பயந்துபோயிருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்த போதுதான் அவரைப்பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. எழுபதுகளிலேயே தன் எழுத்திற்கும் அரசியலுக்கும் ஓய்வு கொடுத்து விட்ட ஒரு மனிதர் நடப்புத் தேதியில் விதந்து பேசப்பட்டார். என் வயதொத்தவர்களுக்கு தெரிந்த அவருடைய இரண்டு அரசியல் மற்றும் இலக்கியச் செயல்பாடுகள்:

1. எண்பதுகளின் இறுதியில் ஈழத்திற்குப் போன இந்திய ராணுவத்தின் "அமைதிப்பணி' களை ஆதரித்து தொடர்ந்து வானொலியில் பேசியது

2. 2004 இல் சங்கரராமன் கொலை மற்றும் இன்னபிற சில்லறைத்தனமான குற்றங்களுக்காக சங்கராச்சாரி கைது செய்யப்பட்டபோது – சங்கரமடத்தின் ஆச்சாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக – "ஹர ஹர சங்கர' என்ற நூலை எழுதியது .  இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மண்டல்  குழு பரிந்துரையின் போதோ, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதோ, தாமிரபரணி, மேலவளவு படுகொலைகளின் போதோ, முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலையின் போதோ – அவருடைய எந்தப் புலன்களிலிருந்தேனும் சலனமோ அசைவோ வந்ததாக – என்னுடைய நினைவிற்கு  எட்டவில்லை.

ஆனால் எழுபதுகளுக்கு முந்தைய அவரது இலக்கியச் செயல்பாடுகளுக்காகவும் கம்யூனிச இயக்கப் பணிகளுக்காகவும்  காங்கிரஸ் ஆதரவு மற்றும் திராவிட இயக்கத்தின் மீதான அவருடைய எரிச்சல்களுக்காகவும் 2015 இல் அவரை நினைத்து நினைத்து உருகியது தமிழ்ச் சமூகம். "இலக்கியப் பிதாமகன்' என்றார்கள்; "அடித்துக்கொள்ள ஆளே இல்லை'  என்றார்கள்; "உற்றுப்பாருங்கள் தலைக்குப் பின் உத்தேசமாக  ஓர் ஒளிவட்டம் தெரியும்'  என்றார்கள்;  அவருடைய தலைமயிர், மீசை இவைகளுக்கும் சிங்கத்திற்கும் இடையே உள்ள அங்கமச்ச அடையாளங்களை ஒப்பு நோக்கினார்கள் – இப்படி ஓர் எழுத்தாளர் "இழுத்த' "இழுப்பு' க்கெல்லாம் பின்னாலேயே போய், எப்போதோ அவர் செய்த இலக்கியப் பணிகளையெல்லாம் நினைவில் வைத்து இப்போது ஏங்கி அழும்  இந்த"பழம் நினைவு'த்(Nostalgic) தமிழர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு, பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதி விட்டோமே,  எங்கே பொங்கு தமிழர்கள் அறம்பாடி விடுவார்களோ என்று வியர்த்து, பயந்து போயிருந்தேன். எதிர்பார்த்தது போலவே எதிர்த்தாக்குதல் வந்துவிட்டது – எதிர்பாராத திசையிலிருந்து!

கோகுல்ராஜின் படுகொலைக்குக் காரணமான அதே யுவராஜ் என்கிற சாதிவெறியன்தான் பெருமாள் முருகன் மிரட்டப்பட்டதற்கும் ஊரை விட்டு அனுப்பப்பட்டதற்கும்  காரணம் என்கிற முன்னுரையோடு, தலித் முரசில் வெளிவந்த "ஜாதியொருபாகன்'  கட்டுரைக்கு(vol.10  ISS .1)"உயிர் எழுத்து'  (ஆகஸ்ட் 2015) என்ற இதழில் எதிர்வினையாற்றியிருக்கிறார் எஸ்.வி. ராஜதுரை (எஸ்.வி.ஆர்.).தலித் முரசில் வெளிவந்த கட்டுரைக்கு "உயிர் எழுத்தில்'  ஏன் எதிர்வினையாற்றினார் என்பது புரியவில்லை. "ஜாதியொருபாகன்'  கட்டுரையை வாசித்திராத "உயிர் எழுத்து'  வாசகர்களுக்கு அது என்ன விதமான உவகையைத் தந்துவிடப்போகிறது என்பதும் புரியவில்லை. இதையெல்லாம்  கடந்து வினை செய்வதற்கும் எதிர்வினை செய்வதற்கும் எதிர்வினைக்கு எதிர்வினை செய்வதற்கும் என – மறுபடி மறுபடி "மாதொருபாகனை'  வாசிப்பதென்பது – உச்ச நீதிமன்றத்தின்படி "அரிதினும் அரிதான'  என்கிற வரையறையின் கீழ் வரக்கூடிய ஒரு செயல். என்ன செய்வது  எழுதியிருப்பவர் எஸ்.வி.ஆர். ஆயிற்றே!

"உயிர் எழுத்து'க்கு வருவோம். "ஜாதியொருபாகன்'  கட்டுரையில் இரண்டு செய்திகளை முன்னிலைப்படுத்தியிருந்தோம்: 1. கதையின் மய்ய இழையாக இருக்கும் 14 ஆம் நாள் சடங்கு தொடர்பான பெருமாள் முருகனின்  அரைவேக்காட்டுத்தனமான கள ஆய்வு பற்றியது 2. இந்தக் கதையில் குறிப்பிடப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல்  தலித் மக்களை இழிவாக விவரித்திருந்த பெருமாள் முருகனின் ஜாதியக் குரல் பற்றியது. முதற்செய்தி பற்றி எஸ்.வி.ஆருக்கு நம்மோடு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. பெருமாள் முருகனின் கள ஆய்வில் உள்ள கோமாளித்தனங்களை – நம்முடைய கட்டுரை தெளிவாக அம்பலப்படுத்தியிருந்ததை – எஸ்.வி.ஆர். குறிப்பிடாவிட்டாலும் தன் பங்கிற்கு அந்தக் "கள ஆய்வை' இன்னும் ஆழமாக ஆராய்ந்து உண்டு இல்லையென்றாக்கி விடுகிறார்.

அதையொட்டி பெருமாள் முருகனிடம் சில கேள்விகளையும் அவர் முன் வைக்கிறார்: 1. "சாமி குழந்தை'  யைப் பெற்றவர்கள் மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பார்கள்? அவர்களுக்கு வெட்க உணர்வே இருக்காதா? 2. ஒரேமுறை கலவியில் கருத்தரித்துவிட முடியுமா? 3. இன்றும் அந்த வழிமுறையை கடைப்பிடிக்கக் கூடிய அளவுக்கு ஒதுக்குப்புறங்கள் உள்ளனவா? மின்விளக்குகளும் காவல் துறையும் அதற்கு குறுக்கீடாக இருக்காதா?

நம்முடைய இரண்டாவது செய்தியில்தான் எஸ்.வி.ஆருக்கு ஏற்பு இல்லை. பெருமாள் முருகனுடையது சாதியக்குரல் அல்ல; அது ஓர் இயல்பான பதிவு என்கிறார். அதற்கு அவர் கூறும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன் அடிப்படையான ஒரு சந்தேகத்தைப் பதிவு செய்துவிடலாம். "மாதொருபாகன்'  என்கிற கதை, "பதினாலாம் நாள் சடங்கு'  என்கிற கள ஆய்வை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டது என்று பெருமாள் முருகன் கூறுகிறார். எஸ்.வி.ஆரின் கூற்றுப்படி, கள ஆய்வு என்கிற அந்த அடிப்படையே மிகப் பலவீனமானதாகவும் பழுதானதாகவும் இருக்கும்போது, அதை நம்பி எழுதப்பட்ட ஏனைய புனைவுகளும் உரையாடல்களும் பதிவுகளும் எதார்த்தங்களும் எப்படி நேர்மையான ஒன்றாக இருந்து விட முடியும்?

இனி, "பெருமாள் முருகன் ஜாதியொருபாகன் இல்லை'  என்பதற்கான எஸ்.வி.ஆரின் விளக்கங்களைப் பார்க்கலாம். கதையின் நாயகன் காளியைப் பற்றி எஸ்.வி.ஆர்.  இப்படி விவரிக்கிறார்:

""...குழந்தைப் பேறுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைக் கூட வெறுப்பவனாக உள்ள காளியிடம் கூட "வறடன்' பட்டத்திலிருந்து விடுபட முடியாதா என்ற ஆதங்கம் அவ்வப்போது தோன்றுகிறது. "காலகாலமாக வந்துக்கிட்டு இருக்கிற வழிமொற'  யைக்கூட பின்பற்றிப் பார்க்கலாமே என்னும் சபலமும் அவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் தடைவிதித்து விடுகிறது அவனது சாதி ஆணவமும் மேல் சாதி பெருமித உணர்வும்.முத்துவிடம் காளி சொல்கிறான், ""ஒரு பொம்பள சாதிக்குள்ள எத்தன பேருகிட்ட போனாலும் தப்பில்ல.பொழங்குற சாதிக்காரனோடு போனாக்கூட பொறுத்துக்குவாங்க. தீண்டாச்சாதியோட போனா அவ்வளவுதான்.

ஊரே விட்டே, ஏன் சாதியெ விட்டே தள்ளி வெச்சிருவாங்க''  இன்னிக்கு அப்படியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடதான் இருக்கோனும்ங்கிறோம். அப்புறம் எப்படி? வீதியில சுத்தறதுல  பாதிக்கு மேல திரியறது  தீண்டாச்சாதி தண்டுவப் பசங்கதான். அதுக்கப்புறம் என்னால பொன்னாத்தாள தொடவே முடியாது.கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது. எதுக்கு இதெல்லாம், இப்படி ஒரு கொழந்த எனக்கு வேண்டாம்...''

"மாதொருபாகனை'  முழுவதும் படித்து முடித்த வேளையில், மிக அன்யோன்யமாக இருக்கும் காளியும் பொன்னாத்தாவும் – தங்களுக்கு பிள்ளை இல்லை என்கிற குறையைப் போக்க – பல வழிமுறைகளைக் கையாளுகிறார்கள். கணவனுக்குத் தெரியாமல், "குழந்தைக்காக'  பதினாலாம் நாள் சடங்கில் கலந்து கொண்டு  யாரோ  ஒரு "சாமி' யோடு பொன்னாத்தா  கூடுகிறாள். இது தெரிந்து மனைவி ஏமாற்றிவிட்டாளே – சோரம் போய்விட்டாளே என்று மனமுடைந்து காளி தூக்கில் தொங்குகிறான் – என்கிற அளவில்தான் நான் கதையைப் புரிந்துகொண்டிருந்தேன். 

ஆனால், எஸ்.வி.ஆரோ கதைக்கு முற்றும் முழுவதுமாக வேறொரு வண்ணத்தைப் பூசுகிறார். "ஒரு நேசமுள்ள கணவனின் கதை' என்ற ஒரு வரியை ""சாதி வெறியனின் கதை''  என்பதாக விளக்குகிறார். காளி சாதி ஆணவமும் பெருமிதமும் கொண்ட வெறியன். குழந்தை வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் மனைவி தீண்டாத சாதிப்பயல்களோடு கூடிவிடப்போகிறாளே என்கிற சாதி ஆணவத்தால் மட்டுமே அந்தச் சடங்கிற்குப் போவதற்கு அனுமதி மறுக்கிறான்  என்று எஸ்.வி.ஆர். எழுதுகிறார்.

இந்த இடத்தில் இரு கேள்விகள் : 1. கதையின் இறுதியில் காளி மனமுடைந்து தூக்குப் போட்டுக் கொண்டது அவள் தீண்டாத சாதிக்காரனோடு கூடியிருப்பாளோ என்கிற சந்தேகத்தின் காரணமாக மட்டும்தானா? ஒருவேளை பொன்னாத்தா தன்னோடு கூடிய "சாமி'யின் ஜாதிச்சான்றிதழைக் கொண்டு வந்து காட்டியிருந்தால் காளி கயிற்றைத் தூக்கிப் போட்டுவிட்டு துள்ளிக் குதித்திருப்பானா?  2. அந்த ஊரில் காளி ஒருவன்தான் ஜாதி வெறியனா? ஊரில் உள்ள மற்ற கவுண்டர்களெல்லாம் முற்போக்குவாதிகளா?எந்தச் சாமியும் சம்மதம் என்று ஏற்றுக்கொண்டு திருவிழாவில் கலந்துகொள்கிற தாராளவாதிகளா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆமாம்' என்று எஸ்.வி.ஆர்.சொல்கிறார் என்பதுதான் அதிர்ச்சி. ""அதாவது பதினாலாம் நாள் திருவிழாவிற்கு வருகிற "சாமிகள்'  ஒரு புறமிருக்கட்டும், சாதாரண நாட்களில் கூட ஒரு பெண் தனது சுயசாதியைச் சேர்ந்த எத்தனையோ பேருடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அதில் தவறில்லை; கவுண்டர் சாதி "சாமிகள்'  எத்தனை பேருடனும் தன் மனைவி உடலுறவு கொள்வதிலும்  குழந்தை பெற்றுக்கொள்வதிலும் காளிக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் "தீண்டாச்சாதி சாமிகளோடு' மட்டும் உடலுறவு கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.'' 

காளியின் குணத்தின் மீதான இப்படிப்பட்ட சித்தரிப்பை (character assassin nation) பெருமாள் முருகன் ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை. கதை முழுக்க அந்த கணவன் மனைவியின் நெருக்கமும் காதலும்தான் மிகையாகப் பேசப்படுகிறதே ஒழிய அவனுக்குள்  ஜாதி இருப்பது, எஸ்.வி.ஆர். குறிப்பிடும் ஒரு சில இடங்களில் மட்டும்தான் வருகிறது. அதுவும் பேச்சுவாக்கில் அவன் சொல்வதாக வருகிறது.மற்றபடி அவனுடைய "ஜாதி வெறி' யை வெளிப்படுத்தும் விதமான செய்கைகளோ சந்தர்ப்பங்களோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

எப்போதாவது ஊருக்குள் வந்து நாலு மனிதர்களையும் மனைவியையும் பார்த்துப் போகிற மற்ற நேரங்களிலெல்லாம் – ஆடு மாடுகளோடு தொண்டுப் பட்டியிலேயே பழியாய்க் கிடப்பதாக – கதாசிரியரால் விவரிக்கப்படும் காளியை அந்தக் கொங்கு மண்டலத்திலேயே தலைசிறந்த ஜாதி வெறியன் இவன்தான் என்பது போல் எஸ்.வி.ஆர். எழுதியிருக்கிறார். பிரச்சினை என்னவென்றால், இதைப் படித்துஅதனால் உந்தப்பட்டு – தூக்கில் தொங்கிய காளி மறுபடி யுவராஜ் என்ற பெயரில் பிறந்து கோகுல்ராஜைக் கொன்றான்; பெருமாள் முருகனை விரட்டினான் என்று – யாராவது கதை எழுதி விடுவார்களோ என்பதுதான்.  அதுதான் இருக்கவே இருக்கிறதே மாய எதார்த்தவாதம்.தமிழ்நாட்டில் மார்குவேஸ்களுக்கு பஞ்சமா என்ன?

“தலித் முரசு' கட்டுரையில் "மாதொருபாகனில்'  இடம்பெறும் தலித் மக்கள் மீதான இழிசொல்லாடல்கள் – கதையின் நாயகன் காளி சொல்வதா அல்லது பெருமாள் முருகனின் தற்கூற்றா – என்று கேட்டுவிட்டு, அது ஒரு ஜாதி வெறியனின் குரல்தான் என்றால் (எஸ்.வி.ஆர். அப்படித்தான் சொல்கிறார்) அவனுடைய குரலைக் கதையாகப் புத்தகம் போட்டு இன்றைக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? பழைய ரணங்களை உங்கள்  கதாபாத்திரங்களின் வழியாகக் கீறிப்பார்ப்பதில் அப்படியென்ன மனப்பிறழ்வு உங்களுக்கு  என்று  பெருமாள் முருகனைக் கேட்டிருந்தோம். அதற்கு எஸ்.வி.ஆர். பதில் சொல்கிறார்:

""இந்தக் கேள்வியை தாயப்பன் தமக்குத் தாமே கேட்டுக்கொள்வாராயின் தலித் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளை ஏன், "தலித் முரசின்'  வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடுகளைக்கூட கேள்விக்குட்படுத்த வேண்டும் என்னும் முடிவுக்குத்தான்  அவர்  வரவேண்டியிருக்கும். ஏனெனில் ஜாதி வெறியர்களின் குரலைப் பதிவு செய்தும் அதை எதிர்த்தும்தான் தலித் இலக்கியம் படைக்கப்படுகிறது. இன்னமும் அன்றாடம் பல்வேறு வடிவங்களில் ஒலிக்கும் ஜாதி வெறியர்களின் குரலுக்கு எதிராகத்தான் "தலித் முரசு'  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜாதி வெறியனின் குரலைப் பதிவு செய்யாமல் ஜாதி வெறியன் என்று அவனை எப்படி அடையாளம் காட்ட முடியும்?''

"மாதொருபாகனை' தலித் இலக்கியம்  என்று எஸ்.வி.ஆர். சொல்கிறாரா என்பதை சற்று ஒதுக்கி வைத்து விடுவோம். நம்முடைய கட்டுரையில் கேட்கப்பட்ட மய்யமான கேள்வி: ""இப்படிப்பட்ட கதைக்கு இத்தனை சாதியப்பதிவுகள் அவசியமா?'' என்பது தானே தவிர கதைகளில் சாதிப்பதிவே இருக்கக் கூடாது என்பது அல்ல. இதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால், இந்த  கதைக்கு – அண்டார்டிகாவில் குளிர் அதிகம், மலைவாழை மலச்சிக்கலுக்கு நல்லது என்பன போன்ற பதிவுகள் எப்படி அவசியமில்லாதவையோ – அதுபோல் கதையில் இடம் பெறும் தீண்டத்தகாதவர்கள் தொடர்பான சாதியப்பதிவுகளும் அவசியமில்லாதவையே. ஆனால் பெருமாள் முருகனால் வலிந்து செய்யப்பட்ட சாதியப்பதிவுகளும் "தலித் முரசி' ன் செயல்பாடுகளைப் போல்தான் உள்ளது என்று எஸ்.வி.ஆர். சொல்கிறார் என்றால் "தலித் முரசு' –  ஜாதியை / ஜாதி வெறியை / ஜாதி வெறியர்களை அடையாளப்படுத்துவதும் அம்பலப்படுத்துவதும் – ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்கிற தீர்வுக்காகத்தானே தவிர அழகியலுக்காகவோ வெறும் எதார்த்தப் பதிவுகளுக்காகவோ அல்ல.

""சாதி இந்துக்களின் தெருவில் நடக்கும்போது "தீண்டாச்சாதியினர்'  தங்கள் கழுத்தில் மணிகளைக் கட்டிக்கொண்டு வரவேண்டும், புரத வண்ணார்கள் இரவில் மட்டுமே வெளியே வரவேண்டும் என்பன போன்றவை நடைமுறையில் இருந்ததை அண்ணல் அம்பேத்கர் பதிவு செய்யவில்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் கடந்த கால வரலாற்றையும் நிகழ்கால எதார்த்தத்தையும் அறிந்து கொள்ளக் கூடாதா? அவர்களுக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை, அவமரியாதைகளை, திணிக்கப்பட்ட இழிவுகளைப் பதிவு செய்வது எவ்வாறு தலித் விரோத செயலாகிவிடும்?''– இது எஸ்.வி.ஆரின் கேள்வி.

"ஒடுக்கப்பட்ட மக்கள்' என்கிற வரையறையின் கீழ் பெருமாள் முருகன் வருகிறாரா?என்பதையும் ஒதுக்கி வைத்துவிடுவோம். அம்பேத்கர் தான் கண்ட, சந்தித்த ஜாதிய ஒடுக்குமுறைகளையும் அவமானங்களையும் பதிந்தது அழகியலுக்காக அல்ல – அழித்தொழிப்பதற்காக.  ஜாதி  அழித்து ஒழிக்கப்பட வேண்டிய செயல்திட்டமானது தான் பட்ட வேதனைகளைப் பதிவதின் வழியாக ஊக்கம் பெற்று எழும் என்பதற்காகத்தான்.

பெரியார், பார்வதி குளித்த கதையைச் சொன்னது கலவிப் பரவசத்திற்காக அல்ல; பிள்ளையார் சிலை அடித்து உடைக்கப்பட வேண்டும் என்பதற்காக. ஒரு வன்புணர்வின் நிகழ்வுகளைப் பற்றிய நீதிபதியின் பதிவுகள் இனிமேல் இதுபோன்ற அக்கிரமங்கள் நிகழா வண்ணம் தான் எழுதும் தீர்ப்பு அமையவேண்டும் என்பதற்காகத்தானே தவிர, மன்றத்தில் இருப்போருடைய வக்கிர எண்ணங்களுக்குத் தீனி போடுவதற்காக அல்ல. பெருமாள் முருகனின் எழுத்துகளையும் "தலித் முரசி' ன் செயல்பாடுகளையும் எப்படி தோழர் ஒன்றுபடுத்திப் பார்க்க முடியும்? அறுவை சிகிச்சை செய்கிறவன் கத்திக்கும் ஆளை வெட்டுகிறவன் கத்திக்கும் வேறுபாடு இல்லையா?

""....மாரன் கும்பிட்டுச்சொன்னான். அவன் பெண்டாட்டி உடல் கூனிக் கும்பிட்டு "சாமிங்க உத்தரவு தரோனும்' என்றாள். பொன்னாவின் அம்மா முந்தானை முடிச்சை அவிழ்த்து ஓரணாவைக் கொடுத்தாள். முந்தானையை ஏந்தி வாங்கிக் கொண்டாள். கும்பிட்டபடி பின்னே போய் நகர்ந்தார்கள்'' – இந்த வரிகளிலும் தாயப்பன் தப்பு எதையும் காண்பதில்லை. ஆனால், ""எங்கே போனாலும் தீட்டுப் பட்டுவிடுமோ என்று ஒதுங்கி நிற்கும் தீண்டாச்சாதி மனுசரைப் போல ஒரு ஓரமாக  நிற்க வேண்டியிருக்கிறதே''  என்னும் பொன்னாத்தாளின் பொருமலில் பெருமாள் முருகனின் சாதிவெறி வெளிப்படுவதாகக் கூறுகிறார்.'' – எஸ்.வி.ஆர்.

எஸ்.வி.ஆர். குறிப்பிடும் வரிகளில் எல்லாம் தாயப்பன் தப்பு எதையும் காணாமலுமில்லை; களிப்பேறுவகை அடைந்துவிடவுமில்லை. தலித்துகளைப் பற்றிய  கீழான பதிவுகள் என்று கருதப்பட்ட அனைத்து வரிகளும் எஸ்.வி.ஆர். சுட்டிக்காட்டும் பத்தி முழுவதிலும் அழுத்தம் கொடுத்து காட்டப்பட்டிருக்கிறது.அவையெல்லாம் பெருமாள் முருகனின் தேவையற்ற சாதியப்பதிவுகள் என்பதை விளக்கத்தான் அடர்கருப்பில் அவை அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

""குறிப்பாக – எங்கே போனாலும் தீட்டுப்பட்டுவிடுமோ என்று ஒதுங்கி நிற்கும் தீண்டாச்சாதி மனுசர் போல ஒரு ஓரமாக நிற்க வேண்டியிருக்கிறதே'' என்ற வரிகளுக்கு, அதாவது, ஏனைய சாதிக்காரன் எவனும் வெறும் தொட்டால் தீட்டு என்று அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவர்கள் தாமாகவே தாங்கள் தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிப் போகிறார்கள் இல்லையா? இது எவ்வகையான சமூகவியல்? ஒரு மக்கள் கூட்டத்தின் வலி நிரம்பிய வன்முறையையும் வரலாற்றையும் அதன் சிதைக்கப்பட்ட உளவியலையும் இதற்கு மேல் அசிங்கப்படுத்தி விட முடியாது'' என்று நான் வினையாற்றி இருந்ததற்கு எஸ்.வி.ஆர். இப்படி விளக்கம் சொல்கிறார்:

""எந்த ஒரு சமுதாயத்திலும் வன்முறை மூலமாக மட்டும் ஒடுக்குமுறை சாதிக்கப்படுவதில்லை. கருத்துநிலைரீதியாகவும் ஒடுக்குமுறை சாத்தியப்படுகிறது. இந்த கருத்து நிலையை "இயல்பானது'  என்றோ "தெய்வ சித்தம்'  என்றோ "இதை மீறிச் செயல்பட முடியாது' என்றோ ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்குவோரின் விழுமியங்களை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளச் செய்வது கருத்துநிலை''...

"தீண்டாச்சாதி மனிதர் போல ஓரமாய் நிற்க வேண்டியிருக்கிறதே' என்கிற அந்த கருத்துநிலையை இயல்பானது என்றோ, தெய்வசித்தம் என்றோ விரும்பி ஏற்றுக்கொண்ட, உள்வாங்கிக்கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணொருத்தி அப்படி நினைப்பது போல் பெருமாள் முருகன் எழுதியிருந்தால், அது எஸ்.வி.ஆர். சொல்வது போல் "சாதிப்படிநிலை அமைப்பில் திணிக்கப்பட்ட அடிமை மனப்பான்மைக்கு  உட்பட்டவர்கள், தாங்களாகவே ஒதுங்கி நின்றதை பெருமாள் முருகன் கூறுகிறார் என்று கருதலாமேயன்றி, தமது சாதிவெறியை இந்த கூற்றின் மூலம் வெளிப்படுத்துகிறார் என்றல்ல' – என்று ஏற்றுக்கொண்டு பெருமாள் முருகனின் சமூக உளவியல் அறிவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கலாம். ஆனால் கதையில் அந்தக் கூற்றைச் சொல்வது தலித் பெண் அல்லர் – கவுண்டர்  சாதிப்பெண்ணான பொன்னாத்தா. அவள் எப்படி கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு தலித் பெண்ணின் மனதிலிருக்கும் கருத்து நிலையை தனதாக்கிக் கொண்டார்? இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். பெருமாளுக்குள் முருகனாக கலந்துவிட்ட "ஜாதியம்'  தன்னையறியாமல் பொன்னாத்தா வழியாக வெளிப்படுகிறது என்று!

பெருமாள் முருகனுடைய எழுத்து "எதார்த்தத்தை'ப்  பதிவு செய்கிற எழுத்து என்பதற்கு  எஸ்.வி.ஆர். மேலும் சில ஒப்பீடுகளைச் செய்கிறார்: ""அமெரிக்காவிலுள்ள ஆப்ரோ அமெரிக்க மக்கள் வெள்ளை இன வெறியர்களால் தங்களது மானுடப் பண்புகள் அழிக்கப்பட்டதை, தங்களது அடிமைத் தனத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள். தங்களைத் தாங்களே அவமதித்துக் கொள்வதற்காக அல்ல. மாறாக, தங்களைப் பொருத்தவரை கடந்தகாலம் எவ்வளவு குரூரமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்காக; இந்தக் குரூரம் இல்லாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்காக. எடுத்துக்காட்டாக, சென்ற ஆண்டு காலமான ஆப்ரோ அமெரிக்க எழுத்தாளர் மாயா ஏஞ்சலூ, அமெரிக்காவின் தென் மாநில நகரமான ஸ்டாம்ப்ஸில் கழித்த தமது இளமைக்காலத்தைப் பற்றி எழுதுகிறார்:

""வெள்ளையர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்பது ஸ்டாம்ப்ஸில் பெரும்பாலான கருப்புக் குழந்தைகளுக்கு உண்மையாகவே, முற்றாகவே தெரியாது. மற்றபடி அவர்கள் வேறானவர்கள்,  அஞ்சப்பட வேண்டியவர்கள் என்பது மட்டுமே அந்தக் குழந்தைகளுக்குத் தெரியும். அதிகாரமற்றவர்களுக்கும் அதிகாரமுள்ளோருக்கும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் உழைப்பை பெறுவோர்களுக்குமிடையிலான பகைமையை அந்த அச்சம் உண்டாக்கியிருந்தது.'' இப்படித்தான் எதார்த்தத்தைப் பதிவு செய்ய வேண்டுமேயன்றி, அந்தக் கருப்புக் குழந்தைகள் உண்டி வில்லில் கல்லேற்றி வெள்ளையர்களைத் தாக்கினார்கள் என்று எழுத முடியாது.''

"எதார்த்தம்'  என்ற அடையாளத்தோடுதான் இங்கு எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. ஆனால், எப்போதோ புழக்கத்தில் இருந்த ஓர் எதார்த்தத்தைப் பதிவு செய்யும் எழுத்தானது, இப்போது என்ன விளைவை ஏற்படுத்தப்போகிறது என்பதில்தான் அந்த எழுத்தின் பதிவுகள் நியாயப்படுத்தப்படும்.""மனிதர் தமது வரலாற்றை தாமே படைக்கிறார். ஆனால் அவர்கள் தாம் விரும்பியபடி படைப்பதில்லை. தாமே தெரிவு செய்த சந்தர்ப்ப சூழல்களிலிருந்தும் படைப்பதில்லை. மாறாக, கடந்த காலத்திலிருந்து நேரடியாகத் தெரிந்த – தரப்பட்ட – கடந்து வந்த சந்தர்ப்ப சூழல்களிலிருந்தே படைக்கிறார்கள்''  என்கிறார் மார்க்ஸ். புதியதொரு வரலாற்றை உருவாக்க விரும்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த காலத்தின் ரணங்களையும் வசவுகளையும் அவமானங்களையும் மட்டுமே – செயலூக்கத்திற்கான எந்த நோக்கமும் இன்றி – வெறும் பதிவுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தால் அவர்களால் என்ன விதமான வரலாற்றை உருவாக்கிட முடியும்?

"நடந்த எதார்த்தத்தைப் பதியாமல் அந்த கருப்புக் குழந்தைகள் உண்டி வில்லில் கல்லேற்றி வெள்ளையர்களை தாக்கினார்கள் என்று எழுத முடியாது' என்கிறார் எஸ்.வி.ஆர்.வேண்டாம். "தலித் மக்கள்  ஆண்டைகளுக்கு சாணிப்பால் புகட்டினார்கள்' என்பது போன்ற புனைவுகளால் கிடைக்கப்பெறும் குஞுணண்ஞு ணிஞூ தீஞுடூடூஞஞுடிணஞ் யாருக்கும் இங்கு வேண்டாம். அதே வேளையில், எஸ்.வி.ஆர்.வேறோர் இடத்தில் சுட்டிக்காட்டும் அம்பேத்கரின் மேற்கோளைப் போல, ""சாதி என்பது ஒரு கண்ணோட்டம். ஒரு மனநிலை. எனவே சாதியை தகர்ப்பது என்றால் வெறும் பவுதீகத் தன்மையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக,  ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்'' – சாதி ஒழிப்பு என்கிற எந்த நோக்கமுமின்றி வெறும் பதிவுகளுக்காக பறையன், சக்கிலிச்சி, தண்டுவப் பசங்க என்பது போன்ற பழைய அசிங்கங்களையே கிளறிக் கொண்டிருந்தால் அம்பேத்கர் சொல்லும் சிந்தனை மாற்றத்தை எப்படி ஏற்படுத்த முடியும்?

பிழைக்க வழியின்றி கூலிவேலை செய்வதற்காக புலம் பெயர்ந்து போன தலித் பெண்களை பாலியல் ஒழுக்கம் கெட்டவர்களாக, பறங்கிப்புண்  நோயாளிகளாக, அவர்களுடைய சின்னஞ்சிறு பெண் குழந்தைகளிடம்கூட "முதிர்ந்த'  விபச்சாரியின் பேச்சுகள் வெளிப்படுவதாகப் பதிவு செய்யும் புதுமைப்பித்தனின் கதையில் உள்ள சித்தரிப்புகள்  என்ன மாற்றத்தை  ஏற்படுத்த முடியும்? "பாகுபலி'யின் "பகடைக்குப் பிறந்தவனே'  என்பதும் "பகடையைக் கிழிப்பேன்' என்பதும் சாதியை எப்படி தகர்த்து விடும்? தமிழ் இலக்கியக் கலை  "படைப்புகளில்' இடம்பெறும் எதிர்மறை வசவுச் சொல்லாடல்களை மட்டுமல்ல, காலங்காலமாக இதுதான் அறம், இதுதான் நீதி என்று சொல்லப்பட்ட – உயர் குடிப்பிறப்பு, மேலோர், மேன்மக்கள், மனைமாட்சி – போன்ற அடிமை உளவியலுக்குள் புகுத்தப்பட்ட நேர்மறை மதிப்பீடுகளின் வாய்ப்பாடுகளையும் சேர்த்துத் தானே கிழித்தெறிய வேண்டும் என்று சொல்கிறோம்.

இந்த இடத்தில், பெருமாள் முருகனால் எழுதப்பட்டு, எஸ்.வி.ஆரால் "தலித் வாழ்க்கையை எதார்த்தமாகப் பதிவு செய்த படைப்பு' என்று விதந்து பேசப்படும் "கூளமாதாரி' என்கிற புதினத்தைப் பற்றிய மதிவண்ணனின் பார்வையை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்: 

""தலித் பையன்கள் தாங்கள் மேய்க்கும் ஆடுகளுக்கு நெடும்பி, மோளச்சி, வத்தலு, சுழியன், கோணக்காலி என்று பெயர் வைக்கிறார்கள். நாவலாசிரியர் கிட்டத்தட்ட இது போன்ற பெயர்களையே தலித் பையன்களுக்கு வைத்திருக்கிறார்.தனது பிரியத்திற்கும் கருணைக்கும் உரிய வீட்டு விலங்குகளாகவே அவர்களைக் கருதுகிறார் என்று கொள்ள இடமிருக்கிறது. எதார்த்தத்தை எழுதுவதாக அவர் சொல்லக்கூடும். எதார்த்தம் என்பது பார்வையோடு தொடர்புடையது.

பார்வைகள் வேறுபட எதார்த்தமும் வேறுபடும் என்பதை ஆசிரியருக்கு நினைவுபடுத்தலாம்.''

மாயா ஏஞ்சலோவுக்கு வருவோம். மாயா ஏஞ்சலோ மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரோடும் மால்கம் எக்ஸோடும் வெள்ளையரின்  நிறவெறிக்கெதிராகக் களத்தில் நின்றவர். தன்னுடைய ‘ I know why the caged bird sing'  என்கிற சுயசரிதையின் வழியாக கருப்பின மக்களின் குரலாக, அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டவர். அவருடைய படைப்புகள்  "காரணம்'  என்றால், ஒபாமா போன்றவர்கள் அவற்றின் "விளைவு' ஹார்ப்பர் லீ கருப்பினப் பெண் அல்லர்;  இருந்தாலும் நிறவெறிக்கெதிரான பதிவுகளைக் கொண்ட அவரது ‘ To kill a mocking bird'  அமெரிக்க பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டது. இதுபோன்ற படைப்புகளையும் பெருமாள் முருகனின் "மாதொருபாகனை'யும் ஒன்றாகப் பேசுவதே தவறு. நிறவெறி அரசையும் அதன் அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று போராடிய மாயா ஏஞ்சலோவினால்தான்  "கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது'  என்கிற எதிர் – எழுத்தை எழுத முடியும்.  உள்ளூர் சாதி வெறியர்களின் மிரட்டலுக்கு பயந்து, மரணத்தை அறிவித்துவிட்டு சென்னைக்கு அடைக்கலம் தேடிவந்தவர்கள், "கூண்டுப்பறவை  ஏன் ஓடுகிறது'  என்று வேண்டுமானால் எழுதலாம்!

"சக்கிலியர்களை அப்படியே பதியத் தெரிந்த பெருமாள் முருகன்  அதே காலத்தில் இருந்த நாத்திகர்களை வைத்து அந்த சடங்கை கண்டிப்பது போல் எழுதியிருந்தால் அது நேர்மையான பதிவு'  என்று நாம் எழுதியதற்கு – ... எதார்த்தத்தை புனைவிலக்கியம் என்பதே "வகைமாதிரிகளாக'உள்ள பாத்திரங்களைக் கொண்டு எழுதப்படுவதேயன்றி விதிவிலக்காக உள்ளவர்களை வைத்து அல்ல... இந்தக்கதை சாதி ஆணவத்தைக் கைவிடாத "வகைமாதிரி'  களை முக்கியப் பாத்திரங்களாகக் கொண்டிருக்கிறது என்றார் எஸ்.வி.ஆர். விதிவிலக்கான நாத்திகர்களை வைத்து எழுதியிருக்கலாமே என்று நாம் எழுதியதற்குக் காரணம், பரவலாக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டது.

திருச்செங்கோட்டில் உள்ள சாதி வெறியர்கள் பெருமாள் முருகனை மிரட்டுகிறார்கள், படைப்பை எதிர்க்கிறார்கள் என்று. உண்மையில்  இந்தப் படைப்பு  சாதி வெறியர்களால் எதிர்க்கப்பட்டதற்கு காரணம், அந்த  "அரைவேக்காட்டு'  சடங்கு பற்றிய விவரிப்பே தவிர, குறிப்பிட்ட அந்தச் சாதியை இழிவாகப் பேசிவிட்டார் என்பதால் அல்ல;  அப்படி ஒரு பேச்சும் அந்தக் கதையில் இல்லை. ஒருவேளை நாத்திகர்களை வைத்து அந்தச் சடங்கையும் சடங்கைச் செய்யும் சாதியையும் எதிர்ப்பது போல் எழுதி அதனை சாதிவெறியர்கள் எதிர்த்திருந்தால் பெருமாள் முருகன்  சாதிவெறிக்கு பலியாகி விட்டார் என்பதில் நியாயம் இருக்கும் என்று எழுதி இருந்தோம்.

கொடுமை என்னவென்றால், எஸ்.வி.ஆரே பெருமாள் முருகனுக்கு "சாதிவெறிக்குப் பலியானவர்' என்கிற வில்லையை அணிவிப்பதுதான். தன்னுடைய கட்டுரையை அப்படித்தான் தொடங்கியிருந்தார்; படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் மரணத்திற்குக் காரணமான அதே சாதி வெறியன் யுவராஜ்தான் பெருமாள் முருகனுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியவன் என்று இரண்டு நிகழ்வுகளையும் சமதளத்தில் வைத்திருக்கிறார். இரண்டும் ஒன்றாகுமா?விறகெரிக்க, அடுப்பூத, குளிர்காய எல்லாம் ஒரே நெருப்புதான்.அதற்காக தீயின் நாக்குகள் தீண்டுவது எல்லாம் முத்துக்குமார் என ஆகிவிட முடியுமா?

இது தவிர, கட்டுரையில்  ஆங்காங்கே நாம் சொல்லியிருக்கும் வேறு பல செய்திகளையும் அதற்கான  எதிர்வினைகளையும் பார்த்தால், அவற்றையெல்லாம் எழுதியது  எஸ்.வி.ஆர். தானா என்று கிள்ளிப்பார்த்து, கிள்ளிப்பார்த்து கன்னிப் போய்விட்டது. மலாலாவின் தகுதிக்கு மீறிய புகழையும் அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு போன்ற மிகை நாடகத்தனங்களையும் நகைப்புக்கிடமாக்கியிருக்கிறேன் என்பதற்காக என்னை "தாலிபன்களின் ஆதரவாளன்' என்று சொல்லி தலையில் டர்பன் கட்டிவிட்டார்!

மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு உலகத்தையே தன் கொடூரச் செயல்களால் அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  தாலிபன்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், "இஸ்லாமியத் தீவிரவாதம்', "தாலிபன் தீவிரவாதம்'  என்ற பெயரில் மேற்குலக நாடுகளும் கீழ்த்திசையில் இந்தியாவும் செய்து வரும் அடாவடித்தனங்களை எவரும் நியாயப்படுத்திட முடியாது. தங்களின் "பயங்கரவாத வேட்டை'யை  நியாயப்படுத்த அவை அவ்வப்போது உருவாக்கி அடையாளப்படுத்தும் "நல்ல'  இஸ்லாமியர்கள் என்பவர்களின் பின்னால் உள்ள அரசியலையும் விமர்சிக்காமல் இருக்க முடியாது. அவர்களுக்கு மலாலா என்றால் இவர்களுக்கு அப்துல் கலாம்!

பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, தொல்.திருமாவளவன் போன்ற நம்மவர்களை முன்னால் நிறுத்திவிட்டு, பின்னால் நின்று கொண்டிருக்கும் "கண்ணன்'கள்  அவர்களுக்கான பிரச்சினைகளின் போது எந்த உபநயனத்திற்கு போயிருந்தார்கள் என்றுதான் கேட்டோமே தவிர, எஸ்.வி.ஆர். சொல்வது போல அவர்களின் மீது  கடுமையான தாக்குதல் தொடுப்பதற்காகவெல்லாம் அல்ல. "காலச்சுவடு'  கண்ணன் கிருஷ்ணப் பரமாத்மாவா  இல்லையா என்பதில் எனக்கு அக்கறையில்லை என்று எழுதியிருக்கிறார். எந்தச் சலனமுமின்றி சங்கை ஊதிக்கொண்டே நம் எல்லோரையும் முட்டி மோத வைத்து, அச்சடித்த அத்தனை "மாதொருபாகனை' யும் விற்றுத் தீர்த்தவர்களைப் பற்றி நாம் அக்கறை கொள்ளத்தான் வேண்டும் தோழர்!

உங்களுடைய கட்டுரையின் இறுதிப்பகுதியில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.  

""கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள், சாதிவெறியை எதிர்ப்பவர்கள், ஆட்சியதிகாரத்தில் வீற்றிருக்கும் சங்பரிவார சக்திகளை எதிர்ப்பவர்கள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்வது வரவேற்கத்தக்கதுதான்.

நவீன இந்திய வரலாற்றில் முன்னுவமை இல்லாத அளவிலும் பண்பிலும் பார்ப்பனியம் என்னும் உள்நாட்டு ஏகாதிபத்தியமும் பன்னாட்டு மூலதனம், அதன் உள்நாட்டு முகவர்கள் என்னும் பொருளாதார ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்துள்ள மிகப் பயங்கரமான நிலையில், அவற்றுக்கு எதிராக ஒன்று திரட்டப்படக்கூடிய அனைத்து சக்திகளையும் இணைப்பதற்கான புள்ளியாக பெருமாள் முருகனின் நாவலொன்று அமைந்துவிட்டது. இது போன்ற நிகழ்வுகளைத்தான் ஹெகல் "வரலாற்றின் தந்திரம்' (Cunning of History) என்று அழைக்கிறார்.''

கருத்துரிமைக்கு நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் அல்லர். சுதந்திரக் கருத்துகள் தரும் வெளிச்சத்தைக் கொண்டுதான் தலித் விடுதலையை சூழ்ந்திருக்கும் கொடும் இருட்டை விரட்டியடிக்க முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கிறோம். அதே வேளையில் கருத்துச் சுதந்திரம் (freedom of expression )என்பதைவிட, வழங்கப்பட்ட சுதந்திரத்தை எப்படிப் பொறுப்புணர்வோடு வெளிப்படுத்துவது (Expression of freedom) என்பதில் இன்னும் தெளிவாக இருக்கிறோம். சமத்துவமற்ற ஒரு சமூகத்தில் நின்று கொண்டு கருத்துச் சுதந்திரம் என்கிற இலக்கை எட்டுவதற்காக, சாதிய அடுக்கின் அடித்தட்டிலேயே காலங்காலமாக நிறுத்தப்பட்டவர்களை பலியாக்க அனுமதிக்க முடியாது. தன்னுடைய "ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கட்டற்ற சுதந்திரம்' கட்டுரையில் மீனாமயில் சொல்கிறார்: ""சமத்துவமும் சகோதரத்துவமும் மறுதலிக்கப்படும் ஒரு தேசத்தின் அங்கமாக நின்று கொண்டு நாம் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை அடிப்படை உரிமை என்று கோர முடியாது.'' 

அந்த சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கே நிலவுகிறதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அப்படி நிலவாத ஒரு சூழலில் சுதந்திரம் என்கிற பெயரிலும் எதார்த்தம் என்கிற பெயரிலும்  கண்ணை மூடிக்கொண்டு காற்றிலே கத்தி வீசக்கூடாது. அதை அனுமதிக்கவும் முடியாது.கருத்துச் சுதந்திரத்திற்காக எஸ்.வி.ஆர்.சொல்லும் சக்திகளோடு இணைந்து நாங்களும் போராட அணியமாகத்தான் இருக்கிறோம்.

ஆனால், பல்வேறு சக்திகளும் ஒன்று திரண்டதாக சொல்லப்படும் பெருமாள் முருகனுக்கான கருத்துச் சுதந்திரப் பதாகையின் மேல் நட்சத்திரக் குறியிடப்பட்டு கீழே "நிபந்தனைக்கு உட்பட்டது' என்கிற வாசகத்தைப் பார்க்க முடிந்ததே. பெருமாள்  முருகனைக் காட்டிலும் தன் படைப்புக்காக சாதி வெறியர்களின்  கொடும் தாக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும்  ஆளான துரை.

குணாவுக்காக அத்தனை சக்திகளும் ஒன்றுகூடவில்லையே? பெருமாள் முருகனின் பொருட்டு ஹெகல் சொன்ன, "மினர்வாவின் ஆந்தை சிறகை விரித்துப் பறக்கும் அந்திக்காலம்'  இதுதானோ என எண்ணுமளவுக்கு பல்வேறு சக்திகளையும் ஒன்றிணைத்து  cunning ஆன வரலாறு, துரை.குணாவுக்காக  என்று வரும்போது மட்டும் ஏன் கண்களை மூடிக்கொண்டது?

பெருமாள் முருகனை "ஜாதி வெறியர்' என்று தாயப்பன் கூறுகிறார் என்று எஸ்.வி.ஆர். எழுதுகிறார்.மன்னிக்கவும்.  "ஜாதி வெறி'  என்கிற முன்னொட்டு பெருமாள் முருகனுக்காக எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

காரணம் "வெறி' – Rabidity என்பது நோய் தொடர்பானது.பெருமாள் முருகன் நோயால் தாக்குண்டு அப்படி எழுதுகிறார் என்று நாம் நம்பவில்லை. அவர் ஜாதியை இயல்பாக உள்வாங்கி  உடம்பின் ஒரு பாகமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறவர் என்கிற பொருளில்தான் "ஜாதியொருபாகன்'  என்று விளித்திருந்தோம்.

"ஜாதியொருபாகனா பெருமாள் முருகன்?'  என்கிற கேள்வியை  எஸ்.வி.ஆர். தன் கட்டுரைத் தலைப்பில் கேட்டிருக்கிறார். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின் தத்துவங்களாலும் அவற்றை அறிவுக்கு நெருக்கமாக்கிய தோழர் எஸ்.வி.ஆரின் எழுத்துகளாலும் பெற்ற சிந்தனைத் தெளிவினால்  – நிலத்தில் காலூன்றி – அந்தக் கேள்விக்கு நாங்கள் உரத்துச் சொல்லும் பதிலே இந்தக் கட்டுரையின் தலைப்பு.  

Pin It