refugees 600

புலம்பெயர்ந்தோர் என்ற சொல்லை ஆங்கிலத்தில் உள்ள ‘Diaspora’ என்ற சொல்லுக்கு இணையாக இப்போது பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு கலைச்சொல்லாகக் கையாளுகிறோம். சிலர் இதனை அலைவு இலக்கியம் என்று சொல்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் என்ற சொல்லைவிட ‘புகலிட இலக்கியம்’ (Exile Literature) என்ற தொடர் பொருத்தமானது என்று சிலர் விவாதிக்கின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெருக்கடியால் வேறொரு நாட்டிற்குச் சென்று புகலிடமாக தஞ்சம் அடையக் கூடியவர்களால் எழுதப்படக் கூடிய இலக்கியம் என்கின்றனர். உலகளாவிய நிலையில் யூதர்கள் இஸ்ரேலில் இருந்து பாபிலோனியாவுக்குப் புலம்பெயர்ந்ததுதான் உலக வரலாற்று முதல் புலம்பெயர்வு என்று ஐரோப்பிய மரபில் சொல்லப்படுகிறது. ஆனால் நம்முடைய இந்தியமரபில் - தமிழ் மரபில் புலம்பெயர்வு என்பது சங்ககாலத்திலேயே அயலக வாணிகம் சார்ந்து இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக கிரேக்க ரோமானிய நாடுகளுக்கு நிகழ்ந்துள்ளது. சோழர் காலகட்டத்தில் அரசியல் ரீதியாக, அரசியல் ஆதிக்கம் காரணமாக கீழ்த்திசை நாடுகள் முழுவதும் தமிழர்கள் மானமிக்க நிலையிலேயே புலம்பெயர்ந்துள்ளதைப் பார்க்கிறோம்.

காலனியஆதிக்க காலகட்டத்தில் உலக வரலாற்றில் அகராதியில் தமிழன் கூலியாக அடையாளப்படுத்தப்பட்டு கீழ்த்திசைநாடுகள் தென்ஆப்பிரிக்கா உள்பட பலதேசங்களுக்குத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். தமிழர்களுடைய உழைப்பு சுரண்டப்பட்டு மிகப்பெரிய வானளாவிய கட்டிடங்களும், மலையகத் தேயிலைத் தோட்டங்களும், காஃபி எஸ்டேட்களும், இரப்பர் தோட்டங்களும் உலகெங்கும் உருவாக்கப்பட்டன. எனவே காலனிய காலகட்ட புலப் பெயர்வு என்பதும் தமிழர்களுடைய புலப்பெயர்வுகளுள் மிக முக்கியமானது. இந்தக் காலனியப் புலப்பெயர்வு குறித்து பாரதி ‘பிஜித்தீவில் ஹிந்து ஸ்திரிகள்’ என்ற கவிதையினை எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் ‘துன்பக் கேணி’ சிறுகதையில் இலங்கைக்குச் சென்று கண்டித் தேயிலைத்தோட்டத்தில் தம் உடலையும் உயிரையும் பறிகொடுத்த தென்தமிழக மக்களின் அவலநிலையினைப் பதிவுசெய்துள்ளார். அகிலன் தனது ‘பால்மரக் காட்டினிலே’ எனும் நாவலில் மலேசிய இரப்பர் காட்டில் தமிழக மக்களின் இரத்தம் எவ்வாறு உறிஞ்சப் பட்டது என்பதைப் பதிவு செய்துள்ளார். இவையெல்லாம் இந்திய விடுதலைக்கு முந்திய மற்றும் 1970கள் வரையிலான தமிழ் இலக்கியத்தில் உள்ள புலம் பெயர்ந்தோர் வாழ்வியல் பதிவுகள். ஆனால் எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்தனர்.

இலங் கையில் ஏற்பட்ட ஒரு கடுமையான அரசியல் நெருக்கடி காரணமாக இனவெறிவாதம் தலைதூக்கியதால் ஈழத் தமிழர்கள் உலகில் உள்ள பல பாகங்களில் புலம்பெயர்ந்து சென்றார்கள். ஏறத்தாழ ஐரோப்பாவின் பெரும்பகுதி களுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியா, நார்வே, ப்ரான்ஸ், கனடா, ஜெர்மனி, இலண்டன், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர் களுடைய படைப்புகள்தான் இன்றைக்கு உலகளாவிய நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளாகப் பெரிதும் அடையாளப்படுத்தப்படுகின்றன. 1970,80களில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் எழுதக்கூடிய சிறுகதைகள் எத்தன்மையின, அவை எப்பொருள் பற்றியன, எவ்வாறான எடுத்துரைப்பினைக் கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்றைக்குப் புலம்பெயர்ந்து எழுதக்கூடிய ஈழத்து எழுத்தாளர்கள் எனப் பட்டியல் போட்டால், இங்கிலாந்தி லிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் என்ற எழுத்தாளர் மிக முக்கியமான கதைகளை எழுதி வருகிறார். விமல்குழந்தைவேல் சிறந்த சிறுகதைகளை நாவல்களை எழுதிவருகிறார். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் ஷோபாசக்தி, கலாமோகன், சக்கரவர்த்தி இவர்களெல்லாம் ஒரு புதியபாணியில் கதைகள் எழுதுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மாத்தளை சோமு மிக முக்கியமான எழுத்தாளர். அதுபோக இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள வ.ஐ.ச.ஜெயபாலன் நார்வேயில் இருந்தபோது சில கதைகளை எழுதியிருக் கிறார். நார்வேயில் இருந்து தமயந்தி என்பவரும் சில கதைகள் எழுதியுள்ளார். வானம்பாடி டென்மார்க்கில் இருந்து எழுதி வருகிறார். கனடாவிலிருந்து எழுதிவரும் சிறுகதையாசிரியர்களுள் அ.முத்துலிங்கம் மிக முக்கிய மானவர். புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் என்று நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்கின்றபோது, இவர்களெல்லாம் தவிர்க்கமுடியாத படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது வலியின் இலக்கியமாக இருக்கிறது. எவ்வாறு விளிம்புநிலை மக்களான தலித் மக்களின் எழுத்துகளும் பெண் எழுத்தும் வலியின் மொழியில் அமைந்து இருக்கிறதோ, அதுபோல புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் வலியின் மொழியில் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. இந்த எழுத்தாளர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆட்பட்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். எனவே, வரலாற்றுத் தொடர்புடைய பூர்விகமான சொந்த நிலத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு வேறொரு இடத்திற்குச் சென்று தங்களுடைய புலம்பெயர்வு வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கதைகளில் பதிவு செய்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் பெரும்பாலும் யதார்த்தம் என்று சொல்லக்கூடிய நடப்பியல் போக்கில் கருத்து மெய்ம்மையியல் (Realism) என்று எழுதப்பட்டு உள்ளன. ஆனால் பாரிஸில் இருந்து எழுதக்கூடிய எழுத் தாளர்கள் பின்நவீனத்துவப் பாணியில் எழுதுகின்றனர். குறிப்பாக கலாமோகன், சக்கரவர்த்தி போன்றோர் பின்னைநவீனத்துவம் போன்ற புதியமுறைகளில் எழுதக்கூடிய படைப்பாளிகளாக இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான சிறுகதை எழுத்து என்பது யதார்த்த மொழியில் வலியின் மொழியில் நேரிடையாக மக்களுக்குத் தம் வாழ்வியலைச் சொல்லக்கூடியவையாக அமைந்துள்ளன. புலம்பெயர்ந்தோர் கதைகள் முன் வைக்கக்கூடிய பொதுவான பிரச்சினைகளுள் ஒன்று, தாயக ஏக்கம் ஆகும். அவர்கள்தம் அன்னைபூமியைப் பிரிந்து வந்து வேறொரு நிலத்தில் இருக்கிறார்கள். இன்னும் வேர் விடாமல் ஒரு புதிய மண்ணில் பதியம் போடப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தம்முடைய சொந்த நாட்டைப் பற்றிய நினைவுகளைப் பல கதைகளில் சொல்கிறார்கள். இரண்டாவதாக

இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பெரும்பாலும் கூலிகளாக இருக்கிறார்கள். மெத்தப்படித்தவர்களாக இருந்தாலும் கூலிஉழைப்பில் ஈடுபட வேண்டிய பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. அவர்களுடைய வார்த்தையில் சொல்வதானால் நிலம் கழுவும் (தரையைச் சுத்தம் செய்தல்) வேலை, பாத்திரம் கழுவும் வேலை, பேப்பர் கொடுக்கும் வேலை - இந்த வேலைகளில்

தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக் கிறார்கள். அவர்கள் பட்டதாரியாக இருந்தபோதும் தெருவில் இருந்து விளம்பரத் துண்டறிக்கைகள் கொடுப்பது, அடுக்குமாடி வீடுகளில் செய்தித்தாள் துண்டறிக்கை போடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எனவே, அவர்கள் செக்கு மாடுகள் போல் உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்பு ஐரோப்பிய முதலாளிகளால் சுரண்டப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் சிறுகதைகளின் மூன்றாவது மிக முக்கியமான பாடு பொருள் நாடற்ற, வீடற்ற, வீதியற்ற அலைவுத்தன்மை. இவர்கள் நாடற்றவர்களாக - வீடற்றவர்களாக - தெருக்களில் அலைந்து திரியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கான சமூக வெளி என்பது ஒரு நிரந்தரமான வெளியாக இல்லை. நாடு களும் வீடுகளும் தெருக்களும் இன்றி அலைந்து திரியக் கூடிய ஒரு ‘மிதவைவெளி’யில் (Fluid Space) வாழ்கிறார்கள். மிதவை வெளியில் அலைந்து திரியக்கூடிய இந்தப் பிரச்சினை பல கதைகளில் பேசப்படுகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்களது தேசியம் என்பதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இப்போது ‘நாடுகடந்த தேசியம்’ என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. எனக்கான மொழி எது? எனக்கான தேசியம் எது? என்ற பிரச்சினை வருகிறது. இது புலம்பெயர்ந்த தமிழருடைய அடை யாளம் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கின்றன. இதை யட்டி எமது குழந்தைகள் எம் தாய்மொழியில் படிப்பதா அல்லது ஐரோப்பிய மொழியில் படிப்பதா என்கிற வகையான சிக்கல்கள் இவர்களுடைய கதை களில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கிறோம். இவை தவிர, சில கதைகளில் பாலியல் சார்ந்த பிரச்சினைகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் தனியாகப் போய் இருக்கும்போது ஒரு பக்கம் பாலியல் உணர்வே இல்லாமல் குடும்ப கஷ்டங்களில் மிகவும் சவலையாகிப் போய்விடுகிறார்கள். சில கதைகளில் இவ்வாறு போகக் கூடிய ஆண்களின் பாலியல் பிரச்சினை, தனிமனித உளவியல் நெருக்கடி பதிவு செய்யப்பட்டுள்ளன. கடைசியாக நிறவெறி பிரச்சினை. நாம் நம்முடைய

நிறம் வெள்ளையாக இருந்தாலும் அங்கு கறுப்புதான். பாகிஸ்தானியரைப் போல, அல்ஜீரியரைப் போல துருக்கியரைப்போல, ஆப்பிரிக்கரைப்போல இங்கிருந்து போகக்கூடிய தமிழர்களும் கறுப்பர்களாகக் கருதப்பட்டு தமது ஐரோப்பிய எஜமானர்களால் எப்படி நிராகரிக்கப் படுகிறார்கள் என்பது பல கதைகளில் பதிவாகியுள்ளது. எனவே, புலம்பெயர்ந்தோர் கதைகளில் இப்படி ஐந்து பிரச்சினைகள் மிக முக்கிய பிரச்சினைகளாகப் பேசப் பட்டுள்ளன. மேற்சொன்னது போல தாயக ஏக்கம், நிறவெறி, மிதவைவெளி, தேசம், மொழி சார்ந்த அடையாளச் சிக்கல்கள் இவையெல்லாம் இந்தக் கதைகளில் பேசுபொருளாக இருக்கின்றன.

இனி புலம்பெயர்ந்தோர் சிறுகதைகளின் பொது வான தன்மைகளைப் புரிந்துகொள்ளுவதற்காக சில கதைகளை மட்டும் எடுத்துக்காட்டுக்களாகக் காணலாம். முதலில் மாத்தளை சோமுவின் ‘முகம்’ என்ற கதையைப் பார்ப்போம். ஒரே முகம் இரண்டு நாடுகளில் இரண்டு விதமான மதிப்பீட்டைப் பெறுகிறது. இக்கதையின் நாயகர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நெருக்கடி காரணமாக ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து செல்கிறார். யாழ்ப்பாணத்தில் அவர் முகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர் என்றாலும், அழகான சுருட்டை முடி, வட்டமான முகம். அவர் முகத்தின் அழகைப் பார்த்து முடியைப் பார்த்து பல இலட்ச ரூபாய்கள் வரதட்சணையாகக் கொடுக்கிறார்கள். பெண்ணும் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட அழகான முகம் ஆஸ்திரேலியாவுக்குப் போகும்போது அங்கு யாருக்கும் பிடிக்கவில்லை. ஏனென்றால் அது கறுப்பு முகமாக இருக்கிறது. ஆக, தன்னுடைய ஊரில் அழகாகச் சொல்லப்பட்ட அந்த முகம் ஐரோப்பிய நாட்டில் நிராகரிப்பதைக் கண்டு அக்கதையின் நாயகன் மனம் நொந்து போகிறான். மாத்தளை சோமு இன்னொரு கதையிலும் இந்நிறவெறியின் கொடூரத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார். ஒரு தமிழ்ப்பெண் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலையில் ஐந்தரை மணிக்குக் குளித்துத் தயாராகி தெருவில் வாகனத்திற்காகக் காத்திருக்கிறாள். அப்போது அதே வழியில் இன்னொரு வண்டியில் வந்த வெள்ளைக்காரப் பெண் அவளுடைய முகத்தில் காறி உமிழ்கிறாள். ஏனென்றால் அது கறுப்பு முகம். மாத்தளை சோமுவின் ‘சொந்த சகோதரர்கள்’ என்ற கதை ஒரு ஈழத்தமிழன் வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்து போனபோது அவனைக் குடிஅமர்த்த ஏற்பாடு செய்கின்ற அவனது நாட்டைச் சேர்ந்த தமிழன், அவனிடமே பணத்தை ஏமாற்றுவதைப் படம் பிடித்துள்ளது.

அடுத்து குறிப்பிடப்பட வேண்டியது இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘றோஸா லஷ்சம்பெர்க் வீதி’ எனும் கதை. இது ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரத்தில் றோஸா லஷ்சம்பெர்க் தெருவில் நடக்கக் கூடிய கதை. ரோஷா லஷ்சம்பர்க் மிக முக்கியமான ஒரு புரட்சிப்பெண்மணி. அவர் போலந்தில் பிறந்து பல நாடுகளுக்குச் சென்று, ஜெர்மனியில் வந்து மிகப் பெரிய புரட்சியை நடத்திய மார்க்சியப் பெண்ணியவாதி. அவரது நினைவாக இருக்கக்கூடிய வீதியில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நடைபெறும் துயரம் தான் இந்தக் கதை. இலங்கையில் சொந்த நாட்டில் மிகச் சுகமாக வாழ்ந்த பெண், கணவனுக்காகத் திருமணம் முடித்த இடத்திலேயே ஜெர்மன் வந்தபோது, நள்ளிரவில் ஒரு மணிக்கு எழுந்து பாலூட்டும் கைக்குழந்தையை வீட்டிலேயே போட்டுவிட்டு, பேப்பர் போடுவதற்காக சைக்கிளில் ஒன்றரை மணிக்கு றோஸா லஷ்சம்பெர்க் தெருவில் ‘கொள்ளிவாய் பேய்’ போல் செல்கிறாள்.

பல நாட்டினர்கள் திரியும் அந்தத் தெரு மிகவும் அச்சம் தருவதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆணாதிக்க சமூகத்தில் பாலியல் வன்முறை சார்ந்த அச்சம் ஒருபக்கம். சைக்கிளை வழிமறிக்கும் காமவெறியர்களிடமிருந்து தப்பினாலும் நிறவெறி சார்ந்த அச்சம் மறுபக்கம் இருக்கிறது. ஏனென்றால் முதல் நாள் ஒரு துருக்கிப்பெண் அங்கு எரிக்கப்பட்டுள்ளார். கறுப்பர்கள் வெளியில் வர முடியாது. இப்பிரச்சினையைப் பற்றி தம்பா ஒரு அழகான கவிதை எழுதியுள்ளார். அக்கவிதை வருமாறு:

போதை ஏறிய சனிநாள் ஒன்று

மாலையோரம் ஐரோப்பிய வீதியில்

சொர்க்கம் காணும் வெண்மனிதர்கள்.

. . . . . . . . . . . . .

கற்றுக்கொள் கறுப்பு நாயே!

சாகப் பிறந்த பன்றியே

தொழுவத்தைவிட்டு ஏன் வந்தாய் வெளியே

கறுப்பு அழிந்தால் மட்டும்

புனிதம் அடையும்.

நெற்றி பிளந்து

பிடரிதெறித்து

கொட்டிப் பரவியது இரத்தம்!

நிருபமாவின் பின்வரும் கவிதையும் இதே பிரச்சினையைப் பேசுகிறது.

“அம்மா

நாங்கள் ஏன் அகதிகளானோம்?

என் தாய் நாடு எங்கே?

என் தாய் மொழி எது?

நாங்கள் ஏன் கறுப்பர்களாயிருக்கிறோம்?

அவர்களால் ஏன்

ஒதுக்கப்படுகின்றோம்

துருக்கித் தோழி ஏன் எரிக்கப்பட்டாள்?”

நிருபமா கவிதையில் மகள் அம்மாவைப் பார்த்து கேட்கக்கூடிய கேள்வி ‘றோஸா லஷ்சம்பெர்க் வீதி’ கதையில் இருப்பதைப் பார்க்கிறோம். சொந்த நாட்டிலிருந்து உயிருக்குத் தப்பிய இவர்களின் உயிர்ப் போராட்டம் புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்கிறது. இக்கதையின் தலைவி சுமதி ‘சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்தது மாதிரி’ தன் நிலையை உணர்கிறாள்.

வ.ஐ.ச. ஜெயபாலன் ‘செக்கு மாடு’ என்ற கதையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பியநாடுகளில் பேப்பர் போடக்கூடியவர்களாக கூலித்தொழிலாளிகளாக அலைந்து திரிகிறார்கள் என்பதைப் பதிவு செய்துள்ளார்.             அதேபோல வானம்பாடி எனும் எழுத்தாளர் ஜெய பாலன் வாழ்ந்த நார்வே நாட்டு ‘ஓஸ்லோ’ நகரத்தில் இருந்து எழுதிய ‘வேப்பம்பூ’ என்ற கதையும் குறிப்பிடத் தக்கது. இந்தக் கதையில் தாயின் தாலியை விற்று தங்கைகளின் திருமணத்திற்காக நார்வே வந்த ஒருவன் சொந்த நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவளுடைய தங்கை அங்கிருந்து வேப்பம்பூ கலந்த வெங்காய வடகத்தை அனுப்பி வைப்பதாக கதையில் சொல்லப்படுகிறது. இதேபோல வான் நிலாவின் ‘அன்னைபூமி’ என்ற கதையில் புலம்பெயர்ந்த குழந்தைகள் யாழ்ப்பாணம் போய் வீட்டுக் கிணற்றில் கல்போட்டு விளையாடுவதாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தேசங்களில் முறையான நுழை வுரிமை, கடவுச்சீட்டின்றி, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களும் பல சிறுகதைகளில் பதிவாகியுள்ளன. மறைந்து வாழ்தல், தப்பிச் செல்லுதல் ஆகிய நிலைகளில் அவர்கள் படும் துயரங்கள் வேதனைகள் அளவிடற் கரியன. ஜெர்மனியிலிருந்து கனடாவிற்கு அமெரிக்கக் கறுப்பன் ஒருவனின் கடவுச்சீட்டில் தப்ப முயன்று நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி இறக்கும் தமிழன் ஒருவனின் அவலநிலையை பார்த்திபன் ‘தெரியவராதது’ என்ற கதையில் குறிப்பிட்டுள்ளார்.

கலாமோகன் பாரிஸ் நகரத்திலிருந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களில் முக்கியமானவர். தொடர்ந்து எழுதக்கூடியவர். அவருடைய ‘மூன்று நகரங்களின் கதை’ மிக முக்கியமான கதை. புலம்பெயர்ந்த வாழ்க்கை யினுடைய அலைவு நிலையை - மிதவை நிலையின் - அவலத்தை அனுபவத்தைச் சொல்லுவதுதான் மூன்று நகரத்தின் கதை. இந்தக் கதையின் நாயகன் பாரிஸ் நகரில் இருக்கிறான். அவனுக்கு ஒரு தந்தி வருகிறது. அவன் அப்பா இறந்துவிட்டார். அது உண்மையா என்று தெரிந்துகொள்ள அவனுடைய கிரடிட் கார்டை எடுத்துக்கொண்டு ஒரு ஃபோன் பூத்துக்குச் செல்கிறான். அவனுடைய மாமாவுக்குப் பேசுகிறான். அவனுடைய மாமா வெளியில் போயிருக்கிறார். ஒருமணிநேரம் கழித்து வருவார். அவன் ஒரு பீர் சாப்பிட்டு வந்து திரும்பவும் ஃபோன் பேசுறான். அவனுடைய மாமா பேசுகிறார். ‘நல்லாதான் இருந்தார். திடீரென்று விழுந்தார், இறந்தார். நீ உடனே காசு அனுப்பிவை.’ காசு காசு என்றவுடன் அவனுக்கு நினைவு வருகிறது.

நான் எப்படி இந்த ஊருக்கு வந்தேன். இந்த உடல் காசால் ஆனது. என்னுடைய முதல் நகரம் யாழ்ப் பாணம். யாழ்ப்பாணத்தில் நான் பட்டதாரி ஆனேன். வேலை கிடைத்து கொழும்புக்குப் போனேன். கொழும்பு என்னுடைய இரண்டாவது நகரம். அந்த இரண்டாவது நகரத்தில் வேலை கிடைத்து வாழ்ந்த போது நான் கொடுமையாக வேட்டையாடப்பட்டு மீண்டும் முதல் நகரத்திற்கு துரத்தப்பட்டேன். முதல் நகரத்திற்கு அகதியாக வந்தபோது, என்னுடைய வீட்டில் எனக்கான ஈமச்சடங்குகள் நடத்தப்பட்டு இருந்தன. அங்கு இனக்கலவரத்தில் இறந்துவிட்டேனென எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டிருந்தன. செத்த வீட்டில் நான் சென்று பார்க்கும் போது என் நிலைமை எப்படி இருக்கும். வேறு வழியில்லாமல் மீண்டும் நான் உயிர்பிழைத்துவிட்டேன் என்று சொல்லி எல்லாக் கோயில்களிலும் பூசை செய்தனர். என்னை எப்படி யாவது காப்பாற்ற வேண்டும் என்று அங்கும் இங்கும் கடன் வாங்கி, என்னைப் பாரிசுக்கு அனுப்பிவைத்தனர். எனவே இந்த உடல் வெறும் உடல் அல்ல; காசாலான உடல். நான் பாரிஸ் நகரத்திற்கு வந்து சேர்ந்தாலும் நான் மூன்று நகரங்களில் வாழ்ந்து இருக்கிறேன். ஆனால், எனக்கு எந்த நகரமும் சொந்தமில்லை. என்னுடைய நான்காவது நகரம் எது என்பது கேள்விக் குறியாக இருக்கிறதென இக்கதை முடிகிறது.

கலா மோகன் ‘நிஷ்டை’ தொகுப்பிலுள்ள இன்னொரு மிக முக்கியமான கதை ‘தெரு’ என்பதாகும். தெருக்களைப் பற்றி விவரணையாக கதை தொடங்குகிறது. கதையின் நாயகன் சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தெருக்களில் நாய்களைப் பிடிக்கிறார்கள். நாய்களைப் பிடிப்பதைப் பற்றிய நினைவு வரும்போது, அதைப்போல் நானும் ஒரு தெருநாய்போல்தான் இருக்கிறேன் என தெருவில் அலையும் நாயகன் உணர்கிறான். பகலில் ஒரு ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துவிட்டு, வீடு இல்லாததால் இரவில் தெருத்தெருவாக சுற்றிப் பொழுதைக் கழிக்கிறான், கதைத்தலைவன். பகலில் சுமூகமாக இருக்கும் அந்தத்தெரு இரவில் அச்சம் தருவதாக இருக்கிறது. அந்தத் தெருவில் இரவில் நடந்து போகும்போது வேசிகள் நின்றுகொண்டிருக்கிறார்கள், வெவ்வேறு நாட்டு வேசிகள். அவர்களில் பலர் ஏற்கனவே பார்த்தவர்கள். இப்போது மாறியிருக் கிறார்கள். பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கிறான். தூங்காமல் நடந்து நடந்து, எங்கேயும் படுக்காமல் பொழுது விடிந்து காலையில் வரும்போது, அங்கு பிரெஞ்சு விடுதலை இயக்கத்தைச் சார்ந்த பெண்மணிகள் ‘தெரு’ என்ற பத்திரிகையைக் கையில் வைத்து விற்கிறார்கள். அதனை அவன் வாங்கிக்கொண்டு, தான் வேலைபார்க்கும் உணவகத்திற்குச் செல்கிறான். ஆக நாடுகளும் வீடுகளும் சொந்தமில்லாமல் ஒரு மிதவை வெளியில் இருக்கக் கூடிய மனிதனின் வாழ்க்கையைத் தான் கலாமோகன் இக்கதையில் சொல்லியிருக்கின்றார். அவரது ‘இரா’ என்ற கதை, ‘குளிர்’ என்ற கதை இவையெல்லாம் பாலியல் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகின்றன. தனிமனிதனின் உளவியல் பிரச்சினை எப்படிப் பாலியல் சார்ந்து அவனை அலைக்கழிக்கின்றன. அதே போல ‘நிஷ்டை’ என்ற கதை, படைப்புமனம் சார்ந்த பிரச்சினையைப் பேசுகிறது. இதில் ஒரு முக்கியமான ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. இயக்கத்தைக் கட்டுவது என்பது தனிமனித உளவியல் சிக்கல்களை, பாலியல் சிக்கல்களை மறைத்துவிட்டு சாத்தியமா என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறது. எதை எழுதுவது? தனிமனிதனின் போராட்டத்தைக் காட்டுவதுதான் படைப்பா? ஒரு தனிமனிதனுடைய உளவியல் பிரச்சினை களை, அவனுடைய பாலியல் பிரச்சினைகளைச் சொல்லுவது படைப்பு இல்லையா என்று கதையை முடிப்பார். விவாதம் போன்று ‘நிஷ்டை’ என்ற கதை நீண்டு செல்கிறது.

கடைசியாக சக்கரவர்த்தியைக் குறிப்பிடவேண்டும். சக்கரவர்த்தியின் ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற கதைத் தொகுப்பு முக்கியமானது. இந்தத் தொகுப்பில் ஈழத்தில் உள்ள பிரச்சினைகள், சகோதரக்குழுக்களில் உள்ள கருத்துவேறுபாடுகள், புலிகளுக்கும் இஸ்லாமியர் களுக்கும் உள்ள முரண்பாடுகள் இதுபோன்ற பல பிரச்சினை களை அவர் பேசியுள்ளார். ஆனால், அதே நேரத்தில் அவர் சொல்லக்கூடிய கதையினுடைய எடுத்துரைப் பியல் முறை என்பது புதுமையானது. கலாமோகனைப் போல் இவரும் ஒரு புதிய மொழியில் புதிய எடுத்துரைப் பியலைக் கையாளுகிறார். குறிப்பாக ஒரு கதையை விக்ரமாதித்தனுக்கும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளத்திற்கும் இடையே நடைபெறும் உரையாடல் முறையில் எழுதியுள்ளார். ஒரு தமிழ்ப்பெண் ஒரு சிங்களப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப் படுகிறாள். பிறகு அவள் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வரும்போது அங்குள்ள ஒரு ஏஜெண்ட் அவளைப் பாலியல் வன்முறை செய்கிறான். திரும்பி அவள் வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இப்போது அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு அப்பா யார்? இதுமாதிரியான ஒரு கேள்வியை வேதாளம் விக்ரமாதித்தனைக் கேட்பது போல ஒரு புதிய பாணியில் இக்கதையை எழுதியிருக் கிறார்.

சக்கரவர்த்தி, கலாமோகன் ஆகியோர் கதைகள் வழக்கமான புலம்பெயர்ந்தோர் கதைகளினுடைய யதார்த்தமொழியில் அமையாமல், அவை புனைவின் மொழியிலும் ஒருவிதமான ‘மாந்திரீக யதார்த்தவாதத் தன்மையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் மேற்கத்திய நாட்டு புகலிட அனுபவங்களைப் போன்று, தாய்த் தமிழ் நாட்டிலிருந்து குவைத் போன்ற அரேபிய பாலைவன நாடுகளுக்குச் செல்லும் நமது இஸ்லாமிய இளைஞர் களின் புகலிட அனுபவங்களும் மிகக் கொடுமையாக இருக்கின்றன. இதனை மீரான் மைதீன் தனது ‘மஜ்னூன்’ என்ற சிறுகதையிலும் ‘அஜ்னபி’ என்ற நாவலிலும் ஆழமாகச் சித்திரித்துள்ளார். ‘மஜ்னூன்’ சிறுகதை அப்போது தான் திருமணமான இசுலாமிய இளைஞன் ஒருவன் முறையான நுழைவுரிமைச் சீட்டின்றி அரபு நாட்டிற்குச் சென்று அகதியாக அலைந்து திரிந்து உயிர் பிழைப்பதற்காகக் குப்பை லாரியில் குப்பையாகக் கிடந்து வெளியேறியதை, அரபி முஸ்லீம்கள் தம்மைச் சுயமாகவும் பிற நாட்டு முஸ்லீம்களை ‘மற்றமை’களாகவும் காணும் போக்கின் அவலத்தை இந்நாவல் படம்பிடித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் சிறுகதை என்பது இன்றைக்குத் தமிழில் ஒரு புதிய வரவாகவும் வேறு எந்த மொழிக்கும் - எந்த ஒரு இனத்திற்கும் இல்லாத - ஒரு சிறப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் சொல்லவொண்ணா இன்னல்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதை இக்கதைகள் வலியின் மொழியில் பதிவு செய்துள்ளன.

1.            கலாமோகன், நிஷ்டை, (புகலிடச் சிறுகதைகள்) எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ், ஏப்ரல் 1999, முதற் பதிப்பு.

2.            கலாநிதி செ.யோகராசா, ஈழத்து நவீன கவிதை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2007.

3.            எஸ்.வி.இராசதுரை, அ.மார்க்ஸ் முதலியோர் (ப.ஆ.), புலம்பெயர்ந்த தமிழர் நல மாநாடு சிறப்புமலர், நிறப்பிரிகை வெளியீடு, 1994.

4.            சு.குணேஸ்வரன், அலைவும் உலைவும், தினைப்புனம் பதிப்பகம், யாழ்ப்பாணம், முதற்பதிப்பு, செப்.2009.

5.            மாத்தளை சோமு, மாத்தளை சோமுவின் சிறுகதைகள், தொகுதி-2, இளவழகன் பதிப்பகம், சென்னை, ஜுலை 2003.