வாழ்வு வெளியின் விளைச்சல் எழுத்துக்கள். உயிரின் வதையும், வாதையும் வார்த்தைகளாகின்றன. மன வனப்பின் வசீகரம் தன்னை எழுத்து மணத்தால் நிரப்பிக்கொள்கின்றது. பாசாங்கற்ற, உண்மைக்கு மிகவும் நெருக்கமான உணர்வுப் பிழிவே இலக்கியம். எழுதுவதும், வாசிப்பதும் ஒரு வித போதைதான். மனிதர்கள் சக மனிதர்களுடனான உரையாடலை எழுத்துக்களால் சாத்தியப்படுத்துகின்றனர். பின்ன வாழ்வின் போதாமைகள் எண்ணங்களைக் கொண்டு தம்மை நிரப்பிக் கொள்கின்றன.
நாணற்காடன் கரும்பின் அடி நுனி போல் நற்கருணைச்சுவை மிக்கவர். எப்போதும் அவருக்கு வாழ்வு நுனிக்கரும்பாய்த் துவர்த்துப் போய்விடுகிறது. உயிர்களின் வேரில் தன் அகக்கண்ணைப் பொருத்திக்கொண்டு அலையும் இவர் அசல் கலைஞர். ஒப்பனை என்று படாத ஒப்பனை இவரது எழுத்துக்கள். புழுதி படிந்த சொற்கள் இவரின் மூலம். இவர் காட்டும் உலகம் நீங்களும் நானும் வாழ்வதுதான். இவர் சுட்டும் மனிதர்களும் சக இருதயர்கள்தாம். இந்த எளிமைக்குள் ஒளிந்துகிடக்கும் மனிதத்தை வாஞ்சையோடு வருடிக் கொடுக்கின்றன இவரது எழுத்துக்கள்.
பக்கவாத நோயில் விழுந்துவிட்ட அப்பா, வாழ்ந்து கெட்ட மனிதராகச் சுருங்கிப் போகிறார். காலப்போக்கில் குரலற்றுப்போன அவர் விசில் சத்தம் வழி தன் தேவைகளைச் சுட்டி மூச்சுவிடுகிறார். பல ஆண்டுகள் விசில் சத்தம் பழகி உண்ண, உடுக்க மட்டுமல்ல கழிவுகளை அள்ளவுமாக உரிமை உறவில் கரைந்து போகிறார் அம்மா. ஒரு கட்டத்தில் செத்துவிட மாட்டாரா என நினைக்கும் தருணத்தில் காலமாகி விடுகிறார் அப்பா. தீரா நோயும், முதுமையும் அன்புப்பிணைப்பும் எதிரிணைகளாகி முட்டி மோதி வெடிக்கும் உணர்வுகளைப் பதிவு செய்கிறது கதை. ‘அப்பாவின் விசில் சத்தம்’ வாழ்தலின் குறியீடா அல்லது சாவை எதிர்நோக்கி விட்ட அழைப்பின் அடிச்சுவடா? இரண்டும்தான் என்பதில் அடங்கியிருக்கிறது நாணலின் எழுத்து.
உதிரி உழைப்பாளிகளின் வாழ்வு கோரமானது. ‘அன்றாடங்காய்ச்சி’ என்ற அடைக்குள் இருந்தாலும் அதிலும் ஆண், பெண் பேதம். மலைக்கோட்டையில் நானூறு படிகள் ஏறி கல் சுமந்து செல்லும் விதவையான பார்வதி... மாதவிடாய் வந்துவிடும் அச்சத்தில் உடல் உபாதை ஒருபுறம். கடவுள் இருக்கும் புனித இடம் தீட்டுப்பட்டுவிடக் கூடாது என்கிற மனத்துரத்தல். மறுபுறம் பாரம் சுமந்து படிகள் ஏறி இறங்கி துவண்டு போய் கீழே வருகிறாள். வேலைமுடியும் அந்தியில் எப்போது வருமோ என்ற அச்சச் சுமையை இறக்கி வைக்கிறாள். சம்பளம் அளக்கிறார்கள். ஆண்களுக்கு ஐந்து ஐம்பது ரூபாய்த் தாள்கள். பெண்களுக்கு மூன்று ஐம்பது ரூபாய்த் தாள்கள். “நாம்பளுந்தான் ரெண்டு மண்டபந்தூரம் சொமக்கிறோம். இந்த ஆண்களுக்கென்ன கொம்பா மொளச்சிருக்கு?”, என்கிறாள் சக சித்தாள் செல்லம்மா. கதை முடிகிறது ‘இறுக்கம்’.
எதிர்பாராத, ‘கொரோனா’ கால வாழ்க்கை மாதிரி ஓர் ஊரில் எழுத்துக்கள் மாயமாகின்றன. செய்தித்தாள்களில், பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், பேருந்துகளில் எங்கும் எதிலும் எழுத்துக்கள் மறைந்து போகின்றன. வேலைகளை காலி செய்து, யாருக்கு எது சொந்தம் என்ற எல்லைகளை விடுத்து அவரவர் ஆதி வாழ்க்கைக்கு- எழுத்தறிவற்ற நிலைக்கு- மாறுகிறார்கள். இப்படி ஊரே தலை கீழ் மாற்றமாவதை ‘ஊர் மாற்றம்’ கதை பதிவு செய்கிறது. இனிய கற்பனைதான் எண்ணும் எழுத்தும் சூதாய் மாறிவிட்ட சமூகத்தை முகத்தில் அறைகின்றன மறைந்து போகும் எழுத்துக்கள்.
ஓவியரான அப்பா மரணம். மகள் ‘சங்கவி’ அழகாய் வரைபவள். அம்மாவைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல முயல்கிறாள். உள்ளூர் பள்ளியில் ஓர் ஓவிய ஆசிரியர் பணி. நேர்காணலுக்குச் செல்கிறாள். அழகழகாய் ஓவியங்களைத் தீட்டிக் காட்டுகிறாள். அவளது திறமை வியக்க வைக்கிறது. நேர்கண்ட நிர்வாகி சொல்கிறார் “ஒண்ணுமில்லைங்க சார்... அந்தப் பொண்ணு ரொம்ப கருப்பா இருக்கு. அதுவுமில்லாம பல்லுவேற தூக்கிட்டிருக்கு. சுருக்கமா சொன்னா அசிங்கமா இருக்கு. மிஸ்ஸ§ங்க அழகா இருந்தாத்தான் ஸ்டூடன்ட்ஸ்க்கு பிடிக்கும் சார். நாம வேற ஆள் தேடுவோம் சார்.” ‘அழகாய் வரைபவள்’ கதை இது.
தான் காதலித்தப் பெண் திருமணமாகிச் சென்று பல வருடங்கள் கழித்து அவளின் தோழியைச் சந்திக்கிறான். குழந்தைகளோடு வந்த அவள் இவனிடம் ஓவியம் கற்க தன் மகளைச் சேர்க்கிறாள். வீட்டில் இருந்த இன்னொரு குழந்தையை இவன் மகள் என அவள் நினைக்க, இது தங்கை மகள், தான் ‘பேச்சிலர்’ என்கிறான் அவன். இருவருக்கும் பேச்சு நின்று வாயடைத்துப் போகிறார்கள். ‘இது ஒரு காதல் கதை’.
பாலமுருகனை நாய் துரத்துகிறது. எதிர்த்த வீட்டுப் பெண்ணாக, காதலியாக, அக்காவாக பல நாட்கள் நாய்கள் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இவர்களின் முகம் நாய்களின் முகத்தில். ஒரு கட்டத்தில் ஓர் நாளில் இவன் முகமே நாயின் முகத்தில். “அந்த நாயின் முகத்தில் தெரிந்த பாலமுருகனின் கண்களில் ஏக்கங்களும், நிராதரவும் பெருகி வழிந்தன. அதன் கூரிய பற்கள் இவனைக் கடித்துக் குதறும் முனைப்போடிருந்தன. அதுவரை ஓடிக் கொண்டிருந்தவன் இப்போது துரத்துவது பற்றி யோசித்தான். நாய் திரும்ப ஓடத் தொடங்கியது”. இது ‘தன்னைத் தானே துரத்துபவன்’.
ஆறுமாதத்தில் அப்பா இறந்து போக, அம்மாவால் வளர்க்கப்படுகிறான். சைக்கிள் கடையில் வேலைக்குச் சேர்ந்து பின் பஞ்சாலைக்கு வேலைக்குப் போகிறான். அம்மா இறந்ததாக தகவல் வர ஊருக்குப் புறப்பட்டு வருகிறான். அவன் முன்பு வேலை பார்த்த மாரிமுத்து முதலாளி ‘கோழி’ என்று ஒரு நாள் அழைக்கிறார் (ஒரு நாள் இரவு கடைக்கு வெளியே தூங்கி விட்டதால்). பின் அவன் பெயர் ‘கோழி’ என்றே நிலைக்கிறது. அம்மா இறந்த வீட்டில் எல்லோரும் அழுகிறார்கள். இவன் மட்டும் அழவில்லை. ஊரார் இவனை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லையே என்று. இடுகாட்டில் புதைத்து விட்டு வீடு திரும்பியதும் அம்மா பிணமாகக் கிடந்த இடத்தில் “ரஞ்சித்து ரஞ்சித்துன்னு கூப்பிடுவியே அம்மா. இனிமே யாரும்மா என்னை ரஞ்சித்துன்னு கூப்பிடுவாங்க” என்று அழுகையினூடே யாருக்கும் கேட்காதவாறு புலம்பினான் எல்லோராலும் கோழி என்றே கூப்பிடப்படுகிற அவன்”. இது ‘இருப்பின் இறப்பு’.
கைகூடாக் காதல். திகட்டத் திகட்டக் காதலிப்பவர்கள் நிரம்பிவழியும் காதல் கடிதங்களை மீளப் பெற்று காதலைத் துண்டாடி வாழ்வின் பெரு வெளியில் மீள் நினைவில் அவனும் அவளும் சந்திப்பது - தலைப்பு போல கதையே கவிதையாக - ‘பழுத்த இலை சூல்’.
திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளாகியும் மகப்பேறு வாய்க்காத தங்கமுத்து ஆசை மனைவி சம்பியை அவளின் தோழி சித்ராவிடம் சென்று அவள் பிரசவித்த தொப்புள் கொடியை வாங்கிவர வலியுறுத்துகிறான். பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைச் சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்ற நம்பிக்கை. சம்பிக்கு மனம் ஒப்பவில்லை. வேறு வழியின்றி போக சம்மதிக்கிறாள். அவள் கிளம்பிக் கொண்டிருக்கும்போது அவசரமாய் வீடு திரும்புகிற தங்கமுத்து மனம் திருந்தி அங்கு செல்ல வேண்டாம் என அவளோடு ஆசையோடு இணங்குகிறான். இது ‘தொப்புள்கொடி’.
முடிதிருத்தும் வேலை செய்யும் அவனை டாஸ்மாக் வேலைக்கு அனுப்புகிறாள் மனைவி வானதி. முடி வெட்டி இரவு வரும் போது கெட்ட வாசனை வருவதாக, டாஸ்மாக் கடைக்கு வேலைக்குப் போன அவன் குடிக்கு அடிமையாகிறான். கணவன் மனைவிக்கு இடையே சச்சரவு. அவன் குடியை விட முடியாமல் தற்கொலைக்கு முயல்கிறான். இது ‘வாசனை’.
பக்கத்து வீட்டில் தனிமைத் தாண்டவம். இசையும், நடனமும், பரவச முகமும் அவனை அலைக்கழிக்கின்றன. மொட்டை மாடியிலிருந்து பார்க்கிறான். யார், எப்படி அறிய முற்படுகிறான். பக்கத்து வீட்டிற்கு குடிவந்த கணவனும், மனைவியும், பிள்ளையையும் இவன் சந்திக்கிறான். ‘நீங்கள் டான்ஸ் மாஸ்டரா?’ என வினவ, அவள் கணவன் அவசரமாய் ‘ அவளுக்கு டான்ஸெல்லாம் தெரியாது’ என்கிறான். மறு நாளிலிருந்து அவர்கள் வீட்டு ஜன்னல் சாத்தப்பட்டு, ஒரு சத்தமும் வருவதில்லை. இது ‘மிதப்பவனின் நீர்குமிழி’.
அப்பாவின் முதல் திதிக்கு வரும் மகள் அண்ணன் வைத்துள்ள அப்பாவின் படத்தை விரும்பிக் கேட்கிறாள். அவனும் தர சம்மதிக்கிறான். அவள் கணவனோ ‘இவ்வளவு பெரிய படத்தை மாட்ட இடம் இல்லை’ என்று வேண்டாம் எடுத்து வராதே என்று சொல்லிவிடுகிறான். இது ‘சுவர்கள் இல்லாத வீடு’.
மதி தாய் தந்தையை இழந்தவன். திருமணமாகி மனைவியும் தற்கொலையில் உயிர் விடுகிறாள். அப்பா, தாத்தா, மாமா, பக்கத்து வீட்டுக்காரர்... எனப் பலரின் மரணமும் துர்மரணங்களாக அமைகின்றன. மனைவி இறந்ததும், இவனை சுற்றி இருப்போர் ஒரு மாதிரி பார்க்கின்றனர். மறுமணத்திற்குப் பெண் தேடி எதுவும் அமையவில்லை. வாழ்வில் துரத்தப்பட்ட அவன் தற்கொலைக்கு ரயிலில் பாய முடிவெடுக்கிறான். ரயில் எதுவும் வராததால் தண்டவாளத்தில் இருந்து கிளம்பி கோயில் அருகில் கடைக்குச் செல்கிறான். சட்டைப்பையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. பசி புரட்டி எடுக்கிறது. பரோட்டா வாங்கி சாப்பிடுகிறான். “பரோட்டா துண்டுகளை சில்லென்றிருந்த குழம்பில் புரட்டி பசியைக் கொல்லத் தொடங்கினான். தூரத்தில் கூவியபடி சென்று கொண்டிருந்த இரயிலின் சத்தம் அப்போது அவன் காதில் விழவில்லை”. இது ‘விதுரன்’.
வாழ்வை, மனிதர்களை மிக அருகில் தரிசிப்பவை இக்கதைகள். சின்னஞ்சிறு கதைகள் மின்னல் தெறிப்புகள் போல கச்சிதமாய் அமைந்து விடுகின்றன. யதார்த்த வாழ்வின் சிறுதுளிகள் இவை. நாணற்காடன் கலை இரசிகர். தமிழ் மட்டுமல்ல, இந்தி முதலிய மொழிகளின் இலக்கியங்களையும் அறிந்தவர். எளிமையும் அழகும் கைகூடிய கதைகள் இவை. சில மனங்களைப் படிப்பவை. சில மனங்களைப் படைப்பவை. இவற்றின் அடித்தளம் நேயம். சக மனித அக்கறை. பசி, காதல், காமம், பாசம், உழைப்பு, நம்பிக்கை... என எல்லாவற்றுள்ளும் வாழ்வைத் தேடும் மனம் வாய்க்கப் பெற்றவராக நாணற்காடன். தமிழ் புனைவிலக்கியத்துக்கு இவரின் எழுத்தும் பலம் சேர்க்கும் என உறுதியாக நம்பலாம்.
அப்பாவின் விசில் சத்தம் (சிறுகதைகள்)
நாணற்காடன் / கீற்று வெளியீட்டகம்.
விலை: ரூ.70/- / அழகிய மண்டபம்,
குமரி மாவட்டம்- 629167
அலைபேசி 9791954174.