தெற்கு ஆசிய அரசுகளும் சமூகத்தை மனிதத் தன்மையற்றுப் போகச் செய்தலும்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் சென்னையில் 27.8.2011 அன்று நடைபெற்றது. "போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்ற'த்தின் தமிழ்நாட்டு மாநிலக் குழு இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்தது. பல துறையை சேர்ந்த கருத்தாளர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்தியாவில் தொடரும் மரண தண்டனையை எதிர்த்தும், இலங்கையில் தொடரும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
கண. குறிஞ்சி – பி.யு.சி.எல். : “வரும் 2011 செப்டம்பர் மாதம் நடைபெறும் அய்.நா. கூட்டத்தில் இலங்கை பற்றிய போர்க் குற்ற விசாரணை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை விடுத்தால், 2011 அக்டோபரில் அய்ரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புகளிடையே சித்திரவதைகளுக்கெதிரான கூட்டம் வரவிருக்கிறது. அதிலும் இலங்கை தப்பித்தால், அடுத்த ஆண்டு 2012இல் அய்.நா.வின் கூட்டம் திரும்பவும் நடைபெறும். எனவே, இலங்கை அரசு போர்க் குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முடியாது.
“அண்மையில் எனக்கு 10 நாட்கள் ஈழப்பகுதிகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே அனைத்துப் பகுதிகளும் சிங்கள ராணுவமயமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் முக்கியத் தொழில்களான விவசாயமும் மீன்பிடி தொழிலும் முடக்கப்பட்டுள்ளன. எங்கும் சிங்களமே முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில்கூட தமிழில் புகார் கொடுக்க முடியாது. ராணுவ அதிகாரிகளே கவர்னர்களாக, அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.''
ஆஷிஸ் குப்தா – பி.யு.டி.ஆர். : “கருணை மனுவை பரிசீலிப்பதில் 12 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த மூன்று கைதிகளும் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தண்டனையை நிறைவேற்ற தற்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் உத்தரவு கள், ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு வழி வகுக்கின்றன. தண்டனை நிறைவேற்றப்படுவதில் ஏற்படும் கால தாமதம், தண்டனை குறைக்கப்படுவதற்கு போதுமானது என்று நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. மரண தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுவை முடிவு செய்வதில் ஏற்படும் நீண்ட கால தாமதத்தைப் பற்றி நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. இம்மூன்று கைதிகளின் உயிரையும் காக்குமாறு ஒட்டுமொத்த தமிழக மக்களும் அரசிடம் முறையீடு செய்கின்றனர். ஒட்டு மொத்த சமூகமே கருணையும் இரக்கமும் காண்பிக்கும்பொழுது, ஜனநாயக அமைப்பின் உயரிய நோக்கங்களும் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.''
பேராசிரியர் மணிவண்ணன் – சென்னை பல்கலைக்கழகம் : “கடந்த அறுபது ஆண்டுகளாக சிங்கள இலங்கை அரசு இனப் போரையும், சமூகப் போரையும் தமிழர்கள் மீது தொடுத்துள்ளது. அதன் உச்ச கட்டமாக 2009இல் உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்கவிடாமல் தடுத்து, தமிழர்கள் மீது போரைத் தொடுத்தது. 3 லட்சம் தமிழர்களை சிறைச்சாலை போன்ற முகாம் என்ற கொட்டடியில் அடைத்தபோது நாம் வேடிக்கைப் பார்த்ததைத் தவிர, போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போரை நிறுத்துவதில் அக்கறை காட்டாமல், இலங்கை அரசு கூறிவந்த பொய்யான 60 ஆயிரம் பொதுமக்களை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான போர் என்ற வாதத்தையே இந்தியாவும் அப்படியே கூறியது. ஆனால், போர் முடிந்த சில நாட்களிலேயே அங்கிருந்த மக்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது. ஆனால், இலங் கையும் இந்தியாவும் 60 ஆயிரம் மக்கள் என்று பொய்யான தகவல் கூறியதற்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை.
“இலங்கையில் நடைபெற்றது கடைசிப் போர்' என்று சிங்கள அரசு கூறுகிறது. ஆனால், அரசியல் போருக்கு என்றுமே முடிவில்லை. ஆயுதப் போர் வேண்டுமõனால் முடிந்திருக்கலாம். 100 ஆண்டுகள் ஆனாலும் அரசியல் உரிமைகளை இழந்தவர்கள் அதனைப் போராடி வென்றே தீர்வார்கள். இந்திய அரசாங்கம் தனது விருப்பப்படி இலங்கை விஷயத்தில் நடந்து கொள்ள முடியாது. நாம் நமது கோரிக்கை களையும், எண்ணங்களையும் நிறைவேற்றத்தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறோம். இந்தியா, "இலங்கைப் போர் தொடர்பான வெள்ளை அறிக்கையினை' தாக்கல் செய்தே ஆக வேண்டும். ஆனால், அதற்காக நாம்தான் போராட வேண்டும். போராடாமல் அரசியலில் எதுவும் கிடைக்காது. போராடித்தான் பெற வேண்டும். நாம் சிங்கள ஜனநாயகவாதிகளிடமும் உறவை உருவாக்கி, அவர்களையும் நம் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் சிங்களர் உரிமையை பிடுங்கப் போவதில்லை; நமக்குரிய உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். அதற்காகத்தான் பேசுகிறோம். நமது தமிழினத்திற்கு நடந்த கொடுமை, வேறு எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாது.''
வழக்குரைஞர் சந்திரசேகர் – ஏ.பி.சி.எல்.சி. : “சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் காப்பாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. பேரறிவாளன் விஷயத்தில், வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட 9 வோல்ட் பாட்டரியை வாங்கியதாக ஒரு காவல் துறை அதிகாரியிடம் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், ராஜிவ் காந்தி கொலை வழக்கை "தடா' சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இயலாது என்று தீர்ப்பளித்தது. "தடா' சட்டத்தின் கீழ் மட்டுமே, பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்ததைப் போல, ஒரு காவல் துறை அதிகாரியிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகும். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் மற்ற வழக்குகளுக்கு அது செல்லுபடியாகாது. ஆனால், கெடுவாய்ப்பாக, காவல் துறை அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதித்தனர். இது, நீதிமன்றத்தால் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
“பல்வேறு விதமான மரண தண்டனைகளை ஆராய்ந்து, தூக்கு தண்டனை மட்டுமே மிகக் குறைவான வலி உண்டாக்கக் கூடிய தண்டனை முறை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. குறைந்த வலியுடன் தூக்கிலிடுவதற்கு, இந்த தண்டனை முறையில் நிபுணத்துவம் பெற்ற நபரும், எந்தவித குறைகளற்ற தூக்கிலிடும் வசதி முறைகளும் தேவைப்படுகின்றன. இவை இரண்டுமே வேலூர் சிறையில் இல்லை. இது போன்ற ஒரு சூழலில், இம்மூவரையும் தூக்கிலிடுவது, அவர்களை சாகும் வரை வதைக்குள்ளாக்கும் ஒரு செயலாகும். மேலும் இது, அய்.நா. அவையின் மனித உரிமை விதிமுறைகளுக்கு புறம்பானது. 1995 ஆம் ஆண்டு ராஜ முந்திரியில் இரண்டு தலித் இளைஞர்களை, மரணக் கொட்டடியில் இருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றிய எனது சொந்த அனுபவத்தின் படி, மூன்று முக்கியப் புள்ளிகள் அவர்களுக்கு உதவி புரிந்தன. அவை : 1. இரண்டாம் முறையாக கருணை மனு தாக்கல் செய்தது 2. சத்திய மூர்த்தியின் தலித் அடையாள அரசியல் 3. அப்போதைய இந்தியப் பிரதமரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ரஜினி கோத்தாரியின் அரசியல் தந்திர முயற்சிகள் ஆகியவையாகும். இந்த மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு என்னுடைய யோசனைகள் : 1. இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்யும் வழியை கண்டறிவது 2. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, குறைந்த வலியுடன் தூக்கிலிடுவதற்கு தேவைப்படும் தேர்ச்சி பெற்ற வல்லுநர் மற்றும் வசதிகள் இந்தியாவின் எந்த சிறையிலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி வழக்கு தொடுப்பது. மேலும், இது அய்.நா. அவையின் மனித உரிமை விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதை நிறுவுவது.''
தியாகு – தமிழ்த் தேச விடுதலை இயக்கம் : “ராஜிவ் காந்தி படுகொலைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை பல முறை வாசித்துள்ளேன். அதில் பல முரண் பாடுகள் உள்ளதை காண முடிகிறது. ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னால் கருத்தில் கொள்ள வேண்டியவை : 1. குற்றவாளியின் வயது (இளைய வயதினருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது) 2. கடந்த காலத்தில் செய்த குற்றச் செயல்கள் (முதல் முறை குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது) 3. குற்றவாளி வெளியில் வந்தால் சமூகத்திற்கும் மக்களுக்கும் அச்சம் ஊட்டுவதாக இருக்கும் என்பதற்கான ஆதாரம். கெடுவாய்ப்பாக, உச்ச நீதிமன்றம் இந்த உண்மைகளை கருத்தில் கொள்ளாமல், கொல்லப்பட்டவரின் புகழ் மற்றும் பதவியை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
“நீதிமன்றம் மரண தண்டனையை "அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே வழங்கப்படும் என சொல்கிறது. ஆனால், "அரிதிலும் அரிதான' என்பதன் வரையறை என்பது நீதிபதியைப் பொருத்ததாகவே உள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதி வாத்வா, நீதிபதி தாமஸ் பல இடங்களில் ராஜிவ் காந்தியை புகழ்ந்துள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது, நடுநிலையாக இருக்க வேண்டும். தமிழர்கள் தங்களின் ஆற்றலை உணர்ந்து, இந்த மூன்று தமிழர்களின் நீதிக்காகப் போராட வேண்டும். இம்மூவரின் உயிர் நம் உயிர்.''
நீதிபதி எச். சுரேஷ் – ஓய்வு பெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி : “பல காலமாக மரண தண்டனைக்கு எதிராக இயங்கி வரும் நான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கிறேன். இது, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணானது. மரண தண்டனை என்பது அரசே ஒரு மனிதனை கொல்வதன்றி வேறொன்றுமில்லை. ஆனால், ஓர் உயிரைக் கொல்லும் உரிமை எந்த அரசிற்கும் இல்லை. இன்று உலகில் உள்ள அறுபது விழுக்காடு நாடுகள் மரண தண்டனையை முற்றாக நீக்கியுள்ளன. இந்தியாவும் அதுபோல் மரண தண்டனையை முழுவதுமாக நீக்க இதுதான் சரியான நேரம்.
“ஒருவனை மரண பயத்தில் வைத்திருப்பது என்பது பெரும் கொடுமையாகும். இப்படி இருபது ஆண்டுகள் மரண பயத்தில் அவர்களை வைத்திருந்ததுடன் இல்லாமல் இப்போது அவர்களை தூக்கில் வேறு போடுவோம் என்பது, சர்வதேச சட்டத்திற்கு முரணானது. 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் கருணை மனுக்களை கிடப்பில் போட்டதற்கு, இந்த அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். சுவீடன் நாட்டில் குற்றத்தை உறுதி செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. தண்டனை வழங்கும் அமைப்பில் பேராசிரியர்களும், மனித உரிமையாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும், வழக்குரைஞர் களும் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளுடன் நேரடியாக பேசுவார்கள். குற்றவாளிகளின் குடும்பத்தோடு அவர்கள் கலந்துரையாடுவார்கள். குற்றவாளிகளின் சமூகப் பங்களிப்பு, சமூகத் தொடர்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டே தண்டனை முடிவு செய்யப்படும். அங்குள்ள சட்டப்படி, நீதிபதி தன்னிச்சையாக தண்டனை விதித்துவிட முடியாது. அதுபோன்ற சட்ட அமைப்பு இந்தியாவிலும் வர வேண்டும்.
“குஜராத் படுகொலையை அடுத்து நடந்த விசாரணைக்காக நானும் அந்தக் குழுவில் குஜராத் சென்றேன். அந்த விசாரணை முடிவில் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில், "அது ஓர் இனப்படுகொலை' என்று குறிப்பிட்டோம். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கடுத்த முறை ஒரு சந்திப்பில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில், இதுபோன்ற "இனப்படுகொலை' வழக்குகளை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளலாம் எனக் கேட்டார். அய்.நா.வின் இனப்படுகொலைக்கு எதிரான சட்டங்கள் போன்று இந்தியாவிலும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றேன். மோசமான இனப்படுகொலைகளில் ஏற்பட்ட அனுபவத்தினால் ருவாண்டாவிலும், யூகோஸ்லாவியாவிலும் இதுபோன்ற இனப்படுகொலைக்கெதிரான சட்டங்கள் உள்ளன.
“போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை செய்த எந்த ஒரு தனி மனிதனுக்கும் எதிராக, உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் வழக்கு தொடுக்க முடியும். இங்கிலாந்தில் உள்ள சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தில் 2002இல் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து வழக்கு தொடுத்துள்ளனர். அது இன்னமும் நரேந்திர மோடி இங்கிலாந்து செல்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற வழக்கை ராஜபட்சே மீது உலகின் உள்ள எந்த நாட்டிலும் தொடுக்க முடியும். தேவைப்பட்டால் அதுபோன்ற வழக்கிற்கு ஆலோசனை வழங்கவும், பங்கு பெறவும் நானும் தயாராக உள் ளேன். அது, ராஜபட்சேவின் வெளிநாட்டுப் பயணங்களை முடக்கிப் போட்டுவிடும்.''
– நம் செய்தியாளர்