1986 கால கட்டத்தில் வெளிவந்த ஒரு படைப்பை ஏறத்தாழ 29 ஆண்டுகள் கழித்து வாசிக்கும் ஒரு எளிய வாசகன் என்ற நிலையில் இந்த படைப்போடு பயணித்தல் என்பது 30 ஆண்டு கால வரலாற்றை அதுவும் போர் மேகங்கள் சூழ்ந்த எம் இலங்கை தமிழ் சகோதரரின் வரலாற்றை விளங்கிக்கொள்ளுதற்கான படைப்பாவணமாக தென்படுகிறது.
‘வசந்தகாலம் 1971’ எனும் முதல் கவிதையை வாசிக்கையில் பாரி மகளிரின் அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில் எனும் புறப்பாட்டின் கையறு நிலை துயரம் மீண்டும் இக்கவிதையின் வாயிலாகவும் வாசக நெஞ்சினை நெகிழ்ந்துறகச் செய்கிறது.
காடுகள் பூத்தன.
குயில்கள் பாடின.
எந்த வசந்தமும் போலவே இனிதாய்
எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்,
இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும்
எத்தனை எத்தனை இள ஞாயிறுகள்
கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன.
குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த
எழுபத் தொன்றின் வசந்த காலம்
ஆந்தைகள் அலற
மரண ஊர்வலமாகக் கழிந்தது.
என்னும் கவிதை வரிகளில் இன விடுதலைக்காக ரத்த சாட்சிகளாய் மாண்ட சகோதரர்களின் தியாகமும், மகிழ்வூட்டும் வசந்த காலம் அவலமூட்டும் முரண்பாடாய் நிறைவுறுதலும் கவிதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாரி மகளிரின் அவலத்தை பெண்மையின் பெருந்துயர் என கூறும் அதே வேளை இக்கவிதை இன அடக்குமுறையை எதிர்கொண்ட ஒரு சமூகத்தின் பேரவலம் என்றால் அது மிகையல்ல. இரத்தப் பூக்கள், இள ஞாயிறுகள் என்னும் சொற் சொட்டுக்கள் தியாகியரை சுட்டும் நுட்பமான படிமங்கள் ஆகும்.
துயர்களின் நடுவிலும்
ஒடுங்குதலறியா அறுகினைப் போல்
சுதந்திரச் சிறகுகள் தொடுவான் இடற
எழுந்த என் ஆத்மா
Òதப்பி ஓட முனைந்திடேல்Ó என்று
உறுதியாக என்னைப் பணித்தது....
மரணத்தை வெல்வோம் எனும் கவிதை வரிகள் ஈழப்போர் முடிந்தாலும் அம்மண்ணில் வாழும் தமிழ் மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. எனினும் துயருற்ற மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டும் ஒளிக் கீற்றுக்கள்.
‘சூரியனோடு பேசுதல்’ எனும் நூல் தலைப்பு கவிதையில்
“இருள்துடைத்து
நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே!”
என கவிஞர் பகலவனை விளித்து முதல் நாள் தாய்நாட்டில் கண்ட சூரியனே மறுநாள் கவிஞருக்கு ஓடும் பேருந்தில் தரிசனம் அளித்த நிகழ்வை பரிசாகப் போற்றி எண்ணி கதிரவனோடு பேசுகையில் தாம் தம் தோழரோடு தாயகத்தில் விடுதலை சூரியனை காண்பது உறுதி என நம்பிக்கை குரல் கொடுக்கிறார். உயிர்த்தெழுந்த நாட்கள் எனும் கவிதையில் இனவாத அரசியலின் கோர முகம் கிழிக்கப்படுகிறது. ஒருமைப்பாடு என்பது என்ன? அடிமைப்படுதலா என்பது ஆளும் இனங்களை நோக்கி பாதிப்புக்கு உள்ளான இனங்கள் எழுப்பும் சமத்துவ சமாதானத்தை விழையும் மக்களின் ஞாயமான வினாவாகும். அது ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அகில உலக தேசங்களுக்கும் பொருத்தமான கேள்வியாகும்.
முட்டை உடைப்பதே பௌர்ணமி நாளில்
அதர்மமென் றுரைக்கும்
பௌத்த சிங்கள மனிதா சொல்க!
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?
என்னும் வினா சிங்கள இனவாத அரசியலை நோக்கி கவிஞர் வீசும் சாட்டை சொடுக்காகும். மேலும் சொந்த நாட்டிலேயே அகதியாக, அன்னியனாக வாழவேண்டிய துயரத்தையும் இக்கவிதை சொற்சித்திரமாக்குகிறது. வாசகரின் கண்களும் குளமாகிறது.
மீன்பாடும் தேன்நாடு எனும் கவிதையில் தமிழர் இசுலாமியர் இடையே ஒற்றுமை இல்லாமையும், தாய் மண்ணின் செல்வமும் வளங்களும் பிறரால் கொள்ளை இடப்படுவதும் துக்கமான குரலில் பகடி செய்யப்படுகிறது. கவிதையின் அங்கத சுவைக்கு இதோ சான்று.
எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்
மரீனாவின் சோகம்!
எனும் கவிதையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக கவிஞரின் உள்ளம் வெம்பும் அவலம் வெளிப்படுகிறது.
கடற்கரை தன்னை அழகுபடுத்தல்
என்பது என்ன?
மீனவருக்கு வீடும் நீரும் அறிவும் தருதலா?
மீனவர் தம்மைக் கொன்று புதைத்தலா?
என கவிஞர் எழுப்பும் வினா வழி கவிஞரின் மீனவர்பால் உள்ள அக்கறையும் மனிதாபிமானமும் வெளிப்படுகிறது
‘முதற் காதல்’ எனும் கவிதையில் இடம் பெறும் அதிகாலை பற்றிய படிமம் கவிஞரின் நுண்மையான அழகியல் உணர்வுக்கு சான்றாகும்.
வாடைக் காற்று
பசும்புல் நுனிகளில்
பனிமுட்டை இடும் அதிகாலைகளில்
என் இதயம் நிறைந்து கனக்கும்.
என்பது போன்ற படிம வரிகள் எத்தனை துயரமும், வலிகளும், இழப்புகளையும் பேசுவதாக இந்த தொகுப்பு அமைந்திருந்தபோதிலும் மேல் சுட்டியது போன்ற கவிதைப் படிமங்கள் சக மனித துக்க சுமைகளை உள்வாங்கும் புண்பட்ட வாசக உள்ளத்துக்கு ஒத்தடம் தருவதாக அமைந்துள்ளன.
‘ஊட்டியின் மறுபக்கம்’ என்னும் கவிதையில் உதகையின் இயற்கை எழில் கவிஞரால் சொல்லோவியமாக்கப்படுகிறது இப்படி!
பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து
ஊட்டி ஏரி
அமைதியாய்க் கிடக்கும்.
நீர் தொட்டுயரும் மலைச் சாரல்களில்
புல் விரிப்பில்
நிழல் கோடு கிழித்து
ஏரியின் நீருள்
சிரசாசனம் செய்யும் கற்பூர மரங்கள்
உயரும்.
என்றெல்லாம் குறிஞ்சி அன்னையின் அழகை, வனப்பை வர்ணித்தாலும் கவிஞர் உழைக்கும் தோட்டத் தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள், இடம் பெயர்ந்த இலங்கை தமிழ் மக்கள் ஆகியோருக்காக வருந்தி எழுதும் நிலையை கவிதை இங்ஙனம் சுட்டுகிறது.
மக்களின் மேம்படும் அபிலாசைகளை
அர்த்தப்படுத்தப் போராடுகின்ற
உலக அணியில்
நானொரு கவிஞன்.
என எழுதுவதன்மூலம் கவிஞரின் படைப்பு நோக்கு வெளிப்படுகிறது
அம்மாவுக்கு எனும் கவிதையில் கவிஞர்களான மொலாய்சின் மரணம், டால்டனின் மரணம் குறித்து வருந்தி எழுதுவதோடு தென்னாப்பிரிக்கா எல்சார்வடார் நாடுகளில் இடம் பெற்ற வெள்ளையரின் நிற வெறியின் குரூரத்தையும், கொடுமையையும் காட்டிக்கொடுக்கும் துரோகியரின் கீழ்மையையும் கவிதையில் பதிவு செய்கிறார்.
மட்டுமல்லாமல்,
அம்மா!
கொலைப்பட்டிறப்பதே எனது விதியெனில்
பெஞ்சமின் மொலாய்சின்
மரணமே எனது தெரிவென அறிக.
கொலைக் களம் தன்னில் மகனை இழப்பதே
உனது விதியெனில்
பெஞ்சமின் மொலாய்சின் தாயைப் போல
விடுதலைக் கீதம் இசைத்திடு அம்மா.
என பாடுவதன்மூலம் தாயகத்துக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த கவிஞரின் பெருமித வீர உள்ளம் வெளிப்படுத்தப்படுகிறது. நம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது தேசிய கவி பாரதி ‘துச்சமாக எண்ணி நம்மை கூறு செய்தபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை’ என முழங்கிய வரிகளையும் வாசக மனம் எண்ணி வியக்கிறது. கவிஞர் ஸ்பெயின், க்யூபா, நிக்ரகோவா,வியட்நாம் என அடிமை விலங்கொடிக்க போராடிய பிற நாட்டவரின் தேசப் பற்றை நினைவூட்டி தமிழ், மலையகம், முஸ்லிம் மக்களே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையோடு விடுதலைக்காக போராடுவோம் என தாயக விடுதலைக்காக மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையுடன் போராடவேண்டும் என வலியுறுத்திப் பாடுவதையும் கவிதைகளில் காண்கிறோம்.
இங்கே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
எனும் பாரதியின் பாட்டு வரிகளை வாசக உள்ளம் மீண்டும் எண்ணிப் பார்க்கிறது.
கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் புதிய சொல்லாட்சிகள் சில: சூரியக் குழந்தை, இரத்தப் பூக்கள், வரலாற்றுநதி, முகில் பாய், முகிற்திரை, இள ஞாயிறுகள், சுதந்திரச் சிறகுகள் என்பன போன்ற புதிய சொல்லாட்சிகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இறுதியாக இந்த கவிதைத் தொகுப்பினை பற்றி எண்ணுகையில் வலி உள்ளவர்க்கே வலியின் அவஸ்தை புரியும் என்பார்கள். எனவே கவிஞரும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளானதால் தாயக விடுதலைக்காக குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், உதகை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள், நிற வெறிக் காரணமாய் கொல்லப்பட்ட கவிஞர்கள், சமூக அவலங்கள் என பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்குமாக குரல் எழுப்புகிறார். இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிக்கும் கண்ணாடி என்பர். கவிஞரின் இந்த கவிதைத் தொகுப்பு இலங்கைத் தமிழ் சகோதரரின் அவல வாழ்வை, வரலாற்றை வெளிப்படுத்துவதோடு உலகில் நிகழும் அடக்கப்பட்டோருக்கான குரலாக ஒலிக்கும் ஆவணப் பிரதியாகும்.