ponnila book 450நிலா வாசம் என உலகெலாம் தழுவும் தாய்மை வாசத்தை எழுதிய அகிலா, இப்போது "காடுறையும் பெருவளரி" என்னும் பெயரில் ஒரு கவிதை நூலைத் தமிழுக்குத் தந்துள்ளார். வளரி என்பது வனவேடரிடம் இருக்கும் ஒரு வேட்டைக்கருவி. குறி தவறாமல் வேட்டையைத் தாக்கும் கருவி. எறிந்தவரிடமே திரும்பி வரும் அன்புக் கருவி.

அகிலாவின் இந்தக் கவிதைக் கருவி எதைத் தாக்குகிறது? வாசித்தால் தெளிவு தரும். கவிதை என்பது தீக்குச்சி முனையில் திரண்டு நிற்கும் நெருப்பு என்னும் அகிலா. அதன் ஒளி என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கவிஞரின் அனுபவ வெளி தீர்மனிக்கும் என்கிறார்.

தன்னையே இப்படி சொல்கிறார் கவிஞர்.

நிசப்த நிர்வாணத்தின்

இரகசியக் காடுறையும்

பெரும் வனம் நான்.

ஆழமான வரிகள். தன்னை ஒரு வனமாகச் சொல்கிறார் கவிஞர். பெரு வனமாகச் சொல்கிறார். காடுறையும் வனமாகச் சொல்கிறார். நிசப்த நிர்வாணத்தின் காடுறை வனமாகச் சொல்கிறார்.

தாலிச்சரடைக் கண்களில்

ஒற்றிக் கொண்டு முத்தமிடவில்லைதான்

என்ன நினைத்தாயோ

சுக்கு நூறாய் முற்றத்தில்

கிடந்தது புத்தகம்

திரும்பிய பக்கமெல்லாம்

கழுத்தறுபட்ட கதாபாத்திரங்களின் விசும்பல்

குரல்வளையை ஓங்கி மிதித்தாய்

வீடெங்கும் இரத்தக் கவிச்சி

கொலையெனப்படுவது யாதெனில்.....?

அபூர்வ வேகம் கொண்ட வரிகள் இவை. கொலையெனப்படுவது யாதெனில் என அவர் முடித்திருக்கும் பாங்கு ஆழமானது. அந்த வரியே கவிதை முழுமை மீதும் ஒளி தெளிக்கிறது. ஒளி பட்ட புள்ளிகளெல்லாம் புதுப் புது வண்ணத்தில் மின்னுகின்றன.

வேட்டை அய்யனோ, ஜக்கம்மாவோ,

யார் தொட்டும் அசையாச் சூலம்

தெருமுக்கில் தப்பட்டை

திமிறத் திமிற ஒலித்த கணம்

மிடுக்கிட்டு ஆடியது

மிளர மிளர ஆடியது

சூலமல்ல

முப்பாட்டன்.

இன்றைய அடைமழை அரசியலை கடுமையாக தாக்கும் நாலுவரிகளைத் தந்திருக்கிறார் அகிலா.

தெருவெங்கும் மிதக்கின்றன

ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்களும்

ஊறிய ரூபாய் நோட்டுகளும்

கள்ளக் கர்ஜனையில்

காடுகள் அதிர்வதில்லை.

அகிலா எந்தச் சூழலில் எழுதினாரோ, யாழ்ப்பாண யுத்த சூழலை எனக்குக் காட்டுகிறது இந்த கவிதை.

அவனுக்கான ஆயிரம் கனவுகளை

பதுங்கு குழியில் வைத்திருக்கிறேன்

இதழ்கள் குவிக்கிற போதெல்லாம்

என் தலைக்குமேல்

கழுகுகள் வட்டமிடுகின்றன....

அப்பன் ஆத்தாளின் உருவச் சிதைவு

‘வேண்டாம் விட்டு விடு’

அரற்றிய காதலை

பின்னங்காலால் உதைத்தபடி

யுத்த வேகப் புரவியைப்போல்

நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.

தொடைகள் தளர்த்தி கைகள் ஊன்றி...

.........

........

ஒற்றைக் கனவுதான்

ஓராயிரம் முறை வருகிறது.

காதலின் முன்னும் பின்னும் ஆண்கள் நடந்து கொள்ளும் முறையை காட்டமாக சொல்கிறது கவிதை.

காதலியின் பெயரை

சரடுபோல் இணைத்து

தெய்வீகக் காதலென

செருக்கோடு சலம்புகிறவன்

கணவன் ஆனதே

காதலன் பெயர் பொருட்டு என்பதை

வந்தவள் பிதற்றப் போவதில்லை

பெயர் உணர்த்தும் தெய்வீகம்!

அக்கினிக் குஞ்சு போல் மூன்று வரிகள்

திருநீரா? அஸ்தியா?

வறட்டியின் தேர்வல்ல

அதன் வாழ்க்கை.

வறட்டி யார்? பெண் தானே!

இன்றைய அரசியலின் நடைமுறை லட்சியத்தைக் கேலி செய்கிறது ஒரு கவிதை.

பள்ளிகளை மூடுங்கள்

படித்து என்னவாகப் போகிறோம்!

மருத்துவமனைகளை மூடுங்கள்

பிழைத்து என்னவாகப் போகிறோம்!

மதுக்கூடங்களை திறவுங்கள்

தெளிந்து என்னவாகப் போகிறோம்!

இதே ஒரு கவிதை நெருப்பை கக்கும் எரிமலையாக...

வெடிக்கத் திமிரும் வெப்பக் குழப்பை

கக்கக் காத்திருக்கும் எரிமலையாக

பிறப்புத்துளையை அடைத்துக் கொண்டு

உக்கிரத்தில் வெடித்துச்

சிதற வேண்டும் ஒருநாள்.

வக்கிர ஓநாய்களின் பலாத்கார

கிறுக்குப் புத்தியைக் கோர்த்தபடி.

மொத்தத்தில் இது கவிதையல்ல. கனல் கக்கும் நெருப்புக் குழப்பு. அக்கினி குஞ்சொன்று கண்டேன் என ஒரு புதுமைப் பெண்ணைச் சென்னை கடற் கரையில் பார்த்துப் பாடினார் பாரதி. அந்த பாரதியின் புதுமைப் பெண்ணாக ஆணாதிக்கத்தின் மீது நெருப்புக் குழம்பை வீசுகிறார் அகிலா.

மொத்தத்தில் இது ஒரு அக்கினிக் கவிதைத் தொகுப்பு.

காடுறையும் பெருவளரி

அகிலா கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: முடிவிலி

` 75/-

Pin It