தமிழ்நாட்டு மக்களின் துன்ப துயரங்களை தன்னுடைய கவிதையால் காவியமாக்கிய கவிப்பேரரசு அந்தப் பணியைச் செம்மையாக செய்து முடித்துவிட்டு, பேனாவுடன் ஈழத்திற்குப் பயணப்பட்டிருக்கின்றார். தன்னுடைய பெற்றோர்களையும், சகோதர சகோதரிகளையும், சொந்த பந்தங்களையும், தாம் வாழ்ந்த நிலங்களையும், உடைமைகளையும் இழந்துவிட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே அநாதைகளாக வாழும் அந்த மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கின்றது ஈழமகா காவியம் எழுதப் போவதாக வைரமுத்து அறிவித்து இருப்பது!.
ஈழத்தில் உச்சகட்ட போர் நடந்தபோது பல ஈழ ஆதரவுத் தோழர்கள் தங்களுடைய உயிரையே மாய்த்துக் கொண்டு அந்த மக்களுக்காக மடிந்தார்கள். ஈழப் பிரச்சினையை இந்திய அரசியலில் மையப் பிரச்சினையாக அவர்கள் கொண்டுவந்தார்கள். தங்கள் இறப்பின் மூலம் இந்திய அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தினார்கள். ஒட்டுமொத்த தமிழகமே ஈழத்தமிழ் மக்களுக்காக தெருவில் இறங்கி போராடியது. அப்போது நம்முடைய கவிப்பேரரசு என்ன செய்தார்? தன்னுடைய பேனாவால் கருணாநிதியுன் முதுகை சொறிந்துகொண்டு இருந்தார். முள்ளிவாய்க்கால் போர் உச்சத்தில் இருந்த போது தசாவதாரம், அபியும் நானும், கண்ணும் கண்ணும் போன்ற படங்களுக்குப் பாட்டெழுதி கல்லா கட்டிக்கொண்டு இருந்தார்.
ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று போட்டுச் சுடுகாட்டிற்கு அனுப்புவதற்கு பேருதவி புரிந்த ரத்தக்கறை படிந்த இந்திய அரசின் கரங்களில் இருந்து 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் ‘கள்ளிக்காட்டில்’ என்ற பாடல் எழுதியதற்காக 2011-இல் இந்த தமிழின துரோகிக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மானமுள்ள இந்தத் தமிழன் அதையும் மனமுவந்து வாங்கிக் கொண்டார். பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்க தகுதியில்லாத இந்த தேவர்சாதி வெறியருக்கு 2008-இல் பெரியார் படத்தில் பாடல் எழுதியதற்காக கருணாநிதி அரசால் சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஒரு கவிஞனின் நேர்மையை அவனது செயல்பாடுகள் மூலமாகத்தான் நாம் மதிப்பிட முடியும். சொல்லொன்றும் செயலொன்றும் இருக்கும் பல கவிஞர்கள் தமிழ்ச் சூழலில் அம்பலப்படுத்தப்பட்டு அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த வரிசையில் வைரமுத்து மட்டும் விதிவிலக்கல்ல. பல மோசமான சமூக அக்கறையற்ற பிற்போக்கு முட்டாள் பயல்கள் எல்லாம் தன்னை கவிஞர்களாக அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ்நாட்டில் அந்தக் கழிசடைகளுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக அரசியல் கட்சிகள் இருந்தன. ஒரு பக்கம் கேவலமான, வக்கிரம் பிடித்த திரையிசைப் பாடல்களின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களை நாசமாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்த ஆபாசக் கவிஞர்கள் எல்லாம் மற்றொரு பக்கம் தங்களுடைய புகழை உயர்த்திக்கொள்ள அரசியல் கட்சிகளைச் சார்ந்து ஜால்ரா போட்டார்கள். இதன் மூலம் தேசிய விருதுகளையும், சாகித்திய அகாடமி விருதுகளையும், பத்மபூசன் விருதுகளையும் பெற்றுத் தங்களை மேன்மையானவர்களாக வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
தேர்தல் அரசியல் கட்சிகளைச் சார்ந்து தமிழ்நாட்டில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட கவிஞர்களில் அதிக அளவில் பயனடைந்தது வைரமுத்துவாகத்தான் இருக்கமுடியும். பல நல்ல பாடலாசிரியர்கள் தமிழ்த்திரை உலகில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட்டதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் வைரமுத்து அவர்கள். தன்னுடைய தி.மு.க சார்ந்த அரசியல் பலத்தால் பல பேரின் வாய்ப்புகளை தட்டிப் பறித்தார். தமிழ்நாட்டு இளைஞர்களை இவர் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது போதாது என்று தன்னுடைய புத்திரனையும் மாமா வேலை பார்க்க இப்போது நேர்ந்து விட்டுள்ளார்.
வைரமுத்து என்ற கவிஞன் தமிழக மக்களுக்கு எப்போதாவது உண்மையாக நடந்து கொண்டிருக்கின்றாரா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை அப்படி ஒன்றும் நமக்குத் தெரியவில்லை. அவரால் தமிழ்நாட்டு மக்கள் பெற்றது கொஞ்சம்; இழந்தது அதிகம். 2009 ஆண்டு ஜனவரி மாதம் ‘என் தம்பி வைரமுத்து’ என்ற கருணாநிதியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து "இன்றைக்கு கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்று செய்தி வருகின்றது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ்ச் சகோதரி அங்கு அடிபடுகிறபோது எனக்குக் குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை. கிளிநொச்சி வீழலாம்; ‘கிலி’ வீழலாம்; ஆனால் புலி வீழமாட்டார்கள். அவனும் சேர்ந்து தான் தமிழர். அவன் நம் ரத்தத்தின் நீட்சி, அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது”.
“நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அங்கே போர்முனைக்குச் செல்லுமாறு வேண்டிக் கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை” என்று பேசினார். எவ்வளவு சாதுர்யமான பேச்சு என்று பார்த்தீர்களா? ஒரு இடத்தில் கூட போருக்கு துணைநின்ற இந்திய அரசைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படி இல்லாததால் தான் காங்கிரஸ் அரசிடம் இருந்து 2011-இல் இனாமாக தேசிய விருதை வாங்கிக் கொண்டார். குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ 2009-இல் மிகவும் சிரமப்பட்ட வைரமுத்து. ஆனந்த தாண்டவம், அயன், இந்திரவிழா, கந்தசாமி போன்ற படங்களில் சில குத்துப்பாடல்களை எழுதி தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டார்.
ஈழத்தமிழ் மக்கள் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ள வைரமுத்து ஈழத்தமிழ் மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார்?ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன வகையான அரசியல் தீர்வை வைரமுத்து வைத்திருக்கின்றார்? எப்போதாவது சொன்னதுண்டா? அல்லது சொல்லும் தைரியம் தான் உண்டா? மொக்கைப் பேர்வழி! விருது கிடைக்கும் என்றால் வடநாட்டுப் பார்ப்பான் தருண்விஜய்க்கு மட்டும் அல்ல. எவனுக்கு வேண்டும் என்றாலும் பாராட்டு விழா எடுப்பார், இந்த பிழைப்புவாதி வைரமுத்து.
ஈழத் தமிழ் மக்களுக்காக எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் உயிரைக் கொடுத்துள்ளனர். உண்மையாக, நேர்மையாகப் போராடி உள்ளனர். அதற்காக சிறைபட்டிருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் கெளரவிக்கத் துப்பில்லாத விக்னேஷ்வரன் போன்ற இனத் துரோக அரசியல்வாதிகள் இந்த இனத் துரோகியை அழைத்து உழவர் பெருவிழா கொண்டாடி இருப்பது ஈழத் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
வைரமுத்துவை கூப்பிட்ட பாவத்திற்கு அவர் அங்குபோய் என்ன பேசினார் என்று பாருங்கள். “இந்த தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கின்றேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறோன்……"
“…. விழா தொடங்கும்போது வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது. பெருமழையே வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள். எந்த மழை வந்தாலும் தமிழர்கள் கலைய மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள் இந்த இடி மழையிலா கரைந்து போவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். வந்த மேகம் போய்விட்டது…….”.
“…. யாழ்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும், முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன்……”. “…ஈழ மகா காவியம் என்ற ஒன்றை எழுதி முடிப்பதைத் தான் என் வாழ் நாளில் பெரும்பணியாக கருதிக் கொண்டிருக்கின்றேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன்…..”.
எப்படி வைரமுத்துவை கல்லால் அடிக்காமல் அந்த மக்கள் சும்மா விட்டார்கள் என்பதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கின்றது.
லட்சக்கணக்கான மக்களை கொன்று போட்ட சிங்கள அரசுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட இல்லை. அங்கே இன்னும் தமிழ்மக்கள் முழுவதும் மீள் குடி அமர்த்தப்படவில்லை; போரின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலரும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருக்கின்றார்கள். போரின்போது காணாமல் போனவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் வாய்பேசத் துப்பில்லாத வைரமுத்து கண்ட கருமத்தை எல்லாம் வாந்தி எடுத்து தனது கவிப்புலமையைக் காட்டி இருக்கின்றார். இந்த வைரமுத்து ஈழமகா காவியம் எழுதினால் எப்படி இருக்கும், நினைத்தாலே அருவருப்பாக இருக்கின்றது. அது ஈழ மகா காவியமாக இருக்காது; அது வைரமுத்து என்ற பிழைப்புவாதியின் உளறல் காவியமாகத்தான் இருக்கும்.
கருணாநிதி தலைமை தாங்கி மன்மோகன்சிங் முதல் பிரதியை வெளியிட ராஜபக்சே ஒரு நூலை பெற்றுக்கொண்டால் அந்த நூல் எவ்வளவு கேவலமான நூலாக இருக்குமோ அவ்வளவு கேவலமாக இருக்கும் வைரமுத்து ஈழமகா காவியம் எழுதினால்...
- செ.கார்கி