நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென்னைப் பற்றி எழுதப்பட்ட ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பே இந்நூல்; அமர்த்யா சென்னின் வாழ்க்கை குறித்தும், அவரது ஆராய்ச்சியைக் குறித்தும் சுருக்கமாகவும் சிறப்பாகவும் எழுதப் பட்ட நூலே இந்நூலாகும்; எதிர் வெளியீடு எனும் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை சி.எஸ்.தேவ நாதன் தமிழில் அழகாக மொழிபெயர்த்திருக் கிறார். மூல நூலைப் படிப்பதைப் போன்ற உணர்வை இந்நூல் தூண்டுகிறது. நூலாசிரியர் இந்நூலுக்குச் சமூகநீதிப் போராளி என்று பெயர் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது; அமர்த்யா சென் நூல்களில் பெரும்பாலும் சமூகநீதி பற்றிய கருத்தே மையப் பொருளாக இருக்கும்; அவரது ஆராய்ச்சியையும் பணியையும் சரியாக நோக்கியே நூலாசிரியர் அப்பெயர் வைத்துள்ளார். சென்னை, அவரது தாயகமான இந்தியா அறிந்து கொள் வதற்கு முன் மிகச் சரியாக அறிந்துகொண்டவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களேயாகும். அம்மேதையை நம் மக்கள் சரியாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலால் எழுதப்பட்டதே இந்நூல்.

amarthya sen 400மதிப்புமிக்க தருணம் என்று தொடங்கி நிலைத்த புகழ் என்பது வரை 14 தலைப்புகளில் நூல் விரிந்துள்ளது. நூலின் தொடக்கத்திலேயே டாக்கா நகரத்தில் இந்துக்களுக்கும் முகமதியர் களுக்கும் இடையில் நடக்கும் கலவரத்தால் காதர் மியான் வெட்டுண்ட காயங்களோடு சென்னின் வீட்டில் நுழைந்ததும், அவருடைய தந்தையும் அவரும் எவ்வளவு பதறிப்போய் உதவி செய்து உள்ளார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சென்னின் தந்தையார் டாக்கா பல்கலையில் பேராசிரியராகப் பணியில் இருந்தவர். காதர் மியானின் படுகாயத்தைக் கண்டதும் தன் மகனோடு அவரைக் காரில் அமர்த்திக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விடுகிறார். காரில் வரும்போது காதர்மியான், தன் குழந்தைகளின் பசியைப் போக்கக் கூலி வேலை செய்ய வந்த போது தன்னை வெட்டிவிட்டதாகவும், தன் குழந்தை எப்படி உள்ளனரோ என்றும் கூறியது பத்து வயது சிறுவனாக இருந்த சென்னை மிக வருத்திவிட்டது; காதர் மியானின் வெட்டுக் காயங்கள் பெரும் அச்சத்தை அளித்திருந்தாலும், காதர்மியான் தன் குழந்தைகளின் பசியைப் பற்றிக் கூறியதுதான் சென்னைப் பெரிதும் பாதித்துவிட்டது.

காதர்மியானின் இறப்பும், அவருடைய குடும்பப் பசியும் பெரிதும் பாதித்துவிட்டதால் சில காலம் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாதவராகவே இருந்துள்ளார்; பின்னர் பெற்றோர்களின் தேற்று தலால் ஒருவாறு மீண்டுள்ளார். எனினும் அந்தப் பாதிப்புதான், பின்னர், ஏழ்மை, வறுமை, பசி ஆகியன குறித்தும் ஏழை - எளிய மக்கள் குறித்தும் ஆராயத் தூண்டுகோலாக இருந்துள்ளது. இத் தூண்டுதலும் டாக்கா, கல்கத்தா நகரங்களின் சூழலும் அவரை எப்போதும் ஏழைகளின் மீது இரக்கம் கொண்டவராகவே வளர்த்துள்ளன; பத்து வயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான துன்பமிக்க அனுபவம் உண்டாக்கிய சீற்றமும் வருத்தமும் அவரிடம் என்றும் மறைந்துவிட வில்லை; நோபல்பரிசு பெற்ற காலத்திலும் அந்தக் காட்சி அவர் நெஞ்சில் வந்துபோயுள்ளது. ஆம், அந்த அரிய மனிதர்தான் அமர்த்யா சென்.

சென்னின் குடும்பம் அறிவுசார் குடும்பமாகும். அவர் தந்தை வேதியல் பேராசிரியர்; தாய் ஓர் இலக்கியவாதி; அக்காலத்திலேயே இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர்; தாகூரின் இசைப் பாடல்களை மேடையில் அரங்கேற்றியவர்; சாந்தி நிகேதனத்தில் தாகூரிடம் பாடம் கேட்டவர்; அவ் வளாகத்திலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தவர்; அந்த அம்மையாரின் தந்தை க்ஷிதி மோகன், தாகூரின் நெருங்கிய நண்பர்; பன்மொழி அறிஞர்; சமஸ்கிருதத்தில் புலமை கொண்டவர்; சாந்தி நிகேதனத்தின் ஆசிரியராக முதல்வராக விளங்கி யவர்; அப்போதுதான், நம் சென்னுக்குத் தாகூர் அமர்த்யாசென் என்று பெயர் வைத்துள்ளார்; அமர்த்யா என்றால் அழியாதவன் என்று பொருள்; ஒருமுறை, சென் தன் தந்தையை நோக்கி “மனிதனாகப் பிறந்தவர் அனைவரும் இறப்பது இயற்கையாக இருக்கும்போது, நான் மட்டும் எப்படி அழியாத வனாக இருக்க முடியும்” என்றாராம். அதற்கு, அவர் தந்தையார், “நீ இறந்த பிறகும் புகழோடு இருப் பாய் என்பதைச் சுட்டுவதே அப்பெயர்” என்றா ராம். சென் முதலில் டாக்காவிலும் அடுத்து சாந்தி நிகேதனத்திலும் அடுத்து கல்கத்தாவின் மாநிலக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். சாந்திநிகேதனம், சென்னின் கல்விப் பயிற்சிக்குப் புது உந்துதலை ஏற்படுத்தி அவரை வடிவமைத்துள்ளது; கல்லூரியில் சேரும் முன்பு, அவருக்குக் கணிதம், இயற்பியல், சமஸ்கிருதம் ஆகியவற்றில்தான் பேரீடுபாடு இருந் துள்ளது; ஆனால் இளமை தொட்டு ஏழைகளின் மீதிருந்த அக்கறையும், 1943-இல் வங்கத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சமும் அவரைக் கல்லூரியில் பொருளாதாரத்தைக் கற்கும் நிலைக்கு ஆட்படுத்தி யதாக நூலாசிரியர் கருதுகிறார்; கல்லூரியில் அவர் பொருளியலைச் சிறப்புப் பாடமாகவும், கணிதத்தைத் துணைப் பாடமாகவும் எடுத்து உள்ளார்.

அவருடைய குடும்பத்தினருள் சிலர் இடது சாரிக் கொள்கையுடையவராக இருந்ததாலும், மாநிலக் கல்லூரி மாணவர்களுள் பற்பலர் அக் கொள்கையுடையவராக இருந்ததாலும் அவரது பொருளாதார ஆசிரியர்களாகிய பாபாதோஷ் தத்தா, தபஸ்ம ஜனம்தார் போன்றோர்களை நன்றியுடன் சென் நினைவு கூர்கிறார். கல்லூரியில் படிக்கும்போது, ஒருமுறை மாணவர்கள் பிச்சைக் காரனைக் கண்டு ஏளனம் செய்து நகையாடி யிருக்கிறார்கள்; ஆனால், சென்னோ, அவனைப் பரிவோடு எதிர்கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்; பின்னர், கடந்த 40 நாட்களாகச் சரியான உணவை உண்ணவில்லையென்று அவன் கூறவே, உடனே அவனுக்கு உதவியுள்ளார். படிக்கும்போது அவருக்குத் தொண்டையில் (வயது 18-இல்- 1952) புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதனையறிந்த அவருடைய தாயார் பெரிதும் மனச் சோர்விற்கு ஆளாகியுள்ளார்; மருத்துவர்களும் அவருக்கு ரேடியம் சிகிச்சை அளிக்க அஞ்சியுள்ளனர். ஆனால் சிறிதும் தளராமல் மருத்துவர்களைக் கண்டு அச்சிகிச்சையை உடனே தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களும் இசைந்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனிடையே படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளார். ஒரு வருட சிகிச்சைக்குப் பின் அவர் நலம் பெற்றுள்ளார்.

கல்லூரிக் கல்விக்குப் பின்னர் உயர் கல்விக் காக அவர் இலண்டன் சென்று கேம்பிரிட்ஜியின் கீழுள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார்; பொருளாதாரத்தில் சிறந்த வல்லுநர்களாகிய மார்க்சிய அறிஞர் மாவுரிஸ்டோப், டென்சிஸ் ரோபர்ட்சன் போன்றோரிடம் அவர் பொருளா தாரம் கற்றார்; அவர்களிடம் கற்றதை அவர் பெருமையாகக் கருதுகிறார். அங்கு முதுகலை வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி அங்கேயே தங்கி முனைவர் பட்டத்திற்காகப் படிக்கத் தொடங்கியுள்ளார். இந்தக் கல்லூரியில்தான் ஐசக் நியூட்டன், பிரான்சிஸ் பேகன், பைரன் ஆகியோர் கற்றுள்ளனர். நேருவும் இங்குதான் படித்துள்ளார். முனைவர் பட்டத்திற்காக ஓராண்டை டிரினிட்டியில் நிறைவு செய்துவிட்டு, மற்ற இரண்டாண்டை இந்தியாவில் தங்கி அவர் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே வங்க அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணியாற்றினார்; அங்கு இலக்கியம் பயின்ற மாணவியைக் காதலித்துப் பின்னர் மணம் செய்துகொண்டார். அந்தப் பெண்மணி வங்காளத்தின் சிறந்த கவிஞரான நரேந்திரதேவின் மகளாவார்; இந்தப் பெண்மணிக்கு நபநீதா என்று பெயர் சூட்டியவரும் தாகூர்தான்; இரண்டாண்டு களில் தம் ஆய்வை நிறைவு செய்து அதனைப் பல்கலையில் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். அதன் காரணமாக அங்கேயே ஆய்வுக்குழு உறுப் பினர் பெருமையும் பெற்றார். சென் தம் கடும் உழைப்பாலும், தொடர் ஆய்வாலும் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்; இக்காலகட்டத்தில் கேம்பிரிட்ஜியின் சூழல் நன்றாக இல்லாததால் அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்குச் சென்றார். அங்குப் பாடம் பயிற்றுவித்தார்.

அமெரிக்காவின் MIT பல்கலையில் (1961இல்) பணியாற்றியபோது அங்கிருந்த அறிவுச் சூழலும், சிந்தனைக் கிளர்ச்சியும் அவரை வெகுவாகக் கவந்துள்ளன. மற்றும் சிறந்த மேதைகளான பேரா சிரியர் பால் ஸலமூவெல்லன், ரோபர்ட் சோலவ், ப்ராங்கோ, மோடிக்லியானி போன்றவர்களின் நட்பு அவருக்குப் பேரூக்கத்தையும் எழுச்சியையும் தந்துள்ளன. பல ஆண்டுகள், டிரினிடி, MIT, ஸ்டான்போர்டு, பெர்கிலி, ஹார்வேர்டு, தி லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக் கழகங்களில் தில்லியில் 1977-ஆம் ஆண்டில் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் எனும் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக அமர்ந்தார். அக்காலத்தில் அந்நிறுவனத்தை உலகப் புகழ் கொண்ட நிறுவனமாக மாற்றியுள்ளார். பொருளா தாரத்தில் உயராராய்ச்சிச் செய்ய இடமளித் துள்ளார்; மற்றும் சமூகவியல், பூகோளவியல் போன்ற துறைகளிலும் உயராய்வு செய்ய உதவி யுள்ளார். அவர், பல பல்கலைக் கழகங்களில் பற்பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந் தாலும், தில்லியில் இருந்தபோதுதான் தன் முதல் நூலான The Collective Choice and Social Welfare என்ற நூலை வெளியிட்டார்; இந்நூல் பல வாத - பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது; இந்நூலைத் தம் மனம் கவர்ந்த ஆசிரியர்களாகிய கென்னத் ஏர்ரோ (ஹார்வேர்டு) ஜான் ராவல்ஸ் ஆகி யோர்க்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தார்.

பொருளாதாரத்தைக் குறித்து உலகம் வியக்க ஆய்வு நிகழ்த்திய அவருக்கு வீட்டுப் பொருளா தாரத்தை நிர்வகிக்கத் தெரியாது போனது. அவரது வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை பணமுடை இருந்துள்ளது. அந்நேரங்களில் அவருடைய நண்பர் ரோமேஷ் கங்குலி பெரிதும் உதவியதோடு வீட்டுப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவது எப்படியென்பதை அவருக்குப் போதித்துள்ளார். சென்னின் ஆய்வுகளில் சமூகத் தேர்வு, தொழில் நுட்ப முன்னேற்றம், வேலை வாய்ப்பு, பொருளா தார ஏற்றத்தாழ்வு போன்றவை மிகக் குறிப்பிட்டத் தக்கவையென்று ஆய்வாளர் கூறுவர். எனினும் இந்நூலில் ஆண்-பெண் சமத்துவம், பஞ்சம் ஆகியன குறித்து தனித்தனிப் பகுதியாக விளக்கம் செய்யப் பட்டுள்ளது. அவற்றைச் சுருங்க நோக்கினால் அவற்றின் முக்கியத்துவத்தை உணரலாம். பெண்- சமத்துவம் குறித்து மிக ஆழமாக அவர் ஆய்ந் துள்ளார்; இதற்காக அவர் கள ஆய்வு செய் துள்ளார். முதலில் டாக்காவிலுள்ள சில ஊர் களிலும், மேற்கு வங்காளத்திலுள்ள ஊர்களிலும் ஆண்-பெண் குழந்தைகளின் எடையைச் சோதித் துள்ளார். பின்னர் உடல் நலத்தைச் சோதித் துள்ளார். அப்போது, குழந்தைப் பருவத்தில் ஆண்களைவிட உடலமைப்பில் பெண்கள் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்றும், அது அவர்களுக்கு இயற்கை அளித்த கொடையென்றும் கூறியுள்ளார்; குழந்தைப் பருவத்துக்கு அடுத்து அவர்களுக்குச் சத்தான உணவு வழங்கப்படாத தாலும், சொத்துரிமையும், கல்வியும் போதிய மருத்துவம் இல்லாததாலும், சுதந்திரம் இல்லாத தாலும் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடு வதாகக் கூறுகிறார்.

பெண் எண்ணிக்கை ஏழைநாடுகளில்தான் மிகக் குறைவாக உள்ளதெனக் கூறுகிறார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் ஏனைய ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில்தான் இக்குறை பாடு பெரிதும் உள்ளது என்கிறார். கேரளாவில் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக இருப் பதற்கு அங்குப் பெண்கள் அதிகமாகப் பிறக் கிறார்கள் என நாம் கருதுகிறோம்; சென் அதனை மறுக்கிறார்; கேரளாவில் பெண்களுக்குச் சொத் துரிமை பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இருப்பதாலும், கல்வி, வேலை வாய்ப்பு இருந் தாலும் அங்குப் பெண் எண்ணிக்கை கூடியிருப்ப தாகவும், இந்தியாவில் கேரளாவில் மட்டுமே பெண்நிலை உயர்வாகி இருப்பதாகவும் கூறு கிறார் மற்றும் பெண்களின் மரண விகிதமும் அங்குக் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து பெண் சமத்துவத்திற்கும் முன் னேற்றத்திற்கும் பொருளாதாரம் முக்கிய இடம் வகிக்கிறதெனக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். மற்றும் மேலை நாடுகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், ஆணாதிக்கம் அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என் கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முன் னேறிய நாடுகளில் பெண்களுள் பெரும்பாலோர் கற்றிருந்தாலும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளில் அவர்களை அமர்த்து வதில்லையாம். கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு, பர்கிலி போன்ற பல்கலைக் கழகங் களில் அதே நிலைதான் உள்ளது என்கிறார். அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் அந்நாட்டு அதிபராக வராதிருப்பதைக் கொண்டே அதனை உணரலாம் என்கிறார். ஜப்பானிலும் பெண்களை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதில்லை யாம்.

இந்தியாவில் பெண்கள் சம எண்ணிக்கையில் பிறந்தாலும், கல்வியும், பொருளாதாரமும், வேலை வாய்ப்பும், சுதந்திரமும் இல்லாததால் இடையிடையே அவர்களின் இறப்பு எண்ணிக்கை மிகுவதாலும், கருவிலேயே சாகடிப்பதாலும், அவர் தம் ஆய்வில் அவர்களை காணாமல் போன பெண்கள் என்று தலைப்பிட்டு அலசுகிறார்; இயற்கையாக இறக்காமல், ஆணாதிக்கத்தாலும், முதலாளித்துவ கருத்தோட்டத்தாலும், சமுதாய அவமதிப்பாலும் அவர்கள் சாவதால், அவர்களை காணமல் போனவர்கள் என்றுகூறி இந்தச் சமுதாயத்தை எச்சரிக்கிறார். இதுவொரு புதுக் கண்ணோட்டம் தானே! உலகில் உள்ள பொருளா தார நிபுணர்களில் பெண் சமத்துவம் குறித்து ஆய்ந்த முதல் நிபுணர் சென்தான் என்கின்றனர். பெண் சமத்துவம், பெண் முன்னேற்றம் குறித்து ஆய்ந்த இவரோடு, இவர் மனைவி நபநீதா 11 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து பிரிந்துள்ளார். இவர்கள் காதல் மணம் செய்து கொண்டவர்கள்; இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நபநீதா பிரிந்தாலும் இறுதிவரை சென்னுடன் நட்பாகவே இருந்துள்ளார். நபநீதா இலண்டனுக்கு வரும்போது சென் வீட்டில்தான் தங்குவாராம். இன்றும் அது தொடர்கிறது. 1971-இல் அவர் பிரிந்தார். 1973-இல் ஈவா கலோனி என்ற பொரு ளாதார நிபுணரை மணந்தார். அவரும் ஓர், ஆண், ஒரு பெண் என்று இரு குழந்தைகளைப் பெற்று விட்டுச் சில ஆண்டுகளில் புற்று நோயால் 1985-இல் இறந்து விடுகிறார். சென் ஹார்வேர்டில் அந்தச் சிறு குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்து கொண்டுதான் ஆய்வு செய்துள்ளார். 1991-இல் எம்மாரோத்சைலட் எனும் பொருளாதாரப் பேராசிரியரை மணந்து கொண்டார்.

எத்தனை தொல்லைகள், துன்பங்கள் குறுக் கிட்டாலும் அவர் ஆய்வுப் பணியில் இடையறாது ஈடுபட்டுக் கொண்டே இருந்துள்ளார். இரண் டாம் முறை புற்றுநோய் மீண்டும் தாக்கியது. இலண்டனில் ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பின் பிழைப்போமா என்ற ஐயம் அவரை வாட்டியுள்ளது. எனினும், துணி வாக எதிர்கொண்டு சாவிலிருந்து மீண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சையால் அவரது பேச்சு உச்சரிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். சென் தம் வாழ்க்கையிலிருந்து நமக்குச் சொல்லும் செய்தி, “எந்த நிலையிலும் நம்பிக்கையை இழந்துவிடா தீர்கள்” என்பதுதான். “நான் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்கமாட்டேன்” என்கிறார். இந் நம்பிக்கைதான் அவரது வாழ்வைக் காப்பாற்றியது; ஆய்வுத் திறத்தையும் வளர்த்தது.

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை” - 669

எனும் குறளுக்கு இலக்கணமாக அவர் வாழ்ந் துள்ளார்.

சென்னின் ஆராய்ச்சியில் பஞ்சம் பற்றிய ஆராய்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது; இதிலும் அவர் பழைய முடிவுகளை மறுத்து புதுச் செய்தி களைப் புலப்படுத்தியுள்ளார். அவர் பத்து வயது சிறுவனாக இருந்தபோது 1943-இல் ஏற்பட்ட பஞ்சத்தை நேரடியாகப் பார்த்துத் துடிதுடித்துப் போனவர்; அந்நிகழ்வு அவரது நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது. பிற்காலத்தில் பஞ்சத்தைப் பற்றி 1970-ஆம் ஆண்டில் ஆயத் தொடங்கி 1981-இல் நிறைவு செய்துள்ளார். அப்படி எழுதியதுதான் அவரது “வறுமையும் பஞ்சங்களும்” எனும் நூலாகும். நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கு, விளைச்சல் இல்லாததும் வான் மழை இல்லாததுமே காரணமாகும் என்று நம்மில் பலர் இந்நாள் வரை நம்பி வருகிறோம். இதற்குக் காரணம் அரசின் அறிவிப்பும் அதனை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங் களுமேயாகும். வங்காளத்தில் 1943- செப்டம்பர் திங்களில் பஞ்சம் ஏற்பட்டுப் பல லட்சம் மக்கள் மடிந்தனர். பஞ்சம் ஏற்பட்ட காலம் இரண்டாம் உலகப் போர் (1939- 45) நடந்து கொண்டிருந்த காலம்.

பயிர் பச்சை விளையவில்லையென்றும், உணவுப் பொருள் போதிய அளவு இல்லையென்றது ஆங்கிலேய அரசாங்கம். உலகப் போரையும் காரணம் காட்டினர். ஆனால், அவர்கள் காட்டாத இன்னொரு காரணத்தையும் சென் காட்டுகிறார். அதாவது 1942- அக்டோபர் 16-ஆம் தேதி ஒரிஸ்ஸாவில் ஏற்பட்ட பெரும் புயலால் வங்காளத்தின் கிழக்குக் கரையும் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரிசாவிலிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் வரும் உணவு தானியங்கள் வர இயலா நிலை ஏற்பட்டது. இந்த நிலைகள் இருப்பினும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார். வெள்ளை அரசு மற்றொரு காரணத் தையும் கூறியது. உலகப் போரில் ஜப்பான் அரசு பர்மாவைத் தாக்கியதும், பர்மாவிலிருந்து வர வேண்டிய அரிசி தடைபட்டது. பர்மாவிலிருந்து வரும் அரிசி முதலில் பங்காளதேசத்திற்கு வந்து தான் பின்னர் பிறமாநிலங்களுக்குச் செல்லும். அதுவும் வராத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் இவைகளாலும் பஞ்சம் ஏற்படவில்லை என்கிறார் சென்; இவை, வங்காளத்தின் உணவுத் தேவையில் மிகச் சிறுபான்மையே என்கிறார். மற்றும் 1943-ஆம் ஆண்டில் வங்காளத்தின் உணவு உற்பத்தி அதிகமாகவே இருந்துள்ளது. அதாவது 1941-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1948-ஆம் ஆண்டு உணவு உற்பத்தி அதிகம் என்கிறார். 1941-இல் வராத பஞ்சம் 1943-இல் ஏன் வந்தது? இதுதான் சிந்திக்க வேண்டியது.

வங்காளத்தில் விளைச்சல் அதிகமாக இருந்தது; தேவையான உணவுப் பொருளும் இருந்தது; இந்தப் பஞ்சத்தில் 3 லட்சம் மக்கள் இறந்தாலும் செல்வந்தர்களும், ஓரளவு வசதி படைத்த பணக்காரர்களும் சாகவில்லை; இறந்த வர்கள் பெரும்பாலும் உழைக்கும் ஏழை மக்கள் மட்டுமே; அவர்கள் ஏன் செத்து மடிந்தனர்? அவர்களால் உணவுப்பொருளை வாங்க முடிய வில்லை; காரணம் விலைவாசி மிக அதிகம். விலை வாசி ஏன் அதிகமாயிற்று? ஓரளவு உணவுத் தட்டுப் பாடு இருந்ததை, முதலாளிகளும், வணிகர்களும் மிகுதியான பொருள்களைப் பதுக்கிக் கொண் டார்கள்; அதனால் விற்கப்படும் பொருள் அளவு குறைவாக இருந்தது. குறைவாக இருந்தால், மிகப் பெரும்பாலோர்க்கு தேவை ஏற்படவே விலை வாசி உயர்ந்தது. விலைவாசி உயர்ந்ததால் ஏழை- எளிய மக்களால் உணவுப் பொருளை வாங்க முடியவில்லை. மேலும், ஆங்கில அரசு, பற்றாக் குறை, பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இரு மாதத்திற்கான உணவுப் பொருட்களைப் பொது மக்கள் இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளலா மென அறிவித்தது. இதனால் செல்வந்தர்களும் வசதியுடையோரும் பொருள்களை தங்கள் பங்குக்கு உள்ளதையெல்லாம் பதுக்கிக் கொண்டனர். இவற்றால் செயற்கை பற்றாக்குறை ஏற்பட்டு விலை வாசி மேலும் உயர்ந்தது. விலைவாசி ஏற்றத்தைக் குறித்து சென் ஒரு புள்ளிவிவரத்தைத் தருகிறார்; அதனைக் கண்டால் உண்மையை உணரலாம்.

வங்காளத்தில் (மேற்கு வங்கம் கிழக்கு வங்கம் சேர்த்து) 1942 டிசம்பரில் 37 கிலோ அரிசி ரூ 13-க்கு இருந்துள்ளது. 1943-இல் இதன் விலை 21 ரூபா யாகவும், பின்னர் 30 ரூபாயாகவும், அடுத்தடுத்து 80 ரூபாயாகவும் 108 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 37 கிலோ 11 அரிசி ரூ 6க்கும் ரூ 13-க்கும் இருந்த போதே ஏழைகளால் வாங்க முடியாதபோதுரூ 108-க்கு வாங்க முடியுமா? வாங்கமுடியாது. இதனால் ஏழைமக்கள், தங்கள் வீடுகளையும் ஆடு மாடுகளையும், கலப்பைகளையும் படகுகளையும் விற்றனர். அப்படி விற்றும் அவர்களால் காலம் கடத்த முடியவில்லை. பலர் கடைகளைக் கொள்ளை யடித்தனர்; பலர் மானத்தோடு பட்டினியிலிருந்து மாண்டனர். 30 லட்சம் மக்கள் ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்தனர். குடிபெயரும்போது பட்டினி நோயால் மாண்டனர். பஞ்சத்திற்கு முக்கியக் காரணமாக அவர் மூன்று காரணங் களைத் தான் கூறுகிறார். ஒன்று, வணிகர்கள் அதிக லாபம் கருதிப் பொருள்களைப் பதுக்கிக் கொண்டது. இரண்டாவது, விளைந்த இடத்தி லிருந்து உணவுப் பொருள்கள் கடைகளுக்கு வருவதில் ஏற்பட்ட இடையூறும் தடுப்பும்; மூன்றாவது இவற்றால் ஏற்பட்ட மிகக் கூடுதலான விலைவாசி உயர்வு இவற்றைத்தான் அவர் முக்கியக் காரணங்களாகக் கருதுகிறார். மற்றும் உணவுப் பொருளைத் தக்க பாதுகாப்பின்றிப் பதுக்கியதால், அவற்றில் கிருமித் தொற்று ஏற் பட்டது. அவற்றைப் பின்னர் விநியோகித்ததால், காலரா, அம்மை, பேதி, வாந்தி போன்றவை ஏற்பட்டு எண்ணற்றோர் மாண்டனர்.

வங்கப் பஞ்சத்தை, சீனத்தில் 1958-இல் ஏற்பட்ட மிகப் பெரும் பஞ்சத்தையும் (இதில் 30 லட்சம் மக்கள் மாண்டனர்) உலகில் பல முனை களில் ஏற்பட்ட பஞ்சங்களையும் ஒப்புநோக்கி அவற்றின் மூலகாரணத்தையும், அவற்றைத் தீர்த்த முறைகளையும் எடுத்துக்காட்டித் தம் முடிவுகளை நிறுவியுள்ளார். அவ்வாறு ஆழமும் அகலமும் கொண்ட ஆய்வுதான் அவரது ஆய்வு. அவரது ஆழ்ந்த சிந்தனையைக் காட்டுவதற்கு ஓர் எடுத்துக் காட்டை இங்கு நோக்கலாம். அமெரிக்காவில் ஒருமுறை சென் விமானத்தில் சான்பிரான்சிஸ் கோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். அவரது பக்கத்தில் அமர்ந்துள்ள ஒரு கல்விமான், இவரை நோக்கி “ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் கென்னத் ஏரோ, ஜோன்ராவல்ஸ், இன்னொரு இந்தியர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்துகிறார் களாம். தங்களுக்கு ஏதாவது தெரியுமா?” எனக் கேட்டுள்ளார்; அப்போது இவர் தம்மை யாரென்று கூறாமல் “தாங்கள் கருதுவது போல் இருக்கலாம்” என்றாராம்; “பெருமை பெருமிதம் இன்மை என்ற வள்ளுவர் வாக்கிற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு; ஆம், அவர்தான் சென். அவர் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் மட்டுமல்லர்; உலகம் போற்ற வேண்டிய சான்றோரும் ஆவார்; நோபல் பரிசு பெற்றபோது செய்தியாளர்கள் அவரைப் பேட்டி கண்டபோது அவர் தன்னடக்கத் தோடு கூறியது மிகச் சிறப்பானது;

சென்னின் பெயரைப் பல முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதும் எப்படி யோ அவர் பெயர் விடுபட்டுள்ளது. அவர் அதனைப் பெருட்படுத்தாது தம் பணியைத் தொடர்ந் துள்ளார்; பரிசு கிடைத்தபோது நேர்காணலில் செய்தியாளர்களிடம் அவர், “இதே பொருளில் அறிஞர் பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களும் இப் பரிசைப் பகிர்ந்து கொள்வதுதான் ஏற்றது; அவர் களுக்குக் கொடுக்காதது எனக்கு வருத்தம் அளிக் கிறது” என்றாராம். மற்றும் இந்தக் கௌரவம் யார் யார்க்கெல்லாம் போய்ச் சேர வேண்டும் என்பதையும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இப்படி யார் கூறுவர்? யாம் அறிந்தவரை நோபல் பரிசு பெற்றவர்களில் வேறு எவரும் இப்படிக் கூறியதாகத் தெரியவில்லை; இதன் மூலம் இந்தி யாவின் பெருமையை, சாந்தி நிகேதனத்தின் பெரு மையை அவர் உயர்த்தியுள்ளார். 1913-இல் இந்தி யாவில் முதன்முதலாகத் தாகூர் நோபல் பரிசு பெற்றார். தாகூரால் பெயர் சூட்டப்பட்ட அமர்த்யா சென் 1998-இல் அப்பரிசைப் பெற்றுள்ளார். நோபல் பரிசால் கிடைத்த தொகையைக் கொண்டு அறக்கட்டளை அமைத்து இந்தியாவிலும், பங்களா தேசத்திலும் உள்ள ஏழைகளுக்குக் கல்வி அடிப் படை மருத்துவ வசதி, பெண் சமத்துவம் ஆகிய வற்றுக்காக உதவி வருகிறார்.

நோபல் பரிசு பெற்றும், இன்னும் புதிய சாவல்களை ஏற்பவராகவும், புதிய அறிவு எல்லையை நோக்கிப் பயணிப்பவராகவுமுள்ள அப்பெருமகனைக் குறித்து இந்நூல் வெளி வந்திருப்பது பெரிதும் போற்றுதற்குரியது. இந் நூல் ஒரு சிறு காப்பியத்தைப் படிப்பது போன்று உள்ளது; இனிமையும், தெளிவும் கொண்டதாக உள்ளது. நூலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்; இந்நூலிலுள்ள தேர்வு செய்யும் உரிமை, ஆண்-பெண் பாகு பாட்டின் பன்முகங்கள், வங்காளத்தின் மகா பஞ்சம் ஆகிய மூன்று அத்தியாயங்களை இன்னும் முறையாக எழுதியிருக்க வேண்டும்; எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன; ஆனால், நடை தெளி வாக உள்ளது. மொத்தத்தில் இந்நூல் நன்றாக உள்ளது; அனைவரும் உடனே படிக்க வேண்டிய நூலாகும்.

அமர்த்யா சென் - சமூக நீதிப் போராளி

ஆசிரியர்: ரிக்சா சக்சேனா

தமிழில்: சி.எஸ்.தேவநாதன்

வெளியீடு: எதிர் வெளியீடு

305, காவல் நிலையம் சாலை,

பொள்ளாச்சி - 642 001

விலை: ரூ. 100/- 

Pin It