பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதக் கதையில் திரெளபதி சபதம் செய்வதோடு முடிகிறது. அவன் ஏன் பாரதப் போரைப் பாடவில்லை என்பதற்குப் பலரும் பலவிதமாய் விளக்கம் தந்திருக்கின்றனர். பாஞ்சாலி சபதம் தன்னளவில் முழுமைபெற்ற காவியமாகவே விளங்குகிறது. எனவே, பாரதி போரைப் பாடாமைக்கு நாம் காரணங்களைத் தேட வேண்டியிருக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டில் பாரதப் போர் தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் எனப்படும் உதியன் சேரலாதன், பாரதப் போரில் இருதரப்புப் படைகளுக்கும் சோறிட்டான் என்றொரு ஐதீகம் நிலவுகிறது. புறநானூறு இரண்டாம் பாடலில்

முரஞ்சியூர் முடிநாகராயர்,

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழிய
பெரும்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என்று பாடுகிறார்.

paanjali sabathamஅகநானூறு 233ஆம் பாடலில் மாமூலனார்,

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇ யிருந்தாங்கு

என்று பாடுகிறார்.

உதியன் கொடுத்த பெருஞ்சோறு பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. மயிலை சீனி.வேங்கடசாமி, பாண்டியர்களில் பஞ்சவர், கௌரியர் என்கிற கிளைக்குடியினரிடையே போர் நடந்தபோது, உதியன் இரு படைக்கும் உணவு வழங்கியிருக்கலாம் என்று கருதுகிறார். சேஷையரோ பாரதப் போரில் பங்குபெற்றுச் சுவர்க்கம் சென்ற தனது முன்னோர்களின் நினைவாக உதியன் பெருஞ்சோறு கொடுத்தான். இதையே பாரதப் போரில் இருதரப்புப் படைகளுக்கும் உதியன் பெருஞ்சோறு கொடுத்ததாகப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது என்கிறார். பாரதப் போர் ஆண்டுவிழா நாளன்று நடத்தப்பட்ட நாடகத்தின் இறுதியில் நிகழ்ந்த விருந்தே மேற்படி பெருஞ்சோறு என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார். நீலகண்ட சாஸ்திரியோ உதியனின் முன்னோன் ஒருவன் பாரதப் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் உணவு அளித்ததாக ஓர் ஐதீகம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு உணவு அளித்தவன் உதியனே என்று ஏற்றிக் கூறுவது கவிமரபாகும் என்று கூறுகிறார். வேறு சிலர் அப்பாடல் உதியன் காலத்தில் எழுதப்பட்டதல்ல என்றும் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டது என்றும் கருதுகின்றனர்.

Paradigmatic War எனத்தக்க பாரதப் போரில் இரு தரப்பினர்க்கும் உதியன் பெருஞ்சோறிட்டான் என்பது கதை. ஒரு போரில் இவ்வாறு இதுபோல இருபுறத்தில் உள்ளவர்களுக்கும் சோறிடுவது என்பது அவர்களைச் சமமாகப் பாவிப்பதாகும். ஒரு விதத்தில் நன்மையின் பக்கம், தீமையின் பக்கம் என்ற எதிர்வைக் கடந்து செல்வதாகும். தமிழ்ப் பண்பாட்டில் போரில் இருபக்கத்து நியாயங்களையும் கருதிப்பார்க்கும் ஒரு பார்வை நிலவுகிறது. எதிரெதிரான இரு தரப்பினர் பொருதும்போது அவ்விருவரின் வேறுபாடுகள் இங்கு முக்கியமாகின்றன. இருவரில் ஒருவர் முற்றிலும் நிர்மூலமாகிப் பிரித்தறிய இயலாததோர் ஒருமை நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இங்குக் காணப்படவில்லை. பெருஞ்சோற்று உதியன் கதை அதன் வரலாற்று உண்மையைத் தாண்டி உணர்த்தும் கருத்து இதுவே.

புறநானூற்றில் பரணர் பாடிய 63ஆம் பாடல் வீரயுகம் எனப்படும் சங்க காலத்தில் போரினால் நிகழும் அழிவைக் காட்டி அப்போரின் பிறிதொரு பக்கத்தை உணர்த்துகிறது. இருபுறத்து அரசர்களும் போர்க்களத்தில் மடிந்துபோக, எதையும் அறியாமல் உல்லாசமாய் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பெண்களின் நிலையைக் காட்டி, இனி அந்நாடு என்னாகுமோ என்று கவல்கிறது புலவரின் மனம்.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படையொழிந்தனவே
விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என்னாவது கொல் தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல்
பாயும் யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகந்தலை நாடே

இந்தப் பின்னணியில் நாம் பாரதக் கதையைத் தமிழ்ப் பண்பாடு உள்வாங்கியிருக்கிற நிகழ்முறையைக் காண வேண்டும். வில்லிப்புத்தூரார் பாரதத்திலும் நல்லாப்பிள்ளை பாரதத்திலும், உத்தியோக பருவத்தில் கிருஷ்ணன் தூது சருக்கத்தில், சகாதேவன் கண்ணனுக்கு மறுமொழியாகக் கூறும் பகுதி இங்கே கருதிப் பார்க்கத்தக்கது. பாரதப் போர் நடக்காமல் தடுப்பது எப்படி என்பதற்குச் சகாதேவன் இவ்வாறு கூறுகிறான். கர்ணன் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். அர்ச்சுனனைக் கொன்றுவிட வேண்டும். திரெளபதியின் கூந்தலை அரிந்துவிட வேண்டும். கால்களிலே விலங்கை மாட்டிக் கைகளையும் பிடித்து உன்னையும் நான் கட்டி வைப்பேன் என்றால் பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம் என்கிறான் சகாதேவன்.

பாராளக் கன்னன் இகல் பார்த்தனை முன்கொன்று அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளைபூட்டி
நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மாபாரதம் என்றான்

வியாசபாரதத்தில் இல்லாத இப்பகுதி தமிழ்ப் பண்பாட்டில் போருக்கு எதிரான ஒரு மனப்பாங்கு எப்போதும் நிலவி வந்திருப்பதை அழுத்தமாய்ச் சுட்டுகிறது.

இந்தப் பின்னணியிலேயே பாரதி பாஞ்சாலி சபதத்தோடு பாரதக் கதையை முடிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாரதப் போர் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும் என்றே அதைக் கதையாகவும் பாட்டாகவும் கூத்தாகவும் ஆண்டுதோறும் நிகழ்த்துகிறோம். பாரதியோவெனில் தன் காவியத்தில் அப்போரையே சித்திரிக்காதது போருக்கு எதிரான அவன் மனப்பான்மையைத் தெளிவாய்க் காட்டுகிறது.

- சுந்தர் காளி

Pin It