பெலகேயா நீலவ்னா எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். ரஷ்யாவில் ஒரு தொழில் நகரத்தில் வாழ்ந்தார். அது மிகவும் சிறிய நகரம். அங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருந்தன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள், தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கும் ஓங்கி ஒலிக்கும் சங்கொலி, தொழிலாளர்களின் பரபரப்பு என்று அந்த சிறு நகரம் எப்போதும் ஒரே இரைச்சலாகவே இருக்கும்!.
பெலகேயா நீலவ்னாவின் வாழ்க்கை மிகவும் கஷ்டமானது!. அவரது கணவர் மிகவும் கட்டுப்பாடானவர். அவரை ஓர் அடிமை போல் தான் நடத்துவார். அடிக்கடி அவருடன் சண்டை போடுவார். அதனால் பெலாகேயா எப்போதும் ஒருவிதமான பதற்றத்திலும் பயத்திலுமே வாழ்ந்தார். எதற்கும் எதுவும் பேசாமல் அடங்கி, அமைதியாக இருப்பதே தனக்குப் பாதுகாப்பு என்று அவர் நினைத்தார். உலக வாழ்க்கை எதுவுமே தெரியாமல் இருளில் இருப்பது போலத்தான் அவர் இருந்தார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் கணவர் இறந்து விடுகிறார். கணவர் இறந்த பின்பு வாழ்க்கையைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரே திகைப்பு! ஆனாலும் அவர் துணிந்து எழுந்தார். தனி ஒருத்தியாக வாழ்க்கையை எதிர்கொண்டார். உழைத்தார்; கடுமையாக உழைத்தார்; தன் மகனை வளர்த்தார். கடைசி வரை தன் மகன் பாவேலுடன் வாழ்ந்தார். அவருக்கென்று தனியாக எந்தக் கனவும் இல்லை. மகனை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அவன் கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும், இதுதான் அவருடைய ஆசை.
பாவேல் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். ஆனால் அவர் மற்ற தொழிலாளர்களைப் போல இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கமாட்டார். இரவில் நிறையப் புத்தகங்களைப் படிப்பார். அதிகமாகச் சிந்திப்பார், எப்போதும் மாடாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஏன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள், முதலாளிகள் ஏன் தொடர்ந்து பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அவர் சிந்தனை. அனைவரும் சரிசமமாக, பரஸ்பரம் மரியாதையுடன் வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர், அப்படி நினைப்பது அவர் அம்மாவுக்கு ஒருவிதமான பயத்தைத் தந்தது. ஏனென்றால், அப்போதைய சமூகச் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. தொழிலாளர்களுக்குப் பரிந்து பேசினால் ஆபத்துதான்.“போலீசாருக்குத் தெரிந்தால் பிடித்துக்கொண்டு போய் விடுவார்களே...” என்று அவர் கவலைப்பட்டார். ஒருவித அச்ச உணர்வோடே இருந்தார்.
காலம் கடந்தது. பாவேலின் நண்பர்கள் சிலர் அவரின் வீட்டுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகள், சுதந்திரம், நல்ல எதிர்காலம் பற்றிப்பேசத் தொடங்கினார்கள். அவர்களுடைய பேச்சு தொடர்ந்து கொண்டே போனது. இன்னும் பல புதிய நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். பெலாகேயாவின் காதிலும் அந்தப் பேச்சுக்கள் விழும். அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் எதுவும் பேச மாட்டார்.
ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், பின்னர் அவர்களின் பேச்சில் உயர்ந்த எண்ணம் இருப்பதை அறிந்து கொண்டார். அந்த பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார். மெல்ல அந்தச் சிந்தனையின் பால் அவருக்கும் ஈர்ப்பு வந்தது.தன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டார். சமூக நியாயத்திற்காகத்தான் தன் மகன் நிற்கிறான் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட பின்பு அவருக்குள் ஒரு தெளிவு ஏற்பட்டது. அந்த மனத்தெளிவுதான் அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தது. பின்னர் போலீசார் பாவேலை மிகத் தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியவுடன், பழைய பயமும் பதற்றமும் மீண்டும் ஏற்படத் தொடங்கியது, ஆனால் இப்போது பெலகேயா ஒதுங்கிப் போகவில்லை. அவருடைய அணுகுமுறையில் பெரிய மாற்றம் தெரிந்தது. இரகசியமாக மகனுக்குப் பல வகையிலும் உதவினார். சில புத்தகங்களை மறைத்து வைத்துக்கொண்டார். இவர்களுடைய இரகசியச் செய்திகளை மற்றவர்களிடம் எடுத்துக் கொண்டு போகும் பணியைச் செய்யத் தொடங்கினார். பாவேலின் நண்பர்கள் பலரை இவர் பாதுகாத்தார். அந்த அனுபவத்தினால் அவர் உள்ளத்தில் தைரியம் வளர்ந்தது. புதிய சிந்தனையும் புத்துணர்வும் மனதில் கிளைத்தன.
அன்று மே தினம்! தொழிலாளர்கள் அமைதியான போராட்டம் ஒன்றினை நடத்தினர். பெரும் திரளாகத் தொழிலாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் செங்கொடி ஏந்தி, 'நீதி வேண்டும் …நீதி வேண்டும்...' என்று வீர முழக்கமிட்டனர். போலீசார் அந்தக் கூட்டத்தினைக் கட்டுப்படுத்தினர். கட்டுப்படாத தொழிலாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் பாவேலைக் கைது செய்தார்கள். இது பெலாகேயாவுக்கு மிகுந்த மனவேதனை அளித்தது. என்றாலும், அவர் உடைந்து போகவில்லை. தன் மகன் நம்பிய எண்ணங்கள், கொண்ட கொள்கைகள் உண்மையானவை, மக்களுக்கானவை, நேர்மையானவை என்று அவர் உறுதியாக நம்பினார்.அந்த நம்பிக்கை அவரை வழிநடத்தியது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் பாவேல் தொழிலாளர்களுக்காகப் பரிந்து தைரியமாகப் பேசினார். உண்மையை உரத்த குரலில் உணர்ச்சி பொங்கப் பேசினார். அவர் பேசிய அந்தப் பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. அதைக் கேட்ட பெலகேயாவுக்குப் பெருமையாக இருந்ததது. பாவேல் சிறைக்கு அனுப்பப்பட்டார். மகன் சிறைக்குச் சென்றாலும் அந்த இயக்கப் பணி முடங்கிவிடக் கூடாது என்று பெலாகேயா அந்த இயக்கப் பணியைத் தானே கையில் எடுத்தார். தொழிலாளர்களை வழி நடத்தினார். ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுதந்திரம், சமூக நீதி பற்றித் தெருத்தெருவாகப் பிரசாரம் செய்தார். தொழிலாளர்கள் அவர் பின் அணிவகுத்து நின்றனர். அப்போது தொழிளாளர்கள் ஒரு புதிய ஒளி தோன்றியது போல உணர்ந்தனர்.
கதையின் இறுதியில், பெலாகேயா மக்கள் முன் உணர்ச்சி பொங்க வீர உரையாற்றுகிறார். அந்த உரை எல்லோரையும் கவர்கிறது, மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த உரையைக் கேட்டு பெரும் திரளான தொழிலாளர்கள் பொங்கி எழுகிறார்கள். புது எழுச்சி கொள்கிறார்கள், போலீஸ் மிகப்பெரிய பதற்றம் அடைகிறது. நிர்வாகம் திகைத்துப் போகிறது. ஒரு புதிய சக்தி உருவாகிவிட்டது என்று அவர்களுக்கு அச்சம். போலீசார் அவரை வளைத்துப் பிடிக்கிறார்கள். ஆனாலும் அவர் துணிந்து நிற்கிறார், எதற்கும் அஞ்சவில்லை. பெரும் ஆற்றலும் வீரமும் கொண்ட ஒரு பெண்மணியாக அவர் அதனை எதிர்கொள்கிறார்.
இதுதான் கால மாற்றம்! எல்லாவற்றுக்கும் அஞ்சிக் கொண்டிருந்த சராசரிக் குடும்பப்பெண், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண், கணவனின் அடக்குமுறைக்கு அடங்கிப் பயந்து பதுங்கிக் கிடந்த பெண், இன்று வீறுகொண்ட சக்தியாக எப்படிப் பரிமாணம் பெற்றார்? இந்த மாற்றம் எப்படி நடந்தது. சமூக உரிமைக்குக் குரல் கொடுக்கும் பெண்ணாக மக்களின் சமூக நீதிக்காகப் போராடும் பெண்ணாக அவர் எப்படி மாறினார். இப்போது சமூகம் அவரை ஒரு இரும்பு மனிசியாகப் பார்க்கிறது. ஒட்டு மொத்த நிர்வாக அமைப்பும் அந்த சக்தியின் ஆற்றலைக் கண்டு அஞ்சிநடுங்குகிறது, இதுதான் மாற்றம், சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், இந்த மாற்றம் உடனே நடந்து விடவில்லை, மெல்ல மெல்ல நடந்தது, கால மாற்றத்தோடு நடந்தது. ஆனால் அந்த மாற்றம் உறுதியானது நிலையானது, என்பதுதான் உண்மை, இது தான் தாய் நாவலின் கதை.
இந்த நாவல் ஒரு சாதாரண எளிய மனிதர் கூட உண்மையாக, நேர்மையாக, ஒரு கோட்பாட்டில் உறுதி கொண்டால் எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், கொள்கையைக் கைவிடாமல் பற்றிக் கொண்டால் கால மாற்றத்தில் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும், மாற்றத்திற்கான சக்தியாக மலர்ச்சியடைய முடியும் என்பதைத்தான் மிக நுட்பமாகவும் விரிவாகவும் பேசுகிறது.
தாய் நாவல் உலக இலக்கியத்தில் மிக முக்கியமான சமூக நாவலாகக் கருதப்படுகிறது. இந்த நாவல், ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வையும் வரலாறையும் மிக நுட்பமாக சொன்னாலும் ஒரு காலகட்டத்தில் சமூக அமைப்பை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது, அவர்களுடைய ஒவ்வொரு நாளும் எவ்வளவு துன்பம் நிறைந்ததாக இருந்தது, அவர்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்பட்டார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்வதோடு அவர்கள் விழிப்புணர்வு பெற்ற வரலாற்றையும் பேசுகிறது.
இந்த நாவலில் அரசியல் மற்றும் சித்தாந்தக் கருத்துகள் மிகுதியாக இருந்தாலும், குடும்ப உறவுகளையும் - குறிப்பாக, குடும்பத்தில் ஒரு தாயின் பங்கு அவளுடைய தனிப்பட்ட உணர்வுகள் பெண் என்ற நிலையில் அவள் அடையும் துன்பங்கள், மனம், அது சார்ந்த மாற்றங்கள் என்று பல விடயங்களை உளவியல் பூர்வமாகவும் சித்தரிக்கிறது, இங்கே நாம் கவனிக்க வேண்டியது, ஒரு பெண்ணை எவ்வளவு தூரம் அடக்கி அமுக்கி வைத்திருந்தாலும் அவள் உணர்வு கொண்டு சிந்திக்கத் தொடங்குகின்ற பொழுது ஏற்படுகின்ற மாற்றத்தின் வீரியத்தையும் விளைவுகளையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது.
நாவலின் மையக் கதாபாத்திரம் பெலாகேயா நிலோவ்னா. நாவலின் தொடக்கத்தில் இவர் ஒரு சராசரி பெண்ணாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள், மிகவும் பயந்த சுபாவம். அடங்கி ஒடுங்கி நடக்கக்கூடிய ஓர் அடிமையைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளார். அவர் தன் மகன் பாவேலையே உலகமாக நினைக்கிறார். இந்த நிலையில், அவர் மாபெரும் சமூகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவது மிகவும் முக்கியமான மாற்றமாகும். அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உளவியல் நிலையிலும் சமூக நிலையிலும் முக்கியமானது.
பெலகேயாவின் கதாபாத்திர உருவாக்கம் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. அவர் திடீரென்று தைரியமானவராக மாறவில்லை. அந்த மாற்றம் மெல்ல மெல்ல நடக்கிறது. அதற்குப் பின்புலமாக காலமும் சமூகமும் உள்ளன. அவர் தன் மகன் செய்யும் செயல்களைப் பார்த்து, அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்டுத் தான் அவர் மாறுகிறார். இறுதியில், அவர் உண்மை மற்றும் நீதிக்காக எவ்வளவு பெரிய துன்பத்தையும் ஏற்கத் தயாரான பெண்ணாக மாறுகிறார். இந்த மாற்றமே இந்தப் பாத்திரத்தின் வலிமை.
நாவலின் முக்கியமான மற்றொரு கதாபாத்திரம் பாவேல் வலாசோவ், இவர் ஓர் இளைஞர். தொழிற்சாலையில் வேலை செய்கிறார், ஆனால் மற்றவர்களைப் போல் இவர் சராசரியாக இல்லை. தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்டவர். தொடர்ந்து, சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பவர். குறிப்பாக, தொழிலாளர்களின் நிலையைக் குறித்து ஆழமாக யோசிப்பவர், உழைக்கும் வர்க்கமும் சுரண்டும் வர்க்கமும் ஏன் சமூகத்தில் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றன? முதலாளிகள் ஏன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் அவர்களுக்குப் பணம் மட்டுமே ஏன் முக்கியமாகப்படுகிறது? தொழிலாளர்கள் ஏன் தொடர்ச்சியாக பசியோடு போராடுகிறார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்பது பெரும் குற்றமா? இப்படியெல்லாம் தீவிரமாக, சிந்திக்கிறார்.சமத்துவமான ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது. பாவேலின் பாத்திரம் புதிய தலைமுறையின் அடையாளமாகக் காட்டப்படுகிறது. மாற்றத்தை விரும்பும் ஒரு சமூகம் உருவாகி வருவதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் அடையாளம்.
பாவேலின் நண்பர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சித்தரிக்கப்படவில்லை. அவர்கள் ஒரு குழுவாகவே காட்டப்படுகிறார்கள். இது ஆசிரியரின் திட்டமிட்ட உத்தி. அந்தக் குழு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவுதல், ஒன்றாக இணைந்து குழுவாகச் செயல்படுதல், தியாகம் செய்யத் தயாரான மனம், பொது நலனில் அக்கறை கொண்ட மனம் போன்ற பண்புகள் அவர்களிடம் வெளிப்படுகின்றன. இதன் மூலம், சமூக மாற்றம் ஒரே ஒரு மனிதனால் அல்ல; பலர் சேர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முயற்சியால் நிகழ்கிறது என்பதே நாவலின் கருத்தாகிறது.
நாவலாசிரியரின் கருத்து வெளிப்பாட்டு உத்தி மிகவும் எளிமையானது. நேரடியானது. ஆசிரியர் அரசியல் கருத்துகளை நேரடியாகப் போதிப்பதில்லை. அன்றாடச் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் ஊடாகவே கருத்துகளைச் சொல்கிறார். தொழிற்சாலைகளின் இருண்ட பக்கங்கள், கடினமான வேலை, போலீசாரின் கண்காணிப்பு, கைது, நீதிமன்ற வழக்கு போன்றவை சமூக அநீதியை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ரகசியக் கூட்டங்கள், நண்பர்களின் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு, பரிவு, பிணைப்பு ஆகியவை நம்பிக்கை வெளிப்படுகின்றன; இவையெல்லாம் மாற்றத்திற்கான குறியீடாகவும் காட்டப்படுகின்றன.
தாய் நாவலில் நேரடியாக மரபான முறையிலே கதைசொல்லும் உத்தி கடைபிடிக்கப்பட்டுள்ளது. கதையில் தொடர்ச்சி இருக்கிறது, குழப்பமான உத்திகள் இல்லை. மூன்றாம் நபர் கதைசொல்லும் உத்தியே கடைபிடிகப்பட்டுள்ளது, ஆனால் பெலகேயாவின் மனநிலை உலகப் பாங்கில் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது, அவரது பயம், குழப்பம், பின்னர் உருவாகும் தைரியம் ஆகியவை ஒவ்வொரு நிலையிலும் நுட்பமாகவும் விரிவாகவும் காட்டப்படுகின்றன. இது அப்போதைய மக்களின் இயல்பான மனநிலை, இதனால் வாசகர் அவருடன் மனதளவில் இணைந்து விடுகிறார். குறியீடுகளோ, சிக்கலான மொழியோ இல்லை. இயல்பாக நீரோடை போல கதை நகர்கிறது,
தாய் நாவலின் தனித்தன்மை, மாபெரும் ஒரு பெரிய சமூக இயக்கத்தை ஒரு தாயின் பார்வையில் நகர்த்திச் செல்வதில்தான் உள்ளது. அரசியல் போராட்டச் சிந்தனைகள் ஒவ்வொரு மனதிலிருந்தும் தொடங்குகிறது. இது மற்ற அரசியல் நாவல்களிலிருந்து தாய் நாவலை வேறுபடுத்துகிறது. மேலும், பெண்களின் உள்ளார்ந்த சக்தியை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. பெலகேயா உடலால் வலிமை இல்லாதவர். ஆனால் மன உறுதியால் வலிமையானவர்.
பாத்திரப் படைப்பு, கருத்து வெளிப்பாடு, எடுத்துரைப்பு உத்தி, தனித்த பார்வை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த நாவலை ஒரு முக்கிய சமூக இலக்கியமாக மாற்றுகின்றன. எளிய மொழியில், ஆழமான கருத்துகளைச் சொல்வதாலேயே தாய் நாவல் இன்றும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. தாய் நாவல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் புகழ்பெற்றது. அதன் புகழ் இன்றும் உலகம் முழுவதும் மங்காமல் இருப்பதுதான் அதன் தனிச் சிறப்பு. உலக சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.
தமிழில் தாய் நாவல் முதல் மொழிபெயர்ப்பு ‘அன்னை (1946)’ எனும் பெயரில் ப.ராமஸ்வாமி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் 1952ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு செய்து ஸ்டார் பிரசுரத்தின் வெளியீடாக வெளியானது. பின்னர் சோவியத் இரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காகவும் தொ.மு.சி.ரகுநாதன் 1975ஆம் ஆண்டு மீண்டும் மொழியாக்கம் செய்தார், இவ்விருமொழிபெயர்ப்புகளும் ‘தாய்’ என்ற தலைப்பிலேயே வெளியாகின..
முல்லை முத்தையாவின் மொழியாக்கம் ‘அம்மா (1956)’ எனும் பெயரில் இன்ப நிலைய வெளியீடாகவும், சிவனின் மொழியாக்கம் ‘தாய் (2019)’ எனும் பெயரில் கலா நிலைய வெளியீட்டிலும் வந்துள்ளன.. இறுதியாக சத்யாவின் மொழியாக்கத்தில் ‘தாய்’ நாவல் 2021ஆம் ஆண்டு பொன்னுலகத்தின் பதிப்பில் வெளியானது. இவற்றைத் தவிர கலைஞர் கருணாநிதியின் ‘தாய் காவியம் (2004)’ என்ற பெயரில் கவிதை வடிவில் தாய் என்ற காவியத்தை எழுதியுள்ளார்..
மாக்சிம் கார்க்கி உலக இலக்கியத்தில், சமூக மாற்றத்திற்காக எழுத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் சமூக-அரசியல் போராட்டங்கள் நிறைந்த காலமாக இருந்தன. தொழில்துறை வளர்ச்சியால் உருவான தொழிலாளர் வர்க்கம், வறுமை, சுரண்டல், அவ மரியாதை, புறக்கணிப்பு போன்ற அவலங்களை அனுபவித்தது. அரசியல் அடக்குமுறையும் முதலாளித்துவ ஆதிக்கமும் பொதுமக்களின் வாழ்வை நசுக்கிய இந்தச் சூழலில்தான் மாக்சிம் கார்க்கி எழுதத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே வறுமை, பசி, உழைப்பு என பலவற்றை அனுபவித்த அவரது வாழ்க்கை அனுபவங்கள் அவரது இலக்கியங்களுக்கு வலிமை சேர்த்தன.
மாக்சிம் கார்க்கியின் படைப்புகளில் இலக்கியம் என்பது கற்பனை அல்ல; கலைவடிவம் அல்ல, அது வாழ்க்கையின் நேரடிப் பிரதிபலிப்பு. அவர் சமூக யதார்த்தவாத இலக்கியத்தின் (Socialist Realism) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மனிதன் தன் நிலையைக் குறித்து சிந்திக்கவும், அதைக் கேள்வி கேட்கவும், மாற்றத்திற்குத் தயாராகவும் வேண்டும் என்ற எண்ணம் அவரது படைப்புகளின் மையமாக உள்ளது
இந்த நோக்கத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நாவலாக தாய் – (Mother) உள்ளது.. இதே கருத்தோட்டத்தில் அமைந்த ஃபோமா கோர்டெயேவ் – Foma Gordeyev மற்றும் ஆர்டமோனோவ் வணிகம் – The Artamonov Business ஆகிய நாவல்கள், முதலாளித்துவ அமைப்பின் புற வெற்றிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள உள்ளார்ந்த வெறுமையையும், செல்வமும் அதிகாரமும் மனித உறவுகளை எவ்வாறு சிதைக்கின்றன என்பதையும் ஆழமான சமூக விமர்சனமாக எடுத்துக் காட்டுகின்றன. வெறும் பொருளாதார வளர்ச்சி மனித நேயத்தை வளர்க்காது; மாறாக, அது உறவுகளைச் சந்தைப்பொருளாக்கி விடுகிறது என்பதை இந்நாவல்கள் மூலம் விவரிக்கிறார்.
மேலும், க்ளிம் சாம்கினின் வாழ்க்கை – Life of Klim Samgin என்ற விரிவான நாவல், தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கைப் பாதையைக் கொண்டு, முழு ரஷ்ய சமூகத்தின் அரசியல், சிந்தனையியல் மற்றும் வரலாற்று மாற்றங்களைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. காலப்போக்கில் சமூகத்தில் உருவான அரசியல் குழப்பங்கள், சிந்தனை மாற்றங்கள் மற்றும் மதிப்பீடுகளின் மாறுபாடுகள் ஆகியவற்றை இந்த நாவல் ஒரு சமூக வரலாறாக வாசகனின் முன் வைக்கப்படுகிறது.
மாக்சிம் கார்க்கியின் சுயசரிதை நூல்கள் அவரது இலக்கிய உலகின் அடித்தளமாக அமைந்துள்ளன. “என் குழந்தைப் பருவம்”(My Childhood) “உலகில்” (The World ) மற்றும் “எனது பல்கலைக்கழகங்கள் (My Universities) ஆகிய நூல்கள், அவரது வாழ்க்கைப் போராட்டங்களை நேர்மையாகப் பதிவு செய்கின்றன. இந்நூல்கள் மூலம் வறுமை, சமூகக் கொடுமை, மன உறுதி ஆகியவை எவ்வாறு ஒருவரை வடிவமைக்கின்றன என்பதை வாசகர் தெளிவாக உணர முடிகிறது.
நாடகத் துறையிலும் கார்க்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தார். “அடித்களம் (“At the Bottom ) நாடகம், சமுதாயத்தின் கீழ்தட்டில் வாழும் மக்களின் நம்பிக்கையிழந்த வாழ்க்கையையும், சமூக மரியாதைக்கான தேடலையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது. அதேபோல் The Philistines மற்றும் Enemies போன்ற நாடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சமூக மோதல்களை விமர்சிக்கின்றன.
மாக்சிம் கார்க்கியின் படைப்புகள் அவரது காலத்தின் சமூக-அரசியல் பின்னணியில் ஆழமாக வெளிப்படுத்துபவை, அவை ரஷ்ய சமூகத்தின் வரலாற்று ஆவணங்களாக மட்டுமல்லாமல், மனித சமத்துவம், சமூக நீதி, விழிப்புணர்வு ஆகியவற்றை உலக அளவில் பேசும் இலக்கியங்களாக விளங்குகின்றன. அதனால் தான், காலம் கடந்தும் மாக்சிம் கார்க்கியின் நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன; அவர் இப்போதும் இளைஞர்களின் ஊக்கசக்தியாகவே இருக்கிறார்.
- பாரதிபாலன்