இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்னும் நூலை எழுதியிருக்கிறார்; “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை” என்பதை அடித்தளமாகவும் ஆதாரமாகவும் கொண்டு இந்நூலைப் படைத்திருக்கிறார்; வீர பாண்டியன்  அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி ஆழமாகப் படித்து வருகிறார், எழுதியும் வருகிறார்; பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நேரடிப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்!

‘சுயநிர்ணய உரிமை’ என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்தறிந்து தீர்வு கண்டவர் சோவியத் ஆட்சி கண்ட மாமேதை லெனின்.

19 ஆவது நூற்றாண்டில் ஏகாதிபத்திய வல்லரசு நாடுகள் உலக நாடுகளை ஆக்கிரமித்துப் பங்கு போட்டுக் கொண்டன.  குறிப்பாக, உலகத்தில் மிகவும் வளம் நிறைந்த நாடு இந்தியா; எல்லாக் காலங்களிலும், எல்லாத் தட்பவெப்ப நிலை களிலும் விவசாயம் செய்வதற்குப் பொருத்தமான நாடு இந்தியா; இந்தியாவைக் கைப்பற்ற அலெக் சாண்டர் தொடங்கி, வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்களெல்லாம் பயணித்து வந்தார்கள்; மத்திய ஆசியப் பிரதேசங்களி லிருந்தும் படை படையாக இந்தியாவுக்குள் நுழைந்து குடிபெயர்ந்து விட்டார்கள்! இறுதியாக, ஆங்கிலேயர்கள் வணிகத்துக்கு இடம் கேட்டு, நாட்டையே அடிமைப் படுத்திவிட்டார்கள்; தென்கிழக்கு ஆசியநாடுகள், ஆப்பிரிக்க அமெரிக்க நாடுகள் அடிமைப்படுத்தப் பட்டன.

20-ஆவது நூற்றாண்டில் மீண்டும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போட்டிகளின் விளைவாக, முதல் உலகப்போர் துவங்கியது.  ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து அடிமைப்பட்ட நாடுகளின் உரிமைக்காகவும், பொருளாதார விடுதலைக்காகவும் விழிப்புணர்வு ஏற்பட்டது; அது எங்கும் பரவியது.  ருஷ்ய நாட்டில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி நடந்து வந்தது.  ஜப்பான், பின்லாண்ட் ஆகிய நாடுகளின் மீது படையெடுத்தது; ஜப்பானை வெல்ல முடியவில்லை.  ஜார் மன்னனின் ஆட்சியை எதிர்த்து லெனின் தலைமையில் விவேகம் மிகுந்த திட்டத்தோடு வீரம் செறிந்த போராட்டம் நடந்தது; வெற்றி பெற்றது.  ஆட்சி அமைக்கப்பட்டதும், “எந்த நாட்டையும் அடிமைப்படுத்தமாட்டோம்” என்று லெனின் பிரகடனப்படுத்தினார்.  இது உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய “யுகப்புரட்சி” என மகாகவி பாரதி புகழ்ந்து பாடினார்.

ஜார் ஆட்சி பலதேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று வர்ணிக்கப்பட்டது.  ருஷ்யப் பேரினவாதம் தலைதூக்கிவிடாமல் தடுக்கும் தொலைநோக்கோடு சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republic) எனப் பெயரிடப்பட்டது.  தேசிய இனங்களின் ஒன்றியத்திலிருந்து, விரும்பினால் பிரிந்துசெல்வதற்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது.  இவ்வுரிமை வழங்கப் பட்டு விட்டால் பெரிய நாடு பல சிறுநாடுகளாகத் துண்டுபட்டுவிடும் என்ற கருத்து வெளிப்பட்ட நேரத்தில் லெனின் அதற்குத் தெளிவான விளக்கம் கொடுத்தார்.  “கணவன்-மனைவியாக இணைந்து வாழும் குடும்பத்தில் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று உரிமை வழங்கப் பட்டால், உடனே எந்தக் குடும்பத்திலும் மணமுறிவு செய்துவிடமாட்டார்கள்! அவ்வளவு பலவீனமான குடும்ப உறவு என்றும் நீடித்து இணைந்து இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தனித்தன்மையைப் பொருத்தே தேசிய இன உணர்வும் உரிமையும் நிலைப்படுத்தப் படுகின்றன;  வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது.

இந்தியா பலதேசிய இனங்களைக்கொண்ட பெரிய நாடு; அதன் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற நோக்கோடு அரசியல் சாசனம் அமைக்கப்பட்டுள்ளது; பொதுத்தேர்தல்களும் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் நடத்தப்படுகின்றன; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தால் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் படுகிறது; குடியரசுத் தலைவரைவிட, நாடாளு மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியே பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறது; மதச்சார்பற்ற கொள்கை, அடிப்படையானது; ஒருமதம், ஒரு மொழி என்று வலியுறுத்தப்பட்டுள்ள பாகிஸ் தானிலிருந்து பங்களாதேஷ் போராட்டங்களை நடத்தி தனிநாடாகியது.  இலங்கையில் பௌத்தம், அரசு மதமாக்கப்பட்டது;   சிங்களமும் அரசு மொழி யாகிவிட்டது; கணிசமான சிறுபான்மை யினரான தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர்; தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுவிட்டது; தமிழர்களின் பண்பாடு புறந்தள்ளிவிடப்பட்டது; அரசு அதிகாரத்திலும் பணிகளிலும் தமிழ் மக்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை.

srilanka_370இலங்கைத் தீவின் வாழ்விலும், வளர்ச்சியிலும், துன்ப துயரங்களிலும் பெரும்பங்காற்றிய தமிழ் மக்கள் புறக்கணிக்கப் பட்டதன் விளைவே, தமிழ் மக்களின் நீண்ட நெடுங்காலமான சமஉரிமைக் கோரிக்கை! தமிழ் மக்களின் பிறப்புரிமையும் கோரிக் கைகளும் ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்டதால் தான் கடந்த முப்பதாண்டு காலமாக நடந்து வருகிறது இந்த நீண்ட போராட்டம். 

தமிழினம் பேரழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.  விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.  வெற்றி முழக்கமிட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டு மென்று ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் குழு அறிவித்துள்ளது.  ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இதே கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன; ஸ்வீடன் போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதுள்ள தடையை நீக்க வேண்டு மென்றும், தமிழர்களுக்குச் சம உரிமைவழங்க வேண்டுமென்றும் அரசாலேயே தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இந்திய அரசு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் அரசுக்கு எல்லா உதவிகளையும் வாரிவழங்குகிறது.  இந்திய அரசின் நிதி உதவி, இராணுவ உதவி அனைத் தையும் பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைத் தாக்கி அழித்துவருகிறது; கச்சத் தீவையும் இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தாகிவிட்டது.

உலகநாடுகளே கண்டிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு கட்டுப்படுத்தத் தயாரில்லை; பெரும்பான்மையான கட்சிகள் இந்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் கூட  உரத்த குரலெழுப்பியும் கூட மத்திய அரசு இன்னும் மௌனம் சாதித்துவருகிறது.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை நியாயத்தை வலியுறுத்தும் இந்நூலாசிரியர் வரலாற்று வழியான தகவல்களைக் காலவரிசைப்படி தொகுத் தளித்திருக்கிறார்.  இந்நூல் சுயநிர்ணய உரிமை பற்றிய வரலாற்று ஆவணம்.   நூலாசிரியர் மு.வீரபாண்டியனுக்கும், அழகாக அச்சிட்டு வழங்கி யிருக்கும் என்.சி.பி.எச். நிறுவனத்துக்கும் பாராட்டுக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Pin It