தமிழ்ஒளி (1924--1965) இந்நூற்றாண்டில் எழுச்சி பெற்ற தமிழ்இன எழுச்சி, பாட்டாளிமக்கள் எழுச்சி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் எழுச்சி ஆகிய மூன்று எழுச்சிகளின் கூட்டுத் தொகையாக விளங்குகிறார். இம்மூன்று இயக்கங்களும் அவரது மன உலகத்தை வடிவமைத்து, பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாகச் சொல்லாடுவதற்கு அவரைத் தயார்ப்படுத்தி உள்ளன. இந்தக் கட்டுரை அவரது மொழியாடலில், கட்டுரை என்கிற இலக்கிய வடிவம் மூலமாக அவர் உருவாக்கும் கருத்தாக்கங்களை வெளிக் கொணர்வதற்கு முயல்கிறது. “திருக்குறளும் கடவுளும்”(1959), “சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?”(1959), “தமிழர் சமுதாயம்”(1962) ஆகிய மூன்று கட்டுரை நூல்கள் இங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைகளை வெறுமனே “கட்டுரைகள்” என்று கூறுவதைவிட “இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள்” என்றே வகைப்படுத்திக் கொள்ளலாம். மேலும், திறனாய்வுக் கட்டுரைகள் என்பதைவிட, “விசாரணைக் கட்டுரைகள்” என்றே அழைக்கலாம். ஏனெனில், ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை விசாரணைக் கூண்டில் ஏற்றி, தன் சமகாலத் தேவைக்கு ஏற்பப் புதிய கருத்தாக்கங்களை உருவாக்குபவையாக அவரது கட்டுரைகள் பலவும் அமைந்துள்ளன. தான் நம்புகிற கருத்துக்கு ஏற்ப விவாதங்களைத் தர்க்கபூர்வமாகக் கட்டுவதில் தமிழ்ஒளியின் புலமை பளிச்செனப் புலப்படுகிறது. கவிதையாக்கத்தில் உணர்ச்சி வெள்ளமாகத் தமிழின் ஒலிநயம் மூலமாகப் பாய்ந்து தாவும் தமிழ்ஒளி, கட்டுரையாக்கத்தில் நின்று, நிதானமாக, விவாதபூர்மாகச் சான்றுகளோடும் புள்ளிவிவரங்களோடும் பலவிதமான மேற்கோள்களோடும் அறிவார்ந்த முறையியலைப் பின் பற்றி எழுதிச் செல்லும் தன்மை யாரையும் வியக்கவைக்கக் கூடியதாகும்.

“திருக்குறளும் கடவுளும்” என்ற நூல் வள்ளுவரின் கடவுள் கோட்பாட்டை ஆராய்கிறது. ஏற்கனவே பரிமேலழகர் போன்ற உரைக்காரர்களால் புனைந்து கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தக்க ஆதாரங்களோடு மறுத்து, தன் கொள்கையை நிலைநாட்டுகிறது. ஒரு நூல் (அ) பிரதி, காலந்தோறும் துப்பு விளக்கத்திற்கு உள்ளாகி வருகிறது. இப்படிப் புதிய விளக்கத்திற்கு உள்ளாவதாலேயே அந்த நூல் தனது இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுகிறது. ஒருவன் தன் தேவைக்கு ஏற்பத் தன் சூழலைத் திரித்து, ஒழுங்குபடுத்திக் கொள்வது போலவே தான் வாசிக்கின்ற நூலின் அர்த்தத்தையும் தனக்குத் தகுந்தவாறு தன்காலத்திற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளுகிறான். இவ்வாறு அமைத்துக் கொள்வதால் ஒரு பிரதிக்கும் பல்வேறு அர்த்தங்கள் வந்து வாய்த்துவிடுகின்றன. எந்த அர்த்தம் மேலோங்கி ஒலிக்கிறதோ அந்த அர்த்தம்தான் அந்தக் காலத்தில் அந்தப் பிரதிக்கு. அப்படிப் பார்த்தால் திருக்குறளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் “அர்த்தங்களின்” வரலாறே ஒரு பெரிய காவியம் எனக் கூறலாம்.

“அருக சமயத்தினின்றும் முகிழ்த்த ஒரு

 தத்துவச் செம்மலரே திருக்குறள்”

(திருக்குறளும் கடவுளும், ப.22) எனக்கூறும் தமிழ்ஒளி, திருக்குறளின் முதல் குறளுக்குப் புது விளக்கம் கொடுக்கிறார். “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன. அதுபோல் உலகம் ஆதிபகவானாகிய முதலையுடைத்து இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது” என்ற பரிமேலழகரின் உரையை மறுக்கிறார். அவர் காலத்திய சைவசமய எழுச்சியின் வெளிப்பாடு இந்த உரை என்று அற்புதமாக விளக்குகிறார். உண்மையில் வள்ளுவர் கூறுவது தன் காலத்திய சமணசமயச் சிந்தனையைத்தான் என வாதாடுகிறார். வள்ளுவர் “ஆதிபகவன்” என்று அரூபமான கடவுளைச் சுட்டவில்லை. 24 சமணசமய அறிவர்களின் முதல்வரான இடபதேவரைத்தான் சுட்டுகிறார் எனச் சான்றுடன் விளக்குகிறார். இடபதேவர்க்கான பெயர்களுள் ஒன்றுதான் “ஆதிபகவன்” என எடுத்துக் கூறுகிறார். “எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டது போல், இந்த உலகம் இடபதேவரை முதலாகக் கொண்டுள்ளது” என உரை எழுதுகிறார். அதாவது பூமி இருந்தது; செடி, கொடி, விலங்கு, நீர், நெருப்பு, தீ என இந்தப் பூமி இருந்தது. ஆனால் மனிதன் மற்ற உயிரினம் போல் இல்லாமல், இந்த இயற்கையைத் தன்னில் நின்று வேறாகப் பிரித்து “ஓர் உலகமாக” உணர்ந்தது இடபதேவர் மூலமாகத்தான்” என்று உரை எழுதுகிறார். உலகம் பற்றிய பிரக்ஞை இடபதேவர் போன்றோரின் மனித முயற்சியால் கை கூடியதே ஒழிய, கருத்து முதல்வாதிகளான கடவுள்வாதிகள் சொல்வதுபோல அரூபமான தெய்வத்தால் கூடியது அல்ல என்ற பொருள் முதல்வாதத்தை முன்வைத்து உரை எழுதுகிறார். இந்த மனித உலகத்திற்கான மூலப்பொருள் மனித உழைப்புதானே ஒழிய, அரூபமான கடவுள் அல்ல என அழகாக விளக்கி உரை எழுதுகிறார் தமிழ்ஒளி.

“மனிதன் உருவாக்கிய அறம், ஊழையும் உப்பக்கம் காண வல்லது என்பதை உணர்த்துவதே அறத்துப்பால்”(மே.நூ.ப.27) என்று அறத்துப்பாலுக்கே புது விளக்கம் தருகிறார். மனிதப் புரிதலுக்கு உட்படாத நிகழ்வுகளைக் கூட, மனித அறம் மூலம் மடக்கி ஆண்டுவிடலாம் என்று நம்பிக்கையூட்டுவதுதான் திருக்குறள் என அழகாக விளக்கம் கொடுக்கிறார்.

“பரிமேலழகரிடம் தர்க்கம் இல்லை. வாசகர்களை வழிமாற்றி அழைத்துச் சென்று விடுகிறார்” என்பது தமிழ்ஒளியின் துணிவு. வடமொழி மரபை அடிக்கடி எடுத்தாளும் பரிமேலழகருக்குப் பதில் கூறும் முகத்தான், திருக்குறளும் சிலப்பதிகாரமும் தமிழ்த் தொல்காப்பிய மரபின் “நீட்சிதான்” என விளக்குகிறார்.

“தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு இலக்கியமாய் அமைந்து, வேதங்களினின்று மாறுபடுவதையும் அதனால் தமிழர் தம் ஆற்றல் வீறுபடுவதனையும் தெரிவிக்கும் விழுமியநூல் திருக்குறள்” (மே.நூ.ப-44) என்பது தமிழ்ஒளியின் கூற்று. மேலும், தனது குருதியில் கலந்த தமிழின உணர்விற்கு ஏற்ப, ஆரியம் திராவிடம் என்ற அக்காலகட்டத்துக் கருத்தாக்கச் சிந்தனைக்கு ஏற்பக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். திருக்குறளை ஒரு போர்க்குரலாகக் காண்கிறார்.

“தமிழின வாழ்வைக் குலைக்க முயன்ற பகைவர்தம் பொய் ஒழுக்கத்தினை எதிர்த்துப் போர்முரசு கொட்டியவர் வள்ளுவர்” (மே.நூ.ப.36) என எழுதுகின்றார்.

திருக்குறளில் பேசப்படும் சிந்தனைகள் கடைப்பிடிக்கத்தக்கக் கோட்பாடா? அல்லது வெறுங்கற்பனையா? என்றொரு வினாவை எழுப்பிக்கொண்டு, கடைப்பிடிக்கத்தக்க கோட்பாடுகள்தாம் அவை. ஆனால் தமிழர்வாழ்வை அழிக்க எதிரிகள் முயன்றதால் அரசர்கள் பலரும் இவ்வறநெறிக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க இயலாது போயினர். எதிரிகளை அழிக்க அறநெறிசாராத நெறிகளையும் அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என விளக்குகிறார்.

“தமிழர்க்குப் புறம்பானோர் நாட்டிற்கண் ஊடுருவி அவர்தம் பொய்யொழுக்கம் புகுத்தினமையால் அரசர் ஓரோஒரு வழிதான் அறத்தைக் கடைப்பிடித்தனர் - வேளாண்மாந்தர், வணிக மாந்தர், துறவு மாந்தர் அறவழியில் ஒழுகினர்” (மே.நூ.ப-51)

இவ்வாறு திருக்குறளின் கடவுள் கொள்கையை விளக்கப் புகுந்த சாக்கில், தனது மனத்திற்கு விருப்பமான பொருள்முதல்வாதக் கருத்துக்களையும், தமிழின உணர்வு சார்ந்த சிந்தனைகளையும் திருக்குறளில் ஏற்றிப் பேசுகிறார் தமிழ்ஒளி. தனது சொல்லாடலின் வன்மை மூலம் தன் கருத்தை உண்மை எனக் கொள்ளும்படி நிலைநாட்டவும் செய்கிறார் தமிழ்ஒளி. ஒரு கட்டுரையின் (கட்டு உரைத்தலின்) வெற்றிக்கு இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்? “சிலப்பதிகாரம் - காவியமா? நாடகமா?” - என்ற கட்டுரை நூல் தமிழ்ஒளியின் மற்றொரு ஆளுமையைப் புலப்படுத்துகின்றது. பெரும்பாலும் தமிழ்ப்படைப்பாளிகளிடம் காணாத இலக்கியத்தின் உருவம் பற்றிய பிரக்ஞை தமிழ்ஒளியிடம் எந்த அளவிற்கு ஆழமாக இயக்கம் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. “சிலப்பதிகாரத்தின் உருவம் எது?” என்ற தேடலே ஒரு புத்தகமாக வடிவெடுத்திருக்கிறது என்றால் அவருடைய நுட்பமான புரிதலின் தன்மை வாசகனை வியப்பில் ஆழ்த்துகிறது.

இலக்கியத்தில் உருவத்தின் இன்றியமையாமையை விளக்க, சாபத்தால் பன்றியாகப் பிறப்பெடுத்த முனிவனின் கதையைப் பயன்படுத்திக் கொள்கிறார். (பாரதியும் இந்தக் கதையை எடுத்தாண்டுள்ளார்) ஒரு முனிவர் சாபத்தினால் பன்றியாகப் பிறப்பதற்கு முன்பு, தன் மகனிடம், “என்னைப் பன்றியாகப் பார்த்தவுடன் நீ வெட்டிக் கொன்றுவிட வேண்டும்” என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறார். அதுபோலவே பன்றியாகப் பிறந்த தந்தையைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், மகன் வெட்டுவதற்கு ஓடுகிறான். ஆனால் பன்றியாக இருக்கும் தந்தையோ “மகனே! இந்த வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கிறது. பிள்ளைக் குட்டிகளோடு சாக்கடையில் கண்மூடிக்கிடக்கும் சுகம் வேறெங்கு வாய்க்கும்? நீ போய் வா” என்கிறார். மகன் துடிக்கிறான். “வேதங்கள் பலவும் கற்றுத் தெளிந்த தந்தையே! நீங்களா இப்படிப் பேசுவது? எனக்கு அவமானமாக இருக்கிறது” என்று அலறித் துடிக்கிறான். “உனக்கு அவமானமாக இருந்தால், அந்த வாளால் உன்னையே நீ வெட்டிக்கொள்! என்னை விட்டுவிடு” என்று சொல்லிவிடுகிறார். மகன் சொல்லுகிறான், “பன்றி உடலையும் பெற்றீர், இப்பொழுது பன்றியின் குணத்தையும் பெற்றீரே” என்று அழுது ஓய்கிறான். இந்தக் கதையைச் சொல்லிவிட்டுத் தமிழ்ஒளி எழுதுகிறார். “உடல் மாறினால் உயிர் மாறும்” என்று எழுதிவிட்டு மேலும் தொடர்கிறார். “இந்த உருவ அமைதியை அறியாமல் சிலபேர் சில பகுதிகளைப் (சிலம்பில்) புறம்பே ஒதுக்க வேண்டும் என்கின்றனர்” (மே.நூ.ப.22) என ரசிகமணி டி.கே.சி அவர்களுக்குப் பதில் சொல்லுகிறார். டி.கே.சி. தனது ரசனைமுறைத் திறனாய்விற்கு ஏற்பச் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அரங்கேற்றுக்காதை, நாடுகாண்காதை, ஊர்காண்காதை போன்ற இலக்கிய நயம் இல்லாத பகுதிகளை எடுத்துவிட வேண்டும் எனக் கருதினார். அவருக்குப் பதில் சொல்லுவதைப் போல, “உருவ அமைதி” பற்றியே பெரிதும் பேசிய டி.கே.சி.க்கு அவர் மொழி­யிலேயே பதில் சொல்லுவது போல எழுதுகிறார்.

“உருவ வேறுபாடுகளை உணர்வதே கலையின் உயிர்த்தன்மையை உணர்வதாகும். அத்தகைய ஆராய்ச்சி இன்று இல்லை. இந்நெறியில் நாம் இக்காவியத்தைக் (சிலம்பை) கற்றால்தான் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று சுப்பிரமணியபாரதி கூறியதன் உண்மை விளங்கும். (மே.நூ. ப.36)

சரி! சிலப்பதிகாரத்தின் உருவம் எது? உரையாசிரியர்களும் சிலம்பை வகுப்பறையில் சொல்லிக் கொடுப்பதற்கென்றே சுருக்கிவிட்ட பண்டிதர்களும் கூறுகிறபடி முத்தமிழ்க்காப்பியமா? (அ) நாடகக் காப்பியமா? (அ) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளா? (அ) பொருள் தொடர்நிலைச் செய்யுளா? (அ) காவியமா? எனக் கேட்டுவிட்டுத் தமிழ்ஒளி கூறுகிறார். “சிலம்பு இவற்றில் எதுவும் இல்லை! அது நிகழ்த்துக் கலை (Performing arts) இசை நாடகம். ஆங்கிலத்தில் கூறப்படும் ‘opera’ போன்ற ஒரு வடிவம். நாடகப் பண்பும், காவியப் பண்பும் பெற்றிருந்தும் நாடகத்திற்கும் காவியத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு “தனிவடிவம்” சிலப்பதிகாரம் என்று பலவிதமான சான்றுகளுடனும் மேற்கோளுடனும் விளக்கிச் சொல்லுகிறார். இப்படிச் சிலம்பின் உண்மையான உருவத்தை அறிந்து வாசித்தால்தான் அதன் மெய்யான இலக்கிய நயத்தை உணர முடியும். கூடவே, இழந்த நம் பண்பாட்டில் விளங்கிய இசை, நாடகம் என்ற வடிவத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் பரந்த எதிர்கால நோக்கில் தன் கட்டுரைப் பயணத்தை மேற்கொள்ளுகிறார்.

“தமிழ் மறுமலர்ச்சி என்று இன்று பேசப்படுவது பொய் உரை அன்று, பொருளுரை என்று உலகிற்கு நாம் காட்ட வேண்டுமாயின், இழந்த கலை வடிவங்களை நாம் மீட்க வேண்டும்” (மே.நூ. ப.34)

என்று மிகவும் உன்னதமாக “வடிவத்தின்” இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் தமிழ்ஒளி.

“தமிழர் சமுதாயம்” என்ற நூல் தமிழ்ஒளியின் தமிழ் நெஞ் சத்தைப் புலப்படுத்தும் அற்புதமான நூல். திராவிட இயக்கச் சிந்தனைகளை எந்த அளவிற்கு விமர்சனம் ஏதுமின்றி அப்படியே நெஞ்சில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் காட்டக் கூடிய நூல். (அ) தமிழ்நாட்டு எல்லை, (ஆ) சமஸ்கிருத தோற்றம் (இ) செத்த மொழி (ஈ) சமஸ்கிருத எதிர்ப்பு (உ) வடமொழியும் திசை மொழியும் (ஊ) வடுகு (எ) இந்திரன் யார்? ஆகிய கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூல், ஆதிக்கமொழியாய் விளங்கிய சமஸ்கிருத மொழிக்கு எதிரான கலகக்குரலாக அமைந்துள்ளது. ஒரு கலைஞன் என்பவன் கற்பனைவாதியாக, வார்த்தைகளில் விளையாடும் சித்தனாக மட்டும் இருந்திட முடியாது. தன்காலச் சமூகக் கடமையையும் நிறைவேற்ற முன்நிற்க வேண்டும் என்ற தெளிவோடு இந்தக் கட்டுரைகளை வடித்துள்ளார் தமிழ்ஒளி.

வடமொழி ஆதிக்கத்தாலும், காலனி ஆதிக்கத்தாலும் நினைவுகளற்ற ஒரு அடிமைச் சமூகமாக மாறிவிட்ட தமிழ்ச்சமூகத்திற்குத் தமிழ்ஒளியின் கட்டுரைகள் நினைவுகளை மீட்டுத்தந்து உத்வேகம் ஊட்டுபவைகளாக அமைந்துள்ளன. இந்த வகையில் கவிதை, கதை என்று எழுத வரும் இன்றைய இளைஞர்கள் தமிழ்ஒளி-யிடம் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன என உறுதியாகக் கூறலாம்.

- பேராசிரியர் க.பஞ்சாங்கம்