ஒரு எழுத்தாளன் என்பவன் ஒவ்வொரு நாளும் எதையாவது பற்றி ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்று கவிஞர் புவியரசு அடிக்கடி சொல்வார். கவிஜி, அன்றாடம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

வாழ்வியல் அனுபவங்கள், சிறுகதை, நாவல் என சகலத்திலும் பாய்ச்சல் நடை போடுகிறார். இருந்தாலும் அவர் நங்கூரம் இடுவது கவிதையில்தான் மிக அதிகம். இவருடைய கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, தீராநதி போன்ற முன்னணி இதழ்களில் பல முறை வெளியாகி உள்ளன. அப்படி வெளியான கவிதைகளின் தொகுப்பு தான் 'ஆனைமலைக் காடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன்'.

ஒரு கவிதையில், புத்தனை புத்தா என்று அழைத்து ஒரு புகாரை முன்வைக்கிறார் கவிஜி.

kaviji tamil poemsசட்டென்று முடிவெடுத்தான் புத்தன். கிளம்பி விட்டான், வீட்டை விட்டு, எல்லாவற்றையும் விட்டு. போய் போதி மரத்துக்குக்கீழ் உட்கார்ந்து விட்டான். பிறகு ஊர் ஊராய் போய் உபதேசம் செய்யப் பறப்பட்டு விட்டான்.

படக்கென்று கிளம்பி ஊர் சுற்றுவது
சுலபம் புத்தா

என்கிறார் கவிஜி. பிறகு எது கஷ்டம்? அதையும் அவரே சொல்கிறார்.

பொதுக் கழிப்பிட வரிசையில் நில்
தள்ளுமுள்ளு வரிசையில் நின்று
தண்ணீர் லாரியில் நீர் பிடித்து வா
ரேஷன் கடை வரிசையில் நின்று பார்
மின்சாரக் கட்டண வரிசையில்
வேர்க்க விறுவிறுக்க நில்
வரிசையில் நின்று பிள்ளைக்கு
அட்மிஷன் வாங்கிப் பார்

என்று லெளகீக வாழ்வின் அல்லாட்டங்களை அழகாக அடுக்கி விட்டு, படக்கென்று கிளம்பி ஊர் சுற்றுவது சுலபம், புத்தா என்று புகார் சொல்ல ஆரம்பிக்கிறார்.

வேறு ஒரு கவிதையில், கடற்கரையில் ஒரு படகு தனியாக இருக்கிறது. யாருமில்லை. வெறும் படகு. கரையொதுங்கும் அலையில் அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டிருக்கிறது. சதா, அலைபாய்ந்து கொண்டிருக்கும் அந்தக் கடல், சே, எப்போது இந்தப் படகைப் போல் நிம்மதியாக ஓரிடத்தில் அலைபாயாமல் இருப்போம் என்று அங்கலாய்ப்பதாக ஒரு கவிதை,

வெற்றுப் படகில் என்ன இருக்கிறது
வெறும் தனிமை அமைதி சூனியம்
கூடவே
கரை ஒதுங்கத் தவிக்கும்
குட்டி கடலும்

கடலை குட்டி என்று சொன்னது ரசனை. எப்போது மனதில் ஏதோ ஒரு தவிப்பு குடி கொள்ள ஆரம்பித்து விட்டதோ, அப்போதே எல்லா சுய பிரம்மாண்டங்களும் சுக்கு நூறாய் சிதறி, ஒன்றுமில்லை என்று ஆகும்போது எவ்வளவு பெரிய கடலானால்தான் என்ன, அதுவும் குட்டியாகத்தானே தன்னை உணரும் ?

ஒரு பத்து இருபது வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வரும் ஒருவனுக்கு மாமா வீடு அடையாளம் தெரியவில்லை. ஏதேதோ மாற்றங்கள். தடுமாறி, சிறுவன் ஒருவனிடம் பெயர் சொல்லி , வீடு எங்கே என்று கேட்கிறான். கவிதையில் கவிஜி,

கிராமத்து மாமா வீட்டுக்குச்
செல்லும் பால்யத்தின்
அடையாளம் எல்லாம்
போய் விட்டதாகப் புலம்பிய என்னிடம்
மிகச் சாதாரணமாக வழி கூறினான்
மாமனின் பேரன்
"டாஸ்மாக்குக்கு ஜஸ்ட் எதுத்த வீடு மாமா"

சமகால பண்பாட்டு அடையாளத்தின் யதார்த்தத்தை மெல்லிய நையாண்டியோடு சுட்டிக் காட்டும் கவிதை.

அய்யனார் பற்றிய ஒரு கவிதை. ஊர் எல்லையில் அரிவாளோடு தனிமைத் தவம் இருக்கும் அய்யனார் மேல் கட்டெறும்பு ஊர்ந்து கிச்சு கிச்சு மூட்ட , சிரிப்பு வந்து விடுகிறது அவருக்கு. சிரித்த வேகத்தில் அரிவாள் கை நழுவி விழுந்து விடுகிறது. கவிஜி எழுதுகிறார் :

அருவாள் இல்லாத அய்யனாரை
யாராவது கண்டால்
கண்டும் காணாமல் கடந்து விடுங்கள்
அந்த அரிவாள் காணாமல் போனதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

கவிஞரின் கற்பனையில் இப்படி ஒரு ரசமான காட்சி உதயமாகி இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை பற்றி இரண்டு மூன்று கவிதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று கோழிக் கறி வாங்கும் அனுபவம்.

கடைக்காரன் கூண்டுக்குள் கைவிட்டு தோதான கோழியைப் பிடிக்கப் போகிறான். கை விட்ட உடனே கோழிகள் முலைக்கொன்றாக பதறிச் சிறகடிக்கிறது. பிடிபட்ட ஒன்று , எடை காணாது என்று விட்டு விட்டு வேறு ஒன்றை பிடிக்கிறான். உடனே மற்ற கோழிகள் ஏதோ ஓர் ஆபத்தில் இருந்து விடுபட்டதைப்போல் அமைதி ஆகி விடுகின்றன. இந்தக் காட்சியை வர்ணிக்கும் விதம் வெகு அழகு.

ஒன்று மாட்டும் போது மற்றவை
கொக்... கொக்.. எனப்
பதறி அடித்துக் கூட்டுக்குள்
மூலை தேடி ஒளியும் காட்சி
மரணம் பதைபதைக்கும் ரணம்
மாட்டியதைக் கதறக் கதற
வெளியே எடுத்துக் கூட்டை அடைத்த பிறகு
கூட்டுக்குள் கப்சிப்

பிடிபட்ட கோழியை இறக்கையைப் பிடித்து வெளியே எடுக்கும் போது அதனுடைய சிறகடிப்பு , ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் நம்மை ஆழ்த்துகிறது.

இப்போது
கையில் அகப்பட்டிருப்பது
கோழியின் இறக்கையா என் இறக்கையா
என எழுந்த சந்தேகத்தில்
கோழியோடு சேர்ந்து
நானும் அலறுகிறேன்

இந்த உணர்வு கோழி வாங்கப் போன எல்லோருக்கும் வந்திருக்கும்.

அதே போல், பல வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் ஒருவனுக்கு எல்லாமே புதிதாய்த் தெரிகிறது. எல்லா அடையாளங்களும் மங்கி மறைந்து புதிய அடையாளங்கள் புறப்பட்டு விட்டன. தன்னுடைய சொந்த ஊரே அந்நியமாகத் நோற்றம் அளிக்கிறது. அப்படியே திரும்பி விடுகிறான் .

பூக்கடை முக்கோடு திரும்பி விட்டேன்
யார் செத்த கண்ணீர் அஞ்சலியிலோ
ஊர் செத்த காட்சி

என்று முடிக்கும் போது , அடடா என்று மனம் அங்கலாய்க்கிறது.

ஏற்கனவே பரவலாக அறியப்பட்டிருக்கும் கவிஜி இன்னும் இன்னும் புதிய சிகரங்களைத் தொடுவார் எனும் நம்பிக்கை இருக்கிறது.

அதற்கான உரமும் இருக்கிறது அவரிடம்.

வாழ்த்துக்கள்.

பக்கம். 178
விலை ரூ. 150
தொடர்பு : 88072 15457

- காமு

Pin It