மாவட்டந்தோறும் விழா நடத்திட, மா.பெ.பொ.க. முடிவு

“இந்தியாவில் பொதுவுடைமை மலர, மார்க்சியப் பெரியாரிய நெறியில், தேசிய இன வழிப்பட்ட சம உரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என்பது, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் குறிக்கோள்.

இந்தியாவில், பஞ்சாபில், பஞ்சாபி சுபா கோரிக்கை தொடங்கியது 1920களில்.

தென்னிந்தியாவில் மொழிவழி மாநிலக் கோரிக்கை ஆந்திரத்திலும், தமிழகத்திலும் 1940களில் எழுந்தது. தலைமை அமைச்சர் பண்டித நேரு தொடக்கம் முதல் இறுதிவரை இதற்கு எதிர்ப்பாகவே இருந்தார்.

இது தனி நாடு பிரிவினைக் கோரிக்கை அன்று - அவரவர் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கிற ஒரு கோரிக்கை தான் என்று தெரிந்த பிறகும்கூட, நேரு இக்கோரிக்கையை எதிர்த்தார்.

ஆயினும் பல மாநிலங்களில் இக்கோரிக்கை வீறிட்டு எழுந்தது. எனவே “மொழிவாரி மாநில அமைப்புக் குழு” (Commission) என்ற ஒன்றை அமைக்க வேண்டிய நெருக்கடிக்கு அவர் ஆளானார்.

அக்குழுவின் பரிந்துரையின்படி, “தமிழ்நாடு மாநிலம்” அமைந்தது; “ஆந்திர மாநிலம்” அமைந்தது; “கரு நாடக மாநிலம்” அமைந்தது.

அதற்காகப் பாடுபட்ட பெருமக்களின் உழைப்பையும் ஈகத்தையும் அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு விளக்கி, ஆண்டுதோறும் நவம்பர் 1 இல் ஒரு பெரு விழாவை நடத்துவது மிகவும் தேவை; மிகவும் நல்லது என உணரப்பட்டது.

இந்தப் பொதுநோக்கம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது.

கர்நாடக மாநில மக்கள், 1.11.1956 தொடங்கி - ஊர்தோறும், பள்ளிதோறும், அரசு அலுவலகங்கள், தனியார் பணிமனைகள் தோறும் கருநாடக மாநிலக் கொடியை ஏற்றி, தெருவெல்லாம் தோரணங்கள் கட்டி ஆண்டுதோறும் ஒரு பெருவிழாவை நடத்துகிறார்கள். இதை நான் நேரில் கண்டு பூரித்தேன். அன்று கர்நாடக அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் கட்டாய விடுமுறை தருகிறது, கர்நாடக அரசு.

சில இடங்களில் அங்கு வாழும் தமிழர்களும், மற்ற மொழிக்காரர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.

மொழிவழி மாநிலம் அமைக்கப்படப் பாடுபட்ட தலைவர்களின் பெருமையை விதந்து பேசுகிறார்கள்; தம் தாய் மொழி வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள்; தம் மாநில நலன் பற்றிப் பேசுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு விழாவைத் - “தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்” பெருவிழா என்கிற பேரால், “சான் றோர் பேரவை” என்னும் அமைப்பின் சார்பில், தோழர் நா. அருணாசலம் பல ஆண்டுகள் தமிழ் நாட்டில் நடத்தினார். எல்லா அமைப்பினரும் அதில் பங்கேற்றனர்; மா.பெ.பொ.க.வினரும் பங்கேற்றோம்.

தனி அமைப்புகள் நடத்துவதைவிடத் தமிழ்நாட்டு அரசே முன்வந்து, ஆண்டுதோறும், “தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்” பெருவிழாவை எடுக்க வேண்டும்; அதற்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரித் தீர்மானமும் அப்போது நிறைவேற்றினோம்.

ஆயினும் தி.மு.க. அரசோ; அ.இ.அ.தி.மு.க. அரசோ இதில் கரிசனம் காட்டவில்லை. இது வருந் தத்தக்கது; கண்டனத்துக்கு உரியது.

“இந்தியாவில் ஓர் உண்மையான கூட்டாட்சியை அமைக்க வேண்டும்” என, 1991 அக்டோபர் முதற் கொண்டு திட்டமிட்டு, அனைத்திந்திய அளவில், முடிந்த முயற்சிகளைச் செய்து வரும் - மா.பெ.பொ.க., 22.7.2012, ஞாயிறு அன்று, வேலூரில் நடைபெற்ற கட்சிப் பொதுக் குழுவில், வரும் 2012 நவம்பர் 1, வியாழன் அன்று, எல்லா மாவட்டங்களிலும், முன் னின்று, “தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்” பெரு விழாவை நடத்திடத் தீர்மானித்துள்ளதை மகிழ்ச்சி யுடன் அறிவித்துக் கொள்கிறோம். அனைத்துக் கட்சிகள் - அமைப்புகள் - தமிழ்ப் பெருமக்கள் அனை வர்க்கும் இதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். மா.பெ.பொ.க. தோழர்கள் முன் முயற்சி எடுத்து, எல்லா மாவட்டங்களிலும் அனைத்துத் தரப்புத் தமிழ்ப் பெருமக்களையும் அழைத்து, 1.11.2012 பெருவிழாவைச் சிறப்புற நடத்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

- வே.ஆனைமுத்து, பொதுச் செயலாளர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It