உ.வே.சா. நினைவுகள் - 16
(உ.வே. சாமிநாதையர் பாடத்திட்டம் சார்ந்து வெளியிட்ட அச்சுப் பதிப்புகளின் முகப்புப் பக்க அமைப்பு)
உ.வே சாமிநாதையரின் பதிப்புச் செயல்பாடு இரண்டு நிலைகளில் இருந்தது. ஒன்று, செவ்வியல் நூல்கள் என இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்ற சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது. மற்றொன்று, தன் சமகாலத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்திலிருந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது.
முதலாவது பதிப்பு வரலாற்றைப் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்பர். இரண்டாவது பற்றிய பதிவுகள் மிகவும் அரிதாகவே உள்ளன. சாமிநாதையரைப் பற்றிய ஆய்வுக் களத்திலும் அவை பற்றிய விவாதங்கள் பெருமளவு எழவில்லை என்றே சொல்லலாம்.
உ.வே. சாமிநாதையருக்கு முன்பும், அவரின் சமகாலத்தும் அச்சுப் பதிப்பு என்பது சமயம், கல்வி எனும் இரண்டைச் சார்ந்ததாகவே இருந்தது. அந்தக் காலத்தில் இவை இரண்டின் தேவை கருதியே அச்சு நூல்கள் வெளிவந்தன. சாமிநாதையரும் இவற்றைக் கடந்து செயல்பட்டவரல்லர். என்றாலும், சில தன்மைகள் வேறுபட்டிருந்தன. நேரடியாகப் பாடநூல்களுக்கான அச்சுப் பதிப்புகளை உருவாக்காமல், ஒரு நூலின் முழுமையான பதிப்பை வெளியிட்ட பின்னர் அவற்றிலிருந்து பாடப் பகுதிக்குத் தேவையான பகுதியைத் தனியாக அச்சிட்டு வெளியிட்ட தன்மை, சாமிநாதையரை ஏனைய பதிப்பாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
நவீன அச்சு எந்திரத்தின் முன்மாதிரி வடிவமாகக் கொள்ளப்படும் அச்சு வடிவமொன்று அறிமுகமான (1712) ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து சாமிநாதையரின் பிறப்பும் (1855), ஏறத்தாழ இரு நூற்றாண்டுகள் கழித்து சாமிநாதையரின் முதல் அச்சுப் பதிப்புப் பணியும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்ச்சூழலில் அச்சு எந்திரம் நிலைகொண்டு, பின்னர் ஏறத்தாழ இரு நூற்றாண்டுகள் கழித்துப் பதிப்புலகில் பயணிக்கத் தொடங்கிய சாமிநாதையர் எப்படித் தமிழ்ப் பதிப்புலகின் தலைமகனாகவும் இன்றைய ஆராய்ச்சி நூற்பதிப்புகளின் முன்னோடியாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள நாம் சில விவாதங்களோடு இக்கட்டுரையைத் தொடர வேண்டியுள்ளது.
சாமிநாதையருக்கு முன்பு தமிழ்ப் பதிப்புலகச் செயல்பாடு, சாமிநாதையர் எனும் பதிப்பாசிரிய செயல்பாடு, தமக்கு முன்பும்/சமகாலச் செயல்பாடுகளிலிருந்து சாமிநாதையர் தனித்துச் செயல்பட்ட தன்மை என்பனவற்றை விவாதிப்பதின் வழியாகச் சாமிநாதையரின் கல்விப் புலம் சார்ந்த பதிப்பு செயல்பாடுகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்.
சென்னையில் எல்லீஸ் தலைமையில் செயல்பட்ட மொழிப்பயிற்சிக் கல்லூரிச் (கோட்டைக் கல்லூரி) சூழலில் செயல்பட்ட அ. முத்துசாமிப் பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார், தாண்டவராய முதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருத்தணிகை சரவணப்பெருமாளையர், திருவேங்கட முதலியார் ஆகியோர் தமிழ்ப் பதிப்பாசிரியர்களுள் முன்னோடிகளாவர். சாமிநாதையர் செயல்பட்ட பதிப்புலகின் முன்னோடிகள் இவர்கள். சாமிநாதையர் எனும் பதிப்பாளரைப் புரிந்துகொள்ள இவர்களின் அச்சுப் பதிப்புச் செயல்பாடுகளை விவாதிப்பது அவசியமாக அமைகிறது.
1816இல் தொடங்கப்பட்டு 1854ஆம் ஆண்டு வரையில் செயல்பட்டதாகச் சொல்லப்படும் கோட்டைக் கல்லூரியில் ஐரோப்பியர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணியில் செயல்பட்ட மேற்குறித்த தாண்டவராய முதலியார் உள்ளிட்டவர்கள் நன்னூல், நேமிநாதம், யாப்பருங்கலக்காரிகை உள்ளிட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர்.
இலக்கண நூல்கள் மட்டுமின்றிக் கற்பித்தலுக்குத் துணையாக விளங்கிய சில நிகண்டு நூல்களையும் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டனர். புதுவை நயனப்ப முதலியார் உருவாக்கிய ஒருசொற் பலபொருட் தொகுதி (1835), திவாகர நிகண்டு (1839), களத்தூர் வேதகிரி முதலியார் பதிப்பித்த சூடாமணி நிகண்டு (1839) ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிகண்டு பதிப்புகளாகும். இன்னும் சிலர் மரபிலக்கணங்களைத் தழுவி புதிய/எளிய நடையில் இலக்கண நூல்களை உருவாக்கி அச்சிட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டனர். இவற்றுள் திருவேங்கட முதலியார் உருவாக்கிய ‘தமிழ் இலக்கண அரிச்சுவடி’ (1827), தாண்டவராய முதலியார் உருவாக்கிய ‘இலக்கண வினாவிடை’ (1828), இலக்கணப்
பஞ்சகம் (1835)போன்றன சொல்லத்தக்க இலக்கண அச்சுப் பதிப்புகளாகும்.
மொழிப் பயிற்றுவித்தல் எனும் பயன்பாட்டிற்காக அச்சுப் பதிப்புகளை வெளியிட்ட இவர்கள், எல்லீஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுவடி சேகரிப்பிலும் ஈடுபட்டனர். அ. முத்துசாமிப் பிள்ளை இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்.
மொழிப் பயிற்றுணர்களாகச் செயல்பட்ட இவர்கள் பாடத்திட்டப் பயன்பாட்டு நோக்கில் சுவடியிலிருந்த நன்னூல், நேமிநாதம் உள்ளிட்ட எழுத்து, சொல்லிலக்கண நூல்களை மட்டுமின்றிப் புதிய உரைநடை இலக்கண நூல்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டனர். பயிற்சியின் தேவைக்குப் பதிப்புத் தளத்தில் செயல்பட்ட இவர்களது நோக்கம் பாடநூல்களை உருவாக்குவது என்பதாக மட்டுமே இருந்தது.
கோட்டைக் கல்லூரியின் தொடர்ச்சியாக உருப்பெற்ற பச்சையப்பன் கல்லூரி (1842), பிரசிடென்சி கல்லூரி (1855), சென்னைப் பல்கலைக்கழகம் (1857) முதலான கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டம் சார்ந்தும் பழந்தமிழ் நூல்கள் பல அச்சுருவாக்கம் செய்யப்பட்டன. சிலப்பதிகாரத்திற்கு (1872) (புகார் காண்டம் வேனிற்காதை வரை)
தி.ஈ. ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார் (1880 புகார்க் காண்டம்) சீவகசிந்தாமணிக்கு (1883) ப.அரங்கசாமிப்பிள்ளை உருவாக்கிய பதிப்புகள் அன்றைய நிலையில் பாடத்திட்டம் சார்ந்து உருவாக்கப்பட்ட இலக்கியப் பதிப்புகளாகும். இவர்கள் மூவரும் ஆசிரியப் பணியிலும் இருந்து செயல்பட்டவர்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட சில தமிழ்நூற் பகுதிகள் பாடமாக இருந்தன. இதை, சிலப்பதிகாரத்திற்கு முதன் முதல் அச்சு நூலை உருவாக்கிய தி.ஈ.ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் எழுதிய முன்னுரைப் பகுதியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
இதில் (சிலப்பதிகாரத்தின்) ஐம்பது அகவல்
63 ஆவது வருடத்து ஆ.அ. பரீ¬க்ஷக்குப் பாடமென்று யூனிவர்சிட்டியாரால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால், இப்பாடல் பகுதிகளை அச்சிடுகின்றேன். தகுதியான பிரதிகள் எமக்குக் கிடைக்கவில்லை. இதனால் குற்றங்கள் இருப்பின் வித்துவான்கள் மன்னிக்கவேண்டும்.
அக்காலத்தில், சிலப்பதிகாரத்தைப் போன்று பாடமாக இடம்பெற்ற நூல்களை அச்சிட்டு வெளியிடும் பணியைப் பலரும் செய்தனர். இவ்வகைப் பதிப்பாசிரியர்களிடம் அச்சிட எடுத்துக்கொள்ளும் நூலின் முழுத் தகவலையும், சுவடிகளையும் சேகரித்து, அந்த நூலை முழுவதுமாக அச்சிட்டு வெளியிடும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் நூல்களைப் பாடமாக வைக்கும் முறையும் மிக விசித்திரமாக இருந்துள்ளது.
அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புகளுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் முறை மிக விசித்திரமானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப்பார்கள். அதை வைத்துக்கொண்டு தெரிந்தோ, தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசிரியர்கள் பாடம் சொல்லுவார்கள்(என் சரித்திரம், ப. 519).
கல்வி நிறுவனப் பாடத்திட்டம் சார்ந்து உருவாக்கப்பட்ட பதிப்புகள் குறித்துச் சாமிநாதையரின் கருத்து அவரின் பதிப்பு அனுபவம் சார்ந்து வெளிப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட பெரும்பான்மைப் பதிப்பாளர்களின் செயல்பாடுகள் சாமிநாதையரின் கூற்றுப்படியேதான் இருந்தன. இத்தன்மையிலான பதிப்புச் செயல்பாடுகளிலிருந்து சாமிநாதையர் என்ற பதிப்பாசிரியர் எவ்வாறு தனித்து நின்று செயல்பட்டார் என்பது உற்றுநோக்கத்தக்கது.
கல்வி நிறுவனப் பாடம் சார்ந்து உருவாக்கப்பட்ட அக்காலப் பதிப்புகளில் பெரும்பாலும் நூலின் மூலம் மட்டுமே இருந்தன. வேண்டுமளவில் பதிப்பாசிரியரின் குறிப்புரைகள் இடம்பெற்றிருக்கும். அவ்வாறு உருவாக்கப்பட்ட பதிப்புகள் பிழை மலிந்ததாகவே இருந்துள்ளன. இவற்றைப் பல பதிப்பாசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். சாமிநாதையரும் இது குறித்து விரிவாகப் பதிவுசெய்துள்ளார். சாமிநாதையர் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து இவ்வாறு பதிவுசெய்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் காலேஜ் வகுப்புகளுக்குத் தமிழ்ப் பாடம் வைக்கும் முறை மிக விசித்திரமானது. பேர் மாத்திரம் தெரிந்த நூலிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியைப் பாடமாக வைத்து விடுவார்கள். ஏட்டுச் சுவடியைத் தேடியெடுத்து உள்ளது உள்ளபடியே யாரேனும் பதிப்பிப்பார்கள். அதை வைத்துக்கொண்டு தெரிந்தோ, தெரியாததோ எல்லாவற்றையும் குழப்பித் தமிழாசியர்கள் பாடம் சொல்லுவார்கள். சிலப்பதிகாரம் பழைய நூலென்பது மாத்திரம் அக்காலத்தில் தெரிந்திருந்தது. நூலைத் தெரிந்துகொள்வதைவிட நூலின் சிறப்பைத் தெரிந்துகொள்வது சுலபம். ஆதலின் அதன் சிறப்பைத் தெரிந்தவர்கள் அதிற் சில பகுதிகளைப் பாடம் வைக்கத் தொடங்கினர். தியாகராச செட்டியார் காலேஜில் இருந்த காலத்தில் சிலப்பதிகாரத்திலுள்ள இந்திர விழவூரெடுத்த காதை பாடமாக வந்தது. ஏட்டுச் சுவடியை வைத்துக்கொண்டு அதை அவர் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிள்ளையவர்களிடம் சென்று இருவரும் சேர்ந்து பார்த்தார்கள். புஸ்தகத்தில் பல காலமாக ஏறியிருந்த பிழைகளுக்கு நடுவே உண்மையான பாடத்தை அறிவதே பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. “செட்டியாருக்குப் புஸ்தகத்தின் மேல் கோபம் மூண்டது. ‘என்ன புஸ்தகம் இது? இந்திர இழவூரெடுத்த காதையா?’ என்று கூறி, இந்தச் சனியனை நான் பாடம் சொல்லப் போவதில்லை; எனக்கு உடம்புவேறு அசௌக்கியமாக இருக்கிறது. நான் ஆறு மாசம் லீவு வாங்கிக் கொள்கிறேன்” என்று தீர்மானித்துக்கொண்டார் (என் சரித்திரம், ப. 519).
பாடத்திட்டம் சார்ந்து உருவாக்கப்பட்ட பதிப்புகளின் நிலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்து உணர்ந்த சாமிநாதையருக்கு அவற்றிற்கு ஏதாவது ஒருவகைத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கருதியிருக்கிறார். பாடத்திட்டம் சார்ந்த பதிப்புகளை அத்துறை சார்ந்த ஆசிரியர்களே உருவாக்கினர். சாமிநாதையரும் இவ்வகையினர்தான். என்றாலும், பயிற்றுவித்தல் - பதிப்புத்துறை எனும் இரு தளத்திலும் மிகத்தீவிரமாகச் செயல்பட்ட ஏனைய பாடல் நூல் பதிப்பாசிரியர்களிடமிருந்து தனித்துச் செயல்பட்டிருக்கிறார். பாடத்திட்ட பகுதிகளை மாத்திரம் பதிப்பித்து விற்பனை செய்யும் பதிப்பாசிரியர் போக்கிலிருந்து, முழுநூலையும் பதிப்பித்து வெளியிட்ட பின்னர், அந்நூலிலிருந்து பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த பகுதிகளைத் தனிப் பதிப்பாக வெளியிடும் பணியைச் சாமிநாதையர் செய்தார்.
பதிப்பிக்க எடுத்துக்கொண்ட நூலிற்கு வெளிவந்துள்ள பதிப்புகள் குறித்தும் சமகாலத்தில் வேறொருவரால் செய்யப்படும் பதிப்புகள் குறித்தும் எவ்வித கவனமும் செலுத்தாது புரிந்து கொள்ளாமல் செயல்பட்டுள்ளார். தாம் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட நூலைச் செம்மையாக வெளியிடும் நோக்கம் மட்டுமே இருந்தது. பத்துப்பாட்டைப் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டிருந்த காலத்தில் ஒருவர் அந்நூலை ‘நான் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன், நீங்கள் கைவிட வேண்டும்’ என்று அன்பரொருவர் எழுதிய கடிதத்திற்குக் கீழ்வருமாறு சாமிநாதையர் பதில் எழுதியிருக்கிறார்.
நீங்கள் உங்கள் முறையில் அச்சிடுங்கள். நான் என் முறையில் அச்சிடுகிறேன். இருவர் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத் தமிழ் நாட்டில் இடம் உண்டு (2008:651).
1887ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியை நச்சினார்க் கினியர் உரையுடன் பதிப்பித்து வெளியிட்ட பின்பு அவற்றுள் இரண்டாவதாக உள்ள கோவிந்தையார் இலம்பகத்தை மட்டும் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டார். இது அன்றைக்குப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த பகுதியாகும். இவற்றை வெளியிட நேர்ந்த சூழல் குறித்து இப்படி எழுதியுள்ளார் சாமிநாதையர்.
சில வருஷங்களில் பி.ஏ. பட்டப்பரீ¬க்ஷக்குப் பாடமாக நியமிக்கப்பட்ட சீவகசிந்தாமணி, கோவிந்தையாரிலம்பகத்தையும் அதனை அறிந்து கொள்ளுதற்கு இன்றியமையாத நச்சினார்க்கினியருரையையும் வெளிப்படுத்த நிச்சயித்து, அவை விளங்கும் வண்ணம் நூதனமாக எளிய நடையில் எழுதிய குறிப்புக்களையும் உரிய இடங்களிற் சேர்த்துச் சில அன்பர்கள் விரும்பியபடி தனிப்புத்தகமாக இப்போது பதிப்பிக்கலானேன் (முகவுரை, ப. 1).
பரவலாக அறியப்பட்டிருந்த சிலப்பதிகாரத்தைச் சாமிநாதையர் 1892இல் பதிப்பித்து வெளியிட்டார். 1863ஆம் ஆண்டு முதற்கொண்டு சிலப்பதிகாரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் சென்னைப் பல்கலைக்கழகத்துப் பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்குப் பாடமாக இருந்துவந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்தந்தப் பகுதிகளுக்கு அச்சுப் பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக முழு நூலையும் அந்நூலுக்கான பழைய உரையுடன், வேண்டுமெனும் சூழலில் தாமே புதிய உரையை இயற்றிச் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்டார். அதன் பின்னரே பாடப் பகுதி சார்ந்த பதிப்பை வெளியிட்டுள்ளார். சிலப்பதிகாரத்திற்கு மட்டும் கீழ்வரும் வகையில் பாடத் திட்டம் சார்ந்த பதிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1893 - சிலப்பதிகாரம்-புகார்க்காண்டம்-இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடு காதை
1894 -சிலப்பதிகாரம்-புகார்க்காண்டம்-நாடுகாண் காதை
1897 - சிலப்பதிகாரம்-மதுரைக்காண்டம்- புறஞ்சேரியிறுத்த காதை
1907 - சிலப்பதிகாரம்-மதுரைக்காண்டம்- கொலைக்களக்காதை
1920 - சிலப்பதிகாரம்-புகார்க்காண்டம்- இந்திரவிழவூரெடுத்த காதை
1930 - சிலப்பதிகாரம்-மதுரைக்காண்டம்-ஊர்க்காண் காதை, அடைக்கலக் காதை
நூலை முழுவதுமாக வெளியிட்ட பின்னர், பாடப் பகுதியில் இடம்பெற்றிருந்த பகுதிகளை மாத்திரம் தொடர்ச்சியாக வெளியிடும் வழக்கத்தைச் சாமிநாதையர் கொண்டிருந்துள்ளார். சிலப்பதிகாரத்திற்கு மட்டுமல்ல; தாம் பதிப்பித்து வெளியிட்ட பெரும்பாலான நூல்களின் பகுதியைப் பாடத்திட்டப் பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
1889ஆம் ஆண்டு பத்துப்பாட்டை முழுவதுமாக அச்சிட்டு வெளியிட்ட பின்னர் சிறுபாணாற்றுப்படை (1909), முல்லைப்பாட்டு (1903); மலைபடுகடாம் (1912) ஆகிய பகுதிகளை நச்சினார்க்கினியர் உரையுடனும், 1898ஆம் ஆண்டு மணிமேகலையைப் பதிப்பித்து வெளியிட்ட பின்னர் அந்நூலின் முதல் மூன்று காதைகளையும் தனித் தனிப் பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். பாடத்திட்டம் சார்ந்த பதிப்புகளை வெளியிட்டாரா? அல்லது தாம் அச்சில் பதிப்பித்த நூல்கள் பாடப் பகுதியின் அங்கமாக மாறியதா? என்பதும் சிந்திக்கத்தக்கதாகும்.
சாமிநாதையர், தாம் பதிப்பித்து வெளியிட்டுள்ள நூற்பட்டியலின் விவரங்களைப் பாடத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பதிப்புகளின் பின்னட்டையில் மட்டுமே குறிப்பிடுகிறார். ஏனைய பதிப்புகளில் அவ்வாறு குறிப்பிடும் வழக்கத்தைச் சாமிநாதையர் கொண்டிருக்கவில்லை. இது ஒருவகையில் வணிகம் சார்ந்த செயல்பாட்டின் வெளிப்பாடாகவே கொள்ளத்தக்கதாகும்.
நூலைக் கட்டமைக்கும் முறையிலும் சாமிநாதையர் இரு நிலைகளில் செயல்பட்டுள்ளார். முழுநூலை அச்சுருவாக்கும் நிலையில் ஒரு முறையையும் பாடநூலாக்கத்தில் வேறு முறையையும் சாமிநாதையர் பின்பற்றியுள்ளார். அட்டை வடிவமைப்பிலும் இருவேறு முறையை அவர் பின்பற்றியிருக்கிறார். மாணவர்களுக்காக உருவாக்கப்படும் நூல் மெல்லிய தாளிலான அட்டையைக் கொண்டு கட்டியமைத்துள்ளார்.
நூலின் உள்ளடக்கத்திலும் இரண்டுவிதமான அமைப்பை அவர் பின்பற்றியுள்ளார். முழு நூலையும் பதிப்பிக்கும்பொழுது, ஒரு பகுதியின் (காதை முதலான) முழுப் பாடல்களையும் ஒன்றாகத் தந்துவிட்டு அவற்றிற்கான உரைப் பகுதியை பாடலடியின் எண்ணைக்கொண்டு அமைத்துக்காட்டுவார். ஆனால், பாடத்திட்டத்திற்காக உருவாக்கப்படும் பதிப்பில், சில வரிகளை மட்டும் தந்துவிட்டு அவற்றிற்குப் பொருளுரை, குறிப்புரைகளைத் தந்து பதிப்பித்துள்ளார்.
பழைய உரைகளில் இடம் பெற்றுள்ள கடினமான சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களை அமைத்தும், இடக்கர்ப்பொருளைக் கொண்ட சொற்களை நீக்கியும் மாணவர்களுக்கான பதிப்பை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து, 1894ஆம் ஆண்டு புகார்க் காண்டத்திலுள்ள நாடுகாண் காதையை மட்டும் அச்சிட்டு வெளியிட்ட போது கீழ்வருமாறு அவர் பதிவுசெய்திருக்கிறார்.
அடியார்க்கு நல்லாருரையில் சிலவிடத்திருந்த கடினமான சொற்களை மாற்றி அவ்வவ்விடத்தில் வேறு சொற்களையமைத்தும் ஒருவாற்றாலும் விளங்காதனவும் இடக்கர்ப் பொருளையுடையனவுமாகிய சிலவற்றை நீக்கியும், மாணாக்கர்களுக்கு விளங்குதற்பொருட்டு நூதனமாக எழுதப்பட்ட குறிப்புரைகளைச் சிலவிடத்து அடியார்க்கு நல்லாருரையின் பின்னர்ச் சேர்த்திருப்பதன்றிப் பழைய அரும்பதவுரையில் வேண்டிய பாகங்களையும் அவ்வவ்விடங்களில் அவற்றின் பின்னே சேர்த்தும் பதிப்பிக்கின்றேன் (முகவுரை, பக்.3-4).
பாடத்திட்டத்திற்காக அச்சிட்ட எல்லா நூல்களையும் ஒரே வடிவில் அமைத்துள்ளார். முகவுரை (இவ்வகை முகவுரைகள் முழுமையான பதிப்பில் உள்ளது போன்று விரிந்த அளவில் இல்லை) நூலாசிரியர், உரையாசிரியர் குறித்த தகவல்களைத் தந்துள்ளார். இப் பகுதிகள் மாணவர்களின் புரிதலுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பாடப்பகுதியாக இருந்த நூற் பகுதிகளை அச்சிடும் வழக்கம் காலந்தோறும் இருந்து வருகிறது. சுவடி, படியெடுத்தல் பயிற்றுவித்தல் சார்ந்தும் நடைபெற்றுள்ளது. நவீன அச்சுப் பதிப்புகள் விரைந்து பரவலாக்கம் பெறும் தன்மையைக் கொண்டிருந்தது.
கோட்டைக் கல்லூரியின் பயிற்றுவித்தல் சார்ந்து பல இலக்கண நூல்கள் அச்சுருவாக்கம் செய்யப்பட்டன. இந்த மரபின் நீட்சியில் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்த சாமிநாதையரும் பழந்தமிழ் நூலைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். கல்வி நிறுவனம் - பாடத்திட்டம் - பதிப்பு எனும் தன்மை சாமிநாதையரிடம் இருந்தது.
பாடப் பகுதியிலிருந்த நூற்பகுதிகளை மட்டும் அச்சிட்டு வெளியிடுதல் எனும் வழக்கத்திற்கு வேறாக, வேண்டிய ஒரு நூலை முழுவதுமாக அச்சிட்டு வெளியிட்ட பின்னர் அந்த அச்சுப் பதிப்பிலிருந்து பாடப்பகுதிக்குத் தேவையான பகுதிகளை மட்டும் தனிப் பதிப்பாக வெளியிடும் சாமிநாதையர் முறையாகச் செய்துள்ளார்.
முழுநூலையும் பதிப்பிக்கின்ற பொழுது பின்பற்றுகின்ற பதிப்பு முறைமைகளும் பாடநூல் சார்ந்த பதிப்பு முறைமைகளும் முற்றாக வேறுபட்டிருந்தன. பதிப்பித்து வெளியிட்ட நூற்பட்டியலை (விலையுடன்) முழுமைப் பதிப்பில் குறிப்பிடாமல் பாடத் திட்டத்திற்கான பதிப்பில் மட்டும் குறிப்பிடும் வழக்கத்தை சாமிநாதையர் பின்பற்றியுள்ளார். பதிப்பு முறைகளும் வேறுபட்டு அமைந்திருந்தன.
உ.வே. சாமிநாதையரின் கல்விப் புலப் பின்புலம் சார்ந்த அச்சுப் பதிப்புகளின் வெளியீட்டு விவரம்
பத்துப்பாட்டு - சிறுபாணாற்றுப்படை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இவை, விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1909
சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், குறிப்புரையுடன் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: மெமோரியல் பிரஸ், 1897
சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - ஊர்க்காண் காதையும், அடைக்கலக் காதையும், இவை அரும்பதவுரையோடும், அடியார்க்கு நல்லார் உரையோடும், சென்னை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உ.வே.சாமிநாதையரால் நூதனமாக எழுதிய குறிப்புரை முதலியவற்றுடன் பதிப்பிக்கப் பெற்றன, சென்னை: கேசரி அச்சுக்கூடம், இரண்டாம் பதிப்பு, 1930
சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை மூலமும் அடியார்க்கு நல்லாருரையும் அரும்பதவுரையும், குறிப்புரை முதலியவற்றுடன், சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம்
வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், 1907
புறநானூறு மூலமும் உரையும் (200 - 266), இவை குறிப்புரை முதலியவற்றுடன் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம்
வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், 1907
பத்துப்பாட்டினுள் ஐந்தாவதாகிய முல்லைப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், இவை உத்தமதானபுரம் மஹாமஹோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி வே. சாமிநாதையரால் குறிப்புரையுடன் பதிப்பிக்கப் பெற்றது, மூன்றாம் பதிப்பு, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1927
பத்துப்பாட்டினுள் பத்தாவதாகிய மலைபடுகடாம் மூலமும் நச்சினார்க்கினியருரையும், இவை, சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் தாம் நூதனமாக எழுதிய பலவகைக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப் பெற்றன, சென்னை: வைஜெயந்தி அச்சுக்கூடம், 1912
பத்துப்பாட்டினுள் இரண்டாவதாகிய பொருநராற்றுப்படை மூலமும் நச்சினார்க்கினியருரையும், இவை குறிப்புரை முதலியவற்றுடன், சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதராகிய உத்தமதானபுரம்
வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், 1907
புறநானூறு (101 - 125) மூலமும் பழைய உரையும், விளக்கக் குறிப்புடன் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: வைஜெயந்தி அச்சுக்கூடம், 1911
புறப்பொருள் வெண்பாமாலை, முதல் நான்கு படலங்கள் - மூலமும் பழைய உரையும், இவை விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1905
புறப்பொருள் வெண்பாமாலை - வாகை, பாடாண் படலம், மூலமும் பழைய உரையும், இவை விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1908
பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இவை விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, இரண்டாம் பதிப்பு, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1910
பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இவை விளக்கக் குறிப்புடன் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, முதல் பதிப்பு, கும்பகோணம்: ஸ்ரீவித்யா அச்சுக்கூடம், 1903
பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இவை விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: வைஜெயந்தி அச்சுக்கூடம், 1908
பத்துப்பாட்டு - பட்டினப்பாலை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், இவை விளக்கக் குறிப்புடன் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1906
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - நாடுகாண்காதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும், இவை உ.வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: மேமோரியல் அச்சுக்கூடம், 1894
புறநானூறு (51 - 100), மூலமும் பழைய உரையும், விளக்கக் குறிப்புடன் வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை: பிரஸிடென்ஸி பிரஸ், 1909
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதையின் இரண்டாம் பாகமாகிய இலாவாண காண்டம், இது மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரால் குறிப்புரை முதலியவற்றோடு பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1935
வேறு சில அச்சுப் பதிப்புகள்
சீவகசிந்தாமணி - கோவிந்தையாரிலம்பகம் மூலமும் உரையும் விசேடக்குறிப்பும், 1930க்கு முன்
சிலப்பதிகாரம் - இந்திரவிழவூரெடுத்த காதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும், 1930க்கு முன்
சிலப்பதிகாரம் - நாடுகாண் காதை மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும், 1930க்கு முன்;
மணிமேகலை - முதல் மூன்று காதைகள், மூலமும் குறிப்புரையும், 1930க்கு முன்;
(1930இல் வெளிவந்துள்ள சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - ஊர்க்காண் காதை, அடைக்கலக்காதை மூலமும் உரையும் கொண்ட பதிப்பின் பின் அட்டையில் உள்ள, உ.வே.சா. பதிப்பித்த நூல்களின் விவரம்)
துணைநின்ற நூல்கள்
சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம், சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்.
பாடத்திட்டம் சார்ந்து உ.வே. சாமிநாதையர் வெளியிட்ட அச்சு நூல்கள்.
(இக்கட்டுரை, 2011ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட கட்டுரையன்றின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்)
- முனைவர் இரா. வெங்கடேசன்