ரயிலும் ரயில் நிலையங்களும் எனக்குப் பரிச்சயமானது எனது பாட்டியினால்தான். எழுதப்படிக்கத் தெரியாத அவருக்கு ஒன்றிரண்டாக எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்த நான் பயணத் துணை. ரயில் பயணத்திற்கு படிப்பு அவசிய மில்லை என்றாலும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை என்பதாக அமைவது. ரயில் மெல்ல நகர்கையில் சன்னல்வழி விரியும் வயல்வெளிகளும் மரங்களும் மனிதர்களும் நம்மை விரைந்து கடப்பதும் பின் வேறுவேறாய்த் தொடர்வதும் போன்றதொரு உற்சாகமும் பேரானந்தமும் ஒப்புநோக்கவியலாதவை.

trainமாட்டுவண்டியிலிருந்து மாற்றுப்பயணமாக பேருந்தைவிடவும் மக்களுக்கு ரயில் பிரயாணமே பிடித்தமானதாயிருந்தது. ரயில்களை தங்களுக்கு நெருக்கமானதாக உணர்ந்தனர். நெடும் பயணத்தில் மலஜலம் கழிப்பது, பல் துலக்குவது, குளிப்பது, உணவருந்துவது, உறங்குவது என வீடுபோலவே ரயிலும் வசதியாக இருந்தது. பவிசானதாகவும் பாதுகாப்பானதுமான உணர்வைத் தந்தது. (80களில்) ரயிலில் பயணிப்பவர்கள் ‘அடுப்பு பற்றவைத்து சமையல் செய்யக்கூடாது’ என்ற ரயில்வே நிர்வாகத்தின் எச்சரிக்கைகள் அன்று விடுக்கப்பட்டிருந்ததை நோக்கினால் அன்றைய பயணிகளின் மனநிலையை மதிப்பிடமுடியும்.

கிராமப்பகுதி ரயில் நிலையங்களில் அமர்ந் திருப்பதும் ரம்மியமானதுதான். நிலைய அதிகாரியின் அறைக்கு முன்புறம் பூச்செடிகளும் புல்வெளியும் வண்ணமயமான அடைப்புகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆலமரம், அரச மரம், வேப்பமரங்கள் எனப் பெரும்பெரும் மரங்களே அதிகமிருந்தன. விசாலமான இடத்தின் பேரமைதியும் நிறைந்த காற்றோட்டமும் அடர்ந்த மரநிழலின் கீழமைக்கப்பட்டிருக்கும் சிமென்ட் இருக்கைகளும் ஒரேதருணத்தில் ரசிகனாகவும் கலைஞனாகவும் நமைக் கொண்டாடின. ஒரு ரயிலுக்கும் இன்னொரு ரயிலுக்கும் வித்தியாசம் கண்டறிய இயலாததைப்போலவே ஒரு ஸ்டேஷன் மாதிரியேதான் எல்லா ஸ்டேஷன்களும் இருந்தன. (வேறுபடுத்தும் வசதிக்காக ரயில்கள் பல வண்ணங் களில் அந்நாட்களில் இருக்கவில்லை) எல்லா ஸ்டேஷன்களின் பறவையொலிகளும்கூட ஒரே மாதிரித்தானிருந்தது.

குழந்தைகளுக்காக ரயில்கள் காத்து நின்றன. ரயில் நடையில் ஓடிவரும் பள்ளிக்குழந்தைகளை வழிநின்று ஏற்றிச்சென்றன. சரக்குகளை ஏற்றி இறக்கும்வரை பதட்டமில்லாமல் நின்றன. தினமும் பள்ளி செல்வதற்காக பயணித்த பெண்பிள்ளைகள் சிலருக்கு படிக்கிற காலத்திலேயே நடந்த திருமணங்களில் என்ஜின் டிரைவர்கள் பரிசுப் பொருளுடன் கலந்துகொண்டனர். ரயில்தினக் கொண்டாட்டங்கள் வாழ்வின் மறக்கவியலா நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிந்திருந்தது. வண்ண அலங்காரத்துடன் திரையிசைப்பாடல்கள் ஒலி பரப்புடன் கூத்தும் கும்மாளமுமாக சில மைல் களுக்கு மெதுவாக ஊர்ந்து சென்று மகிழ்ச்சிக் கணத்தை நீட்டித்தன. அலங்கார யானையின் அசைந்தசைந்து நிகழும் நடனம்போல ஆகாச இன்பம்.

புகையைக் கக்கியபடி ரயில்கள் எழுப்பும் ஹார்ன் சத்தம் ரொம்பவும் அணுக்கமானதாக இருக்கும். இப்போதுபோல அலறும் தொனி யிருக்காது. படிக்கும் மாணவர்கள் படிக்கட்டு களில் நின்றுகொண்டும் அமர்ந்தபடியும் பயணிக்க வசதியாகவிருக்கும். ரயிலிலிருந்து வெளியேறும் புகை படிக்கட்டுகளில் அமர்ந்து வருவோரின் முகங்களில் மெலிதான கரும்படிமத்தை உண்டாக்கும். கைப்பிடிகளிலும் படிந்த கரும் படிவம் ஆடைகளில் ஒட்டிக் கருப்பாய்த் தெரியும். கைகளிலும் கருப்பாக பிசுபிசுவென ஒட்டிக் கொள்ளும். சமயங்களில் கருப்புத் துகள்கள் கண்களை சேதப்படுத்தி கண்ணிலிருந்து நீரை வெளிக்கொணரும். ரயிலுக்கு கரி என்ஜின் வண்டி என்றே பெயர்.

கருத்த முண்டாசு கட்டிய என்ஜின் டிரைவர்கள் காகிதத்தில் சுருட்டிய மசியை (கிரீஸ்) ரயில்வே கேட்டில் நின்று கைநீட்டும் குழந்தைகளுக்கு அவர்தம் கைகளில் வீசினார்கள். தாங்கள் பயன்படுத்தும் மைப்பேனாக்களில் மை கசியும் பகுதியில் கிரீசைத் தடவினால் ஓழுகுவது அடைபடும் என்பது அந்நாளைய பள்ளிக்காலத் தந்திரங்களில் ஒன்று. மலிவான மைப்பேனாக்கள் அடிக்கடிக் கசியும் தன்மை கொண்டவை. அதில் காகிதம் அல்லது நூல் சுற்றுவதைவிட கிரீஸ் நல்ல பலன் தரும் (அந்நாட்களில் உறை மைப் பேனாக்கள் அவ்வளவாகப் புழக்கத்திலில்லை.)

80களில் ரயில்பெட்டிக்குள்ளிருந்து புகை பிடிப்பவர்களுக்காக தனித்தனியே இரண்டு சாம்பல் கிண்ணிகள் சன்னலோர இருக்கையருகே அமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் கால வழக்கப்படி அமைக்கப்பட்டிருந்த அவ்விடத்தில் சீமானைப் போலமர்ந்து சிகரெட் புகையை சன்னல் வழி வெளிவிடுவதை சிலர் ஆனந்தமாய் அனுபவித்தபடி வருவர். பெருநகரங்களுக்கிடை யிலான ரயில்களில் சிலபோழ்து சிலர் குழுவாக மதுவருந்தும் காட்சிகளையும் காணலாம். சில பெட்டிகளில் சீட்டாட்டமும் நடக்கும். அவ்வப் போது தாளத்துடன் கூடிய பாட்டுக்கச்சேரி களுக்கும் குறைவிருக்காது. உற்சாகப் பயணத்தின் அத்தனை அம்சங்களுக்கும் தோதானதாயிருந்தது புகைவண்டி ரயில்.

கையில் காசில்லாதவர்களுக்கு கவலை யளிக்காதது ரயில் பயணம்தான். ஒவ்வொரு பெட்டியிலும் ஒருசிலராவது இலக்கற்ற பயணம் மேற்கொண்டிருப்பர். பிடிபட்டவர்களை இறக்கி விடுவதைத் தவிர அரிதாகவே தண்டனைகள் விதிக்கப்பட்டது அந்நாட்களில். வீட்டிலிருந்து வெளியேறு கிறவர்களின் முதல் முடிவு ரயில் ஏறுவதுதான். ஊர்சுற்றி அலைபவர்களுக்கு காசைப்பற்றிய கவலையில்லாமல் பயணிக்க ரயில் ஒரு வரப் பிரசாதம். வேடிக்கை பார்ப்பதற்கான வாய்ப்பான ரயில் பயணத்தில் அவ்வளவாகப் பசிக்காது என்பது கூடுதல் பலன். ‘தென்னக ரயில்வேக்கு தீராத கடனிருக்கு’ என்ற கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதை வரிகளிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளமுடியும். நம் வழக்கமான சொல்லாக்க யுக்திப்படியே நம் திருட்டுப் பயணத்திற்கு ‘திருட்டு ரயில்’ என்று பெயரிட்டு வழங்கி வருவதும், ‘ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு’ என்ற சொல் வழக்கிலிருப்பதும் ஓசிப் பயணச் சிறப்புகளை பறைசாற்றுபவை. திருட்டு ரயில் என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. (ரயிலை எப்படித் திருடமுடியும்? அல்லது ரயில்தான் எதைத் திருடும்?)

ரயில் ஒரு ரயில்நிலையத்திற்கு வரும்போது கேங்மேன் (ரயில்நடை பராமரிப்பவர்) வந்து கொண்டிருக்கும் ரயிலுக்குப் பக்கவாட்டில் நின்று பிரம்பாலான ஒரு வளையத்தை உயர்த்திப் பிடித் திருப்பார். என்ஜினிலிருந்து ஒருவர் அதேபோன்ற பிரம்பு வளையத்தை வீசிவிட்டு தன் ஒரு கையை ஏந்தியபடி அதை லாவகமாக ஏந்திக்கொள்வார். அவரது தோள்பட்டையில் அந்த வளையம் இடம்பெயரும். மிகக் கச்சிதமாக நிகழும் அக் காட்சி பிரமிப்பாயிருக்கும். பார்ப்பதற்கு குறுக்கு நரம்புகளில்லாத பெரிய அளவிலான டென்னிஸ் மட்டையைப்போல அது இருக்கும். அதில் சாவி போன்ற அமைப்பு உண்டு. ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு கடந்துசெல்வதை உறுதிப் படுத்தும் நடைமுறை. ஒவ்வொரு ரயிலுக்கும் வெவ்வேறு சாவி இதேமுறையில் மாறிக் கொண்டே இருக்கும்.

நிலையத்திற்கு ரயில் வருவதை உறுதிப்படுத்த சில மைல்களுக்கு முன்னால் கைகாட்டி இருக்கும். அது மேனோக்கி உயர்ந்திருந்தால் மட்டுமே ரயில் செல்லமுடியும். நிலையத்திலிருந்து குறிப்பிட்ட கீயை மேற்புறம் தூக்கும்போது தூரத்திலிருக்கும் கம்பிவடங்கள் இழுவைத் திறனில் கைகாட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொடுப்பானை அசைத்து கைகாட்டி மேலெழும். கீழ்ப்புறமாக கீயை அமுக்கும்போது கீழிறங்கும். முழுக்க முழுக்க கம்பிவட இணைப்பின் இழுவைத் திறனாலேயே நிகழும் இந்தச் செயல்முறையில் கைகாட்டி இயக்குபவர் கீயை இயக்கும்போது இருப்புப் பாதைக்கருகில் இழுவையில் நகரும் கம்பி வடங்களில் லேசாக காலை வைத்தால் சுமார் ஒரு சாண் தூரம் வரை கால்கள் தானாக நகரும். சிறுவர்களுக்கு இது ஒரு விளையாட்டு. இதை விடவும் வில்லங்கமான ஒரு விளையாட்டு உண்டு. கைகாட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள தொடுப் பானை அசைக்க ஒரு சக்கரம் வழியாக கம்பிவடம் சுழலும். கம்பிவடத்திற்கும் தொடுப்பானுக்குமான இடைவெளியில் சிறிய கருங்கல்லை செருகி விட்டால் இழுவைத்திறன் செயலிழந்து தொடுப் பானை அசைக்காது. இதனால் கைகாட்டி மேலும் கீழும் அசையாது நின்றுவிடும். ஊழியர்களும் ரயில் நிலையமும் பதட்டமடையும் வேளையிது. திட்டிக்கொண்டே விரைந்து சென்று கைகாட்டி இருக்குமிடத்தில் சரி செய்வது பெரும்பாடு. (தற்போது இம்முறை கடைபிடிக்கப்படுவதில்லை.)

தண்டவாளத்தில் சிறிய இரும்புத்துண்டை வைத்து அதன்மீது ரயில் ஏறிச்சென்றால் அது காந்தமாகிவிடும் என்றொரு எண்ணம் சிறுவர் களிடமுண்டு. ரயிலின் தடதடப்பில் அவை கீழே விழுந்துவிடும் என்றாலும் காந்தத்துக்காக இரும்புத் துண்டுகள் வைக்கப்படுவது தொடந்து கொண்டு தான் இருக்கும்.

சோடாபாட்டில் மூடிகளை தண்டவாளத்தில் அங்கங்கே வைத்தால் ரயில் சென்ற பிறகு அவை சீரான வட்டத்தகடுகளாக மாறிவிடும். ஒன்றிரண்டு கீழே விழுந்துவிடுவதுமுண்டு. அந்த வட்டத் தகடுகளின் மையத்தில் துளையிட்டு நூல்களைக் கொண்டு சுற்றிச்சுற்றி இழுத்துவிடுவது நல்ல விளையாட்டு. அந்தத் தகடு சுற்றும்போது மெல்லிய ஓசையுடன் நெடுநேரம் சுழலும். பார்க்கவும் கேட்கவுமான அம்சமாயிருக்கும். வீட்டில் சோடாமூடிகளை தட்டிச் சரி செய்தால் வடிவமான தகடாக வராது என்பதால் ரயில்தான் அந்த வேலையைச் செய்யவேண்டியிருந்தது.

ரயில் வரும் நேரம் மிகுந்த பரபரப்பானது. ஆட்கள் ஏறுவதும் இறங்குவதும், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடுவதும், பெண்கள் சத்தமிடு வதும், வியாபாரிகள் கூவிக்கூவி வியாபாரம் செய்வதும், சரக்குகள் ஏற்ற இறக்க விரைவதும், மணி அடிக்கவும் பச்சைக்கொடிகள் அசையவும் என சில நிமிடங்கள் சந்தையிடமாகக் காட்சி யுறும். ரயில் நகர்ந்த சற்று நேரத்தில் அலாதியான அமைதி அவ்விடத்தில் குடிகொண்டுவிடும். சட்டென மாறும் இப்படியான அதிசய நிகழ்வு கிராமப்புற ரயில் நிலையமன்றி வேறெங்குமில்லை. ரயில் வராதபோழ்துகளில் பகல் நேரமாயினும் அடர்ந்த இரவின் அமைதியும் மௌனமும் அந்நிலையங்களுக்கு மட்டுமேயானது.

தற்போது கிராமப்புற ரயில் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. கட்டடங்கள் பாழடைந்து செடிகொடிகள் மண்டிவிட்டன. சுவடுகளாய் சிதறிய சில துண்டுத் தூண்களும், சில கட்டடத் துணுக்குகளும் வெறிச்சென்ற நடைமேடைகளும், சிமிண்ட்பெஞ்ச் உடைசல்களும்...

கரும்புகைவண்டிகளின்நினைவுகளோடுசலனமற்றநடைமேடையில்ஊர்ப்பெயரற்றுநிற்கும்கல்தூண்களில்சொல்லவியலாசோகத்தைக்காணநேர்கிறது.

Pin It