tha.pandiyan salaman papaiyaஅந்த ஆண்டுதான் நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தேன். வேலூரில் புகழ்மிக்க ஊரிஸ் கல்லூரித் தமிழ்த் துறையில் பயிற்றுநர் பணி இலக்கிய மன்றத்தின் பொறுப்பை என்னிடம் கொடுத்தனர். நல்ல வேளை, அங்கே அப்போது முனைவர் தா.செல்லப்பா அவர்கள் பொருளாதாரத் துறையின் தலைவராக இருந்தார்.

அந்தக் கல்லூரியிலேயே இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த அவருடைய தம்பி தா.பொன்னு அவர்களும் எனக்கு உதவியாக இருந்தார்கள்.

அங்கே முத்தமிழ் விழா என்பதே அதுவரை தெரியாது. 1962 பிப்ரவரியில் அதை நடத்துவது என்று முடிவு செய்தோம்.பேச்சாளர் வேண்டுமே; முனைவர் செல்லப்பா அவர்கள்தான் திரு. தா.பாண்டியன் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டார். பிறகு என்ன, வேலை மளமளவென்று முன்னேறியது.உரிய நாளும் வந்தது. திரு.தா. பாண்டியனும் வந்து சேர்ந்தார்.

ஒரு நான்கு முழ வேட்டி; அரைக் கைச்சட்டை, மேல் துண்டும் இல்லை! இவரா; இவரா? காரைக்குடி அழகப்பா கல்லூரியில் வேலை பார்ப்பவரா? நம்ப முடியாது திகைத்துப் போனேன். அந்த ஆடைத் தோற்றத்தில் இன்றளவும் எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை. ஒரு சிவப்புத் துண்டு மட்டும் தோளில் தோழமை கொண்டிருப்பதைத் தவிர!

அவர் பேச வேண்டிய நேரம் வந்தது.சுழன்று வந்த அவருடைய சொற்பெருக்கில் சீவகசிந்தாமணியின் ஏமாங்கத நாட்டு வளம் சிக்கிக் கொண்டது. அந்த நாட்டில் நீர்வளமும் நிலவளமும் பெருகி இருந்ததால் மரங்கள் ஒன்றை மிஞ்சி ஒன்று உயரமாக வளர்ந்திருந்தனவாம்.

தென்னை மிக உயரம் பறிப்பார் இல்லாததால் காய்கள் வளர்ந்து கீழே தாமே விழுகின்றன. கொஞ்சம் கீழே, பாக்கு மரங்கள். அவற்றின் மேலே இவை விழ பாக்கின் பழங்கள் முற்றி உதிர்கின்றன. பாக்கு மரத்தின் கீழே தேன் அடைகள், அவற்றில் பாக்கின் பழங்கள் உதிர, தேன் அடை கிழிந்து ஒழுகுகின்றது.

இன்னும் கீழே பலா மரங்கள். அவற்றின் மேல் இவை அத்தனையும் விழ, பலாப்பழம் பிளந்து வீழ்கிறது. இன்னும் கீழே மாங்கனி சிதறுகிறது. வாழை மட்டும் என்னவாம்? அது அதன் பங்கிற்குப் பழங்களைச் சிந்துகிறது. அத்தகைய நாட்டுவளத்தைக் கற்பனையில் கவிஞர்கள் படைக்கிறார்கள்.

யதார்த்த வெளிகளுக்குள் இறங்கிச் சாமானியர் உலகில் சஞ்சரிக்கும் முயற்சிகள் மிகமிகக் குறைவு என்று அவர் ஒவ்வொன்றையும் விளக்கிய தோரணை, ஒரு புதிய அனுபவத்திற்குள் நுழைந்து விட்ட மாணவர்கள் காட்டிய உற்சாகக் கைதட்டல்கள், பாராட்டுகளை இன்றளவும் நான் மறக்கவில்லை.

விமரிசனத்தை எத்தனை நாசுக்காக, “கேளாரும் வேட்பமொழிந்தார்” என்பதில் எனக்கு பெருத்த மகிழ்ச்சி. அந்த விழா பெருத்த வெற்றியைக் கண்டது என்றால் அதற்குத் திரு. தா.பாவின் வருகையும் வாய்மொழி தருகையும் முக்கிய காரணம்!

எட்டவே இருந்து, பார்த்து, கேட்டு, பழகிக் களித்த அவருடன் இத்தனை கிட்ட இருந்து பழகும் வாய்ப்பு வரும் என்று நான் நினைத்தது இல்லை.அந்த ஆண்டே நான் மதுரைக்கு வேலைக்கு வந்துவிட்டேன்.

இனி மதுரைப் பகுதியில் இலக்கிய வட்டத்தில் நம்மை யார் அழைக்கப் போகிறார்கள் என்று எண்ணியிருந்தபோது, புதுக்கோட்டை, சிவகங்கை, எட்டயபுரம் என்றெல்லாம் எனக்கு அழைப்பு வந்தது! இது எப்படி என்று நான் விசாரித்த போதுதான் தெரிந்தது அத்தனைக்கும் மூலவர் திரு. தா.பா. அவர்கள்தான்! கலை இலக்கியப் பெருமன்றம் என்பது, சுரண்டலின் ஆதிக்கத்திலிருந்து ஏழை எளிய மக்களை விடுவித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு, மரபார்ந்த இலக்கிய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, காலத்திற்கேற்ற புதிய இலக்கிய வடிவங்களை வடித்துத் தர வந்த ஓர் இயக்கம் என்பது என் குறைந்தபட்ச நம்பிக்கை. அதனால் அந்த உழைப்புகளை நானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

அப்போது எல்லாம் இந்த ஊர், இன்ன தேதி, இது நிகழ்ச்சி, இவர் தலைவர், வாருங்கள் என்று அழைப்பார்கள். பிறகு அழைப்பு அனுப்புவார்கள். முன்பணம் ஏதும் அனுப்பமாட்டார்கள். அனுப்பும் அளவிற்கு அவர்கள் பணம் வசூலித்திருக்க மாட்டார்கள்.

நாங்களும் அதைப் பெரிதாக எண்ணுவதும் இல்லை. 1961 செப்டம்பர் முதல் 1963 செப்டம்பர் முடிய அவரும் நானும் சிவகங்கை, திருச்சி, மதுரை, சேலம், ஆத்தூர், சின்னாளபட்டி, எட்டயபுரம், மணப்பாறை முதலிய ஊர்களில் இலக்கிய மன்றங்களில் பேசினோம்.

பாரதி விழாக்களில் அவர் தனி முத்திரை பதித்தார். பாரதியின் பல பாடல் வரிகள் அவர் பேச்சில் மீண்டும் உயிர் பெற்று அநேக நெஞ்சங்களில் குடியேறுவதைக் காண முடிந்தது. அவர் பேச்சு அறிவிற்கும் வாய் வார்த்தைக்குமானதாகத் தோன்றவில்லை. அது ஒரு பிரளயம்.

ஏழ்மை இமயத்தைத் தள்ளிச் சாய்த்து விடப் பிரளயப் பெருவெள்ளமாய் அடி வயிற்றிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கி வந்தது.அது ஒரு சிம்ம கர்ஜனை; அது புறப்பட்டது ஆதிக்க சக்திகளை விழுங்கி ஏப்பம் இட. அது பொங்கி வந்தது புகழுக்காகவும் பொருளுக்காகவும் அல்ல; புவி எல்லாம் மகிழக் காணும் புதுப் பொங்கலை நோக்கி!

1962 மே மாதம் சேலம் ஆத்தூரில் கலை இலக்கியப் பெருமன்ற விழா! அதுவும் மூன்று நாட்கள்! திரு தா. பாண்டியன், தம்பி தா. பொன்னு இவர்களோடு சேர்ந்து புறப்பட்டோம்.வண்டியும் தெரியலை; வாசலும் தெரியலை என்பார்களே, அந்தக் கதைதான் அப்போது! ஒரு வழியாகக் கரூர் வழியே சேலம் செல்லும் மாதம் போம் காத வழி பாசஞ்சரில் பயணிப்பது என முடிவு.

வண்டி வந்துவிட்டது. எந்தப் பெட்டியிலும் இடம் இல்லை. பதிவு செய்யப்படாத சீட்டுகள் ஏறும் பெட்டிகள் சிலவே அங்கே நடையில் ஏறிவிட்டாலே மிகப்பெரிய வெற்றிதான். அதுவும் மூன்று டிக்கெட் ஒரே பெட்டிக்குள்! ஏறிவிடுவதே ஒரு இமாலய வெற்றிதான்! ஏறி ஆயிற்று. இடித்து உள்ளே போவது என்பது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை.

பெட்டிக்குள் மூச்சுத் திணறல்! மூவரும் நெருக்கியும் நெருக்காமலும்(!) நின்றோம், நின்றோம்; வண்டி ஓடிக்கொண்டிருப்பதாகக் காட்டி, வழிகளில் மேய்ந்து கொண்டிருந்த எருமைகளோடு உண்மையான போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

நிறுத்தங்களில் ஒருவர் இறங்கினால் ஏற முயல்பவர் பத்தாக இருந்தனர்.கொலம்பஸ், இடம் தெரியாமல் கப்பலில் பயணித்தான். நாங்களோ எப்போது போய்ச்சேருவோம் என்பது தெரியாமலே ரயிலில் பயணித்தோம்.

ஒரு வழியாக, பெரும்பாலும் நின்றே பயணித்த அந்தக் கூட்டுப் பயணம் நீரும் சோறும் இல்லாமல் போனாலும், மனச் சோர்வு இல்லாமல், சேலம் சென்றடைந்தது! அந்தப் பயணத்தில் திரு. தா.பாண்டியன் அவர்களிடம் கல்லூரிப் பணியின் கர்வத்தையோ, தன் சொந்த நலத்தையோ சுமந்தவராகக் காணாமல், தன்னை இந்த மண்ணின் உழைப்பாளிகளுக்காகத் தரும் தியாக உள்ளம் உள்ளவராகவே அப்போது என்னால் காண முடிந்தது.

ஆத்தூர் நிகழ்ச்சிகளில் இயல், இசை, இவ்வளவுதானா? நாடகமும் இருந்தது.அறிஞர் ரகுநாதன் எழுதிய கவிதை நாடகமும் நடைபெற்றது. அதில் நாங்கள் எல்லாரும் நடிகர்கள்! நம்புகிறீர்களா? திரு. தா. பாண்டியன் அவர்களுக்குள் ஒரு நடிகனும் மறைந்திருப்பதை எங்களால் காணமுடிந்தது.

எழுத்து, பேச்சு, நடிப்பு என முத்தமிழிலும் அவர் சிறந்திருந்தது மட்டுமே அல்ல. அவை அத்தனையையும் உழைப்பாளர்களுக்கு என அர்ப்பணிக்கும் உள்ளமும் கொண்டவராய் இருந்தது தெரிந்தது.

1963 ஆகஸ்டில் எனக்குத் திருமணம். என் அழைப்பை ஏற்று வந்திருந்து எங்களை வாழ்த்தி மகிழ்வித்தார்... இன்று அவர் உழைப்பாளர்களால் மறக்க முடியாத, மனம் மகிழ்ந்து போற்றப்படும் தலைவர்!

(தோழர் தா.பாண்டியன் 80வது ஆண்டு சிறப்புமலர்)

- பேராசிரியர் சாலமன் பாப்பையா

Pin It