ஒரு மாதத்திற்கும் குறையாமல் தமிழக விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் படி போராடுகிறார்கள். ஆனால் எந்த அரசும் அவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளல்லை எப்படியாவது முடக்க வழி செய்தனர். ஆனால் மக்கள் மனதை வென்றனர் விவசாயிகள்.
அவர்களது கோரிக்கைகள்!
மத்திய அரசு தமிழகததிற்கு வறட்சி நிவாரணத்தை அதிகப்படுத்தி தர வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்வது, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவது போன்ற முதன்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பல முறை மாநில அரசின் சார்பாக அமைச்சர்களும் மத்திய அரசின் அமைச்சர்களும் சந்தித்து சமாதனப்படுத்தி போராட்டத்தை கைவிடுமாறு கூறுகிறார்கள். ஆனாலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தை தொடர்கிறார்கள்.
யார் இந்த அய்யாகண்ணு!
இந்திய பிரதமரை தவிர ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை தங்கள் திருப்பிய விவசாய போராட்டத்தின் தலைவரும் போராட்டத்தின் நாயகனுமான, பி.அய்யாகண்ணு திருச்சியை சேர்ந்தவர், 72 வயது முதியவர். விவசாயும் வக்கீலுமாவார். இப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவராக உள்ளார்.
இதுவரை தமிகத்தில் விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சனை எனும்போது முன்னின் போராட்டக் களம் காண்பவர் அய்யாகண்ணு. திருச்சி சார்ந்த பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு பெயர் போனவர். இன்று இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
போராட்டத்திற்கான காரணங்கள்
சமீபத்தில் மட்டும் தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் மாநில அளவில் வறட்சி மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் வறட்சி நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு போதிய அளவில் மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரம் காவிரி நீர் இதனை உயர்நீதிமன்றமே தமிழகத்திற்கு நீர் விட வேண்டும் என உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை கர்நாடக அரசு காவிரி நீரை பாய்ச்சவுமில்லை. தொடர்ச்சியாக தமிழகத்தின் மீது மத்திய அரசின் பார்வை விழவேயில்லை என்பதனால் டெல்லியில் போராட்டத்திற்கு முகாமிட்டுள்ளனர் விவசாயிகள்.
சென்ற ஆண்டு அய்யாகண்ணு தலைமையில் ஒரு குழு தமிழகத்திலிருந்து டெல்லி சென்று அரசாங்கத்தை சந்தித்து பிரச்சனைகளை கூறி உறுதி பெற்று வந்தார்கள். ஆனால் சொன்னதை போல் எந்தவொரு முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை என்பதாலும் மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மையாலும் விவசாயிகள் டெல்லியை முகாமிட்டுள்ளனர்.
விவசாயிகளின் கவன ஈர்ப்பு போராட்டம்!
தமிழக விவசாயிகள் ஒரு மாதக்காலமாக தொடரும் போராட்டத்தில் அரசின் கவனத்தை தன் பக்கம் திருப்ப பல சிரமங்களை எடுத்துக் கொண்டார்கள்.
எலிக்கறி, பாம்பு கறி, முயல் கறி சாப்பிடுவது! மீசையையும் முடியையும் பாதி மழித்து போராட்டம், ஆண்களெல்லாம் சேலை உடுத்தி போராட்டம், தரையில் உருண்டு அங்கப்பிரதஸ்னம் செய்து போராட்டம், மோடியின் கையால் சாட்டையடி வாங்குவது போன்ற சாட்டையடி போராட்டம்! உடம்பு முழுக்க விவசாயிகளின் குறைகளை மையால் எழுதி போராட்டம், விவசாயிகளின் தற்கொலைகளை உணர்த்த தூக்கு கயிறு கழுத்தில் ஏந்தி போராட்டம், விவசாயிகளின் மனைவிகள் விவதைகளாக்கப்படுவதை மத்திய அரசுக்கு உணர்த்த சேலை உடுத்தி தாலி அறுக்கும் போராட்டம், வீதிகளில் பிச்சை எடுத்து போராடுவது என நமக்கு சோறு போட்டவர்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தியும் நாட்டின் பிரதமரின் கவனம் மட்டும் இவர்கள் மீது விழவே இல்லை.
விவசாயிகளின் பரிதாப நிலை!
விவசாயிகளின் வருமானத்தை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் கணக்கீட்டு வருகிறது. அதனடிப்படையில் 2002-03ன் படி ஒரு விவசாயினுடைய குடும்ப வருமானம் 2,115 ரூபாய். 2012-13 கணக்கெடுப்பின் படி ஒரு விவசாய குடும்பத்தின் வருமானம் 6,425 ரூபாய். தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கூட இல்லாத வருமானம் தான் விவசாயிகள் பெறுகின்றனர் எனலாம்.
கடந்த 30 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் இதே கால இடைவெளியில் அரசு ஊழியர்களின் சம்பளம் 370 சதவீதம் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் ஊழியர்களின் சம்பளம் ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான உரிமைகளில், வாழ்வாதாரங்களில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த ஆளும் அரசுகளும் கவனம் செலுத்தவிலை. இன்றைய மத்திய பாஜக அரசும் ஒருபடி மேல்சென்று விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தை நாடகம் என்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயம் அதை சார்ந்த தொழில் செய்பவர்களாகவே உள்ளார்கள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளில் முக்கால்வாசி பேர் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்றைய விவசாய நலிவுநிலையால் பல விவசாயிகள் கட்டுமானத் துறை நோக்கி நகரும் பரிதாபங்களும் பெருகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் பெரும் வறட்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 800 அடிகளுக்கு கீழ் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஒருமுறை போர் போடுவதற்கு ஆகும் செலவு லட்சத்திற்கும் மேல்! 1000 அடிகள் தோண்டிய பிறகும் தண்ணீர் கிடைக்காத பகுதிகளும் உண்டு. அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின் படி, நிலத்தடி நீரை துல்லியமாக கணக்கிட முடியாது ரேண்டமாகத் தான் சொல்ல முடியும் என்கிறது. எல்லா நிலைகளிலும் வலுவிழந்து காணப்படுகிறது விவசாயமும் அதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும். (தி இந்து 14-04-17)
விவசாயிகளுகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள்!
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போன்றதொரு மாபெரும் புரட்சி தமிழகத்தில் தோன்றிவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருந்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது ஆனால் அவர்கள் சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டனர். சென்னை கிண்டி கத்திபாரா பாலத்தில் இயக்குனர் கௌதமன் தலைமையில் நடத்தப்பட்ட மாணவ போராட்டம் கவனத்தை ஈர்த்தது. கத்திபாரா பாலத்தின் இரு பகுதிகளையும் பூட்டு போட்டு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. போலிசார் சிறிது நேரத்திற்கு பிறகு போராட்டக்காரர்களை தூக்கி சென்று கைது செய்தனர்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளின் சார்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் போராட்டக்களத்திற்கு ஆதரவளித்தனர். தேசிய ஊடகங்கள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை எல்லோரிடத்திலும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கவனத்தை ஈர்த்தது நாட்டு பிரதமரை தவிர.
விவசாயிகளுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அலட்சியப் போக்கு!
தமிழக விவசாயிகள் போராட தொடங்கியதில் இருந்து தங்களது குரல் அரசாங்கத்திற்கு கேட்க பல்வேறு விதமாக தங்களது போராட்டத்தை கொண்டு சென்றனர். ஆனாலும் மத்திய அரசின் பார்வை இவர்கள் மீது படவில்லை.
பாஜகவை சார்ந்த மத்திய அமைச்சர்கள் விவிசாயிகளை சந்தித்து போராட்டத்தை கைவிடக்கோரும் போது பிரதமர் எங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினால் ஒழிய நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று வெளிப்படையாகவே போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அறிவித்தார். ஆனாலும் பிரதமர் இறுதி வரை இதை பற்றி ஒருவார்த்தை கூட பேசவும் இல்லை.
போராட்டத்தின் போது அய்யாகண்ணு உள்ளிட்ட ஏழு விவசாயிகளை பிரதமர் மோடியிடம் பேச வைப்பதாக அழைத்து சென்றனர். பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றதும் அங்குள்ள ஒரு செயலாளரிடம் தங்கள் கோரிக்கைகளை கூறிவிட்டு செல்லும் படி நிர்பந்திக்கப்பட்டதும் தங்களது அவல குரல்களை எப்படியாவது பிரதமருக்கு எட்டிட வேறு வழியில்லாமல் தங்கள் மானம் துறந்து அலுவலக வாசலில் நிர்வாணமாக நின்று போராட்ட கோஷங்களை எழுப்பினார்கள். ஆனாலும், மோடியின் காதுகள் இந்த கோஷங்கள் கேட்க முடியாத அளவுக்கு அடைக்கப்படிருந்தது!
தமிழகத்தை சார்ந்த பாஜகவின் தேசிய ஊடக பிரிவுச் செயலாளர் எச்.ராஜா, அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தார், போராடுவதை போன்று நாடகமாடுகிறார் என்று தனிமனித வன்மத்தை பதிவு செய்தார். அய்யாக்கண்ணு இது சம்பந்தமாக பேசும் போது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனக்கு ஆடி கார் இருக்கிறது என நிரூபித்தால் தூக்கில் தொங்குகிறேன் என உணர்ச்சி மிக பேசினார். ஒரு விவசாயி ஆடி கார் வைத்திருந்தால் தான் என்ன குற்றம்? விவசாயி என்பவன் கோவணத்தை தவிர வேறு போடக்கூடாது என்பது போன்ற கீழ்தரமான எண்ணம் கொண்டவர்களை என்னவென்று சொல்வது?. இவர்களால் தான் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுமா?..
மோடியின் முகமூடி கிழிந்தது
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது " காங்கிரஸ் அரசு தங்களது நிலங்களை அபகரித்து விடுமோ என்ற பயத்தில் விவசாயிகள் உள்ளனர்” என்று விவசாயிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால், மோடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் எதை செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தாரோ அதற்கு நேர்மாறான விடயங்களை செய்ய தொடங்கினார். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்த பெரும்பாடு பட்டு பல அவசர சட்டங்களை இயற்றி தோல்வி அடைந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு.
2016ல் உத்திரபிரதேசத்தில் மோடி பேசும் போது “ 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக மாற்றுவது தான் தனது கனவு என்றார்.” அது புள்ளிவிவரங்கள் அடிப்பையில் நடைபெறாத ஒன்று என்றாலும் வெற்று வாக்குறுதிகளை கொடுக்கும் மோடி தனது அலுவலகத்தின் வெளியே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை சந்திக்க கூட நேரம் ஒதுக்கவில்லை. இதில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவேன் என பொதுமேடைகளில் பேசுகிறார்!. தாகம் எடுத்தவனுக்கு தண்ணி கேட்டால் உங்களுக்கு கோக் தருகிறேன் என பாசாங்கு காட்டி ஏமாற்றுகிறார்.
பாஜகவின் மோடி அரசுக்கு மக்கள் வைத்த கேள்விகள்!
ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடுகின்றனர். இந்த போராட்டம் தேசிய அளவில் முக்கியத்துவத்தை கொடுத்தும் பிரதமர் மோடியை சந்தித்து பேசாத வரை போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு சொன்ன பிறகும்! மோடி அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை! தமிழகத்தில் போராட்டம் நிகழ்த்திய மாணவர்கள் இதை பற்றி கேட்கும் போது, “ சிவராத்திரி அன்று தமிழகம் வந்து கோவை ஈஷா மையத்தில் ஆதிசிவன் சிலையை திறக்க நேரமிருக்கிறது, நடிகைகள் கவுதமி, கஜோல் போன்றவர்களை சந்திக்க நேரமிருக்கிறது, பாகுபலி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரமிருக்கிறது! ஆனால் தன் அலுவலக வாசலில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்களது போராட்ட வழிமுறை மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?.” திரையில் தோன்றும் சினிமா பிரபலங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்நாட்டின் உணவு உற்பத்தி செய்யும் உழைப்பாளிகளுக்கு இல்லை!..
பாஜகவினர் தொடர்ச்சியாக கூறும் பொய், இன்னும் ஆறு ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக்கப்படும் என்கின்றனர். மக்களை முட்டாளாக நினைத்து போலி வாக்குறுதிகளை வழங்கும் பாஜகவிடம் மக்கள் கேட்பதெல்லாம் “ கடந்த 30 ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை இன்னும் ஆறு ஆண்டுகளில் விடிவு வந்துவிடும் என சொல்வதெல்லாம் அண்டப்புழுகு இல்லையா?. பாஜக ஆட்சிக்கு அமர்ந்த பின்னால் தான் தமிழகத்தில் கெயில், மீத்தேன், ஹைட்ரோகார்பன் என விவசாயத்திற்கு எதிரான அத்தனை திட்டமும் தமிழகம் நோக்கி வந்தது! விவசாயிகளையே இல்லாமல் ஆக்கிவிட்டு யார் வருமானத்தை இருமடங்காக மாற்றப்போகிறார் மோடி?.”
ரூ.6 லட்சம் கோடி வங்கி கடன்களை வாராக்கடனாக அறிவித்தது மத்திய அரசு. இந்த கடனை பெற்றவர்களெல்லாம் பெருமுதலாளிகள்! இவர்களை பார்த்து யாராவது ஆடி கார் வைத்திருக்கிருந்தார்களா? எவ்வளவு வசதியானவர்கள் என யாரவது கேட்டதுண்டா? ஆனால் தனது வாழ்வாதாரத்திற்காக தன் உரிமைக்காக போராடும் விவசாயிகளை கீழ்தரமாக விமர்சிக்கும் போக்கு பாஜகவினரிடம் மட்டுமே காணப்படுகிறது! நான் டீ விற்று வளர்ந்தவன் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவன் இல்லை என காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டி விட்டு ரூ.10 லட்சத்திற்கு கோட் போட்டு ஊர் சுற்றும் அரசியல்வாதிகள் எப்படி எவ்வித கூச்சமும் இல்லாமல் விவசாயிகளை பார்த்து அவர்களின் வசதிகள் பற்றி கேள்வி கேட்க முடிகிறது?
பாஜகவினர் சிலர் ஏன் டெல்லியில் போறாடுகிறார்கள் இங்கே சொந்த ஊரில் போராட வேண்டியது தானே என நக்கலாக கேட்கின்றனர்! அவர்களுக்கு, “ மொத்த அதிகாரத்தையும் டெல்லியில் வைத்து விட்டு ஊரில் போராடி என்னவாகப்போகிறது! முதலில் இக்கேள்வி கேட்பதற்கு முன் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு சட்டபூர்வமாக வழங்குங்கள் பிறகு தமிழகத்தில் போராடி எங்கள் உரிமையை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்” என மக்கள் புறத்தில் இருந்து பதில் வந்தது.
போராட்டம் ஒத்திவைப்பு!
டெல்லியில் 41 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு எதிராகவே தொடந்து சிந்தித்தும் செயல்பட்டும் வரும் மத்திய பாஜக அரசும் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னராவது அவர்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சோறு போட்டவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையது. அதை செய்யாத போது மக்கள் மனதிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் விரைவில்.
- அபூ சித்திக்