ellam book 450தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்து எழுதிய ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’ இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.  ஓர் இலக்கிய வரலாறு எப்படி ஆக்கரீதியாகத் தொகுக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.  ஒவ்வொரு பதிப்புக்கும் தனித்தனியாக முன்னுரை எழுதித் தனது நோக்கத்தைத் தெளிவு படுத்துவது இந்த ஆய்வு நூலை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்ளக் கூடுதலான வாய்ப்பை அளிக்கிறது.

“இலங்கையின் தனித்துவத்தையும், தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் ஓர் இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த முறையினைச் சிறப்பாக இந்திய வாசகர் களுக்கு எடுத்துக்காட்டுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.  அப்பண்பு நன்கு முகிழ்க்கத் தொடங்கிய காலமான 1948 - 1970 காலப் பிரிவையே இது விதந்து காட்டுகின்றதெனலாம்.”

முதற்பதிப்பின் முன்னுரையில் இவர் தனது நோக்கத்தை இவ்வாறு நிறைவு செய்ததோடு, இன் னொன்றையும் குறிப்பிடுகிறார்.  பொதுவாக வரலாறு என்று தனிமனித ஆளுமையால் நிகழ்த்தப்படுவது ஒரு பொதுவான போக்காகவே இருந்து வருகிறது.  அதிலிருந்து இந்த இலக்கிய வரலாறு மாறுபட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  அதையும் இவர் தனது முன்னுரையில் தெளிவுபடுத்துகிறார். “முற்போக்கு இலக்கிய இயக்கத்தினை எதிர்த் தோரின் முயற்சிகளை மூடி மறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.  ஆயினும் தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, இயக்கங்களின் பிரதிநிதிகளாக விளங்கியோரின் பெயர்களே தரப்பட்டுள்ளன.” இதுவே, இந்த வரலாற்று ஆய்வின் தனித்தன்மையைப் புலப்படுத்துவதாகக் கருதலாம்.

ஈழத் தமிழிலக்கிய வளர்ச்சிக் கட்டங் களையும், வெவ்வேறு கால நிலைகளில் வெளி யான ஆக்கங்களைப் பற்றியும் பல வகைகளில் இந்த நூல் எடுத்துரைக்கிறது.

“மரபார்ந்த இலக்கியப் படைப்புக்கள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.  ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுவதுமாக உணர்ந் தறிந்து கொள்ள இந்நூல் பெருந்துணையாய் அமையும் என்பதில் அய்யமில்லை” என்று முகப் புரையில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடு பொருத்த மானதே.

இவரது இலக்கியக் கண்ணோட்டம் வெறுமனே இலக்கியம் சார்ந்தது அல்ல; கலை, கலாச்சாரம், பண்பாட்டு அரசியல், தொழில், பின்புலம் போன்ற மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கியது.  அதைப் பற்றித் தனது கருத்துக்களைத் தயக்கம் எதுவும் இல்லாமல் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து, இவர் ஈழத்தில் உள்ள இலக்கிய நிலைமைகளை ஆழமாகவும், தெளிவாகவும் புரிந்து கொண்டு இவர் அழுத்தமாகக் கூறுகிறார்.

“தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் காணப் படும் மொழி வழிப்பட்ட ஒருமைப்பாட்டையும், தமிழ் மக்கள் என்னும் வகையில் காணப்படும் சமூகப் பண்பாட்டு ஒருமைப்பாட்டையும் எடுத்துக் காட்டும் தமிழ் இலக்கியம், அதே வேளையில் அவர்களின் தனித்துவத்தையும் பேணவேண்டுவது அவசியமாகும்.

“இதனால், ஈழத்துத் தமிழிலக்கியத்தின் பிரதேச முக்கியத்துவம் மிக ஆழமாக அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.  அதே வேளையில் இப் பிரதேசங்களினூடே தொழிற்படுகின்ற ஒருமைப் பாட்டையும் ஆராய்தல் வேண்டும் இவை இரண்டுக்கும் இலக்கியமே பிரதான கருவியா கின்றது.”

“ஒட்டுமொத்தமான ‘ஈழத்து’த் தமிழ் இலக்கியம் என்பது இந்தப் பண்பின் பிரதிநிதியாக அமைதல் வேண்டும்.”

ஆகவே, ஈழத்து இலக்கியம் குறித்த தனித் தன்மையை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் இலக்கியத் திறனாய்வு செய்ய வேண்டும் என்ற தனது மதிப்பீட்டை முன்வைத்து திறனாய்வுக் கலைக்கு ஒரு புதுப்பாதையை அமைத்துக் கொடுக்கிறார்.

“இந்தப் பிரச்சினையை அணுகும்பொழுது,  மதம், பண்பாடு, பொருளாதார இருக்கை, அரசியற் பிரக்ஞை, புவியியற் கூறு என்பவற்றை மனங் கொளல் அவசியம்.  இவைதான் சமூக இருக்கையைத் தீர்மானிக்கின்றன.  அந்தச் சமூக இருக் கையின் பிரக்ஞைதான் இலக்கியத்தின் தோற்றத் திற்காளாகிறது.”

“புவியியற் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அதே வேளையில் சமூகப் பண்பாட்டு அக வேறுபாடுகளையும் மனம் கொண்டு நோக்கும் போது இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் (அதாவது தமிழிலக்கியம் மூலம் தங்கள் உணர்வு / உணர்ச்சி அந்தரங்கங்களை வெளியிடும் கூட்டத்தினர்) பின் வரும் பிரதேசங்களிற் கால்கொண்டு வாழ்கின்றனர் என்பது தெரிய வரும்.”

அந்த வகையில், மட்டக்களப்பு, திருகோண மலை, வன்னி, மன்னார், யாழ்ப்பாணம், மலை யகம், மேற்குக் கரை, தென்பகுதி போன்ற தளங் களில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

“இந்தப் பிரதேசங்கள் ஒவ்வொன்றும் ஈழத்தின் உப பண்பாடுகளாகக் கருதப்பட வேண்டியவை யாகும்.  இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பாட்டு ஆளுமை உண்டு.”

“இதுவரை வெளிவந்துள்ள ஈழத்துத் தமிழிலக்கியத்தின் படைப்பியற் பாரம்பரியத்தை நோக்கினால் இவ்வுண்மை தெரிய வரும்.”

“ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு என்பதை வெறுமனே புத்தகங்கள், ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல்களாக நோக்காது, ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு என்பது எவ்வாறு அந்த மக்களின் ஜீவ உயிர்ப்பாக, அந்த உயிர்ப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.”

திறனாய்வு குறித்த ஒரு புதுப்பார்வையையும் புதிய பயிற்சியையும் ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’ என்ற தனது இலக்கிய வரலாற்று நூலில் தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் நிறுவுகிறார்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பின் வரும் காலப் பகுதிகளாக வகுத்துக் கொள்ளலாம்.

1) யாழ்ப்பாணம் இராச்சியம் தோன்றும் வரையுள்ள காலம்.

2) யாழ்ப்பாண இராச்சியக் காலம். இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் என்றே எடுத்துக் கூறப்படல் மரபு.

3) போர்த்துக்கேயர் காலம்

4) ஒல்லாந்தர் காலம்

5) பிரித்தானியர் காலம். இதனைப் பின்வரும் உப பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.

அ. கிறித்துவத்தின் பரவலும், சமூகப் பண் பாட்டுத் தனித்துவப் பேணுகையும் (1796-1879) ஆறுமுகநாவலர் (1822-79)

ஆ. ஆங்கில ஆட்சி மத்தியதர வர்க்கத் தோற்றக் காலம் (1890 - 1948)

இ. தேசிய இலக்கியக் காலம் 1956.

குறிப்பிடப்பட்ட இந்தக் காலகட்டங்களில் நிகழ்ந்த மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் இவர் தனது இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருக் கிறார்.

அன்று ஈழத்தில் வெளியான ‘மறுமலர்ச்சி’, ‘பாரதி’ போன்ற பத்திரிகைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தமிழில் அவற்றின் தாக்கத்தையும் குறிப்பிடுகிறார்.   அவற்றை வெளியிட்டு வந்த அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தம் ஆகியோரை மையமாகக் கொண்டே அன்றைய ஈழத்து நவீன இலக்கியம் தோன்றி வளர்ந்தது.  ‘ஈழகேசரி’ப் பத்திரிகை முக்கியமான சமகால ஏடாகும்.

அடுத்து, “ஆறுமுக நாவலரது சமய, இலக்கியப் பணிகளை எடுத்துக் கூறுவோர், அவர் சைவத் தையும் தமிழையும் மீண்டும் தழைக்க வைத்த பெரியார் என்று கூறுவர்” என்பதையும் குறிப்பிடு கிறார்.

“கிறித்துவருக்குத் தமிழைப் போதித்தது மட்டு மல்லாது விவிலியத்தையே தமிழில் மொழி பெயர்த்தவர் நாவலர்.” இதுபோன்ற அரிய செய்திகளை இவர் இதில் பதிவு செய்கிறார்.

“ஈழத்து இலக்கிய வரலாற்றை விளங்கிக் கொள்வதில் தமிழ் பேசும் மக்களின் பரம்பல் பற்றிய அறிகை பெரிதும் உதவும்.  ஏனெனில் ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை என்ற கோஷம் இந்தப் பிரதேச வாழ்க்கையை அடியாக மேற் கிளம்பியதே.”

உலக வரலாற்றில் தொடர்ந்து ஆளும் வர்க்கங் களின் வாழ்க்கையும், பிரச்சனைகளும் உள்ளடக்க மாகக் கொண்டு கலை, இலக்கிய வடிவங்கள் தோன்றுவதும், வளருவதும் நிலைத்திருப்பதும் மரபாக இருந்து வருகிறது.  மண் சார்ந்து உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைகள் குறைந்த, வானமே கூரையாகக் கருதி வாழ்ந்த உழைக்கும் மக்களின் கலை, இலக்கியங்கள் வாய் மொழி வடிவங்களிலேயே இருந்து வந்தன. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும், சோசலிச நாடுகளின் தோற்றங்களிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள் கலை, இலக்கிய வடிவங் களைப் பெற்றுப் பரவலாக விரிந்தன.

இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, பிரெஞ்சு இருத்தலியல் தத்துவஞானியான ஜீன் பால் சார்த்தர் இலக்கியத்தைப் பற்றிய பொதுவான ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்; “இதுவரை உலக அளவில் எழுதப்பட்டுவரும் இலக்கியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கங்களைப் பற்றிய வாழ்க்கையை, நடுத்தர மக்களுக்காக, நடுத்தர வர்க்க நலனுக்காக, நடுத்தர வர்க்கத்தினரால் எழுதப்பட்டு வருகின்றன.”

அதைப் போலவே, சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெருடா தன்னுடைய கருத்தையும் வெளியிட்டார்.  “நான் ஏழைகளைப் பற்றி ஏழை களுக்காக, ஏழைகளின் நல்வாழ்வுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

இன்றைய நிலைமைகளிலும் பெரும்பாலான கலை, இலக்கியங்கள் மேல்தட்டு வர்க்க நலன் களுக்காக, மேல்தட்டு வர்க்கத்தினரால் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

இதை உணர்ந்த முற்போக்குக் கலைஞர்கள் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, உழைக்கும் மக்களின் நன்மைக்காக, உழைக்கும் மக்களின் மொழியில் கலை, இலக்கியங்களை வடிவமைத்து மனிதப் பண்பாட்டை வளர்த்து வருகிறார்கள்.  உலகளாவிய அளவில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை இனம் கண்டு கொண்ட இந்த வகையான கலை, இலக்கியப் படைப்பாளிகள் உழைக்கும் மக்களை முன் நடத்திச் செல்லத் தொடர்ந்து தங்களது ஆக்கங்களின் வாயிலாக முனைந்து வருகிறார்கள்.

அதன் ஒரு வெளிப்பாடாக கா.சிவத்தம்பி அவர்கள் தனது திறனாய்வின் வாயிலாக மண் வாசனை நிறைந்த கலை இலக்கியங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஊக்குவிக்கிறார்.

ஆறுமுக நாவலர் காலத்தில் (1822-1879) ‘சைவமும் தமிழும்’ என்ற உரத்த குரல் ஈழத்து வடபகுதியின் சமூக அரசியல் தேவைகளை - ஒரு வரலாற்றுத் தேவையினைப் பூர்த்தி செய்வதாக இருந்ததையும் இவர் விளக்குகிறார்.

தொடர்ந்து நாவலரின் முக்கிய இலக்கியத் தொழிற்பாடுகளைப் பின்வரும் விதத்தில் பட்டிய லிட்டுக் காட்டுகிறார்.

பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப் பித்தமை; பண்டைய தமிழ் நூல்களுக்கு உரை எழுதியமை; பாடப் புத்தகங்களை எழுதியமை.

இவை யாவுமே ஈழத்தில் தமிழ்க் கல்வி ‘சைவமும் தமிழும்’ என்ற வட்டத்துக்குள் தேசிய நிலைமையை ஏற்படுத்த உதவியவை.

நாவலர் காலத்து வாழ்ந்த உடுப்பிட்டிச் சிவ சம்புப் புலவர், வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் வைத்தியலிங்கம் பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோர்களது இலக்கியப் பணிகளும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்தனவாம்.

தொடர்ந்து, இலங்கையின் தமிழ் நாவல் இலக்கியம் தோன்றிய காலப் பின்னணியைச் சுட்டிக்காட்டுகிறார்.  அதில், துரையப்ப பிள்ளை அவர்களின் புதிய பார்வையையும், புதிய கருத்துக் களையும் இவர் அடையாளப்படுத்துகிறார்.

இலங்கையில் வளரத் தொடங்கிய நாவல் இலக்கிய முயற்சிகளையும், அதன் முன்னோடி களையும், அவற்றிற்குரிய பின்னணிகளையும் குறிப் பிட்டுக் காட்டுகிறார்.  மங்கல நாயகம் தம்பை யாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ (1914) பி.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் ‘காசிநாதன் - நேசமலர்’ (1924) கோபால நேசரத்தினம் (1928) முதலியவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தன.

பழையன கழிந்து, புதியன புகும் இக்கால கட்டமே இலங்கையின் சிறுகதை, நாவல், பத்திரிகைத் துறை என இலக்கிய வரலாற்றில் முக்கியமாகின்றது.  இக்காலகட்டத்தில் முக்கிய இடம்பெறுவோரைப் பின்வருமாறு மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.  ஆங்கிலக் கல்வி வழியாக ஆக்க இலக்கியத்திற்கு வந்தோர், தமிழ்க் கல்வி வழியாக ஆக்க இலக்கியத் திற்கு வந்தோர், முற்போக்கு இலக்கியக் கோட் பாடுகளைத் துணிகரமாக முன்வைத்தோர்.

முதலாவது பிரிவினருக்கு எடுத்துக்காட்டாக இலங்கையர் கோன், சி.வைத்தியலிங்கம் ஆகி யோரையும், இரண்டாவது பிரிவினருக்கு எடுத்துக் காட்டாக அ.செ.முருகானந்தத்தையும், மூன்றாவது பிரிவினருக்கு அ.ந.கந்தசாமி, கே.கணேஷ் ஆகி யோரையும் இவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

இக்கால கட்டத்தில் இலங்கையில் ஆக்க இலக்கியம் கிளைக்கத் தொடங்கியது.  எனினும், அடுத்துவரும் 1954-70காலப் பிரிவிலேயே அது தனித்துவமுடைய இலக்கிய வளமாக மலர்கிறது என்பதையும் இவர் இனம் காண்கிறார்.

மேலும், புனைகதை, கவிதை, நாடகம் போன்றவை ஈழத்தில் தோன்றி வளர்ந்து தனித் தன்மையை நிலைப்படுத்திக் கொண்ட நிலைமை களையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார் இவர்.

தொடர்ந்து, ‘1970க்குப் பின் ஈழத்திலக்கி யத்தில் தோன்றிய முக்கிய வளர்ச்சி நெறிகள்’ பற்றிய பின்னணியை இவர் அடையாளப்படுத்து கிறார்.  ‘வீரகேசரிப் பிரசுரங்கள்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முயற்சிகளையும், வளர்ச்சியையும், விளைவுகளையும் அடையாளப் படுத்திப் புதிய இலக்கியங்கள் தோன்றிய விதத் தையும் குறிப்பிடுகிறார்.

தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் ஈழத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அறிய முடிகிறது.  அத்துடன் ஈழத்துப் படைப்பாளிகள் தமிழக இலக்கியப் பத்திரிகைகளில் தங்களுடைய படைப்புக்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றன.  இலக்கிய அடிப் படையில் ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் இருந்து வந்த உறவு விரும்பத்தகுந்ததாகவே இருந்தது என்பதை இவர் புலப்படுத்துகிறார்.

“தமிழின் அண்மைக்கால இலக்கியம்”, “பண் பாட்டு ஒருங்கிணைப்பு” என்ற இந்த இரண்டு பிரச்சினைகளையும் இணைப்பது சற்று அசாதாரண மான ஒரு நிகழ்ச்சியே ஆனால், இது நிச்சயமாகக் கிளப்பப்பட வேண்டிய பிரச்சினையாகும்.  இந்தப் பிரச்சினை கிளப்பப்படுவதும் நேர்மையான பதில் தரப்படுவதும் அவசியமாகும்.  இதைக் காலத்தின் ஒரு கட்டாயத் தேவையாகவே இவர் வலியுறுத்து கிறார்.

இலங்கையில் தமிழிலக்கியத்தின் அண்மைக் காலப் போக்கும், கலாச்சார ஒருங்கிணைப்பும், ‘புலம் பெயர் தமிழர் வாழ்வு’ போன்ற கட்டுரையின் வாயிலாக ஈழத்துத் தமிழர் வாழ்க்கையில் அடங்கி யுள்ள சமுதாய, கலாச்சாரப் பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் போன்றவற்றைத் தெளிவாகவும், துல்லியமாகவும் விளக்குகிறார்.

வளர்ச்சிக்குரிய கண்ணோட்ட அடிப்படையில் ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்’ மற்றும் ‘ஈழத்துத் தமிழிலக்கியத்தில் முற்போக்குவாதத் தொழிற்பாடுகள்...’ போன்ற கட்டுரைகளின் வழியாக ‘ஈழத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’யை இவர் இனம் காண்கிறார்.

மேலும், ‘ஈழத்தில் தமிழ் இலக்கிய விமர்சனம்’, ‘புதிய சவால்கள்’, ‘புதிய பிரக்ஞைகள்’, புதிய எழுத்துக்கள், ‘தலித்’, ‘தலித் இலக்கியம் என்ற வகைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா?’, ‘ஈழத்தில் மார்க்சிய விமர்சன செல் நெறிகள்’ போன்ற கட்டுரைகளின் வாயிலாக இவர் இன்றைய ஈழத்தின் இலக்கியப் போக்குகள் குறித்துத் திறனாய்வு செய்கிறார்.

கடைசியாக, பின்னிணைப்புக்களின் வாயிலாக இலக்கியம், விமர்சனம், இலக்கிய வரலாறு இவற்றின் அடிப்படையில் உயிர்ப்பான அரசியல் போன்றவற்றை நிகழ்காலத்திற்கு உரிய வகையில் தெளிவுபடுத்துகிறார்.

ஓர் அணுவின் கருவில் அளவற்ற ஆற்றல் உள்ளடங்கியிருப்பதைப் போல, ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம்’ என்ற வரலாற்று நூலில் ஏராளமான செய்திகள் அடங்கியுள்ளன.  இலக்கிய ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் விதத்திலும், ஆய்வாளர்கள் பயனடையும் வகையிலும் மிகத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது இந்த இலக்கிய வரலாற்று நூல்.

திறனாய்வுக் கலை குறித்த இவரது மதிப் பீட்டைத் தெளிவாக இலக்கிய ஆர்வலர்களின் முன் வைக்கிறார்.  இது, இலக்கியத்தைப் பயில் வதற்கு ஒரு வழிமுறையாக அமைந்துள்ளது. இலங் கையின் நிலைப்பாட்டை விளக்க முன்வந்த இவர் தனது கருத்துக்களை இப்படிக் குறிப்பிடுகிறார்:

“தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பன்முகப் பட்ட பல்தேச நிலைப்பட்ட சமகால வளர்ச்சியில், இலங்கை - விமர்சனத் துறையில் முன்னணியில் நிற்கின்றமை யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் உண்மையாகும்.”

“இலங்கையினது விமர்சனத்துறை முதன்மையும் விமர்சனத்துறைக்கு இலங்கையில் வழங்கப் பெறும் முக்கியத்துவமும் எவ்வாறு ஏற்பட்டுள்ளன என்பதை நோக்கல் வேண்டும்.  உயர் தமிழ் இலக்கியக் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் ஆதாரமாக அமையும் விமர்சனநூல்கள் இலங்கையரால் எழுதப் பட்டு வரும் பண்பு கனக சபைப் பிள்ளையின் ‘1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர்’ என்ற நூல் முதல் நின்று நிலவி வருகின்றது என்பது கண்கூடு.

“இதைவிட முக்கியமானது விமரிசன நூல்கள் ஆராய்ச்சிகள் இலங்கையில் தோன்றுவதற்குக் காரணமாக உள்ள இலக்கியப் பயில்நிலைப் பின்னணியாகும்.”

ஈழத்தில் தமிழ் இலக்கியம்
கார்த்திகேசு சிவத்தம்பி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
` 240/-

Pin It