அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் அவ்வை. அரிது அல்ல கொடிது. மானிடராய் பிறத்தலை விட கொடிதானது அரவாணியாய் பிறத்தல். பிறத்தலை வட வாழ்வது மகா கொடிது. அராவாணிகளின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என ‘அவன் - அது - அவள்’ என்னும் நாவல் மூலம் உணர்த்தியுள்ளார் யெஸ். பாலபாரதி. ஆண், பெண், அரவாணியைக் குறி[க்கும் விதமாக ‘அவன்,அவள்,அது’ என்பர். இங்கு ‘அது’ என்பது அஃறிணையாக அரவாணியைக் குறிக்கிறது. ஆசிரியரோ ‘அவன்- அது - அவள்’ என்பதன் மூலம் ‘அது’வென ஆண் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார். அவனிடமுள்ள அது விலக்கப்பட்டால், நீக்கப்பட்டால், கழிக்கப்பட்டால் ‘அவள்’ ஆகிவிடுகிறாள் என்கிறார். அரவாணியை உயர்தினையாகவே காட்டியுள்ளார்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ‘கோபி’ என்னும் வாலிபன் தன்னுள் எழுந்த பெண் உணர்வை அறிந்து குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளதததால் விழுப்புரம் வழியாக மும்பையை அடைந்து முழுமையாக அரவாணியாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது வரை நாவல் நீள்கிறது. ‘கோபி’ என்பவன் ‘கோமதி’ யானாள் என ஓர் அரவாணியை மையப்படுத்தி நாவல் எழுதப்பட்டாலும் அரவாணிகள் உலகம் எப்படி பட்டது, எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு மோசமானது என பல அரவாணிகளின் மூலம் விளங்கச் செய்துள்ளார்.

கோபியாக வீட்டில் இருக்கும் போது அவன் தன்னை ஒரு பெண்ணாகவே நினைத்து வாழ்கிறான். ஆணாக பிறந்தாலும் ஒரு பெண்ணே என்று முடிவெடுக்கிறது மனம். பெண் உடையை அணிந்து மகிழ்கிறான். அரவாணிகளோடு நட்பு கொள்வதையே விரும்புகிறான். அறிந்த குடும்பத்தினர் மறுக்கின்றனர். வெறுக்கின்றனர். அடிக்கின்றனா. பேய் பிடித்திருப்பதாக பேயோட்டியை வைத்து விரட்டுகின்றனர். பெற்ற பிள்ளையானாலும் உற்ற உறவானாலும் வீட்டினரே அரவாணியாவதை ஏற்பதில்லை என்கிறார் . கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவர்களாலும் கேலியும் கிண்டலும் தொடர்கிறது. சரவணன் என்னும் ஒரு நண்பன் மட்டும் ‘கோபி’ யின் மனநிலையைப் புரிந்து கொண்டு உதவுகிறான்.

விழுப்புரம் கூவாகம் விழாவிற்கு செல்லும் போது ‘கோபி’யை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்தது , விழுப்புரத்தில் ஓர் அரவாணி கடை கேட்கும் போது கடைக் காரரால் தாக்கப்பட்டது , புகார் கொடுத்த பின்னும் காவல் துறை புகாரை ஏற்காமல் அடித்து துன்புறுத்துவது, மும்பைக்கு அரவாணிகளோடு பயணிக்கும் போது தொடர்வண்டியில் பிற பயணிகளால் கேவலப்படுத்தப்படுவது, ‘சுந்தாp’ என்னும் அரவாணி திருமணம் செய்து கொண்டாலும் கணவனால் கைவிடப்பட்டு தற்கொலை செய்து கொள்வது, தாயம்மாவிடம் நிர்வாணம் செய்து கொண்டதால் புண் ஆறாததால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டு கிட்னி பாதித்தது, ‘நதியா’ என்னும் அரவாணி மரணமடைந்தது என நாவல் முழுக்க அரவாணிகளுக்கு நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட இன்னல்களை , இம்சைகளைக் காணமுடிகிறது. அரவாணி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை. அவர்களுக்குள் எழும் மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும் வேதனையுடனும் வாழும் அரவாணிகளை புறக்கணிப்பதைத் தவிர்த்து அங்கீகரிக்க வேண்டும்.

நிர்வாணம் செய்த பிறகே அரவாணி முழுமை அடைகிறார். நிர்வாணம் செய்தல் என்பது ஆண் குறியை அகற்றுவதேயாகும். நிர்வாணம் செய்வது ஒரு சடங்காகவே அரவாணிகளிடையே உள்ளது. நிர்வாணம் இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று அரவாணிகள் முறைப்படி தாயம்மாள் என்னும் அரவாணி மூலம் அகற்றப்படுவது. இரண்டாவது முறை மருத்துவர்களால் செய்யப்படுவது. இரண்டும் ஆபத்தானது எனினும் வேறுபாடு உண்டு. ‘தாயம்மா கையில் பண்ணினனு வையு, அழகு அதிகமாகும், மார் பெரிசாகும் , மயிரு மொளைக்கறது நின்னு போயிடும். . . ஆனா வலி தெரியும், அத தாங்குத சக்தி வேணும் . அப்படி இல்லைனா. . . டாக்டர்கிடடயே பண்ணிக்க் என்று தாயம்மாவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நதியா போன்றவர்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறியும் ‘கோமதி’ தாயம்மா கையாலே துணிந்து நிர்வாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். நிர்வாணம் செய்யும் முறையை வாசிக்கும் போது நெஞ்சும் கனக்கிறது.

யெஸ். பாலபாரதி ராமேஸ்வரத்துக்காரர். பிழைப்புக்காக மும்பைச் சென்றவர். அங்கு இருந்தவர். இதனால் தமிழ், இந்தி என்னும் இருமொழிகளையும் அறிந்தவர். அராவாணிகள் குறித்து எழுத வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் உந்துதலுடன் அரவாணிகளுடன் உரையாடிவர் . உறவாடியவர். அரவாணிகளின் மொழியையும் தெரிந்தவர். தமிழ்,இந்தி , அரவாணி மொழி என கையாண்டு நாவலைக் கொண்டு சென்றுள்ளார். ஆனாலும் வாசிப்பில் சிக்கல் எதுவுமில்லை. புரிகிறது. அரவாணிகளுடனான பிரச்சனைகளை அழுத்தமாக கூறியுள்ளார். மும்பையில் வசித்த காரணத்தால் மும்பையின் பகுதிகளையும் நாவலில் காட்டி காட்சியாக விரியச் செய்கிறார். அரவாணிகளின் நிலையையும் அறியச் செய்துள்ளார்.

அரவாணி என்பதை விட திருநங்கை என குறிப்பிடுவதையே விரும்புகிறார் என நாவல் உறுதிப்படுத்துகிறது.

‘தமிழகத்தில் காண்பது போலல்லாமல் . . . எங்கு காணினும் திருநங்கைகளின் கூட்டத்தை மும்பையில் தான் காண முடிந்தது. அவர்களை அமமக்கள் மதிப்பதும், திருமணவிழா குழந்தைக்குப் பெயர் சு{ட்டு விழா, புதிய கடை திறப்பு விழா போன்ற காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே , திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்வதும் வித்தியாசமாகப் பட்டது” என முன்னுரையில் குறிப்பிட்டவர் நாவலிலும் தமிழ்நாட்டை விட மும்பையில் அரவாணிகள் மதிக்ப்படுவதையும் மனிதராக பாவிப்பதையும் பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு அளவிற்கு மும்பையில் அரவாணிகள் கேலி செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தை விட்டு விலகினாலும் சமூகத்தால் விலக்கப்பட்டாலும் ஒரு சமூகமாக வாழ்ந்து வருபவர்கள் அரவாணிகள். குடும்பமாகவும் வாழ்கிறார்கள். அவர்களுக்குள்ளும் உறவு உண்டு. புதியதாக வருபவர்களை மகளாக தத்து எடுத்துக் கொள்கின்றனர். அம்மாவின் அம்மாவாக ‘நானி’ (பாட்டி)யும் உண்டு. அக்கா, தங்கை உண்டு. குருவும் உண்டு. கோமதிக்கு அம்மாவாக தனம் பாத்திரமும் அக்காவாக சுசீலா பாத்திரமும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது. அரவாணிகளுக்கு ஆண் துனை ஆகாது என நாவல் உணர்த்துகிறது. கணவனால் கைவிடப்பட்டதாக ‘சுந்தாp’ என்னும் அரவாணியையும் படைத்துள்ளார். நாவலின் நாயகியான கோமதியானவளும் கணவனால் துன்புறத்தப்படுவதாகவே காட்டப்பட்டுள்ளது. ‘இனி என்ன பண்ண முடியும்? பொட்டயாப் பொறந்ததே தப்பு . அதுலயும் கல்யாணம் காடச்pன்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை காலத்துக்குன்னு. முடியற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாமல் போகுதோ. . . அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால் பாய்ஞ்சுடுவேன்’ என்று நாவலின் இறுதியில் கோமதி இருப்பது அரவாணிகளின் வாழ்க்கை தோல்வியலேயே முடியும் என்பதையே காட்டுகிறது.

கோபி வீட்டை விட்டு வெளியேறுவதில் இருந்து நாவல் தொடங்குகிறது. இரண்டாம் அத்தியாயம் பின்னோக்கி இராமேஸ்வரத்தில் நடப்பதாக உள்ளது. ஆறாம் அத்தியாயம் வரை இவ்வாறு மாறி மாறி செல்கிறது. ஏழாம் அத்தியாத்தில் இருந்து நாவல் ஒரே நேர்க் கோட்டில் பயணிக்கிறது. பின்னோக்கி சில அத்தியாயங்களை மட்டும் அமைந்ததில் சிற்ப்பம்சம் எதுவுமில்லை.

“சிறப்புப் பேருந்தே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால். . . வழக்கமான பேருந்துகளின் நிலை பற்றி சந்தேகம் வந்தது. எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் அந்த இயந்தி[ரகளுக்கு மட்டும் கட்டுப்படியாகமால் போகும் ரசகியம் யாருக்குத்தான் புரிந்திருக்கிறது் என நாவலின் இடையே அரசையும் சாடி தன் இயல்பான குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘அவள் - அது - அவள்’ என்னும் இந்நாவல் அரவாணிகள் பற்றிய நாவலிலேயே தனித்து விளங்குகிறது. அரவாணிகளின் உலகத்தை வாசகர்களுக்கு எடுத்து வைத்துள்ளது. அரவாணிகளின் வலிiயும் வேதனையையும் கூறியதுடன் அவர்களின் உணர்வையும் புரிந்து கொள்ள கோருகிறது. ‘பெண்களாகவும் இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு’ என முன்னுரையில் குறிப்பிட்டது போலவே அரவாணிகளுக்கு வாழ்க்கை உண்டு என்கிறது நாவல். யெஸ். பாலபாரதிக்கு சமூகம் மீது காpசனம் மிகுதியாகவே உள்ளது என அவர் படைப்புகள் மூலம அறிய முடியும். தற்போது அரவாணிகள் பால் அவர் கவனம் திருமப்p அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது போற்றத்தக்கது.

சமத்துவபுரம்

கழிவுநீர் சுத்தம் செய்ய

அதே கருப்பன்

என்னும் ஹைக்கூ மூலம் பரவலாகப் பேசப்பட்ட யெஸ்.பாலபாரதி ஒரு நாவலையும் எழுத முடியும் என இந்நாவல் மூலம் நிரூபித்துள்ளார். ‘எரிந்து கொண்டிருந்த எல்லா சோடியம் விளக்குகளும் பேருந்து நிலையத்தில் இருளை விரட்டும் முயற்சியில் இருந்தது் என்னும் நாவலின் தொடக்கம் நம்பிக்கையுடனுள்ளது. இது அரவாணிகளின் வாழ்வின் இருளை விரட்டும் என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. 

 வெளியீடு:  தோழமை 5டி பொன்னம்பலம் சாலை கே கே நகர் சென்னை 600078

 விலை - ரூ. 120

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It