பல சூழல்களில் நிகழும் அனுபவங்களை / நிகழ்வுகளைக் கதைகளாக்குபவர்கள் தான் அதிகம். ஆனால் குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட ஆளுமைகளை வைத்தே தீராமல் கதை சொல்பவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ்.ரமேஷ். மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தான் பெரிதும் கதைக்களன். இதனை ஒட்டியுள்ள பின்புலமும் மனிதர்களும் தான் கதைகளில் இடம் பெறுவார்கள். சரளமான விவரிப்பு இவரது பெரிய பலம்.

பல்வேறான ஆளுமைகளில் உருக்கொண்டு அடிக்கடி சந்தித்து, அரட்டையடித்து, நேரத்தைக் கொண்டாடும் ஓர் இளைஞர் பட்டாளம், கால ஓட்டத்தில் எப்படியெல்லாம் உருக்குலைந்து போகிறது என்பது ‘தடங்கள்’ கதைகளில் சொல்லப்படுகிறது. அத்திகுளம் மூர்த்தி, இன்னொருவனின் மனைவியுடன் ஓடி விட, கஞ்சாப்பழக்கத்தால் கெட்டழிந்து போகின்றனர். இசைக் கலைஞர்களான டேவிடும் சிவசங்கரும், சிறுநீரகக் கோளாறால் இறக்க நேரும் சிவராஜன், சர்க்கரை நோயால் பார்வையிழந்து ஓய்வுக் காலத்தில் தவிக்கும் ஆசிரியர் செந்தில்நாதன், கால் எலும்பு முறிந்து போன கவிதைப்பித்தன் - இவர்களைப் பற்றிய அக்கறையில் விசனங்கொள்ளும் கதை சொல்லியான கதிரவன்.

கிறித்தவ மதத்திற்கு மாறிய பிறகும், தங்களது சாதிக் கொடுமை அவலம் தீராது அல்லாடும் அருந்ததியர் சமூகம் குறித்து ‘ஸ்வாமி’ கதையில் விவரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தனின் ‘புதிய கூண்டு’ கதை போல. உன்னதப்பாட்டில் நேசமிக்கவராக கர்த்தர் இருந்தாலும், வெளிப்படுத்தின விசேஷத்தில் பயங்கரமானவராகவே கர்த்தர் காட்டப்படுவதை பூர்வாங்க வாசகங்களாக எடுத்துக்காட்டி விடுகிறார் ஆசிரியர்.

‘அவருடைய சிரசும் மயிரும் வெண் பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது’ என்றும், ‘அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது’ என்றும் இடம்பெறும் வாசகங்கள், நிச்சயம் அருந்ததியர் சமூகத்தினருக்கு ஆறுதல் அளிக்கப் போவதில்லை என்பது தெரிந்து விடுகிறது.

எந்தவிதமான பதிவிலும் ஆசிரியரின் கேலியும் கிண்டலும் இடம்பெற்று விடுகின்றன. ஓரிடத்தில் சுவரில் ஒருவன் ‘இயேசு வருகிறார்!’ என்று எழுதி வைக்க, ‘சிலுவை தயாராக இருக்கிறது!’ என்று இன்னொருவன் அதன் கீழே எழுதி விடுகிறான்.

பள்ளியின் காலைப் பிரார்த்தனையின் போது, பேச வேண்டிய முறை வரும் அர்ச்சனா ஜோக்லேக்கர் என்னும் ஆசிரியை, கணவன் இல்லாத சோகத்தில் / தவிப்பில் தன்னை மறந்த நிலையில், ஆண்டு விழாவுக்காகத் தயாரித்திருந்த நரசிம்ம அவதார வசனத்தைப் பேசத் தொடங்கி அதில் ஒன்றிணைந்து நரசிம்மமாகிவிட்டதாக சீற்றமும் ஆவேசமும் பெருக, வியர்க்க - விதிர் விதிக்க நேர்வது ‘நரசிம்மம்’ கதையில் பதிவாகின்றது.

நாகரிக அடையாளங்களும் உறவுப் பிணைப்புகளும் மறைந்து வருவதால் உண்டாகும் வருத்தம். ‘ந.க.எண்.42/1996 தேதி 20.12.1996’, ‘அமுதாரக்கல்’ ஆகிய கதைகளில் வெளிப்படுகின்றன. ந.க.எண்.’42... கதைசொல்லியின் பெரிய பாட்டி சீனம்மாள் இறந்து ஒன்பது வருடம் ஆகியும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவே பழைய மனோபாவத்திலான உறவினர்கள் கருத, இக்காலப்போக்கினர், சீனம்மாள் இறந்து போனதை ஒரு சராசரி நிகழ்வாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர், பெயர் மாற்றம் செய்தல் போன்ற அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி விடுகின்றனர்.

பழைய வீட்டினைச் சீர்திருத்தும் போது அடித்தளத்தில் கிடந்த பெரிய கல்லினைத் தோண்டி எடுக்கின்றனர், பெரிய வைபவங்களில் சமைக்கும்போது சோறினை ஆறப்போடும் பரந்து விரிந்த பலகைக்கல் அது. இப்போது விற்றால் என்ன பெறும்? என்றாகிப் போன நிலை ‘அமுதாரக்கல்’ கதையில் எடுத்துரைக்கப்படுகிறது. அமுதாரக்கல் என்னும் சொல்லாட்சியே அழகானது.

கதலி, டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து... என்னும் கதைகள் அபூர்வமான நகைச்சவை வார்ப்புகள், எஸ்.வி.வி, கல்கி, தேவன் என்னும் தமிழின் நகைச்சுவை ஜாம்பவான்கள் வரிசையிலும் இந்திய - ஆங்கிலத்தின் ஆர்.கே. நாராயண் வரிசையிலும் இடம்பெறத்தக்கவை. பட்டப்பெயர்களிலுள்ள விநோதங்களை, விசித்திரங்களைப் பகடி செய்வது ‘கதலி’. தலைப்புக்கதையின் பட்டப்பெயர் பெற்றவர் பற்றிய குறிப்பு இப்படி இடம் பெறும்.

சமையல் செய்யும்போது கதலி வாழைப்பழத்தை எடுத்து நறுக்கி, அதை லேசாக எண்ணெயில் பொறித்து எடுத்து, துளி உப்பும் காரமும் சேர்த்து அதைப் பொரியலாக மாற்றி, அதற்கு கதலி வாழைக்காய் பொரியல் என்று பெயரிட்டுப் பரிமாறி பேர் பெற்றவர் கதலி நரசிம்மய்யங்கார். இப்படி ஒவ்வொருவருக்கும் குடும்பப் பெயர், பட்டப் பெயர், சிறப்புப் பெயர், தொழிற்பெயர், காரணப் பெயர், இடுகுறிப்பெயர் என்று நானா விதங்களிலும் பட்டப்பெயர்கள்.

ஒரு நகரில் திடீரென்று டைனோசர் நடமாடத் தொடங்கினால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பது ‘டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து’ கதையின் மையம். ஊர்க்காரர்கள் கண்டதும் திகைப்பும், வியப்பும் அடைகின்றனர். கோயில் சார்ந்தவர்கள் அதற்கு வடகலை நாமம் போடுவதா! தென்கலை நாமம் போடுவதா என்று போட்டியிடத் தொடங்க, போட்டி பூசலாகி, பூசல் நீதிமன்ற வழக்காக பூதாகரம் கொள்ளுகிறது. இடைக்காலத் தீர்ப்பில் வேறொரு சிக்கல் சேர்ந்து விடுகிறது - “ஆண்டாள் கோவில் டைனோசருக்கு தென்கலை நாமமோ, வடகலை நாமமோ எந்த நாமமும் போடக் கூடாது என்றும், வழக்கின் தீர்ப்பு வரும் வரை, தினந்தோறும் டைனோசருக்கு விபூதிப் பட்டையை நெற்றியில் பூச வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

முறை வைத்து நாமம் போட்டுவிட அனுமதி வந்ததும், மாறி மாறி நாமங்கள் இட, நாமக்கட்டியில் சேர்ந்திருந்த சுண்ணாம்பு தோல் அரிப்பை உண்டு பண்ண, புண்ணாகி சீழ் வடிந்து நாறும் நிலைக்குப் போய்விடும் பரிதாபம் வரை விவரித்து, பகடியின் விளிம்பைத் தொட்டு விடுபவராகத் தெரிகிறார் ரமேஷ்.

ரமேஷ் கதைகளின் இன்னொரு அம்சம், பாலியல் உலகின் விந்தைகள். முருகு மற்றும் தளிகை கதைகள் இந்த அம்சம் கொண்டவை. திருவிதாங்கூர் மன்னரிடமிருந்து வசூலாக நிலுவை நின்ற மூன்றாண்டு கப்பத்தொகையை வெற்றிகரமாக வசூலித்துவிட்டு, தன் படையுடன் மதுரை திரும்பும் ராணி மங்கம்மாள், இரவில் மடவார் வளாகத்தில் சற்று நேரம் ஓய்வெடுக்கிறார். அப்போது ராணியைக் குளிப்பாட்டும் பிரியம்வதாவின் நெருக்கத்தில் தழுவலில், வருடலில் ஒருவித பாலியல் ஆனந்தம் கொள்கிறார் ராணி. தன்பால் காமத்தின் தடயத்தின் குறிப்புள்ளதாக இக்கதையை (தளிகை) வாசிக்க இயலும்.

‘முருகு’ கதை நம் காலத்து அடிப்படைவாதிகளால் புரிந்துகொள்ள இயலாத கதை. ஆனால் சாதாரண கிராமியச் சமூகம் மெலிதான முறுவலுடன் ஏற்றுக் கடந்து போகக் கூடியது. 25 ஆண்டுகளாக பிள்ளை இல்லாத பெத்தனாட்சியம்மாவுக்கு ஓர் உபாயம் சொல்லப்படுகிறது. நாடகத்தில் முருகன் வேடமிட்டு நடிப்பவருடன் கூடினால், அம்முருகன் போலவே பிள்ளை வாய்க்கும் என்பது உபாயம். அந்தக் கூடல் முடிந்ததும் அந்நடிகன் அவ்வூர்ப்பக்கம் திரும்பக்கூடாது என்பது நிபந்தனை.

சரியா/தப்பா என்பதல்ல இங்கு பிரச்சினை. நம் சமூகத்தில் நம் மரபில் இப்படி ஆயிரம் விஷயங்கள் இருந்தன, இருக்கின்றன. அவை இலைமறை காயாக இருந்து வந்துள்ளன. இவற்றை எழுத்தாளன் வாசகன் முன் வைக்கக் காரணம், பாலியல் ரீதியில், உளவியல் ஆய்வுகள் சொல்லாத விஷயங்கள் கூட, சமூகத்தின் நடைமுறையில் இருப்பதன் அரிதான தன்மையினையும் அதிசயத் தன்மையினையும் உணர்த்தவே. இதை ஏற்பதும் கைவிடுவதும் சமூகத்தின் பொறுப்புதான். தவறென்று/சரியன்று என்று சமூகம் நிந்திக்கத் தொடங்கினால், அதுவே அதனைக் கைவிட்டுவிடும்.

குழந்தை இல்லையென்றால், ஆண்-பெண் இருவரில் யாருக்கோ குறை என்பதைச் சரியாகத் தெரியாமலேயே, பெண்ணைப் பழித்து சுலபமாக வேறு மார்க்கங்கள் காட்டப்பட்டு வந்துள்ளதை சமூகம் பதிவு செய்துள்ளது. அடுத்து கோயில் கோயிலாக வழிபட்டுப் பரிகாரம் தேடுமாறு சொல்லப்படும் (அ) மருந்து மாயங்களைத் தேட வைக்கும். வசதியுள்ளவர்கள், நவீன மருத்துவத்தின் துணையுடன் செயற்கைக் கருவூட்டலை நாடலாம்.

அடிப்படைவாதிகளின் பிரச்சினை, புனித நூல்கள் அனுமதித்துள்ளவற்றைக் கூட காதில் வாங்காது, கூக்குரலிட்டு திகிலை ஏற்படுத்துவது தான். வடகிழக்கு இலங்கையின் பெண் போராளியும் எழுத்தாளருமான சர்மிளா செய்யத்திற்கு தற்போது நிமிடம் தோறும் மிரட்டலும் எச்சரிக்கையும் விடப்படுவது தான் நிதர்சனமாயிருக்கிறது. பெண் முக்காடிடுவதிலிருந்து பிள்ளைப் பேற்றுக்கு உபாயம் காணுவது வரை அவளின் தனிப்பட்ட விஷயங்களல்லவா? முடிவெடுக்கும் முதல் உரிமை அவளுக்குத்தானே...

தனிமனித சுதந்திரத்திலிருந்து அந்தரங்க வாழ்வு வரை தலையிட்டு அனைத்தையும் அவஸ்தையாக மாற்றிக் கொண்டிருக்கும் அடிப்படை வாதிகள் தான் இன்றைக்குப் பிரச்சினையே ஒழிய, எழுத்தாளர்களல்ல. எழுத்தாளர்கள் அதிகாரத்தை, அதன் அடக்குமுறையைத்தான் எதிர்க்கின்றனர். அது அரசின் அதிகாரமாயினும் சரி, அடிப்படைவாதிகளின் அதிகாரமாயினும் சரி.

‘அடிப்படைவாதிகள், சமூகத்தின் பாதுகாவலர்கள் என்னும் பங்கு பணியினை தாமாகவே எடுத்துக்கொண்டு தமக்கேயுரிய சட்டவிரோத பஞ்சாயத்துக்களை நிறுவியதும், புனித நூலான குரான் எங்களுக்குக் கற்பித்திருக்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் உரிமைகளுக்கும் நிஜத்தன்மை அறிவிப்பதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.’ (Chronicle of a death online / Kannan Sundaram / The Hindu 17-04-2015).

ஆக எஸ்.ரமேஷினால் மத - ஆன்மீகப் போக்குகளை விமர்சனம் செய்ய முடிகிறது. மனித ஆளுமைகளின் பலவீனங்களை, பைத்தியக்காரத்தனங்களை பகடி செய்ய வாய்க்கிறது. சமூகத்தின் விநோதங்களை எடுத்துக்காட்ட முடிகிறது. அக்கறை மிக்க எழுத்தாளனால், கருணை கொண்ட எழுத்தாளனால், எழுத்து மூலம் ஆன்மாவில் சிலிர்ப்பை உண்டு பண்ணிவிட முடியும் என்று பிடிவாதமாக நம்பிடும் எழுத்தாளனால் மட்டும் இவை சாத்தியமாகின்றன.

இவற்றைப் பார்க்கவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புக்கிடைக்கும் வாசகர்கள் நிச்சயம் பாக்கியவான்களே.

டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து...

(சிறுகதைகள்)

ஆசிரியர்: எஸ்.ரமேஷ்

Shakespeare’s Desk

No.33, South Car Street,

Srivilliputtur - pin.626125

Virudhunagar District - Tamil Nadu.