1
பீட்டர்ஸ்பர்க் நகரம் எப்போதும் போல குளிரில் உறைந்து கிடந்தது. அந்த நகரத்தில் உள்ள ஒர் அரசு அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்து. அந்த அலுவலகத்தில் ஒருவர் மட்டும் ஓதுக்குப்புறமான ஓர் இடத்தில் தன்னந்தனியாக அமர்ந்து வேலைசெய்து கொண்டிருந்தார். அவருக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை, அவர் பெயர் அகாக்கியே விச். அவர் உயர்ந்த பதவியில் இல்லை. சாதரண குமாஸ்தா; அவரிடம் மிடுக்கான தோற்றமோ, தைரியமான குரலோ கூட இல்லை. அரசு கோப்புகளைப் பார்த்துப் பார்த்து ஒவ்வோர் எழுத்தாகக் கவனமாகப் பிரதியெடுப்பது மட்டுமே அவருடைய வேலை. அதை அவர் கடமையுணர்வோடும் மகிழ்ச்சியோடும் செய்வார், அவர் எப்போதும் ஆரவாரமின்றி தான் இருப்பார். அமைதியாகக் காணப்படுவார். வாழ்க்கையில் அவருக்கு வேறு எந்தவிதமான எதிர்பார்ப்புமே இல்லை.
அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் அகாக்கியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவரது நைந்துபோன பழைய கோட், எளிமையான தோற்றம், மெல்லிய குரல், அடக்கமான நடத்தை என்று எப்போதும் இருப்பதால் எல்லோருக்கும் அவர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. அவரை எப்போதும் கேலியும் கிண்டலும் செய்வார்கள். சிலர் காகிதத் துண்டுகளை அவர்மீது வீசி விளையாடுவார்கள். ஆனால் அகாக்கி கோபப்படுவதில்லை. மென்மையான குரலில், “தயவுசெய்து என் வேலையைச் செய்ய விடுங்கள்” என்று மட்டும் சொல்வார்; அவ்வளவுதான். அவர் உலகம் தனி. அவருடைய வாழ்க்கையும் அப்படித்தான், தனியாகத்தான் வாழ்கிறார், ஒரு சிறிய அறை, எளிய உணவு, அமைதியான வாழ்க்கை. இதுவே அவரது உலகம்!
அகாக்கியிடம் ஒரே ஒரு ஓவர்கோட் மட்டும் தான் இருக்கிறது, அதுவும் அதள பழசு. இருந்த அந்த ஒரு ஓவர்கோட்டும் கூட பல ஆண்டுகளாகப் பயன்படுத்தியதால் முழுவதும் கிழிந்துவிட்டது. குளிர்காலத்தில் அந்த ஓவர்கோட்டால் உடலைப் பாதுகாக்க முடியாமல் போய்விடுகிறது. பனிக்காற்று நேரடியாக உடலுக்குள் புகுந்து அவரை நடுங்க வைக்கிறது. தையல்காரர் அந்த ஓவர்கோட்டைப் பார்த்து, இனி இதை ஒன்றும் செய்ய முடியாது என்றும், புதிய ஓவர்கோட் தைத்தால்தான் உன்னால் குளிரைத் தாங்க முடியும் என்று கூறிவிட்டார். இதைக் கேட்ட அகாக்கி அதிர்ச்சி அடைந்தார், மிகவும் வருத்தம் அடைந்தார். அவர் வாங்கும் சம்பளத்தில் எப்படி புது ஒவர் கோட் வாங்க முடியும் அது நடக்கிற காரியமா? என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போனார், ஆனால் குளிரின் கொடுமை அவரை தினமும் துன்பப்படுத்தியது. வேறு வழி இல்லை என்ற நிலைக்கு வந்தார்.
புது ஓவர்கோட் வாங்க சிறுகச்சிறுகப் பணம் சேமிக்கத் தொடங்கினார். சாப்பாட்டைக் குறைத்தார். இரவில் விளக்கை அதிகம் எரியவிடுவதில்லை, உடை கசங்காமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். இப்படி இருப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தாலும், அவர் அதைத் தாங்கிக்கொண்டார். சில மாதங்கள் கழித்து, அவர் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் ஒரு புதிய ஓவர்கோட்டைத் தைத்து வாங்கிக்கொள்கிறார். அந்த ஓவர்கோட்டை அணிந்தபோது, அகாக்கிக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி! அவர் உடல் மட்டும் அல்ல, மனமும் கதகதப்பாக இருந்தது. அவர் முதன்முறையாக வாழ்வில் ஒரு மாற்றத்தை உணர்ந்தார்
அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போது அகாக்கியைக் கவனிக்கத் தொடங்குகிறார்கள். அவரது புதிய ஓவர்கோட்டைப் பாராட்டுகிறார்கள். ஒரு சிறிய விருந்தும் கூட ஏற்பாடு செய்கிறார்கள். அந்த இரவு, அகாக்கியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒர் இரவாக மாறுகிறது. விருந்து முடித்தபின் அவர் மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடக்கிறார். ஆனால் இருள் நிறைந்த அந்தத்தெருவில் இரு மனிதர்கள் இவரைப் பின் தொடர்ந்து வருகிறார், திடீர் என்று இவரைத் தாக்கி, இவரின் புதிய ஓவர்கோட்டைப் பறித்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். “உதவி... உதவி..." என்ற இவரது அலறல் குரல் பனியில் கரைந்து விடுகிறது. யாரும் உதவ வரவில்லை.
அகாக்கி காவல் நிலையத்திற்குச் செல்கிறார். அங்கு உள்ள விதிமுறைகளும் காவலர்களின் அலட்சியமும் இவரைக் கண்ணீர் சிந்தவைத்துவிட்டன. பின்னர் அவர் ஓர் உயர் அதிகாரியைச் சந்திக்கிறார். அந்த அதிகாரி அகாக்கியின் புகாரையும் துயரத்தைம் சட்டைசெய்யவில்லை, அலட்சியப்படுத்தியதோடு, கடுமையாகக் கண்டித்து, அவரை அவமானப்படுத்துகின்றன. அந்த அவமானமும் மனவேதனையும் அகாக்கியின் மனதை உடைத்துவிடுகிறது, நடைபிணமாக வீடுதிரும்புகிறார். அதிகமான குளிரும் மனஅழுத்தமும் சேர்ந்து அவரை வாட்டிஎடுக்கின்றன. அன்று இரவே நோயில் விழுந்து விடுகிறார். சில நாட்கள் செல்கின்றன. அவர் யாரும் கவனிக்கப்படாமல், உயிரிழந்து விடுகிறார்.
அகாக்கியின் மரணத்திற்குப் பிறகு, அந்த நகரில் ஒரு கதை பரவத்தொடங்குகிறது, இரவுகளில் ஒரு ஆவி தோன்றி மக்களின் ஓவர்கோட்டுகளைப் பறிக்கிறது, இப்படிப் பலரின் ஒவர்கோட்டுகள் பறிபோய்விட்டன. அதுமட்டுமல்ல, முக்கியப் பிரமுகர்கள் என்றால் அந்த ஆவி விடுவதே இல்லை, இந்தக் கதை அப்பகுதி மக்களைப் பீதியடையச்செய்கிறது. அகாக்கி உயிருடன் இருந்தபோது அவரை அலட்சியம் செய்தவர்கள் எல்லாம் இப்போது பெரிதாகப் பேசுகிறார்கள். அவர் பெயர் பிரபலமாகிவிட்டது. ஒருவித பயம் கலந்த மரியாதை வந்துவிட்டது.
இந்தக் கதை ஒரு ஓவர்கோட்டின் கதை மட்டும் அல்ல. ஒரு மனிதனின் கதை, ஒரு சமூகத்தின் கதை!
தி ஓவர்கோட் நிக்கோலாய் கோகோல் எழுதிய புகழ்பெற்ற சிறுகதை. இது 1842 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தக் கால ரஷ்ய சமூகத்தில் அரசு அலுவலகங்கள், பதவியின் காரணமாக ஏற்படும் மரியாதை, அதிகார அகந்தை ஆகியவை மிகஅதிகமாக இருந்தன. சாதாரண அரசு ஊழியர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை. இந்தச் சூழலில்தான் கோகோல் இந்தக் கதையை எழுதினார். இந்தப் படைப்பு மிக எளிய மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் எழுதப்படவேண்டும் என்ற சிந்தனையில் எழுதப்பட்டது. உயர் பதவி, புகழ். அதிகாரம் செல்வாக்கு என்று எதுவும் இல்லாத மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையும் வேதனையும் இலக்கியத்தில் பேசு பொருளாக்கப்பட வேண்டும் என்ற புதிய பாதையை இக் கதை திறந்தது வைத்தது. கோகோலின் எழுத்து நகைச்சுவை கொண்டது போலத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த கருத்து மிகுந்த வலியைத் தருவதாகவும் சமூகத்தை விமர்சிப்பதாகவும் அமைகிறது.
தி ஓவர்கோட் கதை வெளிவந்தபோது, சிலர் இதை சாதாரண கதையாகக் தான் கருதினர். ஆனால் விமர்சகர்கள் இதை ஒரு தீவிர சமூக ஆய்வாகப் பார்த்தனர். இந்தக் கதை ரஷ்ய யதார்த்தவாத இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர் வந்த பல எழுத்தாளர்கள் எளிய மக்களை மையமாகக் கொண்டு எழுத இதுவே ஊக்கம் அளித்தது.
2
கோவாலியோவ் என்பவர் உயர்பதவியில் செல்வாக்கோடு இருப்பவர், இவருக்கு அதிகார ருசி அதிகம் உண்டு, மேலும் மேலும் பதவியைப் பெற்று அதிகாரத்தோடு வாழவேண்டும் என்று விரும்புபவர். ஒரு நாள் இவர் காலையில் எழுந்தவுடன், கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கிறார். அப்போது அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சி!. அவரது மூக்கைக் காணோம்! முகத்தின் நடுவில் இருக்க வேண்டிய அந்த மூக்கு இல்லாததைப் பார்த்து அவர் பயந்து அலறுகிறார். மூக்கு இல்லாமல் வெளியே எப்படிச் செல்வது? அப்படிச் சென்றால் மக்கள் என்ன சொல்வார்கள்? வேடிக்கை பார்க்கமாட்டார்களா! கேலி பண்ணமாட்டார்களா? கேவலமாகப் போய்விடும் என நினைத்தார், வெளியே செல்ல ஒரே தயக்கம், அவமானமாக இருந்தது,
அதே நேரத்தில், இன்னொரு நிகழ்வும் அந்த ஊரில் நடக்கிறது. ஒரு முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தனது உணவுத் தட்டில் சாப்பாட்டுக்குள் ஒரு மனிதமூக்கு இருப்பதைக் காண்கிறார், அது எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று அவருக்குப் புரியவில்லை. அவர் பயந்து நடுங்கிப் போகிறார்! ஏதாவது குற்றம் நடந்துவிட்டதோ என்ற பதறினார். தன் மீது ஏதாவது பாவ பழி வந்துவிட்டதோ என்று அஞ்சினார். அதனால் யாருக்கும் தெரியமால் அந்த மூக்கை எடுத்துக்கொண்டுபோய் ஆற்றில் வீசிவிட்டு வந்துவிட்டார்.
அதே வேளையில், கோவாலியோவ் தனது மூக்கைத் தேடி ஊர்முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார். பல இடங்களுக்குச் செல்கிறார். ஒரு தேவாலயத்திற்குள் போய் பார்க்கிறார், அங்கு ஓர் உயர்அதிகாரியைப் பார்க்கிறார். அவர் உயர் தர ஆடையில் மிடுக்காக இருக்கிறார். மக்கள் அவரை வணங்கி மரியாதை செய்கின்றனர். அதைப் பார்த்து கோவாலியோ அதிர்ச்சி அடைகிறார். காரணம், அந்த அதிகாரி வேறு யாருமல்ல. அது தொலைந்து போன கோவாலியோவின் மூக்கே. அது இப்போது மூக்குமாதிரி இல்லை மனிதனைப்போலவே உள்ளது. அது நடக்கிறது. பேசுகிறது. அதிகாரத் தோரணையில் மிடுக்கான உடையை உடுத்திக்கொண்டு ஊரைச் சுற்றிக்கொண்டு திரிகிறது. கோவாலியோவைக் கூட அது மதிப்பதில்லை என்றால் பாருங்களேன்.
கோவாலியோவ் அந்த மூக்குகிடம் போய் பேச முயல்கிறார். “நீ என் மூக்கு” என்று அதிகாரமாகச் சொல்கிறார். ஆனால் மூக்கு அவரை அறியாதவர் போலவே நடந்துகொள்கிறது. அது தன்னை ஒர் உயர் அதிகாரி என்று பாவிக்கிறது, அப்படியே மிடுக்காகவும் நடந்துகொள்கிறது.
இங்கே கோகோல் ஒரு கருத்தைச் கலையழகோடு சொல்கிறார். மனிதனை விட பதவியே முக்கியம் என்ற சமூக மனநிலையை அவர் கேலி செய்கிறார். முதலில் அவன் ஒரு மனிதன் அவ்வளவே,. அவனுக்குக் கிடைக்கும் பதவி என்பது அவன் உடலின் ஒர் அங்கம்போல , பதவி கிடைத்தவுடன், அது மற்ற உறுப்புகளை விட உயர்ந்ததாகிடமுடியுமா? உறுப்புகள் அதன் அதன் இடத்தில் இயல்பாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உருவத்திற்கும் அழகு. இயக்கமும் இயல்பாக இருக்கும் என்பதுதான் இவர் சொல்லும் செய்தி.
கதை முடியவில்லை!
ஒரு மனிதன் மூக்கு இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? தனது மூக்கை மீட்டெடுக்க மீண்டும் கோவாலியோவ் பல முயற்சிகளைச் செய்கிறார். காவல் நிலையத்திற்குச் செல்கிறார். அவருக்குச் சரியான உதவி கிடைக்கவில்லை. மருத்துவரிடம் செல்கிறார். அந்த மூக்கை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிடுகிறார்கள். இப்படி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அரசின் நிர்வாக அமைப்பின் இயலாமையையும், போதாமையையும் வெளிப்படுத்துகிறார். மனிதர்களின் பிரச்சினைகளை அரசின் நிர்வாகம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, அலட்சியமும் அவமரியாதையும் இயல்பாகவே அனைத்து இடங்களிலும் வெளிப்படுவதைக் காட்சி காட்சியாகச் சித்தரிக்கிறார்.
ஒரு நாள் திடீரென்று ஓர் அதிசயம் நடக்கிறது. எந்த விளக்கமும் காரணமும் சொல்லாமல் மூக்கு மீண்டும் கோவாலியோவின் முகத்தில் தானே வந்து ஒட்டிக் கொள்கிறது. அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். நிம்மதி அடைகிறார். தனது பழைய வாழ்க்கை திரும்பக் கிடைத்ததாக என எண்ணுகிறார்.
ஆனால் முக்கியமான விஷயம் இங்கே தான்.
கோவாலியோவின் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முன்பு போலவே தன் பதவியைப் பெரிதாக நினைக்கிறார். அந்த அதிகார மமதை அவரிடம் துளியும் குறையவே இல்லை, மனிதர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை, இப்போதும் அவரிடம் வரவேயில்லை.
'தி நோஸ்' நிக்கோலாய் கோகோல் எழுதிய மற்றொரு வித்தியாசமான சிறுகதை. இது 1836 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தக் கதை வெளிவந்த காலத்தில் பலருக்குப் புரியாமல் இருந்தது. காரணம், இது வழக்கமான கதைகளைப் போல் இல்லை. ஆனால் காலம் கடந்தபின், இதன் மதிப்பும் புகழும் கூடினது. இந்தக் கதை மிகவும் நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், சமூகத்தை ஆழமாக விமர்சிக்கிறது, நல்ல சாட்டையடி என்று கூடச் சொல்லலாம், உலகஅறிஞர்கள் இக்கதையை மிகவும் உயர்வாகவே மதிப்பிட்டனர்.
“தி நோஸ்” கதை ரஷ்ய இலக்கியத்தில் நவீன எழுத்து முறையைத் தொடங்கியது. மேலோட்டமாகப் பார்த்தால் இது அபத்தமாகத் தோன்றும்; அன்றாட சமூகநிகழ்வுகளைக் கொண்டு பார்த்தால் இதன் உள்ளார்ந்த அர்த்தம் விளங்கும். பின்னர் வந்த பல எழுத்தாளர்கள் இந்தக் கதையை முன்மாதிரியாகக் கொண்டனர். குறிப்பாக, நவீன இலக்கிய வளர்ச்சியில் இதன் தாக்கம் மிக அதிகம்.
மேலும், இந்தக் கதை நாடகம், ஓபேரா, திரைப்படம் போன்ற வடிவங்களிலும் மாற்றப்பட்டது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால், ரஷ்ய இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய கதைகளில் இதுவும் ஒன்று. “தி நோஸ்” தனது புதுமையான நடை, நகைச்சுவை கலந்த சமூக விமர்சனம், ஆழமான கருத்துகள் ஆகியவற்றால் உலக இலக்கியத்தில் நீடித்த புகழைப் பெற்ற ஒரு முக்கியமான சிறுகதை.
3
இதே போன்று, அரசு ஆய்வாளர் (The Government Inspector) என்ற நாடகம் அரசு அமைப்பின் ஊழல், பயம் மற்றும் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. அந்தக் காலத்திலே இலஞ்சம், பொய், அதிகார மோகம் அரசு அமைப்பில் எவ்வாறு ஊடுருவி இருந்தன என்பதை இந்த நாடகம் நகைச்சுவையுடன் காட்டுகிறது.
கோகோலின் முக்கியமான படைப்பாகக் கருதப்படுவது இறந்த ஆத்மாக்கள் (Dead Souls) இது 1842 ஆம் ஆண்டு வெளிவந்த நாவல். ரஷ்ய சமூகத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு மோசடியை நகைச்சுவை மற்றும் பகடி கலந்த நடையில் காட்டுகிறது.
இறந்த ஆத்மாக்கள் ஒரு கதை மட்டுமல்ல; நகைச்சுவை கலந்த கடும் சமூக விமர்சனமும் கூட. அதில் ரஷ்ய சமூகத்தின் ஊழல், போலி மரியாதை, பண ஆசை ஆகியவற்றை நகைச்சுவையாக அப்பட்டமாகக் கோகோல் காட்டுகிறார்
இதேபோல் ஓவியம் (The Portrait), ஒரு பைத்தியக்காரனின் நாட்குறிப்பு (Diary of a Madman), நெவ்ஸ்கி சாலை (Nevsky Prospekt)போன்ற கதைகளும் கோகோலின் முக்கியமான படைப்புகளாகும். இவற்றிலும் பேராசை, மனித மனப் போக்குகள், சமூக அழுத்தம், அதிகார மயக்கம் போன்றவையே மையக்கருவாக உள்ளன.
கோகோலின் எழுத்து மிகவும் தனித்துவமானது. அவர் நகைச்சுவையை ஆயுதமாகப் பயன்படுத்தினார். வாசகனை முதலில் சிரிக்க வைத்து பின்னர் சிந்திக்கவைக்கிறார். விநோதம், மிகைப்படுத்தல், கற்பனை ஆகியவை அவரது எழுத்துகளில் அதிகமாக இருந்தாலும், அவை உண்மையை இன்னும் தெளிவாகக் காட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டன.
கோகோல் ஒரு நகைச்சுவை எழுத்தாளராகவும், யதார்த்தவாத எழுத்தாளராகவும் அடையாளப்படுத்தப் படுகிறார் . அவர் சமூகத்தை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றாலும் தனது கதைகளின் மூலம் சமூக அமைப்பையே கேள்விக்குள்ளாக்கினார்.
நிக்கோலாய் கோகோல் மனித வாழ்க்கையின் வலியையும், சமூக அநீதியையும் எளிய மொழியில் நகைச்சுவையாக வெளிப்படுத்திய மகத்தான கலைஞன். மூக்கு, மேலாடை, அரசு ஆய்வாளர், இறந்த ஆன்மாக்கள் போன்ற அவரது படைப்புகள் காலம் கடந்தும் இன்றும் பொருத்தமாகவே இருக்கின்றன.
4
நிக்கோலாய் கோகோல் (Nikolai Gogol) உலக இலக்கியத்தில் மிகவும் முக்கியமான எழுத்தாளர் ஆவார். அந்தக் காலத்தில் ரஷ்ய அரசியல் மற்றும் சமூக ரீதியாகக் சிக்கலான சூழலில் இருந்தது. அரசரின் முழு அதிகார ஆட்சி நிலவியது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருந்தன. ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் கடைநிலை அரசு ஊழியர்கள் மதிப்பின்றி நடத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலைகளே கோகோலின் எழுத்துகளுக்கான அடிப்படையாக அமைந்தன.
கிராம வாழ்க்கை, நாட்டுப்புற மக்கள் கதைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் ஆகியவை அவரது ஆரம்ப காலச் சிந்தனையில் ஆழமாகப் பதிந்தன. இதன் விளைவாக அவரது தொடக்ககாலப்படைப்புகளில் கற்பனை, நகைச்சுவை மற்றும் கிராமியச் சூழல் அதன் பின்புலம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. அவரது ஆரம்பக் கதைத்தொகுப்பு “டிகான்கா பண்ணை அருகே மாலை நேரங்கள்” (Evenings on a Farm Near Dikanka) இதற்குச் சிறந்த உதாரணம். இந்தக் கதைகள் வாசகர்களை ஈர்த்தன. கோகோலின் மொழித்திறனையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தின. பின்னர் கோகோல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு வந்தார். நகர வாழ்க்கை அவரது எழுத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள், அதிகாரிகள், எழுத்தர்கள் ஆகியோரின் வாழ்க்கையை அவர் மிக அருகிலிருந்து பார்த்தார். அவர்களின் ஏமாற்றம், அவமானம், தனிமை ஆகியவை அவரது கதைகளின் மையமாக மாறின. இதன் மூலம் அவரது எழுத்துகள் ரொமான்டிசத்திலிருந்து (Romanticism) யதார்த்தவாதத்தை நோக்கி நகர்ந்தன.
நிக்கோலாய் கோகோல் 1809 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசின் உக்ரைன் பகுதியில் பிறந்தார். அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்; அவரது தந்தை நாடகங்களில் ஆர்வம் கொண்டவர் என்பதால், சிறுவயதிலிருந்தே கோகோலுக்கு இலக்கிய ஆர்வம் உருவானது. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எழுதுவதுதான் அவரின் வாழ்க்கை. அவர் எழுதத் தொடங்கிய போது, ரஷ்ய சமூகத்தில் அதிகாரம், பணம், மற்றும் போலித்தனம் மிக அதிகமாக இருந்தது. இதைப் பார்த்த அவர், மற்ற எழுத்தாளர்கள் போல அழகியல் நோக்கில் மட்டும் எழுதாமல், சமூகத்தின் குறைகளை நகைச்சுவையுடன் சாடும் விதமாக எழுதத் தொடங்கினார். அதனால் தான் அவரது கதைகள் தனித்துவமாக இருந்தன. அவரது காலத்தில் அலெக்சாண்டர் புஷ்கின் போன்றவர்கள் ரொமான்டிசம் பாணியில் எழுதினாலும், கோகோல் உண்மையான வாழ்க்கையை நகைச்சுவைப் பாணியில் சாடினார்.
அவர் எழுதிய முக்கியமான படைப்புகளில் இறந்த ஆத்மாக்கள் மிகவும் முக்கியமானது. இந்த நாவலை அவர் மூன்று பகுதிகளாக எழுத நினைத்தார். முதல் பகுதியில், சமூகத்தில் உள்ள மோசடி, பேராசை போன்றவற்றைக் கடுமையாகச்சாடினார். இரண்டாம் பகுதியில், மனிதன் எப்படி நல்லவனாக மாற வேண்டும் என்பதைச் சொல்ல நினைத்தார். ஆனால், இதை அவர் எழுதிக் கொண்டிருந்த போது, மனதளவில் குழப்பமடைந்தார். “நான் எழுதுவது சரியா? இது மக்களுக்கு பயன்தருமா?” என்று அவர் சந்தேகப்படத் தொடங்கினார். பின்னர் அவர் ஆன்மீகச் சிந்தனைகளில் அதிகமாக மூழ்கி, தனது எழுத்துக்கள் போதுமான நல்ல கருத்தைத் தரவில்லை என அவராகவே நினைத்துக்கொண்டார், இந்த மனஅழுத்தம் மற்றும் குழப்பத்தின் காரணமாக, அவர் ஏற்கெனவே எழுதியிருந்த இறந்த ஆத்மாக்கள் நாவலின் இரண்டாம் பகுதியை தானே தீயில் போட்டு எரித்துவிட்டார். சில நாட்கள் கழித்து, உடல்நலமும் மனநிலையும் பாதிக்கப்பட்ட நிலையில், 1852 ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.
கோகோல் உலகம் கொண்டாடும் எழுத்தாளர். உலக இலக்கியத்தில் அவருக்கு நிரந்தரமான ஓர் இடம் இப்போதும் உண்டு. பின்னர் வந்த ஃபியோதோர் தோஸ்தோயெவ்ஸ்கி லியோ டால்ஸ்டாய்) போன்ற பல ரஷ்ய எழுத்தாளர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தார்.
- பாரதிபாலன்