருந்தது. அதன் தலைமை இடம் பெரம்பலூர். 1945இல் தான் அங்கே உயர் நிலைப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது.

aranga thulasiammalஎனவே என்னைப் போன்ற நடுத்தர வேளாண் குடும் பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேலம் மாவட்டம் பரமத்தி வேலூரில், கந்தசாமி கவுண்டர் உயர்நிலைப் பள்ளியிலும், கண்டர் இலவச உணவு விடுதியிலும் 6, 7, 8ஆம் வகுப்பு களில் 1942இல் சேர்ந்து படித்தோம்.

உயர்நிலைப்பள்ளிக்கு எதிரில் ஆசிரியர்கள் குடியிருப்பு. நாள்தோறும் காலை 5 மணிக்கு கீ.ஆ. அரங்கசாமி, அ. கிருஷ்ணன் என்னும் இடைநிலை ஆசிரியப் பெருமக்கள் உணவு விடுதிக்கு வந்து மாணவர்களை உசுப்பிவிட்டு, ஒரு மணி நேரம் உடனிருந்து படிக்கச் செய்வார்கள்.

கீ.ஆ. அரங்கசாமி ஆசிரியர் பெரம்பலூரைச் சார்ந்தவர். அந்த உள்ளூர் பாசத்தால் 1943 சூன் முதல் விடுமுறை நாள்களில் நான் அவருடைய வீட்டுக்குச் செல்வேன்.

எத்தனை நாள்கள் நான் சென்றேனோ அத்தனை நாள்களிலும் எனக்கு நல்லுணவு தந்து புரந்தவர் அவருடைய துணைவியார் அரங்க. துளசி அம்மாள் அவர்கள். அவர் என்னைவிட 5, 6 அகவை மூத்தவர்; உடன்பிறந்த தமக்கை யாக இருந்து என்பால் அன்பு செலுத்தினார்.

எங்களின் நற்றமிழ் ஆசிரியர் தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் என்னும் கனகசபை அவர்கள் 1945 செப்டம்பர் முதல் உரம் வாய்ந்த சுயமரியாதைக் கொள்கை யாளர். தம் பாட வேளைகளில் பெரியாரைப் பற்றியும், மறைமலை அடிகளைப் பற்றியும் பேசிவிட்டுத்தான் பாடம் நடத்துவார்.

அவரை அப்பள்ளித் தாளாளர் கட்டோடு வெறுத்தார். மாவட்டக் கல்வி அதிகாரி நடராச அய்யர் தமிழாசிரியரைப் பற்றி மேலிடத்துக்கு எழுதினார்.

எனவே பொன்னம்பலனார் 1947இல் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் பக்கம் அன்பு பூண்ட கீ.ஆ. அரங்கசாமி, அ. கிருஷ்ணன், பொன்பரப்பி நடேசன், ஆவினன்குடி இராமசாமி, கோவில்பாளையம் இரா. நடராசன், கஞ்சமலை, ப.ரா. கந்தசாமி இத்தனை பேரும் கூண்டோடு பணி யிலிருந்து விலகினர். அவர்கள் 40 அகவைக்குப் பிறகு பணி அமர்த்தம் பெறுவது துன்பமாக இருந்தது; வறுமை வாட்டியது. பணியில் மீண்டும் அவரவர் மாவட்டத்தில் சேர்ந்தனர்.

கீ.ஆ.அரங்கசாமி அவர்கள் நீண்டகாலம் இலப்பைக்குடி காட்டில் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். நான் 1956 முதல் 1981 வரையில் திருச்சியைத் தலைமை இட மாகக் கொண்டு பணியாற்றினேன். என் இயக்கப் பணிகள் எல்லாவற்றுக்கும் ஆசிரியர் அரங்கசாமி துணை நின்றார். என்னையும் என் மனைவி மக்களையும் ஓம்புவதில் கடைசிக் காலம் வரையில் இவ் வாழ்விணையர் பேரன்பு பூண்டு ஆதரவு நல்கினர். இவர்கள் பிறவியிலேயே புலால் உணவை மறுத்தவர்கள்.

1961 இறுதியில் ஒகளூரில் வகுப்புவாரி உரிமை மாநாட்டை நானும் பெரம்பலூர் வட்ட தி.க.வினரும் முன்னின்று நடத்தினோம். பெரியாருக்கு நாள்தோறும் புலால் உணவு வேண்டும். துளசி அம்மையார் புலாலை எப்படிச் சமைக்க வேண்டுமோ அப்படிச் சமைத்திருக்கிறார் என்று என்னிடம் நண்பகலில் கூறிய பெரியார், அவரை நேரில் பார்த்துப் பாராட்ட விரும்பினார். இரவு 9 மணிக்கு, திருச்சிக்குத் திரும்பு கையில், அம்மையாரை அழைத்துவரச் சொல்லி, பெரியார் மனமாரப் பாராட்டினார்.

அத்தகைய பாராட்டைப் பெற்ற துளசி அம்மையார், தம் ஒரே அன்பு மகன் தமிழ்மணியுடனும், இளைய மகள் முத்தமிழ்ச் செல்வியுடனும் இறுதிக் காலத்தில் வாழ்ந்து, தம் 95ஆம் அகவையில் திருச்சியில் 27.10.2014 இரவு மறைவுற்றார்.

28.10.2014 பிற்பகல் அவருடைய இறுதி ஊர்வலத்தி லும், அம்மையாரின் மறைவை ஒட்டி திருச்சியில் அருண் விடுதியில் 12.11.2014 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியிலும் மா.பெ.பொ.க. தோழர்கள், திருச்சி சிந்தனையாளர் கழகத் தோழர்கள் வே. ஆனைமுத்து, இரா. கலியபெருமாள், ந. கருணாகரன், பொறிஞர் கோ. பார்த்தசாரதி, ச. இராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

12.11.2014இல் படத்திறப்பு நிகழ்ச்சியில், வே. ஆனைமுத்து, அ. வேணுகோபால், ஆசிரியர் மு. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர். அரங்க. தமிழ்மணி நன்றி உரைத்தார்.

வாழ்க துளசி அம்மாள் புகழ்!

- வே. ஆனைமுத்து

Pin It