அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அவரை இந்துவயப்படுத்த பல முயற்சிகள் நடந்தன; நடக்கின்றன. தலித் மக்களை கவர, அம்பேத்கரை தங்கள் அடையாளமாகக் காட்ட, சங் பரிவார் அமைப்பினர் தவறுவதில்லை. அம்பேத்கரை இந்துவயப்படுத்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர் எஸ் எஸ்காரர் அருண் ஷோரி எழுதிய “Worshipping False Gods” போன்ற நூல்கள் கடந்த காலங்களில் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது ம. வெங்கடேசன் என்பவரை வைத்து “இந்துத்துவ அம்பேத்கர்” என்ற நூலை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். “பெரியாரின் மறுபக்கம்” என்ற நூலை எழுதியவரும் இவரே!! ஆர் எஸ் எஸ் ஒருபுறம் அம்பேத்கரை தங்கள்வயப்படுத்த முயன்று வரும் நிலையில், மறுபுறம் காந்தியவாதிகளோ, அம்பேத்கரை தூற்றியும், காந்தியை போற்றியும் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

jayaraman book on ambedkar “காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்கு செய்தது என்ன?” என்பது 400 பக்கங்களுக்கு மேல் அம்பேத்கர் எழுதிய விமர்சன நூலாகும். இந்நூலுக்கு எதிராக, காந்தியின் வேண்டுகோளின்படி, இருவர் மறுப்பு எழுதியுள்ளனர். பா. சந்தானம் என்பவர், “Ambedkar attack” என்ற நூலையும், குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி, “Ambedkar refuted” என்ற நூலையும் எழுதியுள்ளனர். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தவரை மறுப்பு எழுதச்சொல்லும் அளவுக்கு தான் காந்தியின் சிந்தனைகள் இருந்துள்ளன. 400 பக்கங்களை கொண்ட அம்பேத்கரின் நூலுக்கு, ராஜாஜியால் 37 பக்கங்களில் தான் மறுப்பு எழுத முடிந்துள்ளது. பா. சந்தானம் எழுதிய மறுப்பில், பார்ப்பனர்கள் தகுதி, திறமையினால் தான் உயர்பொறுப்புகளில் இருக்கிறார்களே தவிர, பார்ப்பன ஆதிக்கமே இல்லை என்ற “அரிய” கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து ஒரே நூலாக கொண்டு வந்துள்ளார் பூ.கொ.சரவணன். நூலின் பெயர் “அம்பேதகருக்கு மறுப்பு, அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு” என்பதாகும். இவை போக, முருகு. இராசாங்கம் என்பவர், “பூனா ஒப்பந்தம்: புதைக்கப்பட்ட உண்மைகள்” என்றொரு நூலை எழுதியுள்ளார். இரட்டை வாக்குரிமையை வழங்கும் இவ்வொப்பந்தம், இந்தியர்களை பிரிக்க ஆங்கிலேயர்கள் செய்த சதி என்பதை நிறுவ முயன்றுள்ளார். நூலின் பெயருக்கு ஏற்றவாறே பல உண்மைகளை நூலாசிரியரே புதைத்துள்ளார்.

அம்பேத்கரை தூற்றி எழுதப்பட்ட நூல்கள் ஒருபுறமிருக்க, அவற்றுக்கு மறுப்பாகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. தோழர் பா.பிரபாகரன் எழுதிய “அம்பேத்கரும் அவதூறுகளும்: ஜெயமோகனுக்கு மறுப்பு”, தோழர் ம. மதிவண்ணன் எழுதிய “அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்”, தோழர் யாக்கன் எழுதிய “கழுவப்படும் பெயரழுக்கு” ஆகிய தமிழ் நூல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். அதே போன்று ஆங்கிலத்தில், போஜா தார்கம். கே. சத்திய நாராயணா, கே. லட்சுமி நாராயணா, கே. ஒய். ரத்தினம் ஆகியோர் இணைந்து எழுதிய, “Ambedkar can neither be adopted or appropriated by the Hindutva elements” என்ற நூல் போற்றுதலுக்குரிய நூலாகும்.

இந்த வரிசையில், அம்பேத்கரை இந்துவயப்படுத்த எழுதப்பட்ட நூல்களுக்கும், அம்பேத்கரை தூற்றி, காந்தியை போற்றி எழுதப்பட்ட நூல்களுக்கும், சரியான மறுப்பாக எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல் “அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்” எனும் நூல். மருத்துவர் ஜெயராமன் இந்நூலை எழுதியுள்ளார். அம்பேத்கர் பெரியார் கார்ல் மார்க்ஸ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக இருக்கும் மருத்துவர், “காந்தியின் தீண்டாமை” (2008), “மகனுக்கு மடல்” (2014), “நான் ஏன் பதவி விலகினேன்? – டாக்டர் அம்பேத்கரின் பாராளுமன்ற உரைகள்” (2017), “மேட்டுகுடி தலித்துகளுக்கு” (2019) ஆகிய நூல்களை படைத்த சிறப்புக்குரியவர் ஆவார்.

‘தலித் முரசு’ வெளியீடாக வந்திருக்கும் பார்ப்பனியத்தின் ஹிம்சை வடிவம் இந்துத்துவம் என்றால், அதன் அகிம்சை வடிவம் காந்தியம் என்பதை தெளிவாக நூலாசிரியர் விளக்கி யுள்ளார். பூனா ஒப்பந்தத்தின் போது காந்தியின் துரோகத்தையும், காந்தியின் ஒற்றை வாக்குரிமையுடன் கூடிய 148 தனித்தொகுதிகளை விட, அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய 71 தனித்தொகுதிகள் ஏன் சிறந்தவை என்பதையும், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார். பெரியாரும் அம்பேத்கரும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தனர். காந்தி ஒப்பந்தத்தை எதிர்த்து உண்ணாநோன்பு இருந்தார். காந்திக்காக தாழ்த்தப்பட்டோர் உரிமையை கைவிட வேண்டாமென பெரியார் அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினார். ஆரம்பத்தில் தனித்தொகுதி முறையையே எதிர்த்த காந்தி, பின்பு 148 தனித் தொகுதிகள் ஒதுக்குவதை ஏற்றுக் கொண்டார்.

காந்தியின் “அரிசன சேவா சங்கம்” வரவு செலவு கணக்கு கூட தாக்கல் செய்யப்படாமல், செயல்பாடற்று முடங்கிப் போனது. அதன் மோசமான செயல்பாடுகளால், சுவாமி சிரத்தானந்தர் போன்றோரும் விலக நேரிட்டது. ஜாதி ஒழிப்பை லட்சியமாக கொண்ட அம்பேத்கரை ஏதோ அரசியல் அதிகாரத்துக்கு மட்டும் போராடியவரைப் போன்று, காந்தியவாதிகள் கட்டமைக்கும் பிம்பத்தையும் உடைத்துள்ளார் நூலாசிரியர். “நால்வகை வர்ணம் உண்டு. பஞ்சமர் என்ற ஐந்தாவது வர்ணம் கிடையாது; எந்த வேதத்திலும் அப்படி கூறப்படவில்லை. எனவே இந்த ஐந்தாவது வர்ணத்தை ஒழிக்க வேண்டும்” என்றார் காந்தி. இது அவரது மோசமான சனாதனதர்ம சிந்தனையை வெளிப்படுத்தும்விதமாக உள்ளது. பெரியாரும் அம்பேத்கரும் “கிராமங்கள் அழிய வேண்டும்” என்று பிரசாரம் செய்து வந்த நிலையில், “இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது” என்ற காந்தியிடம் வேறென்ன சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியும்?? ஒடுக்கப் பட்டவர்களுக்கு தனித்தொகுதி வழங்கினால் “இந்து மதத்துக்கு ஆபத்து; இந்து மதம் பிளவுபடும்” என்றவர்தான் நம் தேசத்தந்தை.

அம்பேத்கரை இந்துவயப்படுத்த துடிக்கும் எந்த இந்துத்துவவாதியும், காந்தியர்களின் நூல்களை மறுக்கத் துணியவில்லை. “இந்தி பேசும் சமவெளி மக்கள், துளசிதாசின் இந்தி ராமாயணத்துக்கு பதிலாக, வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தை படிக்கும்போது தான் மக்கள் பிற்போக்கு தன்மையில் இருந்து விடுதலை அடைவார்கள்” என்று அம்பேத்கர் கூறியதற்கான காரணம், வால்மீகி ராமாயணம் அவ்வளவு மோசமானது என்பது தான். பெரியார் கம்பனை புளுகன் என்று கூறியதை இதனோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம். ஆனால், இந்துத்துவ வாதிகளோ அம்பேத்கரின் கருத்தை திரித்து, அம்பேத்கர் சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறார் என்று கதைகளை எழுதுகின்றனர். பெரியார் ராஜாஜி யோடு நட்பாக இருந்ததை வைத்து பெரியாரை எப்படி இந்துவயப்படுத்த முடியாதோ, அதே போன்று, அம்பேத்கர் வீரசவர்க்கரோடு கடித பரிமாற்றங்கள் செய்ததை வைத்து அவரை இந்துவயப்படுத்த முடியாது. இந்து மத வண்டவாளங்களை “இந்துமத புதிர்கள்” நூல் மூலம் கிழித்தெறிந்த அம்பேத்கரை “இந்துத்துவ அம்பேத்கர்” என்பது நகைப்புக்குரியது. உபநிடதங்களை தீயிலிட்டு கொளுத்திய அம்பேத்கர் உபநிடதங்களை ஆதரித்ததாக ம. வெங்கடேசன் எழுதியிருப்பதை அவருடைய தனிப்பட்ட ஆசையாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, அதில் எள்ளளவும் உண்மையில்லை. காஷ்மீர் பிரிவினையை ஆதரித்ததற்காக அம்பேத்கர் எப்படி இந்துத்துவ அம்பேத்கராவார் ஏன்பதை ஆர்.எஸ்.எஸ். தான் விளக்க வேண்டும்.

இந்துக்களுக்கான கட்சியாக தன்னை காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போது, ஏன் அவற்றை எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணத்தை ஒரு இயக்கமாக முன்னெடுக்கவில்லை? வர்ண தர்மத்தை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு நாடகங் களெல்லாம், மதமாற்றத்தை தடுப்பதற்கு தான். 1981இல் இருந்து பல இந்துத்துவ மடாதிபதிகள், தலித் மக்களுக்கும், கிராம பூசாரிகளுக்கும், ஆன்மீக போதனைகளை வழங்க ஆரம்பித்தனர். தீண்டாமையை தவிர்ப்பதாக காட்டிக் கொண்டனர். ஆனால் இதன் விளைவு, கிராம பூசாரிகளை இந்துவயப்படுத்த, சமஸ்கிருத மயமாக்கத் தான் பயன்பட்டதேயன்றி, தலித் மக்களின் இழிவை போக்க பயன்படவில்லை. “அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்., முகாம்களை பார்வையிட்டு பாராட்டினார்; முஸ்லிம்களை வெறுத்தார்; இந்து மதத்தின் ஒரு பிரிவு என்பதால் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார்” என்று அம்பேத்கரை திரிக்க பயன்படும் அனைத்து கட்டுக்கதைகளையும் மருத்துவர் ஜெயராமனின் நூல் உடைத்துள்ளது. இந்நூலை படித்து, நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை பரப்புவது நம் கடமையாகும்…

Pin It