மண்ணைக் கீறி முளைவிட்டெழும் ஒரு புல்லின் அசைவு, காற்றின் மேனியில் இயற்கை எழுதிய முதற் பாடலாகிறது; பசுமை அதன் தலைப்பாகிறது. பின்னர்த் தொடர்ந்து மண்ணில் இருந்து விண் நோக்கி எழும் எல்லாமும் பாடல்களாய் விரிவதை நுட்பமாய் உணர்ந்த மானுடவுள்ளங்கள் தத்தம் மொழிகளில் இசைக்கத் தொடங்கின. களம் அமைத்துக் கொடுத்த கற்குகைப் பாறைகளும், தலையசைத்துக்கேட்ட தமிழகத்துப் பனைமரங்களும் இப்பாடல்களைத் தாங்கும் தாள்களாயின.

இவ்வாறெல்லாம், காட்டிலும், மேட்டிலும், வீட்டிலும், வெளியிலும், தோட்டத்திலும், கழனியிலும், இன்னும் எங்கெல்லாமோ பணி¢ செய்யும் பாட்டாளிகள் தன்பாடு மறக்கத் தமிழ்பாடும் மரபை, பன்னெடுங் காலமாய் வழக்கத்தில் வைத்திருந்ததை வரலாறறியும்.

Jeevanandhamதம் ஏர் பிடித்தபடி உழவர்கள் நிலங்களில் இசைத்தனர். வில்லேர் உழவர்கள் போர்க்களத்திலும், சொல்லேர் உழவர்கள் கலைத்துறையிலும் தம்பணி விரித்தனர். ஆக, எல்லாக் காலங்களிலும் பாடல்கள் அகக்கைகள் பற்றிய ஆயுதங்கள் ஆகியிருக்கின்றன. சமய எழுச்சிக் காலத்தில் அவை போரியக்கங்களை விடவும் பேரியக்கங்களாக உருப்பெற்றன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இசைத்த இறைத்தமிழ்ப் பாடல்கள் தத்துவ, கவித்துவ எல்லைகளுக்கும் அப்பால் பரந்து விரிந்த பிரபஞ்சப் பேருணர்வை மானுடத்துக்குள் கொண்டுவந்து நிறைத்தன.

ஆயினும் அளவுக்கு அதிகமான பயன்பாட்டுக்கு உள்ளாகும் எந்தவொன்றும் உள்ளீடற்றுப்போகும் என்பதற்கு ஒரு சான்றாய், இந்தப் பக்திப்பாடல் மரபும் தமிழில் ஆயிற்று.பன்னெடுங்காலம் சமயக் கயிற்றால் பிணைப்புண்டு கிடந்த, இப்பாடல் மரபைத் தொட்டுத் துலக்கிச் சமுதாயத் தளத்தில் பீடுநடை போட வைத்தவர் பாரதி.

மக்கள் மத்தியில் உலாவந்த பக்திப்பாடல்களின் மெட்டுக்களை மனக்கொண்டு அந்த மரபில் தத்தம் உணர்வுகளை இசைக்கும்போக்கு, தமிழில் உண்டு.அதில் பாரதி, பாரதிதாசன் மரபில் தானும் ஒருவராய் எழுந்து வந்தவர் தோழர் ஜீவா. ஆனால், அவர்களைப் போலன்றி, தனது பாடல்களில் கவித்துவத்தை விடவும் கருத்துருக்களுக்கே அதிக முக்கியத்துவம் தந்தவர் ஜீவா.கருத்துக்கள்தாம் அந்த மெட்டில் வந்து அமர்ந்து கொண்டன என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாட்டாளி ஜீவாவின் பரிமாணங்கள்

பூதப்பாண்டியில், உமையம்மை, பட்டம் பிள்ளையின் மைந்தனாகப் பிறந்து (21.08.1906), பிறந்த குலத்தின் தெய்வப் பெயரைத் தம் உயிரில் தாங்கிச் ‘சொரிமுத்து’வாகி, பின்னர், ‘சீவானந்த’ னாகி, தனித்தமிழ் ஈடுபாட்டால், ‘உயிர்அன்பன்’ என்று இருந்து, பொதுவுடைமை இயக்கத்தின் பேராசானாக, ‘ஜீவானந்தம்’ என்ற பெயரொடு நிமிர்ந்து அனைத்து மக்களாலும் தோழர் ஜீவா என்று அழைக்கப்பெற்ற பாரதிநேயர்; கவிஞராக, ஆய்வாளராக, இதழாளராக, எழுத்தாளராக, சொற்பொழிவாளராக, மொழிபெயர்ப் பாளராக, நாடகாசிரியராக, இயக்கத் தலைவராக, ஆற்றல்சார் அரசியல் மேதையாக, அனைத்திற்கும் மேலே அற்புத மனிதராகத் திகழ்ந்த பேரறிஞர்.

முன்னொட்டுப் பின்னொட்டுக்களாய் எத்தனை பட்டங்களை, பாராட்டுமொழிகளைத் தந்தாலும் ஜீவா என்ற இரண்டெழுத்திற்கு முன்னால் அவை வெற்று ஒலிகளாய்த் தோற்றுவிழும்படி தன் வாழ்வைத் தன்னிகரற்ற பெருவாழ்வாக்கிக் காட்டி வாழ்ந்தவர்.56 ஆண்டுகள் (1906-1963) என்று அவர் வாழ்நாளை வரலாறானது வரையறுத்துத் தந்தாலும் பலயுகங்களின் பொருள்பொதிநெறிகளைத் தம் காலத்தில் தாங்கித் தமிழில் தந்த பெற்றியாளர்.

அவருக்குச் சங்க இலக்கியமும் தெரியும்; சமய இலக்கியமும் தெரியும்; சமகால இலக்கியமும் தெரியும். உள்ளூர் தொடங்கி உலகம் வரை எழுந்த இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஆழ உள்வாங்கி, அவற்றுள் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு, தம் எழுத்திலும் பேச்சிலும் எடுத்துக்காட்டிய இலக்கியப் பேராசான். என்றாலும், அவரின் ஆற்றல்சார் படைப்பின் ஊற்றுக்கண் கவிதை தான். பலருக்கும் அதுதான் படைப்பின் மூலம். ஜீவாவுக்கு அதுதான் ஆற்றல்தரு வேதம்.

வளரிளம் பருவத்திலேயே அவருக்கு வசமாகிய சொற்களைக் கொண்டு அவர் கட்டி எழுப்பிய பாடல்கள் காற்றின் திசைகளில் பயணம் செய்தன. தன்னுணர்வினை ஒதுக்கித் தம் காலச் சமுதாய எழுச்சிக்கு வித்திடும் மண்ணுணர்வினையே அவர்தம் பாடல்கள் வெளிக் காட்டி நின்றன. இயக்கம் அதுதான் அவர் பாடல்களின் அடிநாதம்.

சொல்லொடு சொல் இசையோடு கை கோத்து எழுந்த வேகத்தில், சிந்தனைச் சீற்றமும் செயல் பாட்டிற்கு உந்தித்தள்ளும் ஆற்றலும் உள்பொதிந்து கிளம்பும் அழகைத் தமிழகம் தரிசித்து உணர்ந்தது.

மேடைகளில், இயக்க முழக்கங்களில் மட்டுமன்றி இசைத்தட்டிலும் அவர்தம் பாடல்கள் ஏற்றப்பெற்றன. இன்றைக்கும் அப்பாடல்கள் கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் பல்வேறு இராகபாவங்களில் இசைக்கப்படுகின்றன. என்றாலும் அந்நாளில், ‘ஜீவாவின் ‘காலுக்குச் செருப்பும் இல்லை’ என்ற பாடலை, இசைத் தட்டில் ஏற்றப் பாடிய கோவை ராமதாஸ் பாடியது போல் இல்லை’ என்கிறார் தோழர் தா.பாண்டியன்.

“அந்தப்பாடலைப் பலர் பல ராகங்களில் பாடுகிறார்கள். ஆனால், கோவை ராமதாஸ் பாடலின் பொருளோடு இரண்டறக் கலந்து, உணர்ச்சியோடு, அழுகுரலில் ஆனால் கம்பீரமான வெண்கலத் தொனியில் பாடியிருந்தார். எனவே, கேட்டோர் கண்களில் நீர் வழிந்ததில் வியப்பே இல்லை. ஏனெனில், அவரது பாட்டில் சோகம், வீரம் கலந்திருந்தது.

பலமுறை கேட்டுக் கேட்டு அழுதிருக்கிறேன். ஆனால், அழு வதற்காக எழுதப்பட்ட பாடல் அல்ல அது.இறுதியில், ‘ஒன்றுபட்டுப் போர் புரிந்தே உயர்த்திடில் செங் கொடியை, இன்றுடன் தீருமடா இம்சை முறைகள் எல்லாம்” என முழங்கி, எழ வைத்த பாடல் அது” என்கிறார் அவர். (தொ.1, ப.XV-XVI) அவ் வரிசையில் பாடப்பெற்ற இன்னொரு பாடல், ‘சமதர்மம் வேண்டும்’ என்பது.

பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடச் செய்த பாரதி மரபில், பாட்டாளி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இவர் பாடிய பாடல்கள் 122 எனக் கண்டறியப் பெற்றுத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் காலத்தால் முந்திய பாடல் அவர்தம் பதினேழாவது வயதில் பாடப்பெற்றதாகும். அதற்கும் முன்னதாக அவருள் இசைபாடும் ஆற்றல் எழுந்த பின்னணியை இங்குச் சுட்டுவது மிகவும் பொருத்தம்.

கோவிலை விட்டு...

பள்ளிப்பருவத்தில் அக்கால வாழ்க்கை அமைத்துத் தந்த பக்தி மரபில் ஊறித் ததும்பியவர் ஜீவா. தன்னொத்த சிறுவர்களோடு அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீராடி, மெய்யெலாம் நீறு பூசி வழிபாட்டைத் தொடங்குவது அவர் வழக்கம்.தன் ஊரிலுள்ள பூதலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி (சுமார் முக்கால் மைல் தொலைவு) உள்ள கிரிவீதி முழுவதையும் மும்முறை வந்து, வழியில் இருக்கும் விநாயகருக்கு, 10 தோப்புக்கரணங்கள் போட்டுவிட்டு அவர் வீடு திரும்பக் காலை 7 மணி ஆகிவிடும். தேர்த்திருவிழாக் காலங்களிலும், மார்கழி மாதம் 30 நாட்களிலும் பஜனைக் கோஷ்டியில் ஒருவராகிப் பாடல்கள் பாடுவது அவர் வழக்கம்.

அக்காலகட்டத்தில், “அவர் 3ஆம் படிவம் படித்துக் கொண்டிருந்தபோது, அவரோடு படித்த தோழனாகிய மாணிக்கம் என்ற ஆதிதிராவிட வாலிபப் பையனை எங்கள் ஊர் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெளியே வரும் போது கோவில் நிர்வாகஸ்தர்கள் விஷயத்தைத் தெரிந்து அவரை அணுகிக் கேட்க, இவன் என் சகோதரன்தான் என்று முழங்கினார். நிர்வாகஸ்தர்களுக்கு உண்மை புலனாயிற்று.பறையனைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று தீட்டுச் செய்த குற்றத்திற்காக, என் தந்தைக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது அவர் உள்ளத்தில் எழுந்ததுதான்,

“வாயற்ற நாய்,கழுதை, மலம் தின்னும்

பன்றியும் வழியோடு செல்லலாமாம்-

மனிதர்நாம் சென்றிடில் புனிதமற்றுத் தீட்டு

வந்துலகு முழுகிப் போமாம்”

என்ற பாடல்” என்கிறார் ஜீவாவின் தம்பி, ப.நடராஜன். (நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, ப.54)

தெய்வபக்தியைத் தேசபக்தியாக்கி...

இவ்வாறு சமயத்தளம் விட்டுச் சமுதாயத் தளத்திற்கு ஜீவாவின் கவியாற்றலை, மடைமாற்றியது இந்நிகழ்வு. இந்த அடிப்படையில் தான், பலமுறை பஜனைக் கோஷ்டியோடு சேர்ந்து அவரால் பாடப் பெற்ற பக்திப் பாடல்களின் மெட்டுக்களில் அரசியல், சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய புரட்சிப்பாடல்கள் உதயமாயின.

“பெற்ற தாய்தனை மகம றந்தாலும்

பிள்ளை யைப்பெறு தாய்ம றந்தாலும்

உற்றதேகத்தை உயிர்ம றந்தாலும்

உயிரை மேவிய உடல்ம றந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலைம றந்தாலும்

கண்கள் நின்றுஇமைப் பதுமறந்தாலும்

நற்றவத் தவர்உள் ளிருந்து ஓங்கும்

நமச்சி வாயத்தை நான்மற வேனே!”

என்ற வள்ளலாரின் பாடல்,

“பெற்றதாய் தந்தை தோழர்

பிணங்கியே வெறுத்திட் டாலும்

சுற்றமும் சத்ரு வாகித்

துயர்பல விளைத்திட் டாலும்

கற்றவர் நகைத்திட் டாலும்

கவர்மெண்டின் பகையுற் றாலும்

உற்றசீர் சமதர் மத்தால்

உறுபயன் மறக்கிலேனே!”

என்ற ஜீவாவின் பாடலாக வெளிப்படுகிறது.

‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற சுந்தரரின் திருத்தொண்டத்தொகை மரபில்,

“சொல்லரும் தேசத் தொண்டர் அடியார்க்கும் அடியேன்

சுத்த சமத்துவம் சொல் தோழருக்கும் அடியேன்

வெல்லும் பூரண சுயேச்சை ஜவஹர்லாலுக்கு அடியேன்

விரியுலகப் பெரியார் காந்தி அடியார்க்கும் அடியேன்

தொல்லைமதக் கொடுமை தூர்க்கும் வீரர்க்கு அடியேன்

சுயமரியாதை ராமன் துணைவர்க்கு அடியேன்

நல்ல பொதுவுடைமை லெனின் முதலார்க்கு அடியேன்

நாடொறும் விடுதலை நான்ஒலிக்கும் ஆளே”

என்று தோழர் ஜீவா விரிக்கும் பாடலில், அவர்தம் இயக்க வரலாறு துலக்கமாய் வெளிப்படக் காணலாம்.

“மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்” என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடலின் ஒவ்வொரு இறுதியடியும் ‘சொல்லுநா நமச்சிவாயவே’ என்று முடியும்.

அந்த மரபை அப்படியே உள்வாங்கி, சென்னையில் நடந்த மாகாணத் தீவிர இளைஞர் மாநாட்டில், ஜீவாவால் பாடப்பெற்ற பாடல், ‘சொல்லு நா சமதர்மமே.’ அதில் பங்கேற்ற பம்பாய்த் தலைவர்கள் ‘இன்னும் ஒருமுறை’ என்று விரும்பிக் கோரிய பாடல் இது.பின்னர் எத்தனையோ அணிவகுப்புகளில், பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான தோழர்களால் முழங்கப்பெற்ற பாடல்.

மார்க்ஸ், லெனின், காட்டிய மார்க்கத்தைப் படிப்பறியாப் பாமரர்களின் நெஞ்சங் களில் நிலைத்திருக்கச் செய்த சரித்திரத்தைப் படைத்தது இப்பாடல். இவ்வரிசையில் இன்னும் சில பாடல்களைக் காணலாம்.

பக்திப் பாடல்களின் மெட்டுகளும் ஜீவா இசைத்த பாட்டுகளும்

மெட்டு பாட்டு

ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் சூரியன் தோன்றிவிட்டான்

ஐயா பழனிமலை வேலா ஐயோ இதென்ன கோலம்

பாலாபிஷேகப் பழனிமலை பெண்மக்கள் பேதையர் என்று...

தசரத ராஜகுமாரா சுகிர்த சல்லாப குமாரி

அடைக்கலமே... சோதரிகாள்...

பச்சைமலை பவழமலை மாதர்விடுதலை பெறும்

பாண்டியன் ஈன்ற மீனாட்சி பாடுவீர் பெண்கள் முன்னேற்றம்

எத்தனை ஜன்மங்கள் வந்து பெண்டிர் ஏமாந்த நாள் சென்றது

ஸ்ரீராம பாதமா பாரதி கீதமே பாடுவோம்

ஈனஜென்மம் எடுத்தேன் ஏழையராகி இரந்தேன்

எப்படிப் பாடினரோ? எப்படிப் பாடினரோ?- தோழர்கள்

பாரதி பாடல்களின் மெட்டில்...

மெட்டு பாட்டு

கரும்புத்தோட்டத்திலே... செந்தமிழ்ச் செல்வியரே...

கண்ணன் மனநிலையை... மண்ணில் விடுதலையே...

பச்சைக் குழந்தையடி பொற்கொடியான பெண்ணே

சொந்தநாட்டில் பிறர்க்கடிமை ஆடவர்தமைத் தெய்வம்

அச்சமில்லை அச்சமில்லை கடவுளில்லை கடவுளில்லை

பிற மெட்டுகளில் ஜீவா இசைத்த பாடல்கள்

மெட்டு பாட்டு

காமி சத்யபாமா கதவை... பொம்மைக்கல்யாணம் பொருந்தா

காமி சத்யபாமா கதவை... ஓங்குக சமதர்மமே...

பத்தொன்பதாம் நூற்றுக்கு.. தங்காய் எழில் நங்காய்...

என்ன உறக்கமடா... பெண்ணடிமை பழிப்போம்

‘கட்டபொம்மன்’ மெட்டு சோவியத் ஆட்சி

பெரியோர் இருக்குமிடம் நானோர் தொழிலாளி

மந்தையிலே மாடுமேய்க்கும் செக்குமாடு போலுழைத்தாய்

ஞானக்கண் ஒன்று மானத்தில் ஊக்கம்

இது அக்காலத்திலே சிவப்பு ஜண்டாக்கி ஜேஜே

காந்திரிஷி ஒன்றாகுவீர் உயர்ந்தோங்கும்

சமமாய் சகாக்களே போர்க்களத்தை நோக்கியே

பாரதமாதா பெற்ற தெய்வமே லஜபதிராய் சென்ற

என்ன கொடுமை இங்கிலீஷ் என்ன கொடுமை -நாம்

பஞ்சாப் படுகொலை கன்னி விதவைத் துயர்

அண்ணி தயைபண்ணி... தங்காய் எழில் நங்காய்..

மனுச சரீர தேனுசுகா மனிதராய் வாழ்வது...

தில்லைவாழந்தணர்தம்(சுந்தரர்) செந்தமிழ்ச் செல்வியரே...

வெண்ணிலாவே..(வள்ளலார்) வெளுத்ததெல்லாம் ...

மாங்காய்ப்பாலுண்டு(சித்தர்) காதலைத்தான் வாழ்த்தி...

‘வந்தே மாதர’ மந்திரம் ஓதி...

தெய்வபக்தி, தேசபக்தியாகி, அஞ்செழுத்து மந்திரத் தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் விட்டுவிட்டு, ‘வந்தே மாதரம்’ என்னும் ஏழெழுத்து மந்திரத்தை எடுத்து ஜீவா ஓதிய பாடல், “இது ஜெயம் இது ஜெயமே”. புனைபெயர் ஒன்றும் கொள்ளாத நிலையில் ‘சொரிமுத்தன்’ பாடியதென, ‘மகுடம்’ வைத்து அவர்தம் 17ஆவது வயதில் இசைத்த பாடல்.

விவேகானந்தரை, திலகரை, கோகலேயை, காந்தியை, ஸ்ரீமதி சரளா, சரோஜினி தேவியைப் போற்றும் அப்பாடலின் மகுடமாக, ‘பாமிகும் சொரி முத்தன் பணிந்தேனே’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு, அரசியல் விடுதலையை முன்னிறுத்தி அவர் எழுதத் தொடங்கிய அப்பாடலை அடுத்துச் சமுதாய விடுதலைக்கு விடை தேடி, சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து, சுயமரியாதை பாடுகிறார். அப்போது பெண்விடுதலையானது அவர் பாடல்களில் பெரிதும் முன்வைக்கப்படுகிறது. பின்னர் அனைத்து விடுதலைகளுக்கும் அடிப்படை பொதுவுடைமைச் சிந்தனையே என்று கண்டுணர்ந்த அவரிடம் சமதருமக் கருத்தாக்கங்கள் இயக்கப் பாடல்களாக எழுச்சிபெற்று விரிகின்றன.

பாடல்கள் எழுந்த படித்தரங்கள்

இந்த இடைக்காலத்தில், 1930 ஆண்டுவாக்கில் அவரால் பாடப்பெற்ற சுயமரியாதைச் சொன்மாலை, பாரதியின் புதிய ஆத்திசூடி பாணியில் அமைந்தது.
கடவுள் வாழ்த்தோ, மொழிவாழ்த்தோ முன் மொழியப் பெறாது, நேராகப் பாடுபொருளை முன் வைக்கின்றன, தொடக்க அடிகள்.

“தன்மதிப்பென்றும் தலைப்பட வேண்டி

நன்மதிப்புண்மை நாம் விளக்குதுமே”

‘அனைத்துயிர் ஒன்றென் றறிவதுன் கடமை’ எனத் தொடங்கும் அச்சொன்மாலை, அகர வரிசையில் விரிந்து, ‘உண்மை விளக்கம் உத்தமக் கொள்கை’ என்ற 102ஆம் அடியோடு முற்றுப்பெறுகின்றது.

சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரத்தில் ஜீவா நிறுவிய உண்மை விளக்கநிலையத்தின் வாயிலாக வெளி வந்த இச்சிறு வெளியீடு, அவர் மருதங்குடி, கம்பனூர் ஆகிய இடங்களில் நடத்திவந்த ஆதிதிராவிடப் பள்ளிக் கூடங்களில் பயிலும் சிறுவர்களை முன்னிறுத்தி எழுதப் பெற்றிருக்க வேண்டும்.

“1930களில் நிலவிய பண்பாட்டு அரசியலின் செல்வாக்கை ஏற்றுச் சுயமரியாதைச் சொன்மாலை, பெண்ணுரிமைக் கீதங்கள் போன்ற கவிதைகளோடு தோழர் ஜீவா தமிழ்ப்பண்பாட்டு அரசியலினுள் நுழை கிறார். சாதிய விமர்சனம், சுயமரியாதை, பெண்ணுரிமை போன்ற விஷயங்கள் இப்பாடல்களில் பொதுவுடைமை, மார்க்சியம் அல்லது பொருளாதாரம் சார்ந்த விஷயங்களாக இல்லாமல் முழுக்கப் பண்பாட்டுப் பிரச்சினைகளாகவே அவரால் அணுகப்பட்டுள்ளன.

சமதர்மம் என்ற சொற் பயன்பாடு ஜீவாவின் எழுத்துக்களில் பொது வுடைமை, சுரண்டல் போன்ற சொற்களுக்கு மூத்த தாகவே இடம் பெறுகிறது. நாடு அடிமைப்பட்டுள்ளது, தாழ்த்தப்பட்ட சாதியினர் அடிமைப்பட்டுள்ளனர், பெண்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற அப்பட்டமான காட்சி உண்மைகளிலிருந்து தோழர் ஜீவாவின் இக்கால எழுத்துக்கள் பிறந்தன போலுள்ளது. வைதீகம், மதப்பழமை, மூடப்பழக்கங்கள், சாதியம் ஆகியவை ஜீவாவால் இப்பாடல்களில் தீவிரமாக விமர்சிக்கப்பட்டுள்ளன...

33,34,35ஆம் ஆண்டுகள் ஜீவா முழுமையாக ஒரு பொதுவுடைமையாளராக உருவான ஆண்டுகள். குறிப் பிட்ட இக்காலத்தில் சிங்காரவேலரோடு இணைந்து பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சமதர்ம இயக்கமாக மாற்றுவதற்கு அவர் முனைந்தார். அந்த முயற்சி சாத்தியப்படாமல் போனபோது, சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சியின் பக்கம் ஒரு தலையாகச் சாய்ந்த போது, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக அணி திரண்டனர்.

நாட்டு விடுதலை, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, தமிழ்ப் பண்பாட்டு அரசியல் ஆகியவை அடுத்துவந்த ஆண்டு களில் ஜீவாவின் முனைப்பான கொள்கைநிலைகளாக இருந்து வந்திருக்கின்றன. ஜீவாவின் பண்பாட்டு அரசியல் எப்போதுமே நாட்டுவிடுதலை என்ற நேரடி அரசியல் இலக்கிலிருந்து விலகி நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் ந.முத்துமோகன். (ஜீவாவின் பண்பாட்டு அரசியல், பக்.6-7)

காலத்தின் தேவை கருதி...

இவ்வரலாறு பாட்டாயுதம் ஏந்தி, பவனி வந்த ஜீவாவின் படித்தரங்கள் என்பதில் ஐயமில்லை. இந்த வேளையில் ஜீவாவின் பாடல்கள் எழுந்த பின்புலத் தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்தம் பாடல்கள், அவர் தன்பாட்டுக்குப் பாடிய பாடல்கள் இல்லை. தமிழகத்துக்குத் தேவையான பாதையைக் காட்ட வேண்டிப் பலரும் வேண்டிப் பெற்ற பாடல்கள். சில சமயங்களில் அவரையும் மீறி அவருக்குள் எழுந்த பாடல்கள்.

காரணம், ‘திட்டமிட்டு, இந்த மெட்டில் இந்தப் பாடலை எழுதியாக வேண்டும்’ என்று வரை யறுத்துக் கொண்டு உட்கார்ந்து எழுத, அவர் நேரம் ஒதுக்கிக்கொண்டதில்லை. இயக்கப் பணிகளுக்கு ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தில் வேண்டுவார்க்கு வேண்டும் வண்ணம் அவர் பாடிக் கொடுத்த பாடல்களே பலவாகும்.

“நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா அடிக்கடி கூட்டங்களுக்காக வருவார்; பெரும்பாலும் எங்களுடனேயே தங்கியிருப்பார்... ஜீவா எங்களோடு தங்கியிருந்த நாட்களில், புதிதுபுதிதாகப் பல பாடல் களை இயற்றியதுண்டு. எல்லோரும் பாடும்படி எளிய மெட்டுக்களிலேயே பாடல்கள் அமைய வேண்டும் என்பது அவர் ஆசை. எங்கள் நாடகங்களிலுள்ள சில புதிய மெட்டுக்களை நான் பாடுவேன்.

கோவை தோழர் ராமதாஸ் திரைப்படப் பாடல்கள் சிலவற்றைப் பாடுவார். அந்த மெட்டுக்களில் எல்லாம் ஜீவா உடனுக்குடன் பிரச்சாரப் பாடல்கள் புனைந்து தருவார். அப்படி ஜீவா பாடிய பாடல்கள் எத்தனை எத்தனையோ!” என்கிறார் நாடகக் கலைஞர் அவ்வை. தி.க.சண்முகம். (நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா, ப.43)அவற்றில் ஒன்று, ஜீவாவின் பெருந்தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல்.

திண்டுக்கல்லில், அவ்வை தி.க.சண்முகம் குழுவினர் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த நேரம்.சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்த ஜீவாவிடம், கம்பெனியின் தொடக்கப் பாடலாக ஒரு புதிய பாடல் வேண்டும் என்று அவ்வை சண்முகம் கேட்டார். ஏற்கெனவே, அவர்கள் பாடிவந்த பண்ணிலேயே ஜீவா பின்வரும் பாடலைப் பாடிக் கொடுத்தார்:

லோக முழுதும் ஞானோதயமாக

நுகரு மனித சிசுமிகு பொது வாழ்வுற

ஏகமொரு குடும்பம் யாவர்க்கு மின்பம்

இனிய சமூகம் மனித சமூகம்

எழுக புதுமைசெறி நாடக மேவுக

ஏழை யடிமை நிலை ஏற்பவரில்லை

எனுமொரு காட்சி ஈட்டுகமாட்சி

இசையுமுலக மது தோழமை பேசுக

இப்பாடல், 1936 முதல் 1944 வரை எங்கள் குழுவின் துவக்கப் பாடலாக இருந்துவந்தது” என்கிறார் அவ்வை தி.க.சண்முகம். (மேலது, ப.49)காலத்தை மாற்றிய கவிஞர்கோ- ஜீவா

காலத்தின் படப்பிடிப்பாய் எழுந்த ஜீவாவின் கவிதைகள் பாடல்களாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அவை அக்காலத்தை மாற்றக் கைகொடுத்திருக்கின்றன. கருத்துக்கள் காலத்தின் அடிப்படையில் உரிய சொற் சேர்க்கைகளோடு இசைச்சிறகு கட்டிக்கொண்டு காற்றின் திசைகளில் பரந்து விரிந்து எழுந்த அப்பாடல்கள், கேட் போரின் எண்ணங்களைத் தூண்டி எழுப்பி இயங்க வைத்திருக்கின்றன என்பது வரலாறு.

அடிமைத்தனமும் அறியாமையும் பிணிகளாய்ச் சூழத் தொழிலாளி வர்க்கம் பட்டுத் தவித்த பாட்டைத் தன் பாட்டில் மெட்டமைத்து, ஜீவா பாடியது உயிர் உருக்கும்படியாய் எழுந்தது மட்டுமல்ல, அவ்வுணர் வாளர்களை ஒருங்கிணையத் தட்டி எழுப்பியது.

“காலுக்குச் செருப்புமில்லை-

கால்வயிற்றுக் கூழுமில்லை

பாழுக்குழைத்தோமடா- என் தோழனே

பசையற்றுப் போனோமடா”

என்று வறுமையின் உக்கிரத்தைத் திசைகளின்

செவிகள் கிழிய, எடுத்தொலிக்கும் பாட்டு, என்றைக்கும் சாகாவரம் பெற்ற பாட்டு.

“பாலின்றிப் பிள்ளையழும்

பட்டினியால் தாயழுவாள்

வேலையின்றி நாம் அழுவோம்-

வீதி முச்சூடும் அழும்”

- இரவு பின்னணியாக, கலைஇலக்கியப் பெரு மன்றத் தோழர்கள் வீதிமுனைகளில் விழா எடுத்து இன்று பாடும்போதும் விம்மிவிம்மி அழாதவர்கள் அங்கு இருக்கமாட்டார்கள்.

சகதோழர்களிடம் தன்னுணர்வு வெளிப்பட இசைக்கும் பாடல் இது என்றால், யாருமற்ற தனிமையில் தனக்குத்தானே முணகுவதுபோல, ஒரு ஏழைத் தொழிலாளி தன்பால் கழிவிரக்கம் கொண்டு நொந்த குரலில் தயங்கித் தயங்கி எடுத்துமொழியும் சோகப் பாடல், ‘நானோர் தொழிலாளி’.

“நானோர் தொழிலாளி- ஒரு

நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை”

என்ற பல்லவியோடு தொடங்கும் அப்பாடலில்,

வறுமை கடிக்குதையே- பசி

வாட்டி வதைக்குதே வருத்திச் சிதைக்குதே

என்று வரும் வரிகளில் பசியும் வறுமையும் தன் குருதி குடித்துச் சதைகளைப் பிய்த்துத் தின்னும் வலியைத் தீனக்குரல் எடுத்து ஓலமிடும் ஏழைத்தொழிலாளியின் அவலக் காட்சி கண்முன் தோன்றி, ஈரநெஞ்சங்களை இறுக்கிப் பிழியும்.

“ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை

ஆட்சி பலமுமில்லையே”

என்று பிறிதொரு பாடலில் முறையிடும் ஜீவா அவலத்தை மட்டும் காட்டி நிற்கவில்லை. அதற்கு மாற்று வழியையும் தேற்றும் தொனியில் உரத்து மொழிகிறார்.

“ஏங்கா தெழுந்திரடா-தோழனே

இல்லாமையை நசுக்கு”

கொசுவை நசுக்குவதுபோல, ஈர்ப்பேன்களை இருவிரல்களுக் கிடையில் இட்டு நசுக்குவதுபோல, இல்லாமையை நசுக்க ஏவுகிறார்.இச்சூது செய்தவர் களையும் பின்வரக் காட்டி அவர்கட்கு எதிராக எழுப்புகிறார்.

“தொல்லைப் புரோகிதமும்- பணக்காரச்

சூழ்ச்சிச் செருக்குகளும்

இல்லை என்றடிக்கவே - தோழனே

இக்கணமே துணிவாய்”

என்று தூண்டித் துணைநிற்கும் தோழமைப் பாங்கில் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் ஏழைத்தொழிலாளிகள் விழிபெற்று எழுந்து பதவி கொள்ளும் உறுதி பெற்றனர் என்பது வரலாறு.

ஏற்கெனவே மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ள பாடல் மெட்டுக்களை முன்வைத்துத் தன் காலக் கருத்துக்களை அதில் ஏற்றிப் போர்ப்பாட்டுக்களாய் முன்வைத்த ஜீவாவின் பாடல்களில் வழமையான இலக்கிய, இலக்கண நயங்களுக்குத் தனியான இடம் ஒன்றும் இல்லை. அப்படி இருந்து எழுத அவகாசமும் இல்லை. அவசியமும் இல்லை.

அடுத்த வேளைக் கஞ்சிக்கு அழுதுகொண்டிருக்கும் தொழிலாளத் தோழனின் கண்முன்னே ஓர் அழகிய பூவை, நிலவை வியந்துகொண்டிருப்பது உயிர்விரயம் என்று உணர்ந்தவர் அவர். இதற்காக, அவரைப் பொருத்தவரையில் இலக்கியம் என்பது இன்னொரு போராட்ட ஆயுதம் என்று மொன்னையாகப் புரிந்துகொள்ளல் தகாது. அவ்வாறு கருதிக் கொண்டிருப்போருக்கு உரிய பதிலைத் தரும் ஒரு பாடல், அவரின் புகழ் பெற்ற ‘கோடிக்கால் பூதமடா’.

பூதப்பாண்டியார் காட்டிய பூதம்

பல்லாயிரக்கணக்கான தொழிலாளத் தோழர் களின் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு அது. பாரதி தாசனின், ‘உலகம் உன்னுடையது’ என்கிற பாடலின் முடிவையும், இப்பாடலின் தொடக்கத்தையும் ஒருங்கு வைத்துப் பார்த்தால் இதன் உன்னதம் புரியும். தன்னளவில் ஒடுங்கிக் கிடக்கும் குள்ளமனிதனையும் குன்றென நிமிர்த்தி, இமயமலையில் ஏற்றி, ‘உலகம் உண்ண உண்; உடுத்த உடுத்து’ என்று பொதுவுடைமை முழக்கி, ‘பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்’ என்று மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்வோடு கூவியவர் பாரதிதாசன். அவர் தோளில் நின்று ஜீவா கண்ட, காட்டுகின்ற அற்புதப் பெரும்பூதம்- பாட்டாளி வர்க்கத்தின் படையெடுப்பு. பெரும்பூதவுருக் கொண்ட பேரணி அது.

உலகின் நான்கு திசைகளும் அதிர, தீப்பொறி பறக்கும் திருவிழிகளோடு ஒரு பெரும் உடலோடு கோடிக்கால்களோடு நடக்கிற பூதம், அது தாவிக் குதித்து, முன்னேறுகிற அழகைத் தொழிலாளிகளின் போகரூபமாகக் கண்டு மகிழ்கிறார்.

இது எங்கிருந்து வருகிறது? வெந்து புகைந்து உருகும் தொழிற்சாலை சந்துகள், இருட்குகைப் பொந்துகள் ஆகிய இடங்களில் இருந்து வருகிறதாம்.

இதுவரைக்கும் முதலாளிகளையே பூதம் என்று தனித்தனியே கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கம் இப்போது ஒன்றாய்த் திரண்டு எழுந்ததால் இதுதான் உண்மையில் பெரும்பூதம். இப்பூதம் புறப்பட்டதுதான் தாமதம், அதுவரை இப்பூதத்தை எழவிடாமல் தடுத்துக் கட்டிவைத்திருந்த சங்கிலிகள் நைந்து நொறுங்கின.

நாலாயிரம் வருடம் வந்த பழங்கட்டுகள் பொடிபட்டு மண்ணில் புதைபட்டு ஒழிந்தன. செங்கொடி நிழலில் தன்னருமை உணர்ந்த இப்பூதம் உரைத்த நன்மொழிகளை முன் மொழிகின்றது இப்பாடல்:

“யாவும் எனதுடைமை-

புவிமிசை யாவும் எனக்குரிமை

ஜீவப்பொருள் உணவு- பானம், உடை தெருக்கள் மாளிகைகள்

கோவில்கள், கோபுரங்கள்-  

பாங்கு, பொருள் கூட்டுக் களஞ்சியங்கள்

காவியம் ஓவியங்கள்-  

பூந்தோட்டம் கவிகள் நாணயங்கள்

புத்தகச் சாலையுடன்-

கல்லூரி புதுநாடக மேடை

நத்துவண்டி வாகனம்-

மியூசியம் நாவாயுடன் பலவும்

இத்தரை மீதினிலே-

இனிமேல் யாவும் எனதுடைமை”

‘எனதுடைமை, எனதுடைமை’ என்று முதலாளி வர்க்கம் எடுத்துக் கொண்டவை அனைத்தையும் ‘தனதுடைமை’ என்று கண்டுகொண்ட ‘பொது வுடைமை’ப் பார்வைகொண்ட கோடிக்கால் பூதம், ‘எனதுடைமை’ என்று முழங்குவது அழகு. இது மேடையில், பந்தரில் படித்த சிறு சத்தம் அல்ல; சமதரும உலகில் வெடித்த பெருஞ்சத்தம். கோடிக்கால் பூதம் கூடி ஒன்றாய்க் கூறிய முழக்கம்; ‘எனதுடைமை எனதுடைமை’ என்று ஒவ்வொரு பாட்டாளியும் எழுப்பிய ஒலியில் தோன்றிய பொதுவுடைமை முழக்கம்.

விடிந்தால் மே தினம். ‘புரட்சி’ என்ற வார இதழுக்குப் பாடல் எழுதிக்கொடுத்தாக வேண்டிய கட்டாயம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் எப்படியும் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் தலைசாய்க்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டோடு விழித்துக் கொண்டிருந்தார் ஜீவா. அவர் கண்முன்னே, மேசையில் ஒரு ஆங்கில நூல்; ஜெர்மன் மொழியாசிரியர் ரெணிபுலாப் மில்லர் எழுதிய ‘போல்ஷ்விசம்- அகமும் புறமும்’ (Mind and Face of Bolshevism) என்ற அந்நூலை மெல்லப் புரட்டினார்.

அதில், இடம்பெற்ற ருஷ்யப் பாடல் ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜீவாவினுள் இந்தக் கோடிக் கால் பூதத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. பூதப்பாண்டியார் பெற்றெடுத்த இப்பூதம் அனைவரையும் பயமுறுத்த எழுந்ததல்ல, பயமுறுத்தி வாழ்ந்தோரைப் பயமுறுத்தி, அவர்களையும் பதப்படுத்தி, மனித குலம் பயன்படுத்த எழுந்த பூதம். 1934-இல் பிறந்த இப்பாடல், இறவா வரம் பெற்ற இனிய கீதம் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

‘நாடகத்தால் மெய்யடியார் போல் நடித்து’, பக்தி இயக்கத்தைப் பாழ்படுத்திய வேடதாரிகளைப் போல, பொதுவுடைமை நெறியின்பாலும் பல போலிப் புல்லர்கள் எழுந்ததைப் பொறுக்காமல், பேடிகள் என்று இனங்காட்டி, ஜீவா பாடிய பாடல் மறக்கமுடியாத பாடல்.

“லெனின்பேரை உச்சரித்தோர் தோழரென்றோர்

நெறிகடந்து பசப்புவரேல் பேடியாவார்

தனிஉடைமை வீழ்கவென்றோர் பல்லைக் காட்டித்

தனவந்தர் உறவுகொண்டால் துரோகியாவார்

புனிதமுறும் சமதருமம் வேண்டுமென்றோர்

புறம்காட்டி மதம்பேசில் புலையராவார்

இனிமையுற முழக்குவதும் காசு கண்டால்

இளிப்பதும் சரிஎன்பார் எருமை மாடே!”

என்ன ஆத்திரம்!

பூமித்தாயின் புன்னகை

சுயமரியாதை, சமதருமம், சோவியத்யூனியன், புரட்சி, விடுதலை என்றெல்லாம் பாடுபொருள்களைக் கொண்டெழுந்த ஜீவாவின் போர்ப்பாட்டுக்கள் காலத்தின் தேவையறிந்து எழுந்த கீதங்கள்.காலத்தோடு பொருந்தி அதன் சாட்சியங்களாய் நிறைந்த அப் பாடல்கள் அவர் கடந்து வந்த பாதைகளை அடை யாளம் காட்டுவன. கடந்து வந்தது அவர் மட்டுமல்ல. அவரோடு காலமும், காலத்தோடு அக்கால மக்களின் வாழ்வும்.

காலத்தால் முடிந்துபோன ஒரு சகாப்தத்தின் ஊடே காலாகாலத்திற்கும் படிப்பினை நல்கும் ஓர் இலக்கிய அறம் இருக்குமே, இருக்கிறதே அதைப்போதுமான அளவிற்குக் கொண்டிருக்கும் ஜீவாவின் பாடல்கள், ஏழைகளின் வேதனைகளையும், இனிய போதனை களையும் முன்னிறுத்தி எழுந்த சாதனைகள்.

காலத்தின் கோலத்தால், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தாலும், பொதுவுடைமை நெறிகட்கு ஊறுநேர்ந்தாலும், சமதருமம் எழுந்தே தீரும். புரட்சி அத்தனை புரட்டுகளையும் அழித்து நிரந்தரத்தை நிலை நிறுத்த எழும் என்பதற்கு அவர்தம் புரட்சி விளக்கப் பாடலைப் பாடினால் புரியும்.

கண்டதற்கெல்லாம் புரட்சி என்ற சொல்லைப் போட்டு நிரப்பிப் பாட்டெழுதி, அச்சொல்லைப் பொக்கையாக்கிய புலவர்களே, பாடலாசிரியர்களே, பாடகர்களே, இன்னுமொரு முறை பின்வரும் ஜீவாவின் பாடலை உரக்கப் பாடுங்கள்; புரட்சி என்றால் என்ன வென்று புரிந்துகொள்ளுங்கள்; நன்றாய் உணர்ந்து செய்யுங்கள்.

“புரட்சி என்பது புதுமைக்கூத்து

புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்

“புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்

புரட்சி என்பது போரிற் பெரிது

புரட்சி என்பது புதுமைக் கீதம்

புரட்சி என்பது புத்துயிர் முரசு

புரட்சி என்பது பொறுமைக்குறுதி

புரட்சி என்பது போம்பணிக் கறுதி

புரட்சி என்பது பூகம்ப வேகம்

புரட்சி என்பது பூரண மாற்றம்

புரட்சி என்பது புரட்டின் வைரி

புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு”

இடிமுழக்கம் போல் எழுந்த தோழர் ஜீவாவின் செங்‘கொடி விளக்கப்’ பாடல் ஒவ்வொன்றும், பூமித் தாயின் புன்னகையே அல்லாமல் வேறு என்னவாம்?

துணைநின்ற நூல்கள்

1. அரசியல் தலைவர்களின் பார்வையில் ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2007.

2. அரசு.வீ (ப.ஆ) ப.ஜீவானந்தம் ஆக்கங்கள், முழுத் திரட்டு. பகுதி-1, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.2007.

3. உறவினர், நண்பர்களின் பார்வையில் ஜீவா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2007.

4. பாலதண்டாயுதம்.கே., ஜீவா வாழ்க்கை வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2007.

5. பொன்னீலன், ஜீவா என்றொரு மானுடன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

6. முத்துமோகன்.ந., ஜீவாவின் பண்பாட்டு அரசியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. மு.ப.2012.

7. ஜீவா நினைவின் அலைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2007.

Pin It