சொத்துக்காகப் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள், பணத்தாசையினால் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்ளும் சகோதர சகோதரிகள், பொருளுக்காக நம்பிக்கைத் துரோகம் செய்யும் வேலைக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாத சமுதாயம் யாசகர்களின் சமுதாயம். சுத்தம், அழுக்கு எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வேஷம் போட்டு அதிக வசூல் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாதவர்கள்.

mm deen bookவெறும் சாப்பாடு குறித்த அக்கறை மட்டுமே யாசகர்களை இயக்குகிறது, இல்லையென்றால் அறையப்பட்ட ஆணி போல ஒரே இடத்தில் இருந்து செத்துப் போவார்கள் என்ற தகவலைச் சொல்கிறது எழுத்தாளர் எம்.எம். தீன் எழுதிய ‘யாசகம்’ என்ற நாவல்.

பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு வந்து அவர்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்கும் பிச்சைக்காரர்கள் பற்றி நாவல் பேசவில்லை; வண்டியில் விழச் செய்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரர்களை ஆசிரியர் குறிப்பிட விரும்பவில்லை; கடற்கரையில் தனிமை தேவைப்படுவோரிடம் சென்று கையேந்தும் கொடுமைக்காரர்களை வெளிச்சம் போடும் வக்கிரம் இங்கு இல்லை; சிக்னலில் நிற்கும் வண்டிகளில் இருக்கும் மனிதர்களைத் தட்டித் தட்டிப் பணம் கேட்போரைப் பற்றிய கதை அல்ல இது. யாருமே பார்க்க விரும்பாத, பார்க்க சகிக்காத, பார்க்க பழகாத, பார்க்க தைரியமில்லாத ஒருவேளை பார்த்தாலும் பேச அச்சப்படும் யாசகர்களை இந்த நாவல் விளக்கியிருக்கிறது.

மண்ணுக்குள் இருந்து மக்கிப் போய் உரமாகாமல் பிளாஸ்டிக் கழிவுகளாக ஆளையே விழுங்கும் சாதிப் பேய்களையும் அன்பைப் போதிப்பதாகச் சொன்ன மத அரக்கர்களையும் தன் நாவல் மூலம் தற்கொலைக்குத் தூண்டிவிட்டு அச்சமில்லாமல் நீதிமன்றத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார் வழக்கறிஞரும் எழுத்தாளருமான நாவலாசிரியர். சாதியையும் மதத்தையும் மிக எளிதாகக் கடந்து விடலாம் என்பதற்கு ஒரே காட்சி போதுமான சான்றாக அமைகிறது.

விவசாயிகளும் தங்கள் பச்சை பெல்ட்டை அவிழ்க்கும் அளவில் அதாவது பொருளுதவி செய்ய வைக்குமாறு சிறுவன் குட்டித்துரையின் நிலை இருப்பதாகக் நாவல் கூறும். மாற்றுத்திறனாளியான குட்டித்துரையைப் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்த பின் அவனுக்கான சலுகை கிடைக்க வழி செய்யும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது சாதி சமயம் என்ற இடத்தில் ஒரு கோடு போட்டுவிடுங்கள் என்றான் குட்டித்துரை. அவன் தாயாரின் பெயர் முத்தாச்சி என்றால் அவன் வாப்பாவின் பெயர் தக்கரை பீர்முகமது என்பதால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதில் சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக யோசிக்கும் சிறுவனின் எண்ணித்திலும் முத்தாச்சி என்ற தன் பெயரை ‘மும்தாஜ்’ என்று மாற்றிக் கொள்ளத் துணியும் அவன் தாயாரின் நிலையும் சாதாரணமாக ஒரு புரட்சியை விதைத்துவிடுகிறது.

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலைத் துப்புவதற்கு நிறைய பக்குவம் இருக்க வேண்டும். அந்தப் பக்குவத்தை அடைந்து விட்டார் ஆசிரியர்.

வேறு வேறு ஊர்களில் வாழும் சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடும் இஸ்லாமியர் உணவுத் திருவிழாவான ‘கந்தூரி’ விழாவில் இளைஞன் ஒருவன் அவனுக்குச் சித்தி என்று சொல்லும் வயதில் உள்ள ஒருத்தியின் பாலியல் உணர்வுக்குப் பலியாகி விடுகிறான் என்று கதையில் ஒரு திருப்பத்தைக் காட்டுகிறது நாவல். பக்தர்களுக்குக் கடவுளின் அதிசயங்கள் நிகழும் என்று மூளைச் சலவை செய்து வைத்திருக்கும் இந்தச் சமூகத்தில் அதற்கு எதிராக மனித வக்கிரங்களும், மனித அவலங்களும் போகிற போக்கில் நடந்து முடிந்து விடுகின்றன என்பதை ஆழமாகப் பேசியுள்ளது நாவல்.

மரணத்திற்குப் பின் பெரிய வாழ்வுக்கான உத்திரவாதத்தை எல்லா மதங்களும் சொல்வதால் ஆன்மிகத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற சட்டை உறிக்கப்பட்ட உண்மையையும், மேலுலகில் நீடித்த வாழ்வு என்பது சுவாரஸ்யமும் புதுமையும் இல்லாதது, அங்கே எப்படித்தான் வாழ்ப்போகிறோமோ என்று அய்யாகண்ணு வக்கீல் கேட்பதாக ஒரு கேள்வியையும் அமைத்துவிட்டு ஆரம்பத்தில் வக்கீல் பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவி இருந்ததாகக் குறிப்பது சிந்தனைக்கு உரியது.

கதையில் பல்வேறு யாசகர்கள் இருந்தாலும் ஞானிகளைப் போல வாழும் மூவரைச் சுற்றியே கதை படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறக்கும் போதே பிச்சைக்காரர்களாகப் பிறக்கவில்லை. ஆனால் வாழ்க்கைச் சூழல் அப்படி மாற்றிப் போட்டுவிடுகிறது என்று கூறும் போது ‘ஓவென’ கதறி அழவேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் திருமணத்திற்கு வந்திருக்கும் அழைப்பாளர்களே தாலி கட்டும் முன்பாகச் சாப்பாட்டு அறைக்குள் நுழைவதால் தள்ளு முள்ளு நடந்து விடுகிறது என்று ‘சோத்துப்பெட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் கூறுவது கேலி கூத்தாக அமைகிறது. அவன் தன்னை முற்பிறவியில் வள்ளலாரைப் போல வாழ்ந்ததாகச் சொல்வதெல்லாம் வேடிக்கை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

பெண்களை மேன்மைபடுத்திய தீன் சார், சில ஆண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க பெண்களே காரணம் என்று நம்மைக் கோபப்பட வைத்துவிட்டு ‘முத்தாச்சி’ என்ற பெண் கதாபாத்திரத்தின் மூலம் ஆறுதல் அடைய வைக்கிறார்.

பழமொழிகளும் தத்துவக் கருத்துக்களும் நாவலில் நிறையவே காணப்படுகின்றன. “யாரையும் வாயி புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடா துல்ல” என்றும் “பூனை எளைச்சு போயிட்டுன்னா எலி மச்சான் மொறை கொண்டாடுமாம்” என்றும் தத்துவம் பேசும் தக்கரை பீர்முகமது உண்மையிலேயே யாசகன்தானா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியின் திறமை, குரங்குகளின் இயல்பு, மாதக் கடைசியில் கருணைக்குத் தடை, ஆங்காங்கே காதல், தத்துவ விசாரம் என்று முப்பத்தியெட்டு அத்தியாயங்களில் விளாசியிருக்கிறார் ஆசிரியர்.

நெல்லைப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களையும் அவர் தம் வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டும் நாவலில் பிச்சைக்காரர்களுக்கு இரயில் நிலையத்தில் காவலர்களால் மட்டுமல்லாமல் குடிகாரர்களாலும் துன்பம் வருவதை எதார்த்தமாகப் பேசுகிறது கதை. குடி போதையில் பெரிய குச்சியை வைத்துக் கொண்டு வேறு போக்கிடம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை.

தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்று சொல்லும் அதே அளவிற்கு வேஷம் போட்டு இரக்கம் உள்ளவர்களைக் கொள்ளையடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர். யாசகர்களுடன் ஒருவராக வாழ்ந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் புரியும். வாசித்துப் பாருங்கள், மனித சமுதாயத்தை நேசிப்பீர்கள்!

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

நூல்: யாசகம் - நாவல்
ஆசிரியர்: எம்.எம். தீன்
விலை: ரூ.200 மட்டும்
வெளியீடு: ஜீவா பதிப்பகம், காஞ்சிபுரம்
Pin It