கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. 1924-இல் பிறந்து 1965 -இல் மறைந்தவர் தமிழ் ஒளி. பாரதிதாசனின் புதல்வர் எனத்தகும் நிலையில் அவருடன் அணுக்கமாக இருந்தவர். பாரதிதாசனின் கவிதைகளையும், காவியங்களையும் பிரதியெடுத்துத் தரும் வாய்ப்பினால் தமிழ் ஆர்வமும், கவிதை இயற்றும் ஆற்றலும் கை வரப்பெற்றவர் தமிழ் ஒளி. இதை அவரே பாலசுந்தரம் என்ற தன் சக தோழரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டப் படிப்புக்குப் போன இடத்தில் அவரோடு பயின்றவர்தான் பாலசுந்தரம்.
படிப்போர் மலைத்து நிற்கும் வண்ணம் கவிதைகளையும், காவியங்களையும் படைத்துத் தந்த தமிழ் ஒளியின் பெயரைத் தமிழ்கூர் நல்லுலகம் ஏன் அடியோடு மறந்து விட்டது ? படைப்பிலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் தன் சிந்தனைகளை எழுதிக் குவித்திருக்கிறார் அவர். கவிதைகள், காவியங்கள், குட்டிக் கதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் என எல்லா இலக்கிய வடிவங்களிலும் அவருடைய சிந்தனைப் பறவை சிறகடித்திருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் முன்கை எடுத்துத் தமிழ் ஒளியின் நூற்றாண்டு நிகழ்வை விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்று பத்தாண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தது. தொடர்ந்து இந்த விஷயம் பற்றிய அறிக்கைகள், தயாரிப்புக் கூட்டங்கள், பிரசுரங்கள், ஊடகங்களில் நேர்காணல்கள் என அனைத்துப் பரப்புரை வடிவங்களிலும் தமிழ் ஒளியின் புகழைப் பாடிப் பரவி நின்றது த மு எ க ச. அதன் விளைவாக, கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டுத் தொடக்கத்தின் நிகழ்வுகளைக் கொண்டாட்டங்களுடன் தொடங்கியது அந்த அமைப்பின் முன்னணிப் படை. குறிப்பாக, சிகரம் ச. செந்தில்நாதன் அவர்களும், கல்வியாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களும் வேறு பல இலக்கிய ஆர்வலர்கள், பதிப்பக உரிமையாளர்கள், பேராசிரியர்கள், நாடக-ஊடகவியலாளர்கள் என முக்கிய மான அனைத்துத் தரப்பினருடனும் கரங்கோர்த்துப் பணியாற்றினர்.
“கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பையும், கவிஞரின் ஒன்பது தீந்தமிழ்க் காவியங்களின் தொகுப்பு நூலையும் கண் கவரும் பெரு நூல்களாகத் தொகுத்து வெளியிட்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தது நூற்றாண்டு நிகழ்வுக் குழ. அதனைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு பத்திரிகைகள், படைப்பாளிகளின் கவனம், கவிஞரின் மீது குவியத் தொடங்கியுள்ளது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, கண. குறிஞ்சி அவர்க ளின் கடும் உழைப்பில் வெளியாகியிருக்கிறது ‘புது மலர்’ - கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டுச் சிறப்பிதழ்.
இதழின் குரல் இப்படி ஒலிக்கிறது : ‘ கால வெள்ளத்தில் நமது தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்ட கவிஞர் தமிழ் ஒளியின் நினைவைப் போற்றும் வகையில் புதுமலர் இதழ், கவிஞரின் சிறப்பிதழ் ஆகத் தற்போது மலர்கிறது. வாழ்நாள் பூராவும் மக்களுக்காகச் சிந்தித்து, செயலாற்றி வந்த ஓர் அற்புதக் கவிஞனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மதிப்பு, அங்கீகாரம் அவரது வாழ் நாளிலும், அதற்குப் பிறகும் கிடைக்காமல் போனது வரலாற்றுச் சோகம். இருப்பி னும், கவிஞர் தமிழ் ஒளியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவரை அடையாளங் காட்டி, சிறப்புறக் கொண்டாடி வரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் மிகுந்த பாராட்டிற்கு உரியது. ”
“ இலக்கியத்தின் அனைத்துக் கூறுகளிலும் தனது படைப்பு முத்திரையைப் பதித்துச் சென்ற மாபெரும் இலக்கிய ஆசான் தமிழ் ஒளி அவர்கள். பாரதி, பாரதிதா சன் ஆகிய இருவரது கவிதைகளால் கவரப்பட்ட தமிழ் ஒளி, அவர்களின் வழித் தோன்றலாக விளங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் நேரடியாகப் பழகி, அவரது கவிதைச் சிறப்பை விதந்தோதியவர். ’உயிரில் உணர்வில் கலந்த கவிஞன் என் / உயிரில் உயிர் கொண்டு உலவுகின்றான். வெறும் / துயரில் நான் மூழ்கிக் கிடக்கவில்லை. அவன் / தொண்டு சிறந்திடத் தொண்டு செய்வேன் !” என அவரைப் பற்றிய கவிதையில் தனது திசைவழியைப் பறை சாற்றியவர்!“
“ தமிழ் ஒளி படைப்புகளின் பல்வேறு கூறுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் சில கட்டுரைகள் இந்தச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளன. இவை போதா. இன்னும், இன்னும் நுணுக்கமாகக் கவிஞர் தமிழ் ஒளியைப் பயின்று, அவரைக் கொண்டாட வேண்டியது தமிழ் மக்களின் வரலாற்றுக் கடமையாகும்”
இந்த வேண்டுகோளுடன் ஒலிக்கும் சிறப்பிதழின் அறிமுகக்குரல், பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் பெருங்குரலெடுத்துத் தமிழ்கூர் நல்லுலகின் முன் சமர்ப்பித்துள்ளது. ” தோழர் தமிழ் ஒளி-காலமும் கருத் தும்” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ. அரசு, ஓர் ஆழமான பரிசீலனையைக் கட்டுரை வடிவில் செய்திருக்கிறார். தோழர்கள் தியாகு, ச. தமிழ்ச்செல்வன், பேராசிரியர் க. பஞ்சாங்கம், மூத்த பத்திரிகையாளரும் சிறந்த மொழி பெயர்ப்பாளருமான தோழர் மயிலை பாலு, கல்வியாளரும் போராளியுமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதுமலர் இதழ் ஆசிரியர் கண. குறிஞ்சி, ஆய்வாளர்களான ஜமாலன், சதீஷ்குமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் அவரவர் பார்வை யில் தமிழ் ஒளியின் படைப்புகளை ஆராய்ந்து சொல்லியிருக்கின்றனர்.
தமிழ் ஒளியின் சிறுகதைகளைத் தோழர் ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் ஓர் இடதுசாரி, திராவிட தமிழியக்க முன்னோடி என நிறுவும் விதத்தில் ஜமாலன், கவிஞரின் கருத்துலகம் பற்றி கண. குறிஞ்சி, கட்டுரை இலக்கியம் பற்றிப் பேராசிரியர் க. பஞ்சாங்கம், கவிஞர் ஒரு பொதுமைச் செவ்வொளி என நிறுவும் தோழர் தியாகுவின் கட்டுரை தமிழ்ச்சமூகம் குறித்த கவிஞரின் பார்வை என சதீஷ் குமார் - ஆகப் பன்முகப் பார்வைகளில் இத்தனை பேரும் சிந்தனைக்கு விருந்து படைத்துள்ளனர்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் கட்டுரை சில நினைவலைகளைப் பகிர்கிறது. ஏனோ அது நிறைவடையாமல் பாதியில் நிற்பது போன்ற உணர்வையேற்ப டுத்துகிறது. இது ஒன்று தவிர, ஏனைய கட்டுரைகளைப் படிக்கையில், மறைந்த கவிஞர் தமிழ் ஒளியின் மாபெரும் ஆளுமை குறித்த பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. அது வெறும் பிரமிப்பாக மட்டுமன்றி, தமிழ் ஒளியின் பாதையில் நடைபோட்டு அவர் எட்ட நினைத்த சிகரங்களைத் தொட்டு நிற்கவும், தொடர்ந்து நடை போடவும் நமக்கு உத்வேகத்தையும், செயலூக்கத்தையும் வழங்குவதாக வும் அமைந்துள்ளது. இந்தச் சிறப்பிதழின் மூலம், கவிஞருக்குச் சிறந்ததோர் அஞ்சலியையும், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் அறிமுகத்தையும் ஒரு சேர வழங்கியிருக்கிறார் கண. குறிஞ்சி அவர்கள். இறுதியாக, தமிழ் ஒளி நம் போன்ற படைப்பாளிகளுக்குச் சொல்லிச் சென்ற ஓர் அறிவுரை அல்லது அறைகூவலை நினைவு கூர்ந்து இக்கட்டுரையை, நிறைவு செய்வது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன் :
“ தமிழ் நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்கையை வளப்படுத்தும் கலையைத்தான். கலை கலைக்காகவே என்று சொல்லும் கற்பனைச் சித்தாந்தத்தை அல்ல. சிறுபிள்ளைகளிடம் பலூன்களை ஊத விட்டு வேடிக்கை காட்டுவதைப் போல வெறும் உவமைப் பிதற்றலும், கனவுலக மாயாவாதக் கதைகளும் இன்றைய தமிழ் நாட்டைச் சாவுப் படுக்கையில் வீழ்த்தும் கொடிய தொற்று நோய்களைப் போன்றவை. நம் கண்ணெதிரே நம் உடன்பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான். அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து சிதறுகிறது. அதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடல்களில் “சுரீர் ! சுரீர் !” என்று அடிக்கும்படி எழதுவதுதான் உண்மையான எழத்தாளனின் கடமையும், நோக்கமும் ஆகும் !” ( வீராயி-கவியத்திற்குக் கவிஞர் தமிழ் ஒளியின் முன்னுரையிலிருந்து ).
‘இடதுசாரி, திராவிடத் தமிழியக்க முன்னோடி- கவிஞர் தமிழ் ஒளி ’ என்ற நீண்ட கட்டுரையை ஆய்வாளர் ஜமாலன் அவர்கள் மிகுந்த செறிவுடனும், பொருள் பொதிந்த விதத்திலும் படைத்துள்ளார். க ட்டுரையின் தொடக்க வரிகள், கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை வரிகள் : “ போகும் வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும் வழியெனது போக்குக்கிசைந்த வழி!” கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளை, தான் நீண்ட காலம் அறிந்து பயிலாமல் தவற விட்டு விட்ட இழப்புணர்வோடும், அது குறித்த குற்றவுணர்வுடனும் ஜமாலன் இக்கட்டுரையைப் படைத்தி ருக்கும் விதம், அவரின் அறிவுலக நேர்மையை வெளிக்காட்டுவதாயிருக்கிறது. ஒரு படைப்பாளியாகத் தமிழ் ஒளி அவர்களின் படைப்பு மனதையும், நாடோடி வாழ்க்கையையும் கட்டற்ற சுதந்திரத்தைத் தனது வாழ்வாக அமைத்துக் கொண்ட போக்கையும் அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் வடிவில் படிக்கும் போது உணர முடிகிறது என்கிறார் ஜமாலன்.
“ ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த தமிழ் ஒளி, தமிழ் இலக்கியத்தில் தலித்துகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் பேரவலங்களைத் தனது இலக்கியங்களாகப் பதிவு செய்துள்ளார் ” என்று குறிப்பிடும் ஜமாலன், தனது கருத்திற்குச் சான்றாதாரங்களாகக் கவிஞரின் பல படைப்புகளை மேற்கோள் காட்டுகிறார். 1945-இல் எழுதப்பட்ட ‘நிலை பெற்ற சிலை’ காவியம், ’கோசல குமாரி’ காவியம், ‘மாதவி காவியம்’, ‘குற்றப்பரம்பரை’ கதை போன்றவை ஜமாலனின் கட்டுரையில் விவாதிக்கப்படும் படைப்புகளாகும். ஆய்வுகளும் அரசியலும், தமிழ் மொழியும் சமஸ்கிருதமும், தமிழ் மொழி வரலாறு, புராணக்கதைகள் : கீதை, புத்தர், மற்றும் மூவேந்தர்கள் போன்ற துணைத்தலைப்புகளில் விரிவாக ஆராய்ந்து தன் கருத் துகளை முன் வைக்கும் ஜமாலனின் நடை மிக எளிய, இனிய தன்மையுடன் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும். ஆய்வுக் கட்டுரை என்றால், எளிதில் புரிந்து கொள்ள முடியாத கடுந்தமிழ் நடையிலேயே இருக்க வேண்டும் என்ற பொதுப்போக்கிற்கு நேர் மாறான சொல் முறை இவருடையது. வாசித்துப் பார்த்தால் மட்டுமே இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு பாராட்ட முடியும். கவிஞர் தமிழ் ஒளிக்கான மரியாதை, நினைவு எப்படி அமைய வேண் டும் என்பதற்குத் தன் முடிவுரையின் இறுதியில் சில முக்கியமான கோரிக்கை களை முன்வைத்துத் தன் கட்டுரையை நிறைவு செய்கிறார் ஜமாலன்.
தமிழ்ச் சமூகம் குறித்த தமிழ் ஒளியின் பார்வை - கட்டுரையில் சதீஷ்குமார் தன் ஊகங்களைப் போதிய ஆதாரங்களின் துணையுடன் முன்வைத்திருக்கிறார். இக்கட்டுரையை ஒட்டியும், வெட்டியும் நாம் நிறைய விவாதிப்பதற்கான வெளி இருக்கிறது என்பதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். குடிப்பழக்கத்தைக் கொண் டாடுவதும், போதையில் மூழ்கித் தன்னிலை மறந்தும் படைப்பதுதான் கவிதை, இலக்கியம் என்றெல்லாம் இன்று பல கவிஞர்கள் குடியைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், தமிழ் ஒளி தனது ‘கவிஞன் ஒரு குடிகாரன்’ என்னும் கட்டுரையில் இதற்கு ஒரு மாற்றுக் கருத்தை முன் வைப்பதை இக்கட்டுரை பொருத்தமாகக் காட்டியிருக்கிறது : “ நமது புலவர்கள் பலர் கவிதையைப் புகலிடமாகக் கொள்ளும் போதை வழியில்தான் சென்று விட்டனர். இத்தகைய ‘கஞ்சா’க் கவிதைகளைச் சிருஷ்டிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல “ என்கிறார் தமிழ் ஒளி !
தமிழ் ஒளியின் கருத்துலகம் என்ற கட்டுரை, புது மலர் இதழ் ஆசிரியர் கண. குறிஞ்சி அவர்களின் பார்வையில், கவிஞரின் கருத்துலகம் எப்படிப் பொதுவுடை மைக் காதலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது என்று நிறுவுகிறது. மே தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என்றால், அதை முதலில் வரவேற்றுக் கவிதையில் கொண்டாடி முழங்கிய முதற் கவிஞன் தமிழ் ஒளியே என்று அறியும் போது நாம் வியப்பிலும், பெருமித உணர்விலும் மூழ்கிப் போவோம் என்பது உறுதி ! தொழிலாளி, முதலாளி என்ற இரு வேறு வர்க்கங்களுக்கு இடையே நடு நிலை என்ற ஒன்று இருக்க முடியாது என்று தமிழ் ஒளி திடமாக நம்பியவர். எனவே, “ ஏ, செந்தமிழனே, என்னுடைச் சகோதரா ! நீ யார் பக்கம் ? கொள்ளையடித்திடும் கொடியவர் பக்கமா ? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா ?” எனும் கவிதையில் நேரடியாக ‘நீ யார் பக்கம் ?’ என்ற கேள்வியை முன் வைப்பதைக் காட்டுகிறார் கண. குறிஞ்சி அவர்கள்.
கவிஞரின் பொதுவுடைமை நேயம், தமிழ் நாட்டுப் புவிப்பரப்புடனோ, இந்தியத் துணைக்கண்ட எல்லைகளுக்குள்ளோ குறுகி விடவில்லை;அது உலகளவு விரிந்து பறந்து ஆர்த்த கவி முரசு என்று நிறுவுகிறார் கட்டுரையாளர்.
மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற பேராசிரியரும், பதிப்பாசிரியப் பணிகளைச் செம்மையாக மேற்கொண்டு ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் ஆக்கங்களைத் தொகுத்து நூல்களை வெளியிட்டு வரும் ஆய்வாளருமான வீ. அரசு அவர் களின் விரிவான நேர்காணல், இந்த இதழின் சிறப்பம்சம் எனலாம். அவரின் சொந்த இல்லத்தில் சுமார் இருபத்தைந்தாயிரம் நூல்களுடனும், எண்ணற்ற சிற்றிதழ்களின் தொகுப்புகளுடனும் அமைக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் நூலகம் பற்றிய தகவல்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவை நம்மைப் பெரும் பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. தனக்குப் பொருளாதார ரீதியில் நல்ல ஊதியம் கிடைத்ததால்தான் தன்னால் இவ்வளவு பெரிய நூலகத்தை உருவாக்க முடிந்தது என்று சொல்கிறார் பேராசிரியர். இவரைப் போன்றே இலட்சக் கணக்கிலான பேராசிரியர்கள் -அவர்களிலும் பலர் கணவன், மனைவி இருவருமே பேராசிரியப் பணியில் இலட்சக் கணக்கில் ஊதியம் பெறுபவர்கள்தாம் &- எண்ணற்றோர் இருப்பினும், அவர்களில் மாதம் குறைந்தது ஓர் ஆயிரம் ரூபாய்க்காகிலும் புத்தகத்திற்காகச் செலவு செய்வோர் எத்தனை பேர் ? ஆயிரம் கூட வேண்டாம், ஒரு நூறு ரூபாயைச் செலவு செய்யட்டுமே பார்ப்போம் ! அத்தகையோரை என்னுடைய ஐம்பதாண்டுக் கால அனுபவ த்தில், விரல் விட்டு எண்ணி விடலாம்.
தான் பல காலம் முயன்று தேடித் தேடித் தொகுத்துப் பாதுகாத்திருந்த பல்வேறு சேகரிப்புகளிலிருந்து அவற்றின் உள்ளடக்கங்களைத் தீர ஆராய்ந்து பல்வேறு நூல்களாக அவற்றை வெளியிட்டு யாரும் பயன் பெறும் வகையில் பதிப்புப் பணிகளிலும் பேரா. வீ. அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் பதிப்பித்த நுல்களைப் பாருங்கள் : சென்னை இலௌகீக சங்கம் என்ற நாத்திக இயக்கம் 1878-&1888 ஆம் ஆண்டுகளில் நடத்தி வந்திருந்த தத்துவ விவேசினி என்ற இதழையும், அதே அமைப்பு ஆங்கிலத்தில் நடத்திய The Thinker என்ற இதழையும் தனது ஆய்வு மாணவர்கள் இருவரின் உதவியுடன் பகுப் பாய்வு செய்து அவ்விதழ்களில் வெளியாகி இருந்த செய்திகளைப் பொருண்மை வாரியாகப் பகுத்து அனைத்தையும் தமிழில் நான்கும், ஆங்கிலத்தில் இரண்டு மாக மொத்தம் ஆறு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் என்ற பெரியவர் படைத்த அனைத்து ஆக்கங்களையும் தொகுத்து அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு என்ற பெரு நூலாகப் பதிப்பித்துள்ளார் வீ. அரசு அவர்கள்.
மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர் எனப் போற்றப் படுபவருமாகிய வ. உ. சிதம்பரனார் அவர்களின் சிறு நூல்கள் பலவற்றையும் தேடித் தொகுத்து ‘வ. உ. சி. நூல் திரட்டு’ எனும் பெயரில் பதிப்பித்துள்ளார். இந்த நூலைத் தற்போது சில புதிய இணைப்புகளுடன் சேர்த்துத் தமிழ் நாடு பாட நூல் கழகம் ‘வ. உ. சி. பன்நூல் திரட்டு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இவை தவிர, தமிழ் நாடகத்தந்தையான சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நாடகங்கள், மயிலை சீனி. வெங்கடசாமியின் ஆக்கங்கள், புதுமைப்பித்தனின் இதழ் வழிக் கதைகள் ஆகியவற்றையும் தொகுத்தும், விரித்தும் பல்வேறு பதிப்புப் பணிகளைப் பேரா. வீ. அரசு அவர்கள் செய்துள்ளார். இவரின் பன்முகப் பணிகள் குறித்துத் தமிழில் விரிவாக வெளியான நேர்காணல் இதுவே முதன்முறையாயிருக்கும் என்று தோன்றுகிறது. இதனை வெளியிட்டதன் மூலம், இவரின் அடியொற்றி மேலும் பல இளம் ஆய்வாளர்கள் இத்தகைய பணிகளைத் தொடர்வார்கள் என நம்பலாம்.
கவிஞர் தமிழ் ஒளி சிறப்பிதழில் அவரின் காலமும் கருத்தும் என்ற விரிவான கட்டுரையொன்றையும் வீ. அரசு அவர்கள் படைத்திருக்கிறார். இக்கட்டுரை தமிழ் ஒளியின் வாழ்க்கை, அவரின் கவிதைத்திறன், படைப்புகள், அவற்றின் காலப் பொருத்தம், கருத்துச் செறிவு என்ற பல்வேறு பரிமாணங்களும் படிப்போருக்குப் புலனாகும் வண்ணம் ஆழ்ந்த பொருள் பொதிந்த வகையில் படைக்கப்பட்டுள்ளது. 1961-இல் தமிழ் ஒளி வெளியிட்ட ‘போராடும் மனிதனின் புதிய உண்மைகள்’ என்ற சிறு நூலின் துணை கொண்டு பல்வேறு புதிய செய்திகளை அரசு நம்முன் வைத்துள்ளார். தமிழ் ஒளியின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பகுத்துக் கொண்டு, ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிஞர் எவ்வாறு தன் படைப்புகளில் அக்காலகட்டத் தமிழ் நிலத்தின் வரலாற்றையும், இயக்கங்களின் போக்கையும், மக்களின் மனங்களில் இடம்பெற வேண்டிய முற்போக்குக் கருத்துக்களையும் கவியழகும், கற்பனைத் திறனும் மேலோங்கப் படைத்தளித்திருக்கிறார் என்பதை நாம் இந்தக் கட்டுரை மூலம் பெருமளவுக்குப் புரிந்து கொள்கிறோம். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும் சந்தித்த சமர்கள், தாக்குதல்கள், சாதனைகள் ஆகியவற்றைப் பாடியிருக்கிறார். மே தினமே வருக என்ற கவிதையில், மே தினத்தின் பெருமைகளைக் கூறி, அதனைத் தமிழ் நிலத்தின் உழைப்பாளி மக்களின் சார்பில் வரவேற்று மகிழ்ந்திருக்கிறார் தமிழ் ஒளி. இப்படி எண்ணற்ற தகவல்களின் களஞ்சியமாக, அதே சமயம், வெறும் தகவல் குவியலாக மட்டும் அமைந்து விடாமல், உணர்ச்சி குன்றாத நடையில் அரசு தந்துள்ள இக்கட்டுரை வாசிக்கும் போதே பரவசப்படுத்துகிறது.
ச. தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழ் ஒளியின் சிறுகதைகளைப் பற்றிய செறிவு மிக்க கட்டுரையைப் படைத்துள்ளார். தன் கைக்குக் கிடைத்த குருவிப்பட்டி என்ற ஒரு தொகுப்பிலுள்ள கதைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தமிழ் ஒளியின் கதையுலகைப் பற்றிய ஒரு சுவையான, ஆர்வமூட்டும் படைப்பைத் தந்திருக்கிறார் தமிழ். குறிப்பாகத் தமிழ் ஒளியின் ‘புறாவும் டாலரும்’ என்ற உருவகக் கதையை விரிவாகக் குறிப்பிட்டு, இன்றும் கூட இக்கதையின் பொருத்தப்பாடு எந்த அளவுக்குச் சமகாலத் தன்மையுடையதாக இருக்கிறது என்று நிறுவி இருக்கிறார். சமாதானத்தின் விதையை நாடு நாடாகச் சென்று விதைக்கும் புறா ஒன்று டாலர் தேசத்திற்கும் போய் விதைக்கிறது. அங்கே டாலர் கோபுரப் பேர் வழி தன் தொப்பை வயிற்றுடன் புறாவை மிரட்டுகிறான் : “உன் உயிர் என் கையில் ! திமிர் பேசினால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறான். உடனே புறா ஜிவ்வென்று ஆகாயத்தில் எழம்பி ஒரு குரல் எழப்புகிறது. காற்று, அதை உலகமெங்கும் பரப்பியது. செங்கொடியின் ஒளி வெள்ளம், புறாவைச் சூழ்ந்து நின்று ஒரு பாதுகாப்பு அரணாகி றது. அருணோதயத்தின் அடையாளமான அந்தச் செங்கொடியின் கீழ் உலக மக்கள் எல்லாரும் திரண்டு நிற்கிறார்கள். ” வாழ்த்துச் செய்தி கொண்டு வந்த அமைதிப்புறாவை டாலர் வியாபாரி கொல்லப்போகிறானாம்” என்ற செய்தி உலகம் பூராவும் பரவி விடுகிறது. ”அவனுடைய டாலர்க் கோபுரத்தை இடித்து நரகத்தில் போடுங்கள்!” என்று அசரீரி போலப் புறா கட்டளையிடுகிறது. காற்று அக்கட்டளையை நிறைவேற்றச் சூறாவளியாக மாறி டாலர்க் கோபுரத்தின் மேல் மோதுகிறது. மேகங்கள் இடிமுழக்கத்துடன் அங்கு திரள்கின்றன. கோபுரத்தின் மேல் பேரிடிகளை வீசியெறிகின்றன. ”டாலர்க் குண்டு ஒழிக ! மரண வியாபாரி ஒழிக !”என்ற முழக்கம் வான மண்டலமெங்கும் எதிரொலித்தது. இருளைக் கிழித்துக் கொண்டு மக்கள் நடந்தார்கள். புறாவுக்கு வாழ்த்துக் கூறினார்கள். மதுரமான அந்த வேளை வந்தது. செவ்வானத்தில் தவழ்ந்த இந்திர வில் புறாவின் சிறகுகளை முத்தமிட்டது. “சமாதானம் வாழ்க !” என்று புறா இசை பாடியது. ஐம்பதுகளில் உருவான சமாதான அணியின் இயக்கத்தை வரவேற்று இக்கதையைத் தமிழ் ஒளி படைத்திருக்கிறார். இன்றைக்கும் பொருந்துகின்ற ஓர் ஏகாதி பத்திய எதிர்ப்புக் கதையை அன்றைக்கே தமிழ் ஒளி தந்திருக்கிறார் “ என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவதைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது!
இந்தச் சிறப்பிதழில் வெளியாகியுள்ள ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் ஒரு பத்தியளவுக்கு எழுதினாலே இன்னும் பல பக்கங்களுக்கு இக்கட்டுரையை நான் விரிவாக்கிக் கொண்டு போக வேண்டும். அவ்வளவு சுவை, அவ்வளவு பயன் ! வாசகர்கள் வாங்கிப்படித்து இச்செய்திகளை வீடுகள்தோறும், வசிக்கும் மனிதர்களின் கண்கள் தோறும் கொண்டு சேர்த்திட வேண்டும். இதுவே என் வேண்டுகோள்!
- கமலாலயன்