சந்திப்பு: சுதீர் செந்தில்
இன்றைக்கு தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான விமர்சன ஆளுமையாக அறியப்படும் நீங்கள் சிறுபத்திரிகை உலகில் பிரவேசித்தது, தற்செயலானதா அல்லது திட்டமிட்டதா?
யோசிக்கும்வேளையில் பல விஷயங்கள் தற்செயலானவைதான். எட்டு வயதுச் சிறுவனான நான் எங்கள் ஊரில் இருந்த கிளைநூலகத்தில் நுழைந்ததும், அங்கிருந்த அம்புலிமாமா, கண்ணன் பத்திரிகைகளை வாசித்ததும் விளையாட்டுப் போக்கில் நடந்தவை. 1973ஆம் ஆண்டில் கல்லூரி நூலகத்தில் தற்செயலாக வாசித்த கணையாழி, தீபம் பத்திரிகைகள் எனக்குப் பிடித்துப் போனதற்குத் தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. அவை, சிறுபத்திரிகை என்பதுகூட எனக்குத் தெரியாது. நான் படித்த கல்லூரியில் என்.சி.பி.ஹெச். பதிப்பகம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் ரஷிய நாவலாசிரியரான லெர்மன்தேவின் நம் காலத்து நாயகன் நாவலின் மொழிபெயர்ப்பை வாங்கியது தற்செயலானது.
எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஐ.சி.பி. எனப்படும் ஐ.சி.பாலசுந்தரத்தின் அறிமுகம், முக்கியமானது. அவரின் இலக்கியப் பேச்சுகள் எனக்குப் புதிய உலகத்தைக் காட்டின. கண்ணதாசன், சிகரம், செம்மலர், தாமரை, மனிதன் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்தன. என்றாலும் எனது உலகம் நாவல்களை மையமிட்டு விரிந்து கொண்டிருந்தது. அசலான தமிழ் நாவல்களுடன் மொழிபெயர்ப்பு நாவல்களைப் பேய்த்தனமாக வாசித்தேன். ஐ.சி.பி. மூலம் வாசிக்கக் கிடைத்த கசடதபற, அஃக், சுவடு போன்ற பத்திரிகைகள், வித்தியாசமான நடை, வடிவம், விஷயம் காரணமாக என்னைக் கவர்ந்தன. அன்றைய காலகட்டத்தில் நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தது.
நாகர்கோவிலில் இருந்து உமாபதி வெளியிட்ட தெறிகள், திருவனந்தபுரத்திலிருந்து ராஜமார்த்தாண்டனும் நண்பர்களும் வெளியிட்ட கோகயம் போன்ற பத்திரிகைகள், எனக்குள் ஆழமாக ஊடுருவின. இதுபோன்ற பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசித்ததனால் என்னை வித்தியாசமானவனாகக் கருதிக்கொண்டேன். என் பதின்ம வயதில் கவிஞர் பிரமிள் அரூப் சிவராமைப் பார்க்க ஐ.சி.பி. அழைத்துப் போனார். ஏறக்குறைய நான்கு மணி நேரம் பகடியான மொழியில் அவர் பேசுவதைக் கேட்டேன். எனது பிறந்த தேதி என்ன என்ற பிரமிள், 26 என்றவுடன், ஒருபோதும் இலக்கியத்தை விட்டு என்னால் மீள முடியாது என்றார். எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. புத்தகம் வாசிப்பதில் அளவுக்கதிகமான ஈடுபாடு இருந்ததுதவிர, அதிலேயே மூழ்கிப் போகும் மனநிலை எனக்கு அப்பொழுது இல்லை. அப்புறம் கோவில்பட்டிக்குப் போய்ப் பார்த்த தேவதச்சன், கௌரிசங்கர், ஜோதி விநாயகம் தொடங்கி வண்ணதாசன், கலாப்ரியா, மு.ராமசாமி ஆகியோருடன் பேசிய பேச்சுகள், எனக்குள் என்னமோ செய்தன.
எதைப் பற்றியும் கறாராக விமர்சிக்கும் மனப்பாங்கு, பகடி, முரட்டுத்தனம், கொஞ்சம் புத்தர், ஜே.கே. தத்துவம், மார்க்சியம், கதர் ஜிப்பா, ஜோல்னா பை, விட்டேத்தியான மனநிலை, மூத்த எழுத்தாளரையும் பெயர் சொல்லிப் பேசுதல், செய்யது பீடி, நவீன ஓவியம், தேநீர், சார்மினார் சிகரெட், உலக இலக்கியம், நவீன நாடகம் என எப்படியோ நான் சிறுபத்திரிகை உலகினுக்குள் நுழைந்தது இயல்பாக நடந்தேறியது. எழுபதுகளில் அவ்வப்போது வெளியாகும் முக்கியமான பத்திரிகைகள், புத்தகங்களை வாசித்துவிட்டுப் பேச வேண்டியது, சிறுபத்திரிகை உலகில் அவசியம். ஒரு கவிதைகூட பிரசுரமாகா விட்டாலும், சீரியஸ் இலக்கியம் குறித்துப் பேசுவது முக்கியமானதாகக் கருதப்பட்டது. அது ஒருவகையான மனநிலை. நண்பர் அப்பாஸ் அடிக்கடி சொல்லுவார் "நாம எல்லாம் சிறுபத்திரிகைக்காரனுக பாண்டியன்" என்று. எனக்கு அப்படியான கூட்டத்தில் ஒருவனாக இருப்பது உற்சாகம் தந்தது. மற்றபடி சிறுபத்திரிகை உலகினுள் நுழைந்த செயல், புதைமணலில் காலை வைப்பதுபோல ஆளை உள்ளே இழுத்திட்டுப் போயிடுச்சு.
பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் வடிவமைப்பது இரண்டு காரணிகள். ஒன்று குடும்பம். மற்றது நட்பும் வெளியுலகத் தொடர்பும். உங்களுடைய இந்த இலக்கிய ஆர்வத்திற்கு குடும்பப் பின்னணியில் யாராவது இருந்தார்களா?
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டிற்குத் தினத்தந்தி நாளிதழ் வந்தது. அந்தக் காலகட்டத்தில் சமயநல்லூர் போன்ற கிராமத்தில் செய்தித்தாள் வாங்குவது பெரிய விஷயம். நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது, தினத்தந்தி பத்திரிகையில் கன்னித்தீவு, சிரிப்பு பகுதிகளை ஆர்வத்துடன் வாசித்தேன். எனது தந்தையார் பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை, ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து போன்ற புத்தகங்களை தினமும் பகலில் தூங்குவதற்கு முன்னர் கொஞ்ச நேரம் வாசிப்பார். எனது அய்யாப்பா மூ.வடிவேல் அவர்கள் பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, தினமும் விடுதலை நாளிதழ் வாசிப்பார். குடும்பத்தில் யாரும் இலக்கிய ஆர்வலர் இல்லை.
எங்கள் ஊரில் தினமும் இரவுவேளையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து வயதானவரான சுடலைமுத்து நாடார் பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையை ராகத்துடன் சத்தமாக வாசிப்பார். அவருக்கு முன்னால் இருந்து இருபது ஆட்களாவது ஆர்வத்துடன் கேட்பார்கள். நானும் கேட்டிருக்கிறேன். அவரது கதைசொல்லல், சிறுவனான எனக்கு ஆர்வத்தைத் தரவில்லை. இப்ப யோசிக்கும்போது கல்வியறிவு அற்ற கிராமத்தினருக்குப் புத்தகத்தைத் தினமும் வாசித்துக் கதைசொன்னவரின் உன்னதமான மனநிலை புலப்படுகின்றது. மற்றபடி எங்கள் கிராமத்தில் தீவிரமான இலக்கிய வாசகர் யாரும் இல்லை.
இன்றைக்குச் சிறுபத்திரிகைகளும் நவீன இலக்கிய நூல்களும் எளிதாகக் கிடைப்பது போன்று எழுபதுகளில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் எவ்வாறு அவற்றைக் கண்டடைந்தீர்கள். அரசு நூலகங்களே உங்களுக்குப் போதுமானதாக இருந்தனவா?
எழுபதுகள் காலகட்டத்தில் பழைய புத்தகக் கடைகளில் அருமையான இலக்கியப் புத்தகங்களைக் குறைந்த விலையில் வாங்கலாம். எந்த ஊருக்குப் போனாலும் நண்பர்களுடன் பழைய புத்தகக் கடைக்குப் போவது வழக்கம். ஜோதி நிலையம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட உலகத்து கிளாஸிக் நாவல்களின் மொழிபெயர்ப்புகளை அங்கிருந்துதான் வாங்கி வாசித்தேன். மதுரையிலிருந்து சென்னைக்குப் போகும்போது, நள்ளிரவில் திருச்சியில் இறங்கி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்த பழைய புத்தகக் கடைகளை அலசிப் பார்த்துவிட்டுத்தான் போவேன். இரவு முழுக்கப் பழைய புத்தகக் கடைகள் திறந்து இருந்தன என்பது இன்றைக்கு ஆச்சரியமான விஷயம்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த பழைய புத்தகக் கடைக்காரருக்கு எனக்கு என்ன மாதிரி புத்தகங்கள் பிடிக்கும் என்பது தெரியும். என்னைப் பார்த்தவுடன் கடைக்குள் போய் இலக்கியப் புத்தகங்களாக அள்ளி வந்து தருவார். என்ன அப்பொழுது கையில் காசு கம்மி. இருந்தாலும் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். இப்பப் பழைய புத்தகக் கடைகள் மாறிப்போய் விட்டன. அங்கு இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அப்புறம் அரசின் கிளை நூலகங்கள் எனது வாசிப்பினுக்குச் செமையாகத் தீனி போட்டன. அங்கிருந்துதான் தமிழ்வாணன், ஆர்.சண்முகசுந்தரம், கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தேன். ஆனைமுத்து தொகுத்து வெளியிட்ட பெரியார் எழுத்துகள் மூன்று பாகங்களை என்னால் பதினெட்டு வயதில் வாசிக்க முடிந்தது, ஆவுடையப்பன் என்ற கிளை நூலகரின் உதவியினால்தான். ஏனெனில் பெரிய புத்தகங்களை இரவலாகத் தர மாட்டார்கள்.
மறைந்த கவிஞர் அப்பாஸ் சொன்னதைப் போல 'சிறுபத்திரிகைக்காரங்க’ என்கிற போதை இன்றும் உள்ளதா? அவ்வுணர்வு காலாவதியாகிவிட்டது என்கிற குரல்கள் ஒலிக்கின்றனவே.
பழைய நினைப்பில் சிறுபத்திரிகைக்காரங்க என்ற போதையில் படைப்பாளர், வாசகர் பலரும் இன்றும்கூட கிறங்கியுள்ளனர். அவ்வளவு சீக்கிரம் அது மறைந்து விடாது. அது ஒருவகையான வாழ்க்கை, மனநிலை. கலாப்ரியா குற்றாலத்தில் நடத்திய பதிவுகள் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் பலரும் சிறுபத்திரிகைக்காரர்கள்தான். தேர்ந்த வாசகனை முக்கியமானவராக மதித்து நாள் முழுக்க இலக்கியம் பற்றிப் பேசிய நகுலன், தேவதச்சன், பிரபஞ்சன், சுந்தர ராமசாமி போன்ற ஆளுமைகளின் செயல்பாடுகள் அவ்வளவு எளிதில் போய்விடுமா என்ன?
இலக்கியம் உருவாக்கிய உன்மத்த மனநிலையுடன் மிதந்து திரிகிறவனுக்குச் சக படைப்பாளியின் பேச்சும் சிநேகிதமும் இதமானவை. உறவினரைவிட இலக்கிய நண்பர்கள் நெருக்கமானவர்களாக மாறுவது சிறுபத்திரிகையினால்தான் சாத்தியம். கோணங்கியைச் சிறுபத்திரிகை மடத்தின் தம்பிரான் என்று சொல்லலாம். இன்று சிறுபத்திரிகை மரபு வேறுவகையில் மாற்றம் அடைந்துள்ளது. இணையத்தளம் பரவலாகி பிளாக்கர்ஸ் உருவான பின்னர், முகநூலில் தகவலை எழுதுகிறவர் எல்லாம் எழுத்தாளர் என்ற சூழல் உருவான பின்னர், இலக்கியத்தின் வீச்சு எங்கேயோ போய்விட்டது. தான் எழுதிய படைப்பினைவிட பொதுவான போக்குகள், புத்தகங்கள் பற்றிப் பேசுவது என்ற சிறுபத்திரிகை மரபு சிதலமாகிப்போனது வருத்தமாக இருக்கிறது. படைப்பாளி இறந்து விட்டான் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் சூழலில், இன்று பலரும் தங்களது படைப்புகளைச் சீராட்டி, இதுவே தமிழின் உன்னதமான படைப்பு எனப் புளகாங்கிதம் அடைகின்றனர். அது அற்ப மனநிலை இல்லையா, செந்தில்?
விமர்சனத் துறையில் உங்களுடைய முன்னோடிகள் யார்?
நான் சிறுவனாக இருந்தபோது வாசித்த நூலகப் புத்தகங்களில் ‘மகா அறுவை’ என எழுதிச் சிறிய ரம்பப் படம் வரைந்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு வேடிக்கையாக இருக்கும். அது ஒருவகையில் கூர்மையான விமர்சனம். பொதுவாக எந்தவொரு விஷயம் குறித்தும் அபிப்ராயம் சொல்வது எல்லோரிடமும் உள்ளது. குறிப்பாக ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிடுவது நம்மிடையே வழக்கினில் உள்ளது. எனது சீனியர் எழுத்தாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்புகள் எதையும் கறாராக அணுகும் பார்வையை ஏற்படுத்தின.
1977ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கோவில்பட்டி நகருக்குப் போயிருந்தபோது, கவிஞர் தேவதச்சனின் இலக்கியம் குறித்த பேச்சு, எனக்குப் பிரமிப்பைத் தந்தது. ஒரு சாதாரண விஷயத்தையும் நுட்பமாகப் பார்க்கும் அவருடைய விமர்சனப் பார்வை, என்னைக் கவர்ந்தது. என்னவொரு ஆளுமை என்று தோன்றியது. இடைவிடாமல் வாசிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அப்புறம் நண்பர்களுடன் போன்றோருடன் இரவு முழுக்க நடந்த விவாதங்கள் எனக்குக் கொம்பு சீவி விட்டன. “கவிதை எழுதுகிறவனுக்குக் கோபம் வேணும். ரௌத்திரம் பழகுன்னு பாரதியார் சும்மாவா சொன்னார். இப்பக் கவிதை எழுதுகிறவங்களில் பலருக்குக் கோபமே இல்லையே... பின்னே எப்படி கவிஞர் என்று சொல்வது” என மட்டையடி அடித்த கௌரிசங்கர் பேச்சு, சுவாரசியமாக இருக்கும்.
அகிலனுக்குச் சித்திரப்பாவை நாவலுக்காக ஞானபீடம் விருது கொடுத்தபோது, ‘தமிழ்ப் பீ ’ என விழிகள் பத்திரிகையில் எழுதிய மு.ராமசாமியின் தோழமை எனக்கு முக்கியமானது. எது பற்றியும் மனத்தடை இல்லாமல் எழுதவோ பேசவோ வேண்டுமென்பதை மு.ராமசாமியிடமிருந்து அறிந்தேன். எல்லாவற்றுக்கும் முன்னால் பேராசிரியர் ஐ.சி.பாலசுந்தரத்திடமிருந்து எதையும் எப்படி நுட்பமாக அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். மெல்லிய குரலில் அன்போடு பேசும் ஐ.சி.பி. விமர்சனம் என்றால் எவ்விதமான சலுகையும் காட்டாமல் நெற்றியடியாக தனது கருத்தினைச் சொல்வார். ஜெயகாந்தனின் அக்னிபிரவேசம் சிறுகதையை வாசித்துவிட்டு அற்புதம் என்று அவரிடம் சொன்னபோது, மாணவனான என்னிடம் அந்தக் கதையிலுள்ள எதிர்மறை அம்சங்களை நுட்பமாக விளக்கினார். முதன்முதலாகப் பாலியல் வல்லுறவிற்குள்ளாகும் இளம்பெண்ணின் உடலும் மனமும் அடையும் அவஸ்தைகள் பற்றி அந்தக் கதையில் குறிப்பு எதுவுமில்லையே எனத் தொடங்கி, வெறுமனே பரபரப்பினைத் தவிர அந்தக் கதையில் வேறு என்ன இருக்கு? என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு சிறுகதை எழுதிக் கொண்டுபோய் அவரிடம் தந்தால், அதை வாசித்துவிட்டுக் "கிழித்துவிடு முருகேசா" எனப் புன்னகையுடன் சொல்வார். ஒரே கதையைப் பத்துத் தடவைகள் எழுதிப் பார்க்க வேண்டும் என்பார். எளிதில் எதையும் பாராட்டிச் சொல்ல மாட்டார். இலக்கியம் மட்டுமல்ல; உணவு, காதல், நட்பு, பெருந்தன்மை எனப் பல்வேறு விஷயங்களை நடைமுறையில் கற்றுத்தந்த ஐ.சி.பி.தான் எனது விமர்சனப் பார்வைக்கு வித்திட்டவர்.
மதுரைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது சி.கனகசபாபதி, தி.சு.நடராசன், சு.வெங்கடராமன், முத்துச்சண்முகன் போன்ற பேராசிரியர்களின் கல்விப்புலம் சார்ந்த அணுகுமுறைகள் வேறொரு அணுகுமுறையை அறிமுகப்படுத்தின. குறிப்பாக எம்.ஃபில் ஆய்வேடு எழுதும்போது எனது மொழி ஆளுகை குறித்துப் புரிதலை ஏற்படுத்திய நெறியாளரான தி.சு.நடராசனின் வழிகாட்டுதல், எனக்குள் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் இலக்கிய விமர்சனம் குறித்து அக்கறை கொண்டிருந்த பேராசிரியர்களிடம் வகுப்பறைக்கு வெளியேயும் எனக்கு இருந்த தோழமையும், பேச்சும் எனக்குக் கிடைத்த பெரும்பேறு.
எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த ஞானி,நா.வானமாமலை, வெங்கட் சாமிநாதன், தமிழவன், பிரமிள், கோ.கேசவன், க.நா.சு., நகுலன், எஸ்.வி.ராஜதுரை, க.கைலாசபதி, கா. சிவத்தம்பி எனப் பலரின் விமர்சனங்களை உற்சாகத்துடன் வாசித்தேன். இலக்கியத்தை முன்வைத்துக் குழுக்களாகப் பிரிந்து கடுமையாக வீசிக்கொண்ட விமர்சகர்களின் அம்புகள் கூர்மையானவை. ’மல்லு வேட்டி மைனர்’ எனத் தமிழவனை வெங்கட்சாமிநாதன் கேலியாக எழுதியது இப்பவும் நினைவில் உள்ளது. விமர்சனத்தில் எனக்கு முன்னோடி என்றால் காத்திரமாக ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியவரும்தான்.
உங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஐ.சி.பாலசுந்தரம் இடதுசாரி சிந்தனையாளரா? அவரது தாக்கம் உங்கள் எழுத்தில் உள்ளதா? உங்கள் எழுத்தில் இடதுசாரி சாய்வு தென்படுகின்றதே?
ஐ.சி.பி. முழுக்க உன்னத இலக்கியம் பற்றிப் பேசுகிறவர்; எழுத்தில் மட்டுமல்ல உணவு, உடை, பழக்கவழக்கம் எல்லாவற்றிலும் உன்னதமான விஷயங்கள் பற்றிய பிரக்ஞையை எனக்குள் உருவாக்கியவர். மாணவனான என்னிடம் பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசியதன்மூலம் எதுவும் மறைபொருள் அல்ல, புனிதமும் அல்ல என்பதை உணர்த்தினார். அற்புதமான விமர்சகரான அவர் ஒரு கட்டுரைகூட எழுதவில்லை. அவர் நிச்சயம் மார்க்சிஸ்ட் அல்ல. ரகுநாதன், வானமாமலை போன்றவர்கள் எழுதிய விமர்சனங்கள் மீது அவருக்கு மரியாதை இல்லை. சரி, அது போகட்டும். தமிழில் எழுதுகிற எல்லோருமே இடதுசாரி மனோபாவம் கொண்டவர்கள்தான். கம்யூனிச சித்தாந்தம் பற்றி அறியாமலே அதற்கு எதிரி என நம்புகின்றவர்கள்கூட, தங்களுடைய படைப்புகளில் இடதுசாரி சார்புடன்தான் எழுதுகின்றனர். இதற்கு நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. அடிப்படையில் நான் மார்க்சிஸ்ட்.
மேற்கத்திய விமர்சன மரபுக்கும் தமிழக விமர்சன மரபுக்கும் பெருமளவில் வேறுபாடுகள் உள்ளன. இதை எப்படி அணுகுகிறீர்கள்?
எந்த நாட்டு இலக்கியம் என்றாலும் படைப்பிலக்கியத்திற்குத்தான் முன்னுரிமை. ஆனால் மேலைநாட்டைப் பொறுத்தவரையில் கோட்பாட்டாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். புதிதுபுதிதாகக் கோட்பாடுகளும் சொல்லாடல்களும் உருவாக்கப்படுகின்றன. இலக்கியம், மனித வாழ்க்கையிலிருந்தும் சமூகப் பிரச்சினைகளில் இருந்தும் அந்நியப்படுகிறபோது, அது ஒருவகையான சோர்வும் வெறுமையும் அடைகிறது. அரசியலற்ற தன்மையில் உலகத்தைப் புரிந்துகொள்ள விழைகிற தத்துவவாதிகள், புதிய கோட்பாடுகள் மூலம் இலக்கியத்தை மறு விளக்கம் செய்ய முயலுகின்றனர். இதனால் விமர்சன முறையும் விமர்சன மொழியும் மாறிவிட்டது.
புதிய கோட்பாடு, புதிய வியாக்கியானம் என்ற நிலையில், அதற்குப் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இத்தகு சூழல், தமிழக அறிவுஜீவிகளுக்கு நெருக்கடியைத் தந்துள்ளது. கோட்பாடுமயமாதல் என்ற நிலையில் கோட்பாடு என்பது சந்தைக்கான நுகர்பொருளாகி விட்டது. தமிழ் போன்ற இரண்டாயிரமாண்டு வளமான மொழியிலுள்ள படைப்புகளின் தகுதியைத் தீர்மானிப்பதாகக் கோட்பாடு மாறியது, மோசமானது. கோட்பாடுகளை உற்பத்தி செய்கிறவர்களும் சந்தைப்படுத்துகிறவர்களும் அதிகார மையமாகியுள்ளனர். பின் காலனியச் சூழலில் மேலைநாடு என்றால் மேன்மையானவை என்ற நிலையில் நகலெடுப்பது விமர்சனத்தளத்திலும் வந்துவிட்டது.
மேலைநாட்டில் அவ்வப்போது புதிய மோஸ்தரில் பிரபலமாகும் தத்துவச் சொல்லாடல்களை அறிவுஜீவித்தனத்தின் உச்சம் என பாமரத்தனமாக நம்புவது தமிழிலக்கிய உலகிலும் நடைபெறுகிறது. காலனியாதிக்கத்தின் விளைவாகத்தான் தமிழில் விமர்சனம் உருவானது என்று நம்புமளவு சூழல் ஏற்பட்டுள்ளது. தொல்காப்பியரின் செய்யுளியல் விவரிக்கும் கவிதையியல், திணைக் கோட்பாடு, சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள நுட்பமான உரை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்குச் சொல்லப்பட்டுள்ள உரை எனத் தமிழின் மரபு வழிப்பட்ட விமர்சன முறையின் தொடர்ச்சி இங்கு முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. தமிழ் விமர்சன முறை என்ற முறையியலை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது.
நீங்கள் ஒரு படைப்பை ஆய்வுசெய்யும்போது எந்த அடிப்படையில் அதை செய்கிறீர்கள்?
மீண்டும் சொல்கிறேன். அடிப்படையில் நான் வாசகன். பத்து வயதில் வாசித்த வாண்டுமாமாவின் ‘சிறுத்தைச்சீனன்' நாவல், காந்தியின் ‘சத்திய சோதனை' போன்ற புத்தகங்கள் எனக்குள் ஏதோவொரு மாயத்தை உருவாக்கி விட்டன. அன்று தொடங்கிய வாசிப்பு, என்னை மீளாத சூழலுக்குள் இழுத்து விட்டது. புத்தகத்தின் மீதான வசீகரம் கூடிக்கொண்டே போகிறது. புதிதாக வெளியான முக்கியமான புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்குள் ஏற்படும் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாது. புத்தகம் இல்லாத உலகினை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.
எந்தவொரு புத்தகமும் எனது சுயம் சார்ந்த நிலையில்தான் என்னால் வாசிக்கப்படுகிறது. புத்தகம் பற்றிய நண்பர்களின் அபிப்ராயங்களை முன்கூட்டியே அறிந்திருந்தாலும், எவ்விதமான பாரபட்சம் இல்லாமல் வாசிப்பேன். எனக்கும் அந்தப் புத்தகத்திற்குமான அசலான உறவுதான் முக்கியம். ஒரு புத்தகம், வாசிப்பின் வழியே எனக்குள் உருவாக்கும் அனுபவங்களின் பின்புலத்தில் எனது மதிப்பீடுகள் உருவாகின்றன. ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது என்ற நிலையில், அதை அணுகுவதற்கும் தனிப்பட்ட அளவுகோல்கள் தேவைப்படுகின்றன. யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு அந்தப் படைப்பு தரும் அபிப்ராயம்தான் முக்கியம். ரஷிய நாவலாசிரியரான மீ.யூ.லெர்மன்தேவின் ‘நம் காலத்து நாயகன்', ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி', ஹெமிங்வேயின் ‘போரே நீ போ' போன்ற நாவல்களை ஏழெட்டுத் தடவைகள் வாசித்திருப்பேன். மனம் சோர்வாக இருக்கும்போது அவை வாசிப்பின் வழியே என்னை வேறு உலகினுக்குள் இட்டுச் செல்கின்றன. படைப்பு என்பது வெறுமனே வறண்ட காகிதக் கத்தை அல்ல; மனித ஆன்மாவின் சாரம். பொதுவாக விமர்சகர் எனத் தனிப்பட்ட வரையறைகளைக் கறாராக வைத்துக்கொள்வதில்லை. இந்தப் படைப்பு எனக்குப் பிடிச்சிருக்கு அல்லது பிடிக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி பிடிப்பதற்கான காரணங்கள் அல்லது பிடிக்காமைக்கான காரணங்களைத் தருக்கரீதியில் விளக்குவதுதான் விமர்சனத்தின் ஆதாரம்.
இன்றைக்கு புதிதாய் எழுத வருபவர்கள் அபுனைவை நோக்கியே மய்யம் கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அபுனைவு என்பது தொடர்ச்சியறு எழுத்து. தமிழைப் பொறுத்தவரையில் கதைசொல்லலில் தொடர்ச்சியறு எழுத்துமுறை, பல்லாண்டுகளாக வழக்கினில் உள்ளது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் கதையாடல், தொடர்ச்சியற்றுத்தான் சொல்லப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் கதை ஆக்கத்தில் நேர்த்தி, துல்லியம் என வரையறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டன. செய்நேர்த்தியுடன் எழுதப்பட்ட பிரதிகளில் வாசகரின் கற்பனைக்கு இடமில்லை. எப்படியோ தமிழவன், கோணங்கி, சாருநிவேதிதா, எம்.ஜி.சுரேஷ், பிரேம் ரமேஷ் தொடங்கி வைத்த நவீன எழுத்துமுறை, இன்று பரவலாகி விட்டது. இதனால் யதார்த்த கதைசொல்லல் இன்னும் கூடுதலான சவால்களை எதிர்கொண்டுள்ளது. குமாரசெல்வாவின் குன்னிமுத்து நாவல் போல யதார்த்தமாக எழுதினால் நிலை பெற முடியும். மற்றபடி மூன்று தலைமுறைக் கதை என மொக்கையாக 700 பக்கங்களுக்கு நாவல் எழுதினால், அது 500 பிரதிகள் அச்சடிக்கப்படுவதற்காக வெட்டப்பட்ட மரங்களை நினைக்கும்போது, வருத்தமாக இருக்கிறது. ஒருபுறம் நாவலை வாசிக்க வேண்டி வாசகர்மீது செலுத்தும் வன்முறை, இன்னொருபுறம் சுற்றுச்சூழல் நாசம் என இரு குற்றங்கள் நிகழ்கின்றன. இன்று மீண்டும் அபுனைவை நோக்கி இளைஞர்கள் பயணப்படுவது நல்ல விஷயம்தான்.
விமர்சனம் என்பது ஒருவகையில் சார்புநிலையில்தான் இயங்க முடியும். என்றாலும் அதற்கென ஓர் அறம் உண்டு. இன்றைக்கு அது மீறப்பட்டு போலியான மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன இல்லையா?
நீங்கள் சொல்வது சரி. நடுநிலைமை என எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி யாராவது சொன்னால் அது டுபாக்கூர் பேச்சு. அறம் என எதுவும் கறாராக இருக்க முடியுமா? யோசிக்க வேண்டும். தனிமனித அறம், சமூக அறம் என நம்பிக்கை இல்லாவிட்டால் அடிப்படையே ஆட்டங்கண்டு விடும். தமிழகத்தில் அரசியல் அறம் என எதுவும் இல்லாமல் போய்விட்ட சூழலில், விமர்சன அறம் மட்டும் இருக்க முடியுமா? எப்படி முட்டுக்கொடுத்துத் தூக்கினாலும் ஒரு படைப்பை நிலை நிறுத்த முடியாது. இதற்கு நிரம்ப உதாரணங்களைச் சொல்ல முடியும். இது பவண்டோகளின் காலம். இலக்கியத்தில் மட்டும் அறத்தை எதிர்பார்க்க முடியுமா? போய் பவண்டோ குடிக்கலாம் செந்தில்.
பரந்த வாசிப்பு இல்லையெனில் விமர்சனத் துறையில் சுடரவியலாது; உங்களுடைய வாசிப்பு பரப்பை எவ்வாறு விரிவாக்கிக்கொள்கிறீர்கள்?
பரந்துபட்ட வாசிப்பு மிகவும் அவசியம். எப்பவும் விழிப்போடிருக்க வேண்டியுள்ளது. எண்பதுகள் வரையிலும் தமிழில் என்னென்ன முக்கியமான படைப்புகள் வெளியாகின்றன என்பது குறித்துக் கவனமாக இருக்க முடிந்தது. ஏதோவொரு பத்திரிகையில் புதிதாகக் கதை எழுதியவரின் பெயரும் கதையும்கூட ஞாபகத்தில் இருந்தன. சிறுபத்திரிகை வட்டாரத்தில் புழங்குகிறவர்கள் பற்றி மங்கலாகவாவது படம் தெரிந்தது. இன்று சூழல் முழுக்க மாறிவிட்டது. இடைநிலை இதழ்களின் காலம் இது. உயிர்மை, உங்கள் நூலகம், புத்தகம் பேசுது, காலச்சுவடு, அம்ருதா, தீராநதி, நிலவெளி, காக்கைச் சிறகினிலே போன்ற பத்திரிகைகளை வாசிப்பதிலே இரு வாரங்கள் ஆகிவிடுகிறது. அப்புறம் ஏ-4 அளவில் 200 பக்கங்களுக்கும் கூடுதலாகப் பிரசுரமாகும் 'கல்குதிரை, மணல் வீடு தொடங்கி சங்கு, செங்காந்தள், அகவிழி' போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது களம் இறக்கப்படுகின்றன. சீரியஸான வாசகர் பத்திரிகைகள் பின்னால் ஒரே ஓட்டமாக ஓட வேண்டியுள்ளது.
இப்பொழுது எங்கிருந்தோ திடீரென ஒருவர் முக்கியமான ஒரு புத்தகத்தைக் களம் இறக்குகிறார். அதைத் தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதே பெரிய வேலை. சமீபத்தில் சரவணன் சந்திரனின் லகுடு, லஷ்மி சரவணக்குமாரின் கொமோரா, தமிழ்ப் பிரபாவின் பேட்டை,போகன் சங்கரின் ஆயிரம் நாமங்கள்,சைலபதியின் தேவன் மனிதன் லூசிபஃர், பிரியா விஜயராகவனின் அற்றவைகளால் நிரம்பியவள், சிவபாலன் இளங்கோவனின் உயிர்நீட்சி, அருணா ராஜின் கறுப்பி, இளங்கோவின் மெக்ஸிக்கோ, ஆத்மார்த்தியின் ஏந்திழை எனப் புதிய படைப்புகள். இன்னொருபுறம் மொழிபெயர்ப்பு நாவல்கள், பல்துறை சார்ந்த கட்டுரை நூல்கள். இன்று எப்படிப் பார்த்தாலும் தீவிரமாக கவிதை எழுதுகிற கவிஞர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அப்புறம் இணையத்தளத்தில் எழுதுகிறவர்களின் உலகம் விரிந்துகொண்டே போகிறது. இப்படியான சூழலில் முக்கியமான புத்தகங்களை எப்படி அப்டேட் செய்வது என்பது ஒருவகையில் சவால். இலக்கியப் படைப்புகளுடன் காத்திரமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைப் புத்தகங்களை வாசிக்கும்போதுதான் விமர்சன மனம் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் தீவிரமான வாசிப்பைத்தவிர வேறு குறுக்கு வழி எதுவுமில்லை.
இன்றைக்கு எழுத வரும் படைப்பாளிகளுக்குப் பரந்த வாசிப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா? அல்லது படைப்பாளருக்கு அது தேவை இல்லையா?
எண்பதுகளுடன் ஒப்பிடும்போது இன்று காத்திரமான புத்தகங்கள் நிரம்ப வெளிவருகின்றன. புதிதாக எழுதவரும் எழுத்தாளர்கள் நிரம்ப வாசிக்க வேண்டியுள்ளது. ஒரு படைப்பாளிக்குப் பரந்துபட்ட வாசிப்பு அவசியம். வாசிப்பதைத் தவம் மாதிரி செய்கிற இளம் படைப்பாளர்கள் உள்ளனர். இணையத்தில் அதிக அளவில் நேரம் செலவானால், புத்தக வாசிப்பு குறைந்துவிட வாய்ப்புண்டு. அதிகமாக வாசிக்க முடியாதது தவறு என்று சொல்ல முடியாது. வேலை, குடும்பச் சூழல் காரணமாகப் பலருக்கு வாசிக்க நேரம் கிடைக்காமல் போய்விடலாம். ஆனால் எல்லாம் தெரிந்தது மாதிரி பில்டப் செய்வதும், தனது படைப்புதான் சிகரம் எனப் பேசுவதும் சின்னப் பிள்ளைத்தனமானது. இதனால் இன்று இலக்கிய உலகில் போலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இருண்மையான மொழியில் கொஞ்சம் கவிதைகளை எழுதிவிட்டு, எனது கொடி வானில் பறக்கிறது, எனக்கு நிகராக யாரும் இல்லை என்று சோடி போட்டுச் சிலர் கொக்கரிப்பது, இலக்கியத்திற்குப் புறம்பானது.
எதை வாசிக்க வேண்டும் எனத் தேர்வு செய்வதில் உங்கள் வழிகாட்டுதல் என்ன?
மேயப் போகிற மாடு கொம்பில் புல்லைக் கட்டிக் கொண்டா போகும்? என்ற கிராமத்துச் சொலவடை நினைவுக்கு வருகின்றது. தமிழறிஞர் உ.வே.சா. ‘என் கதை’ யில் சொன்னதுபோல ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் இலக்கிய சல்லாபம் செய்ய வேண்டும். எப்பவும் திறந்த செவியுடன் குழுவாகப் படைப்புகள் பற்றிப் பேசத் தொடங்கினாலே எவை உடனடியாக வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்பது உங்களுக்குப் புலப்பட்டு விடும். யாராவது ஒருவர் திடீரென பிரியா எழுதிய காலநதி என்ற நாவலைப் பற்றி நேர்மறையாகச் சொன்னால், அதைத் தேட வேண்டியதுதான். இடைவிடாமல் சிறந்த புத்தகத்தைத் தேடி, விமர்சனப் பார்வையுடன் வாசிப்பது அவசியம்.
நீங்கள் ஒரு படைப்பு குறித்து முதல் வாசிப்பில் சொன்ன கருத்துகளைப் பின்னர் அதே படைப்பை மீள் வாசிப்பு செய்தபோது மறுதலித்த அனுபவம் உண்டா?
முதல் வாசிப்பு, மீள் வாசிப்பு என்று இல்லை. கருத்தியல்ரீதியில் வளர்ச்சி அடையும்போது எனது கருத்துகள் இயல்பாகவே மாற்றம் அடைகின்றன. எழுபதுகளில் வாசித்தபோது லா.ச.ராமாமிர்தம், மௌனியின் கதைகளுக்கு நிகராகச் சொல்ல எதுவுமில்லை எனக் கருதினேன். அவர்களின் படைப்பு மொழி கட்டமைத்த வசீகரத்துக்குள் மூழ்கி, லஹரி உணர்வில் இருந்தேன். இன்று அப்படிச் சொல்ல முடியாது. ஜானகிராமன், கு.ப.ரா. எழுதிய ஆண் பெண் உறவு பற்றிய கதைகளை முன்னர் கொண்டாடினேன். இன்று அத்தகைய மனநிலை இல்லை. பதின்பருவத்தில் என்னைப் போன்றோரை அறிவுஜீவி சொல்லாடல் மூலம் கவர்ந்த ஜெயகாந்தனின் நாவல்கள் பற்றிய இன்றைய எனது மதிப்பீடுகள் வேறு. புதுமைப்பித்தன் தமிழின் முக்கியமான ஆளுமை எனப் புல்லரித்துப் போயிருந்த எனக்கு இன்று அவருடைய சிறுகதைகளில் பல நவீன வாசிப்பினுக்குத் தாக்குப் பிடிக்காது என்று தோன்றுகிறது. தாஸ்தாயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்' கதையை எத்தனை முறை வாசித்தாலும், அது புதிதாக உருவாக்கும் உணர்வுகளுக்கு அளவேது? கோணங்கியின் தொடக்ககாலச் சிறுகதைகளை இப்பொழுது வாசித்தாலும் முக்கியமானவை என்று தோன்றுகிறது. நவீன இலக்கியம் சார்ந்த அதீத பிரேமையினால் சங்க இலக்கியம், ஆண்டாளின் படைப்புகள் குறித்துப் புறக்கணிப்பு மனநிலை முன்னர் எனக்கு இருந்தது. தொண்ணூறுகளுக்குப் பின்னர் மரபிலக்கியம் மீதான எனது அக்கறை விரிந்தது. மிகப்புதியதில் தென்படும் மிகப்பழையதின் சாயல் வியப்பைத் தருகிறது. வாசிப்பின் தரத்தினுக்கேற்ப மறுதலிப்பு நடைபெறாவிடில், வாசிப்பையே சந்தேகப்பட வேண்டும். அந்தவகையில் சரியான திசைவழியில் செல்வதாக நம்புகிறேன்.
பாண்டியன் நீங்கள் சொல்வது சரிதான். அப்படியென்றால் எழுதப்பட்ட புத்தகம் அப்படியே உள்ளது. வாசக மனம்தான் மாறிக்கொண்டிருக்கிறதெனில், அந்தப் புத்தகம் காலாவதியாகி விட்டது என்று ஆகி விடாதா?
புத்தகம் மாறவில்லை. வாசிப்புமனம் மாறுவது இயற்கைதான். ஒரு காலத்தில் அருமையானது என்று கொண்டாடப்பட்ட புத்தகம் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறக்கடிக்கப்படுவது தவிர்க்க இயலாதது. படைப்பாளியே செத்துப்போன பின்னர், அவனது படைப்பு மட்டும் காலங்கடந்து நிலைத்து நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பது ஒருவகையில் பேராசைதான். அராஜகமும்கூட. எழுத்தாளரின் ஆவி, அவர் எழுதிய புத்தகங்களுடன் உலாவும் என்பது சுவாரசியமான நம்பிக்கை. எந்தவொரு எழுத்தும் எழுதப்படுவதற்கு ஏதோவொரு நோக்கம் உள்ளது. அது நிறைவேறியவுடன், மலர் வாடி உதிர்வதுபோல படைப்பும் செல்வாக்கிழந்து விடுகிறது. என்ன சில புத்தகங்கள் பிரசுரமான சில ஆண்டுகளில், எழுத்தாளர் வாழும் காலத்திலே மறைந்து போகும்போது, நீங்கள் சொல்வதுபோல காலாவதியாகி விட்டது என்றும் சொல்லலாம். காத்திரமான படைப்பு என்றால், ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் போலக் காலத்தை மீறி, மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்.
உங்கள் சக நண்பர்கள் ஏதோ ஒருவகையில் புனைவிலக்கியவாதியாக இருக்கும்போது நீங்கள் மட்டும் விமர்சனத்துறையைத் தேர்ந்தெடுத்ததற்குச் சிறப்பான காரணங்கள் உள்ளனவா?
இலக்கியப் படைப்புகளைத் தீவிரமாக வாசிக்கும்போது கவிதை எழுதுவதற்கான மனநிலை ஒருவருக்குத் தானாக உருவாகும். நாலு வரி கவிதை எழுதாத ஒருத்தர் படைப்பாளியாக இருந்தால் அதிசயம். என் பதின் பருவத்தில் வாசித்த புத்தகங்கள் ஏதாவது எழுது என என்னைத் தூண்டிக்கொண்டிருந்தன. சில கவிதைகள், சிறுகதைகள் எழுதிவிட்டு, எழுத்துலகில் ஏதோ சாதிக்கப் போவதாக நம்பினேன். எனது தலை காற்றில் மிதந்தது. இப்படியான சூழலில் டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, எமிலி ஜோலா, மாப்பசான், செல்மா லாகர்லெவ், பால்சாக், கார்க்கி, ஆல்பர்ட் காமு என உலகத்தின் மாஸ்டர்களின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினேன்.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே ரஷிய இலக்கிய மேதைகள் லெர்மன்தேவ், புஷ்கின், செகாவ் என்ன மாதிரி எழுதியிருக்கிறார்கள் எனப் பிரமிப்பு அடைந்தேன். ஜாக் லண்டனின் ஒரு சிறுகதையைத் தாண்டி ஒருபோதும் என்னால் எழுத முடியாது என்ற உண்மையைக் கண்டறிந்தேன். அதே காலகட்டத்தில் மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின். மாவோ எழுதிய அரசியல் புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்தேன். சி.பி.எம். கட்சியின் அமைப்பான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் உறுப்பினராகி அமைப்பு வேலைகளில் பங்கெடுத்தேன். அந்த அமைப்பிலிருந்து விலகி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினேன்.
மதுரையில் மு.ராமசாமி, மணா, லயனல் போன்றோரும் அதே அமைப்பில் இருந்தனர். புரட்சிக்கான கனவுடன் ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டம் விரைவில் வந்து விடும் என நம்பினோம். எழுத்தாளன், பல்லும் திருகாணியுமாகச் செயல்பட முடியும் என நம்பினேன். என்றாலும், அமைப்பிலிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இடதுசாரி அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் ஏற்படுத்திய தாக்கத்தினால் எந்தவொரு விஷயத்தையும் அலசி ஆராய்கின்றவனாக மாறிப்போனேன். அப்புறம் உன்னத இலக்கியம் பற்றிய எனது கனவு கலைந்து போனது. உலகத்து இலக்கிய மேதைகளின் மேன்மையான படைப்புகள் ஒருபுறம், இடதுசாரி அரசியல் மனநிலை இன்னொருபுறம் எனத் தவித்த என்னால் ஒருபோதும் படைப்பாளியாக முடியாது எனத் தோன்றியது. எனது சக நண்பர்களுக்குப் படைப்பு மனம் வாய்த்திருப்பது பெரிய விஷயம் அல்லவா? அப்புறம் நான் விமர்சனத்துறையைத் தேர்ந்தெடுத்ததுகூட தற்செயலானது. எனது 36வது வயதில் விமர்சனம் எழுதத் தொடங்கியது நண்பர்கள் ராஜமார்த்தாண்டன், காலச்சுவடு கண்ணன் தந்த நெருக்கடிகளின் விளைவு என்று சொல்லலாம். படைப்பாக்கத்தில் தோற்றுப்போன படைப்பாளி விமர்சகராக மாறுவார் என்பது ஓரளவு சரி.
அப்படியென்றால் ஒரு சிறுகதைத் தொகுப்பு போடுமளவு உங்களால் சிறுகதைகள் எழுத முடிந்தது எப்படி? அதை கலகமாகப் பார்க்கலாமா?
கல்லூரி மாணவனாக இருந்தபோது, ஆண்டுமலருக்குச் சிறுகதை எழுதியபோதும், 1981இல் செம்மலர் பத்திரிகையில் எனது சிறுகதை பிரசுரமானபோதும் எனக்கு லட்சியம் இருந்தது. செகாவ், ஜாக் லண்டன் எழுதிய சிறுகதைகளை வாசித்தபோது, சிறுகதை என்பது ரொம்ப சீரியஸான விஷயம் எனப் புரிந்தது. எனக்குள் இருக்கும் கேலியும், தெனாவட்டும் எதையும் பகடியாகப் பார்த்தது. அந்த மனநிலை எதிலும் மையம்கொள்ளச் செய்யாமல் என்னை வேறுதளத்திற்கு இட்டுச் சென்றது. மற்றபடி அவ்வப்போது சிறுகதைகள் எழுதியது, சூழலின் வெக்கை தாங்காமல்தான். இப்பக்கூட நாவல் எழுது என ஆழ்மனம் நச்சரிக்கிறது.
ம.க.இ.க. கலை இலக்கியம் பேசும் பண்பாட்டு அமைப்பு. அங்கு நீங்கள் தீவிரமாக இயங்கியதை அறிய முடிகிறது. படைப்பாளியாவதற்கு அமைப்பு தடையாகி விட்டதா?
ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கமாகக்கொண்ட மார்க்சிய லெனினிய கட்சியின் வெகுஜன அமைப்பான ம.க.இ.க.விற்கெனத் தனித்த அரசியல் நோக்கம் உள்ளது. எழுபதுகளில் இந்தியாவெங்கும் இளைஞர்கள், மாணவர்களிடம் நக்சலைட் இயக்கம் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தது. அப்பொழுது மக்களுக்கான கலை இலக்கியம் எனப் பிரச்சாரம் வலுவடைந்தபோது, நானும் ம.க.இ.க. அமைப்பில் போய்ச் சேர்ந்தேன். அமைப்பின் உடனடி வேலைத்திட்டத்திற்காகச் செயல்படுவதற்கும், படைப்புகள் படைப்பது பற்றிய மனநிலைக்கும் இடையிலான முரணைச் சரியாக எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனது குட்டிப்பூர்ஷ§வா மனநிலை, தீவிரமான இலக்கிய வாசிப்பு காரணமாக அமைப்பிலிருந்து வெளியேற நேர்ந்தது. அரசியலையும் இலக்கியத்தையும் சரியாகக் கையாள முடியாதது, ஒருவகையில் பலவீனம்தான்.
எண்பதுகளில் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் என்று ஒருவர் தன்னை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்று வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது. மா-லெ சித்தாந்தம் நீர்த்துப் போய்விட்டதா?
ஆயுதம் தாங்கிய புரட்சியின்மீது நம்பிக்கைகொண்டுள்ள மார்க்சிய லெனினிய அமைப்புகள் எப்பொழுதும் வெளிப்படையாக இயங்க முடியாது. அவற்றின் வெகுஜன அமைப்புகளில் செயல்படுகிறவர்களில் சிலர் வெளிப்படையாக உள்ளனர். நக்சலைட் கருத்தியலுக்குச் சார்பாகப் பேசுவது வேறு, நக்சலைட்டாகச் செயல்படுவது வேறு. எண்பதுகளுடன் ஒப்பிடும்போது, இன்று மா-லெ. அமைப்புகள் கருத்தியல்ரீதியில் பரவலாகி உள்ளன. இத்தகைய அமைப்புகளின் வெகுஜன அமைப்பில் சிறிது காலம் செயல்பட்டவர்கள், அதிலிருந்து வெளியேறி, முன்னர் தான் ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று சொல்கிறார்கள். அவர்களால் அரசு இயந்திரத்திற்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எனவே விட்டு வைத்திருக்கிறது. 1981இல் திருப்பத்தூர் பகுதியில் 22 தோழர்களை நக்சலைட் என்பதற்காகச் சுட்டுக் கொன்ற தேவாரம் தலைமையிலான போலீஸின் கொடூரம் மீண்டும் திரும்பும் என்பது தோழர்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட் மையம் அமைப்பு அறிமுகமாகும் நிலையில் இருக்கும்போதே, நக்சலைட்களைத் தேடி க்யூ பிராஞ்ச் போலீசார், அவ்வப்போது மலைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது. பீதியைக் கிளப்புவதன்மூலம் மக்களைப் பயத்திற்குள்ளாக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் எப்பொழுதும் போலீஸ் ராஜ்ஜியம்தான். மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயலும் கட்சி இருக்கும்வரை, அது நீர்த்துப்போகாது.
உன்னத இலக்கியம் என ஒன்று இருக்க முடியுமா? அப்படியெனில் அது எப்படி?
சிறுபத்திரிகை சூழலில் எண்பதுகள் வரைக்கும் உன்னத இலக்கியம் என்ற கருத்தியல் வலுவாக இருந்தது. இலக்கியத்தில் துளிகூட பிரச்சாரம் கூடவே கூடாது என்று நம்பியவர்கள் கணிசமாக இருந்தனர். படைப்பு என்பது பளிங்கு போல இருக்க வேண்டுமெனக் கருதியவர்களில் நானும் ஒருவன். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பதிவாக்கிய படைப்புகளைப் பிரச்சார இலக்கியம் என்று சொல்லி, சிவப்புக் குறித்த அலர்ஜியினால் அவதிப்பட்டவர்களால் உன்னதம் என்ற சொல் மாற்றாக வைக்கப்பட்டது. குறிப்பாக ஐம்பதுகளில் எழுத்து பத்திரிகை உருவாக்கிய உன்னதம், கலையில் தூய்மை போன்ற கருத்தியலின் பின்புலத்தில் திராவிட இயக்கத்திற்கு எதிரான பார்ப்பனிய மேட்டிமைவாதமும், சநாதனமும் பொதிந்திருந்தன. தூய்மையான, பளிங்கு போல படைப்புகளை அணுகியவர்கள் இலக்கியத்திற்கு அதீத முக்கியத்துவம் தந்தனர். புனிதப் பொருளாக இலக்கியத்தை நம்பியவர்களிடம் போய், மௌனி கதைகளில் நான்குதான் தேறும்; புதுமைப்பித்தன் எழுதியவற்றில் இருபது கதைகள் நிலைத்து நிற்கும் எனச் சொன்னால், ஆத்திரத்துடன் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். உன்னதம் என்பது சார்பு நிலையிலானது. சிலரைத் தொடர்ந்து பீடத்தில் ஏற்றி வைப்பதற்கு உன்னத இலக்கியம் என்ற கோட்பாடு பயன்பட்டது. இன்று பின் நவீனத்துவ அணுகுமுறை பீடங்களைத் தகர்த்துவிட்டது.
பீடங்கள் தகர்த்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி எனத் தீவிரமாகப் பீடங்களை உபாசனை செய்வது தொடர்கிறதே...
பீடங்கள் காலத்தினால் உருவாக்கப்படுவது. சமகாலச் சமய, அரசியல், பொருளாதார நிலைமைகளினால் பீடம் புதிதுபுதிதாக உருவாகும். சிறிது நாட்களுக்குப் பின்னர் பீடங்களைத் தகர்க்கிற சூழல், தானாகவே ஏற்படும். மீண்டும் புதிய பீடம் உபாசனைக்குள்ளாகும். பீட வழிபாட்டிற்கு அப்பால் மேன்மையான படைப்புகள் வாசகரால் அடையாளங் கண்டறியப்படும். திரை போட்டு மறைத்தால் என்ன? தெரியாமல் போய் விடுமா? இலக்கியத்தின் முன்னோடிகளை அடையாளங்கண்டு அவர்களுடைய படைப்புகளை மீண்டும் வாசிப்பது உலகமெங்கும் நடைபெறுகிறது. ஹோமர், அரிஸ்டாட்டில் பற்றிச் சொல்லாமல், மேலை இலக்கிய வாசிப்புத் தொடங்காது. ஒளவை, கபிலர், இளங்கோ, காரைக்காலம்மையார், ஆண்டாள், கம்பர், வள்ளலார், பாரதி,பாரதிதாசன் எனத் தொடரும் தமிழ்ப் பாரம்பரியத்தில் நவீன கவிஞனால் தன்னை இணைத்துக்கொள்ள முடியும். சுந்தர ராமசாமியுடன் நெருங்கிய தொடர்புடையவன் என்ற முறையில் என்னால் சொல்ல முடியும். அவர் பீட வழிபாட்டிற்கு எதிரானவர். இன்றைய காலகட்டத்தில் நவீன இலக்கியத்தின் பீடமாக யாரையாவது கட்டமைக்க முயலுவது, ஒருவகையில் அபத்தம்.
உங்களுடைய சிறுகதைத் தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க கவிதைகள் எழுதியுள்ளீர்கள். உங்களுக்குப் படைப்பாளி என அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறித்த வருத்தம் உள்ளதா?
கவிதை எழுதுவது வேறு, தன்னைக் கவிஞராக உணர்வது வேறு. எனக்கு எனது எல்லைகள் தெரியும். இந்தப் பாதை எங்கே போகிறது என்பது தெரிந்தபிறகு வேறு எதுவும் செய்ய முடியாது. விமர்சனம் என்பது மறுபடைப்பு எனச் சொல்வது ஏற்புடையதுதானா? யோசிக்க வேண்டும். நான் ஒரு படைப்பாளி எனக் கொடியைப் பறக்கவிடும் முயற்சி எனக்கு இல்லை. தனது படைப்புகளுக்கு வக்காலத்து வாங்கிடவும், புரமோட் பண்ணவும் எனது நண்பர்கள் படுகின்ற பாடுகள் எனக்குத் தெரியும். அந்தப் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற வேண்டியது இல்லை.
பாண்டியன் உங்களுடைய நண்பர்களில் பலரும் தீவிரமாக இலக்கியத்தளத்தில் இயங்குகின்றனர். சிறுபத்திரிகை மரபில் சண்டைகளும் சச்சரவுகளும் யதார்த்தம். குழு மனப்பான்மை தவிர்க்க முடியாதது. உங்களுடன் பலரும் அன்புடனும் இணக்கத்துடனும் பழகுகின்றனரே?
இலக்கியத்தினால் உருவான நட்பு அற்புதமானது. பொதுவாக இலக்கியத்தில் சாதனையாளர்கள் எல்லோரும் எளிமையானவர்கள்தான். அன்பானவர்களும்கூட. போலியாகச் செயல்படுகிறவர்கள் நாளடைவில் காணாமல் போய் விடுவார்கள். படைப்பாளர் ஒருவரை மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும், நேற்று மாலையில் சந்தித்துப் பிரிந்தது போன்று பேச்சு தொடங்கும். உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் புலவர் தொழில். மதிப்பீடு சார்ந்து உருவாகும் பேச்சுகளில் முரண்பாடு தவிர்க்க முடியாதது. எல்லாம் கருத்தியல் மோதுதல்தான். பிரபஞ்சன், நகுலன், தேவதச்சன், கந்தர்வன், கோணங்கி ஜெயமோகன், சாருநிவேதிதா, நாஞ்சில்நாடன், மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், இராஜமார்த்தாண்டன், வெ.இறையன்பு, யவனிகா ஸ்ரீராம், சுதீர் செந்தில், சரவணன் சந்திரன் போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். அவர்களுடன் கருத்து முரண்பாடுகள் நிச்சயம் ஏற்படும். ஆனால் பேசி முடித்த பின்னர் மனம் ஆற்றலாக உணரும். இப்ப மதுவைக் குப்பிக்குப்பியாகக் காலி செய்துவிட்டு, தான் சொல்வது மட்டும்தான் உண்மை எனத் தீர்க்கதரிசிகளைப் போல ஓங்கிக் கத்துகிறவர்களுக்குக் காதுகள் இல்லை. இலக்கியம் அற்ற வெற்றுச் சவடால்களினால் என்ன பயன்? எங்கோ இருக்கும் வன்மத்தைக் கொட்டும் இடமாக இலக்கியப் பேச்சுகளை மாற்றுவது அருவருப்பானது. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் முக்கியமான புத்தகங்களை வாசிக்காமல், என்ன வேண்டுமானாலும் பேசுவேன்... இதுதாண்டா இலக்கியம் என கச்சை கட்டுகிறவர்கள், ஒருவகையில் விஷக்கிருமிகள்.
இந்தப் போக்குக்கு இலக்கியத்தில் குடிக் கலாச்சாரம் பெருகிவிட்டது காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறீர்களா?
அப்படிச் சொல்ல முடியாது. புதிய படைப்புகளை வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. இதனால் சுயமாக உருவாகும் கருத்தியல் போக்குகள், வறண்டுவிட்டன. யாராவது பேச்சில் சொல்லும் ஒற்றை வரி அபிப்ராயங்களைச் சொந்தக் கருத்துப் போலப் பிறரிடம் சொல்வது அதிகரித்துவிட்டது. தீவிரமான இலக்கிய உலகில் மொத்தம் 5,000 பேர் இருந்தாலே அதிகம். அரசாங்கம் நடத்தும் 6,500 டாஸ்மாக் கடைகளில் தினமும் மது அருந்தும் தமிழர்களின் எண்ணிக்கையுடன், தமிழ் இலக்கியவாதிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் ஒன்றுமில்லை என்று சொல்லலாம். ஒருசில படைப்பாளிகள் மதுவின் துணையுடன் தங்களுடைய சொந்த வாழ்க்கையின் அவலங்களையும் நெருக்கடிகளையும் மறப்பதற்காகச் சலம்புகின்றனர். நான்தான் மகாகவி எனப் போதையில் ஆவேசமாக முழங்குகிறவர்கள் பரிதாபமானவர்கள். எல்லோருடனும் வம்பிழுத்துத் தான் பெரிய இலக்கிய ஆகிருதி என நிரூபிக்க முயலுகிறவரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. எல்லாம் கொஞ்ச காலம்தான். அப்புறம் அப்படிப்பட்டவர் தனிமைப்பட்டு விடுவார். அவ்வளவுதான்.
சிறுபத்திரிகை மரபில் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் படைப்பாளர்கள் சிலர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுடைய குடும்பம் பாதிப்படைகிறது. இது என்னவகையான மனநிலை?
நாள் முழுக்கக் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுகின்றவர்கள்கூட மாலையில் டாஸ்மாக் கடையில் சம்பளத்தைச் செலவழித்துவிட்டு, வெறுங்கையுடன் வீட்டிற்குப் போகின்றனர். குழந்தைகள், மனைவி மீது அக்கறையற்ற ஆண்கள், இன்றைக்குத் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்றனர். இதில் சிறுபத்திரிகைக்காரர்கள் விதிவிலக்கு ஆக முடியாது. மேன்மையான இலக்கியப் படைப்பு, மனித மனதைச் செழுமைப்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கையா? யோசிக்க வேண்டும்.
படைப்பாளிகளைச் சமூகம் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
படைப்பாளர், தங்கக்கோபுரத்தில் வாழ்கின்றவர் என நினைக்கிறீர்களா? படைப்பாளருக்குக் கைகள் இருக்கும்போது அவரை ஏன் சமூகம் பாதுகாக்க வேண்டும்? புதிய சமூகம் படைத்திட அக்கறையுடன் படைக்கின்ற படைப்பாளர்கள், சமூகப் பாதுகாப்பினை எதிர்பார்ப்பதில்லை. பாரதிதாசன் பாடியதுபோல கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்த்துப் புதியதோர் உலகம் செய்கின்ற படைப்பாளர், மிகப்பெரிய ஆளுமை அல்லவா?
பாண்டியன், உங்களுடைய பதில் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படைப்பாளர்களுடன் அன்பாக இருப்பவர்; உதவி செய்பவர். ஏன் ஒரு படைப்பாளியைச் சமூகம் பார்த்துக்கொள்ளக்கூடாது? வரலாற்றில் எழுத்தாளரைப் போற்றிய சம்பவங்கள் நிரம்ப உள்ளனவே?
படைப்பாளிக்கு எனத் தனியே கிரீடம் எதுவுமில்லை. எந்தவொரு படைப்பினுக்கும் ஒளி வட்டம் எதுவுமில்லை. இந்த யுகத்தின் மாபெரும் படைப்பு எனத் தனது படைப்பினுக்குப் படைப்பாளி வக்காலத்து வாங்குவது அருவருப்பானது. இலக்கியத்திற்கு என ஓர் எல்லை அல்லது வரையறை இருக்கிறது. சாகாவரம் பெற்ற படைப்புபோல நிமிர்ந்து நிற்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டிய சிற்பிகளுடன் ஒப்பிடும்போது, நமது எழுத்தாளர்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும். சரி, அதை விடுங்கள். ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக எட்டு மணி நேரம் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர், மேன்மையானவர் இல்லையா? அவரைப் போற்ற வேண்டாமா? நாம் வாழ்கிற சமூகத்தின் செழுமைக்காகப் பல்வேறு தரப்பினரும் இணைந்து உழைக்க வேண்டியுள்ளது. ஏன் இருண்மையான கவிதைகள் மட்டும் எழுதுகிற நொய்மையான கவிஞன், சமூக மாற்றத்திற்காக என்ன செய்தான் எனத் திரும்பிக் கேட்க முடியாதா? சமூகத்தை விட்டு விலகி, தனித்த உலகில் தன்னையும் ஒதுக்கிக்கிட்டு தான் ஒரு மாபெரும் படைப்பாளி என claim செய்கிற படைப்பாளி எந்தவகையில் ஒஸ்தி? கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ, எழுத்தாளர் மார்க்குயூஸூக்குத் தந்த மரியாதை, சாதாரணமானது அல்ல. மாபெரும் சபைதனில் நடக்கும்போது சிறந்த எழுத்தாளனுக்கு மாலைகள், தானாக நிச்சயம் கழுத்தில் விழும். அது போதாதா, செந்தில்?