மனிதகுலம் முழுமைக்கும் வாழ்க்கை என்பது பொது என்ற போதும் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்று எப்படி சொல்லி விட முடியாதோ, அற்றைப் போன்றே தமிழ்நிலத்தில் வாழ்ந்த தமிழர்களும் ஒரே மாதிரியான வாழ்வை வாழ்ந்தவர்களில்லை. வெவ்வேறான சூழ்நிலைகளில் வெவ்வேறான வாழ்வை வாழ்ந்து கடந்தனர். இவர்களது வாழ்விடமும் சூழலும் வாழ்க்கை முறையும் வெவ்வேறானவையாக இருந்த போதும் சில அடிப்படையானத் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவையாகவே இருந்தன.

அவற்றுள் உணவு முதன்மையான முக்கியமான ஒன்றாகும். வேட்டைச் சமூகம், உற்பத்திச் சமூகமென நீட்சி கண்ட சமூகத்தின் முதல் தேவை உணவாகவே இருந்தது. இந்த உணவு தேவைக்குப்பிறகே மற்றவற்றை சிந்தித்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த உணவின் சுவைக்கு உப்பின் பயன்பாடும் நெருப்பு உண்டாக்கம் போன்று முக்கியமான ஒரு வாழ்வியல் திருப்பமாம். இத்தகு உப்பு தமிழ்ச் சூழலில் அதன் உற்பத்தி தொடங்கி அதன் புழங்கு மையம் மற்றும் நம்பிக்கை அதன் சமூக மதிப்பும் வாணிபமும் என்னவாக இருந்தது என்பதை அவதானிப்பதாக இக்கட்டுரை வடிவம் பெறுகிறது.

உப்பு ஓர் எளிய பொருள் என்று புறந்தள்ளிவிட முடியாது. உப்பின்றி உணவில்லை உணவுண்டு உயிர்வாழ உப்பு இன்றியமையாதது. உப்பு என்ற தமிழ்ச் சொல்லிற்கு சுவை என்று பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, என்ற சுவையெல்லாம் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டே பிறந்தவையாகும். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், அவர்கள் தம் பண்பாட்டிலும் உப்பிற்கு தனியிடம் உண்டு.உப்பு வளத்தின் அடையாளமாகவும், சுவையின் இருப்பாகவும் கருதப்பட்டது. மிகப்பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாகவும் உப்பு விளங்கியது

“நெல்லும் உப்பும் நேரே” அகம் (390-9)

என்ற அடிகள் உப்பின் சந்தை மதிப்பை உறுதி செய்கின்றன. மிகப்பெரும் சந்தைப் பொருளான உப்புடனான சில நம்பிக்கைகளும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கலந்தன.uppalam 476உப்பிட்டவரை உள்ளளவு நினை, உப்பில்லா பண்டம் குப்பையிலே, உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை போன்ற சொலவடைகள் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலிருந்து அதன் சமூக மதிப்பையும் நாம் அறியலாம். பொருளைத் தேடலும் தேடிய பொருளை செலவிடலும் மிக முக்கியமானது. அவ்வாறு தேடிய பொருளில் முதலில் வாங்கும் பொருள் உப்பாகவே இருப்பதை இன்றும் சிலரிடம் காணலாம்.

உப்பை பொழுது சாய்ந்து கொடுத்தல் இன்றும் சில பகுதிகளில் வழக்கமாய் இருக்கவில்லை. அதற்கு நாட்டார் வழக்கில் வீட்டில் செல்வம் தங்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கையை கொஞ்சம் பகுத்தறிவோடு கையாளுகையில் விடையாகக் கிடைப்பது மற்றவற்றைவிட உப்பு வாங்கியவுடனே உணவில் பயன்படுத்தப்படும் பொருள். ஆதலால் மின்சாரம் இல்லாத காலத்தில் உப்பு இரவு காலத்தில் கொடுக்கும் போது கொடுப்பவர்களுக்கே தெரியாமல் அதில் நஞ்சு போன்றவைகள் கலந்திருப்பின் அல்லது எவையேனும் நச்சு பூச்சிகள் விழுந்திருப்பின் வாங்கிச் செல்பவர் அந்த உப்பை இட்டு உணவு உண்கையில் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆதலால் உப்பு இரவில் கொடுத்து வாங்கும் பொருளாக இருத்திருக்க வில்லையோ என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

புதுப்பெண்ணிற்கு எத்தனையோ பொருள்களை சீதனமாகக் கொடுத்தபோதும் உப்பை சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இல்லை. இன்றும் தமிழ்நாட்டில் சில சமூகத்தாரிடம் புதுமணப்பெண் தன் கணவன் வீட்டிற்குள் நுழைகையில் ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டு நுழையும் வழக்கமிருக்கிறது. இதன் பொருள் செல்வத்தோடு தான் வாழப் போகும் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக கண்ணேறு கழிக்கவும் உப்பே முதன்மைப் பொருளாக இருக்கிறது.

சாதியப்படிநிலைகள் உடைய தமிழ்ச் சமூகத்தில் மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணம் உறுதிசெய்யும் போது மணமகள் வீட்டிலிருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர். உப்புப் போட்டுச் சாப்பிடுகிறாயா என்கிற பதம் கூட மனிதர்களின் வெட்கம், மானம், சூடு சொரனை என்கிற தனிமனித ஒழுக்க நிலையோடு தொடர்புடையதாகவே இருக்கிறது.

உணவின் சுவையோடும், நம்பிக்கையோடும் கலந்த உப்பு பல்வேறு பொருள்களைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது. அதிலும் கருவாடு, ஊறுகாய், கத்தரிக்காய், சுண்டக்காய், வெண்டக்காய், மிளகாய், இப்படியாக காய் காய் என்று முடியும் பல்வேறு காய்களையும் பதப்படுத்தவும் உப்பு முதன்மையாய் இருக்கிறது. உப்பு ஒரு கிருமிநாசினியுமாகும்.

 உப்பு உணவில் பயன்படுத்தப்படும் முக்கிய முதன்மைப் பொருள். அதே சமயம் உள் நாட்டு உற்பத்திப் பொருளும் கூட. இதனால்தான் காலனிய ஆதிக்க காலத்தில் காலனிய அரசு உப்புக்கு வரி விதித்த நிலையில் அதனை எதிர்த்து காந்தி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை வரலாற்றை நாம் எளிதாகக் கடந்து விட முடியாது.இப்படியான உப்பு மனித குலம் முழுமைக்குமாக தேவையான முக்கியமான முதன்மைப் பொருளாக இருக்கிறது.

இத்தகு உப்பு என்பது நெய்தல் நில விளைச்சல் பொருள். நெய்தல் நிலத்தில் அதன் உற்பத்தி என்பது அழகியலுடையது. அது அந்நில மக்களின் வாழ்வில் அடையாளமாகவும் இருக்கிறது. உப்பு உற்பத்தி செய்யப்படும் அளம் நெய்தல் நிலத்தின் நெடுங்கால நீட்சியாகும். கடற்கரை ஓரங்களில் உப்பளங்கள் இருந்தன. இன்று இருக்கின்றன. அளங்களில் பாத்திகள் அமைத்து கடல்நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிக்கப்படுகிறது.உப்பளப் பாத்திகளில் பாய்ச்சப்பட்ட கடல் நீர் ஆவியாகிப் போன பிற்பாடு உப்புப் பூக்கும் இதனை,

‘கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு’ (நற்-345.-8)

என்ற அடி உறுதி செய்கிறது.

உழவர்கள் நிலத்தில் எவ்வாறு உழவு மேற்கொண்டு வேளாண்மை செய்தார்களோ அவ்வாறே நெய்தலில் பரதவர்கள் உப்பை விளைவித்தார்கள். பரதவர் ஒரு நேரிய இடத்தினை தேர்வுசெய்து மழைநீரை எதிர்பார்க்காது கடல் நீரைக்கொண்டு உப்பை விளைவித்தார்கள்.

“நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி

வானம் வேண்டா உழவின் எம்” (நற்.254:10-11)

உப்பு உற்பத்தி என்பது நேரிய இடத்தை உடைய சீறிய உப்பு பாத்திகளில் கடல் நீரை பாய்ச்சி மழையை எதிர்பாராது. செய்யும் வேளாண்மையை உடையது,

“உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்

அயினிமா இன்று அருந்த” (நற்.254: 6-7)

இப்படி உற்பத்தியாகும் உப்பை கடல்விளை அமுதம் என்றனர்.

“யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை

வருந்தல் வாழி தோழி யாம் சென்று

உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்

கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்ற அங்கு

உருகி உகுதல் அஞ்சுவல் உதுகாண்” (நற்-88.1-5)

தலைவியிடம் தோழி சொல்வதாக அமைந்துள்ள இப்பாடல் தரும் செய்தி நாம் முன்பு செய்த வினைக்கு இப்போது ஏன் மயங்குகிறாய் வருந்தாதே தோழி!வாழ்க! நாம் சென்று அவனிடம் சொல்லிவிட்டு வரலாம் எழுந்திரு கடலில் விளைந்த உப்பு( அமுதம்) மழையில் கரைவது போல் நீ நெஞ்சம் உருகுவது கண்டு நான் அஞ்சுகிறேன். இங்கு உப்பை அமுதம் என்ற நோக்கு உப்பின் பயன்பாட்டு உயரத்தையும், அதன் மதிப்பீடையும் அறியச்செய்கிறது. இதே உப்பு வெண்கல் அமிழ்தம் என்றும் அழைக்கப்பெற்றது.

“அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்” (அகம்.207:1-2)

வெண்கல் அமிழ்தம் என்ற உப்பு, உற்பத்தி செய்யப்பட்ட அளத்தில் வணிகர்கள் வரும் வரை குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. பின்பு உப்பு வணிகர்கள் வரும் வரை உப்பை உற்பத்தி செய்தவர்கள் காத்திருக்கும் தன்மை நடைமுறையில் இருந்துள்ளது.

“உவர்விளை உப்பின் உழாஅ உழவர்

ஓகை உமணர் வருபதம் நோக்கி

கானல் இட்ட காவல் குப்பை”      (நற்.331:1-3)

பிற்பாடு உப்பு வணிகர்கள் உப்பை வாங்க வந்த நிலையில் உப்பு ஏற்றும் வண்டிகள் வரிசை கட்டி நிற்றன,

'உமண் எருத்தோடு ஒழுகை நிரைத்தன்ன’ (குறும்.388:4)

வண்டிகள் மட்டுமல்லாது கழுதைகள் மீதும் உப்பேற்றிச் செல்லும் வழக்கமிருந்தது.

“குடபுல மருங்கின் உய்மார் புள் ஓர்த்துப்

 படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்

நிரைப்பப் பொறைய நரைப்புறக் கழுதை

குறைக்குழம்பு உதைத்த கல் பிறழ் இயவு” (அகம் 207. 3-6)

கழுதைகளின் மேல் உப்பை ஏற்றி மேலை திசை நாடுகளுக்கு கொண்டுசெல்ல நல்ல நிமித்தம் பார்ப்பர். நிமித்தம் தெரிந்தவுடன் உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். அவைகள் செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பெயர்ந்து கிடக்கும் என்ற பதிவு கடுமையான நெடுவழியிலும் கழுதைகளின் துணையோடு உப்பை உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிக் கொண்டு உப்பு வணிகர்கள் விற்பனைக்கு சென்றதை அறிய முடிகிறது.

இந்த உப்பளங்கள் சூழந்த நெடுவழியிடத்தே ஊர்களும் இருந்தன

“கானல் வெண்மணல் கடல் உலாய்

பாடல் சான்ற நெய்தல் நிமிர்தர நெடுவழி” (சிறுபாண்.151-152)

உப்பை வாங்கிய வணிகர்கள் உமணர்களாவார். பெரும்பாலும் நெல்லுக்கு உப்பை மாற்றிக் கொண்டனர். உப்பு வணிகர்களாகிய உமணர்கள் தன் மனைவி மக்களோடு வந்து உப்பை வாங்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்றனர், உப்பை காசுகொடுக்காமல் நெல்லுக்கே உப்பை மாற்றினர்.

“தந்நாடு விளைந்த வெண்ணல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்கை சாற்றி

நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி

அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து

உமணர் போகலும்“         (அகம்.183: 1-5)

உமணர்கள் உப்பு வணிகத்திற்கு செல்கையில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளையும் உடனழைத்துச் சென்றனர். உமணரின் மனைவியர் உமட்டியர் என்று அழைக்கப்பட்டனர்.

“நோன் பகட்டுமண ரொழுகையொடு வந்த

மகா அரன்ன மந்தி....

உமட்டிய ரீன்ற

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும்” (சிறுபா.55-61)

உமணர்களின் மனைவியராகிய உமணப் பெண்களே ஊருக்குள் உப்பைக் கொண்டு போய் விற்றார்கள்.

“நெல்லும் உப்பும் நேரே, ஊரே, ஊரீர்

கொள்ளீரோ வெனச் சேரிதொறும் நுவலும்” (அகம்.390: 8-9)

உமணர்கள் குடும்பத்தோடு நிலையா வாழ்க்கை கொண்ட நாடோடிகளாகவே இருந்தனர்,

“உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை

மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்

கணங்கொள் உமணர்”     (நற்,138:1-3)

பெரும்பாலும் எருதுகளே உப்பு வண்டிகளை கடல்கரை தாண்டிய உள் நாடுகளுக்கும் மலைநாடுகளுக்குமாக இழுத்துக் கொண்டு போயின,

“கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்

ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்

உரனுடை நோந்தாள் பகடு” (புறம்.60:8-9)

தெண்கழி என்னும் உப்பு வயலில் விளைந்த வெள்ளைக் கல்லுப்பை விலை கூறிக் கொண்டு கழுத்தில் வலிமை கொண்ட எருதுகளை நுகத்தடியில் பூட்டிய வண்டிகளை வரிசையாகத்தொடுத்து உமணர்கள் ஓட்டிச்செல்வர். வழியில் சமைத்து உண்பர் பின் சமைத்த அடுப்புகளை அப்படியே விட்டுச் செல்வர். பிறகு அவ்வழியே பசுக்கூட்டங்களை கவர்ந்துவரும் ஆடவர் உமணர் விட்டுச் சென்ற அடுப்பில் தாம் வேட்டையாடியவற்றை வாட்டித் தின்பதும் நடைமுறையில் இருந்தது.

“கடல் விளை அமிழ்தின் கணம்சால் உமணர்

தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின்

கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை

உரனுடைச் சுவல பகடு பல பரப்பி

உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்

வடி உறு பகழிக் கொடுவில் ஆடவர்.......

.......................................................................................

உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும்" (அகம்.159: 1-4-10)

கடல் விளைந்த உப்பை உமணர்கள் கூட்டமாகவே சென்று விற்றனர். அவர்கள் செல்லும் வழியில் நீர் கிடைக்காதபோது அவ்விடத்தில் அகழ்ந்து குழி உண்டாக்கி சுரக்கும் நீரை உண்டனர்.

“கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்

உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ,முரம்பு இடித்து

அகல் இடம் குழித்த அகல்வாய்க் கூவல்

ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும்

புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து.” (அகம்,295:9-13 )

நெடுந்தொலைவு செல்லும் உமணர்கள் வண்டியில் பூட்டிய ஆநிரைகளை ஒலியெழுப்பியபடி ஓட்டிச் சென்றனர்.அப்படிசெல்கையில் வண்டியில் கட்டியிருக்கும் மணியின் சத்தம் கேட்டு வயலில் உள்ள கருங்கால் வெண்குருகுகள் அஞ்சுமாம்,

“வெண்கல் உப்பின் கொள்கை சாற்றி

கணநிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்” (நற்,4:7-10)

உப்பு வண்டியை ஓட்டிச் செல்லும் உமணர்கள் தலையில் பாதிரிப்பூவையும் அலரிப் பூவையும் தொடுத்துக்கட்டின பூமாலையை அணிந்திருந்தனர். காலில் செருப்பும், கையில் தடியும் கொண்டிருந்தனர்,

“அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவி

எரியிதழ் அலரியொடு இடைபட விரைஇ

வண்தோட்டுத்தொடுத்த வண்டுபடு கண்ணித்

தோல்புதைச் சிற்றடிக் கோலுடை யுமணர்“ (அகம்,191:1-4 )

உமணர்கள் உப்பு விற்பதற்கு செல்லும் வழியில் உணவு சமைக்க உணவு சமைக்க தீக்கடைக்கோலினாலேயே தீ உண்டாக்கினர்,

“ஞெலி கோ சிறு தீ மாட்டி ஒலி திரைக்

சுனைகொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்

சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்த“ (அகம்.169:5-8)

ஊர்கள்தோறும் உப்பை சந்தைப்படுத்திய உமணர்கள் ஆறுகளும் கால்வாய்களும் உள்ள ஊர்களுக்கு படகுகளின் மூலமாக உப்பை ஏற்றிக் கொண்டு போய் விற்றார்கள். உப்பை அங்கு நெல்லுக்கு விலையாகவே கொடுத்தார்கள்,

“கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துத்

குறும்பல்லூர் நெடுஞ்சொணாட்டு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி

நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி

பணைநிலைப் புரவியின் அணை முதற்பிணிக்கும்

கழிசூழ் படப்பை”           (பட்டினப்பாலை.27-32)

உப்பை வணிகரது மகள் விலை கூறி விற்றிருக்கிறாள் இதனை,

“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எவ்வளை தெளிப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்

சேரிவைலை மாற கூறலின்” (அகம்.140: 5-8)

பழந்தமிழகத்தில் உப்பு உற்பத்தியும், வாணிகமும் செம்மையாக நடந்தன. தமிழகத்திற்கு உப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகவில்லை. தமிழ்நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி செய்யவும் இல்லை. தமிழகத்திலேயே உண்டாக்கப்பட்டுத் தமிழகத்திலேயே செலவு செய்யப்பட்டது.( மயிலை சீனி.வேங்கடசாமி பழங்காலத்தமிழர் வாணிகம்.பக்கம்-131) உப்பு உற்பத்தி என்பது உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்தது என்பதை கவனப்படுத்த முடிகிறது.

பழந்தமிழ் காலத்திற்கு பிந்தைய அரசர்கள் காலத்திலும் உப்புக்கான மதிப்பு உயர்ந்தே இருந்தது. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். அரசர்களின் பட்டப்பெயர்களில் உப்பளங்களைச் சுட்டினர். அவை பேரளம், கோவளம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டன.

ஜாடவர்மன் திரிபுவனம் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி.பி1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம்,செல்லூர் என்னும் அனபாய சோழப்பேரளம், இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப்பேரளம்,கூடலுர் என்னும் ராஜ நாராயாணப்பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப்பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன பேரளம், சூரைக்காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம், ஆகிய அளங்களிலிருந்து ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்து திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுது படிக்கும் கோயில் சீரமைப்பிற்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன. (தொல்லியல் அறிஞர் நடனகாசிநாதன்) இச்செய்தி உப்புக்கும் அரசருக்கும் கோவிலுக்குமான இருப்பையும், உப்பின் மதிப்பையும் வெளிப்படுத்துவதாகவே அவதானிக்க வேண்டியுள்ளது.

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டதனால் வீடுகளில் மரவை எனும் மரச்சட்டியிலும்,கல்மரவையிலும் மண்பானைகளிலும் உப்பை இட்டு வைக்கும் வழக்கம் தமிழருடைய வழக்கமாக இருந்தது.அண்மைக் காலத்தில்தான் பிளாஸ்டிக் வாளி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பீங்கான் சாடி போன்றவற்றில் கல் உப்பையும் அயோடின் கலந்த பவுடர் உப்பையும் போட்டுவைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. சமீப காலம் வரை வீதிகளில் உப்பு வண்டிகள் மற்றும் சைக்கிள்களில் உப்பு வியாபாரம் செய்யும் வழக்கம் இருந்தது. இப்போது இல்லையாகிப் போய்விட்டார்கள். உலகமயமாதல் தாராளமயமாதல் சூழலில் கார்பரேட்டுகள் கைவசத்தில் உப்புத்தொழில் வணிகமும் நகர்ந்து விட்டது.

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் எண்ணூர் மரக்காணம், கோவளம், வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய ஊர்கள் உப்பு உற்பத்தியில் முன்னிற்கின்றன. ஆனபோதும் தூத்துக்குடியில்தான் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லா காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்துமாதங்களுக்கு தொடர்ச்சியாகக் கிடைப்பதால் தரமான உப்பு குறைந்த உற்பத்திச் செலவில் தயாரிக்கப்படுகிறது.

ஆனபோதும் அளங்களில் பணிசெய்யும் பணியாளர்களின் வாழ்வோ வறுமைக்குள்ளாகவே இருக்கிறது. குறைவான ஊதியத்தில் உடல்சார்ந்த சிக்கல்களையும் எதிர்நோக்கும் வாழ்வாக உப்பளத்தொழிலாளர்களின் வாழ்வுநிலை இருக்கிறது. இப்படியானதொரு சூழலில் இராஜம்கிருஷ்ணனின் கரிப்பு மணிகள், சு.தமிழ்ச்செல்வியின் அளம், ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல் போன்ற நாவல்கள் உப்பளம், உப்பு உற்பத்தி, உப்பளத்தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் போன்றவற்றைப் பேசுபவையாக இருக்கின்றன.

நெய்தல் நில விளைச்சலான உப்பு உமணர்களின் மூலமாக பழந்தமிழ் சூழலில் சந்தைப்படுத்தப்பட்டது.ஊருக்குள் உமணர்களின் மனைவியர்களாகிய உமணப்பெண்கள் உப்பை விற்றனர். நெல்லுக்கு ஈடாகவே உப்பை விற்றுள்ளனர். உப்பு விற்பனையாளர்களாகிய உமணர்கள் குடும்பத்தோடு ஒரு நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்தனர். அரசர்கள் காலத்திலும் உப்பு உள்நாட்டு உற்பத்திப்பொருள் என்ற நிலையில் பெரும் மதிப்பீடுடையதாகவே இருந்துள்ளது. தற்காலத்தில் உப்பு உற்பத்தி சிறந்தே இருந்தாலும், உற்பத்தியாளர்கள் நிலையென்பது நெருக்கடியுடையதாகவே இருக்கிறது. உப்பை சந்தைப்படுத்துதல் என்ற நிலையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. உப்பு உணவின் ருசியோடு மட்டும் நின்றுவிடாது. தமிழர்களின் நம்பிக்கைகளோடும் தொடர்ந்து மையநிலையிலேயே இருந்துவருகிறது.

சிறுமையுடைய ஒரு விஷயத்தை (விடயத்தை) உப்புப்பொறாத விஷயம்( விடயம்) என்று சொல்லும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. உப்பின் நெடும் பயன்பாட்டையும் அதன் மீதான மதிப்பீட்டையும் கவனப்படுத்தையில் உப்புப் பொறாத என்று சொல்வதைவிட உப்பெறாத என்று சொல்வதே சரியாகும். உப்பு பெறாத உணவு ருசிப்பதில்லை, அதுபோல ஒன்றும் இல்லாத விடயம் உப்பு பெறாத விடயமாகும் அதனால் அதை தள்ளி ஒதுக்கலே சிறப்பென அறிதல் வேண்டும். இப்படியாக உப்புடனான தமிழரின் பயணம் ஒரு அறுபடாத நெடும்பயணமாகும்..

- முனைவர் பு.இந்திராகாந்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்.

Pin It