Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • திங்கட்கிழமை, 22 மே 2017, 10:11:16.

தொடர்புடைய படைப்புகள்

உங்கள் நூலகம்

sascha-Ebeling 350படித்துப் பாருங்களேன்...

Sascha Ebeling (2013) Colonizing the Realm of words: The transformation of Tamil literature in 19th century - South India, Dev Publishers & Distributors, New Delhi.

இந்தியாவில் ஆங்கிலக் காலனி ஆதிக்கம் மேற்கொண்ட செயல்பாடுகளை ‘ஆக்கப்பூர்வ மானது’; ‘அழிவுப்பூர்வமானது’ என்று கார்ல் மார்க்ஸ் இரண்டாகப் பகுப்பார்.

அவர் குறிப்பிடும் ஆக்கப் பணிகளில் ஒன்று நவீனக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியதாகும்.

‘அய்ரோப்பாவில் உருவான புத்தொளிக்காலத்தின் (ஏஜ் ஆஃப் என்லைட்மெண்ட்) தாக்கத்திற்குட்பட்ட கல்வி முறை அவர்களால் இங்கு அறிமுகப்படுத்தப் பட்டது.

மற்றொரு பக்கம் மெக்காலே குறிப் பிட்டது போல்: “இரத்தத்தால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும்” காட்சி யளிக்கும் இந்தியர் கூட்டமொன்றை இக்கல்வி முறை உருவாக்கியது.

அத்துடன் இந்திய மொழிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு ஆங்கில மொழியை ஆதிக்க மொழியாக நிலை நிறுத்தியது.

இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம் என்பனவற்றுடன் பண்பாட்டிலும் காலனிய ஆதிக்கம் ஊடுறுவியது. சொற்களின் மீதான காலனியத்துவம் என்ற தலைப்பிலான இந்நூல் 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆங்கிலக் காலனியத் துவத்தின் தாக்கத்தை ஆராய்கிறது.

நூலாசிரியரான சாஷா இப்பிலிங், சிக்காகோ பல்கலைக்கழகத்தில், தெற்காசிய மொழிகள் நாகரிகம் குறித்த உதவிப்பேராசிரியராகவுள்ளார்.

சொற்களின் மீதான காலனியத்துவம் குறித்த இந்நூலின் அறிமுகப் பகுதியானது, இலக்கியமும், காலனியத்துவமும், 19ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப்படைப்புகள் இந்நூற்றாண்டில் நிகழ்ந்த பண்பாட்டு மாறுதல்கள், இழந்துபோன இலக்கியங்கள் என்பன குறித்த சில பொதுவான செய்தி களைக் குறிப்பிடுவதுடன் இந்நூலின் இயல் அமைப்பு குறித்தும் விவரிக்கிறது.

மரபுவழித் தமிழ்க்கல்வி

மரபு வழியிலான தமிழ்க் கல்வி கற்று மரபு வழித் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தவர் திரிசிரபுரம் மகாவித்வான் தி. மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876). மரபு வழித் தமிழ்க்கல்வியின் அடையாளமாக விளங்கிய இவர் தமிழ்க்கல்வி பெற்றது குறித்த செய்திகளை இவரது மாணவர் உ.வே.சாமிநாதையர் தாம் எழுதிய ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்’ என்ற நூலில் விரிவாக எழுதி யுள்ளார்.

U-V-Swamynaderai 300மரபு வழித் தமிழ்க்கல்வியை இவர் கற்பித்த முறை குறித்து தமது தமது சுயசரிதை யான ‘என் சரித்திரம்’ என்ற நூலில் உ.வே.சா பதிவு செய்துள்ளார். இவ்விரு நூல்களின் துணை கொண்டும் வேறு பல ஆவணங்களின் துணை கொண்டும் 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வி குறித்த வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் தொகுத்துள்ளார்.

திண்ணைப்பள்ளிக்கூடம்

பாடம் கற்பிக்கும் ஆசிரியரது வீட்டுத் திண்ணையோ கிராமத் தலைவரது வீட்டுத் திண்ணையோ பள்ளி நடைபெறும் இடமாக இருந்தது. இதன் அடிப்படையில் திண்ணைப் பள்ளிக்கூடம் என்ற பெயர் உருவாகியுள்ளது.

தமிழ் இலக்கியம், ஒழுக்கநெறி, புராணம், பொதுப்படையான நாட்டார் வழக்காறு, கணக்கு, வியாபாரம் வேளாண்மை தொடர்பான நடை முறையறிவு என்பன திண்ணைப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டன.

சார்லஸ் ஈ கூவர் என்ற ஆங்கில அதிகாரி நான்கு பாடங்களே இங்கு கற்றுக் கொடுக்கப் பட்டதாக ‘இந்தியன் ஆண்டிக்குயரி’ என்ற ஆய்விதழில் 1873 ஆம் ஆண்டில் ‘சென்னையில் திண்ணைப்பள்ளிக் கூடங்கள்   (Pyal Schools in Madras) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றின் அடிப் படையில், படித்தல், எழுதுதல், கணக்கு, மனப் பாடம் செய்தல் என்பன பாடத்திட்டமாக அமைந்தன.

படிப்பதற்கான பாடங்கள் உயரிய மொழி நடையில் அமைந்திருந்ததாகவும், சாதாரண இக்காலத் தமிழில் அவை அமையவில்லை என்றும் கூறும் அவர், அங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ‘திருக்குறள்’, ‘ஆத்திசூடி’, ‘கிருஷ்ணன் தூது’, ‘பஞ்ச தந்திரம்’, ‘கம்ப இராமாயணம்’ ‘கதாசிந்தாமணி’ என்பனவும், நன்னூல், நிகண்டு ஆகியனவற்றில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கணப் பகுதிகளும் இப்பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இவற்றுடன் ‘சிருங்கார ரசம்’ கொண்ட நூல்களும் கற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் குறைபட்டு உள்ளார். மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் பட்ட முக்கிய இலக்கியமாக ‘அந்தாதி’ இருந் துள்ளது. இது குறித்து உ.வே. சாமிநாதய்யர் தம் சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“பண்டைக்காலத்தில் பதங்களைப் பிரித்துப் பழகுவதற்கும் பலவகையான பதங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மனனம் செய் வதற்கும் அனுகூலமாக இருக்குமென்று கருதி அந்தாதிகளை மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லி வந்தார்கள்” சொற்சிலம்பம் என்று கூறத்தக்க அளவில் சொற்களை வைத்து விளையாடும், மடக்கு (யமகம்) என்ற செய்யுள் வடிவமும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இது தவிர சொல்லணி, பொருளணி, சித்திரகவி, நீரோட்டம் என்பனவும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

புலவர்கள் படைப்புகள்

பிரபந்தங்கள் (சிற்றிலக்கியங்கள்) தல புராணங்கள் என்பன இப்பாரம்பரியக் கல்வியைக் கற்றவர்கள் படைத்த படைப்புகளாக அமைந்தன.

ஈற்றடியை அடிப்படையாகக் கொண்டு வெண்பா இயற்றலையும், கோவில்கள் - கோவில் உள்ள ஊர்களை மையமாகக் கொண்டு தல புராணங்கள் எழுதுவதையும் இக்காலப்புலவர்கள் மேற்கொண்டனர். அவ்வப்போது சில நிகழ்வு களையும் வேண்டுதல்களையும் மையமாகக் கொண்டு பாடல்கள் எழுதுவதுண்டு. இவை தனிப்பாடல் என்று பெயர் பெற்றன. ‘சீட்டுகவி’ என்ற பெயரில் கடித வடிவிலான பாடல்களும் இயற்றப்பட்டன. இவையும் தனிப்பாடல் வகையைச் சார்ந்ததாகவே அமைந்தன.

meenatchisundarampillai 300புரவலர்கள்

இக்கவிஞர்களின் புரவலர்களாகக் கோவில் களும், ஆதினங்களும் (மடங்களும்) அமைந்தன. இவை தவிர ஆங்கில அரசுக்கு வரிவசூலித்துக் கொடுக்கும் முகவர்களாக வட்டார அளவில் செயல்பட்டு வந்த சமீன்தார்களும் புரவலராக விளங்கினர்.

புதுக்கோட்டை, இராமனாதபுரம், சிவகங்கை, எட்டயபுரம், உடையார்பாளையம், ஊற்றுமலை, சேத்தூர் ஆகிய ஊர்களின் சமீன்தார்கள் இப் புரவலர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களைத் தவிர பெருவணிகர், பெருநிலக் கிழார் ஆகியோரும் புரவலர்களாய் விளங்கினர்.

பாடு பொருள்

புகழ்ச்சியும் (துதியும்) சிருங்கார ரசமும் புலவர்கள் பாடல்களில் முக்கிய இடம் பெற்றன. சமீன்தார்களின் தாராளகுணம், உடல் அழகு, போரிடும் ஆற்றல் ஆகியன பாடல்களில் முக்கிய இடம்பெற்றன.

பூபாலன், நரேந்திரன், தளசிங்கன், துரை சிங்கம், ஜெயசீலன், ராஜேந்திர உத்தமன் என்பன சமீன்தார்களைப் புகழப் பயன்படுத்திய முக்கிய சொற்களாகும்.

சிறப்புப் பாயிரம்

இத்தன்மையை சிற்றிலக்கியங்கள், தல புராணங்கள் எழுதி முடித்த பின்னர் அவற்றைக் குறித்த பாராட்டுரை போல தம்மிலும் புகழ்மிக்க ஒருவரிடம் செய்யுள் வடிவிலான பாராட்டு உரையைப் பெறுவர். இது சிறப்புப்பாயிரம் அல்லது சாற்றுக்கவி என்றழைக்கப்பட்டது.

ஓர் இலக்கியப்படைப்பின் சிறப்பையும் அதன் ஆசிரியரது புலமையையும் மட்டுமின்றி அந் நூலின் புரவலரையும் புகழும் வகையில் சாற்றுக் கவிகள் அமைந்தன.

நூல் ஆசிரியரின் குரு, உடன் பயின்றவர், நண்பர், சீடர் என நான்கு நிலையினர் சாற்றுக்கவி எழுதுவோராய் இருந்தனர். அத்துடன் புலமை மிக்கவர்களாக விளங்கியோரிடமும் சாற்றுக்கவி பெறுவது வழக்கமாய் இருந்தது. இது தொடர் பாக ஆ. இரா. வேங்கடாசலபதி கூறும் பின்வரும் கருத்து கவனத்துக்குரியது.

“கல்வியும் அறிவும் ஒரு குறிப்பிட்ட சமூகப் படிநிலையில் இருந்தவர்களிடமே நிலை பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்கெனவே இத்தகுதியைப் பெற்றிருந்தவர் களின் பரிந்துரை தேவைப்பட்டது. இதன் வெளிப்பாடாகவே சிறப்புப் பாயிரத்தைக் கருதினர். ஏற்றுக் கொள்ளத்தக்க படைப்பு என்பதற்கான முத்திரையாக சிறப்புப்பாயிரம் அமைந்தது.”

* * *

பெரிய புலவர்களாக விளங்கியோரிடம் அவ்வளவு எளிதில் சிறப்பாயிரம் பெற முடியாத நிலை நிலவியது. 19 ஆம் நூற்றாண்டில் பெரும் புலவராக விளங்கிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு நூலின் சிறப்பிற்கேற்ப சிறப்புப் பாயிரத்துக் கான யாப்பு வடிவத்தைப் பயன்படுத்தியதாக அவரது மாணவர் உ. வே. சா குறிப்பிட்டுள்ளார்.

நல்ல நூல் என்று அவர் கருதினால் அகவல், விருத்தம் தரவு கொச்சகம் என்ற யாப்பு வடிவங் களைப் பயன்படுத்துவார். அவ்வாறு இல்லை யென்றால் இன்னார் இன்ன நூலை எழுதி யுள்ளார் என்று குறிப்பிட்டு ஒன்று அல்லது இரண்டு செய்யுட்களை மட்டும் எழுதுவார்.

கோபாலகிருஷ்ண பாரதியார், தாம் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ என்ற நூலுக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சிறப்புப்பாயிரம் வாங்க அலைந்ததையும் இறுதியில் அவரிடம் சிறப்புப்பாயிரம் வாங்கிய நிகழ்வையும் உ.வே.சா. தமது ‘ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்’ என்ற நூலில் சுவைபட எழுதியுள்ளார்.

அரங்கேற்றம்

நூல் ஒன்றுக்குச் சிறப்புப்பாயிரம் பெறுவதை யடுத்து அதன் ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய மற்றொரு பணி அதை அரங்கேற்றம் செய்வதாகும். இது எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து

ஆ. இரா. வேங்கடாசலபதி, பின்வருமாறு விவரித் துள்ளார்.

“நல்ல நாள் ஒன்றை நூல் அரங்கேற்றம் செய்யும் நாளாகத் தேர்வு செய்வர். அரங் கேற்றம் குறித்த செய்தியை அது நடை பெறும் ஊரின் மக்களுக்கும் அதன் சுற்றுப் பகுதிகளில் வாழும் முக்கியமானவர்களுக்கும் தெரிவிப்பர். நூலின் புரவலர் இவ்வேற் பாடுகளை மேற்கொள்ளுவார். புரவலரின் சமூக உயர்மதிப்பையும் அவருடைய வள்ளல் தன்மையை வெளிப்படுத்தவும் அரங்கேற்றம் துணை புரிந்தது. எனவே மிகுந்த ஆடம் பரத்துடன் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

ஊர்ப்பொதுயிடம் ஒன்றில், பெரும்பாலும் ஊர்க் கோவிலில் இது நிகழ்ந்தது. இதனால் சமய அங்கீகாரம் நூலுக்குக் கிட்டியது. அரங்கேற்றம் நிகழும் மண்டபம் மரபு சார்ந்த முறையில் அலங்கரிக்கப்படும்.

நல்ல நேரத்தில் அரங்கேற்றம் தொடங்கும் ஓலைச்சுவடி வடிவிலுள்ள நூலின் பனுவல், தெய்வத்தின் முன்வைக்கப்படும். வழிபாடு நிகழ்ந்தபின் அவ்வோலைச்சுவடி நூலாசிரி யரின் கையில் தரப்படும் . பின், திருநீறு, பூக்கள் மாலைகள் ஆகியன பிரசாதப் பொருளாக அவரிடம் வழங்கப்படும்.

இதன் பின்னர் அரங்கேற்றம் தொடங்கும். பெரும்பாலும் நூலாசிரியரின் சீடர்களில் ஒருவர் நூலை வாசிப்பார். நூலாசிரியர் செய்யுட்களுக்கு பொருள் கூறுவதுடன் அதில் இடம்பெறும் இலக்கியம், புராணம் சார்ந்த செய்திகளை விளக்குவார். இது தொடர்ச்சியாகப் பல நாட்கள் பிற்பகல் நேரத்தில் நிகழும்.”

புகழ்ச்சிப் பொருளாதாரம்

இவ்விலக்கியங்களின் அடிப்படை நோக்கம் புரவலர்களிடம் இருந்து பொருள் பெறுவதுதான். இதனால் புகழுதல் (துதித்தல்) என்பது இவற்றில் அதிக அளவில் இடம் பெறலாயிற்று. புலவரின் பொருளாதாரம் நிலைபெற, துதித்தலே ஆதார மாக அமைந்ததால் புகழ்ச்சிப் பொருளாதாரம் ((Economy of Praises)  என்று குறிப்பிடுவது. பொருத்த மாயிருக்கும் புலமை என்பது தொழிலாக விளங்கியதால் புகழுதல் என்பது தொழிலுக்கான மூலதனமாய் அமைந்தது.

இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த புகழ்ச்சி இருவகைப்பட்டதாய் இருந்தது. முதல் வகை, தெய்வங்கள், புனிதர்கள், புனிதத்தலங்கள் (கோவில் அல்லது நகரம்) தொடர்பான புகழ்ச்சி யாகும். இரண்டாவது வகையில் சமீந்தார்கள், பெருவணிகர், நூலாசிரியன், குரு, நூலின் புரவலர் ஆகியோரைக் குறித்த புகழ்ச்சி அடங்கும். இரண் டாவது வகைப் புகழ்ச்சியில் குறிப்பாக அரசவை சார்ந்த இலக்கியத்தில் போற்றுதலும், சிருங்கார ரசமும் (சிற்றின்பமும்) இணைந்து காணப்படும்.

தானியம், பணம், தங்க அணிகலன்கள், நிலம் எனப்பல வடிவங்களில் புரவலர்கள் புலவர் களுக்கு உதவினர். இவை தவிர ‘பல்லக்கு’ ‘பட்டாடை’ வழங்கல் என்பன சிறப்புக்குரியன வாய் அமைந்தன. இராமனாதபுரம் பாஸ்கர சேதுபதி விலையுயர்ந்த பட்டாடைகளை உ.வே.சாவுக்கு வழங்கிச் சிறப்பித்தார். இப் பட்டாடை களுடன் திருவாடுதுறை மடத்திற்குச் சென்று மடாதிபதியிடம் அவற்றைக் காட்டினார். பின் முந்நூறு ரூபாய்க்கு அவற்றை மடத்துக்கு விற்று விட்டார். அத்தொகையைக் கொண்டு சிலப்பதிகாரம் அச்சிட்டது தொடர்பாகத் தமக்கு ஏற்பட்டிருந்த கடனை அடைத்துவிட்டதாக உ.வே.சா. தம் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

புகழ்ச்சிப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி

தெய்வங்கள், ஆதினங்கள், சமீன்தார்கள், பெருநிலக்கிழார்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் சீட்டுகவிகள் என்ற இலக்கிய வகைமைகளைப் படைத்தும் இவற்றின் வாயி லாகத் துதி செய்தும் பொருள் பெற்று வாழ்ந்த புலவர்களின் புகழ்ச்சிப் பொருளாதாரம் காலனிய ஆட்சியில் வீழ்ச்சியை எதிர்கொண்டது.

இவ்வீழ்ச்சிக்கான காரணங்களாகப் பின் வருவன அமைந்தன.

1) மடாதிபதிகள், சமீந்தார்கள் ஆகியோரின் பொருளியல் வீழ்ச்சி

2) அச்சு இயந்திரத்தின் அறிமுகம்

3) புத்தகச் சந்தை - நூலகம் - பத்திரிகைகள் மௌன வாசிப்பு என்பனவற்றின் அறி முகம்.

பழைய புரவலர்களின் இடத்தில் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், வட்டித்தொழில் செய்வோர், ஆசிரியர்கள், வணிகர்கள், ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் நூலாசிரியரைப் பேணும் புரவலர்களாக விளங்கினர். நூல்களை அச்சிடப் பண உதவி செய்தும் அவற்றை விலைக்கு வாங்கியும் நூலாசிரியருக்கு இவர்கள் உதவினர்.

அரங்கேற்றம் என்ற நிகழ்வு படிப்படியாக மறைய லாயிற்று. சிறப்புப்பாயிரம் நூலின் முன் பக்கம் அச்சு வடிவில் இடம் பெறத் தொடங்கியது. தடித்த, வேறுபாடான அச்சு வடிவில் புரவலர் களின் பெயர்கள் நூலின் தொடக்கத்தில் இடம் பெறலாயின. இவ்வகையில் புகழ்ப் பொருளா தாரம் வேறு வடிவில் தொடர்ந்தது. ஆசிரியர் களாகவும், நூல்களின் பதிப்பாசிரியர்களாகவும் தமிழ்ப் புலவர்கள் மாறினர். ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகளார், உ. வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை, முகவை இராமானுச கவிராயர் ஆகியோர் இவ்வரிசையில் குறிப்பிடத் தக்கவர்கள்.

19 ஆம் நூற்றாண்டுத் தமிழகம் மாறுதல் நிகழும் காலமாக விளங்கியது. இம்மாறுதல்களின் ஒரு பகுதியாக நவீனக் கல்விமுறையும் அச்சு இயந்திரங்களின் வருகையும் ஆகியனவற்றைத் தாண்டி தமிழ் இலக்கியப் பண்பாடு சென்னை நகரை மையம் கொண்டதாக ஸ்டுவர்ட் பிளாக் பேர்ன் குறிப்பிடுகிறார். இதில் ஓரளவு உண்மை யிருந்தாலும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.

அச்சுப் பண்பாட்டினால் நிகழ்ந்த மாறு தல்கள் எவற்றிற்கும் ஆட்படாத முக்கிய தமிழ் அறிஞராக மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வாழ்ந்து மறைந்தார். அவர் கல்வி கற்ற முறை - கற்பித்த முறை - அவரது நூல்களின் உள்ளடக்கம் - அவர் சார்ந்திருந்த திருவாடுதுறை ஆதினம் என்பனவெல்லாம் காலனிய ஆட்சிக்கு முன்னரும் காலனிய ஆட்சியின் தொடக்கத்திலும் நிலவிய பழைய மரபின் எல்லைக்குள் இருந்தன. நவீனத்துவத்தின் உள் வாங்கல் எதையும் இவரிடம் காணமுடியாது. (1868-ல் ‘கல்லாடம்’ நூலை இவர் பதிப்பித்து வெளியிட்டது மட்டுமே விதிவிலக்கு).

இதற்கு நேர்மாறானவராக இவரது மாணவர் உ.வே. சாமிநாதையர் விளங்கினார். நவீனக் கல்விக் கூடங்களில் ஆசிரியராக விளங்கியதுடன் தமிழின் மரபிலக்கியங்களைத் தேடிப் பிடித்து அவற்றைப் பதிப்பித்து அச்சிட்டு வெளியிடும் பணியைத் தம் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டிருந்தார்.

நாவல் 

புராணம், காப்பியம், கதைப்பாடல் என்பன கதையை உள்ளடக்கியனவாகத் தமிழ் மரபில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இலக்கிய வகைமை நாவ லாகும். நிகழ்கால சமூக அரசியல் விவகாரங் களை விவாதிக்கும் தளமாக நாவல் விளங்கியது. இப்பண்பு முந்தைய புகழ்ச்சிப் பொருளா தாரத்தில் இடம் பெறாத ஒன்றாகும்.

இது தொடர்பான வரலாற்றை தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடிகள் வரிசையில் இடம்பெறும் வேதநாயகம் பிள்ளை இராஜம் அய்யர் என்ற இருவரை முன்னிருத்தி ஆராய்வது பொருத்தமாகயிருக்கும்.

Vethanayagam 350வேதநாயகம்பிள்ளை (1826-1889)

திருச்சி நகருக்கு ஏழு மைல் தொலைவில் உள்ள வேளாண்குளத்தூர் என்ற கிராமத்தில் 1826 அக்டோபர் 11ல் பிறந்த இவரது முழுப்பெயர் சாமுவேல் வேதநாயகம் என்பதாகும். கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த இவர் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் பயின்று பின்னர் திருச்சி சென்று ஆங்கிலக் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலக் கல்வி பெறுவதென்பது பயனுடைய ஒன்றாகக் கருதப்பட்டது. இது தொடர்பாக சாமிநாதையர் தம் சுயசரிதையில் கூறியுள்ள செய்தி வருமாறு:

சாமிநாதையரின் வீட்டிற்கு வந்த ஒருவர் அவர் தமிழ்ப்படிப்பதை அறிந்ததும் பின்வருமாறு குறிப்பிட்டாராம். ஆங்கிலம் படித்தால் உலகியல் பயன் கிட்டும். சமஸ்கிருதம் படித்தால் மறு உலகப் பயன் கிட்டும். தமிழ்ப் படித்தால் இவ்விரு பயன் களும் கிட்டாது.

ஆனால் வேதநாயகம், ஆங்கிலத்துடன் தமிழையும் கற்றறிந்தார். அவ்வப்போது செய்யுள் எழுதும் அளவுக்கு அவரது தமிழ் அறிவு இருந்தது.

1848 சனவரி நான்காம் நாள் தமது இருபத் தொன்றாவது வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதிமன்ற எழுத்தராக நுழைந்தார். பின்னர் குற்ற வியல் ஆவணங்களைப் பராமரிப்பவராகப் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.

1856 இல் வழக்கறிஞர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதே ஆண்டில் நீதிமன்றத்தில் அதிகாரியானார். 1860 இல் மாயவரம் (மயிலாடுதுறை) நீதிமன்றத் திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1872 இல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 1860 தொடங்கி 1889 இல் அவர் மறையும் வரை இங்கேயே வாழ்ந்தார். இதனால் இவரது பெயருக்கு முன் மாயவரம் என்ற அடைமொழி இடம் பெற்றது.

நீதித் துறையில் பதவி வகித்தாலும் தமிழ்க் கல்வியின் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் அவருக்கு மரியாதையிருந்தது. திருவாடுதுறை மடத்தின் மடாதிபதியும், தமிழறிவுமிக்கவருமான சுப்பிரமணிய தேசிகரிடமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் இவருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. கத்தோலிக்கர் சைவர் என்ற சமய வேறுபாட்டைத் தமிழ் உணர்வு வென்றது.

சீர்காழியில் இவர் நீதிபதியாகப் பணியாற்றிய போது நீதி நூல் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலுக்கு 180 அடிகள் கொண்ட சிறப்புப் பாயிரத்தை மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதினார். இவ்வளவு நீண்ட சிறப்புப் பாயிரத்தை அவர் வேறு யாருக்கும் எழுதியதில்லை. இந்நூலுக்கு நல்ல வரவேற்பிருந்ததையடுத்து இந்நூலை விரிவு படுத்தி அடுத்த ஆண்டில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்.

600 செய்யுட்களின் தொகுப்பான இந்நூல் 44 இயல்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. இவை பெண் கல்வி, போலிக்குருக்கள், மது அருந்தல், மட்டுமீறிய உறக்கம், தேவதாசிகள், விலங்குவதை செய்யாமை போன்ற தலைப்புகளைக் கொண்டிருந்தன. இந் நூலுக்கு ஆங்கிலத்தில் முன்னுரையொன்றும் எழுதியுள்ளார். இம்முன்னுரையில் அவரது சமுதாயச் சீர்த்திருத்தம் குறித்த சிந்தனை வெளிப் படுகிறது.

உரைநடையைவிட செய்யுளே இந்துக் களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதால் எளிமை யான செய்யுட்களைக் கொண்டதாகத் தாம் இந் நூலை இயற்றியுள்ளதாகத் தம் ஆங்கில முன்னு ரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கால மரபு வழிப் புலவர்களின் பண்டிதத்தன்மை கொண்ட செய்யுட்களுக்கு மாறாக எளிய நடையிலான செய்யுட்களை அவர் எழுதியுள்ளார். இவ்வகையில் அவர் காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த இறுக்கமான செய்யுள் முறையை உடைத்த வராக அவர் விளங்குகிறார்.

* * *

நீதி நூலையடுத்து வேறுசில நூல்களையும் அவர் எழுதியுள்ளார். 1805ஆம் வருஷம் முதல், 1861ஆம் வருஷம் வரையில் உள்ள சட்டக் கோர்ட்டார் அவர்களின் சித்தாந்த சங்கிரகம் என்ற நூலை 1862 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 1862, 1863 ஆம் ஆண்டுத் தீர்ப்புகளின் சுருக்கத்தை வெளி யிட்டுள்ளார்.

1879 ஆம் ஆண்டில் வெளியான அவரது முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் 42 ஆவது இயலில் ஆங்கிலத்திற்குப் பதில் தமிழை நீதிமன்றங்களில் பயன்படுத்துவதை ஆதரித்துக் கருத்துக் கூறியுள்ளார்.

இதனால்தான் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பாண்டுரங்கன், “தமிழ் நாவல் இலக்கியத்திற்கு அவர் தந்தை என்று கருதப்படுவதைப் போன்று சட்டத் தமிழ்த் தந்தையாகவும் வேதநாயகரை இனங் கண்டு மதிப்பிட இயலும்.” என்று மதிப்பிட்டுள்ளார். 1869 இன் பெண்மதி மாலை, பெண்கல்வி என்ற இரு நூல்களை வெளி யிட்டுள்ளார்.

வேதநாயகம்பிள்ளை எழுதிய கட்டுரைகள்; கவிதையில் இருந்து உரைநடைக்குத் தமிழ் மாறு வதைக் குறிப்பிடுவன. மேலும் தமிழ் மொழியில் மேற்கொள்ளும் சீர்த்திருத்தங்கள் தனிமனிதனின் சிந்தனையில் செல்வாக்கை ஏற்படுத்தும் என்ற அவரது நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. அவரது பிரதாப முதலியார் சரித்திரத்தில் இடம் பெறும் ஒரு பாத்திரத்தின் நீண்ட உரையின் ஒரு சிறுபகுதியை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

இங்கிலீஷ் பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாம லிருப்பது பெருங்குறை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.

ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்த தேசங்கள் நாகரீகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷை களில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்த் திருத்தம் அடையாதென்பது நிச்சயம்.

prathabaMuathaliyar 350பிரதாப முதலியார் சரித்திரம்

வேத நாயகம் பிள்ளையை அடையாளம் காட்டுவதாக அமைவது அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலாகும். இதற்கு முன்னரும் பின்பும் அவர் எழுதிய நூல்களை விட இந்நாவலே அவருக்கு ஓர் அடையாளத்தை வழங்கியுள்ளது.

நாவல் என்ற இலக்கிய வகைமையானது இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாக வெகுகாலம் கருதப்பட்டது. மேலும் மேற்கத்திய நாவலை முன் மாதிரியாகக் கொண்டே நம் நாவல்களைப் பார்க்கும் வழக்கம் உருவானது. இதன் அடிப்படையில் பிரதாப முதலியார் சரித் திரத்தை நாவலாக சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

‘நாவலுடன் நெருங்கி வருவது’, ‘சுவராஸ்ய மற்ற உபயோகமற்ற நீளமான போதனை’ என்ற முத்திரைகள் இந்நாவலின் மீது இடப்பட்டுள்ளன. தொடக்ககால நாவல்கள் நவீனத்துவம், மரபு என்ற இரண்டுக்குமான ஊடாட்டத்தில் உரு வானவை. யதார்த்தமும், கற்பனையும், அறி வுறுத்தலும், பொழுதுபோக்கும் இவற்றில் கலந்து காணப்படும். மிகைல் பக்தினின் சொற்களில் கூறுவதானால், “பல குரல் பனுவல்கள்” தமிழ் நாவலானது ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கல்ல. முற்றிலும் மேற்கத்தியத் தாக்கத்திற்கு உட்பட்டதல்ல. கதை கூறல் என்பது இந்திய மரபில் இடம்பெற்ற ஒன்று.

இக்கருத்தின் பின்புலத்தில் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1879) ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ இராஜம் அய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்ற மூன்று நாவல் களைக் காணலாம். பிரதாப முதலியார் சரித் திரத்தை ஏன் எழுதினேன் என்பது குறித்து இந் நாவலின் ஆங்கில முன்னுரையில்,

“தமிழில் உரைநடை நூல்கள் இல்லை யென்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்து கின்றனர். இக்குறையை நீக்கும் நோக்கத் துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதிநூல் பெண்மதி மாலை சமரசக் கீர்த்தனம் முதலியன ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அற நெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.” என்று வேதநாயகம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இதன் வாயிலாக அவரது இப்புதிய படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் சுட்டிக்காட்டி யுள்ளார். தமிழில் உரைநடை இல்லாததை, பண்பாடு மற்றும் நாகரிகத்தில் பின்னடைவாக அவர் கருதியுள்ளார். அத்துடன் சமூகத்தைச் சீர்த்திருத்தி முன்னேற்றும் ஆற்றல் கொண்டதாக உரைநடையை அவர் கருதியுள்ளார்.

இதனால் தான் இந்நாவலும் இதையடுத்து அவர் எழுதிய சுகுணசுந்தரி சரித்திரம் நாவலும், கல்வி, கை யூட்டின் விளைவு, தாய் மொழியின் முக்கியத் துவம், பெற்றோர்களின் உயரிய பண்பு ஆகியன வற்றை மையமாகக்கொண்ட அறிவுரை கூறும் தன்மையிலான உரையாடல்களையும் உரை களையும் கொண்டுள்ளன. தமது முதல் நாவலின் முன்னுரையிலும் இக்கருத்தை,

“உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும் பலஹீனங்களும் குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன. நான் கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன். குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற் புறுத்தியிருக்கிறேன். நல்வழியின் இயல் பான சிறப்பையும் தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க முயற்சித் திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன்வருவார்கள்...

சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக் கிறார்கள். இவர்கள் மனிதரில் கடையவர் களை வருணிப்பதால் அனுபவமற்ற இளை ஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்று கின்றனர். இந்த கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை.” என்று வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து 1887இல் இவர் எழுதிய சுகுணசுந்தரி சரித்திரம் இம்முதல் நாவலைப் போல் வரவேற்பைப் பெற வில்லை.

KamalambalSarithiram 300கமலாம்பாள் சரித்திரம்

சுகுண சுந்தரி சரித்திரம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து, (1893) வத்தலகுண்டு ஊரைச் சேர்ந்த பி.ஆர். இராஜம் அய்யர் (1871-1898) ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்ற நாவலை வெளியிட்டார். ஸ்மார்த்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர்.

கம்பன், தாயுமானவர் பாடல் களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியர், மறுமலர்ச்சிக்கால கவிஞர்களைப் பயின்ற இவர் வேதாந்தத்துவத்தில் மிகுந்த ஆர்வமும் பயிற்சியும் கொண்டவர்.

“இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதி யற்ற ஆத்மா பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்” என்று இந்நாவலின் நோக்கம் குறித்து அவர் கூறியுள்ளார்.

“மதுரை ஜில்லாவில் ‘சிறுகுளம்’ என்ற ஒரு கிராமம் உண்டு. அந்த கிராமத்தின் நடுத் தெருவின் மத்தியில் பெரிய வீடு என்று பெயருள்ள ஒரு வீடு இருந்தது.” என்று தொடங்கும் இந்நாவல், உண்மையான ஊர்ப் பெயர்களுடன் இயல்பான தன்மையுடன் கூடிய கதை மாந்தர்களைக் கொண்டு இயக்குகிறது.

இவ்வகையில் பிரதாப முதலியார் சரித் திரத்தில் இருந்து இந்நாவல் மாறுபடுகிறது. இந்நாவலின் முதற்பகுதி நாவலாகவும் இரண்டாம் பகுதி கனவாகவும் விளங்குவதாகப் புதுமைப் பித்தன் குறிப்பிடுகிறார்.

வேதநாயகமும் ராஜம் அய்யரும்

தம் வாசகர்களுக்கு அறிவுறுத்தும் கருவி யாகவே நாவலை வேதநாயகரும், ராஜம் அய்யரும் கருதியுள்ளனர். அதே நேரத்தில் நகைச்சுவை வாயிலாகத் தம் வாசகர்களை மகிழ்விக்க விரும்பி யுள்ளனர்.

குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து வேதநாயகம் பிள்ளை தமது ‘சுகுணசுந்தரி, நாவலில் விவரித்துள்ளார். புரளி கூறல் என்ற தீச்செயலை மையமாக வைத்தே ராஜம் அய்யர் தம் நாவலைக் கட்டமைத் துள்ளார்.

இந்நாவலின் தலைப்பாக ஆபத்துக் கிடமான அபவாதம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்நாவலில் இடம் பெறும் சென்னை கடற்கரை குறித்த வருணனையில்.

Rajam Iyer 300“பொம்மெனப் புகுந்த ஆங்கிலேயே மாதர்கள் தோகை போன்ற உடையும் அன்னம் போன்ற நடையும் கிள்ளை போன்ற மொழியுங் கொண்டு தங்களுடைய (அல்லது பிறருடைய) நாயகர்களோடு கை கோர்த்து உரையாடி நகையாடினர் ஒரு சிலர். என்று குறிப்பிடுகிறார்.

இவ்வருணனையில் அடைப்புக் குறிக்குள் இடம்பெறும் ‘அல்லது பிறருடைய’ என்ற சொல் பண்பாட்டு மோதலைச் சுட்டுவதாய் உள்ளது.

இதுவரை நாம் பார்த்த மூன்று நாவல்களும் அவை எழுதப்பட்ட காலத்திய மேல்தட்டுப் பிரிவை மையமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் போத்திரி குண்ணம்பு என்ற தலித் எழுத்தாளர் 1892 ஆம் ஆண்டில் மலையாளத்தில் எழுதிய ‘சரஸ்வதி விஜயம்’ என்ற நாவலில், கீழான நிலையில் இருந்து தலித்துகள் விடுபட ஆங்கிலக் கல்வி துணைபுரியும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.

முடிவுரை:

இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டில், ஆங்கிலக் காலனியம், புலவர்களின் படைப்புகள், புலவர் புரவலர் உறவு என்பனவற்றில் படிப்படியாக மாறுதல்களை உருவாக்கியுள்ளது. இம்மாறு தல்கள் மேற்கின் வளர்ச்சி நிலையையும், கிழக்கின் பண்பாட்டு மரபையும் இணைத்தே நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் பழைய சிற்றிலக்கிய மரபு முற்றிலும் மறைந்துவிடவுமில்லை. அதன் எச்சங்கள் இன்னும் கூடத் தொடர்கின்றன.

* * *

அச்சு இயந்திரப் பயன்பாடு, நவீனக்கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தினரிடம் மட்டுமின்றி குறைந்த கல்வியறிவுடைய அல்லது ஏட்டுக் கல்வி யறிவை அறவே பெறாத அடித்தள மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய எழுத்து நூல்கள், புராணக்கதைப் பாடல்கள் என்பன வற்றின் அச்சாக்கம் பிறர் வாசிக்கக் கேட்கும் பழக்க முடைய அடித்தள மக்களின் பயன்பாட்டிற்குத் துணை நின்றுள்ளது.

இது இந்நூலில் இடம் பெற வில்லை. ஒரு வேளை தன் ஆய்வின் எல்லைக்குள் இதைக் கொண்டுவர ஆசிரியர் விரும்பாமை காரணமாயிருக்கலாம். ஏராளமான தரவுகளின் அடிப்படையில் உருவான இந்நூல் இது தொடர்பாக மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டும் தன்மையது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh