5

திருமுறைகளிலும் பௌத்தம் விளைவித்த தாக்கங்கள்

திருமுறைகளில் பௌத்தம் என்கிற தலைப்பில் திரு.வி.க அவர்கள் என்ன கூறுவார் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் கடுமையான சொற்களால் கண்டிப்பதையும், சிரமண மதத்தினர் மீது வெளிப்படையாகவே வன்முறைகளை ஏவுவதையும் பேராசிரியர்கள் கைலாசபதி, கோ.கேசவன் ஆகியோர் மிக விரிவாகப் பேசியுள்ளதை அறிவோம். வன்முறைகள் ஏவப்பட்டதோடும் கதை முடிவதில்லை. அவற்றைப் பின்பற்றுவோர் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. சமணம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. பௌத்தம் 12ஆம் நூற்றாண்டுவரை தாக்குப்பிடித்த போதும் பெரிய செல்வாக்குடன் அது இல்லை; நசிந்துகொண்டுதான் இருந்தது.

தீவிரச் சைவப் பற்று மிக்க திரு.வி.க. அவர்கள் அந்த விடயங்களைச் சற்றே அடக்கி வாசிக்கிறார். சைவ வைணவ பக்தி இலக்கியங்களில் காணப்படும் இந்த வன்முறை வெளிப்பாடுகள் பிற்காலச் சேர்க்கையாக இருக்கலாம் எனப் பொருள்படும்படி தான் சந்தித்த ஒரு உண்மை நிகழ்வை விரிவாகப் பேசுகிறார்.

அவர் காலத்தில் சிவானந்த சுவாமிகள் என்பவரின் ‘ஞானசூரியன்’ எனும் நூல் பெரிய அளவில் சைவர் களால் விரும்பிப் படிக்கப்பட்ட நூலாக இருந்துள்ளது. அதில் ஞானசம்பந்தரின் சமணர்களைக் கழுவேற்றியது பற்றிய குறிப்பில் உள்ள,

'அந்தணாளர் புரியும் அருமறை

சிந்தை செய்யா அருகர் திறங்களைச்

சிந்த வாதுசெய்யத் திரு உளமே'

எனும் வரிகளில் இரண்டாவது வரியில் உள்ள Òதிறங்களைÓ எனும் சொல் ‘சிரங்களை’ என மாற்றப் பட்டிருத்தலை திரு.வி.க கண்டு குழம்புகிறார். பல பிரதிகளையும் ஒப்பிட்டு மூல பாடம் ‘திறங்களை’ என்பதாகத்தான் இருக்க வேண்டும் என உணர்கிறார். மணிமேகலையில் அமைந்துள்ள ‘சமயக் கணக்கர் திறங்கேட்ட காதை’ என்பதிலிருந்து ‘திறம்’ என்பதற்குச் சமயம் தொடர்பான கொள்கை அல்லது புலமை என்பதாகப் பொருள் கொள்ளலாம். அதன்படி இவ்வரிகளுக்கு, 'அந்தணர் ஓதும் அரிய மறைகளைச் சிந்தையில் ஏந்தாத சமணர் தம் சமயக் கருத்துக்களை வீழ்த்துமாறு வாதுசெய்ய அருள் புரிவாய்' என இறைவனை வேண்டுவதாகப் பொருள் அமைகிறது. ஆனால் ஞானசூரியனில் உள்ள திருத்தம், 'அருமறை களை ஏற்காத சமணர் தம் சிரங்களை வீழ்த்துமாறு' சம்பந்தர் இறைவனை வேண்டுவதாகப் பொருளாகிறது.

இது குறித்து ஒருநாள் நூலாசிரியர் சிவானந்த சுவாமிகளையே திரு.வி.க அவர்கள் கேட்கிறார். அதற்கு அவர் தனக்கு அப்படி அச்சாகியுள்ளது தெரியாது எனவும், அதைத் தாம் சண்முகஞ் செட்டியார் என் பவரிடம் அச்சியற்றக் கொடுத்தபோது அங்கு நடந்த பிழையாக இருக்க வேண்டும் எனவும் பதிலுறுக்கிறார்.

இச்சம்பவத்தை இத்தனை விரிவாக திரு.வி.க. சொல்வதென்பது இப்படித்தான் சிரமண முனிவர்கள் மீதான சைவ வைணவப் பக்தி இலக்கியங்கள் அனைத்திலும் வெளிப்படும் வன்முறைகள் எல்லாம் பின்னர் இடைச் செருகல்களாக ஏற்படுத்தப் பட்டவைதான் என்கிற நோக்கில்தான்.

'பின்னாளில் புத்தி பூர்வமாகவும், அபுத்தி பூர்வ மாகவும் இப்படிப் பிழை நிகழ்தல் இயல்பு. அப்பிழை பாடுகளைச் சரித்திர உலகில் ஏற்றுவது ஆராய்ச்சிக்காரர் செயலன்று' எனக் கூறி மேற்செல்வார் திரு.வி.க.

பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒருமுறை சம்பந்தரின் திருஆலவாய் திருமுறை திருப்பதிகத்தில் உள்ள,

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திரு ஆலவாயாய் அருள்

பெண்ணகத்து எழில் சாக்கியப்பேய் அமண்

தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே

எனும் வரிகளை எடுத்தாண்டு சமய வன்முறைகளைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று குறித்து தஞ்சைப் பேராசிரியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் நேரில் வந்து சந்தித்து Òகற்பழித்தல்Ó என்பதற்கு இங்கு Òகல்விச் செருக்கை அழித்தல்Ó எனப் பொருள் கொள்ள வேண்டும் என விளக்கமளித்துச் சென்றது நினைவுக்கு வருகிறது.

தமிழறிஞர்கள் நன்னோக்கத்துடன் இப்படி விளக்கமளித்தபோதும், அப்படியான விளக்கங்களில் சில உண்மைகளும் இருந்த போதிலும் தமிழ் மண்ணில் அவைதீக மதங்களின் மீது பக்தி இயக்கம் மேற்கொண்ட வன்முறைகளை எல்லாம் இல்லை என மறுதலித்தல் சாத்தியமில்லை.

தொடர்ந்து பேசும்போது திருமுறைகளில் இறுதியான பெரியபுராணத்திலும் பௌத்தம் நுழைந் துள்ளது என பௌத்தத் தாக்கம்தான் வைதீகத்திற்குள் அறச்சாத்தியங்கள் நுழைவதற்குக் காரணமாயிருந்தது எனும் தன் கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவார் திரு.வி.க. அதற்குச் சான்றாக இந்து தர்மம் முன்வைக்கும் வேள்வியை நம் பெரியபுராணம் ‘ஊனமில் வேள்வி’ என உரைப்பதைச் சுட்டிக் காட்டுவார்.

'ஊன் வேள்வியை ஊனமில் வேள்வியாகச் செய்தது எது? புத்தர் பெருமான் அறமன்றோ? திருமுறைகள் பௌத்த மதத் தர்க்கங்களை மறுத்துரைப்பினும் பௌத்த தர்க்கங்களை ஏற்றுக் கொண்டிருத்தல் கருதத்தக்கது' என முடிப்பார்.

இந்து தர்மத்தில் ஏதேனும் அறக் கருத்துக்கள் இருக்குமாயின் அவை வைதீக மதிப்பீடுகளை மறுத்த பௌத்த சிந்தனைகளின் கொடைதான் எனப் பறை சாற்றும் வகையில் அறிஞர் திரு.வி.க அவர்களின் சிந்தனைகள் அவருடைய காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமானவை என்பதில் ஐயமில்லை.

6

இந்து மதத்தில் உள்ள நற்கூறுகள் யாவும் பௌத்தத்தின் கொடையே

வைணவ இலக்கியங்களில் பௌத்தத் தாக்கம் குறித்துப் பேசும்போது திரு.வி.க. கம்ப இராமாயணத் தோடு நிறுத்திக் கொள்கிறார். நேரமின்மை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வடமொழியின் செல்வாக்கு தமிழுக்கு இணையாக மேலெழுந்திருந்த காலம்தான் சோழர்களின் காலம். இதைச் சரியாக அடையாளம் கண்டு பதிவு செய்கிறார். ஆனால் இன்றைய தமிழ்த் தேசியர்கள் அதைக் கமுக்கமாக மறைத்துக் கொண்டு சோழர் காலத்தைப் பொற் காலமாகக் கொண்டாடுவது வேறு கதை.

வால்மீகிக்கும் கம்பனுக்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி உள்ளது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் இராமன் வெறும் காப்பிய நாயகனாக மட்டுமின்றி அவதார நாயகனாகவும் உயர்த்தப்படுகிறான். கம்பர் தன் காப்பியத்திற்கு இட்ட ‘இராமாவதாரம்’ எனும் பெயரே இதை உணர்த்தும். என் கட்டுரைகளில் இவற்றை விரிவாக விளக்கி யுள்ளேன். இப்படி இராமனை அவதாரமாக உயர்த்திக் காட்டவும் இராமாயணத்தை ஒரு புனித நூலாகப் படைக்கவும் கம்பர் மூலக் காப்பியத்தில் எத்தகைய திருத்தங்களை மேற்கொள்கிறார் என திரு.வி.க அவர்கள் கூறுபவை இங்கே நம் கவனத்திற்குரியன.

இராமாயணப் பாத்திரங்களிடம் இருந்ததாக வால்மீகியால் அடையாளங் காட்டப்பட்ட அறமற்ற பண்புகளையும், செயல்பாடுகளையும் தன்னுடைய மறு உருவாக்கத்தில் கம்பர் செதுக்கி நீக்கி விடுவதை திரு.வி.க. சுட்டிச் செல்கிறார். சீதையை இராவணன் கடத்திச் செல்லும் முறை வால்மீகியில் எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது, கம்பர் அதை எவ்வாறு ஒப்பீட்டளவில் பண்புடையதாக ஆக்க முயல்கிறார் என்பதையும், வால்மீகியில் காப்பிய நாயக, நாயகியரான இராமன், சீதை எல்லோரும் புலால் உண்பவர்களாக இருப்பதை எவ்வாறு கம்பர் மாற்றி அமைத்து அவர்களைப் புலால் உண்ணாதவர்களாகச் சித்திரிக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டி,

'சகோதரிகளே! சகோதரர்களே! பெண்களை இழிவுபடுத்த கம்பர் நெஞ்சம் எழவில்லை. இம் மாற்றத்திற்குக் காரணம் யாது? கம்பர் உள்ளத்தில் புகுந்துள்ள தமிழ்ப் பௌத்த அறமேயென்று யான் சொல்வேன். பௌத்த அறங்கள் தமிழ் நூல்களில் புகுந்து செய்யும் நலத்தை என்னென்று நவில்வேன்?' என வியப்பது குறிப்பிடத்தக்கது.

அற மதிப்பீடுகள் தமிழ் இலக்கியங்களிலும் வாழ்விலும் எங்கெல்லாம் தென்பட்டாலும் அவை பௌத்தம் அளித்த கொடைதான் என அவர் துணிந்து கூறி வருவதை நாம் கவனத்தில் பதிக்க வேண்டும்.

அடுத்து, தமிழ்ப் புராணங்களில் தென்படும் பௌத்தத் தாக்கங்களைப் பற்றிச் சிலவற்றைச் சொல்கிறார். Òபுராண உலகத் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்தது பௌத்தமே' - எனக் கூறும் திரு.வி.க.

'சாதாரண மக்கட்குப் பௌத்த தர்மம் பயன்படும் பொருட்டு புத்தர் ஜாதகக் கதைகள் எழுதப்பட்டன. அவை மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. கதைகள் பெரும்பான்மையோர் நெஞ்சைக் கவர்வது இயல்பு. ஜாதகக் கதைகளால் விளையும் பயன்களைக் கண்ட ஆரியர்கள் புராணக் கதைகளை எழுதினார்கள். அப்புராணங்கள் பின்னே தமிழுலகிலும் புகுந்தன' -எனச் சொல்வது ஆய்வுலகில் 'எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. தொடர்ந்து, 'புராணங்களில் கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறுமை, இரக்கம். தவம், அன்பு, அறிவு, மெய் என்னும் எட்டு மலர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பல காணலாம். முப்பத்திரண்டு அறங்கள் யாண்டிருந்து முளைத்தன? உயிர்கட்கு உதவல் என்னும் கருத்துக்கே பிறப்பிடம் பௌத்த மதமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அக்கருத்து பின்னே பல சமயங்களில் நுழைந்தது. கொல்லாமை, ஜீவகாருண்யம் முதலியன எங்கெங்குள்ளனவோ ஆங்காங்கெல்லாம் பௌத்த தர்மம் உண்டெனக் கொள்க. புராணங்களில் அறவொழுக்கப் பாக்கள் அளவின்றிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் பௌத்த மதத்தின் செல்வாக்கைக் குறிப்பன என்பது எனது உள்ளக்கிடக்கை' எனக் கூறும் திரு.வி.க. அறத்தைப் போற்றும் புராணப் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டுகிறார்.

(1)           "அறமே மறங்கண் முழுதழிக்கும் அறமே கடவுளுலகேற்றும்

                அறமே சிவனுக்கொரு வடிவம் ஆகுஞ் சிவனை வழிபடுவோர்க்கு

                அறமே எல்லாப் பெரும்பயனும் அளிக்கும் யார்க்கும் எவ்விடத்தும்

                அறமே அச்சந் தவிர்ப்பதென அறைந்தான் சரதா தப முனிவன்Ó

(2)          "தருமமே யுலகம் போற்றச் சகல காரணமதாகும்

                தருமமே அழியாதென்றுந் தாபரமாகி நிற்கும்

                தருமமே தனை வேட்டோர்க்குச் சவுக்கியம் அனைத்தும்

                தருமமே முத்தி சாதனம் என்றும் கொள்"

என்கிற இரு புராணப் பாக்களைப் பௌத்தம் சைவத்துள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகட்கு எடுத்துக்காட்டாக வைக்கும் திரு.வி.க. புராணப் பாடல்கள் பலவும் அறத்திற்குப் புறம்பாகவும் அமைந்துள்ளனவே என்கிற கேள்விக்கு, Òஅவையாவும் அறம் பொலியாத நெஞ்சுடைய மறவோரால் பாடப்பட்டன என்று யான் சொல்வேன்" என முடிக்கிறார்.

குப்பைகள் என நாம் புறந்தள்ளும் அளவிற்கு மூட நம்பிக்கைகளும், பக்திக்கு அடையாளமாக மகனையே அறுத்துக் கறி சமைத்துச் சிவனடியார்க்கு விருந்தளிப்பது போன்ற அபத்தங்களும், எல்லாவிதமான ஒழுக்கக்கேடு களும் நிறைந்தவையாகத்தான் நம் புராணங்கள் அனைத்தும் உள்ளன. அதை திரு.வி.க.வால் மறுத்துவிட இயலவில்லை. எனினும் அவற்றில் ஏதேனும் அறங்கள் வெளிப்படுமானால் அது பௌத்தத்தின் கொடையாகத் தான் இருக்க முடியும் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடும் அளவிற்கு திரு.வி.க. அறிவு, நேர்மை மிக்கவராக இருந்ததை நாம் புரிந்து கொள்கிறோம்.

பௌத்தம், சமணம் முதலிய சிரமண நெறிகள் எல்லாவற்றைக் காட்டிலும் அறத்தையே முன்னிலைப் படுத்தியது. மற்ற மதங்கள் கவுடளையும், சடங்கு களையும், பக்தியையும் முன்வைத்த இடத்தில் அது அறம் ஒன்றையே முன்வைத்தது. எனவே இந்திய மண்ணில் நல்லொழுக்கங்களையும் அறத்தையும் யார் பேசினாலும் அது இங்கிருந்த சிரமண மதங்களின் தாக்கத்தின் விளைவே என்பதைத் திரு.வி.க. அன்றி வேறு யாரும் சொல்லியிருக்கச் சாத்தியமே இல்லை.

இறுதியாகச் சம காலத்திற்கு ஒப்பீட்டளவில் அருகாக உள்ள தாயுமானவ சுவாமிகளையும், வள்ளல் பெருமானையும் எடுத்துக் கொண்டு அவர்கள் எப்படிப் பௌத்தத்தால் மேன்மையுற்றனர் என்பதைச் சுருக்கமாக விளக்குகிறார் திரு.வி.க. எலோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே எனத் தான் மட்டுமின்றி உலகே இன்புற்றிருக்க வழி என்ன எனச் சிந்தித்த தாயுமானவர் கொல்லாமை குறித்துப் பாடியவற்றையெல்லாம் பட்டியலிடுகிறார்.

"கொலைகளவு கட்காமம் கோபம் விட்டாலன்றோ

மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே"

எனச் சுவாமிகள் கரைந்துருகுவதை எல்லாம் மேற் கோளிட்டு, அவற்றில், 'பௌத்த தர்மம் தாண்டவம் புரிவதைக் காண்க' என மெய்சிலிர்ப்பார் திரு.வி.க.

இராமலிங்க அடிகளோ அம்பலத்தே நடிக்கும் பெருந்தகையாளனான சிவனின் பேர் சொல் எனத் தன்னைக் கேட்டபோது, தான் இம்மியும் தயங்காது, 'அருகர் புத்தராதியென்பேன்' எனத் தொடங்கி நாராயணன், ஆதிசிவன், பரமன், பிரம்மன், பரப் பிரம்மன் என்றெல்லாம் வரிசையாகச் சொல்லி எல்லாம் இறைமையின் பல்வேறு வடிவங்கள்தான் எனப் பொருள்படப் பதிலளித்தவர். இப்படி வைதீக நெறியில் இறையாகப் போற்றப்படுவோரையும், அருகனையும், புத்தனையும் அவர் ஒரு சேர ஏற்றுக் கொள்வதோடு, எல்லோருக்கும் முதன்மையாக அவர்களை முன் வைத்தவர். அவரைப் பொருத்தமட்டில் எல்லாம் ஓரிறையின் சித்து விளையாட்டுகள்தான். சுவாமிகளின் இப்பாடலை மேற்கோள் காட்டுவதொன்றே அவர் மீது பௌத்தம் விளைவித்த தாக்கத்திற்குச் சான்று என திரு.வி.க. வள்ளல் பெருமான் மீது பௌத்தம் விளை வித்த தாக்கம் குறித்த தன் குறிப்பை முடித்துக் கொள்வார்.

இறுதியாக அவர் எல்லாவற்றையும் தொகுத்துச் சில பத்திகளில் சொல்வதை நாம் இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்:

உலக சமரசத்திற்கு பௌத்தத்தின் துணை இன்றியமையாதது. பௌத்த தர்மம் எச்சமயத்தில் இல்லை? அது எல்லாச் சமயங்களிலும் நுழைந்துள்ளது. ஹிந்து தர்மத்தில் பௌத்த தர்மங்கள் பல நுழைந் துள்ளன; சிரார்த்தச் சடங்குகளில் கன்றுக் கால்கள், முள்ளம் பன்றி முதலியவை பயன்படுத்தப்பட்டு

வந்தன. அவற்றினிடத்தில் இப்போது வாழைத்தண்டு, பலாக்காய்கள் முதலியன புகுந்துள்ளன. இந்த மாற்றம் எதனால் விளைந்தது? பௌத்தமே அதைச் சாதித்தது. சைவ, வைணவ ஆலயங்கள் பின்னாளில் எங்கும் முளைத்தன. ஆனால் இவற்றிற்கு முன்னோடியாகவும் பௌத்த சேதியங்களே இருந்தன. வேத காலத்தில் ஏது ஆலய வழிபாடு?

சைவ ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் பிச்சாண்டி சேவை என்பதென்ன? புத்தர் எல்லா வற்றையும் துறந்து, அரச வாழ்வை நீத்து நிர்வாணக் கோலம் கொண்டதைக் காட்டுவதுதானே அது? பிச்சாண்டி சேவைக்கு முந்திய சேவைகள் புத்த பெருமானின் அரச வாழ்வையும், பிச்சாண்டி சேவை அவரது அற வாழ்வையும் காட்டுவதுதானே.

ஆனால் ஹிந்து மதத்தில் நுழைந்த இந்த அறநுட்பங்கள் இப்போது போலியாகிவிட்டன. எனவே மீண்டும் ஹிந்து மதத்திற்கு பௌத்த தர்மம் தேவை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

"பௌத்தம் இந்தியாவினின்றும் துரத்தப்பட்டது எனச் சிலர் சொல்கிறார். அது தவறு. பௌத்தம் ஹிந்து மதத்தில் நுழைந்தேயுள்ளது. ஹிந்து மதத்திலுள்ள குப்பைகளை ஒழிக்கவே பௌத்தம் தோன்றிற்று" என முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிப்பார் அறிஞர் கலியாணசுந்தரனார்.

திரு.வி.க. முதலானோர் காந்திய சகாப்தத்தில் வாழ்ந்தவர்கள். காந்தியை வழிகாட்டியாய்க் கொண்டவர் அவர்.

Òசமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்துடன் பிணக்குறுவன அல்ல என்றும், சமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்தைப் போதிய அளவு சீர்திருத்தின என்றும், பௌத்தம் அகத் தீய்மையை நேர்மை வழியில் வலியுறுத்திற்றென்றும் பௌத்தம் அகத் தூய்மைக்குரிய தென்றும், அது போலிச் செருக்குயர்வுகளைக் களைந்த தென்றும் மகாத்மா காந்தி பன்முறை கூறியிருக்கிறார்Ó எனத் திரு.வி.க. அளிக்கும் வாக்குமூலத்திலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்கிறோம். ஒரு காலத்தில் பௌத்த அறங்களை விளக்கிப் பேசிய கூட்டங்களில் சென்று குழப்பம் விளைவித்த கலியாணசுந்தரத்திற்கு இன்று இந்தப் போதம் யாரால் வந்தது? அவரது சுய தேடல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறதென்றால் அவர் காலத்தில் இளைஞர்களுக்கு ஆதர்சமாகவும், பின்பற்றத் தக்க அற - அரசியல் வழிகாட்டியாகவும் இருந்த மகாத்மா காந்தி ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பதுதான் அது.

அந்த உரையின் இறுதியாகக் கலியாணசுந்தரனார் கடவுள் கோட்பாட்டில் பௌத்தத்திற்கும் இந்து மத அணுகல் முறைக்கும் உள்ள முரண் பற்றிப் பேசுகிறார்.

பௌத்த தர்க்கத்தில் ஆத்மன், ப்ரும்மம் முதலியவற்றிற்கு இடமில்லை என்பதை எனது ‘புத்தம் சரணம்’ நூலில் நான் விரிவாக விளக்கியுள்ளேன்.

அந்த வகையில் பௌத்தம் வைதீகத்திலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. எனினும் ஏற்றத்தாழ்வுகள் மிக்க இச்சமூகத்தில் மக்களுக்கு ஒரு கடவுளும் சில சடங்கு களும் தேவைப்படுகின்றன. இதை மிகச் சரியாக விளக்கியவர் கார்ல் மார்க்ஸ் ஒருவர்தான். மதம் மக்களின் அபின் என அவர் கூறியது அத்தனை ஆழமான ஒரு கூற்று. அதே போல சமூக வாழ்வில் பிறப்புச் சடங்குகள், இறப்புச் சடங்குகள், திருமணச் சடங்குகள் என்பனவெல்லாம் பல நேரங்களில் சமூக அங்கீகாரங் களாகவும், சட்ட ஏற்பை வழங்குபவையாகவும் ஆகி விடுகின்றன. இந்தப் பின்னணியில்தான் பௌத்தத்தில் கலந்த பிற மதக் கூறுகளைப் (syncretism) புரிந்து கொள்ள வேண்டும் (பார்க்க : எனது, ‘பௌத்தத்தில் கலந்த பிற மதக் கூறுகள்’ எனும் கட்டுரை).

திரு.வி.க. இந்த நுணுக்கங்களுக்குள் எல்லாம் போகவில்லை. எனினும் பிரச்சினையை அவர் சரியாகவே விளங்கிக் கொண்டுள்ளதை நாம் புரிந்து கொள்கிறோம். கடவுள் எனும் கருத்தாக்கத்தைத் தன் சொல்லாடலுக்குள் கொண்டுவராத புத்தரே இறுதியில் கடவுளாக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டுகிறார். எனினும், பௌத்தத்தின் தோல்வியாக அதை அவர் சொல்லவில்லை. மாறாக, இந்துமதத்தின் கடவுள் என்கிற கருத்தாக்கத்திற்கும், பௌத்தர்கள் புத்தரைக் கடவுளாகக் கொண்டுள்ளதற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். இந்து மதத்தில் கடவுள் என்பவர் படைப்பாதித் தொழில் செய்பவர். Òபௌத்தர்களோ கடவுளை அவ்வாறாகக் கொள் வதில்லை. அவர்கள் கடவுள் என்பதை அறமாகக் கொள்கிறார்கள்Ó என முடிக்கிறார் கல்யாணசுந்தரனார்.

தன் பேச்சின் இறுதியில் இருபத்தைந்தாண்டு களுக்கு முன்னர் ராயப்பேட்டையில் அறிஞர் லட்சுமி நரசு தலைமையில் நடந்த கூட்டத்தை நினைவு கூர்கிறார். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அது பற்றிக் கூறியுள்ளேன். தீவிர சைவரான அவர் அன்று அந்தக் கூட்டத்திற்குச் சென்றது. அதைக் கலைத்துக் குழப்ப. இன்று அதே கூட்டத்தில் அவர் பௌத்தத்தை முழுமையாக உள்வாங்கி அறிந்து அழகாக அலசி நம்மை வியக்க வைப்பதற்கான அடிப்படை அவரது திறந்த மனத்தில் இருந்ததை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

பௌத்தம் இந்த மண்ணிலிருந்து அழிந்தது எனச் சொல்வது பொருளற்ற பேச்சு. மாறாக அது இங்கு இன்று நிலவும் எல்லா இந்திய மதங்களிலும் ஊடுருவி அவற்றின் போற்றத்தக்க கூறுகளாக நின்று ஒளிர்கிறது என்கிற அவரது கூற்று இந்திய பௌத்தம் குறித்த புரிதலுக்கு ஒரு மிக முக்கியமான பங்களிப்பு.

Pin It