ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஆநிரைகள் இன்றியமையாத இடம்பெறுவதால் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் அரசன் அக்காலத்தில் ஆநிரைகளைக் கவர்வது முதற்படியாகும். இதனை வெட்சித்திணை என்ற பிரிவுக்குள் அடக்குவர் தமிழ் இலக்கண நூலார். புறத்திணையின் ஏழு திணைகளுள் முதலாவது திணை வெட்சித் திணை யாகும். வெட்சிப்பூவைச் சூடி ஆநிரை கவரச் செல்வதால் வெட்சித் திணையாயிற்று. வேந்தரின் ஆணைப்படியே ஆநிரை கவர்தல் நடைபெறும். வேந்தன் ஆணையிடாமலே ஆநிரை கவர்தல் பிற் காலத்தில் தோன்றிற்று என்பர். ஆநிரை கவர்தலில் 14 வகையான துறைகள் உள்ளன. இவற்றின் விளக்கத்தினைத் தொல்காப்பியப் பொருளதி காரப் புறத்திணையியலில் காணலாம். வெட்சி மறவர்கள் ஆநிரைகள் இருக்குமிடத்தினை ஒற்றர்கள் வழி அறிந்து நாட்டை முற்றுகையிட்டு ஆநிரை களைக் கொண்டு நாட்டிற்குத் திரும்புவர். திரும்பும் போது பகைவர் நாட்டு கரந்தை மறவர்களுடன் போரிட்டு மீண்டும் அவர்களை விரட்டுவர். பிறகு நாடு திரும்பிய பின், ஆநிரைகளைப் பகிர்ந்து கொள்ளுதலும் கொண்டாட்டமும் நடைபெறும். கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காகத் தொடுக்கும் போர் கரந்தைத் திணையில் அடங்கும். இதில் 21 துறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. போரில் தம் இன்னுயிரை நீத்தாவது ஆநிரைகளை மீட்கப்போவதாக வீரர்கள் வஞ்சினம் கூறுவர். இதற்கு நெடுமொழி கூறுதல் என்று துறைப் பெயர் அமைகிறது. போரிட வருவோரை வாள் வன்மையால் எதிர்த்துப் போரிட்டு அழித்துத் தானும் வீழ்ந்து படுதலும் உண்டு. இதனை வாள் வாய்க் கவிழ்தல் என்ற துறைக்குள் அடக்குவர். இதன் அடிப்படையில் புறநானூற்றில் வருகிற ஒரு பாடலையும் அபபிரம்சா மொழியில் வரும் ஒரு பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.
புறநானூற்றில் 264-இல் வரும் பாடலைப் பாருங்கள்
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவ ரோட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே.
பரல்-பருக்கைக் கற்கள், பதுக்கை- (அடக்கம் செய்த) மேடை, மரல்- பூத்தொடுக்கிற (கற்றாழை) நார், கண்ணி-மாலை, கடும்பு- சுற்றம்.
ஒரு தலைவன் ஆநிரைகளுடன் கவர்ந்து சென்ற பகைவர்களை விரட்டி ஓட்டி வெற்றி பெறுகிறான். கன்றுடன் கறவைப் பசுக்களை மீட்டு வந்து ஊர் மக்களிடம் ஒப்படைக்கிறான். ஆனால் பகைவர்களோடு போரிட்டதில் விழுப்புண் ஏற்பட்டு இறந்துபடுகிறான். இறந்த தலைவனை ஊர்மக்கள் பருக்கைக் கற்கள் நிறைந்த பதுக்கையிடத்தே நல்லடக்கம் செய்தனர். நடுகல் அமைத்தனர். அதில் தலைவனின் பெயரையும் பொறித்தனர். அழகிய மயிலினது பீலியைச் சூட்டி அலங்கரித்தனர். மரலை என்னும் நாரால் தொடுத்த சிவந்த பூவுடைய மாலையை அணிவித்தார்கள்.
இறந்துபட்ட தலைவன் உயிரோடு இருந்த காலத்தில் கர்ணன்போல தேடிவந்த இரவலர்களுக் கெல்லாம் செல்வத்தை வாரி வழங்கினான். பாணர்கள் சுற்றத்தாரோடு வந்து இவனிடம் பரிசுப் பொருள்கள் பெற்றுச் சென்றனர். அந்த பழக்கத்தில் தலைவன் இறந்த செய்தி அறியாமல் இன்றும் பரிசில் பெற வந்து விடுவார்களோ? அவ்வாறு வந்தால் ஏமாந்து விடுவார்களே என்று இரக்கத்தோடு புலவர் பாடலை முடிக்கிறார். இப்பாடலில் மூன்று செய்திகள் இருப்பதனைப் பின்வருமாறு பிரித்துக் காணலாம்.
1. கன்றொடு கறவை தந்து
பகைவரோட்டிய நெடுந்தகை
2. பரலுடை மருங்கிற்...
.... ................
இனி நட்டனரே கல்லும்
3. கழிந்தமை அறியாது இன்றும்
வருங்கொல் பாணரது கடும்பு
தலைவனின் போர்த்திறம், ஊர்மக்கள் நடுகல் எடுத்துச் சிறப்பித்தமை, புலவரின் இரக்கக்குறிப்பு ஆகிய மூன்று செய்திகளை முன்பின் அமைத்துப் பாடல் செம்மையுற விளங்குகின்றது.
இனி அபபிரம்சா மொழியில் காணப்படும் கரந்தைத் திணைக்குரிய பொருண்மையுடன் கூடிய பாடல் ஒன்றையும் காண்போம்.
“என்னுடைய காதலன் பசுக்களுக்கான கொட்டகையைப் பாதுகாக்கும் போது அக் கொட்டகை எவ்வாறு தீப்பற்றி எரியும்? அவ்வாறு எரிந்தால் தலைவன் எதிரிகளின் குருதியைக் கொண்டு தீயை அணைப்பான். அல்லது தன் குருதியைக் கொண்டு தீயை அணைப்பான்.” இப்பாடல் தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது. தலைவி தலைவனின் வீரத்தையும், வலிமையையும் சொல்வதாகப் பாடல் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் ஆநிரைகள் நிற்குமிடத்தை தீயிட்டு அழிப்பர் என்ற வெட்சித் திணைக்குரிய பொருண் மையும், ஆகோள் என்ற துறைக்குரிய நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. எதிரில் போரிட வருவோரைத் தன் வாள் வன்மையால் எதிர்த்துப் போரிட்டுப் பகைவரை அழித்துத் தானும் வீழ்ந்துபடுதல் வாள் வாய்க் கவிழ்தல் என்ற துறையின்கீழ் இப் பாடலைக் காணலாம். மூதின் மகளிரைப் போன்ற வீரமறவர்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணாகத் தலைவி விளங்குகிறாள். குருதியைக் கொண்டு தீயை அணைப்பாள் என்பது மிகைபடக் கூறல் (Hyperbole) என்ற இலக்கிய உத்தியில் வீரச் சுவையைப் புலப்படுத்துகிறது. பசுக்களை உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்த ஒரு சமூகத்தை இப்பாடலின்வழி விளங்கிக் கொள்ள முடிகின்றது.
ஆநிரை கவர்தலும் மீட்டலும் நடைமுறையில் இருந்ததைக் கல்வெட்டுக்களின் வழியாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புலிமான்கோம்பை கல்வெட்டு கூடல் ஊரில் நிகழ்ந்த ஆநிரை கொள்ளும் பூசலில் உயிர் நீத்த தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுக்கப்பட்ட கல் பற்றி குறிப்பிடுகிறது (காண்க: தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006). இதுவே மிகப் பழமையான ஆதார மாகக் கொள்ளப்படுகிறது. ஆநிரை கவர்தல் குறித்த கல்வெட்டுகள் கருநாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றன. ஆநிரை கவர்தலைக் கருநாடகத்தில் துருகொள் என்று கூறுகின்றனர். ஆநிரை காத்த இரு பெண் களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்கள் கருநாடகத்தில் இருப்பதாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது
(க. ராஜன், 2007: 78). ஆநிரைகளைக் கவர்ந்த, மீட்ட வீரர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்கள் ஆந்திர மாநிலம் சித்தூர், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. கோ-கிரஹண என்பது வடமொழி இலக்கியங்களிலும் உள்ளது. இவை எல்லாவற்றிற்குமிடையேயுள்ள உறவுகள்தான் என்ன? இது இன்னும் காண முடியாமல் இருக்கிறது.
“When my beloved is in the cowshed, how would the huts be on fire? Either he would extinguish this with the blood of the enemies, or (will put it out) by shedding his own- there should be no doubt whatever” (Translation - Prof Vaidya)