கன்னடமொழியின் மூத்த கவிஞரும் அருமையான மேடைப்பேச்சாளருமான ராமச்சந்திர ஷர்மா ஒருமுறை தன் உரையில் கன்னட மொழியின் முக்கியமான தூண்கள் என லங்கேஷ், பூரணசந்திர தேஜஸ்வி, டி.ஆர்.நாகராஜ், யு.ஆர்.அனந்தமூர்த்தி ஆகிய நான்கு படைப்பாளிகளைக் குறிப்பிட்டார். இப்படைப்பாளி களின் பெயர்களைச் சொல்வதற்கு, அவர்களுடைய வயதோ, திறமையோ, படைப்புகளோ, புகழோ எதுவுமே காரணமல்ல என்றும் இவர்கள் அனைவருமே மாபெரும் அறிவாளிகள் என்றும் தம் அறிவின் அடிப்படையில் இந்த மண்மீதுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் திறந்த மனத்துடன் இடைவிடாது விவாதித்து, அறிவின் எல்லையை விரிவாக்க வல்லவர்கள் என்பதே முக்கியமான காரணமென்றும் மனம்திறந்து பாராட்டிப் பேசினார். இவர்களில் லங்கேஷ், பூரணசந்திர தேஜஸ்வி, டி.ஆர்.நாகராஜ் ஆகிய மூவரும் அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள். அனந்தமூர்த்தி மட்டுமே எஞ்சியிருந்தார். 22.08.2014 அன்று அவரும் இயற்கையெய்திவிட்டார். அவரை இழந்து அறிவுலகம் திகைத்து நிற்கிறது என்பது சம்பிரதாயமாக சொல்லக் கூடிய வாக்கியமல்ல. உண்மையும் அதுதான். இன்று இலக்கியம், சமூகம், அரசியல் என எந்தக் களத்திலும் தன் நிலைபாட்டை எதிர்க்கிற தரப்பினரோடு மட்டுமல்ல, தன்னை ஆதரிக்கிற தரப்பினரோடு கூட ஆரோக்கியமான முறையில் விவாதிக்க விரும்புகிற ஆளுமை என குறிப்பிட்டுச் சொல்ல யாருமில்லை. அனந்தமூர்த்தியின் மறைவால் உருவாகியிருக்கும் வெற்றிடம் மிகப்பெரியதாக இருக்கிறது.

U.R.Anandhamoorthyசில மாதங்களுக்கு முன்னால் ‘சக்ரவியூக’ என்னும் தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட நேர்காணலில் “நீங்கள் ஏன் ஒவ்வொருமுறையும் எதையாவது சொல்லி ஒரு விவாதத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியைப் புன்னகையோடு எதிர்கொண்ட அனந்தமூர்த்தி “சின்ன வயதிலிருந்தே நான் அப்படித்தான் வளர்ந்து வந்திருக்கிறேன். என்னைநோக்கி அல்லது நான் வாழும் சூழலைநோக்கி சொல்லப்படும் ஒரு கருத்தை அல்லது அறிவிப்பை என்னால் ஒருபோதும் மௌனமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அதைக் கேள்விக்குட் படுத்துவது, அதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற காரணத்துக்காகவே. போதுமான அல்லது சரியான பதில்கள் சொல்லப்படும் போது நான் அதைக் கேட்டுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன். அவ்விதமாக பகிர்ந்துகொள்ள தகுதியான பதில்கள் இல்லாதவர்கள், பதில்சொல்வதற்கு மாறாக, கேள்வியைத் திசைதிருப்பி அதை ஒரு விவாதமாக மாற்றிவிடுகிறார்கள். கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு சமூகம்தான் விழிப்புடன் இருக்கமுடியும். அதுவே நல்ல ஜனநாயகமான சமூகம். கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பது, நம் சமூகத்தை மெல்லமெல்ல சர்வாதிகார அமைப்பைநோக்கி அழைத்துச் சென்றுவிடும்” என்று பதில் சொன்னார். இந்த இயல்பால், அவர் ஒவ்வொரு முறையும் வசைகளையே சந்திக்க நேர்ந்தது. ஆனால், அவ்வசைகளைக் கண்டு அவர் ஒருபோதும் கலங்கியதோ, வருத்தப்பட்டதோ இல்லை. மாறாக, ஒவ்வொரு முறையும் “அவர்களுக்குப் புரியவில்லை. அதனால் அப்படிப் பேசுகிறார்கள். அவர்கள் நமது பிள்ளைகள். அவர்களுக்குப் புரியும்படி நாம்தாம் எடுத்துச் சொல்லவேண்டும்” என்று பதில் சொல்வதே அவருடைய பழக்கமாக இருந்தது.

மைசூர் பல்கலைக்கழகத்தில் அவர் ஆங்கிலப் பேராசிரியராக பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு நேஷனல் புக் டிரஸ்டு அமைப்பின் தலைவராகவும் சாகித்திய அகாதெமியின் தலைவராகவும் பணியாற்றினார். பிறகு மணிபால் சென்று வருகைதரு பேராசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். எந்த இடத்தில் பணியாற்றினாலும், அவருடைய இயற்கையான படைப்பூக்கத்தாலும் ஞானத்தாலும் ஈர்க்கப்படுபவர்கள் நாளடைவில் பெருகிப்பெருகி ஒரு நட்புவட்டம் உருவாவது வழக்கம். அந்த உரையாடல்களை மேலும் விரிவானதாக மாற்ற, அவர் தொடர்ச்சியாக பல கூட்டங்களையும் சந்திப்புகளையும் ஏற்பாடு செய்து வந்தார். அவர் பேசியதோடு மட்டுமல்லாமல், மற்றவர் களையும் ஆர்வத்தோடு பங்கெடுக்கவைத்தார். கர்நாடகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர் நடத்திய கூட்டங்கள் ஏராளமானவை. பங்கெடுத்துக் கொண்ட கருத்தரங்குகளும் விவாத மேடைகளும் அதைவிட ஏராளமானவை. அவருடைய கருத்துகள் இலக்கிய வாசகர்களால் மட்டுமல்ல, பொதுமக்களாலும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டன. அறிவியக்கம் தேங்கி விடாதபடி, தன் விவாதங்கள் வழியாகவும் கட்டுரைகள் வழியாகவும் உரைகள் வழியாகவும் அதற்குத் தொடர்ந்து புத்துயிர்ப்பூட்டி வந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரே அறிவியக்கத்தின் மையமாக விளங்கிவந்தார் என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

கன்னடமொழியின்மீது அவருக்கிருந்த பற்று மிக உன்னதமானது. மேடையில் அவர் கன்னடத்தில் நிகழ்த்தும் உரையைக் கேட்கக்கேட்க, அவர் நாள் முழுதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவுக்கு மிகச்சிறப்பாக பேசக்கூடியவர். அவருடைய சிந்தனைக்கு இணை யாகவும் பொருத்தமாகவும் சொற்கள் ஆற்றொழுக்காகப் பொங்கிப் பாய்வதைப் பார்ப்பதும் கேட்பதும் ஒரு பெரிய பேறு. கேட்பவர்களை ஒரு மாயக்கயிறால் கட்டிவிடும் வகையில் அவருடைய உரை அமைந் திருக்கும். பள்ளிகளில் கன்னடவழிப் படிப்புக்கான ஆர்வம் குறைந்துவருவதை ஒருவித இயலாமையுடனும் துக்கத்துடனும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் சுட்டிக் காட்டியபடியே வந்தார். மாநிலத்தில் ஆங்கிலவழிப் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் பெருகுவதை அவர் மனம் விரும்பவில்லை. அரசு பள்ளிகளும் கன்னடப் பயிற்றுமொழி முறையும் இந்த மண்ணில் நீடித்திருக்க வேண்டும் என ஒவ்வொரு அரங்கிலும் அவர் மீண்டும்மீண்டும் சொன்னபடியே இருந்தார்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலும் ஆங்கில வழியிலும் படிக்கவைக்க விரும்பும்போது ஒரு அரசாங்கத்தால் அதை எப்படித் தடுக்கமுடியும் என்று கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் மிகமுக்கிய மானது. ”பொதுமக்களுக்கு ஆர்வமில்லை என்பதை காரணமாகக் காட்டி, அரசு தன் கடமையை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பெற்றோர்கள் இன்றைய நிலையை ஒட்டி மட்டும் சிந்தித்து முடிவெடுக்கும் அவசரத்தில் இருப்பவர்கள். ஆனால், ஒரு ஜனநாயக அரசாங்கம் இன்றைய நிலையை மட்டுமல்ல, நாளைய நிலையையும், அடுத்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகான நிலையையும்கூட கணக்கி லெடுத்துக்கொண்டுதான் சிந்திக்கவேண்டும். அந்தக் கடமையை அரசு உதறிவிடக்கூடாது. இன்றைய தேவை என்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டு நம் அரசாங்கங்கள் எடுத்த பல முடிவுகள் பிழையான திசையிலேயே நம்மை அழைத்துச் சென்றுள்ளன என்பதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு. உணவுத்தேவையை முன்வைத்து நம் அரசு எடுத்த ஒரு முடிவு முக்கியமான எடுத்துக்காட்டு. இன்று இந்தியா முழுக்க விவசாயத்துக்கு உதவாததாக நம் நிலங்களை அந்த முடிவு மாற்றிவிட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, நம் முன்னோர் விவசாயம் பார்த்துவந்த பூமியை முப்பது நாற்பது ஆண்டு காலத்துக்குள் ஒன்றுக்கும் உதவாத சக்கையாக ஆக்கிவிட்டது. இதை எப்படிச் சரிப்படுத்தப் போகிறோம்? இன்றைய தேவை என்பதை மறுபடியும் ஓர் அளவுகோலாகக் கொண்டு கல்வித்துறையிலும் அப்படி ஒரு மாற்றத்தை வரவேற்றோம் என்றால், இந்த மண்ணுக்கு நேர்ந்த நிலைதான் நம் வாழ்க்கைக்கும் நேரும். நம் வாழ்க்கை சக்கையாகும். நம் மனம் சக்கையாகும். நம் சிந்தனை சக்கையாகும். நம் மொழி சக்கையாகும். அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கும் உண்டு. நமக்கும் உண்டு. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அதுவே அறிவல்ல. ஒரு மொழியை நாம் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளமுடியும். அதற்காக நம் பயிற்றுமுறையை மாற்றவேண்டிய தேவையில்லை. தனியார் பள்ளிகளைவிட மிக உயர்ந்த தரத்தில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும் பயிற்சிமுறையையும் மாற்ற வேண்டும்” என மிக நீண்ட பதிலாக தன் நெஞ்சிலிருந்து அவர் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்தால் பதிக்கப்பட வேண்டியவை. அவை கன்னடச்சூழலுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மொழிச்சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாகும்.

“கன்னடப் பயிற்றுமொழித்திட்டம் இந்தச் சமூகத்துக்கு எப்படி உதவும் என்று சொல்கிறீர்கள்?” என்றொரு கேள்விக்கு அந்தச் சந்திப்பில் அவர் சொன்ன பதிலும் முக்கியமானது. “எம்.பி.பி.எஸ். படிப்பை கன்னடத்திலேயே படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெறும் ஒருவன் கன்னட மண்ணில் வேலை செய்வான். அது கன்னடியர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷமான செய்தி. நோயாளிகளின் குறையை அவன் கன்னடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்வான். நோயாளிகளுடன் மனம்திறந்து பேசுவான். நோயாளிகளைத் தொட்டுப் பார்த்து வைத்தியம் செய்வான். ஆனால், இதே படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு வரும் ஒருவன் எப்படி யாவது இந்த நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதையே முதல் நோக்கமாகக் கொண்டிருப்பான். நாட்டைவிட்டுச் செல்லமுடியாத வர்கள் இந்த நாட்டிலேயே உள்ள தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்குப் போவார்கள். ஆங்கிலம் பேசும் நோயாளிகளையே அவன் மனம் விரும்பும். அவர்களோடு மட்டுமே அவனால் ஒரு உளமார்ந்த தொடர்பை உருவாக்கிக்கொள்ளமுடியும். அவனால் ஒரு போதும் ஏழைகளை அணுகவே முடியாது. பல மருத்துவர்கள், ஏழை நோயாளிகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. இதிலே சில விதிவிலக்குகள் இருக்கலாம். எல்லோருமே இப்படி இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், இந்த ஆங்கிலம் இந்தத் திசையில் நம்மை அழைத்துச் சென்றுவிடும் என்கிற அச்சத்தை நாம் விலக்கிவிடமுடியாது. மருத்துவப்படிப்பைச் சுட்டிக் காட்டியது ஒரு எடுத்துக் காட்டுக்காகவே. பொறியியல் படிப்பு, மேலாண்மைப் படிப்பு என எந்த வகையான படிப்பாக இருந்தாலும், கன்னடத்தில் படிக்காத ஒரு படிப்பு, கன்னடமண்ணில் ஒட்டுதலை அறுத்துவிடவே வாய்ப்புகள் அதிகம்”. அந்தப் பதிலையடுத்து மீண்டும்மீண்டும் அவர் வசைபாடப்பட்டார். வழக்கமாக இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் அவரை வசைபாடுவது வழக்கம். இந்த முறை பொதுமக்களும் அவரை இலக்காக்கி வசைபாடினார்கள். அவர் எதிர்காலத்தைப்பற்றி கவலையுடன் குறிப்பிடுவதை ஒட்டி யோசிக்க யாருக்குமே நேரமில்லாமல் போய்விட்டது.

2010 ஆம் ஆண்டு, விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்ட ஐந்நூறாவது ஆண்டாக அமைந்துவிட்டது. அதை யட்டி அவர் அரசாண்ட ஹம்பி நகரில் அரசு சார்பாக ஒரு மாபெரும் கலைநிகழ்ச்சியை, அப்போதைய முதல்வரான எடியூரப்பா ஏற்பாடு செய்திருந்தார். கோலாகலமான அந்த விழாவின் முடிவில் விஜயநகர அரசின் மகத்துவத்தையும் சாதனையையும் உலகத்துக்குப் புலப்படுத்தும் வகையில் தில்லியில் அமைந்துள்ள அட்சரதாமா ஆலயத்தைப்போல, கிருஷ்ணதேவரா யருக்கு மிகப்பெரிய மணிமண்டபமொன்றை அமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொள்ளவிருக்கிறது என அறிவித்தார். அந்த மணிமண்டபத்தை அமைப்பதற்காக கன்னடப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவரும் பகுதியி லிருந்து எண்பது ஏக்கர் நிலத்தை கைமாற்றிக் கொடுக்கவிருப்பதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது. பல முனைகளி லிருந்தும் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. பல்கலைக்கழகம் ஓர் அறிவுக்கூடம். அறிவுக்கூடம் செயல்படும் இடத்திலிருந்து நிலத்தைப் பிடுங்கி, வேறொன்றுக்காக தானமாக அளிக்கக்கூடாது என்று மாநிலமெங்கும் பெரிய எழுச்சி உருவானது. மூத்த கன்னட எழுத்தாளர் களும் மாணவர்களும் பலர் சுற்றுமுறையில் ஹம்பியில் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதமிருந்தனர். அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாத அரசு, நிலத்தைக் கையகப்படுத்தி மண்டபம் கட்டும் முயற்சியில் இறங்கியது. கர்நாடகத்தில் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் வாழும் எல்லா கன்னட எழுத்தாளர்களும் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

ஏறத்தாழ ஒரு மாத காலம் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அப்போது அனந்தமூர்த்தி, தன்னுடன் பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பத்திரிகைக்காரர்களையும் இணைத்துக்கொண்டு பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள டவுன்ஹாலில் ஒரு மாபெரும் எதிர்ப்புக்கூட்டம் நடத்தினார். ஹம்பியில் போராட்டம் நடைபெற்ற ஒரு மாதம் முழுக்க, அதைப் பிரதிபலிக்கும் வகையில் பெங்களூர் நகருக்குள் வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார் அனந்தமூர்த்தி. அதைக் கண்டு வெகுண்ட அப்போதைய கல்வியமைச்சரான அரவிந்த லிம்பாவளி என்பவர், அரசின் திட்டத்தை எதிர்க்கும் ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அச்சமூட்டினார். அதற்கு அடுத்த நாளே, அப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அமைச்சருக்கில்லை என்று அனந்தமூர்த்தி அறிவித்தார். ஆசிரியர்களைத் தண்டிக்கும் உரிமை துணைவேந்தருக்கும் கவர்னருக்கும் மட்டுமே உண்டு என்றும் சொன்னார். ஏற்கனவே ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவத்தின் அடிப் படையில் அதைச் சொல்வதாகவும் அச்சமில்லாமல் போராட்டத்தை அனைவரும் தொடரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ‘பல்கலைக்கழகத்தி லிருந்து எடுத்துக்கொண்ட நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்கிற தலைப்பில் ஒரு விரிவான மடலை கட்டுரை வடிவில் ‘பிரஜாவாணி’ இதழில் அவர் எழுதினார். அவருடைய கட்டுரைகளில் அது மிக முக்கியமான கட்டுரை. பிரச்சினையின் தீவிரத்தை பொதுமக்களும் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றும் வகையில் அக்கட்டுரை வசீகரமும் தெளிவும் மிகுந்த மொழியில் அமைந்திருந்தது.

வரலாற்று நாயகனுக்கு எழுப்பப்படும் மண்டபத்தைவிட, அறிவுச் செயல்பாடு களுக்கு உதவக்கூடிய பல்கலைக்கழகமே முக்கியம் என்னும் உண்மை ஒவ்வொருவரின் நெஞ்சிலும் உறைத்தது. பொதுமக்கள் ஆதரவு மெல்லமெல்ல போராட்டக்காரர்கள்மீது திரும்பியது. எதிர்ப்புகள் வலுத்துவிட்ட நிலையில் முதல்வர் தலையிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து எடுத்துக்கொண்ட நிலத்தை பல்கலைக்கழகத்துக்கே திருப்பித் தருவதாக அறிவித்தார். அதற்குப் பிறகே, அந்தப் போராட்டம் ஓய்ந்தது. போராட்டம் தொடங்கியதிலிருந்து முடிவது வரை, அதன் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்திலும் ஈடுபட்டு பணியாற்றிய அனந்தமூர்த்தியின் செயல் பாடுகள் மறக்கமுடியாதவை. அப்போதும் வரலாற்று நாயகர்களுக்கும் இன்றைய உலகத்துக்குமான தொடர்புப்பாலத்தைத் துண்டித்து, இன்றைய உலகத்தை வரலாறற்றதாக அனந்தமூர்த்தி மாற்றுகிறார் என்று மற்றொரு சாரார் அவரை வசைபாடினர். வசைகள் அவர் வாழ்ந்த காலம்முழுதும் அவரைப் பின்தொடர்ந்தபடியே இருந்தன.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்காலப் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக முன்னிலைப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கியது. அவர் நாடுமுழுதும் விரிவான அளவில் தொடர்ச்சியாகப் பிரயாணம் செய்து கூட்டங்களில் பேசி வாக்குகளைச் சேகரித்தார். அனந்தமூர்த்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். மதம்சார்ந்து அசைக்கமுடியாத சார்புநிலையுடைய மனம் கொண்ட ஒருவர், பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டுக்கு நல்ல பிரதமராக இருக்கமுடியாது என்றும் இருக்கக்கூடாது என்றும் அறிவித்தார். அவருக்கு ஆதரவு பெருகுவது தன்னை கசப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்துகிறது என்றும் தன் கவலையை வெளிப்படுத்திக்கொண்டார்.

ஒரு கட்டத்தில், ஒருவேளை அவர் மக்கள் ஆதரவோடு பிரதமரானால், நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றும் மிக ஆவேசமாகச் சொன்னார். அது மிகப்பெரிய எதிர்ப்பை மாநிலம் முழுக்க உருவாக்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் வசைகளோடு தொடங்கி வசைகளோடு முடிந்தது. அவர் மீண்டும்மீண்டும் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். “தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மக்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அல்லது தேர்தலின் அடிப்படையி லேயே ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கமுடியும். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே ஒரு பிரதமரை எப்படி அறிவிக்கமுடியும்? அது எப்படி ஜனநாயகமுறையாக முடியும்? அது ஒரு கருத்தை அல்லது செயல்பாட்டை இன்னொருவர்மீது திணிப்பதாகத்தானே இருக்கும்?” என்று அவர் சொன்னதை ஒருவரும் பொருட்படுத்த வில்லை. பலரும் அவருடைய சொற்களை அதன் நேர்ப்பொருளில் எடுத்துக்கொண்டு “நாட்டைவிட்டு போவதாக ஏன் சொன்னீர்கள்?” என்று கேட்கத் தொடங்கினார்கள். ”என் சீற்றத்தையும் கசப்பையும் வெளிப்படுத்த எனக்கு வேறு சொற்கள் கிடைக்க வில்லை” என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவருடைய நிலைப்பாட்டின் பொருளைப் புரிந்துகொள்ள விரும்பாத பலரும் தேர்தல் முடிந்ததுமே அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வசைபாடினர். ஒருசிலர் அவருடைய வீட்டு முகவரிக்கு பாகிஸ்தான் செல்வதற்கான பயணச்சீட்டுகளை அனுப்பிவைக்கவும் செய்தார்கள். அந்தச் செயல் அவரைச் சற்றே நிலைகுலைய வைத்தாலும், அதிகாரம் இப்படி ஒற்றைப்படையாக ஒருவரிடத்தில் குவிவது, இந்தத் தேசத்தின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தானது என்று அறிவித்தபடியே இருந்தார். அத்தருணத்தில் அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்தன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ரத்தத்தைச் சுத்தப்படுத்த வேண்டியிருந்தது. மருத்துவம், அதைத் தொடர்ந்து மயக்கம் என இருந்த நிலையிலும் தன் மீது வீசப்படும் வசைகளுக்கான பதில்களை அவர் ஊடகங்களுடன் பகிர்ந்தபடியே இருந்தார். இறுதியில் மருத்துவம் பயனளிக்காத ஒரு கணத்தில், 22.08.2014 அன்று அந்தக் குரல் ஓய்ந்தது. அனந்தமூர்த்தி என்னும் மாபெரும் ஆளுமை இந்த உலகைவிட்டு மறைந்தது.

கன்னட நவீன இலக்கியத்தின் தோற்றம் அனந்த மூர்த்தியின் எழுத்துகளுடன் தொடங்கியது. அவர் அறுபதுகளில் எழுதிய ‘சம்ஸ்கார’ நாவல் மிகப்பெரிய எழுச்சியையும் சிந்தனைமாற்றத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது. தன் இருபதுகளை ஒட்டிய வயதிலேயே அவர் அந்த நாவலை எழுதிவிட்டார். அதைத் தொடர்ந்து பாரதிபுர, அவஸ்தை, பவ, திவ்ய ஆகிய நாவல்களை அவர் எழுதினார். அவருடைய திறனாய்வுக்கட்டுரைகளும் பொதுக்கட்டுரைகளும், அவருடைய மதிப்பிடும் பார்வைக்காக மிகவும் பாராட்டப்பட்டவை. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தொடர்ச்சியாக அவர் எழுதிய கட்டுரைகள் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1994ஆம் ஆண்டில் ஞானபீட விருதும், 1998ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் அவருக்குக் கிடைத்தன. புக்கர் பரிசுக்காக அவர் படைப்பு 2013 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப் பட்டது. நேருக்கு நேர் நம்முடன் உரையாடுவதற்கு இனி அவர் இருக்கமாட்டார். ஆனால் அவர் எழுத்துகள் ஒவ்வொன்றும் நம்முடன் தொடர்ந்து உரையாடியபடி இருக்கும்.

Pin It