ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதி மன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரின் (முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின்) தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் பதினோரு ஆண்டுக்காலம் நிலுவையில் வைக்கப்பட்டு, 2011 ஆகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்ட பின் அவர்கள் மூவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும் என்னும் கோரிக்கையின் அடிப்படையிலான போராட்டம், தமிழகமெங்கிலும் பல்வேறு கட்சிகளாலும் அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு கருத்து நிலைகளையும் அரசியல் சார்புகளையும் உள்ளடக்கிய இந்த இயக்கம், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது முற்றிலும் அறிவுசார்ந்த வழியிலே செல்ல வேண்டும் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாது. இதன் பொருள், பரந்துபட்ட மக்கள் அறிவுசார்ந்த, தர்க்கரீதியான விளக்கங்களையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதல்ல. மாறாக, இயக்கங்களை நடத்திச் செல்பவர்கள், நடத்திச் செல்லும் தகுதி தங்களுக்கு உண்டு எனக் கருதுபவர்கள், அறிவுசார்ந்த விளக்கங்களைத் தரும் கடமை தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது என்பதுதான்.

இந்தக் கடமையை அவர்கள் செய்யத் தவறியதாலோ, சரிவரச் செய்யாததாலோ, மரண தண்டனை ஒழிப்பு என்னும் பிரச்சனை – குறிப்பாக மேற்சொன்ன மூவருக்கு அத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்னும் பிரச்சனை – முற்றிலும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு ஏராளமான இளைஞர்களை (ஆண்களையும் பெண்களையும்) தள்ளியிருக்கிறது என்பதும், இந்தப் பிரச்சனையை குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்கான கருவியாக ஆக்கியிருக்கிறது என்பதும் சற்றுக் கவலையளிக்கின்றன.

இப்படி அதைக் குறிப்பிட்ட அரசியல் பிரச்சனையாக மாற்றியுள்ளவர்களில் ஒரு பிரிவினர், தங்களால் கடந்த சில மாதகாலமாகத் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டு வரும் ஆளும் கட்சிக்கு எந்தவிதமான பாதகமும் இல்லாமல் போராட்டத்தை நடத்துவதில் மிக கவனமாகச் செயல்படுவதையும் தன்னார்வ நிறுவனங்களைப் போல, ஆட்சியில் இருப்பவர்களிடம் "லாபி' (lobby) செய்வதிலும் ஈடுபட்டிருந்ததைப் பார்த்து வந்தோம். மேலும், தப்பித் தவறியும்கூட யாரும் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கோ, தமிழக முதல்வருக்கோ எதிராக முழக்கம் எழுப்பக்கூடாது என்று சில அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தி வந்ததையும் பார்த்தோம்.

குறிப்பிட்ட பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு மாநில முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவரையோ, அதிகார மய்யங்களிலுள்ள பிறரையோ அணுகும்போது, அவர்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் தர வேண்டும். அது, மக்களாட்சி மரபுக்கு எதிரானதல்ல என்பதை வலியுறுத்தும் அதேவேளை, முதலமைச்சரும் அதிகார மய்யங்களிலுள்ள பிறரும் இந்திய அரசியல் சட்டத்தில் அவர்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும்படி கோரிக்கை வைப்பதுதான் அந்த மரபுக்கு உரியதேயன்றி, தனிப்பட்ட முறையில் அவரது "கருணை'யை எப்பாடுபட்டேனும் பெற்றுவிடலாம் எனச் செயல்படுவது அல்ல என்பதையும் கூற விரும்புகிறோம்.

மேற்சொன்ன மூவருக்கும் கருணை வழங்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேறிவிடுமோ என்று அஞ்சிய "தினமணி' நாளேடு, 29.8.2011 அன்று நாளிட்ட இதழில் வெளியிட்டுள்ள தலையங்கம், சட்டமன்றத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், கருணை வழங்கும் இறுதி முடிவு மாநில ஆளுநருக்கே உண்டு என்று கூறி, தமிழக முதலமைச்சரை "இக்கட்டிலிருந்து' பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டது.

"தினமணி' ஆசிரியரைவிட சாதுரியமும் சாமர்த்தியமும் மிக்கவர்களின் ஆலோசனைகளுக்குப் பஞ்சமில்லை என்பதால், "தினமணி' ஆசிரியருக்கு இருந்த அச்சத்தை முதலமைச்சரே போக்கிவிட்டார்! 28.8.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில், மூவரது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், அதனை மீறி தமிழக அரசாங்கத்தால் செயல்பட முடியாது என்றும், அவர்கள் மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரையே அணுகலாம் என்றும் அறிவித்தார். மறுநாள் (29.9.2011) அம்மூவருக்கும் கருணை காட்டும்படி குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து, அது ஒரு மனதாக நிறைவேறும்படி செய்தார்.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டம், மிக உணர்ச்சிகரமான, மிகத் துயரமான, மிக அவலமான நிகழ்ச்சிகளைச் சந்தித்திருந்த சூழலில்; மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, பா.ஜ.க. தலைவர்கள், இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் ஆகியோர் வெளிப்படையாகக் கருத்துக் கூறி வரும் சூழலில்; முற்போக்குச் சிந்தனையுள்ளவர் எனக் கருதப்பட்டு வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, பொதுவாக இந்தியச் சட்டங்களையும், குறிப்பாக "தடா' சட்டத்தையும் பற்றி ஏதும் அறியா சாமானியக் குடிமகனைப் போலப் பேசியுள்ள சூழலில்; மூவரின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனது இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் அதிர்ச்சி தரும், அவலமிக்க ஆனால் அவப்பேறாக, தர்க்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் முரணான முடிவை இளம் பெண்மணி செங்கொடி மேற்கொண்டுவிட்ட சூழலில்; மூவரின் உயிர் வாழும் உரிமைக்காக சட்டரீதியான நடவடிக்கைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில்; இடதுசாரிக் கட்சியொன்றைச் சேர்ந்த பிருந்தா காரத், தனது கட்சி "சட்டத்தின் வழி செல்லும்' என்னும் கருத்தைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்ற சூழலில், "தினமணி' தலையங்கமும், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் அறிவிப்பும் வெளிவந்தன.

இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161

இனி, "தினமணி' தலையங்கம் குறிப்பிடும் அரசியல் சட்டப் பிரிவு 161அய் எடுத்துக் கொள்வோம். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுவதில்லை. மாறாக, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு மட்டுமின்றி, தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்து, தண்டிக்கப்பட்டவருக்கு முழு மன்னிப்பு வழங்கவும் மாநில அரசாங்க நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்று இச்சட்டப் பிரிவு கூறுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின்படி கருணை வழங்கும் அதிகாரம், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் தரப்பட்டுள்ள ஒன்றுக்கொன்று இணையான அதிகாரமேயன்றி (paraller power), படிநிலை அதிகாரமல்ல (hierarchial power). அதாவது, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கான மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரம், உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இருப்பது போன்றது அல்ல. சம்பந்தப்பட்டவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தண்டிக்கப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் மாநில ஆளுநருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்கள் அனுப்பலாம். அந்த மனுக்கள் மீது இந்தியக் குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை, மாநில ஆளுநர் காத்திருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை.

நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, அவர் கருணை மனு ஏதும் அனுப்பாத நிலையிலும்கூட, மனித உரிமை அமைப்புகளின், அவரது உற்றார் உறவினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, தமிழக அரசாங்கத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தியாகு, லெனின், ரங்கசாமி, குருமூர்த்தி ஆகியோர் சார்பிலான கருணை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாநில ஆளுநராலேயே குறைக்கப்பட்டது. அதேபோல, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மேற்சொன்ன மூவரோடு சேர்த்து உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப் பெற்ற நளினியின் மரண தண்டனையும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவரும் அவர் சார்பில் பிறரும் அனுப்பிய கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தபோதே, மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவைப் பரிசீலித்து, அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. (மேற்சொன்ன அனைத்து தண்டனைக் குறைப்புகளும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்தவையே.)

தண்டனைக் குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்கு இந்திய அரசியல் சட்டப் பிரிவு 72, குடியரசுத் தலைவருக்கு வழங்கும் அதிகாரம், மாநில ஆளுநருக்கு அரசியல் சட்ட பிரிவு 161 ஆல் வழங்கப்படும் இதே போன்ற அதிகாரத்தைப் பறிப்பதோ, அதில் குறுக்கிடுவதோ இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், குடியரசத் தலைவரோ, ஆளுநரோ தாமாகவே சுயேச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்னும் கேள்வியை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. இந்தியக் குடியரசுத் தலைவரும் மாநில ஆளுநரும் முறையே மத்திய, மாநில அரசாங்கங்களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும். அந்த அறிவுரை அவர்களைக் கட்டுப்படுத்தும் (The President and the Governor must act on the advice of the Central and State Governments respectively and that this advice is binding on them.) என்று உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் உறுதிபட, தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது (Matu Ram vs Union of India [1981] 1 SCC 107; Kehar Singh vs Union of India [1989] 1 SCC 204). ஆக, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம், மத்திய அமைச்சரவைக்கும் மாநில அமைச்சரவைக்குமே உண்டு.

எனினும், கருணை மனுக்களின் அடிப்படையில் தண்டனைக் குறைப்பைச் செய்வதோ, கருணை மனுக்களை நிராகரிப்பதோ எந்த அடிப்படையில், எந்தக் காரணங்களின் பொருட்டுச் செய்யப்படுகின்றன என்பதை இதுவரை எந்த மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை. மு. கருணாநிதியைக் குறை சொல்வதற்கு இன்னொரு முகாந்திரம் வேண்டும் என்பதற்காகவே, தமிழக முதல்வர் நளினியின் தண்டனையைக் குறைத்தும், மற்றவர்களின் மரண தண்டனையை உறுதி செய்தும் மு. கருணாநிதி ஆளுநருக்கு அனுப்பிய பரிந்துரையை பகிரங்கமாக்கியுள்ளார்.

எப்படியிருப்பினும், இந்தியக் குடியரசுத் தலைவரால் மேற்சொன்ன மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், மாநில முதலமைச்சரால் இந்த விடயத்தில் தலையிட முடியாது என்று தமிழக முதல்வர் கூறுவது, சட்டத்தின்படி சரியானது அல்ல.

மரண தண்டனை ஒழிப்புமாநில அரசுக்குரிய அதிகாரங்கள்

ராஜிவ் கொலை, பிற எல்லாக் கொலைகளையும் போலவே, அதிலும் குறிப்பாக அவருடன் சேர்ந்து மாண்டுபோன காவல் துறையைச் சேர்ந்தவர்களின் கொலையைப் போலவே, கொடூரமான குற்றம் என்பதையும், கொலையுண்ட அவர்களது குடும்பத்தினருக்கு அவை ஈடு செய்ய முடியாத இழப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தி யுள்ளன என்பதையும் நாம் மறுக்கவில்லை. தனிநபரை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் – விவேகமான அரசியலுக்கோ, வெகுமக்களின் ஆதரவு சார்ந்த போராட்டங்களுக்கோ மாற்றீடு அல்ல என்னும் கருத்தில் உண்மையுண்டு.

இந்திய ஊடகங்களில் ஒன்றே ஒன்று மட்டுமே (Financial Times), ஓர் உண்மையை வெளிப்படையாகக் கூறியது : அரசு மேற்கொள்ளும் வன்முறைகளே அரசு சாராத அமைப்புகள், தனிநபர்கள், அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு வித்திடுகின்றன. இந்திய அமைதிப் படை இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் இழைத்த மனித உரிமை மீறல்களை, அப்படையின் அதிகாரிகளிலொருவராகச் சென்றவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எல்லா விடயங்களிலும் மு. கருணாநிதியை எதிர்க்கின்ற, அவரை விமர்சிக்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவரால் கருணை மறுக்கப்பட்ட மூவருக்குக் கருணை காட்டும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறும் போதும்கூட மு. கருணாநிதியைக் குறை கூறவும் விமர்சிக்கவும் தவறவில்லை.

மு. கருணாநிதி நினைத்திருந்தால், நளினியோடு சேர்த்து மற்ற மூவரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்க முடியும் என்று தமிழக முதல்வர் கூறியதற்கு, அப்படி செய்திருந்தால் தனது ஆட்சி நிலைத்திருக்காது என்று பதில் சொல்லியிருக்கிறார் மு. கருணாநிதி. கொள்கைகளைவிடப் பதவிகளே முக்கியம் என்று நேர்மையாக ஒப்புக் கொண்டதற்காக அவரைப் பாராட்டித்தான் தீர வேண்டும். 2009இல் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், ஆறு மணி நேர உண்ணா நோன்பு போன்ற நாடகங்களும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்பதையும் அவர் ஒப்புக் கொள்வார் எனக் கருதுகிறோம்.

இப்போது நாம் அரசியல் சட்டப் பிரிவு 257(1) என்ன கூறுகிறது என்பதைக் காண்போம் :

257. Control of the Union over States in certain cases

(1) The executive power of every State shall be so exercised as not to impede or prejudice the exercise of the executive power of the Union and the executive power of the Union shall extend to the giving of such directions to a State as may appear to the Government of India to be necessary for that purpose.

மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலோ, அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலோதான் மாநில அரசாங்கத்தின் அதிகாரம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவின் சாரம்.

மத்திய அரசாங்கம், 1991 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பிய மேற்சொன்ன கடிதம்தான் அரசியல் சட்டப் பிரிவு 257(1)அய் சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்துவிட்டால், மாநில ஆளுநர் ஏதும் செய்ய முடியாது என்னும் விளக்கத்தைத் தருகின்றதேயன்றி, அரசியல் சட்டம் அல்ல. இத்தகைய விளக்கம் எதனையும் இதுவரை உச்ச நீதிமன்றமும் வழங்கியதில்லை. இதற்கு மாறான விளக்கங்களையும் தீர்ப்புகளையுமே அது வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக –

1. ஆந்திராவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களான கிஷ்ணாகவுடா, பூமையா ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவின் மீது கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது : ஒரு கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாலேயே, குடியரசுத் தலைவரின் அதிகாரமோ, ஆளுநரின் அதிகாரமோ தீர்ந்து போய்விட்டது என்பதாகி விடாது. மாறிய சூழ்நிலைமைகளில் மற்றொரு கருணை மனுவைப் பரிசீலிப்பதிலிருந்து குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ தடுக்கக்கூடியது ஏதும் இல்லை (SCC 157, 1976 [1] ).

2. மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால், மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே எங்கு இறையாண்மை உள்ளதோ, அங்கு இறையாண்மை அதிகாரமும் இருந்தாக வேண்டும். கருணையோ, தண்டனைக் குறைப்போ வழங்குவதற்கு குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் முறையே 72 இலும் 161இலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இறையாண்மை அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது (2003[7] SCC 121).

3. இந்த அதிகாரம் முழுமுற்றானது, தளைப்படுத்தப்பட முடியாதது. எந்தச் சட்டத்தாலும் குறுக்கப்பட முடியாதது என்று இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது (State of Punjab vs Joginder Singh, 1990(2) SCC 661).

1991 மார்ச் 5 இல் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பிய கடிதம், நிர்வாகம் தொடர்பான ஆணையேயன்றி (directive), அது இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டப் புத்தகங்களில் உள்ள சட்டத்தின் (statute) தகுதியைக் கொண்டது அல்ல. இப்போதுள்ள இந்திய அரசியல் சட்டத்தின்படி, சட்டப் புத்தகங்களின்படி, எந்தவொரு சட்டத்தாலும், மாநில ஆளுநரின் இறையாண்மை கொண்ட, அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவோ, குறுக்கவோ, தடுக்கவோ முடியாது. இதைத்தான் மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆக, பேரறிவாளன் முதலிய மூன்று பேர் மாநில ஆளுநருக்கு புதிய கருணை மனுக்களை அனுப்புவார்களேயாயின், அவற்றின் அடிப்படையில் அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம், தமிழக அரசாங்கத்துக்கு உண்டு என்பது அய்யத்துக்கு இடமற்ற உண்மை.

மேலும், அரசியல் சட்டப் பிரிவு 161இன் கீழ்தான் மாநில அரசாங்கத்தால் கருணை வழங்கவோ, தண்டனைக் குறைப்புச் செய்யவோ முடியும் என்பதில்லை. இந்தியத் தண்டனைச் சட்டத்திலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன :

Section 54 of Indian Penal Code : Commutation  of sentence of death : In every case in which sentence of death shall have been passed, the appropriate Government may, without the consent of the offender, commute the punishment for any other punishement provided by this code.

மரண தண்டனை வழங்கப்பட்டவருக்கு, அவர் கேட்காமலேயே சம்பந்தப்பட்ட அரசாங்கம் தண்டனைக் குறைப்பு செய்யலாம் எனக் கூறும் இந்தப் பிரிவு "சம்பந்தப்பட்ட அரசாங்கம்' என்பதற்கான விளக்கத்தை பரிவு 55ஏ–வில் தருகிறது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கான மரண தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டப் பிரிவு 161, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 54, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433 ஆகியன வழங்குகின்றன. அரசியல் சட்ட பிரிவு 161, மாநில அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம் பிரயோகிக்கப்படக்கூடிய விடயத்தோடு தொடர்புடைய எந்தவொரு சட்டத்துக்கும் எதிராகக் குற்றம் இழைத்ததாகத் தண்டிக்கப்பட்டுள்ள எந்த ஒரு நபருக்கும் தண்டனைக் குறைப்போ, தண்டனை நீக்கமோ வழங்கலாம்.

இந்த மூவர் உள்ளிட்ட 26 பேர் மீது "தடா'வின் கீழ் (அது மத்திய அரசாங்கச் சட்டம்) தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்களில் ஏழு பேர் நீதிமன்றம், ராஜிவ் காந்தி கொலையிலும் அதற்கான சதியிலும் ஈடுபட்டவர்கள் என்றும் (இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302, 120ஏ) தீர்ப்பளித்தது. அவர்களில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கியது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுபவர்களின் தண்டனையைக் குறைப்பது, மாநில அரசாங்கத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததும் மாநில அரசாங்கம்தான். தண்டனை பெறுவதற்கான குற்றம், தண்டிக்கப்பட்ட இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள் வருபவையே இந்த மூவரின் கருணை மனுக்கள் என்பது தெளிவு.

மரண தண்டனையும் சட்டத்தின் ஆட்சியும்

பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் அறவழியில் போராடும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு, இந்த கோரிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை, நீதிமன்ற நடைமுறையை, உச்ச நீதிமன்றத்தின் தேவையை மறுக்கின்றன என்று கூறுகிறார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தலைவர்களிலொருவர் கொல்லப்பட்டால், கொலை செய்தவர்களுக்கு கருணை காட்டுமாறு கேட்பார்களா என்றும் கேட்கிறார். ஏறத்தாழ இதேபோன்ற கேள்விகளைத்தான் பா.ஜ.க. தலைவர்களும் இந்து முன்னணியினரும் கேட்கின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி பொது மக்களில் சிலரும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கத்தான் செய்கிறார்கள். எனவே, இவற்றுக்கு நாம் முறையாக பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சட்டத்தின் ஆட்சி என்று எதைச் சொல்வது? ஆளும் கட்சிகளின் வசதிகளுக்கு ஏற்றவாறு வளைக்கப்படும் சட்டமா? இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு திருத்தப்பட்ட அரசியல் சட்டப் பிரிவா? பாபர் மசூதி தகர்ப்பின்போது நரசிம்மராவின் கையில் செயலற்று இருந்த சட்டமா?

இந்திய உயர் நீதிமன்றத்தால் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கது என்று கூறப்பட்ட பிறகும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசாங்கங்களாலேயே திரும்பப் பெறப்பட்ட "தடா', "பொடா' சட்டங்களா? (அந்தச் சட்டங்களை ஒருபோதும் திரும்பப் பெறக் கூடாது என வழக்காடிய கட்சிகளே பா.ஜ.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும்). அவற்றின் இடத்தை நிரப்புவதற்குக் கொண்டு வரப்பட்ட அதே போன்ற கொடூரத்தன்மை கொண்ட "சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்தச் சட்டம் 2004' என்னும் சட்டமா?

காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைச் செய்து கொண்டிருக்கும் "ஆயுதப் படைகள் (சிறப்பு) அதிகாரச் சட்டமா'? மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கவும், நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் வரன்முறையற்ற சுரண்டலைச் செய்யவும் வழி வகுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டமா? பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் சுரண்டிக் கொழுக்கும் பொருட்டு மக்களின் நிலங்களைப் பறப்பதற்காக மத்திய அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டமா?

உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் சில சட்டங்கள் கொண்டு வரப்பட்டதும், சில சட்டங்கள் நீக்கப்பட்டதும் மக்கள் போராட்டங்கள் வழியாகத்தானே. "தகவல் அறியும் உரிமைச் சட்டம்', "ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்', "அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம்' போன்ற மத்திய அரசாங்கம் தானாகவே கொண்டு வந்தவை அல்ல; பல்வேறு குடிமை உரிமை அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் கிளர்ச்சிகள் வழியாக வந்தவைதானே.

ராஜிவ் காந்தியை கொலை செய்ய உடந்தையாக இருந்தவர்கள் என உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டவர்களைத் தூக்கிலிடக் கூடாது என்று கூறுபவர்கள், தங்கள் கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டால் இதே போன்ற நிலைப்பாடு எடுப்பார்களா என்னும் கேள்வி, கருணை கோரும் அந்தக் கட்சிக்காரர்கள் அனைவரும் கொலைகளை ஆதரிப்பவர்கள் என்னும் அனுமானத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகிறது. மேலும், இந்தக் கோரிக்கையை எழுப்புபவர்களில் கணிசமானவர்கள் எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என்பதையும் தங்கபாலு போன்றவர்கள் மறந்து விடுகிறார்கள்.

ராஜிவ் காந்தியின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தாலும் தீர்ப்பளிக்கப்பட்டவர்களைத் தூக்கிலேற்றாவிட்டால், இதுபோன்ற கொலைகள் எதிர்காலத்தில் நடப்பதைத் தவிர்க்க முடியாது என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட இருவர் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், அது ராஜிவ் காந்தியின் கொலையைத் தடுத்து நிறுத்தவில்லை. இப்போது ஒருவரைத் தூக்கிலிடுவது, யாரோ ஒருவர் எதிர்காலத்தில் எப்போதோ செய்யக்கூடும் என்று அனுமானிக்கப்படும் கொலையைத் தடுப்பதற்கான, அத்தகையவருக்கான முன்னெச்சரிக்கையாக எப்படி அமையும்?

மரண தண்டனையும் இயற்கை நீதியும்

தமிழக சட்டமன்றம் 29.8.2011 அன்று நிறைவேற்றிய "வரலாற்றுச் சிறப்பு மிக்க' தீர்மானத்தை ஒட்டி, என்.டி.டி.வி. அன்றிரவே ஒரு விவாதத்தை நடத்தியது. சுப்பிரமணிய சாமியும் ராஜிவ் கொலை வழக்கில் முதன்மைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த கார்த்திகேயனும் இன்னும் ஓரிருவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே அறுதியானது. மாற்றப்பட முடியாதது என்று வாதிட்டனர்.

நீதிமன்றங்கள், அவை அப்பழுக்கற்றவையே என வைத்துக் கொண்டாலும், அவற்றின் விசாரணைப் பரப்புக்குள் வராதவை எத்தனையோ உண்டு. அதன் முன் கொண்டு வரப்படும் சாட்சிகளும், சாட்சியங்களும் நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்றவையோ, சரியானவையோ என்று கூற முடியாது. நியாயம், நீதி, மனித தர்மம் என்பன சட்டப் புத்தகங்களிலும், நீதிபதிகளின் விளக்கத்திலும் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. எனவேதான், நீதிமன்றங்களால் கருத்தில் கொள்ளப்படாத விடயங்களையும் பரிசீலித்து கருணை வழங்கும், தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரங்கள் அரசியல் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் தரப்பட்டுள்ளன.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள ஒருவர், தனது குற்றத்துக்கு வருந்த வேண்டும், அப்போதுதான் அவர் கருணை மனு செய்வதற்குத் தகுதியுடையவராகிறார். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தொடர்ந்து கூறி வருவதால், கருணை கேட்கும் உரிமையே அவர்களுக்கு இல்லை என்று கார்த்திகேயன் கூறுகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் "தடா'வின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட நெறிகளையும், இயற்கை நீதி என்னும் அடிப்படைக் கோட்பாட்டையும் அப்பட்டமாக மீறும் விதிகளைக் கொண்ட சட்டம் அது என்பதை காங்கிரஸ் "சட்ட ஆலோசனைக் குழு'வின் தலைவராக இருந்தவரும், பின்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவருமான (உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி) ரங்கநாத் மிஸ்ராவே கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என்று உரத்த குரல் கொடுத்தார்.

பாசிச நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய கொடூரமான விதிகளைக் கொண்ட "தடா'வின் கீழ், ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் மீது நடந்த விசாரணைகளின்போது, அந்தக் கொடிய சட்டம் அனுமதிக்கும் சுதந்திரங்களைக்கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு "தடா' சிறப்பு நீதிமன்றம் வழங்கவில்லை. இந்திய வரலாற்றில் முன்னுவமை இல்லாத வகையில், குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றம், மிக அடிப்படையான நீதி முறைகளைக் கூடப் பின்பற்றவில்லை. குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டவர்களிடம் அவர்களுக்குத் தரப்படப் போகின்ற தண்டனையின் அளவு என்ன என்பதைச் சொல்லி, அது குறித்த அவர்களது பதிலைக் கேட்டறிவது குற்றவியல் விசாரணை நடைமுறைகளிலொன்று.

மேலும், குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையில் குறைந்தது ஒரு நாள் அவகாசமாவது இருக்க வேண்டும்; அந்த 26 பேரும் குற்றவாளிகள் என்னும் முடிவுக்கு வந்ததற்கு, அவர்கள் ஒவ்வொருவருக்குமுரிய தனித்தனி காரணங்களைக் கூற வேண்டும்; குற்றச் செயலில் அவரது பங்கேற்பின் அளவு, அது தண்டனையை அதிகரிப்பதற்கானதா, குறைப்பதற்கானதா என்பதை அவர் பரிசீலித்து ஒன்றுடனொன்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் செய்யவில்லை. அவர்கள் அவைரும் குற்றவாளிகள் என்பதற்கு அனைவருக்கும் பொதுவான "சிறப்புக் காரண'ங்களைக் கூறினார். அந்தத் தீர்ப்பை உற்சாகமாக வரவேற்றவர்களிலொருவர் இன்றைய தமிழக முதல்வர்.

அப்படியிருந்தும் உச்ச நீதிமன்றம், அந்த 26 பேரையும் "தடா' குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. அதாவது அவர்கள் பயங்கரவாதச் செயல்களையோ, சீர்குலைவு நடவடிக்கைகளையோ செய்தார்கள் என்று அரசாங்கத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று தீர்ப்புக் கூறியது. ஆனால், அவர்களில் ஏழு பேர் கொலைக் குற்றத்தில் பங்கேற்றவர்கள் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அந்த எழுவரில் நால்வருக்கு மரண தண்டனை வழங்கியது. எனினும், அவர்கள் ராஜிவ் காந்தியை மட்டுமே கொலை செய்ய விரும்பினார்களேயன்றி, அவரோடு சேர்ந்து குண்டு வெடிப்பில் மாண்டு போனவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்னும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும் கூறியது.

அந்தத் தீர்ப்புமே சர்வதேசச் சட்ட நெறிகளுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்துக்கும் எதிரானதுதான். ஏனெனில், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 302, 120பி ஆகியவற்றின் கீழ் (கொலைக் குற்றம், சதிக் குற்றம்) அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலிஸ் கண்காணிப்பின் கீழ் இருந்தபோது அவர்களிடமிருந்து கறக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை முக்கியச் சான்றாக எடுத்துக் கொண்டது. "தடா' சட்டத்தின்படி, அச்சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்கள், வேறு சட்டங்களில் கூறப்படும் குற்றங்களையும் செய்திருந்தால், அவற்றையும் சேர்த்து "தடா' நீதிமன்றமே விசாரணை செய்யும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும்போது, போலிஸ் காவலின் போது பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றாகக் கொள்ளக் கூடாது என்று இந்திய சாட்சியங்கள் சட்டம் (Indian Evidence Act) கூறுகிறது. (போலிஸ் காவலின்போது சித்தரவதைகளும் அச்சுறுத்தல்களும் நிகழும் என்பதுதான் இதற்குக் காரணம்).

ஆனால், "தடா' சட்டம், இந்த அடிப்படையான இயற்கை நீதியைக் கொண்ட இந்திய சாட்சியங்கள் சட்டத்தைப் புறக்கணிக்கிறது. மேற்சொன்ன நால்வர் "தடா' சட்டத்தில் கூறப்படும் குற்றங்கள் எதனையும் செய்யவில்லை என்றும், இந்தியத் தண்டனைச் சட்டம் கூறும் குற்றங்களைத்தான் புரிந்தார்கள் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், இந்தியத் தண்டனைச் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படாததும், "தடா' சட்டத்தின் கீழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதுமான குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை – 60 நாள் போலிஸ் காவலில் இருக்கும்போது கறக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை – ஏற்றுக்கொள்ளத்தக்க சான்று எனத் தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியதற்கு நீதிபதிகள் வழங்கிய வேறு சில காரணங்களும் கூட, இயற்கை நீதிக்கு எதிரானவை. அவை குறித்து விரிவாக எழுதுவதற்கு இங்கு இடம் போதாது.

எது சரியான தீர்ப்பு?

எனினும் ஒரு முக்கிய உண்மையை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும். கல்பனா நாத் ராய் என்பவர் (அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்) "தடா' வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையை நடத்திய உச்ச நீதிமன்ற ஆயம் (Bench), இந்திய சாட்சியங்கள் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தரும் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டி, அவரை விடுதலை செய்தது. அது நடந்தது ராஜிவ் கொலை வழக்கில் வேறொரு ஆயம் தீர்ப்புக் கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்.

ஆக, ஒவ்வொரு ஆயமும், அதிலுள்ள நீதிபதிகளும் ஒரே சட்டத்திற்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுத்து, ஒரே குற்றத்துக்கு வெவ்வேறு தண்டனைகளைக் கொடுக்க முடிகின்றது. அதாவது ஒரே வகையான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பொருந்துகிற புறநிலையான தீர்ப்பு அளவுகோல் இல்லை. குற்ற வழக்குகள் எல்லாவற்றிலும் இதுதான் உண்மை என்றாலும் (திருட்டு வழக்கில் ஒரு நீதிபதி ஒருவருக்கு ஆறுமாத சிறை தண்டனை வழங்கலாம்; இன்னொரு நீதிபதி இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கலாம்), சாதாரணக் குற்ற வழக்குகளில் குறிப்பிட்ட நீதிபதியின் அகநிலை சார்ந்த தீர்ப்புகள் குற்றம் சாட்டப்பட்டவரின் உயிருடன் விளையாடுவதில்லை. மரண தண்டனை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களில் இதுவுமொன்று.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நால்வரில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் முறையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் எண். 1,2,3,18 ஆவர். இவர்கள் எல்லோரிலும் இளையவர் பேரறிவாளன். அவரது விடயத்தில் சட்டமும் நீதியும் எவ்வாறு தம்மைத் தாமே கேலிச் சித்திரமாக்கிக் கொண்டன, இழிவுபடுத்திக் கொண்டன என்பதை யாரேனும் அறிந்து கொள்ள விரும்பினால், அவருக்கு பேரறிவாளன் எழுதியுள்ள "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' (மோ. ஸ்டாலின் நினைவு நூலகம் தஞ்சாவூர்) என்னும் நூலைப் பரிந்துரைக்க விரும்புகிறோம். 

சட்டமும் நீதியும் நமது நீதிமன்றங்களில் எண்ணற்ற முறை இழிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, 2001 டிசம்பர் 13இல் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நடத்தப்பட்ட "பயங்கரவாதிகளின் தாக்குதல்' வழக்கில் அப்சல் குரு என்னும் காஷ்மீரி குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகும். பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதே அந்தத் தாக்குதல் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் (அதற்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகியன ஆதரவளித்து வந்தன) கூறப்பட்ட அந்த நிகழ்வில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அய்ந்தா, ஆறா என்பதைக்கூட, நமது தேசபக்த அரசாங்கங்களால் இதுவரை கூற முடியவில்லை.

அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய – பாகிஸ்தான் உறவு மேலும் இறுக்கமானதாகி, இரு நாடுகளும் நமது படையினரை பல்லாயிரக்கணக்கில் காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாதக்கணக்கில் குவித்து வைத்திருந்தன. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு இரு நாடுகளும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்தன. அணு ஆயுதப் போர் மூளுமோ என்னும் அச்சத்தை உருவாக்கிய நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரம் குறித்த முழுமையான நீதி விசாரணை ஒருபுறம் இருக்கட்டும், நாடாளுமன்ற விசாரணைகூட இதுவரை நடத்தப்படவில்லை. பல நூறு இந்தியப் படைவீரர்களைப் பலி கொண்ட அந்தப் போர் ஆயத்தம், பன்னூறு கோடி ரூபாய்களை விழுங்கிய அந்தத் தயாரிப்பு, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் ஆகியன குறித்து எந்த ஹஸாரேவும் உண்ணா நோன்பு இருக்கவில்லை.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவி செய்ததாகக் கைது செய்யப்பட்டு "பொடா' நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். இன்னொருவரின் மரண தண்டனை உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மூன்றாவது நபரான அப்சல் குருவிடமிருந்து காவல் துறையால் கறக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் போலியானது என்று உச்ச நீதிமன்றமே கூறியது. அப்சல் குரு மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று கூறிய அதே உச்ச நீதிமன்றம்தான், "இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளை அமைதிப்படுத்த' அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஒரு அப்பாவி காஷ்மீரி முஸ்லிமின் உயிர் "இந்திய சமூகத்தின் உணர்வு'களை சாந்தப்படுத்தி விடுமா? பேரறிவாளனும் அப்சல் குருவும் தாங்கள் செய்யாத குற்றத்துக்கு வருந்த வேண்டுமா? இவ்விடயத்தில் 1980 இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பொன்றைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. அந்த ஆண்டில்தான், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட ஆய்வு ஆயம் (Constitutional Bench), மேற்சொன்ன மூவரைப் போன்ற ஏராளமானோரை உளவியல் நோய்க்கு ஆளாகச் செய்யும் தீர்ப்பொன்றை வழங்கியது. அந்த ஆயத்தில் இருந்த பெரும்பான்மையான நீதிபதிகள், மரண தண்டனைக்கு அரசியல் சட்ட ரீதியான ஒப்புதல் தந்தனர்.

அதேவேளை, "அரிதினும் அரிதான வழக்குகளில்' (rarest of rare cases) மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினர். ஆனால், "அரிதினும் அரிதான வழக்கு' என்பதற்கு அவர்கள் எந்த வரைவிலக்கணமும் தரவில்லை. இன்றுவரை உச்ச நீதிமன்றம் அதற்கு வரையறை வழங்கவில்லை. எனவே, "அரிதினும் அரிதான வழக்கு' என்பதும் மரண தண்டனை வழங்குதல் என்பதும் அந்தந்த நீதிபதியின் அகநிலை சார்ந்த விளக்கத்திற்கு உட்பட்டதாகிவிட்டது. ஓர் ஆயம் இரு குறிப்பிட்ட நிகழ்வை "அரிதினும் அரிதானது' என்றும் மற்றொரு ஆயம் "இல்லை, இல்லை இது சாதாரணமானது' என்றும் கருதலாம். "சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். ஆனால், சிலர் சமம் என்பதற்கும் மேலானவர்கள்' என்று கருதலாம். மரண தண்டனைக்கு அரசியல் சட்ட ஒப்புதல் அளித்த நீதிபதிகளில், நமது முதல்வரால் அடிக்கடி பாராட்டப்படும் சர்க்காரியா அவர்களும் இருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மரண தண்டனை குறித்த மேற்சொன்ன தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஏறத்தாழ அதே நாள்களில்தான் இன்னொரு வழக்கும் வேறொரு ஆயத்தின் விசாரணைக்காக வந்தது. பஞ்சாபில் நடந்த கொலை நிகழ்வொன்றுக்குப் பொறுப்பானவர்கள் என்று நான்கு பேர் குற்றம் சாட்டப்பட்டனர். ஒருவர் போலிசாருடன் நடந்த "மோதலில்' கொல்லப்பட்டார். மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். அமர்வு நீதிமன்றம் அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறி, மூவருக்கும் மரண தண்டனை வழங்கியது. அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தின. அவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். அவை நிராகரிக்கப்பட்டன. அதன் பின் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். எஞ்சிய இருவரில் ஒருவர் தூக்குத் தண்டனையை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றார். அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மூன்றாவது நபரைத் தூக்கிலிடுவதற்கான ஆயத்தம் நடந்து வந்தது. அவரும் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் அவர்களின் தலைமையில் அமைந்த ஆயம், அந்தக் குற்றவாளிகள் மூவரும் செய்த குற்றத்தின் தன்மை ஒரே அளவிலானது, ஒரே தன்மையானது, எனவே, அவர்கள் மூவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் அடிப்படையில் ஒரே அளவிலான தண்டனையைப் பெறக்கூடியவர்கள்தான் என்றும், ஒருவருக்கு மரண தண்டனையும் மற்றவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்குவது பொருத்தமானது அல்ல என்று கூறியது.

அதேவேளை, மூன்றாவது குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதால், இந்தியாவிலுள்ள அதிகாரப் பகிர்வைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் அந்த விடயத்தில் தானே முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் அதை மீண்டும் பரிசீலிப்பதுதான் உசிதமானது என்னும் முடிவுக்கு வந்தது. அந்த ஆயத்திலிருந்து மற்றொரு நீதிபதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், உச்ச நீதிமன்றத்துக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன மூன்றாவது குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று கூறினார். எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின்படி, அந்த விடயம் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. (AIR 1982 Supreme Court 849 Judgement on Writ Petition No. 7453 of 1981).

அப்சல் குருவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவில் கையெழுத்திட்டவர்களிலொருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான ஒய்.வி. சந்திரசூட் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்ன தீர்ப்பை, ராஜிவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நால்வருக்குப் பொருத்திப் பார்க்கலாம். இதில் நளினி கி–1. அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, கி–2, கி–3, கி–18 ஆகிய சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவதுதான் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்பதை நிலை நாட்டும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கை, தமிழகத்தில் முன்னுவமை இல்லாத அளவுக்கு பரந்துபட்ட மக்களை ஒன்று திரட்டியிருக்கிறது. இந்த மக்கள் சக்தியை சரியான வழியில் ஆற்றுப்படுத்தி, ஜனநாயக உரிமைகளையும் வாழ்வாதார உரிமைகளையும் பெறுவதற்கான திசையில் செலுத்துவதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தவும், குறுகிய அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு – சமூக அக்கறை கொண்ட இளம் தலைமுறையினர் இரையாகிவிடக் கூடாது. மரண தண்டனை முறைக்கு எதிரான போராட்டம், மேற்சொன்ன மூவரின் உயிர் வாழும் உரிமைக்காக மட்டுமே ஆனது அல்ல; அது நீதிக்கு எதிரானது அல்ல; மாறாக, அரசின் திட்டமிட்ட வன்முறைக்கு எதிரானது என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

Pin It