“தமிழ் சண்டைக் கதை இப்பொழுது முள்ளிவாய்க்காலில் முடிந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு சோகமான முடிவு இது! கால் நூற்றாண்டுப் போராட்டத்தில் எதுவுமே மிஞ்சவில்லையென்பது வரலாற்றுச் சோகமல்லவா? சகல தேசிய இனப் போராட்டங்களின் வரலாற்றிலும் இது ஒரு அழுந்தப் படிந்த கறை. இவ்வாறாக, ஒரு யுத்தம் எங்குமே தோற்கக் கொடுக்கப்பட்டதில்லை. ”

“அது தோற்காமல் கொடுக்கப்பட்டதென்கிறாய்... ?”

“ஆம். அவர்கள் ஒரு வெற்றியை... ஓரளவு வெற்றியை... அடைந்தே இருந்தார்கள். அரசியலில் சரியான தந்திரமின்மையால் அதை தோல்விக்குக் கொடுத்தார்கள். ”

- தேவகாந்தனின் “கலிங்கு” நாவலில் பக். 404-ல் நிகழும் உரையாடல்.

“மதமேதான். இங்கே மதம்கூட இல்லை. பௌத்த மடங்கள். அபயகிரி, ஜேத்தவன ஆகிய இரண்டு மத நிறுவனங்களின் ஒற்றை அமைப்பு. அதுவே ஸ்ரீலங்காவின் அதிகார மய்யம். வரலாற்றினை மாற்றி இயக்கிக் கொண்டிருக்கின்ற மகாசக்தி அதுவேதான். ”- பக். 407, கலிங்கு

kalingu devagandhanஇலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் இடையிலான உறவு மிகவும் நுட்பமானது. இலக்கியம் வரலாற்றின் ஓர் சாட்சியமாக மட்டும் இருப்பதில்லை. வரலாற்றின் உணர்வார்ந்த பக்கத்தை அந்தக் காலத்திற்குக் கொண்டு சென்று உணரவைக்கும் ஒரு ஆற்றல் புனைவு இலக்கியங்களுக்கு உண்டு. ஒருவகையில் வரலாறாக அறியப்படுவது இலக்கியங்களின் துணைகொண்டும், இலக்கியமாக அறியப்படுவது வரலாற்றிற்குள் வைத்தும் வாசிக்கப்படுகிறது. வரலாறு வென்றவர்களின் கதை மட்டுமல்ல, வீழ்ந்நதவர்களின் கதையும்கூட. புதுவரலாற்றுவாதம், வரலாறும் இலக்கியமும் தன்னளவில் இரண்டு பிரதிகள். அவை ஒன்றை ஒன்று நிறைவு செய்துக் கொள்ளக்கூடிய பிரதிகள் என்கிறது. இலக்கியம் வரலாற்றை உணர்த்தும், வரலாறே இலக்கியமாகவும் உணரப்படும். வரலாறு அந்தந்தக் கால அதிகார வர்க்கம் மற்றும் ஆளும் வர்க்கம் தனக்காக உருவாக்கிக் கொள்ளும் ஒரு பிரதியாக்கம். அப்பிரதியாக்கத்தினை நிகழ்கால அரசியலில் வாசிக்கும் போது, அவ்வரலாறு நிகழ்கால அரசியல் பிரதியாக மாற்றம் கொள்கிறது. அப்படியான ஒரு நாவல் பிரதியே தேவகாந்தன் அவர்களின் “கலிங்கு”. 2003 முதல் 2015 வரையிலான இலங்கை, தமிழீழப் பகுதிகளைக் களமாகக் கொண்ட, தமிழீழப் போராட்டம் நிகழ்ந்த அச்சமூகத்தின் சாமான்ய மக்களின் வாழ்வியல் போராட்டம் வழியாக அந்த வரலாறு குறித்த ஒரு பிரதியாக்கமே இந் நாவல். 644 பக்கங்களைக் கொண்ட இந்நாவல் ஈழப்போரின் ரத்தமும் சதையுமான 12 ஆண்டுகளை நமது கண்முன் கொண்டுவந்து நிறுத்த முனைகிறது. ஒரு பெரிய கேன்வாஸில் தீட்டப் பட்டுள்ள அகமும், புறமும் உருவாக்கிய காதல் மற்றும் போர் எந்திரங்களின் உயிர்ப்புள்ள ஓரு வாழ்வே “கலிங்கு”.

2003 யுத்த நிறுத்த காலத்தில் தொடங்கும் இந்நாவல் 5 காலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு நகர்கிறது. இந்த நாவலின் அடிப்படைப் படிமம் “கலிங்கு”. கலிங்கு என்பதை மதகு, ‘shutters’ என்று கூறலாம். அதாவது, கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளில் நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்குக் கற்களை அல்லது பலகைகளை அல்லது மணல் மூட்டைகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் ஒரு தடுப்புக் கட்டுமானம் ஆகும். இதன் மூலம் நீரின் போக்கைக் கட்டுப்படுத்தி அதனை ஒழுங்கமைக்க முடியும். பாய்ந்து வரும் நீரை அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீரை தேவைக்கு ஏற்பத் திருப்பிவிடவும், பயன்படுத்தவுமான ஓர் அமைப்பு. நீரை ஒழுங்குபடுத்தும் கலிங்கு, தமிழீழ வரலாற்றில் ஒரு படிமமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது இந்நாவலில். அதாவது, தமீழீழப் போராட்டம் என்ற பெருகி வந்த ஒரு காட்டாற்று வெள்ளத்தை எப்படி அரசியல் கலிங்குகள் மடைமாற்றின என்பதே இந்நாவல். போரின் அரசியல் பற்றியது அல்ல, அரசியல் நிகழ்த்திய போர் பற்றியது.

நாவலில் அப்படியான ஐந்து கலிங்குகள், அதாவது மடைதிறப்புகள் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

(1) 2003 யுத்த நிறுத்த காலம்

(2) 2006 புலிகளிடமிருந்து கருணா பிரிந்து சென்றது

(3) 2009 யுத்தம் தொடக்கம் - கிழக்கின் வீழ்ச்சி, முள்ளிவாய்க்கால் படுகொலைகள், யுத்த முடிவு

(4) 2012 யுத்தத்திற்கு பிந்தைய காலம், முகாம் வாழ்க்கை

(5) 2015 மீள் குடியேற்றம் - புலம்பெயர்தல்

இக்காலங்கள் மூன்று மூன்று ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், தமிழீழ யுத்தத்தின் வாழ்வியல், சமூகம், அரசியல், வரலாறு சார்ந்த அனைத்து பரிமாணங்களையும் இந்நாவலின் உள்ளார்ந்த தர்க்கத்திற்கு ஏற்பக் காட்டிச் செல்கிறது. எந்த ஒரு யுத்தத்தையும் சந்திக்காத தமிழ்நாட்டுத் தமிழர்களான நமக்கு, ஒரு யுத்தம் சார்ந்த நிலத்தின் வாழ்வியலை அதன் யதார்த்தத்துடன் மிக நுட்பமான கதையாடல்கள், உள்ளார்ந்த பல புரிதலை உருவாக்கும் உரையாடல்கள் வழி நாவலை விறுவிறுப்பாக நடத்திச் செல்கிறார் தேவகாந்தன். அவரது அரசியல், மெய்யியல், வரலாறு, மொழியறிவு ஆகியவை இந்நாவலில் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்து சைவக் கடவுள் கதைகள், நாட்டார் நம்பிக்கைகள், சிங்கள பௌத்தக் கதைகள், புராணங்கள் எனப் பல பரிமாணங்களை ஆங்காங்கே மிகவும் தனது பரந்த அறிவாற்றலைப் பயன்படுத்தி நாவலின் வாசிப்பின்பத்தைக் கூட்டுகிறார். இந்நாவலின் தனித்துவம் என்னவென்றால், சிங்களர்களிடம் உருவான மார்க்சிய சேகுவேரா பாணியிலான ஜேவிபி இயக்கம் எப்படி அழிக்கப்பட்டு அது சிங்களப் பேரினவாத அமைப்பாக மாறியது என்பதும், பௌத்த தலைமைக் குருமார்கள், சிங்களர்கள் இடையே நிகழ்ந்த பல வரலாற்றுக் குறிப்புகளை, சில கதைப் பாத்திரங்களை உருவாக்கி ஈழப்பிரச்சனையின் பின்னணியில் உள்ள பெருந்தேசிய வெறிக்கும் பௌத்த பேரினவாதத்திற்கும் உள்ள உறவும் ஆராயப்பட்டுள்ளது. உலகளாவிய கம்யுனிச புரட்சிகளின் வீழ்ச்சிக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தேசிய விழிப்புணர்வு கதையாடல்கள், இன, மதவாதச் சொல்லாடல்களின் அரசியல் பின்புலம் மக்களை வீழ்த்தி அதிகார, ஆளும் வர்க்க்த்தைக் காத்த இலங்கை நிலப்பரப்பின் ஒரு கால-வெளிப் புனைவே “கலிங்கு”.

நாவலின் ஒரு பகுதி சிங்களப் பகுதியில் நிகழ்கிறது. அங்குள்ள சிங்கள தமிழ் உறவும் அதில் உள்ள இணக்கமும், கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கப்படுவதும் வாசித்த பின்னும் மனதில் காட்சிகளாக உறையும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. சிங்கள ஜேவிபியின் வரலாறும், தமிழீழ வரலாறும் குறித்த பின்னணியில் அமைந்த ஆளும் வர்க்கப் பொருளியில் நலன் என்பதை ஒரு மார்க்சியப் பார்வையில் அணுகும் முயற்சியை இந்நாவலில் காண முடிகிறது. வன்னிப் பகுதிக்கும், அல்வாய் என்ற பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டை நாவலின் முக்கியமான பாத்திரங்களான சாமியும், நிலாவும் உரையாடும் பகுதியில் சாமி சொல்கிறார் “ நீ சொல்றது ஓரளவுக்குத்தான் சரி. அங்க போனவுடன் அந்த வெளிக்கேத்த விடுதலைத் தன்மை அவைக்கு மெல்லமெல்லமாய் வரத் துவங்கியிடும். வெளியை எண்டைக்கும் மனிசன் மாத்தினதில்லை. வெளிதான மனிசனை மாத்தியிருக்கு. ” (ப. 75). மார்க்ஸ் தனது 'அரசியல் பொருளாதாரத்திற்கான விமர்சனப் பங்களிப்பு' என்ற நூலின் முன்னுரையில் கூறும் வாசகம்&வாழ்நிலைதான் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது, மாறாக, உணர்வுகள் வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை என்பது இந்தக் கூற்றைப் பிரதிபலிக்கிறது மேற்கண்ட உரையாடல். இந்நாவல் யதார்த்த சூழல், மனிதர்களை எப்படி மாற்றியமைக்கிறது அதிலும் ஒரு யுத்தச் சூழல் உருவாக்கும் உணர்வுகளின் அலைக்கழிப்பு, மெய்­யியல் சார்ந்த விகசிப்பு ஆகியவை நாவலின் உள்ளார்ந்துள்ள ஒரு பொருள்முதல்வாதப் பார்வையை முன்வைப்பதாக உள்ளது.

ஒரு பெருவெள்ளம் பற்றிய வருணனையுடன் தொடங்கி, கலிங்குகள் திறந்து தற்காலிக வெள்ள நிவாரண தங்கு முகாமிலிருந்து திரும்பி வந்த 1973ஆம் ஆண்டுக் கதையுடன் தொடங்கும் நாவல், அதை ஒரு முன்னோட்டமாக, வெள்ளம், கலிங்கு, நீரை ஒழுங்கமைத்தல், அகதி முகாம் என்பதற்கான அறிமுகக் குறிப்பாகத் தந்துவிட்டு 2003&ல் தொடங்குகிறது. யுத்த நிறுத்தக் காலத்திலும் ஈழத்தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் வன் பாலுறவிற்கு உட்படுத்தும் நிகழ்வுகள், அதுகுறித்த பெண்களின் பேச்சுகள் என துயரத்தின் வலியை உணர்த்தியபடி உள்ளது. ஓர் ஆமிக்காரனிடம் தான் விட்டுக் கொடுத்துவிட்டேன் என்று கூறும் ஒரு பெண், விரும்பிக் கொடுத்தலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உள்ள தூரத்தைப் பேசுகிறாள். இந்நாவலின் ஒரு சில பாத்திரங்கள் முழுவதுமாக வந்து போனாலும், எண்ணற்ற பாத்திரங்கள் கதைநெடுகிலும் உலவுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துயரத்தைச் சுமந்தவர்களாக உள்ளனர். ஒரு நிலப்பரப்பில் நிகழ்ந்த எண்ணற்ற காட்சிகளின் கலவையாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. தனிமனிதர்களின் துயரமாக இந்நாவல் வடிக்கப்படவில்லை. ஒரு சமூகத்தின் துயரமாக விரிகிறது.

இது வெறும் தமிழீழம் குறித்த நாவல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையின் அரசியல், அதிகாரம், மதம், இனம், மொழி குறித்துப் பேசும் நாவல். யுத்தத்தின் கண்ணீர் மட்டுமல்ல, அதற்குக் காரணமாக அமைந்த அரசியல் உள்ளோட்டங்களை உணரவைக்கும் பல கதைக் கூறுகளால் கட்டப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது சிங்கள சமூகத்தின் முற்போக்கு இயக்கமாக உருவான ரோஹன விஜயவீராவின் “ஜனதா விமுக்தி பெரமுனா” எப்படிச் சிங்கள ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு, விஜயவீராவைப் படுகொலை செய்து அந்த இயக்கத்தைப் பௌத்த ஆதரவு அமைப்புகள் கைப்பற்றி, இனவெறி அமைப்பாக மாற்றியது என்பதைச் சொல்லும் பகுதிகள் முற்றிலும் சிங்கள அரசியலின் ஒரு பகுதியை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சிங்களப் பாத்திரங்கள், இளம் புத்த துறவிகள் என மனிதநேயமிக்கவர்கள் சூழலால், அதன் சதி விளையாட்டால் சிக்கி இனவெறியர்களாக மாறுகிறார்கள். உண்மையில் சிங்கள முற்போக்கு இயக்கங்களின் குரல் வெற்றியடைவதை வீழ்த்த பௌத்த மகாசக்திகளைத் தூண்டிவிட்ட ஆளும் வர்க்கம், இனப்போராக அதனை மடைமாற்றியது இனவெறிக் கலிங்கைத் திறந்து. இங்கு கலிங்கு என்பது வரலாற்றின் ஒரு திறப்பு, ஒரு திசைவழி. இது ஒரு படுகொலையாக இருக்கலாம், கலவரமாக இருக்கலாம், ஒரு பாலியல் வன்புணர்வாக இருக்கலாம், ஒரு தெருச்சண்டையாக இருக்கலாம். இதுதான் நாவலின் குறியீட்டுத் தன்மையாக வெளிப்படும் முக்கிய இடங்கள்.

“உயர்ந்த ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்தவனுக்கு மேல், உடனடியாகக் கிளர்ந்தெழுந்து உந்துதலில் புரட்சியின் ஆதரவாளானாகியவன் நடத்தும் யுத்தமென்பது, ஒரு சூதில் நிகழ்த்தப்படுகிறது. அது ஒரு துரோகத்திலோ, காட்டிக் கொடுப்பிலோதான் முடிய எப்போதும் சாத்தியம் கொண்டிருக்கிறது. ” (ப. 114) என்று ஜேவிபியின் தோல்வியைக் கூறும் கதைக்குரல், அதைத் தொடர்ந்து நிகழந்த நிகழ்வுகளைக் தனது புனைவுப் பாத்திரங்கள் வழி வெளிப்படுத்திக் காட்டுகிறது. இது ஜேவிபிக்குச் சொல்லப்பட்டாலும், தமிழீழ விடுதலைப் போரிலும் இதுதான் நிகழ்ந்தது. ஒரு துரோகம், ஒரு காட்டிக் கொடுத்தல், ஒரு தனிமனித சாகசம், காலநிலைக்கு ஒவ்வாத சாகசப்போர் என ஓர் இனம் மீளாத் துயருக்குள் சிக்கிக் கொண்டுவிட்டதை இந்நாவல் வாசிப்பு உணர்த்துவதாக உள்ளது. அதன் உள்ளார்ந்த உளவியல் பரிமாணங்கள், அதில் சிக்கித் தவித்த மக்களின் மனமாற்றங்கள், வாழ்வை இழந்துவிட்ட நிலை என அனைத்தும் புனைவாக பதிவாகியுள்ளது.

நாவல் வெறும் யுத்தத்தின் விளைவான போர்ச்சூழலை மட்டும் பேசவில்லை. அதன் அக, புற மாற்றங்களால் உருவான மனிதர்களின் தன்னிலைச் சிதைவுகளை, உடற்சிதைவுகளை, காதல், உடலீர்ப்பு, இயக்கத்திற்குள் உருவாகும் நெருக்கம், நெருக்கடிகள் எனப் புனைவின் பல அடுக்குகள் இதில் ஊடுபாவாகப் பின்னப்பட்டுள்ளது. இதன் உள்ளார்ந்து வெளிப்படும் உளவியல் தளம் தனியாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

நாவல் பல கிளைக்கதைகளையும், நிகழ்வுகளையும் புனைந்தபடி நகர்கிறது. “நான் இருக்குற கதையைச் சொல்லுளவளில்லை. சொல்லுற கதையை இருக்க வைக்கிறவ. ” (ப. 158) என்று அக்கதைகளில் ஒன்று முள்ளிக் கிழவி சொல்லும் வன்னி குறித்த பழங்கதை. கதையை இருக்க வைக்கிற தன்மை என்பது, வரலாற்றின் கதைகூறலாக மாறிவிட்ட இனப்பெருமையை பற்றியதாகவும் இருப்பதை நாவல் தனது ஆழ்தளப் புரிதலாகக் கொண்டுள்ளது. அதாவது கதைகளால் கட்டப்படுவதே தேசங்கள். அக்கதைகள் வரலாறுகளாக பெயர்மாற்றம் பெறுவது இன்றைய அரசியல் சொல்லாடல் புலத்தில்தான். அதில் ஒன்று இனவாதக் கதையாடலுக்கான அடிப்படையை உருவாக்கிய துட்டகெம்னு கதை. அது நாவலுக்குள் வைத்துக் கதையாடப்படுகிறது. இந்தக் கதையை எழுதியவர் ஒரு தேரர். மகாவம்சம், இந்திய சமூகத்தில் இராமாயணம், மகாபாரதத்தைப் போல ஒரு முக்கியமான அரசியல் பிரதியாக இருப்பதை நாவல் உரையாடலுக்கு உட்படுத்துகிறது. எப்படி பௌத்த மதத்தை மடம் கட்டுப்படுத்தி, மகாசக்தியாக மாறுகிறது என்பதையும், அதற்கான கதையாடலையும் நாவல் விவரிக்கும் பகுதிகள் முக்கியமானவை.

பண்டார நாயகாவின் கொலைக்குப் பின் உள்ள புத்த பிக்குகள், அதன் சதியில் மடத்தின் பங்கு ஆகியவை விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இக்கதையைச் சொல்லும் பிக்கு சுது, அந்த மடத்தை விட்டு வெளியேறி விடுகிறார். யாழ்ப்பாணத்தில் சிங்கள கொடிகளைப் பறக்கவிடும் தூண்கள் அமைக்கப்படாமல் புத்த விகாரைகள் அமைக்கப்படுவதன் பின்னுள்ள மதவாத அரசியல் குறித்தும் விரிவாகப் பேசுகிறார். மதம் இந்த போரில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியதாக நாவல் ஒரு நீண்ட உரையாடலை முன்வைக்கிறது. ஆனால், இப்பகுதிகள் ஏற்புடைய கருத்தாக இல்லை என்பதைப் பதிவது அவசியம். ஒருபுறம் ஜேவிபி வர்க்கப் போரை திசை திருப்ப தமிழீழப் பிரச்சனை இனவாதமாகத் தூண்டப்பட்டது என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. மற்றொருபுறம் மதமே மூலகாரணம் என்றும், இந்து, புத்த மதப்போராக தமிழீழப் போராட்டம் மாறி­யிருந்தால் தமிழ் இளைஞர்களுக்கு வலுச் சேர்த்திருக்கும் என்று சிங்கள மனசாட்சியாக உள்ள பிக்கு சுதுவின் நீண்டவாதம் முன்வைக்கப்படுகிறது. கிறித்துவ ஜனாதிபதிகள்கூட புத்தராக மாறியபின்னே அதிபராக அமர முடிந்தது (ஜெயவர்த்தனே) என்பதையும் பேசுகிறார் சுது. இப்படி போரின் பலவேறு அரசியல். நிலைபாடுகள், குரல்கள் இந்நாவலின் குறுக்கு மறுக்குமாக வெளிப்படுகிறது.

நாவலின் கதையாடல் வெளி போர்க்காலத்தினதும், இறுதிப்போரின் பேரழிவின் பின்னைய காலத்துடனும் மட்டும் இணைக்கப்படவில்லை, பல்வேறு வரலாற்று நினைவுகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், பழங் கதைகள் ஆகியவற்றுடன் பிணைந்து இரசிய கோட்பாட்டாளரான மிக்கைல் பக்தின் கூறும் “க்ரோனோடோப்” (Chronotope), என்கிற கால-வெளிக்குள் (time-space) மாறும் ஒரு புனைவாக்க வெளியாக அமைந்துள்ளது. பக்தினின் கோட்பாடு நாவல்களின் காலமும், வெளியும் ஒண்றிணைந்து உருவாக்கப்படும் கதையாடல்களை ஆராய்கிறது. ஒரு நாவலுக்குள் காலமும் வெளியும் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்பதை அதன் கதையாடல் வழியாக வெளிப்படுத்தும் ஒரு கருத்தாக்கம் “க்ரோனோடோப்” என்பது. இந்நாவலே காலத்தை குறிப்பாக போர்க்காலத்தையும் அது உருவாக்கிய இலங்கை என்கிற வெளியையும் மிக மிக நுட்பமாகக் கட்டமைத்துச் செல்கிறது. தமிழீழத்தின், இலங்கையின் இயற்கைச் சூழல்களை விவரிப்பதாக இருக்கட்டும், அதன் திணைகளாக நெய்தல், மருதம் உள்ளிட்டவற்றைக் காட்சிப் படுத்துவதாகட்டும், பிற்காலத்தில் போரால் திணை திரிந்து பாலையாக மாறுவதாகட்டும், ஆசிரியர் தேவகாந்தனின் நுட்பமான பார்வை மட்டுமின்றி, அந்த கால \ வெளி பற்றிய அவரது அறிவாற்றல் பிரம்மிப்பைத் தருவதாக உள்ளது.

நாவல் பக்தினின் மற்றொரு கோட்பாடான பல்குரல் தன்மை (polyphonic voices) கொண்டதாக அமைந்துள்ளதால், ஒரு குறிப்பிட்ட கோட்பாடு, அரசியல் சார்பு இல்லை. பல்வேறு நியாயங்கள், அரசியல் முரண்கள், பழங்கதைகள், சார்புநிலைகள், வெவ்வேறு தலைமுறையின் பார்வை நிலைகள் எனப் பல குரல்களைப் பதிவு செய்வதாக உள்ளது. இடையில் விவிலியக் கதைகள் உருவாக்கிய முதல் புலப்பெயர்வு குறித்தும், அதற்கு ஈடானதொரு இலங்கைப் புலப்பெயர்வு நிகழ்ந்ததையும் குறிப்பிட்டுக் காட்டும் இடங்கள் ஒரு பெருந்துயர், வரலாற்றில் மாறாமல் நிகழ்ந்து வருவதைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. மனித புலப்பெயர்வுகள் வாழ்வைத் தேடிச் செல்வதற்கு மாறாக, வாழமுடியாத சூழலால் நிகழ்த்தப்படுவதும், அதிகாரத்தினால் அடித்து விரட்டப்படுவதுமான நிலை இன்றுவரை மாறவில்லை என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது.

“நவீன வரலாற்றின் அணிகலன்களெல்லாம் குலுங்கிச் சிதறின. நான்கு புறமும் சூழ்ந்த யுத்தத்தின் மத்தியில் அகப்படுத்தப்பட்ட இனக்குழுவொன்று, தன் முன்னோர்க் கடல் கோள்களிலும் கண்டிராத மகா அழிவுகளை சந்தித்தது. மரணம், வேதனை, துன்பம், பசி, குளிர், பிரிவு, இழப்பு, அங்கஹீனம், வலி... காலம் கண்மூடி இட்ட சாபம் அது. ” (ப. 413)

இங்கு காலத்தின் சாபம் என்பதான ஒரு குரலும், மேலே காட்டிய பல அரசியல், வரலாறு, இறையியல், மெய்யியல் சார்ந்த குரல்களும் என நாவலின் பாத்திரங்களின் பல குரல்கள் மட்டுமின்றி, கதைசொல்லியின் குரலும் பல்வேறு கால வெளிச் சூழலால் கட்டப்பட்டதாக அமைந்துள்ளது. 2009 என்ற பகுதியில் 10வது அத்தியாயம் நவம்பர் 12, 1989 ரோஹண விஜயவீர கொடூரமாகக் கொல்லப்பட்டதும், மே, 19, 2009 வேலுப்பிள்ளை பிரபாகரன் கொடூரமாகக் கொல்லப்பட்டதுமான காட்சிகளை ஒப்பிட்டு எண்ணிப் பாரக்கிறாள் ரோஹணாவின் தீவிரப் பற்றாளரான குசுவமதி என்கிற சிங்களப் பெண். அந்த அத்தியாயம் முழுக்க ஒரு வரலாற்றின் சோகத்தை முகத்தில் அறைவதாக உள்ளது. இறக்கும் முன் தமிழீழக் குழுக்களுக்குத் தான் உதவியதை ஒத்துக் கொள்கிறார் ரோஹன விஜயவீரா. நாவல் வரலாறும், புனைவும் இணைந்தும், பிணைந்தும் செல்வதாக அமைந்துள்ளது. ஒரு வரலாற்று ஆவணமாக மாறிவிடாமல், புனைவும் கதையுருக்களும் தங்கள் வாழ்வின் பதிவுகளை இலக்கிய ஆவணமாகத் தரமுயன்றுள்ளது நாவல்.

நாவல் வாசிக்கப்படும்போது நேரடியாகப் போரில் ஈடுபட்ட இயக்கம், இயக்கத் தலைவர்கள், சான்றாக, கருணா, அம்மான், அன்ரன் பாலசிங்கம் என உண்மைச் சம்பவங்களின் வரலாற்றையும் கலந்து எடுத்துரைக்கிறது. நாவலின் வரலாற்று அடுக்கில் உண்மை நிகழ்வுகளும், புனைவடுக்கில் அது குறித்து விமர்னரீதியாக, ஏற்புடமையுடன், அரசியலை மறுத்தும், ஏற்றும் விவாதிக்கும் பாத்திரங்கள் என ஒரு வரலாறாகவும், அதே நேரத்தில் ஒரு புனைவிலக்கியமாகவும் நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

மனித உடல்கள் போர் எந்திர உடல்களாக மாற்றப்பட்டபின் அதன் அகம் எப்படி எந்திரமாக மாறுகிறது என்பதைச் சங்கவி என்ற பெண் போராளியை வைத்து நாவல் எழுதிச் செல்லும் விதம் போரின் உடலரசியலை விளக்குவதாக அமைந்துள்ளது. இன்றைக்கான உடல்கள் தமிழின் அகப்பாடல் கட்டமைக்கும் காதல் எந்திரங்களாகவும், புறப்பாடல்கள் கட்டமைக்கும் போர் எந்திரங்களாகவும் மாற்றப்படும் விதம் குறித்து அறிய இந்நாவலின் பல போராளிக் குழுக்களின் கதை உருக்களை வாசிப்பது அவசியம். அது குறித்தே ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். ஒரே ஒரு காட்சி சங்கவி என்கிற இயக்கப் போராளி தனது திருமணத்தையும், முதலிரவையும் அணுகும் விதம், அவளது போர்ப்பயிற்சி துவக்குகளுடன் ஆன ஓர்மையோடு கலந்து நிற்பதைக் காட்டுகிறார் ஆசிரியர்.

விடுதலைப் புலிகளின் இயக்கங்கள் அதில் ஈடுபடும் போராளிகள் குறித்த காட்சிகள் இந்நாவலில் குறிப்பிடத்தக்கவை. அதேபோல் சிங்களர்கள் மத்தியில் நிகழும் இந்தபோரின் விளைவுகள் குறித்தும் இணையாகக் காட்சிப் படுத்தியுள்ளார். இரண்டு முக்கியமான வரலாற்று இயக்கங்கள் இந்நாவலின் முக்கியப் பின்புலமாக அமைந்துள்ளன. ஒன்று நிகழ்காலப் புலிகள் இயக்கம். மற்றது நினைவு கூறப்படும் ஜேவிபி. இரண்டு தலைவர்களும் எப்படி ஆளும் வர்க்கத்தால் கையாளப்பட்டார்கள் என்பதும் இதில் இணையாக வைத்து பேசப்பட்டுள்ளது. நாவல் யாருக்கும் ஒருதலைப்பட்சமாக நிற்காமல், எல்லோரது நியாயங்களையும். அனைவரது குரலையும் முன்வைக்கிறது. சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட பிள்ளையை இழந்த தாயின் துயரமும், புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள இராணுவ வீரனது தாயின் துயரமும் ஒருமித்த மனித அவலம் எனபதைக் காட்டுவதன் மூலம், இந் நாவல் போருக்கு எதிரான ஒரு நாவலாக வெளிப்பட்டுள்ளது.

2012 என்ற பகுதி, முகாம்களின் வாதைகளும், புலிகளில் இருந்தவர்கள், அதற்கு உதவியவர்கள் விசாரணையில் படும் அவலங்களும் என விவரிக்கப்பட்டுள்ளது. இடைத் தங்கல் முகாம், மறுவாழ்வு முகாம் ஆகியவற்றிற்குள் நிகழும் கதைகள், காட்சிகள் ஒரு புதிய சூழலைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதேபோல், 2015 பகுதியில், புலம்பெயர் தலைமுறை தனது தாய் மண்ணிற்கு வந்து அதனை அணுகும் முறை, அதன் புதிய பண்பாட்டுப் பெறுமதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவை ஒரு விரிந்த பரப்பில் நாவலை அணுகுவதற்கான தளத்தைக் கொண்டுள்ளது. இதில் பரவலாக மௌனிக்கப்படும் ஒரு குரலை மிகவும் துணிச்சலுடன் முன்வைக்கிறது நாவல். அது யுத்தம் என்றவுடன் புலம்பெயர்ந்து போனவர்கள், இந்தப் போரை அங்கிருந்து தொடர்ந்து உசுப்பேத்தி விட்டார்கள் என்பது. அதாவது ஈழ யுத்தத்திற்கு ஒருவகையில் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் சுயநலமும் காரணமாக அமைந்தது. அவர்கள் தொடர்ந்து தாய் மண்ணில் நடந்த யுத்தத்தை ஒருவகையில் உசுப்பேத்தி விட்டார்கள் என்று தாய் மண்ணில் உள்ள ஒருவர் புலம்பெயர்ந்து தாய் மண்ணை பார்க்க வந்த ஒருவரிடம் கூறுகிறார் (ப. 563). இந்நாவலின் இரண்டு பாத்திரங்கள் இளையவளான நிலா மற்றும் முதிய நாடோடியான சாமி இருவரும் யுத்தம் தொடங்கி இறுதிவரை வந்து போகக் கூடியவர்களாக உள்ளனர். அந்த நிலாதான் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து வந்த கஜந்தனிடம் கேட்கிறாள் “நீங்கள் உசுப்பேத்திவிட்ட யுத்தம்தானே அது?” என்று. கஜந்தனுக்கும் நிலாவிற்கும் இடையில் ஒரு காதல் எந்திர உறவும் இந்த யுத்தத்திற்கு இடையில் 2003&ல் துவங்கி இறுதிவரை தொடர்கிறது. அவன் புலம் பெயர்ந்த பின்னும், இறுதியில் அவளைத் தேடி வருகிறான். ஆனால், அவளுக்கு ஒரு கால் யுத்தத்தால் போய்விடுகிறது. அதோடு அவளை ஏற்கத் தயாராகிறான்.

அவளுக்கு இறுதியில் ஒரு கனவு வருகிறது. “முறிந்த ஒரு ரோஜாச் செடி மறுபடி கிளைவிட்டு செழித்து பூப்பூத்ததுபோல் அவளுக்கு ஒரு கால் முளைத்திருந்தது. ரோஜாப்பூ நிற கால். அவள் காலை அசைத்துப் பார்க்கிறாள். ” என்று தமிழீழத்தின் ஒரு குறியீடாக கால் முறிந்த நிலாவிற்கு அழகான கால் முளைக்கிறது. அது இன்று கனவு என்றாலும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் முடிவதாக உள்ளது.

- ஜமாலன்