பேராசிரியர் ஆறு. இராமநாதன் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளில் இன்றும் தொடர்ச்சியாகத் தன்னை அர்ப்பணித்து வரக்கூடிய அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஆறுமுகப் படையாட்சி - சீதாலட்சுமி தம்பதியருக்கு மகனாக 03.08.1950இல் பிறந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், பதிப்புத்துறை இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்குநர் போன்ற பணிகளை செவ்வனே செய்தவர். பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் போன்றவற்றை பொறுப்பேற்று நடத்தியவர், பணி ஓய்வுக்குப் பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றியவர், 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டவர். தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை உள்ளிட்ட நிறுவனம்சார் பரிசுகளைப் பெற்றவர்.

இத்தகைய பன்முக அடையாளம் கொண்ட பேராசிரியர் ஆறு. இராமநாதன் அவர்களை 16.08.2021 அன்று சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். என்னுடன் நண்பர் முனைவர் க. வினாயகமும் உடன்வந்து உதவினார்.

பேராசிரியரின் கல்விப் பயணமும் வாசிப்பும்

aaru ramanathanதமிழகத்தில் நாட்டுப்புறவியல் என்னும் துறை தொடக்கக் காலத்தில் ஒரு ஆய்வுத் துறையாகத் தொடங்கவில்லை. எல்லா நாடுகளிலும் உருவானதைப் போன்று தொடக்கக் காலத்தில் நாட்டுப்புற வழக்காறுகள் குறித்து அறிந்தவர்கள் அவற்றில் ஆர்வம்கொண்டு சேகரிக்கத் தொடங்கினர். கி.வா.ஜகந்நாதன், பெ.தூரன், அன்னகாமு, மு. அருணாசலம் உள்ளிட்ட பலர் இப்பணியைச் செய்தனர். இப்பணியில் பெர்சிவல் பாதிரியார் உள்ளிட்ட அயல்நாட்டவர்களின் பங்களிப்பும் உண்டு. இவற்றைத் தொடர்ந்து நாட்டுப்புற வழக்காறுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியும் உருவானது. இவற்றை பேராசிரியர் நா. வானமாமலை 1960இல் தம்முடைய பாடல் தொகுப்பு முயற்சியின் வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதற்குப்பின்பு, வழக்காறுகளைக் கள ஆய்வு அடிப்படையில் சேகரித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உருவாயினர். இவ்வாய்வுப் போக்கு கல்விப்புலம் சார்ந்து 1970களில் தொடங்கியது. இத்தொடக்கக் காலத்தில் உருவான ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் ஆறு. இராமநாதன். அவருடன் உரையாடினோம்.

என்னுடைய குடும்பம் சாதாரண விவசாய குடும்பம்தான். எனது தந்தை ஐந்தாம் வகுப்புவரை திண்ணைப் பள்ளியில் பயின்றவர். அம்மா இரண்டாம் வகுப்புவரை படித்தவர். எனது பெற்றோருக்கு ஏழு குழந்தைகள். நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் ஆவர். பெரிதான கல்விப் பின்புலம் எங்கள் பெற்றோருக்கு இல்லை. இந்த நிலையில் பிள்ளைகள்தான் முதல் நிலை பட்டதாரிகள். என் தந்தையின் நண்பர் பக்கத்து ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர். அவர் அலுவலகத்தில் சிறு நூலகம் உண்டு. நான் அங்குச் சென்றால் எனக்கு வேண்டிய புத்தகங்களைக் கொடுப்பார். நானும் தொடக்கத்தில் புதினங்களைத் தேடித்தேடி எடுத்துப் படித்தேன். என்னுடைய தந்தைக்குத் தெரியாமல் மர்ம நாவல்களை வரவழைத்தும் படித்தேன். இப்படிதான் என்னுடைய தொடக்கால வாசிப்புத் தொடங்கியது.

நான் ஐந்தாம் வகுப்புவரை என்னுடைய கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு பள்ளியில்தான் படித்தேன். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று பின்னலூரில் படித்தேன். உயர்நிலைக் கல்வியை சேத்தியாத்தோப்பு என்ற ஊரிலும் எங்கள் ஊரிலும் படித்தேன். இப்படி மற்ற ஊர்களுக்கு படிக்கச் செல்லும்போது வயல் வரப்புகளில் நடப்பதும், ஓடிவருவதும் மகிழ்ச்சியான அனுபவம். இப்படிதான் என்னுடைய பள்ளிக்கல்வி முடிந்தது. புதுமுக வகுப்பு (PUC) கல்வியை அறிவியல் பாடத்தில்தான் படிக்க விரும்பினேன். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய மதிப்பெண் அடிப்படையில் மூன்றாம் பிரிவு (Third Group) வகுப்பில்தான் இடம் கிடைத்தது. அவற்றைப் படித்து முடித்தபின், நான் இளங்கலையில் தமிழ் பாடத்திற்கும், உளவியல் பாடத்திற்கும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டும் கிடைத்தது. அந்த நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருந்ததால் தமிழ் படித்தால் எளிதாக வேலை கிடைக்கும் அதனால் தமிழைப் படி என்று எனது தந்தை இளங்கலை தமிழைப் படிக்கச் சொன்னார். இளங்கலை, முதுகலைத் தமிழ் இலக்கியத்தை என்னுடைய தாய்மாமன் புலவர் குப்புசாமி அவர்களின் ஊக்கப்படுத்துதலோடு மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.

தமிழ் இலக்கியம் படித்தபோது மிகுந்த ஆர்வம் உருவானதற்கு எனக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர்களான பெரும் ஆளுமைகளும் மிக முக்கியமான காரணமாகும். நான் பாடம் கற்ற ஆளுமைகளில், பேராசிரியர் வ.சுப. மாணிக்கம், க.வெள்ளைவாரணனார், இராமசாமிப்பிள்ளை, ந.வீ. செயராமன், சோ.ந. கந்தசாமி, ஆறு. அழகப்பன், ச. மெய்யப்பன், திருநாவுக்கரசு, க. தியாகராசன், சுவாமி ஐயா, ச. வைத்தியலிங்கம், தாமோதரன், உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலான சிறந்த பேராசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இந்த ஆளுமைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் மிகுந்த ஆழங்கால் பட்டவர்கள். இவர்கள் பாடம் நடத்தும்முறை அந்தந்தப் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு உருவாகக் காரணமாக அமைந்தது. 1973இல் முதுகலைத் தமிழ் இலக்கியம் முடித்தேன்.

முதுகலை முடித்தவுடன் பணியேதும் கிடைக்காத நிலையில் ஆண்டு வீணாகக் கூடாது என்று 1974இல் மொழியியல் பட்டத்தில் சேர்ந்தேன். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியர்களாக இருந்தவர்கள் செ.வை. சண்முகம், ச.அகத்தியலிங்கம், சீனிவாசவர்மா, பாலசுப்பிரமணியன், ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் இருந்தனர். இவர்கள் மொழியியல் பாடம் நடத்தும் முறைமை, மொழியியல் பாடத்தின் மீது மிகுந்த ஈடுபாட்டைத் தூண்டியது.

முனைவர்பட்ட ஆய்வும் நாட்டுப்புற ஆய்வாளனாதலும்

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தவுடன் முனைவர்பட்டம் மேற்கொள்ளும் எண்ணம் இல்லை. நான் அடிப்படையில் ஒரு நவீன இலக்கியப் படைப்பாளி. நவீன இலக்கியங்களான புதினம், சிறுகதை, முதலான இலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்ததைப் போல பல சிறுகதைகளையும் படைத்திருக்கிறேன். ஒருமுறை பேராசிரியர் பொற்கோ அவர்கள் நடத்தும் “மக்கள் நோக்கு” என்கின்ற இதழில், சிறுகதைப் போட்டி அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது தீவிரமாக சிறுகதைகளை படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்ததால் ஒரு சிறுகதையை எழுதி அந்த இதழுக்கு அனுப்பியிருந்தேன். நான் எழுதிய சிறுகதை முதல் பரிசும் பெற்றுவிட்டது. முதல்பரிசுத் தொகை ரூபாய் 25 என்று எனக்கு அறிவித்தார்கள். எனக்கு வழங்கவிருக்கும் ரூபாய் 25ஐ தங்களுடைய இதழின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பேராசிரியர் பொற்கோ அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். இதைப் பார்த்த பேராசிரியர் என்னைப் பாராட்டிக் கடிதம் எழுதினார்.

மேலும், “மக்கள் நோக்கு” இதழின் முதலாமாண்டு நிறைவு விழாவை பேராசிரியர் பொற்கோ அவர்கள் தன்னுடைய இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தார். தனக்கு அறிமுகமானவரிடம் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைக்குமாறும் கூறியிருந்தார். நானும் அந்த அழைப்பை ஏற்று விழாவுக்குப் போயிருந்தேன். பிறகுதான், என்னுடைய நண்பர்கள் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் நீ முனைவர்பட்டம் செய்யலாம் என்று ஆலோசனை கூறினார்கள். பொற்கோ அப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்தார். நானும் ஒருமுறை பேராசிரியரை அணுகி முனைவர்பட்டத்திற்கான வாய்ப்பைக் கேட்டேன். பேராசிரியரும் எவ்வித தயக்கமும் இன்றி முனைவர்பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்துகொள்ளுமாறு ஒப்புதல் அளித்தார். எதைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்போறீங்க என்று கேட்டார். நான் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் என்ற மூன்று களங்களைக் கூறினேன். ஆனால் பேராசிரியர் பொற்கோ அவர்கள் நீ ‘திராவிட மொழிகளில் நாயன்மார் கதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய் என்று கூறி தலைப்பையும் முடிவு செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக வேறொன்று நடந்தது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அப்போது இயக்குநராக இருந்த ச.வே.சுப்பிரமணியன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும் நோக்கில், அவருடைய அறைக்கு என்னை அழைத்துச் சென்று, முனைவர்பட்டம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு பொற்கோ வெளியில் சென்றுவிட்டார். பேரா. ச.வே.சு. என்னுடைய ஆய்வு ஆர்வம், ஊர் முதலான விவரங்களைக் கேட்டுவிட்டு நீங்கள் “தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்” குறித்து ஆய்வு செய்யுங்கள். நான் ஏ.என். பெருமாளிடம் கூறுகிறேன். நீங்கள் அவரிடம் ஆய்வாளராகச் சேர்ந்துகொள்ளுங்கள் என்றார். பேராசிரியர் பொற்கோ அவர்களும் என்னிடம்தான் ஆய்வு செய்ய வந்திருக்கிறார் என்று சொல்லவில்லை. பெரும் பேராசிரியர் கூறுவதை எப்படி மறுத்துக் கூறுவது என்று நானும் தயங்கிக் கொண்டு பேராசிரியர் பொற்கோஅவர்களிடம்தான் நான் முனைவர்பட்டம் செய்வதற்காகச் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்று கூறவில்லை. இப்படியாகத்தான் பேராசிரியர் ஏ.என் பெருமாள் அவர்களிடம் முனைவர்பட்ட ஆய்விற்காக முதல் மாணவனாக 1976இல் சேர்ந்தேன்.

தொடக்ககால நூல்களும் பேராசிரியர் மேற்கொண்ட செயல்பாடுகளும்

1970களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வுகள் கல்விப் புலங்களில் தொடக்கம் பெறுகின்றன. கேரளப் பல்கலைக்கழகத்தில் பி.ஆர். சுப்பிரமணியம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சரசுவதி வேணுகோபால், மு.இராமசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சு. சண்முகசுந்தரம் முதலான பலர் நாட்டுப்புறவியல் சார்ந்த தலைப்புகளில் ஆய்வை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் தமிழில் ஆய்வுக்கு உதவுக்கூடிய அளவில் பெரிதாக நூல்கள் இல்லை. ஆங்கில மொழியில் பல நூல்கள் கிடைக்கப்பெற்றன. பேராசிரியர் நா.வானமாமலை எழுதிய நூல்கள், பேராசிரியர் க.ப.அறவாணன் ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து எழுதிய ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’ என்ற நூல், 1975இல் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் எழுதிய நாட்டுப்புறவியல் அறிமுகம், பேராசிரியர் தே.லூர்து எழுதிய நாட்டார் வழக்காற்றியல் அறிமுகம் முதலான நூல்களும்தான் தமிழில் நாட்டுப்புறவியல் ஆய்வுக்கான அறிமுக நூல்களாக அக்காலத்தில் இருந்தன. கள ஆய்வு சார்ந்து பேராசிரியர் மு.இராமசாமி மற்றும் பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் இருவரும் இணைந்து எழுதிய “கள ஆய்வில் சில அனுபவங்கள்” என்ற நூல் முதல் கள ஆய்வு நூலாக அப்போது கிடைத்தது.

பேராசிரியர் பொற்கோவும் பேராசிரியர் நா. வானமாமலையும் மிகச் சிறப்பாக மாணவர்களை ஊக்கப்படுத்துவார்கள். என்னுடைய நெறியாளர் நாடகத்தில் மிகப் பெரும் ஆளுமை கொண்டவர். நாட்டுப்புறவியலில் அப்போது பரிச்சயம் இல்லாதவர். அதனால் பெரும்பாலும் என்னுடைய ஆய்வு தொடர்பாக பொற்கோவிடம்தான் கலந்துரையாடல் செய்வேன். அதே நேரத்தில் என் நெறியாளர் என்மீது காட்டிய அன்பும் நம்பிக்கையும் எனக்களித்த சுதந்திரமும் என் ஆய்வுப் பணியைச் சிறப்பாக முடிக்க உதவின என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். பேராசிரியர் நா. வானமாமலையிடமும் என் ஆய்வு குறித்து உரையாடியுள்ளேன். 1976இல் நான் வெளியிட்ட என்னுடைய குமுறல் என்ற சிறுகதைத் தொகுப்பை அவருக்கு அனுப்பியிருந்தேன். படித்துவிட்டுப் பாராட்டினார். தமிழர் நாட்டுப் பாடல் நூலுக்கு பேராசிரியர் நா.வா எழுதியிருந்த குறிப்புகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தபோது, நீதான் என் நூலை நுட்பமாக வாசித்திருக்கிறாய் என்றும் பாராட்டினார். மேலும், அவர் தார்வாட்ல இருந்தபோது அவர் எழுதிய “The Interpretation of Folk Creations” என்ற நூலும் என் நாட்டுப்புறவியல் ஆய்வுக்கு பயன்பட்ட நூல்களில் ஒன்று.

நாட்டுப்புறவியல் ஆய்வில் ஒரு சரியான முறையியல் இல்லாத சூழ்நிலையில் 1976இல் நான் முனைவர்பட்டத்திற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தவுடன் ச.வே.சுப்பிரமணியம் அவர்கள் ஒரு அற்புதமான வாய்ப்பைக் கொடுத்தார். அதாவது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நாட்டுப்புறவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்விப் புலத்தில் நடைபெற்ற முதல் நாட்டுப்புறவியல் கருத்தரங்கு இதுதான். அந்தக் கருத்தரங்கத்திற்கு பேராசிரியர் தே. லூர்து, ஆ. சிவசுப்பிரமணியன், பேரா. சரசுவதி வேணுகோபால், மு.இராமசாமி

சு.சண்முகசுந்தரம் முதலானவர்கள் கலந்துகொண்டனர், பேராசிரியர் நா. வானமாமலையும் இந்திய நாட்டுப்புறவியலாளர் ஜவஹர்லால் ஹண்டுவும் இக்கருத்தரங்கத்திற்கு வந்திருந்தனர். நாட்டுப்புறவியல்/நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த ஆளுமைகளையெல்லாம் பார்ப்பதற்கும், அவர்களின் உரைகளைக் கேட்பதற்குமான நல்ல வாய்ப்பாக இந்தக் கருத்தரங்கம் அமைந்தது.

இதேபோன்று பேராசிரியர் முத்துசண்முகம் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு செயலரங்கம் நடைபெற்றது. பதினைந்து நாட்கள் பேரா. ஜவஹர்லால் ஹண்டு அவர்கள் வகுப்பு எடுத்தார். இச்செயலரங்கில் என்னுடன் என் றெறியாளர் ஏ.என் பெருமாள், மு.இராமசாமி, சும்மார் சூண்டல், வேலுசாமி முதலானவர்களும் பங்கேற்றனர். இத்தகைய செயல்பாடுகள் நாட்டுப்புறவியல் ஆய்வில் முழு ஈடுபாடு உருவாகக் காரணமாக அமைந்தன. மேலும், மார்க்சியம் சார்ந்த நூல்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், அரசு, தனிச்சொத்து என்னும் நூலும், நா.வானமாமலையின் நூல்களும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈடுபட வைத்தது. இவ்வாறு தான் ஒரு முழுமையான நாட்டுப்புறவியல் ஆய்வாளராக உருவான சூழலை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியும் மேற்கொண்ட ஆய்வுகளும்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நான் 1982இல் முதுநிலை ஆய்வாளராகச் சேர்ந்தேன். அப்போது, மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு இல்லை. அப்போது துணைவேந்தராக இருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். நாட்டுப்புறவியல் ஆய்வுகள் தென்னிந்தியாவில் தொடக்கம் பெறுவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் காரணமானவர்களில் இவரும் ஒருவர். இவர் முதுநிலை ஆய்வாளர்களிடம் தாங்கள் செய்ய விரும்பும் ஆய்வுகள் குறித்து எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தார். நான் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிப்பித்தல் குறித்து ஆய்வுத் திட்டம் அளித்தேன். இந்த ஆய்வுத் திட்டம் முதுகலை மாணவன் ஆய்வு போன்றது என்று மறுத்துவிட்டார். பிறகுதான் அவருடைய ஆய்வுகளையெல்லாம் வாசிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து “நிட்டூரி கதைகள்” என்ற தலைப்பில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையின் பல்வேறு வடிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்வது என்று முடிவெடுத்து வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை குறித்தத் திட்டத்தை அனுப்பியபோது அதனை ஏற்றுக்கொண்டார். இந்த ஆய்வு தொடர்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தொடங்கி பலரிடம் என் ஆய்வை மேற்கொண்டேன். கடிதம் எழுதிப் பல இடங்களிலிருந்தும் கதையின் 25 வடிவங்களை சேகரித்து ஆய்வு செய்து முடித்தேன். இந்த வரலாற்று நிலவியல் ஆய்வை துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்திடம் அளித்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சிறப்பாகப் பாராட்டினார். ஒரு வாரம் யார் வந்தாலும் இராமநாதன் ஆய்வைப் போல் செய்யுங்கள் என்று பேசும் அளவிற்கு என் ஆய்வு சிறப்பானதாகக் கருதப்பட்டது. வ.அய்.சு அவர்களை அவ்வளவு எளிதில் திருப்திபடுத்த முடியாது. அவரிடமே நல்ல ஆய்வாளனாக பெயரெடுத்தது நற்பேறுதான்.

பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் துணைவேந்தராக இருந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1987இல் நாட்டுப்புறவியல் துறையை உருவாக்கினார். அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர் ஆலன்டண்டிசின் உரையினால் ஈர்க்கப்பட்டவர் இவர். இதற்கு முன்பாக 1986இல் நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடத்த வ.அய்.சு அனுமதி வழங்கியிருந்தார். அப்போது நான் சமூகவியல் துறையில் பணியாற்றினேன். இக்கருத்தரங்கம் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கமாகும். பல நாட்டுப்புறவியல் அறிஞர்கள் கட்டுரைகள் படித்தனர். பின்பு இக்கருத்தரங்கக் கட்டுரைகள் நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள் என்ற நூலாகவும் வெளிவந்தது. பேராசிரியர் ச.அகத்தியலிங்கமே 1987இல் இந்தியத் தமிழ் நாட்டுப்புறவியல் கழகத்தின் முதல் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தச் செய்தார். இந்த மாநாடு தமிழக நாட்டுப்புற ஆய்வாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டுக் கட்டுரைகள் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. இத்தகைய ஆய்வுச் செயல்பாடுகள் தமிழகத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் உருவாகவும், நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுத் தெளிவு பெறவும் பெரிதும் காரணமாக அமைந்தன. துறைத்தலைவறாகப் பொறுப்பேற்ற பின்னர் நான் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் ஆய்வாளர்கள் நிலையிலும், உரையாளர்கள் நிலையிலும் மிகுந்த கவனம் செலுத்துவேன். முனைவர்பட்ட மாணவர்கள் ஆய்வு மேம்பாட்டிற்காகப் பல்வேறு செயல்பாடுகளைச் செய்தேன். திட்டமிடப்பட்ட பயிற்சியாக நாட்டுப்புறவியல் செயலரங்குகள் அமையும்.

பேராசிரியரின் சவாலான கள ஆய்வுகள்

பாளையங்கோட்டையில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் துறையில் போர்டு பவுண்டேசன் நிதி பெற்று சர்வதேசப் பயிலரங்கம் நடைபெற்றபோது, அதில் பேராசிரியர் பங்கேற்றிருக்கிறார். அந்தப் பயிலரங்கத்தின் இறுதியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வு செய்து ஒப்படைக்க வேண்டும் என்பது அந்தப் பயிலரங்கின் திட்டம். இதற்கிடையே பேராசிரியர் “காளி திருநடனம்” நிகழ்வைப் பார்த்திருக்கிறார். மறுநாள் காலையில் அந்தக் காளிவேடமிட்ட கலைஞரின் முகவரியைக் கண்டுபிடித்து அவர் வீட்டிற்குச் சென்று இரவு ஆடிய காளியாட்டத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார். அந்தக் கலைஞர் தன்னுடைய வீட்டிற்குத் தெரியாமல் நிகழ்த்திய நிகழ்த்துதல் அது என்பதால் நேர்காணல் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அன்றைய நாளில் நேர்காணல் செய்ய முடியாமல் போனது. மறுநாள் அந்தக் கலைஞரைச் சமாதானப்படுத்தி, சென்ற ஆண்டு நீங்கள் நிகழ்த்திய நிகழ்த்துதல் பற்றிக் கேட்பதுபோல என்னுடைய கேள்வியைக் கேட்பேன். நீங்கள் முதல்நாள் நிகழ்த்திய ஆட்டத்தைப் பற்றிக் கூற வேண்டும் என்ற உடன்படிக்கையோடு நேர்காணல் நடத்தியிருக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒருவர் காளியாட்ட நிகழ்த்துதலில் ஈடுபட்டுப் பின்னர் அந்நிகழ்த்துதல் கலைஞராக மாறுவதையும் பின்னர் அக்கலையை நிகழ்த்துவதால் அவர் மன நிம்மதி அடைந்து அக்கலையை வளர்த்தெடுப்பதையும் தன்னுடைய ஆய்வின் மூலமாக நிறுவியுள்ளார். அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர் ஸ்டுவர்ட் அவர்கள் இந்த ஆய்வு ஒரு “முன்மாதியான ஆய்வு” என்று பாராட்டியிருக்கிறார். இதே போன்று ஏ.கே. இராமநுஜம் அவர்களும் ‘உங்களுக்கென தனித்த ஆய்வு முறையியல் இருக்கிறது. நீங்கள் தமிழிலேயே எழுதுங்கள். உங்களுடைய தனித்த ஆய்வு முறையியலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் திரெளபதி வழிபாடு குறித்து ஆய்வு செய்த அல்ப் ஹில்த்தபெய்தல் அவர்களும் பேராசிரியரைப் பாராட்டியுள்ளது பேராசிரியரின் ஆய்வு முறையியலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

பேராசிரியரின் கள ஆய்வில் தீப்பாய்ந்தம்மன் குறித்த கள ஆய்வும் மிக முக்கியமான ஆய்வாகும். கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகிலுள்ள தீப்பாய்ந்தம்மன் குறித்த ஆய்வை மேற்கொண்டபோது பூதங்குடி என்ற ஊரில் 1973 வரை குலதெய்வமாக இருந்த ‘தீப்பாஞ்சாயி’ பிறகு, தீப்பாய்ந்த நாச்சியராக மேல்நிலையாக்கம் பெற்றுள்ளது. தீப்பாஞ்சாயி என்ற குலதெய்வம் தீப்பாய்ந்த நாச்சியராக மாற்றம் பெற்றது என்பதை தன்னுடைய கள ஆய்வுத் தரவுகளால் மிக நுணுக்கமாக ஆராய்ந்து நிறுவியுள்ளார் பேராசிரியர். இவை மட்டுமின்றி, ஆப்பி வழிபாடு குறித்த ஆய்வு, கார்த்திகை தீபம் குறித்த ஆய்வு, நாட்டுப்புற தெய்வங்கள் குறித்த ஆய்வு, மாட்டுப் பொங்கல் குறித்த ஆய்வு, இடப்பெயர்வு குறித்த ஆய்வு என பல ஆய்வுகள் இவருடைய மிக நுட்பமான, திட்டமிடப்பட்ட, கள ஆய்வுத் தரவுகளால் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி ஆய்வுகளாகக் குறிப்பிடலாம்.

இன்றைய காலத்தில் நாட்டுப்புறவியலின் ஆய்வுப் போக்குகள்

இன்றைய காலத்தில் நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்வதற்குத் தமிழ் படித்தவர்கள்தான் பெரும்பாலும் வருகிறார்கள். அவர்களும் நாட்டுப்புறவியலில் ஆய்வு என்றால் மிக எளிதாக முடித்துவிடலாம் என்ற நினைப்போடுதான் வருகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு எளிதானது இல்லை நாட்டுப்புறவியல் ஆய்வு. நாட்டுப்புறவியல் ஆய்வு என்றால் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். களத்திற்குப் போவதற்கு இன்றைய இளைஞர்கள் தயங்குதிறார்கள். களத்திற்குச் சென்று தகவல்களைச் சேகரித்து அந்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளைக் கொண்டுவருவதுதான் நாட்டுப்புறவியல் ஆய்வு. என்னுடைய ஆய்வின் சிறப்பம்சம் இதுதான். கள ஆய்வுத் தரவுகள் வழி ஆய்வு முடிவுகளைக் கொண்டுவருவது. சில ஆய்வாளர்கள் களத்திற்குச் செல்லாமலேயே யூகங்களின் அடிப்படையிலும் ஆய்வின் முடிவை முன்வைக்கின்றனர். சில ஆய்வாளர்கள் மற்றவர்களின் தகவல்களைத் தன்னுடைய தகவல்களாக வைத்து ஆய்வு செய்கின்றனர். சில ஆய்வாளர்கள் நாட்டுப்புற ஆய்வில் தான் மேற்கொண்டுள்ள ஆய்வுத் தலைப்பு தொடர்பாக நிகழ்ந்துள்ள ஆய்வுகளைப் பற்றி அறியாமலேயே, ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை மீண்டும் செய்கின்றனர். அவையும் முறையான கள ஆய்வு இல்லாமல் செய்வதுதான் வேதனைக்குரியது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வுக்கு வருகின்ற ஆய்வாளர்களை முதலில் நாட்டுப்புறவியல் சார்ந்து வந்துள்ள ஆய்வுகளைக் குறித்துத் தெரிந்துகொள்ளவும், முக்கியமான ஆய்வு நூல்களை வாசிக்கவும் செய்வேன். பிறகு, நானே நாட்டுப்புறவியல் சார்ந்த அடிப்படைகளைக் குறித்து கற்பிப்பேன். இவ்வாறு பல படிநிலைகளில் ஆய்வாளர்களை தயார்படுத்திய பிறகுதான் ஆய்வுக்குள் பயணிக்கச் செய்வேன். இப்படித்தான் என்னுடைய பல மாணவர்கள் உருவாகியுள்ளனர். இவ்வாறுதான் ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும். என்னுடைய மாணவர்களில் அருட்தந்தை பிரிட்டோ வின்சென்ட், அருட்தந்தை சேவியர் அந்தோனி, ச.பிலவேந்திரன், வசந்தா, கவிஞர் எழிலவன், கவிஞர் இரத்தின புகழேந்தி, அப்துல் காதிர், அய்யாப்பிள்ளை, பே.சக்திவேல், அறிவழகன், செந்தில்குமார், தமிழ்ச் செல்வி முதலான பல மாணவர்கள் சிறப்பான ஆய்வாளர்களாக உருவாகி தமிழ்ச் சமூகத்திற்கு தங்களுடைய ஆய்வுகளால் சிறப்பு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய முனைவர்பட்ட நெறியாளர் களிடத்திலும் குறையுண்டு. நாட்டுப்புறவியல் சார்ந்த புலமை இல்லாமலேயே ஆய்வாளர்களை நாட்டுப்புறவியலில் ஈடுபடச்செய்யும் போக்கு இன்று காணப்படுகிறது. சமூகவியல் படிக்காதவர்கள் சமூகவியலில் ஆய்வு செய்ய முடியாது. மானிடவியலைப் படிக்காதவர்கள் மானிடவியலில் ஆய்வு செய்ய முடியாது. மொழியியல் படிக்காதவர்கள் மொழியியலில் ஆய்வு செய்ய முடியாது ஆனால் நாட்டுப்புறவியல் பற்றி ஒன்றுமே படிக்காதவர்களும் நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம் இன்று உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். நாட்டுப்புறவியல் என்பது பிற துறைகளைப் போன்று உலகளாவிய நிலையில் சீரிய கோட்பாடுகளையும் முறையியலையும் கொண்டு வளர்ந்து வருந்துறை தமிழகத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய சூழல் தமிழ்க் கல்விப் புலத்தில் உருவாக வேண்டும். ஒரு சில ஆய்வாளர்கள் சிறந்த ஆய்வுகளை வெளியிடுகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், சரசுவதி வேணிகோபால், இ.முத்தையா, ஆ.தனஞ்செயன், ஞா. ஸ்டீபன், நா.இராமச்சந்திரன், சி.மா.இரவிச்சந்திரன், ஆ.திருநாகலிங்கம், தே.ஞானசேகரன் முதலியோர். நாட்டுப்புறவியல் கல்விக்கு அரசு ஆதரவு தர வேண்டும்; வேலை வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு செய்தால் இத்துறை சார்ந்த பணிகள் மக்கள் மேம்பாட்டுக்கு உதவக் கூடியதாக இருக்கும். மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உதவக் கூடியதாக இருக்கும். சமூக வரலாற்றைக் கட்டமைக்கவும், இசை, நடனம், நாடகம் போன்ற பல துறைகள் மேம்படவும் உதவும். இவற்றை மனதில் கொண்டு இளைய நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் இத்துறையை வளர்த்தெடுக்கவும் அதன்வழி சமூகத்தை மேம்படுத்தவும் முன்வர வேண்டும்.

நாட்டுப்புறவியல் ஆய்வுக்கு முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள்

தமிழகத்தில் நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல், மக்கள் வழக்காற்றியல், வழக்காற்றியல் என பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு சொல்லும் சில குறைபாடுகளைக் கொண்டுதான் உள்ளது. பல அறிஞர்கள் ஒன்றுகூடி Folklore என்பதற்கு உரிய ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து ஒரே சொல்லைப் பயன்படுத்தலாம்.

செவ்விலக்கிய ஆய்வுகளுக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு நாட்டுப்புற ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செம்மொழி நிறுவனத்திலும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

தமிழில் இலக்கிய வரலாறுகளை எழுதும்போது செவ்விலக்கியங்களுக்கான வரலாறாக மட்டும் அவை உள்ளது. ஆனால் எழுத்திலக்கியங்கள் உருவாவதற்கு அடிப்படையான வாய்மொழி வழக்காறுகள் குறித்தோ, வாய்மொழி வழக்காறுகள் குறித்த ஆய்வுகள் குறித்தோ இலக்கிய வரலாற்றில் இடம்பெறுவதில்லை. இலக்கிய வரலாற்று நூல்களில் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் குறித்த வரலாறுகளும் இடம்பெற வேண்டும்.

எழுத்திலக்கியம் சார்ந்த படைப்பாளிகளும், எழுத்திலக்கியங்களைக் கொண்டு ஆய்வு செய்யும் ஆய்வாளர்களும் அரசால் கொண்டாடப்படுதல், விருது வழங்குதல் நிலை உள்ளது. இவர்கள் மட்டும் தமிழ் அறிஞர்களாகக் கொள்ளும் போக்குக் காணப்படுகிறது. ஆனால், நாட்டுப்புற ஆய்வாளர்கள் பெரும் பொருட்செலவிட்டுக் கள ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்தல், தொகுத்தல், பகுத்தல், ஆவணப்படுத்தல், ஆய்வு செய்தல் என்ற பல படிநிலைகளில் உழைப்பைச் செலுத்துபவர்கள். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழுத்திலக்கிய ஆய்வாளர்களைப்போல, படைப்பளிகளைப்போல கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை அரசும் அறிஞர்களும் உணர்ந்து செயல்பாட வேண்டும்.

அயல்நாட்டவர் உருவாக்கிய கோட்பாடுகளை முற்றாக ஒதுக்காமல், வேண்டிய நிலையில் பயன்படுத்தியும், தமிழக வழக்காறுகளிலிருந்து சில கோட்பாடுகளை உருவாக்கியும் நாட்டுப்புறவியல் ஆய்வுகள் வளர்ச்சியடைய வேண்டும்.

இவ்வாறு பல மாற்றங்கள் நாட்டுப்புறவியல் சார்ந்து உருவாக வேண்டியது இன்றியமையாததாகும் என்ற பேராசிரியரின் பதிவு மிகவும் கவனம் கொள்ளத்தக்கப் பதிவுகளாகும்.

பேராசிரியரின் படைப்புகள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்

பேராசிரியர் ஆறு. இராமநாதன் ஐயா அவர்களின் ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’, ‘வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை’, ‘தமிழில் புதிர்களும் காதலர் விடுகதைகளும்’, ‘தமிழர் கலை இலக்கிய மரபுகள்’, ‘தமிழர் வழிபாட்டு மரபுகள்’, ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (முதன்மைப் பதிப்பாசிரியர்) (பத்து தொகுதிகள்)’, ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் (முதன்மைப் பதிப்பாசிரியர்) (15 தொகுதிகள்)’, ‘கார்த்திகைத் திருவிழா’ , ‘எழுத்திலக்கியங்களும் வாய்மொழி இலக்கியங்களும்’, ‘மாட்டுப் பொங்கல்’, ‘இராமனும் தீயில் இறங்கியிருந்தால்’ , ‘தேசிங்குராசன் கதைப்பாடல்’, முதலான ஒவ்வொரு நூலும் சிறந்த ஆய்வு முறையியலோடு தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை, பண்பாட்டைப் பதிவு செய்துள்ள ஆவணப் பெட்டகங்களாகும். இன்னும் பேராசிரியரின் நூல்களை முழுமையாக வாசிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. ஆய்வாளர்களால் பேராசிரியரின் நூல்களை முழுமையாக வாசிப்புக்கு உட்படுத்தும்போது பேராசிரியரின் கடினமான உழைப்பையும், அந்த உழைப்பினால் வெளிப்பட்டுள்ள ஆய்வு முறையியலையும் அறிய முடியும். தமிழ்ச் சமூக வரலாற்றையும், பண்பாட்டு நிலைகளையும் புரிந்துகொள்ள அவை உதவுவதையும் அறிந்துகொள்ள இயலும்.

- முனைவர் மு.ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, து.கோ.வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.