ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 9 - ஆம் நாளினை ‘உலகத் திணைக்குடி மக்களுக்கான பன்னாட்டு நாளாக’ (International Day of World’s Indigenous Peoples) யுனெஸ்கோ... (UNESCO) கடைப்பிடிக்கிறது. இதற்கு முத்தாய்பாகக், கடந்த 2019-ஆம் ஆண்டினையே ‘பன்னாட்டுத் திணைக்குடி மொழிகளுக்கான ஆண்டு’ (International Year of the Indigenous Languages) என இந்நிறுவனம் அறிவித்துக் கொண்டாடியது. இந்நிலையில், எதிர்வரும் 2050 -ஆம் ஆண்டிற்குள் உலகின் பல பகுதிகளில் பேசப்பட்டு வரும் திணைக்குடி மொழிகளுள் 60% மொழிகள் அழிந்துவிடும் என்கிற தனது ஆழ்ந்த கவலையை யுனெஸ்கோ பதிவு செய்துள்ளதுடன், இத்தகைய ‘அழிநிலைத் திணைக்குடி மொழிகளை’த் (Endangered Indigenous Languages)தொடர்ந்து உயிர்ப்புடனேயே வைத்திருப்பதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுக்குமாறு உலக நாடுகளை அறிவுறுத்தவும் செய்தது. இதற்கென, அழிநிலைத் திணைக்குடி மொழிகளைக் காப்பதற்கென உலக நாடுகள் கையில் எடுத்துள்ள ‘மொழித் திட்டமிடல் முன்னெடுப்புகளை’ (Agenda of Language Planning) இன்னும் முனைப்புடன் முடுக்கிவிட, நடப்பு ஆண்டான 2022-ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 2032-ஆம் ஆண்டு வரைக்குமான பத்தாண்டுக் காலத்தைப் ‘பன்னாட்டுத் திணைக்குடி மொழிகளுக்கான பத்தாண்டுகள்' (Decade for the International Indigenous Languages) என யுனெஸ்கோ அறிவிக்கையும் செய்துள்ளது. இப்பத்தாண்டுகளில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது நாட்டினுடைய அழிநிலைத் திணைக்குடி மொழிகளை முற்றிலும் மறைந்து போகாமல் காப்பாற்றுவதுடன், அவற்றைத் தொடர்ந்து உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருப்பதற்கென ஒரு செயல் திட்டத்தை தமது பல்வேறு திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். இச்சீரிய பணியில் ஈடுபட்டுள்ள ‘மொழியியலாளர்கள்’ மற்றும் மொழித் திட்டமிடுவோர் (Language Planners) முன் எதிர்நிற்கும் அறைகூவல்களை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரைக் களமாக அமைகிறது.

II. இந்தியாவில் செயல்படும் அழிநிலை மொழிகளுக்கான நடுவங்களும் அவற்றின் செயல்பாடுகளும்:-

இந்தியாவில் இனங்கண்டறியப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்குமான ஒற்றை ஆராய்ச்சி நிறுவனமாகக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு நன் முறையில் செயலாற்றிவரும் ‘இந்திய மொழிகள் நடுவண் நிறுவனமா’னது (Central Institute of Indian Languages). ஒரு ‘மொழி ஆவணமாக்கத் தரவுத் தொகுப்பகத்தை’த் (Language Data) தொடங்கி, இந்தியாவில் அழிநிலை மொழிகள் என இனங்கண்டறியப்படும் பல்வேறு திணைக்குடி மொழிகளை, மொழியாளர்களைக் கொண்டு, உரிய களப்பணி ஆய்வுகள் வாயிலாக அவற்றை ஆய்விற்கு உள்படுத்தித், தக்க ‘மொழித் தரவுகளை’த் (Language Data) திரட்டித், தொடர்புடைய மொழிகளின் ‘குறுநிலை இலக்கணம்’ (Sketch Grammar) மற்றும் ‘சிறு அகராதியை’த் (Concise Dictionary) தொகுத்து வெளியிடும் ஒப்பற்ற பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.tribe womenஇதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பழம்பெரும் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளில் இனங்கண்டறியப்பட்ட அழிநிலை மொழிகளைத் தத்தமது ‘அழிநிலை மொழிகளுக்கான நடுவங்கள்’ (Centres for Endangered Languages) வாயிலாக, நேரிடைக் களப்பணித் திரட்டுதல்களின் அடிப்படையில், முறையான ஆவணமாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய மொழி ஆவணமாக்கப் பணிகள் - மக்களும் அரசும் எதிர்பார்க்கும் வகையிலேயே - நன்முறையில் நடைபெறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திட, ஒன்றுக்கொன்று நெருங்கிய புவியியல் பரப்புகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுள் ஏற்ற ஒன்றை ‘அச்சாணி நிறுவனமாக’க் (Hub) கொண்டு மேற்பார்வையிடவும் நெறிப்படுத்திடவும் உரிய ‘செயல் திட்டத்’தை ஆயத்தப்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. இதன் விளைவாக, இத்தகைய அச்சாணியாக அமைந்திடும் நிறுவனங்களால் அவற்றின் நேரிடை மேற்பார்வையின் கீழே செயல்படும் ஏனைய அழிநிலை மொழிகளுக்கான நடுவங்களின் செயல்பாடுகளைச் சரிவர கண்காணிக்க இயலும் என்பதுடன், அந்நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவியாகச் செயல்படவும் அழிநிலை மொழிகள் ஆய்வு மற்றும் ஆவணமாக்கப் பணிகளில் எவ்வகையான ‘படியாக்கமு’ம் (Duplication) ஏற்பட்டு விடாமல் தவிர்க்கவும் இயலும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அவ்வப்போது ஒவ்வோர் அழிநிலை மொழிகளுக்கான நடுவத்தில் நடத்தப்படும் அழிநிலை மொழிகள் தொடர்பான ‘கருத்தரங்குகள்’, பயிலரங்குகள், மீளாய்வுகள் உள்ளிட்டவற்றில் பிற நிறுவனங்களைச் சார்ந்த வல்லுநர்கள் முறையான கருத்துரையாளர்களாகக் கலந்து கொண்டு தக்க கருத்துரைகள் நல்கிடவும் உரிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

III. அழிநிலை மொழிகளுக்கான நடுவங்களின் செயல்பாடுகள் - ஒரு தர மதிப்பீடு:-

ஒன்றிய அரசிடமிருந்து உரிய ‘நிதி நல்கை’யைப் பெற்று நாடெங்கிலும் உள்ள அழிநிலை மொழிகளுக்கான நடுவங்கள் செயல்பட்டன. இருப்பினும், காலப்போக்கில் தமக்கான அச்சாணி நிறுவனத்தின் குறுக்கீட்டை அதன் கீழுள்ள நிறுவனங்கள் ‘கண்டுகொள்ளவில்லை’ என்பதை விட ‘விரும்பவில்லை’ என்றே கூறவேண்டும்; அதே நேரம், அச்சாணி நிறுவனமாகச் செயல்பட்ட நிறுவனத்தைச் சார்ந்தோறும் தம்மைச் ‘சட்டாம்பிள்ளை’யாக் கருதிக் கொண்டு, தம் கீழுள்ள அழிநிலை மொழிகளுக்கான நடுவங்கள் மீது ஒரு வகையான மேலாதிக்கத்தைச் செலுத்தவே முயன்றனர் என்பதையும் மறுப்பதற்கு இல்லை எனினும், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மீளாய்வுகள் உள்ளிட்டவற்றின்போது அழிநிலை மொழிகளுக்கான நடுவங்கள் ஒன்றுக்கொன்று தக்க கருத்துப் பரிமாற்றங்களைச் செய்துகொண்டு, அவற்றின்வழியே தக்க பயன்களையும் பெற்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை ஆகும்.

IV. 'பன்னாட்டுத் திணைக்குடி மொழிகளுக்கான பத்தாண்டுகளில்' இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்:-

‘பன்னாட்டுத் திணைக்குடி மொழிகளுக்கான பத்தாண்டுகளில்' முதலாம் ஆண்டினைத் தற்போது நாம் கடந்துவிட்டோம். இந்நிலையில், மேற்குறித்துள்ள நடப்புகளின் பின்புலத்தில், எஞ்சியுள்ள 9 ஆண்டுகளில் இனித் திணைக்குடி மொழிகளுக்கு இந்தியா ஆற்றவேண்டிய முகாமையான மூன்று பணிகள் என்று கீழ்க் குறித்துள்ளவற்றைச் சுட்டலாம்:

i.        அழிநிலைத் திணைக்குடி மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆவணமாக்கப் பணிகள் வாயிலாக உருவான குறு இலக்கணம் மற்றும் சிறு அகராதி அடங்கிய ஆய்வறிக்கைகளை நூலாக்கம் செய்திடத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு விரைந்து அளித்து உதவிட வேண்டும்.

ii.    அழிநிலைத் திணைக்குடி மொழிகளை ஆவணப்படுத்திய ஆய்வறிக்கைகளைக் குறு இலக்கணம், ‘சிறு அகராதி’ என நூல் வடிவில் வெளியிடுவதுடன் நின்று விடாமல், அழிநிலை மொழிகளாக இனங்கண்டறியப்பட்ட திணைக்குடி மொழிகளை ‘மறுவுயிர்ப்பு’ (Revitalization) செய்திடும் பணியை அடுத்த கட்டமாக அந்தந்தப் பகுதிகளில் மேற்கொள்ளவும் உரிய செயல் திட்டத்தினை வடிவமைத்து, நடைமுறைப்படுத்திட முனைப்புடன் செயலாற்றிட வேண்டும்.

iii.               மொழியியல் ஆய்வில் ‘தகவலாளி’ என்று குறிப்பிடும் மரபை மாற்றி, அழிநிலைத் திணைக்குடி ஆவணமாக்க ஆய்வின்போது ‘மொழிக் கருத்துரைஞர்’ (Language Consultant) என்று பெயரளவிற்குச் சொல்லாடலில் மட்டும் மாற்றத்தைக் காட்டாமல், ‘ஆய்வு அணுகுமுறை’யிலும் ஆய்வாளர்கள் - திணைக்குடிகள் இருவர்க்கும் இடையே விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும் வகையில் நம்பிக்கையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

V. நிறைவுரை -

அழிநிலைத் திணைக்குடி மொழிகளை நேரிடைக் களப்பணி ஆய்வின்வழியே ஆவணமாக்கிடும் பணியின்போது மேற்கொள்ளப்படும் பல்வேறு சீரிய முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் சற்றும் கருத்தில் கொள்ளாமல், அழிநிலைத் திணைக்குடி மொழிகளை ஆவணமாக்கும் பணியை ‘மொழியைப் பதப்படுத்துதல்’ (Mummification of Language) என்று சிலர் மலினப்படுத்தினாலும் இதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்; ஏனெனில், ‘மொழி இழப்பு’ ஆவதற்கு முன்னரே மொழியியலாளர்களால் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட அழிநிலைத் திணைக்குடி மொழிகளை தேவை ஏற்படும்போது உயிர்ப்பிப்பதற்கான உரிய ‘மொழித் தரவகமா’க (Database of Language) இத்தகைய ஆய்வறிக்கைகள் அல்லது நூல்களே எதிர் காலத்தில் தோன்றாத் துணையாகக் கை கொடுக்கும்; இச்சீரிய முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் மீறித், திணைக்குடி மொழிகள் எவையேனும் அழிந்துபோக நேரிட்டால், அவற்றை மீண்டும் அத்‘திணைக்குடி மொழி பேசுநர்க்’குக் (Speakers of Indigenous Speech) கற்பிப்பதற்கான அடிப்படைத் தரவகமாகவும் இவ்வாறான ஆவணமாக்க ஆய்வறிக்கைகளும் அவற்றின் வாயிலாகப் பெறப்பட்ட குறு இலக்கணமும் சிறு அகராதியுமே திகழ்ந்திடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அழிநிலைத் திணைக்குடி மொழிகளைக் களப்பணிவழியாக ஆய்ந்திடும் மொழியிய லாளர்களுக்கும் அத்திணைக்குடி மொழிகளைப் பேசுவோர்க்கும் இடையே நிலவிடும் ‘நெருக்கவுறவா’னது (Rapport) எவ்வகைத் தொய்வும் இல்லாமல் என்றுமே தொடரும் உறவாகத் திகழ்ந்திட இப்பன்னாட்டுத் திணைக்குடி மொழிகளுக்கான பத்தாண்டுக் காலத்தை நல்ல மொழித் திட்டமிடலுடன் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுவோம்..

- முனைவர் சி.மகேசுவரன், மேனாள் இயக்குநர் பழங்குடியினர் ஆய்வு நடுவம், நீலகிரி தமிழ்நாடு அரசு

Pin It