பெரும்பாலான திராவிட மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனும் நான்கு மொழிகளுக்கே பழமையான இலக்கியங்கள் உள்ளன. தமிழ்மொழியின் இலக்கிய வரலாறு கி.மு.க்கு முற்பட்டதாக உள்ளது. ஏனைய மூன்று மொழிகளுக்குமுரிய இலக்கிய வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக உள்ளது. தமிழில் பக்தி இலக்கியம் என்பது கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இவற்றால், தமிழ் பக்தி இலக்கியத்தின் செல்வாக்கு ஏனைய திராவிட மொழிகளிலும் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்ற கோணத்தில் அறிஞர் பலர் விளக்கம் அளித்துள்ளனர். குறிப்பாக, தமிழ் நாயன்மார் வரலாறுகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன என்றும், தமிழ்த் திருமுருகாற்றுப்படையில் விவரிக்கப்பட்டுள்ள வெறியாட்டு எனும் வழிபாட்டுமுறை தற்கால வட மலையாள மக்களிடம் வழக்கிலுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழிபாட்டு முறைகளில் ‘சாதி நீக்கம்’ எனும் கருத்தியல் உள்ளுறையாக அமைந்துள்ளது. இதற்கான மூலவேர் திருமுருகாற்றுப்படைப் படைப்பாக்கமுறையில் உள்ளது என்று கருத வாய்ப்புள்ளது.
எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள், சங்க இலக்கியம் எனும் ஒற்றைப் பொருண்மையில் அழைக்கப்பட்டாலும், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. இதனை, நூல்களின் பாடுபொருள் மற்றும் கவிதை படைக்கப்பட்டுள்ள முறையைக் கருத்தில் கொண்டு அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். அந்த விளக்கங்களைக் கவனத்தில்கொண்டு கீழ்வருமாறு சங்க இலக்கிய நூல்களைப் பகுத்துக் கொள்ளலாம்:
- முதல் கட்டம் : குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு.
- இரண்டாம் கட்டம் : கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து பரிபாடல்.
- மூன்றாம் கட்டம் : சிறுபாணாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு நூல்கள்.
- நான்காம் கட்டம் : திருமுருகாற்றுப்படை.
இந்தப் பகுப்புமுறை, தமிழ் பக்தி இலக்கியத்திற்கு முந்திய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவிய கடவுள் நம்பிக்கை பற்றிய கருத்து வளர்ச்சியைப் பகுத்துப் புரிந்துகொள்ளத் துணைநிற்கிறது. அதாவது, பக்தி இலக்கியத்திற்கு அடிப்படையாக அமைந்த கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது. இதன்வழி, ஏனைய திராவிட மொழிகளில் இடம்பெற்றுள்ள பக்தி இலக்கியக் கருத்தியல் நீரோட்டத்திற்கான அடிப்படையைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்றமையும் நூல்களில் நடுகல், கொடிநிலை, கந்தழி, வள்ளி, பேய், பூதம், யமன், அணங்கு, சூர், மாயோன், சேயோன், வேந்தன், வருணன், முருகன், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் , கொற்றவை, கொல்லிப்பாவை, இயக்கி, தவ்வை, கட்டு, கழங்கு, வெறியாட்டு என வழிபாட்டுடன் தொடர்புடைய பல்வேறு சொற்கள் பயின்று வந்துள்ளன. இந்தச் சொற்கள் பயன்படுத்தப் பெற்றுள்ள சூழல்களின் அடிப்படையில் பண்டைத் தமிழகத்தில் இயற்கை வழிபாட்டுமுறை , மீ இயற்கை வழிபாட்டுமுறை, திணை வழிபாட்டுமுறை, உருவ வழிபாட்டுமுறை என்ற வழிபாட்டுமுறைகள் வழக்கிலிருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றில், முருகு – முருகன் எனும் தனி ஒரு கடவுளுக்கான வழிபாட்டுமுறை திணை வழிபாட்டுமுறை எனும் இனக்குழு வழிபாட்டுமுறையிலிருந்து உருவ வழிபாடு (வைதீக வழிபாடு) எனும் நகர்மைய வழிபாட்டுமுறைக்கு வளர்ந்துள்ளது. விவரம் வருமாறு:
சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான பதிவுகள் முருகு,செவ்வேள் என நேரடியாகவும் வேலன்,வெறியாட்டு, நெடுவேள் எனத் தொடர்புபடுத்த தக்கவகையிலும் அமைந்துள்ளன (குறிப்பு – 1). எனினும், பரிபாடல், திருமுருகாற்றுப்படை எனும் இரண்டு நூல்களில்தான் வெளிப்படையாகவும் விரிவாகவும் முருக வழிபாடு இடம்பெற்றுள்ளது. இதை, மேல் சுட்டப்பட்ட நான்கு காலகட்டப் பகுப்புவழி விளக்கமாகக் காணலாம்.
முதல் கட்ட நூல்களில் சீற்றம்,வலிமை,வீரம் ஆகியவற்றுடன் முருகன் தொடர்புபடுத்திப் படைக்கப்பட்டுள்ளான். சங்க இலக்கியத்தில் தலைவனுக்கு ஒப்புமையாக இச்சொற்கள் சில இடங்களில் பயின்று வந்துள்ளன. எனினும், இந்த முருகன் தொடர்பான உருவ விவரிப்புமுறை இந்த நூல்களில் இடம் பெறவில்லை. கோட்டம் என்ற குறிப்புக் கிடைக்கிறதே தவிர, அது தொடர்பான வழிபாட்டுமுறையை அறிந்துகொள்ள சான்றுகள் கிடைக்கவில்லை. முருக வழிபாடு தற்காலிக இடங்களில் நிகழ்த்தப்பட்டதற்கான சன்றுகளே கிடைக்கின்றன. இந்த வழிபாட்டுமுறையைத் ‘திணை வழிபாட்டுமுறை’ என்று குறிப்பிடலாம். இந்த வழிபாட்டு முறையில் குறிசொல்லுதல் வெறியாட்டு எனும் இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது, மனித வாழ்க்கையின் முக்கிய நிலையாக அமைகிற தலைவன் - தலைவி வாழ்க்கை முறையோடு தொடர்புடையதாக இந்த வழிபாட்டுமுறை அமைகிறது. இந்த வழிபாட்டை நிகழ்த்தியதில் ‘வேலன்’ என்ற ஆணுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவு ‘அகவன் மகள்’ என்ற பெண்ணுக்கும் முக்கியத்துவம் இருந்தது.
இரண்டாவது கட்ட நூல்களில் வெறியாட்டு என்ற முருக வழிபாடு, தனி ஓர் இலக்கியப் பாடுபொருளாக அமையும் பாங்கினைக் காண முடிகிறது. ஐங்குறுநூற்றில் பத்துப் பாடல்கள் இந்தப் பொருளில் இடம்பெற்றுள்ளன. இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட பரிபாடல் எனும் நூலில் செவ்வேள் எனும் பெயரில் முருகன் தொடர்பான பாடல்கள் கணிசமாக இடம் பெற்றுள்ளன. அந்தப் பாடல்களில் முருகன் தொடர்பான விளக்கத்தில் வட புல இலக்கியங்களில் உள்ள ஸ்கந்தன் தொடர்பான கருத்துகள் வெளிப்படையாக இடம்பெறுகின்றன. அதாவது, முருகன், வள்ளி, தெய்வானை எனும் மூவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புபடுத்தப் பெறுகின்றனர்.
மூன்றாவதாக இடம்பெறும் பத்துப்பாட்டு நூல்களில், முருகனோடு தொடர்புடைய குறிஞ்சி நில வாழ்வியலைப் பேசுகிற முக்கியமான நூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும். எனினும், அந்நூலிலும் முருகனுக்கான வெறியாடல் தொடர்பான பதிவு கதைப் போக்குடன் இணைக்கப்படவில்லை; ஓரிடத்தில் உவமையாக மட்டுமே வந்திருக்கிறது. அதாவது, வெறியாட்டு இல்லாமலேயே குறிஞ்சி நில மக்களின் காதல் வாழ்க்கை பேசப்பட்டுள்ளது.
நான்காவதாக அமைகிற திருமுருகாற்றுப்படை எனும் நூல் முருகன் சார்ந்த கோவில்களை ஒருங்கிணைத்துப் பாடுவதாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு கோவிலை அடையாளப்படுத்தி அந்தக் கோவிலில் அந்தணர்கள் மட்டும் வழிபடுவதாகவும், அது சார்ந்த வழிபாட்டு முறையை விளக்குவதாகவும் நூலில் திருவேரகம் எனும் பகுதி அமைகிறது. இதற்கு நேர் மாறாகப் பழமுதிர்சோலை என்ற மற்றொரு பகுதி அமைகிறது. இந்தப் பகுதியில் வேலன் ஆட்டுக்குட்டியை அறுத்து வெறியாட்டு நிகழ்த்தி முருகனை வழிபடுவது விளக்கப்பெறுகிறது. அதாவது, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் எனப் பெருங்கோவில் வழிபாடுகள் வளர்ந்துவிட்ட பிறகு, பழமுதிர்ச்சோலையில் திணை வழிபாட்டுமுறை எனும் பண்டைத் தமிழ் வழிபாட்டுமுறை விளக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும், பக்தி இலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் இடம்பெறும் இந்த நூலுக்கு 11, 13 ஆம் நூற்றாண்டுகளில் அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். வேறு எந்த சங்க இலக்கியத்திற்கும் இத்தகு பழைய உரைகள் கிடைக்கவில்லை. இந்த நூல் தமிழ்ப் பண்பாட்டின் அல்லது திராவிடப் பண்பாட்டின் தொன்மையான கூறாகத் திகழும் திணை வாழ்வியலை வலியுறுத்திச் சொல்வதாக இருக்கிறது.
தமிழர் வழிபாட்டுமுறையில், வழிபடுவோன் நேரடியாகக் கடவுளைப் போற்றிப்பாடிக் கடவுளைத் தன்னிருப்பிடத்திற்கு வருவித்துக் கடவுளிடம் தனக்கு வேண்டியதைப் பெறுதல் என்பது ஒரு முறையாக இருந்தது. இதற்கு அப்பாற்பட்டுப் வழிபடுவோன் கடவுளை நாடிச்செல்லலாம் என்ற ஆற்றுப்படைத் தன்மையைத் திருமுருகாற்றுப்படை விளக்குகிறது. ஆற்றுப்படை நூல்களில் ஏழ்மை நிலையிலுள்ள கலைஞன் ஒருவன் வள்ளலை நாடிச் சென்று தன்னுடைய கலைத்திறனைக் காட்டிப் பொருள் பெறுவதாகப் பாடுபொருள் அமைந்திருக்கும். அதேபோன்றுதான், அன்புக்காகவும் அறிவுக்காகவும் ஏங்குகின்ற ஒருவன் முருகக்கடவுளிடம் சென்று அதைப் பெறவியலும் என்பதை வலியுறுத்துவதாகத் திருமுருகாற்றுப்படையின் பாடுபொருள் அமைந்துள்ளது. இதை, ஒருவர் தனக்கான தேவையை அந்தத் தேவையை நிறைவேற்றும் ஆற்றல் வாய்ந்தவரை நேரில் சந்தித்துப் பூர்த்தி செய்துகொள்ளுதலைக் குறிக்கும். அதாவது,தேவைக்குரியவர்க்கும் தேவையை நிறைவேற்றுபவர்க்கும் இடையே ‘ஒருவரும்’ வேண்டியது இல்லை. என்று கருத்தாக்கம் செய்ய இயலும். இந்தக் கருத்தாக்கமானது, திருமுருகாற்றுப்படையில் இரண்டு முக்கியக் கூறுகள் கவனத்திற்கு உரியனவாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அவை வருமாறு:
1. ஒரு குறிப்பிட்ட கோவிலை அடிப்படையாகக் கொண்டு இறைவனைப் போற்றிப் பாடுதல்.
2. தமிழ் X சமஸ்கிருதம் அல்லது வைதீகம் X அல்வைதிகம் அல்லது அந்தணர் X வேலன் என இருவேறு எதிர்நிலைகளைச் சமன் செய்தல்.
இந்த இரண்டு கூறுகளும் தமிழ் பக்தி இலக்கியத்தில் வெகுவாக ஊடுருவியுள்ளன. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தமிழ் பக்தி இலக்கியத்தின் அடி வேர்களாகவே அமைகின்றன. தமிழ் பக்தி இலக்கியத்தில் தொடக்க காலத்திற்குரிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய பாடல்கள் எல்லாம் ஏதேனும் ஒரு கோவிலை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. நேரில் சென்று திருநாவுக்கரசர் பாடிய கோவில்கள் 125 என்றும், திருஞானசம்பந்தர் பாடிய கோவில்கள் 219 என்றும், சுந்தரர் பாடிய கோவில்கள் 84 என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது, கோவிலில் இருக்கிற இறைவனைப் பாடுதல் என்ற முறை திருமுருகாற்றுப்படைவழித் தமிழ் இலக்கிய வரலாற்றில் வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம். விவரம் வருமாறு:
திருமுருகாற்றுப்படையையும் பரிபாடலையும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்களாகப் பிஎல் சாமி குறிப்பிடுகின்றார்(1990). அதிலும், திருமுருகாற்றுப்படையைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்கிறார். இது தொடர்பாக பிஎல் சாமி அளித்துள்ள விளக்கத்தில் இடம்பெறும் கருத்தியல் வருமாறு:
- திருமுருகாற்றுப்படையில் ‘நரைக்காய்’ என்று ஒரு காய் இடம்பெறுகிறது. இது, சாதிக்காயைக் குறிக்கும் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். இந்தச் சாதிக்காய் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்குக்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டது. இதைத் தாவரவியல் அறிஞர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். - திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் இடம்பெறுகின்ற வைதீகத் தன்மை சார்ந்த முருகனுடைய அனைத்து விவரங்களும் ராமாயணம், மகாபாரதம், குமாரசம்பவம் ஆகிய வடமொழி நூல்களில் இருந்து தமிழுக்கு வந்தவை.
அதாவது, குறுந்தொகை முதலான முதற்கட்ட நூல்களில் உருவமற்ற கடவுளாகச் சித்திரிக்கப்பட்ட முருகன், கந்தழி என்று சொல்லப்பட்ட முருகன் திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகங்களையும் பன்னிரண்டு கரங்களையும் உடையவனாகப் படைக்கப்படுகிறான். இதற்கும் வடமொழிப் புராணங்கள்தான் அடிப்படை என்கின்றார். பி.எல்.சாமி. எட்டுத்தொகை நூல்களுள் ‘கொற்றவை சிறுவ’ என்று ஒரு தாயினுடைய மகனாக முருகன் சுட்டப் பெறுகிறான். ஆனால், திருமுருகாற்றுப்படையில் சிவனுடைய மகனாக முருகன் சொல்லப்பெறுகிறான். இதற்கும் காரணம் சமஸ்கிருத இலக்கியங்களுடைய செல்வாக்குத்தான் என்கிறார். ஆக, திருமுருகாற்றுப்படையில் தமிழ் அல்லது தமிழ் மரபுக்குரிய திணை வழிபாட்டு முருகக்கடவுளும் வைதீக வழிபாட்டு முருகக்கடவுளும் சமன் செய்யப்படுகின்றனர் எனலாம். இந்தச் சமப்படுத்தம் என்பது தமிழ், சமஸ்கிருதம் என்ற மொழிவேறுபாட்டு நிலைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட கடவுளுக்குரிய இருவேறு வழிபாட்டு முறைகளைச் சமப்படுத்துவது இங்குக் கவனத்திற்குரியது. அதுவும், புலால் உணவை மறுக்கிற அந்தணரும் புலால் உணவை வாழ்க்கையின் மையமாகக் கொண்ட வேடுவரும் முருகனை வழிபடுவதாகக் காட்டுவது கவனத்திற்குரியது. அந்தணர் பூவால் முருகனை வழிபட, வேலன் ஆட்டை அறுத்து வழிபடுகிறான். அதாவது, எதிர்நிலைப்பட்ட வழிபாட்டு மரபுகள் சமன் செய்யப்படுகின்றன. இதை, ‘சாதியச் சமநிலைப்படுத்தம்’ என்ற புரிதலுக்குரியதாகக் கொண்டு செல்லலாம். அதாவது, ஒரு குறிப்பிட்ட இறைவனுக்கான வழிபாட்டுமுறை சாதியத்திற்கு அப்பாற்பட்டதாக அமைய வேண்டும் என்ற கருத்து உருக்கொண்டுள்ளது எனலாம். சுருங்கச் சொல்வதென்றால், இறைவனைப் போற்றும்போது
- குறிப்பிட்ட கோவிலையும் அந்தக் கோவில் இருக்கும் ஊரையும் கவிதைப் படைப்பில் கொண்டு வருதல்,
- சாதிய சமநிலையை உருவாக்க விழைதல்
எனும் இரண்டும் திருமுருகாற்றுப்படையில் அறிமுகமாகியுள்ளன எனலாம். இந்த மனவோட்டம் பக்தி இலக்கியத்தில் பரிணமித்து வளர்ந்துள்ளது. விவரம் வருமாறு:
பக்தி இலக்கியத்தில் இடம்பெறுகிற நாயன்மார்களைச் சாதிய அடிப்படையில் அறிஞர் பலர் வகைப்படுத்தியுள்ளனர். அந்தணர் முதல் புலையர் வரை பல்வேறு வகுப்புகளை சார்ந்த நாயன்மார்கள் இடம்பெறுவதனை அறிஞர் விளக்கியுள்ளனர். இவர்களுக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்ட மதிப்பு நிலையில் வேறுபாடுள்ளது என்பதையும் திறனாய்வாளர்கள் சுட்டியுள்ளனர். எனினும், சிவன் அல்லது இறைவனுடைய பக்தன் என்ற நிலையில் அந்தணரான ஞானசம்பந்தர்க்கு நிகராகப் புலையர் வகுப்பைச் சேர்ந்த நந்தனார் நிலைநிறுத்தப் பெறுகிறார். இந்த நிலைநிறுத்தம்தான் சாதியற்ற ஒரு சமூகத்தை குறிப்பாக வழிபாட்டுமுறையில் சாதியற்ற சமூகத்தை உருவாக்க விழைந்துள்ளனர் என்று கருத வழிவகுக்கிறது. இதனை உறுதிசெய்துகொள்ள ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. புலால் உணவிலிருந்து வெகுதூரம் தள்ளிநின்ற சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தவர் திருநாவுக்கரசர். அவர் தன்னுடைய பாடலில்,
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
என்று குறிப்பிடுகிறார். ஆக, இதுவரை விளக்கப்பட்ட நான்கு காலகட்ட கருத்தியலைப் பன்னிரு திருமுறை இலக்கியப் பொருண்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த வளர்ச்சிநிலை கீழ்வருமாறு அமைவது தெரியவருகிறது.
- நிலை ஒன்று; ஆற்றுப்படை: கலைஞன் - வழிப்பயணம் - அரண்மனை - அரசன் \ வள்ளல் – சாதியற்ற நிலை – பொருளியல்வழி மேல்நிலையாக்கம்.
- நிலை இரண்டு; திருமுருகாற்றுப்படை: புலவன் – வழிப்பயணம் – கோவில் – முருகன் – அந்தணர் வேடுவர் சமன் செய்தல் – மதியியல்வழி மேல்நிலையாக்கம்.
- நிலை மூன்று ; பன்னிருதிருமுறை: நாயன்மார் – வழிப்பயணம் – கோவில் – சிவபெருமான் – ஆவுரித்து உண்பவரைக் கடவுளாக்குதல் - வழிபாட்டியல்வழி மேல்நிலையாக்கம்.
இந்த மூன்று கருத்துகளையும் கீழ்வருமாறு கொள்கையாக்கம் செய்யலாம்:
திணைச்சமூகக் காலகட்டத்தில் சாதியற்றநிலை இருக்கிறது. திருமுருகாற்றுப்படைக் காலகட்டத்தில் சாதியத்தைச் சமநிலைப்படுத்தும் சூழல் இருக்கிறது. நாயன்மார் காலத்தில் சாதியைச் சமநிலைப்படுத்துவதற்கு ஓர் அழுத்தம் தருகிற சூழல் உருவாகிறது.
இவற்றில், சாதியைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் தருகிற மூன்றாவது கருத்தானது ஏனைய திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் பெரியபுராணம் வழியாகப் பரவுகிறது.விவரம் வருமாறு:
பெரியபுராணத்தில் இடம்பெறும் நாயன்மார், தெலுங்கில் பால்குறிக்கி சோமநாதர் எழுதிய பசவபுராணத்திலும் இடம்பெற்றுள்ளனர்; கன்னடத்தில் ஹரீஸ்வரர் எழுதிய சிவகணதரகளேகளு எனும் நூலிலும் இடம்பெற்றுள்ளனர். பெரியபுராணம் சமஸ்கிருதத்தில் சிவ பக்த விலாசம் என மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகிற வேலன் வழிபாட்டு முறையின் மையப்பகுதிகளாக அமையும்
1) களம் அமைத்தல்
2) பலி இடுதல்
3) பாடுதல்
4) வழிபடுதல்
எனும் கூறுகள் இன்றைய வட கேரளப் பகுதியில் வழக்கில் இருப்பதனை பி.எல்.சாமி தம் கள ஆய்வுவழித் தெளிவாக விளக்கியுள்ளார். வட கேரளத்தில் ஆடப்படும் திரையாட்டம் தெற்குக் கர்நாடகத்திலும் இலங்கையிலும் ஆடப்படும் கோலம் எனும் ஆட்டத்திலும் வெறியாட்டின் கூறுகள் இடம்பெற்றுள்ளன என்கிறார். ஆக, சுருக்கமாகச் சொல்லுவது என்றால் தமிழ்த் திருமுருகாற்றுப்படையில் விதையாக இடம்பெற்ற ‘சாதிநீக்கம்’ எனும் கருத்து தமிழ் பக்தி இலக்கியத்தில் செடியாகவும் மரமாகவும் வளர்ந்தது, தன்னுடைய விழுதுகளைத் தன்னொத்த மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களில் இடம்பெற வழிவகுத்தது என்று குறிப்பிடலாம்.
குறிப்பு - 1
முருகன் (பொரு. 131, பரி. 8:81,82, அகம். 1:3, 59:11, 98:10, 158:16, புறம்.16:12, 23:4, 299:6), முருகு (திரு. 243,244, மது. 38 ,181,611,724, பட். 37, நற்.34:11, 47:10, 82:4, 225:1, குறு. 362:1, ஐங். 245: 3,247:3.249 2,308:4, பதி. 26:12, பரி. 8:65, 21:51, அகம். 22:11,28:6, 118:5,137:8, 138:10,181:6,232:4,272:13,288:4, புறம். 56:14,259:5), செவ்வேள் (பட். 154,155, பரி. 5:13,14,34:2,35:2), கொற்றவை சிறுவ (திரு 258.).
துணைநின்றவை
அறவேந்தன், இரா., ”திருமுருகாற்றுப்படையில் திணைப்பண்பாடு”, மணற்கேணி 61, 2023.
சாமி,பி.எல்.,1990(மு.ப.), சங்க நூல்களில் முருகன், சேகர் பதிப்பகம்,சென்னை.
திருமுருகாற்றுப்படை உரைவேறுபாடு, 2024(மு.பதி.), இரா.அறவேந்தன் & நித்தியா அறவேந்தன், என்.சி.பி.எச்., சென்னை.
- இரா.அறவேந்தன், பேராசிரியர் & தலைவர், சிறப்புநிலைத் தமிழ்த்துறை, ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி 110 067