‘இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. உண்மையில் கிராமப்புறச் சமூகங்களுக்கே உரிய நிறை, குறைகளோடுதான் இன்றைய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இத்தகைய கிராமத்து வாழ்க்கையையும், அதன் செழுமைகளையும் வட்டார வழக்கான மக்களின் மொழியோடு இயைந்து எழுதியிருக்கிற நாவல்தான் பாமர இலக்கியம். இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய கஸ்தூரிராஜா தன்னுடைய திரைப்படங்களிலும் கிராமம் சார்ந்த மக்களின் பண்பாட்டை, மன உணர்வுகளை மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். தென்கோடித் தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் பலவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு தமிழ் கிராமம் எப்படியான உணர்வுகளைக் கொண்டிருந்தது. மக்களின் வாழ்வு நிலை எப்படியிருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவலாசிரியர். கிராமத்தின் மண்ணோடு பின்னிப்பிணைந்த வெகுசன மக்களின் சடங்குகள், புழங்கு பொருட்கள், நம்பிக்கைகள், விளையாட்டுகள், காதல், திருமணம், சண்டை சச்சரவுகள், வழிபாடு, பண்டிகை, விருந்து, திருவிழா போன்றவற்றை இந்நாவல் முன்வைக்கும் விதத்தை இக்கட்டுரை பேச முயல்கிறது.

நாவலின் கதைக்களம்

மனிதன் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்வதற்கு முன் தன் உணர்வுகளை கலை நயத்துடன் வாய்மொழி வடிவில் வெளிப்படுத்தியவையே நாட்டுப்புற கதைகளாகும். இவை இன்று மிகவும் குறைந்து வருகின்றன. இன்றைக்கு வட்டாரமொழி நாவல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் இந்த நாவலின் ஆசிரியர் தான் பிறந்து வளர்ந்த கிராமிய மண்ணை, மக்களை, வாழ்க்கையை விரிவாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.இன்றைய

விஞ்ஞான வேகமும், நகர்மயமாதலும் கிராமங்களின் புறத் தோற்றத்தையும், வாழ்வியல் முறைகளையும் முற்றிலும் மாற்றிப்போட்டு விட்டன. இதனால் தமிழர்கள் இழந்தவை என்னென்ன? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்காக எழுதினேன் எனத் தன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் நாவலின் ஆசிரியர். முழுவதும் வட்டார வழக்கு மொழி­யிலேயே எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். பேச்சு வழக்கை சுமந்திருக்கிற இந்நூல் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது. தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மல்லிங்காபுரமும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும் நாவலின் கதைக்களமாகத் திகழ்கிறது.

பாத்திரங்களும், அடையாள வெளிப்பாடும்

paamara ilakkiyamநாவலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிற முத்துக்கருப்பனும், முருகேசனும் நாவலின் போக்கை வழிநடத்திச் செல்கின்றனர். வேளாண்மையை மட்டுமே நம்பி­யிருக்கிற சம்சாரிகளின் சுவாரசியமான வாழ்க்கையை பாத்திரங்களின் மூலம் நம் கண் முன்னே நிறுத்துகின்றார் ஆசிரியர். கோட்டை தங்கம், சீனித்தாயி, துரைச்சாமி, தர்மர், தவசி, பூச்சி, மாயன், இராமர், ரெங்குத்தாயி, மாரிச்சாமி, ராமுதாயி, முனியாண்டி, பாண்டுரங்கன், வேலம்மாள் இப்படி நிறைய பாத்திரங்கள் நாவல் முழுவதும் பவனி வந்தாலும்,‘மாமென், மாப்ள, மச்சியான், கொளுந்தன், அண்ணென், தம்பி, சித்தப்பு, பெரியப்பு, பாட்டென், அப்பச்சி, சியான் இன்னும் பொம்பளைகளுக்குள்ள மதினி, நாத்துனா, கொளுந்தியா, அக்கா, தங்கச்சி, சின்னாத்தா, பெரியாத்தா, பாட்டிண்டு இந்த நாவல் முழுவதும் உறவுப் பெயர்களாகக் கொட்டிக் கிடக்கின்றன.

வட்டார வழக்குச் சொற்கள்

நாட்டுப்புற வழக்குச் சொற்கள் என்பவை கிராம மக்களின் பேச்சு வழக்கை ஒட்டியவை. அது கிராம மக்களை நேரடியாக மட்டுமல்லாமல் இதயத்தோடு இதயத்தை பிணைத்து வைக்கின்றன. அவர்களுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றன. இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் ஒட்டுமொத்தமான நிகழ்ச்சிகளை பிரதிபலிக்கின்றன. வட்டார இலக்கிய நாவல் எங்கும் வட்டார மொழியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “மொளச்சா செடி, தளுத்தாக் கொளுந்து, அரும்புனா மொட்டு, மலந்தா புவ்வு, பரிஞ்சா பூட்ட, சமஞ்சா கருது, காச்சா பிஞ்சு, வௌஞ்சா காயி, பழுத்தாப் பழம், முத்துனா நெத்து, வெடிச்சா வெடி” என இருபது வார்த்தைகளில் ஒரு செடியின் பிறப்பு முதல் இறப்பு வரை பதிவு செய்யும் பாமர மொழியை அத்தனை எளிதாகக் கையாண்டிருக்கிறார் கஸ்தூரிராஜா. காத்து கருப்பு, பம்முரது, பம்மாத்து, கேணச்சி, கண்ணால் கவுத்தா காட்டுச் சிறுக்கி, கண்ணுமுழிய பிதுக்கி கொமரிப் பிள்ளை மேல எறிஞ்சிவிட்டான், உறக்கம், உசுப்பு, செத்த நேரம், ரவைக்கு, கோக்கு மாக்கான, விறுவிறுண்டு, கருமம், கண்ராவி, எகடாசி, எடக்கு மடக்கு, ஒலமுடி, சுணையா, சிறுக்கி,உண்ச்சி, அம்புட்டுதே போன்ற வட்டார வழக்குச் சொற்கள் நாவலின் பக்கங்கள் தோறும் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரை ஒருவர் பேசுகின்ற மொழியை வைத்து அவர் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதை எளிதாக அறிய முடியும். மதுரை வட்டாரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய மல்லிங்காபுரத்தின் மண்ணின் மைந்தரான கஸ்தூரிராஜாவுக்கு இந்த வட்டார வழக்குகள் இயல்பாகவும், எதார்த்தமாகவும் அமைந்திருப்பது இயல்பே.

வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள்

கிராம மக்களின் தெய்வங்களையும், தேவதைகளையும், வழிபாடுகளையும் எண்ணுவது எளிதான காரியமில்லை. கோயில்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. மனித மனம் ஒரு பலவீனமான கொடி அது தனக்கு தானே நிமிர்ந்து நிற்காது. கடவுள், தலைவர் போன்றோரைப் பற்றி ஏறிக் கொள்வதுதான் தொன்று தொட்டு இன்றுவரை இயல்பாகி விட்டது. டான்யோடர் “நாட்டுப்புற சமயம் என்பது அமைப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறுவனமாக்கப்பட்டு விட்ட கட்டுப்பாடுகளை கொண்ட சமயங்களுக்கு மாறுபாடானது” என்று கூறுகிறார். நாட்டுப்புற தெய்வங்களை,

1)            ஊர்த் தெய்வங்கள்

2)            இனத் தெய்வங்கள்

3)            குலத் தெய்வங்கள்

4)            சமாதித் தெய்வங்கள்

என்று பகுக்கின்றார் துளசி ராமசாமி.

கிராமம், கிராமம் சார்ந்த மக்கள், அவர்தம் தொழில்கள், நம்பிக்கைகள் எல்லாம் இயற்கையோடு இயைந்ததாக இருக்கும். அவர்களிடையே குல தெய்வங்கள், ஊர்ப் பொது தெய்வங்கள், தேவதைகள், துணைத் தெய்வங்கள், மூதாதையர் வழிபாடு போன்றவை நிரம்பியிருத்தலைக் காணலாம். இந்நாவலில் ஆங்காங்கே சில இடங்களில் மேற்சொன்ன வழிபாடுகளைக் குறிப்பிட்டிருந்தாலும், மாட்டை வணங்குவதும், கிடா வெட்டுவதும், முளைப்பாரி எடுத்தலும் போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன. தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டை வணங்குவதும், அதனை கொண்டாடுவதும், அன்றைய நாளின் சிறப்பு வழிபாடாக வைத்திருக்கிறார்கள்.

இதைப் பின்வருமாறு நாவல் பதிவு செய்துள்ளது: “அந்தநாளில் யாரும் மாடுகளை அடிக்க மாட்டார்கள். மாட்டை தெய்வமாக வழிபடுவார்கள். ஏனென்றால் அந்த மாடுகள் இல்லையென்றால் சம்சாரித்தனம் இல்லை. விவசாயம் நின்று போனா அத்தனை பேரும் பட்டினிதா அதனால்தான் மாட்டை சம்சாரிகள் தெய்வமாக வணங்குகிறார்கள். அந்த நாளில் மாடுகளைக் கழுவி குளிப்பாட்டி அலங்காரம் பண்ணி ஊரெல்லாம் ஓட விட்டு கெட்டிப் போடுவாக அன்றைக்கு தீவனம் தள தளன்று மொச்சைக் கொளயும், தட்டாங்கொளயும் போடுவார்கள்.”

மாடுகளுக்கு பொங்கல் வைப்பது தமிழக கிராமங்களுக்குரிய வழக்கமாக இருக்கிறது. தைப்பொங்கல் மாடுகளுக்குதான். ஆயுள் முழுவதும் மனிதர்களுக்காக பாடுபடுகின்ற மாடுகளுக்கு விசுவாசத்தை காட்டுவதற்குத்தான். மாடுகளுக்கு முதல் பூசை, மாட்டுக் கொம்புகளில் உருமாக்கட்டி கழுத்துள பூமாலைகளைப் போட்டு நெத்தியில குங்குமத்த பூசி சாம்பிராணிய போட்டு மாட்டுக்குப் பூசைய போடுவார்கள்.

கிராம மக்கள் அந்த ஆண்டு மழை பொழிவதற்கும், பச்சைப் பயிறுகள் செழித்து வளர்வதற்கும் பெண்கள் முளைப்பாரி இட்டு வழிபடுதல் வழக்கம். முதலில் வயது வந்த பிள்ளைகளெல்லாம் ஒன்றுகூடி ஒரு வீட்டைத் தேர்வு செய்து அந்த வீட்டில் முளைப்பாரி இடுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பெரிய மனுசியிடம் கேட்பார்கள். பெரிய மனுசி மொச்சைப்பயிறு, கானப்பயிறு, தட்டாம்பயிறு என்று ஆளுக்கொரு பயிரைச் சொல்லி “காய்ந்த எருவை கொண்டு வந்து நல்லா இடுச்சுப் பொடியாக்கி கரம்ப மண்ணைப் போட்டு, கலந்து மண்சட்டி, ஓலப்பொட்டி, அடுக்குச்சட்டி இதுகள்ல போட்டு தண்ணிய ஊத்தி இருட்டுக்குள்ள வருசையா வச்சுப்புடுவாக. கோபுர மொளப்பாரிண்ட்றது வேற மாதிரி, நல்லா மண்ணை கோபுரகணக்கா செஞ்சு பிடிச்சு வச்சு, வெத நெல்லக் கொண்டு வந்து உச்சி வரெக்கிம் குத்திக்குத்தி நட்டுவிடுவாக. அது நல்லா வெளேர்ண்டு வளந்து ஒசரமா கோபுரங்கணக்கா நிக்கிம். மொளப்பாரி போட்ட வீட்டுக்குள்ள ஆம்பளெக ஆரும் நுழையக் கூடாது. வெளிக்காத்து, வெயிலு படக்கூடாது. இது எளம் பயிராவே நீட்டுன வெள்ளக்குச்சி கணக்கா வளந்து முனில ரெண்டு எல, நாலு எல பசேர்ண்டு இருக்கும். வெயிலுப்பட்டால் வெள்ளக்காம்பு நீட்டமா வராது. செடி கொடி கணக்கா பசேர்ண்டு படந்திரும். அதனால் சாமி கும்பிடு வரை இருட்டு வீட்டுக்குள்ளேதான் வச்சு தண்ணிய ஊத்தி பக்தியோடு வளர்ப்பார்கள்.

நம்பிக்கைகள்

நாட்டுப்புற மக்களின் மனம் சார்ந்த கூறாக விளங்குவது நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கை வாழ்க்கையில் அடிப்படையான ஒன்றாக மனித சமுதாயத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் சமூக நிகழ்வுகளில் தோற்றுவிக்கப்படும் நம்பிக்கைகள் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வும் நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இவை பெரும்பாலும் அச்சவுணர்வின் அடிப்படையாகத் தோன்றியதாகக் காட்சியளித்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராத பொழுதும் மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருவாகின்றன என்கிறார் சு.சக்திவேல்.

பாமர இலக்கியம் நாவல் அச்சத்தை அடிப்படையாக வைத்து எழும் பிரச்சினைகளை கிராம மக்கள் காத்து கருப்பு என்று பெயர் வைத்து அழைப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது முதியவள் ஒருத்தி தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்த ரங்குத்தாய் என்ற குமரிப் பெண்ணைப் போய் சாக்கலூத்துக்குள் இறங்கி தண்ணியை பிடித்துக் கொண்டு வா என்று சொன்ன போது அவளுக்கு ஒத்தையில் செல்ல பயமாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் அவள் மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டு வெடுக்குனு குடத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள். நடக்கும் பொழுது அவளுக்கு பாம்பு பற்றிய பயம் எல்லாம் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தூக்கில் தொங்கிய கன்னியம்மாவின் நினைவுதான் வந்தது. அவள் பேயாக வந்து அந்தப் பகுதியில் செல்லுகின்ற வயசு பிள்ளைகளை பிடித்துக் கொள்வதை கேள்விப்பட்டிருந்தாள். ஏற்கனவே அவளால் பேய் பிடிக்கப்பட்டிருந்த மூக்கப்பன் மகள் பவுன் பிள்ளையைவா செத்தநேரம் பேசிட்டு போவ வா செத்த நேரம் விளையாடுவோம்னு சொல்லி, நான் ஒத்தையில கிடக்குறன். யாரும் இரக்கப்பட மாட்ராங்க என்று கூப்பிடும் பொழுது பவுன் பிள்ளையும் யாரோ பெண் பிள்ளைதான் கூப்பிடுகிறது என்று போனாள். அவளை அந்த கன்னியம்மா பேய் பிடித்துக் கொண்டது. பிறகு உடையாளி சாமிகிட்ட சொல்லிதான் உடுக்கை அடித்து விபூதி, வேப்பிலை எல்லாம் அடிச்சு பேய் ஓட்னாங்க. ஆனா பேய் அவளை விட்டுப் போகவில்லை. பிறகு நாலு ஐஞ்சு நாளா செரமப்பட்டுதான் விரட்டினார் உடையாளிச்சாமி. இப்படிப்பட்ட அமானுசிய நம்பிக்கை. ‘சாமி கும்பிடு சாட்டி விட்டா ஊர தாண்டி போகக்கூடாது’ என்கின்ற நம்பிக்கையும்,‘களவாங்கப் போகும்போது சவனம் பார்ப்பதும்’ ‘சடங்கான பிள்ளை முளைப்பாரி போட்டா கல்யாணம் கூடும்’ என்பன போன்ற கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாய்மொழி வழக்காறுகள்

கிராம மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபடும் பொழுது சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ளும் பொழுதும், ஊர் நிகழ்வுகளில் பங்கேற்கும் பொழுதும், நண்பர்களுக்குள்ளும், தோழிகளுக்குள்ளும் பேசிக் கொள்ளும் போதும் வெளிப்படுகின்ற சொலவடைகள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவைகளும் கிராம மக்களின் வழக்காறுகளாகக் வெளிப்படுகின்றன.

1)            ‘வெட்டிக் கெட்டது வேம்பு வெட்டாம கெட்டது புளி’

2)            ‘மங்குற காலத்துக்கு மாங்கா பொங்குற காலத்துக்கு புளியங்கா’

3)            ‘ஆண்டிபட்டியில களவாங்க ஆனைமலையம் பட்டியில பம்முறது கணக்கா’

4)            ‘கோடி ஒரு வெள்ளைக்கு குமரி ஒரு பிள்ளைக்கு’

5)            ‘பனி தை மாத்தயில தரய பிளக்கும் மாசி மாத்தயில மச்ச பிளக்கும்’

6)            ‘ஆம்பள முத்துனா அழகு பொம்பள முத்துனா சருகு’

7)            ‘இவ சூரியனுக்கு சூடு வக்கிறவ’

என்பன போன்ற சொலவடைகளும், பழமொழிகளும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன.

பொட்டச்சியாப் பொறப்பெடுத்தவளுக்கு நாலு பொறப்பாத்தாஞ் வயித்துக்குள்ளருந்து சொத்துண்டு பூமியில விழுகுறப்ப ஒரு பிறப்பு வளந்து சமஞ்சு குத்த வச்சு வயசுக்கு வாராது ஒரு பொறப்புஞ் ஒரு புருசனக் கட்டிக்கிட்டு பெறந்த வீட்டை விட்டுப் போறது ஒரு பெறப்புஞ் வயித்துள ஒரு புள்ளயச் சுமந்து செத்துப் பொழச்சு அத பெத்துப் போடுறது ஒரு பொறப்புஞ் என்று பெண்களின் வளர்ச்சி நிலை சார்ந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பிறப்பாக்கிப் பார்ப்பது கிராம மக்களின் வழக்கமாக இருக்கிறது என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது.

புழங்கு பொருட்கள்

புழங்கு என்பதற்கு கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதியில் வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகிறது. எனவே, புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்ற பொருட்களை குறிப்பதாகக் கூறலாம். மக்களின் பண்பாட்டை மானுடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

1)            பொருள்சார் பண்பாடு

2)            பொருள்சாரா பண்பாடு

இதில் பொருள்சார் பண்பாடு புழங்கு பொருட்களை குறிக்கும். குட்டக்கம்பு, கைக்கம்பு, வீச்சருவா, சூரிக்கத்தி, பட்டாக்கத்தி இவற்றுள் சூரிக்கத்தி எப்பொழுதும் கிராமத்து ஆண்களின் இடுப்பிலே இருக்கும். கொழு, கலப்பை, மாட்டு வண்டி, தட்டு வண்டி, செக்கு, பெண்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் குழுதாடி, கயிறு, பாத்திரங்கள் போன்றவை மனிதனோடு சார்புடைய புழங்கு பொருட்களாக இந்நாவலில் காட்டப்படுகின்றன.

உணவு முறைகள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு கிராம மக்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது. இந்நாவலில் வரும் கிராம மக்கள் தானிய உணவையே அதிகமாக உண்டாலும் திருவிழாக் காலங்களிலும் வீட்டு விசேசங்களிலும் அசைவ உணவையே பெரிதும் விரும்பி உண்கின்றனர். திருமணமான தம்பதியினர்களுக்கு உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பது நமது பண்பாடாகக் கிராமங்களில் இன்றைக்கும் இருப்பதைக் காணலாம். ‘விருந்து திண்டா உறவு விருத்தி’ என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வயதுக்கு வந்த பெண்களுக்கு

ஒரு நாளைக்கு வெந்தய களி,

ஒரு நாளைக்கு உளுந்தங் களி,

நெத்தம் பச்சை முட்டை,

தினம் கறிக்கொழம்பு,

நெதமும் கோழிக்குழம்பு,

கேப்பக்களியும் கறிக்குழம்பும்.

பேறு காலத்தில் பயன்படுத்தப்படும் மருந்துக்களி, பச்சை மருந்து, கோழிச்சாறு, கடுகுப்பொடி, வெற்றிலை பாக்கு போடுதல், நல்லெண்ணெய், பூண்டு, நாட்டுக் கருப்பட்டி போன்ற உணவு வகைகள் இந்நாவலில் கிராம மக்களின் உணவுப் பயன்பாட்டில் இருப்பதை ஆசிரியர் பதிவு செய்கின்றார்.

காதல்

காதல் அடைதல் உயிர் இயற்கை என்ற அடிப்படையை உணர்ந்த இந்நாவலில் கால்பகுதி இடம் பிடித்திருக்கிறது. கோட்டத் தங்கத்தின் காதலும் அங்குத் தாயின் பருவத்திற்கேற்ற காதல் வெளிப்பாடும், அச்சமும் பயமும் துரைசாமியின் மனதில் சீனித்தாயைக் கண்டவுடன் ஏற்படும் காதலும் ராமுத்தாயியின் நம்பிக்கையும் வாசகரின் உள்ளங்களை கொள்ளை கொள்வதாக அமைகின்றன. இந்நாவலிலே ஒரு காட்சி,

“ஒத்தயில வரமாட்டாளாண்டு ஏங்கிக்கிட்டு பய காத்துக் கெடப்பியான்” அவளும் வருவாஞ் கிட்டப்போவியான், ஒடம்ப முறுக்குவியான், வளைவியான், நெளிவியான், குறுக்க மறுக்க நடப்பியான், அவளச் சுத்தி வட்டம் போடுவியான், இம்புட்டு கூத்துக்கும் அந்தப்புள்ள என்னாண்டுவா? ரேசா ஒதட்டோரத்துல சிரிப்பாஞ் அம்புட்டுத்தேன் அம்புட்டுத்தேன் இந்த சிரிப்புக்குத்தேன் அம்புட்டு கூத்து” என்று கிராமியக் காதலைக் காட்சிப்படுத்துவது அழகியல் தன்மையுடையது.

முடிவுரை

கிராமப் பழக்கவழக்கங்களையும், பாரம்பரியத்தையும், மண்ணையும், மக்களின் வாழ்க்கையையும் விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். நாவல் முழுவதும் வரும் காட்சிகளும், சம்பவங்களும் ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போன்று அமைந்துள்ளன. படிப்பதற்கு வேறு வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டாலும் நாவலின் போக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் விறுவிறுப்பான ஓட்டத்துடன் நாம் தொலைத்த, இழந்திருக்கிற பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு இந்நாவல் ஒரு கிராமத்து ஆவணமாக அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை வட்டார மொழியில் எழுதியிருப்பது கஸ்தூரிராஜா என்ற இயக்குநரை மிகச்சிறந்த படைப்பாளராகவும், எழுத்தாளராகவும் முழுமையடையச் செய்திருக்கிறது. பாமர இலக்கியம் என்ற பெயரைத் தாங்கியிருக்கிற இந்நாவலில் கிராமத்துக்குரிய பண்பான பட்டப் பெயர்களே இல்லாமல் அவரவர்தம் பாத்திரப் பெயர்களோடு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு குறையாகத் தென்படுகிறது.

துணைநூற்பட்டியல்

1)            கஸ்தூரிராஜா - பாமர இலக்கியம், விஜயலட்சுமி பதிப்பகம், 33/5, ராஜா மன்னார்சாலை, தி.நகர், சென்னை. முதற்பதிப்பு - ஜுலை - 2021

2)            சு. சண்முகசுந்தரம் - நாட்டுப்புறவியல், 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை. மூன்றாம் பதிப்பு - 2003

3)            டாக்டர். சு. சக்திவேல் - நாட்டுப்புறவியல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை. முதற்பதிப்பு - 2014

4)            டாக்டர். த. ரெஜித்குமார் - நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை. முதற்பதிப்பு - 2017

- முனைவர் பெ.முருகன், இணைப் பேராசிரியர் - தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்.

Pin It