சமணம் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருந்தது. கி.பி 7,8 ஆம் நூற்றாண்டுவரை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. "அருக பதவி அடைந்தோர்களாகிய தீர்த்தங்கரர்களது சரித்திரங்கள் அறிவூட்டுவன என்றும் புண்ணியம் பயப்பன என்றும் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை விளைப்பன என்றும்" (வையாபுரிப்பிள்ளை,1944) சமணர் கருதினர். இதனால் சமணச் சொற்கள் சில பழைய இலக்கியங்களில் புகுந்தன. இத்தகைய சொற்கள் பக்திப் பனுவல்களில் பொருள் மாற்றம் பெற்று வழங்கின. அதனைத் தொடர்ந்து வழக்கொழிந்து விட்டன. இச்சொற்கள் சிலவற்றின் வருகை, வளர்ச்சி குறித்தும் வீழ்ச்சி குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

அருகன்:

அருகன் என்ற சொல் குறித்து இங்குக் காண்போம். இச்சொல் சிலம்பில் நாடுகாண் காதையில் பயன்படுத்தப்படுகிறது. கவுந்தி அடிகளோடு கண்ணகியும் கோவலனும் மதுரை மூதூருக்கு நடந்து செல்கையில் வழியில் இந்திர விகாரம். அருகன் கோயில் ஆகியவற்றைக் காண்கின்றனர். அருகதேவனின் கோயில் பற்றிக் குறிப்பிடுகையில் "ஐவகை நின்ற அருகதானத்து" (சிலம்பு,10:19) என்று வருகிறது. இதற்குப் பொருள் பஞ்சபரமேட்டிகள் நிலைபெற்ற அருகனின் கோயில் என்பதாகும். அருகன், ஆச்சாரியர், உபாத்தியாயர், சாதுக்கள், சித்தர் போன்றோர் பஞ்சபரமேட்டி எனப்படுவர். இதே காதையில் அருகதேவனின் அரும்புகழ் விவரிக்கப்படுகிறது. "அங்கம் பயந்தோன், அருகன், அருண்முனிவன், பண்ணவன்" (நாடுகாண் காதை: 87). இதனைத் தொடர்ந்து கவுந்தி அடிகள் "அருகன், அறிவன், அறவோர்க்கு அல்லது" (10:202) வேறு ஒருவரையும் என் கைகள் குவித்து வணங்காது என்று உறுதி மொழிகிறார். திவாகர பிங்கல நிகண்டுகளிலும் 'சாவகர், அருகர், சமணராகும்' என்று அருகர் குறித்து வந்துள்ளது (மயிலை சீனி.வேங்கடசாமி, 2010. பக்.173).

பிராகிருத அகராதியில் அரிஹந்த என்றும் அரஹந்த என்றும் வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றிற்குப் பல பொருண்மைகள் உள்ளன. போற்றத்தக்க ஆத்மாக்கள் என்பது ஒரு பொருள். இது தவிர 'எல்லாம் அறிந்தவர், ஜினதேவன், ஜினபகவான், தீர்த்தங்கரர், வணங்குதற்குரியவர்' என்றெல்லாம் பொருள் உள்ளன. அருகர்கள் மங்கலம் பொருந்தியவர்களாகவும் (அருஹந்தா மங்கலம்) உலகத்தில் உயர்ந்தவர்களாகவும் (லோகுத்தமா) பாதுகாவலராகவும் (சரணம் பவ்வஜ்ஜாமி) வருணிக்கப்படுகிறார்கள்.samanar sculpture அர்ஹத் (arhat) என்ற வட சொல் அருஹ என்று மாறுகிறது. இறுதியில் வரும் தகரம் (பல் அடைப்பொலி) கெடுகிறது. -ர்ஹ்- என்ற மெய்மயக்கம் உகர உயிரால் பிரிக்கப்படுகிறது. அடுத்த நிலையில் ஹகரம் (தொண்டை உரசொலி) ககரமாக (கடையண்ண அடைப்பொலி) மாறுகிறது. இறுதியில் -அன் ஒட்டு சேர்க்கப்பட்டு அருகன் ஆனது. arhat>. aruha> arukan. அருகர் என்ற சொல் தொடர்ந்து சைவத் திருமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சம்பந்தர் தேவாரத்தில் திருமுதுகுன்றம் பதிகத்தில் "அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலை யான்" (1:12) என்றும் "புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கி"(967) என்று வேறொரு பதிகத்திலும் பெரிய புராணத்தில் "பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி" (2499:4) என்றும் வருகின்றது.

சம்பந்தர் ஆகதர், ஆதர் போன்ற புதிய வடிவங்களையும் பயன்படுத்துகிறார். இவை இரண்டும் அருஹ என்ற வடிவத்தில் இருந்து வந்தவையே. ஆகதர் எனும் வடிவம் "மாசுசேர் ஆகதர்க்கு எளியேன் அலேன்" (திருவாலவாய் பதிகம்-3212). ஆலவாய் பதிகத்தில் வந்தது. ஆகதர் எப்படி வந்தது? arhat என்பதில் ரகரம் (அடியொலி) கெட்டு முதல் உயிர் நெடிலாயிற்று. சம்பந்தர் தேவாரத்தில் 'ஆதர்' என்றொரு வடிவமும் வந்துள்ளது என்று குறிப்பிட்டோம்."ஆதர் சமணரொடும்" என்று சம்பந்தர் தேவாரத்தில் காணப்படுகிறது (3469). இச்சொல் arhat -இன் நடுவில் வரும் மெய்மயக்கம் முழுதும் கெட்டு ஆதி நீண்டு ஆதர் என்றாகி இருக்கலாம்.

 ஆருகத சமயமும் சமணத்தோடு தொடர்புடையது. அரிஷ்டநேமி தீர்த்தங்கரர் காலத்தில் சமணம் ஆர்கத தர்மம் என்று அறியப்பட்டது. இன்றும் பிகாரில் சமணம் ஆர்கத தர்மம் என்றே அறியப்படுகிறது. இச்சமயம் குறித்த விவரணை மயிலை சீனி வேங்கடசாமி படைத்த ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் காணலாம்.

நக்கன்

மணிமேகலையில் நக்க சாரணர் என்ற தொடர் ஆதிரை பிச்சை இட்ட காதையில் வருகிறது. சாதுவன் கடற்பயணத்தில் உயிர் பிழைத்து நாகமலையில் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் அம்மணமாய் அத்தீவில் வாழும் நக்க சாரணரிடம் அகப்படுகிறான். அங்கு நாகமலையைக் குறிப்பிடுகையில் "நக்க சாரணர் நாகர்வாழ் மலை" என்றும் "நக்க சாரணர் நயம் இலர் தோன்றி" என்றும் வருகிறது. (மணிமேகலை, ஆதிரை: 15,56) பின்னாளில் நக்கன் அருகன் என்ற பொருள் தந்தது. சமணத் துறவியரை நக்கன் என்று அழைப்பர். பாலிமொழி அகராதியில் ‘நக்க ஸமண' என்ற சொல் நிர்வாணமாகத் திரியும் துறவியைக் குறிக்கிறது. (a naked acetic). புத்தத்துறவிகளும் அவ்வாறு இருந்திருக்கலாம்.

சம்பந்தர் சமணர்களைப் பற்றி குறிப்பிடுகையில் "தொக்க பீலியர் நக்கரையர்" (3403) என்று குறிப்பிடுகிறார். நக்கரையர் என்றால் இடையில் ஆடை அணியாதவர் என்பது பொருள். இன்னொரு பாடலில் "நக்குருவாயவரும் (நக்கு+உரு) (பாடல் எண்-3458) என்று சமணர் ஆடையின்றி இருப்பதைச் சுட்டுகிறார்.

நக்கன் என்ற சொல் சிவபெருமானையும் குறித்தது. "குளிர்வெண் பிறைசூடும் / நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே" (சம்-தேவா) இவ்விடத்தில் நக்கன் சிவபெருமானைக் குறிக்கிறது. நக்கன் என்ற சொல்லுக்கு நகைமுகன் என்று பொருள் காண்கிறார் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள். இது வடசொல் அன்று எனவும் நகு என்ற வினையடியாகப் பிறந்த (நகு+அன்) தமிழ்ச் சொல் எனவும் கூறுகிறார். இக் கருத்தை மறுபரிசீலனை செய்தால் இப்படிக் கூறலாம். ‘நக்கம் அமர்ந்த திருமேனி' என்று வருகிற தேவார வரியில் நக்கம் திருமேனியை விசேடித்து வருவதால் அவரது கோலத்தையே குறிக்கிறது எனலாம். ஆடை அணியாமல் புலித்தோலை அரையில் அணிந்தும் கோவணம் அணிந்தும் அரை நிர்வாணமாகக் காட்சி தரும் சிவனை நக்கன் அதாவது அரைநிர்வாணி என்று எடுத்துக் கொள்ளலாம். நரியைப் பரியாக்கியவன் நக்கன் என்பது சரியாகத் தோன்றவில்லை. பௌத்த சமணத்தில் பரவலாக அறியப்பட்ட சொல்லைப் புதிய பொருளில் சைவர்களும் பயன்படுத்தி இருக்கலாம். சொல்லின் மூலப் பொருள் தெரியாமலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு காலத்தில் இறைவனின் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். பழனியாண்டி, ஆண்டியப்பன் சொற்கள் இறைவனைக் குறிப்பது போல.

நக்க என்ற சொல் பாலி, பிராகிருதம் வழியாகத் தமிழுக்கு வந்தது. னக்ன (nagna) என்ற சமஸ்கிருதச் சொல் இடைக்கால இந்தோ- ஆரிய மொழியில் நக்க (nagga) என்றாகித் தமிழுக்கு வந்தது. இடையில் வரும் -க்ன்- (gn) என்ற மெய்மயக்கம் (- ரீரீ-) என்றாயிற்று. அடைப்பொலி + மூக்கொலி ஆகிய வேற்றுநிலை மெய்மயக்கம் ஓரினமாகி உடனிலை மயக்கம் ஆயிற்று. இச்சொல் இடைக்கால இலக்கியத்தோடே வழக்கொழிந்து போயிற்று. முதலில் சமணத் துறவிகளைக் குறித்து பின்னர் பொருள் மாற்றம் ஏற்பட்டுச் சிவனைச் சுட்டப் பயன்பட்டது.

சாரணர்

பௌத்த, சமண, சைவ சமயங்களுக்கும் பொதுவாக விளங்கும் மற்றொரு சொல் ‘சாரணர்' என்பதாகும். ‘சரண' (caraNa) என்ற வினைச் சொல்லுக்கு ‘நடத்தல், திரிதல்' என்று பொருள். சரணத்தர் என்ற சொல் ‘பாதம் உடையவர்' என்ற பொருளில் பரிபாடலில் "தாளித நொய்ந் நூல் சரணத்தர் (10-10)" என்று வருகிறது. இதிலிருந்து சாரணர் என்ற பெயர்ச் சொல் வந்தது.

சமணத்தில் சாரணர் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சிலம்பில் நாடுகாண் காதையில் "தருமம் சாற்றுஞ் சாரணர் தோன்றப் / பண்டைத் தொல்வினை பாறுக வென்றே"(163-164) ஆகிய வரிகளில் சாரணர் வந்துள்ளது. மற்றொரு இடத்தில், "நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் / சாரணர் வரூஉம் தகுதியுண் டாமென" எனவும் வருகிறது. இங்கு சாரணர் ஆகாச சாரிகளைக் குறித்தது.முதலில் தருமம் சாற்றும் சாரணர் என்றவிடத்து சமண முனிவரைக் குறித்தது. சாரணருள் பல வகையினர் உண்டு. 'தல சாரணர், ஜல சாரணர், ஆகாச சாரணர், புட்ப சாரணர், தந்து சாரணர் இப்படி எண்வகையர் என்பார் உ.வே.சா.' சாரணர் கவுந்தியினும் பழுத்த சமணர்; சிந்தை விளக்கால் முக்காலமும் காண்போர்.ஆனால், கவுந்திக்கோ காலவுணர்ச்சி இல்லை என்பார் அடியார்க்கு நல்லார் (தெ.பொ.மீ.,2010, பக்-96).

மணிமேகலையிலும் நக்க சாரணி குறித்து வருகிறது. நாகமலை தீவில் நிர்வாணமாகத் திரியும் தீவுவாசிகளை அச்சொல் குறித்தது. நக்கன் என்ற சொல் இங்குச் சாதாரண மக்களைக் குறித்தது.

சைவத்தில் சுந்தரரால் தேவாரத்தில் சாரணன் என்ற சொல் எடுத்தாளப்படுகிறது. "சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்/பிரான் என்பொன் மாமணி" இங்கு ‘சாரணன்' என்ற சொல்லுக்கு ‘எங்கும் இயங்குபவன், புகலிடம் ஆனவன்' என்று பொருள் கொள்ளப்படுகிறது. ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும்' மாதவர், வானவர், சாரணர், இயக்கர், சித்தரும் மயங்கினர்"என்று தேவகணங்களைக் குறிக்க சாரணர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

அடைக்கலம் என்று பொருள்படும் சரண் சொல்லடியாகப் பிறந்த தத்திதம் என்று சொல்வர். ஆக சாரணர் என்ற சொல் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் எனச் சமயம் கடந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும்கூட சாரணர் இயக்கம் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. Scout என்ற இயக்கத்திற்குச் சாரணர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

நிக்கந்தன்

சிலம்பில் கந்தன் என்றொரு சொல் வருகிறது. "கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம்" (காடுகாண்-5) கந்தன் என்றது நிக்கந்தன் என்னும் சமண சமய கடவுளாகிய அருகனை ஆகும். (அடியார்க்கு நல்லார் உரை) கனாத்திறம் உரைத்த காதையில் நிக்கந்தக் கோட்டம் என்றும் வருகிறது. வளையாபதியிலும் "துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய / நிக்கந்த வேடத் திருவடிக்கணங்களை" என்று வருகிறது. ‘நிக்கண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்' என்றொரு சங்க காலப் புலவர் இருந்துள்ளார். இப்புலவர் பெயர் நிக்கந்தன் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று கூறுவர்.

நிக்கந்தன் என்னும் சொல் நிர்கிரந்த (nirgrantha) என்ற சொல்லோடு தொடர்புடையது. ‘ணிஅண்ட' என்பது பிராகிருத வடிவம். பாலி மொழியில் ‘நிகண்ட' (nigaNTha) என்ற சொல் நிர்வாண சமணத் துறவியைக் குறிக்கும். பந்தங்களிலிருந்து விடுபட்டவன் என்பது நிர்கிருந்த என்ற சொல்லின் பொருளாகும். (one who is freed from bonds.)

சமண சமயம் பழங்காலத்தில் வேறு சில பெயர்களாலும் அறியப்பட்டது. அரிஷ்டநேமி தீர்த்தங்கரர் (22 வது) காலத்தில் ஆர்கத தர்ம (aarhata dharma) என்றும் பார்ஷ்வநாதர் (23) காலத்தில் பார்ஷவநாத தர்மம் என்றும் அறியப்பட்டது. மகாவீரர் காலத்தில் நிர்கிரந்த அல்லது நிர்கிருந்த பிரவசனசார (Nirgrantha pravacana) என்றும் அறியப்பட்டது. நிர்கிரந்த என்பதே தமிழில் நிக்கந்த என வழங்கலாயிற்று.

கவுந்தி:

சிலம்பில் கவுந்தி என்னும் துணைப் பாத்திரம் வருகிறது. கவுந்தி என்பது சமண சமய பெண்துறவியைக் குறிக்கும்.கோவலன் ‘உறுதவத்தீர்' என்று கவுந்தியை விளிக்கிறான். இவர் இருந்தது புகாரில் புறஞ்சேரியில் அமைந்த சமணப் பள்ளியில் ஆகும். கவுந்திப் பள்ளி என்றே அதற்கு அடியார்க்கு நல்லார் பெயரிடுகிறார். சைனப் பெண் துறவிகளின் நிலையம் என்று கொள்ளலாம் என்பார் தெ.பொ.மீ.

கடிஞை, அறுவை (உறி), கைப்பீலி என்பன கொண்டு அவரது புறக்கோலம் அமைந்திருந்தது. அகம் அன்பினால் நிறைந்து வழிகிறது. கோவலன் , கண்ணகி மாட்டு அடிகளது அன்பு பெருக்கெடுத்துச் செல்வதைக் காண முடிகிறது. அருகன் வழி நிற்பார்க்கு எல்லாம் கைவரும். அருகனை அன்றி வேறு ஒருவர் நாமத்தை நவிலேன் என்று கூறுகிறார். கவுந்தி என்ற சொல் கல்வெட்டுகளில் வரும் ‘கந்தி' என்ற சொல்லோடு தொடர்புடையது என்று ஐராவதம் கருதுகிறார். கந்தனும்(நிக்கந்தன்) கவுந்தியும் தொடர்புடைய சொற்களா?

சாவகர்

சாவகர் என்ற சொல் மதுரைக் காஞ்சியிலும் சிலப்பதிகாரத்திலும் வந்துள்ளது.

மதுரைக்காஞ்சியில் (475-480) சமணப் பள்ளியின் தோற்றம் அழகாக வர்ணிக்கப்படுகிறது.

" வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் / பூவும் புகையும் சாவகர் பழிச்சச் / சென்ற காலமும் வரூஉம் அமயமும் / இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து / வானமும் நிலனும் தாமும் முழுதுணர்ந்து / சான்ற கொள்கை சாயா யாக்கை / ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்" சமணப் பள்ளியில் நோற்ற சமண நோன்பிகள், தேன் நாவில் இனிப்பது போல, பார்வைக்கு இனிமையானவர்கள்.

பூவின் மணமும் நறும் புகையும் சூழச் சாவகர்கள் போற்றித் துதிக்க விளங்கினர். முன்னால் தோன்றிய ஒருவனின் மனதில் நினைப்பதை உணரும் வல்லமை படைத்தவர். கடந்த காலத்தையும் எதிர்காலத்தில் நிகழவிருப்பதையும் உணரவல்லவர். செறிவான அறிவினை உடையவர்கள். இவ்விடத்தில் சாவகர் என்ற சொல் வருகிறது.

சிலம்பில் கோவலன் சாவக நோன்பியாகக் காட்டப்படுகிறான். "சாவக நோன்பி அடிகள் ஆதலின் / நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் / அடிசில் ஆக்குவதற்கு அமைந்தநற் கலங்கள் / நெடியாது அளிமின் நீர்" (சிலம்பு-கொலைக்களக் காதை -18-21). இங்குக் கண்ணகியே கோவலன் சாவக நோன்பி எனவும் அவன் பகல் உணவு உண்பதற்குச் சமைக்க வேண்டிய பாத்திரங்கள் கொடுப்பீராக என்றும் கேட்கிறாள்.

சாவக விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பிரத்யேக உணவை உண்பர். அடைக்கலக் காதையிலும் சாவக நோன்பிகள் குறித்த செய்திகள் கிடைக்கின்றன. 'சோலைகள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்தில் பிண்டி எனப்படுகிற அசோக மர நிழலில் பல சாவகர்கள் அமர்ந்து சிலாதலத்தின் மீதமர்ந்த சாரணர்களின் உபதேசத்தைக் கேட்டனர். இங்கு சாவக நோன்பிகளை ‘உலக நோன்பிகள்' என்று இளங்கோவடிகள் அழைக்கிறார். அப்போது அங்கே பேராற்றலுடைய ஒரு பக்கத்துக் கை குரங்கின் கைபோல உடைய வானவன் தோன்றினான். அப்போது அங்குக் குழுமியிருந்த "சாவக ரெல்லாம் சாரணர் தொழுது , ‘ஈங்கு யாதிவன் வரவு என’ கேட்டனர். இவ்விடத்திலும் சாவகர் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. எட்டி சாயலன் கதை சிலம்பில் புகழ் பெற்ற கிளைக்கதை ஆகும்."சாவகர்க்கு எல்லாம் சாற்றினன்" என்றும் "தன் தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்" என்றும் இரு இடங்களில் எட்டி சாயலன் கதையில் வருகிறது. சாவக நோன்பி என்ற சொல்லுக்கு ‘இல்லறத்தையுடைய சாவகர் என்றும் பிராகிருத மொழியில் இருந்து வந்த சொல் என்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி (பக்-1392) பொருள் தருகிறது.மணிமேகலையில் சாவகன் என்ற சொல் மாணாக்கன் என்ற பொருளிலும் வருகிறது (பார்வை -மேற்படி அகராதி).

"சங்கம் (சமணம்) தாமரை மலர் போன்றது. மலர் சகதி, நீரிலிருந்து தனித்திருப்பதைப் போல வினைமாசு இல்லாமல் சங்கம் திகழும். மலரின் தண்டு போல் ஆகம அங்க நூல்கள் விளங்கும்.மலரின் விதையுறை ஐந்து பெரிய விரதங்களாகும். மலரின் இதழ்கள் சமணத் துறவிகளாவர். மலர்களை வட்டமிடும் வண்டுகள் போல சாவக மாக்கள் சங்கத்திற்கு வந்து செல்வர் (சமண சுத்தம்; 1991, பக்-13). சாவக நோன்பிகளுக்கும் சங்கத்திற்கும் உள்ள உறவு இங்குத் தெரிந்து கொள்ள முடிகிறது. திருக்குறள் இல்லறவியலில் வரும் அறங்கள் யாவும் சாவகர்க்கு உரியவை என்று சொல்லிவிடலாம். ஞானசம்பந்தர் காலம்வரை சாவகர் என்ற சொல் வழக்கு இருந்திருக்கிறது. "மாபதம் அறியாதவர் சாவகர்" என்றும் "சாவாயும் வாது செய் சாவகர்" என்றும் தேவாரத்தில் வருகிறது.

சாவக (saavaga) என்ற பிராகிருதச் சொல் (shraavaka) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது. அதாவது மொழி முதல் மெய்மயக்கம் தவிர்க்க ரகரம் கெடுகிறது. sலீ என்பது சகரமாக தமிழில் மாறிற்று. சாவகர் என்ற பழந்தமிழ்ச் சொல் பிராகிருத மொழியிலிருந்து வந்ததே.

பரமேட்டி

பரமேட்டி என்ற சொல் சமணத்தில் புகழ்பெற்ற சொல்லாகும். பஞ்ச பரமேட்டிகள் சமண சமயத்தில் ஐந்து படிநிலையில் உள்ள முக்கிய தெய்வங்களாவர். பஞ்ச பரமேட்டி மந்திரம் தலையாய பிரார்த்தனைச் சொற்களாகும். "அருகர், சித்தர், ஆச்சாரியார், உபாத்தியாயர், சாதுக்கள் ஆகியோர் பஞ்ச பரமேட்டிகள். பஞ்ச பரமேட்டிகளை வணங்குவது மங்கலகரமானது. இம்மந்திரம் பாவங்களை அழிக்க வல்லது" (சமண சுத்தம்; 1991:பக்-2). ‘ஓம்’ என்ற உச்சரிப்பு பஞ்ச பரமேட்டியைக் குறிக்கும். ஏனெனில் அது ஓர் ஐந்தெழுத்தால் ஆனது. ஐந்து எழுத்தாவது: அ,அ,அ,உ,ம். இவ்வெழுத்துக்கள் முறையே அருகன், அசரீரி (சித்தா), ஆச்சாரியார், உபாத்தியாயர், முனி ஆகிய உயர் தெய்வங்களைக் குறிக்கும். (சமண சுத்தம்:1991;பக்-7)

பரமேட்டி என்ற சொல் சிலம்பில் வந்துள்ளது என்று ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். ‘ஐவகை நின்ற அருகதானத்து' என்பது பஞ்சபரமேட்டிகள் நிலைபெற்ற அருகன் கோயிலைக் குறித்தது. பரமேட்டி என்ற சொல் இடைக்காலத் தமிழில் தாராளமாகப் பயின்று வருகிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். பரமேட்டி என்ற சொல் சமண அருகனோடு சிவன், திருமால், பிரமன், பரம்பொருள் ஆகிய கடவுளர்களையும் குறித்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் "பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியை" என்று (திவ் பல்லாண்டு: 12) வருகிறது. திருமாலைப் பரமேட்டி என்று அழைக்கிறார் ஆழ்வார். தேவாரத்தில் "சாய்க்காட்டெம் பரமேட்டி பதமே" என்று சிவனை சம்பந்தர் குறிப்பிடுகிறார். சமணர்களை எதிர்த்த சம்பந்தர் பரமேட்டியைப் பல இடங்களில் கையாள்கிறார். இன்ன "கங்கையைப்...... சடையிற் பதித்த பரமேட்டி" (2:62-1) ‘நீ எம் பசுபதி பரமேட்டி’ "வெள்ளேற்றண்ணல் பரமேட்டி"(1:49). பட்டினத்தாரும் பரமேட்டியை விடவில்லை."பரமேட்டி சுட்டிறந்த ஞானத்தை சொல்"(613) என்று குறிப்பிட்டார். பரமேட்டி என்பதற்கு ‘தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாதவன்' என்பது பொருள்.

பரமேஷ்டி (ParameeSTi) இல் உள்ள நாமடி சகரவொலி கடையண்ண அடைப்பொலியாக (ஓரினமாதல்) மாறுகிறது. சமண சமயத்தாரிடையே தமிழகத்தில் பிரபலமாக இருந்த சொல்லை வைணவ சைவ சமயத்தார் பிற்காலத்தில் பயன்படுத்திக் கொண்டனர். ஓங்கார மந்திரமும் சமண சைவ சமயங்களில் பயன்படுத்தப்பட்டது.

சமண / அமண

சமண /அமண என்ற சொல் குறித்து இப்பகுதியில் பார்க்கலாம். அம்மணம் என்ற சொல் எல்லாருக்கும் தெரியும். ஆடையின்றிப் பிறந்த கோலத்தில் இருப்பதுதான் அம்மணம். இச்சொல் நிர்வாணியாகத் திரிந்த சமணர்களைக் குறித்து நின்றது. சமணம் என்ற சொல்தான் அமண் என்று மாறி அம்மணம் என்றானது. இச்சொல் (சமணம்) சம்பந்தர் தேவாரத்தில் பலமுறை கையாளப்பட்டுள்ளது. சமண், அமண் ஆகிய இரண்டு வடிவங்களும் ஒரே பொருள் கொண்டவை.தேவாரத்திலிருந்து சமணர்கள் குறித்த தொடர்கள் சில:

1) ‘சிந்தையில் சமணொடு' (110-10

2) ‘மோட்டமணர்' (108-10)

3) ‘வன் சமண் குண்டர்' (103-10)'

4) ‘நின்றுண் சமணும்' (99-10)

5) ‘பிச்சைக் குடை நீழல் சமணர்' (86-10)

6) ‘அறிவுரைச் சொல்லும் அறிவிலாச் சமணர்

7) ‘உழிதரு சமணர்' (76-10)

8) ‘மயிலின் பீலி அமணர்' (74-10)

9) ‘செடி நுகரும் சமணர்களும்' (61-10)

10) ‘தடுக்கமரும் சமணரோடு' (62-10)

11) ‘ஆலும் மயிலின் பீலியமணர்' (74-10).

12) ‘புறங்கூறிய புன்சமணர்'

ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களில் பல இடங்களிலும் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார். தமிழகத்தில் வாழ்ந்த சமணர்களின் பண்புகள் குறித்தும் அவர்களை வசைபாடி இழித்துரைப்பதும் இங்குக் காணமுடிகிறது. சமணர்கள் மயிற்பீலி வைத்திருப்பர். நின்று கொண்டே உணவருந்தும் பழக்கம் உடையவர்கள். தலையை முடித்து வர மாட்டார்கள். தடுக்கில் அமரும் பழக்கம் உடையவர்கள். அறிவுரை சொல்லும் ஆற்றல் இல்லாதவர். ஓரிடத்தில் நிலையாக வாழாமல் அலைந்து திரியும் (உழிதரு) வாழ்க்கை வாழ்பவர்கள். குகையில் வசிப்பவர்; வேழத்துக்கு நிகரானவர் "பாழியுறை வேழநிகர் பாழமணர்" என்பார் சம்பந்தர். (சம்ப- தேவா-3523) இவ்வாறு சமணர்களின் குணங்களை விவரிக்கிறார்.

திருவாலவாய் பதிகத்தில் ‘சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய்வர் என்றும் வைதிகத்தின் வழி ஒழுகாதவர் என்றும் அருமறைகளைச் சிந்தை செய்யா அருகன்’ என்றும் விவரிக்கிறார்.(காண்க:ஆலவாய் பதிகம் (108:3956'3957,3960)

பக்தி இலக்கியங்கள் முழுவதும் தேடினால் விரிவான தகவல் கிடைக்கும். தேவார ஒளிநெறிக் கட்டுரையிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

சமண என்னும் வடிவம் (shramana) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வருவிக்கப்படுகிறது. மொழிமுதல் மெய்மயக்கம் (ண்ஹ தவிர) பிராகிருத மொழியில் தவிர்க்கப்படுகிறது. மெய்மயக்கத்தில் வரும் ரகரம் கெட்டு, பின்னர் தமிழில் சமண என்றாகிறது. சமண என்பது மேலும் தமிழில், மொழி முதல் சகரம் கெட்டு அமண (அமண்) என்றாகிறது. இந்த வடிவமும் (அமண்) தேவாரத்தில் அதிகமாக வருகிறது. சமணம் வேதப் பழமை வாய்ந்த ஒரு சமய இயக்கம். பிராமண சடங்குகளையும் வேள்விகளையும் எதிர்த்த இயக்கம். shramana என்ற சொல் புத்த ,சமணம் என்ற இரண்டையும் இணைத்து குறித்தது. பின்னாளில் சமணத்தை மட்டும் குறித்தது. சமணமும் தமிழும் என்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய மிகவும் பிரசித்தி பெற்ற நூலாகும்.

சதுமுகன் என்ற சொல் சமண சமயத்தில் அருகதேவனைக் குறித்தது. "சங்கரன் ஈசன் சுயம்பு சதுமுகன்". (சிலம்பு- நாடுகாண் காதை -186) "ஆனால் அச்சொல்லே பின்னாளில் நான்முகனைக் குறித்தது."சதுர்முகன் தாதையென் றுந்தீபற" (திருவா-திருவுந்தியார்) சங்கரன் என்ற சொல் தற்காலம் சிவனைக் குறிக்க முன்னாளில் அருகனையும் குறித்ததறிக.

முடிவுரை:

சமண பௌத்த சமயங்களில் பிரசித்தி பெற்ற சொற்களைப் பின்னாளில் சைவ வைணவர்களும் தம் நூல்களில் பயன்படுத்திக் கொண்டனர். அதற்குக் காரணம் அச்சொற்கள் மக்கள் மத்தியில் நிலைபெற்று பெருமதிப்புக்குரியனவாக, வழிபாட்டிற்குரியனவாக இருந்தன. சமணர்களோடு போரிட்டும் சமணச் சொற்களையும் சித்தாந்தங்களையும் உள்வாங்கியும் இந்து மதம் வளர்ந்தது. மேலே விவாதிக்கப்பட்ட சொற்கள் யாவும் பிராகிருதச் சொற்களே. அவை தமிழ் மொழிக்கு வந்த பிறகு பொருள் மாற்றம் (Semantic Change) அடைந்ததையும் காண முடிகிறது. பௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றன என்று மயிலை சீனி. வேங்கடசாமியும் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

குறிப்பு: ஒரு சொல்லின் பொருள் காலப் போக்கில் மாற்றம் அடைவதை பொருண்மை மாற்றம் என்பர். பேசுவோரின் நோக்கவிருப்பம் (intention) மாறுவதால் பொருண்மை மாற்றம் ஏற்படுகிறது.பழைய பொருள் இழந்து போகலாம். பொருண்மை மாற்றத்தால் சொற்பொருள் விரிவடையலாம்; சுருங்கலாம்.

துணை நூல்கள்

1) மீனாட்சிசுந்தரம், தெ.பொ. (2010). குடிமக்கள் காப்பியம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, (மறுபதிப்பு.)

2) மயிலை.சீனி.வேங்கடசாமி, (2010) சமணமும் தமிழும், செண்பகா பதிப்பகம், சென்னை-17

3) மயிலை.சீனி.வேங்கடசாமி,(2010) பௌத்தமும் தமிழும், செண்பகா பதிப்பகம், சென்னை.

4) சிலப்பதிகாரம், (2014) சாரதா பதிப்பகம், சென்னை-14.

5) திவ்வியப் பிரபந்தம் (2010) சாகித்ய அக்காதெமி வெளியீடு

6) சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் (2008), உ.வே.சா. நூல் நிலையம், சென்னை-90.

7) சமண தடயம் (2005), நடன காசிநாதன், சத்தியமூர்த்தி (பதிப்பாசிரியர்கள்), மணிவாசகர் நூலகம், சென்னை-108.

8) ஐராவதம் மகாதேவன், தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் (கட்டுரை) வரலாறு. காம்

9) ஐராவதம் மகாதேவன், நக்கன்-ஓர் சொல்லாய்வு, வரலாறு.காம்.

10) Samansuttam, (1993), Bhagawan Mahavir Memorial Samiti, New Delhi-21.

11) Tamil Concordance, Dr. Pandiyaraja.

12) Chicago University Dictionary of South Asian Languages Website.

- முனைவர் ஆ.கார்த்திகேயன்

Pin It