E.J.Hobsbawm (1981) Bandits Revised Edition | Pantheon Books, New York

“திருடர் மற்றும் கொள்ளையரின் வாழ்க்கையைக் காட்டிலும் நம் எல்லோரின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கக்கூடிய செய்தி வேறு ஒன்றும் இருக்க முடியாது” என்று இவர்களைப் பற்றி எனக்கு முன்பே ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் மாக்ஃபர்லேன் கூறியுள்ளதை இங்கே கவனிக்க வேண்டும். ஆதலால் இந்த நூலை எல்லோரும் தேடுதலுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் படிக்கலாம்.

இ.ஜே.ஹாப்ஸ்பாம் (இந்நூலின் முன்னுரையில்)

சென்ற இதழில் நம் கால வரலாற்றறிஞர்களுள் ஒருவரான ஹாப்ஸ்பாம் (1917-2012) வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொண்டோம். இந்த இதழில் அவரது நூல்களுள் ஒன்றான “சமூகம்சார் கொள்ளையர்கள்” (Bandits) என்ற நூலைக் குறித்த சுருக்கமான அறிமுகம் இடம் பெறுகிறது.

bandits 450அடிப்படையில் ஹாப்ஸ்பாம் ஒரு மார்க்சியவாதி. ஆனால் யந்திரத்தனமாக மார்க்சியத்தை வரலாற்றில் பொருத்திப் பார்த்தவரல்லர். அவருடைய வரலாற்றாய்வுகளில் சமூகவியலும் இழையோடும். அவரது தன்வரலாற்று நூலான மகிழ்வுததும்பிய காலங்கள் (Interesting Times) என்ற நூலில் வரலாறுகளின் ஊடாக (Among the Histories) என்ற தலைப்பில் ஓர் இயல் இடம் பெற்றுள்ளது.

அவ் இயலில் பியர் பூர்தா என்பவரின் “நான் மேற்கொண்ட அறிவுபூர்வமான வேலைகளில் எனக்கு எல்லா வகையிலும் முழு மகிழ்ச்சியைக் கொடுத்தது சமூகவியலாளர் வேலையே என்பதில் அய்யமில்லை” என்ற கூற்றை மேற்கோளாகக் காட்டிவிட்டு, இறுதியாக, “ஒரு சமூகவியலாளரின் இடத்தில் உள்ள பதிலிதான் வரலாற்றாளர் என்றால், அதற்கு நான் ஆமென்! (அப்படியே ஆகுக) என்றுதான் சொல்வேன்.” என்று முடிக்கிறார். 

2002ஆவது ஆண்டில் இவ்வாறு எழுதும் முன்னதாக 1998இல் “வேறுபாடான சாமானிய மக்கள்” (Uncommon People) என்ற தலைப்பில் அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்நூலின் முன்னுரையில் வேறுபாடான சாமானிய மக்கள் என்று தாம் பயன்படுத்தியுள்ள கலைச்சொல் குறித்துப் பின்வரும் விளக்கத்தைத் தந்துள்ளார்.

குடும்பத்தினரையும் அக்கம் பக்கத்தவரையும் தவிர வேறு யாரும் அறிந்திராத அடையாளமில்லாதவரைப் பற்றியது இந்த நூல். இன்றைய உலகில் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியனவற்றைப் பதிவு செய்யும் அலுவலகங்களுக்கும் சில வேளைகளில் ‘மனிதரைப் பற்றிய கதைகள்’ என்று தேடும் பத்திரிகையாளருக்கும் காவல்துறைக்கும் அறிமுகமானவராக இவர்கள் இருக்கக்கூடும்.

அய்ரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய பயிர்களைப் பயிர்செய்து உலகை மாற்றிய பல எளிய ஆண்களையும் பெண்களையும் போன்று இவர்களும் வெளிஉலகம் அறியாதவர்கள், அறியமுடியாதவர்கள். இவர்களில் சிலர் உள்ளூர் அளவில் சிறிய பொறுப்புகளையும் பணிகளையும் ஏற்றவர்கள். தெருக்களில், கிராமத்தில், தேவாலயங்களில், தொழிற்சங்க உள்ளூர்க் கிளையில், ஊர் அவையில் என இப் பொறுப்புகள் அமையும். நவீன ஊடகங்களும் இசையும் விளையாட்டும் சிலரை வெளியுலகம் அறியும்படிச் செய்துள்ளன. இவை இன்றேல் இவர்களுள் பலர் பெயர் தெரியாது மறைந்து போயிருப்பர்.

மனித குலத்தில் இவர்கள்தான் பெரும்பான்மையோர். தனி மனிதர்களும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் எந்த அளவுக்கு வரலாற்றுக்கு முக்கியம் என்பதைக் குறித்த வரலாற்று ஆய்வாளர்களின் விவாதங்கள் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. இவர்களைத் தவிர்த்துவிடுவதால் பெரும் வரலாற்றுக் கதையாடலுக்கு (Macro-Historical Narrative) எவ்வித இழப்பும் இல்லை.

“‘எதிர்காலத்தின் பெரும் இரக்கப்பார்வை’ (the enormous condescension of posterity) என்று இ.பி.தாம்சன் கூறும் கண்ணோட்டத்தில் இருந்து இவர்களை மீட்டெடுப்பது மட்டுமே இந்த நூலின் நோக்கமல்ல. இதையும் செய்யவேண்டும்தான். இந் நூலில் ஒரு சில கட்டுரைகள் இதைத்தான் செய்கின்றன.

இச் சாமானிய மக்களை ஒரு சிலர் அற்பமான மனிதர்கள் என்று குறிப்பிட்டதை மறுத்து, ‘நியூ யார்க்கர்’ என்ற பத்திரிகையில் ஜோசப் மிச்சல் ‘உங்களையும் என்னையும் போல இவர்கள் பெரியவர்கள்’ என்று குறிப்பிட்டார். இவர்களைப் பற்றி யாரும் எழுதவில்லை என்றாலும் உங்களையும் என்னையும் போன்றே ஆர்வம் ஊட்டக்கூடியவர்கள்; முக்கியமானவர்கள். தனி மனிதர்களாக இல்லையென்றாலும் கூட்டாக இந்த ஆண்களும் பெண்களும் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் செயல்களும் வரலாற்றை மாற்றும் இயல்பின. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டில் பண்பாட்டின் வடிவத்தையும் வரலாற்றின் போக்கையும் இவர்கள் மாற்றியுள்ளனர். எனவேதான் சாமானியர் என்று வழக்கமாகக் குறிப்பிடப்படும் இம் மக்களைப் பற்றிய இந் நூலை ‘வேறுபாடான சாமானிய மக்கள்Õ என்று அழைத்துள்ளேன்”

ஹாப்ஸ்பாமின் இக் கூற்றுகள், வரலாற்று வரைவில் புறக்கணிக்கப்பட்டு வந்த மக்கள் பிரிவுக்கு உரிய இடம் வழங்குவதில் அவர் காட்டிய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. இதன் அடிப்படையிலேயே கொள்ளையர்களை மையமாகக்கொண்டு இந்நூலை இவர் எழுதியுள்ளார். ஆயினும் ஹாப்ஸ்பாம் சுட்டும் கொள்ளையர்கள் ‘சமூகம்சார்’ என்ற அடை மொழிக்கு உட்பட்டவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும்.

கொள்ளைக்காரன்

குற்றவியல் அகராதிகளிலும் சட்ட நூல்களிலும் கொள்ளை, கொள்ளைக்காரன் என்ற சொற்களுக்குத் தெளிவான வரையறை கொடுக்கப்பட்டிருக்கும். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் (I.P.C.) 390, 391 ஆவது பிரிவுகள் இவை தொடர்பான விளக்கத்தைத் தருவன. ‘கிராமங்களில் நிலவும் வேலையற்ற உபரி மக்கள்தொகை கொள்ளையர்களின் தோற்றத்திற்கு முதலாவதும் மிக முக்கியமானதுமான அம்சமாகும்’ என்று ஹாப்ஸ்பாம் குறிப்பிடுவார். கொள்ளையர்கள் என்ற பொருளைத் தரும் ‘Bandits’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தம் நூலுக்கு இவர் தலைப்பாக இட்டிருந்தாலும் இந்நூல் அறிமுகம் செய்யும் கொள்ளையர்கள் வழக்கமான கொள்ளையர்களில் இருந்து வேறுபட்டவர்கள். ஹாப்ஸ்பாம் மொழியில் இவர்கள் சமூகம் சார் கொள்ளையர்கள் (Social Bandits) அல்லது கண்ணியம் மிகு கொள்ளையர்கள் (Noble Bandits).

சமூகம்சார் கொள்ளையர்கள்

1959 ஆவது ஆண்டில் ஹாப்ஸ்பாமின் தொடக்ககாலக் கலகக்காரர்கள் (Primitive Rebels) என்ற நூல் வெளியானது. இந் நூலில் இடம் பெற்ற கட்டுரைகள் சில, ஏற்கெனவே ஆய்விதழ்களில் வெளிவந்தவை. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இந்நூலின் உள்ளடக்கத்தைச் சொற்பொழிவாக இவர் வெளிப்படுத்தியபோது இவரது மார்க்சிய, சமூகவியல், மானிடவியல் நண்பர்கள் இவர் முன்வைத்த கருத்துக்களை விவாதித்தனர். இதன் பின்னரே இது நூல் வடிவம் பெற்றது. இந்நூலில்தான் சமூகம்சார் கொள்ளையர் என்ற கலைச்சொல் முதல் முறையாக இடம் பெற்றது. 1972 ஆவது ஆண்டில் Bandits என்ற இந்நூல் வெளியானது. இந்நூலின் பொருளடக்கம் இவ்வாறு அமைந்துள்ளது:

1) சமூகக் கொள்ளை என்றால் என்ன?

2) கொள்ளையராக மாறுவது யார்?

3) நல்ல திருடன் 

4) பழிவாங்குவோர்

5) ஹைடுக்

6_ கொள்ளையின் பொருளாதாரமும் அரசியலும்

7) கொள்ளையரும் புரட்சியும்

8) நிதிதிரட்டும் கொள்ளையர்

9) கொள்ளையர் என்ற கருத்தாக்கம்

இவற்றுள் முதல் இயலில் “நாங்கள் வருந்துகிறோம். உண்மைதான். ஏனென்றால் நாங்கள் எப்பொழுதும் ஒடுக்கப்படுகிறோம். உயர்தட்டு மக்கள் பேனாவைப் பயன்படுத்துகிறார்கள்; நாங்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துகிறோம். அவர்கள் சமவெளிகளின் உரிமையாளர்கள்; மலைகள் எங்களுக்கு சொந்தம்” என்ற பழைய கொள்ளையர் ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் காட்டிவிட்டு, சமூகம்சார் கொள்ளையரின் உருவாக்கம் குறித்து பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

“நிலவுடைமையாளராலும், அரசாலும் குற்றவாளிகள் என்று முத்திரையிடப்பட்ட குடியானவர்தான் சமூகக் கொள்ளையர். ஆனால், இவர்கள் குடியானவர் சமூகத்திற்குள்ளேயே வாழ்பவர்கள்; இவர்களுடைய மக்கள் இவர்களை வீரர்களாகவும், நாயகர்களாகவும், அநீதிக்குப் பழிவாங்குபவர்களாகவும், நீதிக்காகப் போராடுபவர்களாகவும், சில இடங்களில் விடுதலைக்கு இட்டுச்செல்லும் தலைவர்களாகவும் பார்த்தனர்; இவர்கள் மீது நன்மதிப்பு வைத்திருந்தனர்; இவர்களுக்கு உதவினர்; இவர்களை ஆதரித்தனர்.

சாமானியக் குடியானவருக்கும் இந்த சமூகக் கிளர்ச்சியாளருக்கும் இடையே நிலவிய உறவுதான் சமூகக் கொள்ளையை சுவையுடையதாக்குகிறது; பொருள் கொண்ட தாக்குகிறது. இந்த உறவுதான் சமூகக் கொள்ளையரை மற்ற திருடர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. நிழல் உலகக் குற்றக்கும்பல்கள், வழக்கமான திருடர், அல்லது திருட்டை வாழ்க்கை முறையாகக் கொண்ட (எடுத்துக்காட்டாக பெட்வியுன் இனத்தவர்) சமூகக் குழுக்களுக்கும், சமூகக் கொள்ளையருக்கும் இடையேயிருந்த வேறுபாடும் இந்த இணக்கம்தான். பிற திருடருக்கும் திருடப்பட்டவருக்கும் இடையே மோதல்தான் இருக்கும்; இருவரும் ஒருவரையருவர் பகைவராகவும் எதிரியாகவுமே பார்த்துக் கொள்வர்; தாக்கப்பட்டவர் அல்லது பொருளை இழந்தவர் திருடியவரைக் குற்றவாளியாகத்தான் கருதினர். ஆனால், சமூகக் கொள்ளையர் எந்தச் சூழலிலும் குடியானவரிடம் திருடுவதில்லை. (நிலவுடைமையாளரிடமும், பிற இனத்தாரிடமும், அன்னியப் பகுதிகளிலும் கொள்ளையடிப்பது வேறு.)

எனவே இந்த இணக்கமான உறவு இல்லாதவர் சமூகக் கொள்ளையராக இருக்க முடியாது. ஆனாலும், சில இடங்களில் இதற்கு விதி விலக்குகள் உண்டு: தன்னுடைய மக்களிடம் திருடாதவொரு சமூகக் கொள்ளையன் பிற இடங்களில் திருடனாக இருக்கக்கூடும். எனவே இதைத் தெளிவாக்க வேண்டியது அவசியம்.”

மூன்றாவது இயலில் "நல்ல திருடன்" என்ற அடைமொழியிட்டு நல்ல திருடன் ஒருவனின் குணாம்சங்களைப் பின்வருமாறு பட்டியலிடுகிறார்:

1) நல்ல திருடன் குற்றங்களில் தன் தொழிலைத் தொடங்குவதில்லை; மாறாக, அநீதிக்கு இரையானவன் அல்லது ஏதோவொரு செயலுக்காக நிர்வாகத்தைப் பகைத்துக் கொண்டவன். இவனுடைய செயல் அரசின் கண்களில் தவறு. ஆனால், குடியானவர் அப்படிப் பார்ப்பதில்லை;

2) தவறுகளைத் திருத்துவான்;

3) பணக்காரரிடமிருந்து எடுத்து வறியவருக்குக் கொடுப்பான்;

4) பழி வாங்குவதற்கும், தற்காப்பிலும்தான் கொலை செய்வான்;

5) உயிருடன் இருந்தால் தன் மக்களிடம் திரும்பி வருவான்; அவர்களில் ஒருவனாக இருப்பான் (தன் மக்களை விட்டுச் செல்வதில்லை);

6) தன் மக்களின் அன்பையும், உதவியையும் பெற்றவன்;

7) துரோகத்தால்தான் இறப்பான் (இவனுடைய சமூகத்தில் நல்லவர் யாரும் இதைச் செய்ய மாட்டார்);

8) கதைகளிலாவது, கண்ணுக்குப் புலப்பட மாட்டான்; வீழ்த்தப்பட முடியாதவன்;

9) நீதியின் ஊற்றான மன்னனுக்கு எதிரியல்லன்; உள்ளூர் நிலவுடைமையாளர், மதத்தலைவர் அல்லது உள்ளூர் ஆட்சியாளரைத்தான் குறி வைப்பான்.

இவ்வாறு சில வரையறைகளைக் குறிப்பிட்டுவிட்டு, “இவை அனைத்தும் ஒரு திருடனிடம் இல்லாமல் போனாலும், சில நல்ல திருடரிடம் இவை பெரும்பாலும் காணப்பட்டன. பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் தொடர்புடைய சமூகக் கொள்ளையர் பெரும்பாலும் குற்றங்களில் தொடங்கவில்லை; தன்மான இழுக்கு, அல்லது உள்ளூர் மக்கள் அநீதி என்று கருதுவதைத் தட்டிக் கேட்பது, அல்லது ஏழை - பணக்காரர் மோதலில் பணக்காரருக்கு எதிராகச் சண்டை போடுதல் போன்ற செயல்களில்தான் இவர்களுடைய திருட்டு வாழ்க்கை தொடங்கும். இவற்றில் எதுவும், உள்ளூர் மக்களின் பார்வையில் தவறே அல்ல” என்று விளக்குகிறார்.

 அடுத்து ஒருவனின் திருட்டு வாழ்க்கை எவ்வாறு தொடங்குகிறது என்பது குறித்தும் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்: Òஒரு அநீதியை சரி செய்வதில்தான் நல்ல திருடனின் வாழ்க்கை தொடங்கும். அந்த அநீதி அவனுக்கு ஏற்பட்டதாகத்தான் இருக்கும். இந்த நீதி உணர்வுடன் ஆரம்பித்து, பின்னர் குடியானவருக்கெதிரான எல்லா அநீதிகளையும் தட்டிக் கேட்பார்.Ó

***

தம் தொடர்ச்சியான ஆய்வுகளின் அடிப்படையில் சமூகம்சார் கொள்ளையர் குறித்த வரையறைகளை வகுத்துக் காட்டும் ஹாப்ஸ்பாம், அவர்களை மாபெரும் போராளிகளாகச் சித்தரிக்கவில்லை. குரலெழுப்பத் திராணியற்றுப் போன சமூக அமைப்பில் - குறிப்பாக, கிராம சமூக அமைப்பில் எதிர்க்குரல் எழுப்பியவர்களாகவே இவர்களை அடையாளம் காட்டுகிறார்.

இந்நூலைப் படித்து முடித்ததும் சமூக விரோதிகளாகச் செயல்படும் கொள்ளையர்களுக்கும், சமூகக் கலகக்காரர்களாகக் குரலெழுப்பும் சமூகம்சார் கொள்ளையர்களுக்கும் இடையிலான வேறுபாடு தெற்றெனப் புலப்படும்.

***

இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள ஹாப்ஸ்பாமின் கூற்றுகள் பேராசிரியர் ரகு அந்தோணியின் மொழிபெயர்ப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக வரவுள்ள “சமூகம்சார் கொள்ளையர்கள்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

Pin It