உயிரோடு இருக்க வேண்டியது

மனிதன்தானே தவிர

மனிதம் அல்லவாம்

படைப்பும் படைப்பாளியும் கூட

அப்படித்தானாம்

மொழிவது முற்போக்காய்

இருந்தால் போதும்

மொழி எக்கேடு கெட்டாலும்

பரவாயில்லை.

பெருமைக்காக

ஆங்கிலம் கலந்து பேசும்

தமிழ் இலக்கிய

முற்போக்குகள் சில

மொழி குறித்து இங்கணம்

வழியெல்லாம் மொழிகின்றன.

குறில் நெடில்

குறைபடலாம்

ஒற்றெழுத்தை

ஒதுக்கி வைக்கலாம்

ஆங்கிலத்தையும்

அன்னிய மொழிகளையும்

அடிக்கடி கலந்து

எழுதுவதும் பேசுவதும்தான்

எடுப்பாயிருக்கிறதாம்.

சந்திப்பிழை

சந்தி சிரிக்கலாம்

மொழிமானம் என்பதெல்லாம்

மொழி வெறியாம்

மொழி என்பது

வெறும் ஊடகமாம்

சொற்களிலும்

சொற்களுக்கு நடுவிலும்

தனக்கான உரிமை வேண்டி

உண்ணாநோன்பு இருக்கின்றன

உயிரும் மெய்யும்

அய்ம்புலனும் சிதைய

அழுதும் அலறியும்

துடித்துக் கொண்டிருக்கிறது

அய்ந்திலக்கணம்.

Pin It