இமயம் முதல் குமரி வரையும் விரிந்து கிடக்கும் பெருநிலப்பரப்பு பல்வேறு மொழிப் பகுதிகளாகவும் நூற்றுக்கணக்கான ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்த நிலையில். பெருநிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசு - ஒரே ஆட்சிமுறை என்னும் ஆட்சியதிகாரத்திற்குள் பட்ட ஒரே நாடாக ஆக்கி, அதற்கு இந்தியா என்னும் பெயரையும் வழங்கியோர் ஆங்கிலேயர்.
அதற்கு முந்தைய தமிழ், வடமொழி நூல்களில் இந்து என்னும் சொல்லாட்சியில்லை. ஆங்கிலேயர் இன்னொன்றும் செய்தனர். இந்தியா முழுவதும், அனைத்துச் சமூகப் பிரிவினரும் கல்வி கற்கவும், ஆங்கிலம் பயிலவும் வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அவர்கள் செய்து உதவிய இந்த வசதியே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மொழியா ளரும் அனைத்து சமூகப் பிரிவினரும் ஒருங்கிணைந்து ஆங்கிலேயர்க்கெதிராக விடுதலைப் போராட்டம் நடத்தவும் வசதியாயிற்று.
திலகரும் - வ.உ.சி.யும், விபின் சந்திரபாலரும் - சுப்பிரமணிய சிவாவும், காந்தியாரும் - இராஜாஜியும், நேருவும் - சத்தியமூர்த்தியும், நேதாஜியும் - முத்து ராமலிங்கத் தேவரும் ஆங்கில மொழி வழியாகவே தொடர்புகொண்டு விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்கள்.
இன்று இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மக்களின் அன்றாட வாழ்வியல் பயன்பாட்டில் இல்லாத, எந்த மாநிலத்திலும் மாநில மொழி எனும் நிலையில்லாத வடமொழியை இந்தியா முழுமைக்கும் பொது மொழி யாக்க வேண்டுமெனும் கோரிக்கையைக் குறிப்பிட்ட சமூகச் சித்தாந்தவாதிகள் முன்வைக்கிறார்கள்.
வடமொழியை - வடமொழி வேதங்களைப் பிராம ணர் தவிர்த்துச் சூத்திரர் படிக்கவும் கூடாது; பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாதெனக் கட்டுப்பாடு செய்த காலம் போய், அனைவர்க்கும் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கும் காலமாகிவிட்டது.
அப்போதே அனைத்துப் பகுதியினரும், அனைத் துப் பிரிவினரும் கல்வி கற்கவும், சமஸ்கிருதம் பயில வும் வாய்ப்பும் வசதியும் செய்திருந்தால் வடமொழி எப்போதோ இந்தியா முழுவதும் மக்களின் பொது மொழியாகியிருக்கும். காலங்கடந்த ஞானோதயம். என்ன செய்ய?
இந்திக்கும் வடமொழிக்கும் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் எதிர்ப்பில்லை என்கிறார்கள், அதற் கும் காரணம் இருக்கிறது. தமிழ் தவிர்த்துப் பிற இந்திய மொழிகளனைத்தும் வடமொழியும் தொல்தமிழும் கலந்துரவான மொழிகளன்றித் தமிழும், வடமொழியு மல்லாத தனி மொழிகளல்ல. அம்மொழிச் சொற்களின் ஒரு பகுதி பழந்தமிழ்ச் சொல்லாகவும், தமிழ்ச் சொல்லின் திரிந்த வடிவாகவும் இருக்கும்.
அவ்வாறே இன்னொரு பகுதி வடமொழியாக இருக்கும். இரண்டுமல்லாத பிறமொழிச் சொற்கள் அருவழக்காகவே இருக்கும். எனவே, அவர்கள் இந்தி யால் - வடமொழியால் தமது மொழியின் தூய்மை கெட்டுவிடும் என அச்சப்பட வழியில்லை. ஆனால், தமிழின் நிலை வேறு.
தமிழுக்கும் வடமொழிக்குமான உறவு மிகத் தொன்மையானது. தம் காலத்திய இலக்கிய வழக்குச் சொற்களை நான்காக வகைப்படுத்தும் தொல்காப்பி யர், அவற்றுள் ஒன்றாக வடசொல் என்பதைக்க குறிப் பிடுகிறார். ஆனாலும், வடமொழிச் சொற்கள் மக்கள் வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் எவ்வாறு பயன் பட்டன என்பதையும் ஆசிரியர் விவரிக்கின்றார்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல் : 880)
வடமொழிச் சொற்களில் உள்ள வடமொழிக்கு மட்டுமான எழுத்தொலிகளை ஒதுக்கி - தமிழ் எழுத் தொலிகளாக மாற்றி வழங்கப்படும் என்பது இதன் பொருள். திருக்குறள் முதலாகத் தமிழ் இலக்கியங் களைக் கால வரிசைப்படி ஆராய்ந்தால் தொல்காப்பியர் கால நடைமுறை கி.பி.15-ஆம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது.
அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பெரு வழக் காகியது. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலா வது, கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்கள் கிரந்த எழுத்துகள் என்பவற்றின் துணைகொண்டு ஒலித்திரி பின்றியே பொறிக்கப்பட்டமை.
இரண்டாவது, வடமொழி தெய்வ மொழியாதலின் அம்மொழிச் சொற்களை ஒலித்திரிபின்றிப் பயன்படுத் துதலே தகுமெனும் மயக்கவுணர்வு. சரி - இந்தக் கிரந்த எழுத்துகள் என்பவை யாவை?
கி.பி.3ஆம் நூற்றாண்டில் - ஆந்திராவில் - இக்ஷுவாகு அரச மரபினர் தங்களின் கல்வெட்டுகளை வடமொழியில் வெளியிட முற்பட்டபோது, வடமொழி வரிவடிங்களில் சில கல்வெட்டில் பொறிப்பதற்குக் கடினமாக இருந்ததால் அவற்றுக்கு மாற்றாக கிரந்தம் எனப்படும் வரிவடிவங்களைப் பயன்படுத்தினர்.
கி.பி.4ஆம், 5-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களும் அதே முறையைப் பின்பற்றினர். பிற்காலப் பல்லவர், சோழர், பாண்டியர்கள் தமிழ்க் கல்வெட்டுகளிலும் வடமொழிச் சொற்களுக்கு இதே முறையைப் பின்பற்றினர். கிரந்த எழுத்துகள் தமிழர் வழக்காறாயினமை இப்படித்தான். ஆக, நாம் பயன்படுத்தும் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளுமல்ல. தமிழர்களால் படைக்கப் பட்டவையுமல்ல. வடமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்காகப் படைக்கப்பட்டவையுமல்ல. இயல்பான எழுத்து வழக்கிற்கு உருவாக்கப்பட்டவையுமல்ல.
கல்வெட்டில் வடமொழிப் பயன்பாட்டிற்காக உரு வாக்கப்பட்ட எழுத்து முறை பைந்தமிழுக்காகிவிட்டது. உலகில் தமிழ்மொழி போல வளர்ச்சி பெற்ற எந்த மொழியாளர் பிற மொழிச் சொற்களுக்காகத் தமது மொழியின் நெடுங்கணக்கை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தியும், வடமொழியும் பயிலாத நிலையிலே இந்த நிலையென்றால், வடமொழி மக்கள் மொழியா னால் தமிழின் நிலை என்னாகும்?
இரண்டாவதாக, தென்னாடுடைய சிவனே எந் நாட்டவர்க்கும் இறைவன் என்கிறோம். ‘ஆரியம் தமி ழோடு இசையானவன்’ என்கிறார் அப்பர் பெருமான். ‘தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழற் சேர - அம்மலர்க்கொன்றை அணிந்தஎம் அடிகள்’ எனப் போற்றுகிறார் தமிழ் ஞானசம்பந்தர்.
இன்றைய நிலை என்ன? தமிழுக்குத் திருக்கோயில் களில் மட்டுமல்ல, குடும்பச் சடங்குகளிலும் இடமில்லை. இந்தியும், வடமொழியும் மக்கள் மொழியானால் தமி ழர்தம் அன்றாட வாழ்விலும் தமிழ்மொழி நீச மொழி யாக ஒதுக்கப்பட்டுவிடும் என்பதை ஒதுக்கித் தள்ளுவ தெப்படி?
மூன்றாவதாக, சம்ஸ்கிருதம் படித்தல் என்பது என்ன? தமிழ்ப் பாடத்தில் திருக்குறளும், சங்கப் பாடல்களும், சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களும் முதன்மையாகின்றன. அவ்வாறே வடமொழிப் பாடத்தில் வேதங்களும், பகவத்கீதையும், இராமாயணமும், பாரத மும், மனுஸ்மிருதியும் முதன்மையாகும்.
அதன்வழி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதற்கு மாறாக, மக்கள் பிறக்கும் போதே நால் வருணத்தவராக மேல்சாதி - கீழ்ச்சாதியாகப் பிறக் கிறார்கள் என்னும் வருணாசிரமக் கலாசாரம் புத்துயிர் பெறும் - என்பதுதான் பெரியாரின் இந்தி - வடமொழி எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணமாகிறது. பெரியாரின் சீடர்களை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது புரியவில்லை.
நான்காவதாக, ஆங்கிலம் படித்தால் அனைத்துலகும் சென்று வரலாம்; வென்று வரலாம் என்பது மெய்ப் பாட்டிற்குப் புறம்பான பொய்ப்பாட்டு என்பதை உறைக் கும் வகை உரைத்தாலும், எப்பாடுபட்டாலும் எங்கள் பொய்ப்பாட்டை விடேம் என்பார் போல இந்தியும், வடமொழியும் படித்தால் அனைத்திந்தியாவும் சென்று வரலாம்; வென்று வரலாம் என்கிறார்கள்.
அதாவது, தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்கள் அனைத்திலும் அரசுப் பணிகளுக்குத் தேவையான படித்தவர் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறதா? அல்லது, அங்கெல்லாம் எந்தவொரு தொழிலுக்கும் ஆள் கிடைக்காமல் அல்லற்படும் நிலைமையா? ஆதார மாகும் புள்ளிவிவரம் உண்டா?
அப்படியானால், தமிழகம் முழுவதும் சின்னஞ்சிறு நகரங்களிலும் தேநீர்க்கடையும், பெட்டிக்கடையுமாகப் பிழைத்துக் கொண்டிருப்பவர்களுமான அயல் மாநிலத்தவர் அங்குவிட்டு இங்கு வரக்காரணமென்ன? அதுமட்டுமா? அவர்கள் எல்லாரும் அவரவர் மாநிலத்தில் தமிழ் படித்து அதற்கான சான்றிதழோடுதான் தமிழ் நாட்டிற்குள் நுழைந்தார்களா?
தமிழன் இந்தியும், வடமொழியும் படித்து, அதற் குரிய சான்றிதழோடுதான் பிற மாநிலங்களில் நுழைய முடியுமென்றால், அதுவென்ன இந்திய ஒருமைப்பாடு? தமிழன் கொஞ்சம் ஏமாளிதான். அதற்காகத் தமிழன் காதில் எவ்வளவும் பூச்சுற்றலாம் என நினைத்தல் நியாயமாகுமா?
இவ்வளவுக்கும் புறம்பாக-இந்திக்கும், வடமொழிக் கும் எதிர்ப்புணர்வின் வலிமை குறைய வேண்டுமா னால் நிறைவேற வேண்டியவை இரண்டு. முதலாவது, தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும். அனைத்து நிலை களிலும் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும்.
இரண்டாவது, இந்தியத் தேசிய மொழிகள் அனைத்தும் இந்திய ஆட்சி மொழிகளாகச் சம உரிமை பெற வேண்டும். இந்த இரண்டிற்குமான ஒப்புதலும், ஏற்பாடுமின்றி இந்தியை - வடமொழியை இந்தியப் பொது மொழியாக்கும் முயற்சி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தியப் பொது மொழியாளர், உலகப் பொது மொழியாளர் இருசாராரும் நினைவிற்கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (குறள்-511)
இன்று தாய்மொழி தினம்.
நன்றி : தினமணி, 21-2-2015