நா.வானமாமலை (2010)
தமிழக நாட்டார் படைப்புகளைப் பொருள் கொள்ளுதல்
N.Vanamamalai(2010)
Interpretation of Tamil Folk creations. New Century Book House (P) Ltd, chennai-600 098
தமிழகத்தின் நாட்டார் வழக்காறுகளை இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமே பார்க்கும் பார்வையில் இருந்து விடுவித்து சமூக வரலாற்றுப் பார்வைக்கு அவற்றை உட்படுத்தியவர்களில் நா.வானமாமலைக்கு சிறப்பான இடம் உண்டு. அவரது மார்க்சியப் புலமை இதில் பெரும் பங்காற்றியுள்ளது.
நாட்டார் கதைப்பாடல்களில் ஆர்வம் கொண்டு 1961இல் கட்டபொம்மன் கதைப்பாடலையும் 1967இல் ஐவர் ராசாக்கள் கதைப்பாடலில் கிளைக் கதையாக இடம் பெற்றுள்ள 'வீணாதிவீணன் கதை' என்ற கதைப்பாடலையும் நா. வானமாமலை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக ஆறு கதைப்பாடல்களை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வாயிலாகப் பதிப்பித்து 1971-1972 காலகட்டத்தில் வெளியிட்டார்.
அவரது இப் பதிப்புப் பணிகளின் வளர்ச்சி நிலையாகத் தமிழக நாட்டார் கதைப்பாடல்கள் குறித்த ஆய்வுகள் அமைந்தன.
முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அவர் வழங்கிய இரு கட்டுரைகளும் இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அவர் வழங்கிய கட்டுரையும் நாட்டார் வழக்காற்றியல் அறிவுப்புலம் சார்ந்தவைதான். நாட்டார் வழக்காற்றியல் அறிவுப்புலத்தில் அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த ஆழமான பங்களிப்பின் காரணமாக முனைவர் வ.அய். சுப்பிரமணியம் தாம் உருவாக்கிய திராவிட மொழியியல் கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் முதுநிலை ஆய்வாளராக 1975-76 ஆவது ஆண்டிற்கு நியமித்தார்.
இப் பணியை மேற்கொண்டு அவர் எழுதிய ஆய்வுநூலே இங்கு அறிமுகமாகிறது.
நூலின் அமைப்பு:
2010இல் வெளியான இந்நூலின் திருத்திய பதிப்பில் முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வியல்களின் தலைப்புகள் வருமாறு:
(1) மழையும் நாட்டார் வழக்காற்றியலும்
(2) பெண்ணும் செழிப்பும்
(3) நாட்டார் வழக்காறுகளில் பெண்
(4) மாவீரர்களின் வகை
(5) வரலாற்றுக் கதைப் பாடல்கள்
(6) தற்கொலை மற்றும் கொலை குறித்த கதைப்பாடல்கள்.
ஒரு சிறிய கட்டுரையில் இவ் ஆறு இயல்களையும் முழுமையாக அறிமுகம் செய்ய இயலாது என்பதால் நான்காவது இயல்வழி நாட்டார் மாவீரர் குறித்து அவர் முன்வைக்கும் செய்திகள் மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. இந் நான்காவது இயல் தமிழக நாட்டார் கதைப் பாடல்களிலும் கடவுள் வழிபாட்டிலும் இடம் பெறும் மாவீரர்களைக் குறித்த ஆய்வாகும்.
ஆங்கில நூல் என்பதால் இவர் ஹீரோ என்ற ஆங்கிலச் சொல்லையே இவ் இயலில் பயன் படுத்தியுள்ளார். இச்சொல்லுக்கு இணையான சொல்லாக மாவீரன் என்ற சொல் இக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாவீரன்
வீரன் என்ற சொல் பொதுவாகப் போர் ஆற்றல் மிக்கவனையும் அச்சமின்றி போர் செய்பவனையும் குறிப்பதாகும். இதன் அடிப்படையில் ஒரு படை அணியில் இடம் பெற்றுள்ள போர் புரிவோரைக் குறிப்பதாக வீரன் என்ற சொல் அமைகிறது. திவாகர நிகண்டு (2:108)படைத் தலைவன், என்றும் பொருள் உரைக்கிறது,
ஹீரோ (Hero) என்ற ஆங்கிலச்சொல் படைவீரனை மட்டுமின்றி, காவிய அல்லது நாடகத் தலைவனைக் குறிக்கும் சொல்லாகவும் வழங்குகிறது. நா.வா. தம் ஆய்வேட்டில் ஹீரோ என்ற ஆங்கிலச் சொல்லை சற்று ஆழமான பொருளிலேயே பயன்படுத்தி உள்ளார். ஹீரோ என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ‘வீரதீரச் செயலுக்காகவோ நற்செயலுக்காகவோ பலரால் போற்றப்படும் மனிதன், இவன் பெரும்பாலும் ஓர் ஆணாக இருப்பான்’ (‘a person especially a man,who is admired by many people for doing brave or good.) என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (New Oxford Advanced Learner’s Dictionary (7th edition) விளக்கம் தெரிகிறது.
தமது நூலில் அவர் அறிமுகம் செய்யும் நாட்டார் வீரர்கள் (Folk Heros) இத்தகைய இயல்புடையோர்தான். இதன் அடிப்படையில் வீரன் என்ற சொல்லை விட மாவீரன் என்ற சொல்லே ஏற்புடைத்து என்ற முடிவுக்கு வர நேரிட்டது. (இது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கலைச்சொல்லாகும்).
மாவீரரை வகைப்படுத்தல்:
கதைப்பாடல்கள் என்பன நாட்டார் மரபு சார்ந்தும் இலக்கிய மரபு சார்ந்தும் வெளியாகி உள்ளன. இவ்விரு மரபு சார்ந்த கதைப் பாடல்களிலும் கதைப்பாடல் தலைவன் ஒருவன் இடம் பெற்றிருப்பான். புராணங்களும் பழமரபுக் கதைகளும் காவியங்களுக்கு முந்தியவை என்ற ஊகத்துடன் இவ்விரு வகைமைகளிலும் இடம் பெறும் மாவீரர்களை அவர் ஆராய்ந்துள்ளார். இம் முயற்சியில் பௌரா என்பவர் மாவீரர்களுக்கு வழங்கியுள்ள இருபத்தியெட்டு வரையறைகளை இந்திய மாவீரர்களுக்குப் பொருத்திப் பார்த்துள்ளார். இம் முயற்சியில் இந்தியக் காவிய வீரர்களை தெய்வீகப் பிறவிகள், இயல்பான பிறவிகள் என இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார். இப் பகுப்பின் அடிப்படையில் பீமன், அனுமன் ஆகிய இருவரையும் ஆய்வு செய்து இரும்புக் காலத்திற்கு முந்தைய மாவீரர் குண இயல்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். இது போன்றே இராமர், கிருஷ்ணர், அர்ச்சுனன் ஆகியோரையும் ஒப்பீடு செய்துள்ளார்
இராமர் போராற்றல் படைத்தவராகவும் மேட்டிமை (elite) பிரிவைச் சேர்ந்தவராகவும் விளங்க கிருஷ்ணர் இவரைப் போலன்றி மாவீரர்களுக்கு அறிவுரை கூறுபவராக மட்டுமே காட்சி தருவதைச் சுட்டிக் காட்டுகிறார். இவ் ஒப்பீடுகள் மேற்கத்திய நாட்டின் பௌரா, ராக்லன் ஆகியோர் வகைப்படுத்தும் மாவீரர்கள் குறித்த பகுப்பிற்கு ஓர் எல்லை உண்டு என்பதை வெளிப்படுத்துகின்றன.
காவியத் தலைவன்:
காவியங்களின் தலைவனாக மாவீரன் ஒருவன் இடம் பெறுவது ஒரு மரபாகும். காவிய மாவீரனின் பொதுவான குண இயல்புகளாக சி.எம். பௌராவின் நூலில் (Heroic poetry) இருந்து இருபத்தெட்டு வரையறைகளை நா.வா. வரிசைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ராக்லன் (The Hero:A study in Tradition, Myth and Drama), கேம்பெல், ஹான் ஆகியோரின் வரையறைகளுடன் இவை ஒத்திருப்பதாகவும் உலகளாவிய முறையிலானது என்றும் கூறியுள்ளார். மகாபாரதம், சீவகசிந்தாமணி ஆகியன பௌரா, ராக்லன் ஆகியோர் வரையறுத்துள்ள மாவீரன் வரையறைக்குள் அடங்குவதாகவும் சுட்டியுள்ளார்.
மேலும் பௌரா, ராக்லன் இருவரும் மேலை நாட்டு மாவீரர் குறித்து உருவாக்கியுள்ள நாட்டார் மாவீரர் குறித்த வரையறையானது மேட்டிமையோர் கண்ணோட்டத்தில் உருவானது என்று மதிப்பிட்டுள்ளார். ராக்லன் குறிப்பிடும் செவ்வியல் மாவீரர்கள் (Classical Heroes) எந்த ஒரு பண்பாட்டிலும் நிலவும் வீரயுகத்திற்குப் பொருந்திவருபவர்கள் என்பது அவரது கருத்தாக உள்ளது.
நாட்டார் மாவீரர்கள்:
நாட்டார் மாவீரர்களை (அ) உள்ளூர் மாவீரர்கள், (Local Heroes) (ஆ) மேட்டிமையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசிய வீரர்களான நாட்டார் மாவீரர்கள் (National Folk Heroes), (இ)நாட்டாரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேட்டிமை மாவீரர்கள் (Elite Heroes) என மூன்று வகையாக இவர் பகுத்துள்ளார். இவ்வாறு பகுத்துக் கொண்டுள்ளதை அடுத்து வீரயுகக் காவியங்களில் இடம் பெறும் மாவீரர்களின் பொதுப்பண்புகளாக பௌரா குறிப்பிடும் இருபத்தியெட்டு பண்புகளைத் தொகுத்துரைத்துள்ளார். அவற்றுள் முக்கியமான சில பண்புகள் வருமாறு:
- • ஏனைய மனிதர்களைவிட ஆற்றல் மிகுந்தவனாக இருப்பான்.
- • உடல் வலிமை கொண்டவனாகவும் புதிய போர்க் கருவிகளைக் கையாளும் ஆற்றல் கொண்டவனாகவும் இருப்பான்.
- •மந்திர ஆற்றலில் இருந்து ஓரளவுக்கோ முழுமையாகவோ விலகிநின்று மந்திர ஆற்றலுக்கு எதிராக மனித ஆற்றலைப் பயன்படுத்துபவனாக இருப்பான்.
- •மாபெரும் வீரர்கள் என்போர் போர் ஆற்றல் படைத்தோராகவே இருப்பர்.
- • சிங்கம், புலி, கழுகு, கரடி என்பனவற்றுடன் ஒப்பிடப்படுவார்கள்.
- •அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் மாவீரனாக மாறுவான்.
பௌரா குறிப்பிடும் இத்தகைய பண்புகள் கொண்ட காவிய வீரர்களை ஒத்தவர்களாகவே ராக்லன் காம்பெல், ஹான் ஆகியோர் குறிப்பிடும் மாவீரர்கள் உள்ளார்கள் என்று நா.வா. குறிப்பிடுகிறார். அதே போழ்து ஒரு மாவீரனின் தாய் அரசகுடிப் பிறப்புடைய கன்னியாகவும் தந்தை மன்னனாகவும் இருப்பான். அவன் ஓர் இளவரசியை மணம் செய்து கொள்வான், தந்தையை அடுத்து மன்னனாகப் பொறுப்பேற்பான் என்று ராக்லன் குறிப்பிடுவார். ஆனால் பௌரா, மாவீரனுக்கு அரசகுடிப் பிறப்பை வலியுறுத்தவில்லை.இருப்பினும் மாவீரனுக்குரிய அடையாளங்களாக அவர் குறிப்பிடும் பண்புத்திறன்கள் அரசகுடிப் பிறப்பைச் சார்ந்தனவாகவே உள்ளன என்று நா. வா. குறிப்பிடுகிறார். இதன் தொடர்ச்சியாக தேவதைக் கதைகளில் இடம் பெறும் கதைத் தலைவன் இயற்கை கடந்த (MiraCulous) பிறப்பை உடையவனாகவும், ஓர் இனக்குழுவின் மாவீரன் அக்குழுவின் பண்பாட்டு மாவீரனாகவும் அடையாளப்படுத்தப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து இராமன் கிருஷ்ணன் என்ற இரு கடவுளர்களிடம் காணப்படும் மாவீரன் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளார். ஷத்திரிய பரம்பரையின் மாவீரனாக இராமனையும் மேய்ச்சல் நில வாழ்க்கையை மேற்கொண்ட ஓர் இனக்குழுவின் மாவீரனாக கிருஷ்ணரையும் அவர் அடையாளப் படுத்தி உள்ளார்.
தமிழக நாட்டார் மாவீரர்கள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வானது (1) முத்துப்பட்டன் (2) சின்னத்தம்பி (3) சின்னநாடான் (4)கௌதல மாடன் ஆகிய நால்வரை மையமாகக் கொண்டுள்ளது. தம் ஆய்விற்கான அடிப்படைச் சான்றுகளாகக் கதைப்பாடல்களையும் வாய்மொழி வழக்காறுகளையும் கொண்டுள்ளார். அத்துடன் ஒப்பீட்டு நோக்கிலான ஆய்விற்காக ஹனுமா, சிஞ்சூரா லட்சுமணா, சங்குலி ராயன்னா, என்ற மூன்று கன்னடக் கதைப் பாடல்களையும் கத்தியவூர் வீரன் என்ற மலையாளக் கதைப் பாடலையும் பயன்படுத்தியுள்ளார்.
முத்துப்பட்டன்:
முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன் வாலப்பகடை என்ற அருந்ததியரின் இரு மகள்களைத் திருமணம் செய்து அவர்களுடன் வாழ்கிறான். அவர்களது பாதுகாப்பில் இருந்த மாடுகளைக் கவர்ந்து செல்ல வந்தவர்களுடன் நிகழ்த்திய போரில் இறந்து போகிறான். பின்னர் சொறிமுத்தையன் என்ற நாட்டார் தெய்வத்தின் பாதுகாவலனாக மாறி பட்டவராயன் என்ற பெயரில் கடவுளாக வணங்கப்படுகிறான். இதுவே முத்துப்பட்டன் கதைப்பாடல் கூறும் செய்தியாகும். இக் கதைப் பாடலை 1971ஆவது ஆண்டில் அவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இதன் பதிப்புரையிலும் இந்நூலிலும் இக் கதையின் களமான அம்பாசமுத்திரம் பகுதியில் வாழ்ந்த பிராமணர்கள், வேளாளர்களின் தூண்டுதலால் இக் கதைப்பாடலில் செய்யப்பட்ட மாறுதல்களையும் அவை மூலக்கதையின் உண்மைத் தன்மையைத் திசைமாற்றியதையும் தம் கள ஆயவின் வழி வெளிப்படுத்தி உள்ளார்.
மாவீரன் குறித்த பௌராவின் வரையறைகளில் இருந்து முத்துப்பட்டன் என்ற நாட்டார் மாவீரன் விலகி தனித்துவமான அடையாளத்துடன் விளங்குவதை அவர் அட்டவணை வாயிலாக விளக்கியுள்ளார். இது போன்றே சின்னத்தம்பி, சின்னநாடான், கௌதல மாடன் ஆகிய நாட்டார் மாவீரர்கள், மாவீரர் குறித்த மேலை நாட்டு அறிஞர்களின் வரையறைகளில் இருந்து விலகி தனித்துவமான அடையாளத்துடன் நிற்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த இடத்தில் அவர் நடத்திவந்த ஆராய்ச்சி காலாண்டு ஆய்விதழில் (தொகுதி4 இதழ்:3) ‘மொழியல்லாத நாட்டுப் பண்பாட்டுச் சான்றுகளைப் பொருள் கொள்ளும் முறை' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ள பின்வரும் தொடர்களை மேற்கோளாகக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்:
‘அந்நிய முன்னோடிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்வது தவறு என்று கூற முடியாது. ஆனால் அவர்களுடைய கருத்துக்களையும் ஆய்வு முறைகளையும் முழுமையாகக் கடன் பெறுவது நமது ஆராய்ச்சியை வறண்டதாகவும் பயனற்றதாகவும் ஆக்கிவிடும்...
அவர்களுடைய முறையியலிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல இருந்தபோதிலும் அவர்களுடைய முறையியலையும் கருத்துக்களையும் நாம் முழுமையாக நம்முடைய பண்பாட்டுப் பொருள்களுக்கும் நிலைமைகளுக்கும் யாந்திரீகமாகப் பொருத்திவிட முடியாது.’
வட்டார மாவீரர்கள்:
தமிழ் நாட்டின் நாட்டார் மாவீரர்கள் மிகப் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வட்டார எல்லைக்குள் மட்டுமே அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள். இது குறித்தும் நா.வா. விவாதித்துள்ளார். அவரது கருத்துப்படி அனைத்து ‘தர்மசாஸ்திரங்களும்’ மரபுகளும் சமூகப் படிநிலையில் சாதிய விலக்குகளுக்கு (Taboo) கீழ்ப்படிதலை வலியுறுத்துகின்றன. இதை ஏற்றுக் கொள்ளாதோரும், பின்பற்றாதோரும் சமூகவிலக்குக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.நாட்டார் மாவீரர்கள் தர்மசாஸ்திர நெறிகளுக்கு எதிர் நிலைப்பாட்டை மேற்கொள்பவர்கள் இதனால் இவர்களது செயல்பாடுகளை மையமாகக் கொண்டு உருவாகும் வாய்மொழி வழக்காறுகள் கற்றறிந்த மேட்டிமையோரால் எழுத்தாவணமாக்கப்படுவதில்லை. ஏனெனில் இவர்கள் உயர் சாதிக் குழுக்களுக்கும், ஆளுவோருக்கும் பணி செய்வதையே தம் கடப்பாடாகக் கொண்டவர்கள். இவர்கள் மாவீரர்களின் எதிர்க்குரலை மழுங்கடித்து விடுவார்கள். இவ்வாறு மழுங்கடிக்கப்பட்ட பனுவல்கள் பரவும்போது மூலப் பனுவலானது அது தோன்றிய இடத்திலேயே நிலைத்திருக்கும். இதனால் நாட்டார் மாவீரர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டார எல்லைக்குள்ளேயே ஒடுங்கிப் போய்விடுகிறார்கள்.
மாவீரனில் இருந்து கடவுள் நிலைக்கு:
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பெரும்பாலான நாட்டார் ஆண் கடவுளர்கள் மாவீரர்களாக உண்மையில் வாழ்ந்து கொலையுண்டு மடிந்து போனவர்கள்தாம். இக் கடவுளர்களும் வட்டார எல்லைக்குள்ளாகவே வழிபடப்படுகிறார்கள். சான்றாக முத்துப்பட்டன், மதுரை வீரன், காத்தவராயன், அண்ணன்மார் சாமி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இந் நூலின் இறுதியில் ஒவ்வொரு இயலிலும் இடம் பெற்றுள்ள செய்திகளை நா.வா. தொகுத்துக் கூறியுள்ளார். அவ்வகையில் இதுவரை நாம் பார்த்த ‘மாவீரர்களின் வகை மாதிரி’ (Models of Heroes) என்ற ஐந்தாவது இயலில் தாம் கூறிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார். இச் செய்திகளின் சுருக்கம் வருமாறு:
இவ்வியலில் தமிழ்ச் சமூகத்தில் மாவீரர் வழிபாட்டின் கருத்தியல் தொடக்கங்களை விரிவாக விவாதித்துள்ளேன். இவர்களின் குண இயல்புகள் குறித்த புகழ் பெற்ற பௌரா-ராக்லன் கோட்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்துவதில் இருந்து இந்த இயல் தொடங்குகிறது. இது ஒரு சரியான தொடக்கப் புள்ளி. ஏன் எனில் மேற்கத்திய ஆய்வாளர்களின் சார்பு நிலையை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்திய மாவீரர்கள் குறிப்பாகத் தமிழ் நாட்டு மாவீரர்கள் பௌரா, ராக்லன் வகைமையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றனர். இந்த வேறுபாடுகளை வகைப்படுத்தி விளக்கியுள்ளேன்.
இந்தியச் சூழலில் மாவீரன் என்ற நிலைக்கும் கடவுள் நிலைக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை. இதனால் இவை இரண்டுக்கும் இடையிலான படிநிலைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.உள்ளூர் மாவீரன் என்ற அடிப்படை நிலையில் தொடங்கி கடவுள் என்ற உயர் நிலைக்குச் செல்லும் படிநிலைகள் இவை. ஒருசில சமூக மற்றும் சமூக உளவியல் தன்மைகள் ஓர் உள்ளூர் மாவீரனைக் கடவுள் நிலைக்கு உயர்த்தலாம். இத் தன்மைகளும் இங்கே விளக்கப்பட்டுள்ளன.
ஒரு சமூகம் எப்படி ஒரு தனிமனிதனை மாவீரனாகப் பார்க்கிறது என்பதைக் கொண்டு அதன் அடிப்படைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒரு சமூகம் எப்படிப்பட்டவரை மாவீரனாகக் கருதுகிறது என்பதை வைத்து, அதன் இயல்பையும் அதன் அடையாளத்தையும் புரிந்து கொள்ளலாம். எனவேதான் இந்த ஆய்வின் பெரும் பகுதியை இதற்கு ஒதுக்கி உள்ளேன்.
ஏனைய நாட்டார் செயல்பாடுகளிலும் நம்பிக்கைகளிலும் காணப்படுவது போன்று இதிலும் மாவீரனுக்கும் கடவுளுக்கும் ஊடாகக் கலப்பு உள்ளது.எனவே இவ்விரண்டையும் பிரித்து அடையாளம் காணவேண்டியது அவசியமாகிறது.
இன்றையச் சூழலில் ஒரு நாட்டார் வழக்காற்றியலர் உலகளாவிய பொதுப் பண்புகளைக் குறித்துக் கவலை கொள்ளாது ஒரு வழக்காற்றின் தனிப்பண்புகளை அடையாளம் காண்பதிலும் அதை விவரிப்பதிலும் கவனம் கொள்ளவேண்டும்.
ஒரு வழக்காறு அதன் சமூகப் பண்பாட்டுத் தளத்துடன் இணைந்தே இருக்கும் என்ற அடிப்படை வாதத்தை இது உறுதி செய்கிறது. (அழுத்தம் எமது)
உள்ளூர் மாவீரனின் குண இயல்புகள், வீரம், செயல்பாடுகள், வகைகள், சமூகச் செயல்பாடுகள் மற்றும் படிநிலைகள் என்பன உலகப் பொது வகைமையுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்து சமயச் சூழலில் மாவீரர்கள் வழிபாடு எளிதில் சடங்குகளுக்கு ஆட்பட்டு உள்ளூர் மாவீரனை கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும்.
- ஆ.சிவசுப்பிரமணியன்