panaiyadi book release27-11-21 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பதிப்பாக்கத்தில் செல்வம் ஐஏஎஸ் அவர்கள் எழுதிய பனையடி நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உரை

நான் இருபத்தஞ்சி வருஷம் இலக்கியத்துல குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். எனக்குப் பின்னாடி இந்த நடுநாட்டுப்பகுதியை இந்த எழுத்தை யாராவது எழுதுங்கப்பா அப்படின்னு யாரிட்டயாவது கிரயம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போவோம்ன்னு எவ்வளவோ தொலை தேடித் தேடிப் பார்த்தேன். ஒருத்தரும் தென்படவேயில்லை. சமீபத்தில் இவர் ஒருத்தர் மட்டும்தான் தென்பட்டிருக்கார்.

தான் பிறந்த மண்ணையும் மக்களையும் மொழியையும் பதியவைக்கவேண்டும் என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதியிருக்கிறார். சிலபேர் தாங்கள் பிறந்த ஊரின் மேன்மைகளை மட்டும் சொல்வார்கள். கீழ்மைகளைச் சொல்ல மாட்டார்கள். இவரது புத்தகத்தில் அய்யப்பநாயக்கன் பேட்டை என்ற இவரது ஊர் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பிரதானமாக செய்துகொண்டு சாராயம் காய்ச்சிக் கொண்டே இருக்கிற ஊர். காடுவெட்டிக்குப் பக்கத்தில் அந்த ஊர். இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு மனம் வேண்டும். இதற்குப் பெயர்தான் கருத்து சுதந்திரம். மக்கள் என்ன அசலாக இருக்கிறார்களோ அதைச் சொல்லணும். பிறகு ஒரு போலீஸ் அதிகாரி வந்து மக்களையெல்லாம் திருத்தி அதற்குப் பிறகு அந்த ஊர் மேலெழுந்து வந்திருக்கிறது. அந்த சித்திரங்களெல்லாம் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.

நாவலின் முதல் பகுதியில் அவரது கிராமம் அவரது வாழ்வு சூழல். அதிலிருந்து ஒரு பையன் ஐஏஎஸ் ஆகிறான். அந்த ஐஏஎஸ் என்னென்ன சிக்கலை எதிர்கொள்கிறான்? என்பதையெல்லாம் அழகாகத் தெளிவாக எழுதிச் செல்கிறார். இது தன்வரலாற்றுப் புதினம் என்று சொல்வது. அதாவது தன்னுடைய வாழ்க்கையை நாவலாகச் சொல்வது. ஆக இது ஒரு அருமையான நாவல்.

இந்த நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். நல்ல இலக்கியம் படித்தவர்கள் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள். மீறித் தவறு செய்தால் திருத்திக்கொள்வார்கள். இதனை வாங்கி நீங்கள் படித்துப் பார்க்கவேண்டும். ஏதேனும் ஒரு சூழலில் இதனை நீங்கள் இதன் ஒரு பக்கத்தை படிக்க நேர்ந்தால் உன்னதத்தை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதிலிருந்து நீங்கள் வெளியே வரவே முடியாது. இது தமிழின் மிக முக்கியமான நூல்.

இவர் முதல் நூலில் தெளிவாக அழகாக எழுதியிருக்கிறார். எந்த குறைப்பாடும் கிடையாது. நீங்கள் ஐஏஎஸ் படிக்க விரும்பினால்கூட அதில் உள்ள தொழில்நுட்பங்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார். சிறப்பான எழுத்து. மிக நல்ல புத்தகம். தமிழுக்குக் கிடைத்த பெருங்கொடை. புனைவிலக்கியத்தில் நல்ல சுற்று வருவதற்கான கூறுகளோடும் வாய்ப்புகளோடும் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை வழிநடத்த வேண்டும்.

தமிழக நிதித்துறைச் செயலாளரான முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களின் தலைமையுரை

ஐஏஎஸ் பணியிலிருந்துகொண்டே இந்த புத்தகத்தை நண்பர் செல்வம் அவர்கள் எழுதியிருக்கிறார். ஏனென்றால் ஐஏஎஸ் பணி­யிலிருப்பவர்கள் புத்தகங்கள் படிப்பதே மிகவும் கஷ்டம். பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்த பிறகு கோப்புகளை மட்டும்தான் படிப்பார்கள். அதைப்போல எழுதுவதும் கோப்புகளை எழுதுவது மட்டும்தான் செய்வார்கள். ஆனால் செல்வம் அவர்கள் பணிச்சுமைகளுக்கிடையே பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்தார். இப்போது அவரது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நாவலை ஒரு வாரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலின் தளம் கங்கைகொண்ட சோழபுரத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

ஒரு மானாவாரி வேளாண்மையை நம்பி­யிருக்கிற ஒரு கிராமத்தை மிக அழகாக இதில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அந்த கிராமத்தில் எந்த மாதிரி மொழி வழக்கத்திலிருக்கிறதோ அப்படியே எழுதியிருக்கிறார். அங்குள்ள இயற்கை சூழல், ஏழை விவசாயிகளுடைய பிரச்சினைகள், கவலைகளையெல்லாம் மிக அழகாக எழுதியுள்ளார்.

இந்தக் கதை தமிழ் சமுதாய வரலாற்றையும் அது கண்ட ஏற்றத்தாழ்வுகளையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் கலாச்சாரம் மிகப் பழமையானதும் தொன்மையானது என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். வாணிபம், கலை, மொழி அனைத்திலுமே நாம் சிறந்து விளங்கியிருக்கிறோம். பிற்காலச் சோழர்கள் காலத்தில்தான் அதாவது ராஜேந்திர சோழன் காலத்தில்தான் இது மிகமிக உச்சத்தை அடைந்ததெனச் சொல்லலாம், கிட்டத்தட்ட 36 நாடுகளில் தெற்காசியாவில் உள்ள அனைத்திலுமே புலிக்கொடியை நாட்டியவன் ராஜேந்திர சோழன். அப்படியானதொரு மிகப்பெரும் மாமன்னனின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். ஆனால் எப்படி ஒரு உச்சத்தை தமிழ்ச்சமூகம் அடைந்திருந்ததோ அதன் பின்னர் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் அடிமையினமாக இருந்திருக்கிறது.

ஆனால் 20ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் ஒரு மறுமலர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. சமூகநீதிக்காக வந்த பல்வேறு இயக்கங்கள். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் இதுபோன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்புகள வழங்கப்பட்டன. அப்படியான வாய்ப்புகளின் வாயிலாகத்தான் இந்தக் கதையில் வரும் தமிழ் என்ற இளைஞன் இப்படியொரு உயர்ந்த நிலையை அடைகிறான்.

ஆகவே இது தமிழ் என்ற ஒரு குறிப்பிட்ட இளைஞனின் கதையல்ல. இது ஒரு தலைமுறையின் கதை என்று கூறலாம். ஆயிரமாயிரம் இளைஞர்கள் இதுபோன்று தடைகளையெல்லாம் மீறி தங்கள் முயற்சியால் வளர்ந்து இன்று மிகச்சிறப்பான நிலையில் இருக்கிறார்கள். அதைத்தான் செல்வம் அவர்கள் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

இந்நாவலில் நான் கவனித்தவொன்று முக்கியமானது. ஆடிப்பட்டத்தின்போது பொன்னேர் திருவிழா என்று கொண்டாட்டத்தோடு உழவு செய்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தரின் வாழ்க்கையில் அவர் சிறுவனாக இருக்கிறபோது இதே போன்றதொரு பொன்னேர் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அவரது தந்தையார் பொன்னேர் உழுகிறார். அவர் மன்னராக இருப்பதால் ஊர்மக்கள் அனைவருமே அதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகின்றார்கள். அப்போது புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்திற்குச் சென்று விடுகின்றார்.

ஆகவே இதுபோன்றதொரு நிகழ்வு அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இன்னும் இருக்கிறது என்பது எனக்கு மிகமிக ஆச்சரியமாக இருந்தது. இது இந்தியாவில் இருக்கும் கலாச்சாரம், தெற்காசியாவில் இருக்கும் கலாச்சாரத்திற்கெல்லாம் அடிப்படை நம் தமிழர் கலாச்சாரம் என்பதனைக் காட்டுகிறது.

செல்வத்தைப் பொருத்தவரை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றக் கூடியவர். மிக வேகமாகவும் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றக் கூடியவர். அப்படியொரு உயர்ந்த இடத்தை அவர் அடைந்திருந்தாலும் தனது மண்ணை மறக்காதவர். தனது இனத்தை, மொழியை அவர் மறக்கவில்லை. அவர் என்றுமே தமிழையும் தமிழர் பண்பாட்டையும் தமிழ்நாட்டையும் நேசிக்கக்கூடியவர். அதன் வெளிப்பாடான பனையடி என்ற புத்தகத்தை ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டும். அவரைப்போல் வெற்றி பெற வேண்டும். அவர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் அரிய செல்வம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூரணலிங்கம் அவர்களின் உரை

மிக எளிய அழகிய தமிழில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இயற்கையைப் பற்றிய அவரது வருணனை எனக்கு கல்கியை நினைவுபடுத்தியது. அதில் ஒரு கிராமிய மணம் நிரம்பியிருக்கிறது. நிறைய செல்லப்பெயர்கள் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. இதனை இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டும். இதனை அனைத்து கல்லூரிகளுக்கும் பாடப் புத்தகமாக்கினால் அனைத்து மாணவர்களுக்கும் பயன் கிடைக்கும். அதற்கு இங்கேயுள்ள நிதித்துறைச் செலாளர் ஒரு ஆணையிட்டால் அதனைச் செய்துவிடலாம்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஊக்கம் வேண்டும். அந்த ஊக்கத்திற்கு இந்நாவலில் வரும் தமிழ் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார். கதையாக இருந்தாலும் இது ஊக்கத்திற்கான மிகச் சிறந்த உதாரணம். முயற்சிக்கு ஒரு இலக்கணமாகவே இந்த நூல் அமைந்துள்ளது. இதனை இளைஞர்கள் மத்தியிலே கொண்டு செல்ல வேண்டும்.

இறையன்பு நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நான் ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறேனே தவிர தமிழில் எழுதியதில்லை. தமிழில் மிகச் சிறப்பாக எழுதியுள்ள செல்வம் அவர்களைப் பாராட்டுகிறேன். இறையன்பு அவர்களை எழுத்தில் இவர் மிஞ்ச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை நியூ செஞ்சுரி நிறுவனம் அருமையாக அச்சாக்கம் செய்திருக்கிறது. அட்டைப்படம் மிக அழகாக இருந்தது. காகிதங்களின் தரமும் மிக நன்றாக இருக்கிறது. அதற்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியர் காசி மாரியப்பன் அவர்களின் உரை

தமிழ் வாழ்க்கையைச் சொல்வதுதான் நல்ல தமிழ் நாவலாக இருக்கமுடியும். தமிழ்ப் பெயர்களில்கூட தற்போது தமிழ்த்தன்மை இல்லை. பெயர் வைப்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. நமக்கு தமிழ்த்தன்மை குறித்த உணர்வுகள் இல்லை. இன்றைக்கு நிறைய நாவல்களில் தமிழ் நிலம் இல்லை.

இந்த நாவலில் ஒருவர் ஐஏஎஸ் படிக்கப் போகிறார். இணை இயக்குனர் ஒருவர் விந்திய மலைக்கு மேற்கே உள்ளவர்களெல்லாம் ஏன் எங்களோடு உரையாடக்கூடாது? என்று கேட்கையில் அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டேனென்கிறார்கள் என்று பதில் கூறப்படுகிறபோது நீங்கள் இந்தி படித்துவிட்டு அவர்களோடு பேசலாமே என்று அவர் யோசனை சொல்கிறார். ஏன் அவர்கள் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்ற கேள்விகளையெல்லாம் நாவலாசிரியர் எழுப்புகிறார். அரசியல் சார்ந்த கேள்வி இது. இப்படியான அரசியல் தன்மை இந்நாவலில் இருக்கிறது.

மு.வ போன்றவர்களுடைய நாவல்களில் ஒரு செயற்கைத் தன்மை இருக்கிறது. ஆனால் செந்தமிழில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வட்டார வழக்கு வடிவில் எழுதப்படுகிறபோதுதான் அதன் பன்மைத்தன்மை வெளிப்படுகிறது. மனங்கவர்ந்த ஆசிரியர்களையெல்லாம் இந்நாவலில் எழுதியுள்ளார். ஒரு தமிழாசிரியர்தான் இவருக்குப் பிடித்தமானதென்பதையும் எழுதியிருக்கிறார். ஐஏஎஸ் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பெருங்கனவாக இருக்கிறது. அதனை அடைவதற்கான பல வழிமுறைகளை இந்த புத்தகம் சொல்லுகிறது.

இந்த நாவலில் ஒரு உண்மை இருக்கிறது. சாராயம் காய்ச்சுவது பற்றிய தகவல்கள் இதில் கூறப்பட்டுள்ளன. நாவலை முழுமையாக கவித்துவமாக எழுதியுள்ளார். அதிகார வர்க்க கெடுபிடிகளையெல்லாம் எழுதியுள்ளார். தமிழ்த் தன்மையோடும் உண்மையோடும் இருப்பதால் இந்நாவலை நாம் வரவேற்கலாம்.

ஆர்.எஸ்.கோபாலன் ஐஏஎஸ் அவர்களின் உரை

நண்பர் செல்வம் அவர்கள் தனது வாழ்க்கைக் கதையை எழுதுவதாக சொன்னபோது நான் முதலில் நம்பவில்லை. அவரது நாவலின் திருத்தப்படாத பிரதியைப் படித்தபோது உண்மையிலேயே அகமகிழ்ந்தேன்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக் கதையை படிப்பதென்பது எப்போதுமே சுவையானது. ஏனெனில் மிகச்சிறந்த கதைகளிலும் காவியத்திலும் புதினங்களிலும் நடக்காத சம்பவங்கள் மனிதர்களின் உண்மை வாழ்வில் நடக்கின்றன. மிகச்சிறந்த கற்பனைக் கதையை விடவும் சாதாரண உண்மைக் கதைகள் நம்மைக் கவருகின்றன. என்னைக் கவர்ந்தது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களை அவர் காட்டியிருக்கும் விதமும்தான். ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தால் உருவாக்கப்படுகின்றான். பிறர் வாழும் காலத்தை உருவாக்குகிறான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் கதை இது. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழக கிராமத்தில் சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனை அவனது முயற்சியும் சூழலும் காலமும் சேர்ந்து செதுக்கி உயர்ந்த இடத்தில் உயர்பதவியில் அமர்த்துவதுதான் இதன் கதை.

வெறும் நாயகனின் கதையை மட்டும் சொல்லாமல் அவன் வாழ்ந்த ஊர், அம்மக்களின் அன்றாட பிரச்சினைகள், அவர்களது எளிய கனவுகள், அதற்கும் வரும் தடைகள், பங்காளிச் சண்டைகள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதலர்களின் கதை என பல்வேறுபட்ட காட்சிகளைக் காண்கிறோம்.

சுயசரிதை என்றாலே ஒரு தனிமனிதன்தான் தனது கதையைச் சொல்லுவான். ஆனால் செல்வமோ ஒரு ஊரின் கதையையே சொல்லியிருக்கிறார். இந்நூல் கதைநாயகனைப் பற்றி தம்பட்டம் அடிக்கும் பரணியோ உலாவோ அல்ல. தனது பெற்றோரையும் அவரது வாழ்க்கையையும் அருகிலிருந்த அயலாரையும் தனது ஊரையும் படித்த பள்ளி கல்லூரியையும் அடைந்த நண்பர்களையும் பெற்ற வெற்றி தோல்விகளையும் இன்ப துன்பங்களையும் எளிமையான பார்வை கொண்ட ஒரு சிறுவனாக, மாணவனாக, இளைஞனாக, ஒரு மனிதனாகப் பார்க்கிறான் கதாநாயகன். அவனது கண்கள் வாயிலாக நாமும் அவற்றைக் காண்கிறோம். கடந்து செல்லும் ரயில் வண்டியின் சன்னல்வழிக்காணும் காட்சிகள் போல தனது வாழ்க்கைக் காட்சிகளை நமக்குக் காட்டி விடுகிறார் ஆசிரியர்.

பனையடி நாவல் ஒரு தனிமனிதனின் கதை அல்ல. சென்ற தலைமுறையின் தங்களது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக வந்த நூறாயிரம் மனிதர்களின் கதை. இந்த நாவலின் இரண்டாவது மூன்றாவது நாவல்களும் வர வேண்டும்.

செல்வம் ஐஏஎஸ் அவர்களின் நன்றியுரை

நான் இந்த நாவலை முதலில் சுயசரிதையாக எழுதத்தான் நினைத்திருந்தேன். ஆனால் எனது கல்லூரித் தோழன் ஆறுமுகம் வாயிலாக பேராசிரியர் காசி மாரியப்பன் அறிமுகம் கிடைத்தது. அவர் ஏற்கனவே இதுபோன்ற நிறைய சுயசரிதைகள் வந்துள்ளன. அதனால் அதன் வடிவத்தை மாற்றி எழுதலாம் என ஆலோசனை வழங்கினார். நான் தினமணியில் நிறைய கட்டுரைகள் எழுதி வந்த காரணத்தால் செக்கு மாட்டுக்கும் வண்டி மாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர்த்தினார்.

அதாவது கட்டுரை வடிவம் என்றால் ஒரு கருத்தைச் சொல்வதற்காக பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வைச் சொல்லுவதுபோல எழுதுவது. நாவல் வடிவம் என்பது கட்டற்று எழுதிச் செல்வது. நான் நாவல் எழுதினால் அது கட்டுரை வடிவத்திலேயே போய்க் கொண்டிருந்தது. நான் என்னைப் பற்றி எழுதுகிறபோது என்னைவிட்டு அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. அதிலிருக்கும் உண்மைத்தன்மையை எழுதுவதற்கு பயமாகவும் இருக்கிறது. அது ஏற்புடையதாக இருக்குமா என்ற ஐயமும் இருந்தது. அந்த ஆரம்பத் தடங்கலைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் தமிழ் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி பிறகு எழுத ஆரம்பித்தேன்.

என்னைத் திரும்பிப் பார்க்கும் நிலையை எழுத நினைத்தேன். குடும்பத்தின் நிலை, ஊரின் நிலை, பள்ளிக்கூடத்தின் நிலை, நண்பர்களின் நிலை, கடந்துவந்த பாதை என்பதை மூன்றாவது மனிதனாக இருந்து பார்த்து எழுதத் தொடங்கினேன். அதனடிப்படையில் உருவானதுதான் இந்த நாவல்.

அதற்கு முழுக்க முழுக்க அடிப்படைக் காரணமாக இருந்தது காசி மாரியப்பன் அய்யாதான். இந்த நாவல் எழுத ஆரம்பித்த பிறகு பத்து பதினைந்து நாவல்களைப் படித்தேன். கண்மணி குணசேகரன் கொடுத்த வழிகாட்டுதல்படியும் எழுதினேன். என்னுடைய நாவலை எனக்கு மதிப்பீடு செய்யத் தெரியவில்லை. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயப்பாடு எனக்குள் இருந்தது.

பனையடி எனும் நிலப்பகுதி, நடுப்பிள்ளை எனும் விளிம்புநிலை விவசாயி, தமிழ் எனும் சராசரி மாணவன் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டுதான் நாவல் எழுதப்பட்டது. பனையடி எனும் நிலப்பகுதி என்பது ஒரு குறியீடு. அந்த இடத்தை நம்பி 200 குடும்பங்கள் இருக்கின்றன. அது மானாவரி நிலப்பகுதி மழை பெய்தால் அழுதுகொண்டிருப்பது அங்குள்ள பயிர்கள் மட்டுமல்ல மனிதர்களும்தான் என்பதைத்தான் இந்த நாவலில் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். மழை அதிகமாகப் பெய்து வீணாய்ப் போன குடும்பங்களும் உண்டு. இதுபோல தமிழகத்தில் நிறைய இடங்கள் உள்ளன. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 12500 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் முப்பது நாற்பது சதவீதம் இதுபோல இருக்கலாம். அம்மாதிரியான நிலப்பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளிவரும் ஒருவன் சந்திக்கும் சவால்கள் அதுதான் இந்தக் கதையின் மையம்.

நடுப்பிள்ளை எனும் கதாபாத்திரம் மழையையும் வெயிலையும் சமமாகப் பார்க்கும் மனநிலை கொண்டது. அதுபோல இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்க்கிற இயல்பு நிலையில் இருப்பவர். இருப்பதை இயல்பானதாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள் அந்த மக்கள். இதுதான் வாழ்க்கை என்று அந்தப் பகுதியை விட்டு வெளியே செல்லாமல் மக்கள் அங்கேயே இருந்து விடுவது இப்போதும் தொடர்கிறது.

உழைப்பு, விடாமுயற்சி என்ற இரண்டையும் கொண்டு போராடுவதுதான் நடுப்பிள்ளையின் வாழ்க்கை. தோல்வியைக் கண்டு ஓய்ந்து போகாமல் திரும்பவும் முயற்சி செய்வதுதான் அவரது குணம். 30 வயதுவரை நானும் விவசாயிதான். அவர் மண்ணோடு போராடுகிறார். நாம் ஏன் புத்தகத்தோடு போராடக் கூடாது என்ற முயற்சிதான் என்னை மற்ற நிலைக்கு மாற்றியது.

படிக்காத கிராமத்து மனிதர்களுக்கு தன் குழந்தை தன்னைப்போல் இருக்கக் கூடாது என்ற கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் பலபேருக்குப் பலிப்பதில்லை. வறுமை வாழ்க்கையை வெற்றி கொண்டுவிடக் கூடாது என்று போராடினால் வெற்றியை நிச்சயம் அடையலாம் என்பதே உண்மை.

நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். அப்போதுதான் அவர்களால் சமூகத்திற்கும் ஏதேனும் பங்களிக்கமுடியும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். அனைவருக்கும் நன்றி.

எழுத்தாக்கம்: ஜி.சரவணன்

Pin It